ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

16-ஆம் காம்பவுண்ட்.....11.





2010,ஜூலை 29…..

ஸ்வீட்டி தூங்கிக் கொண்டிருந்தாள். ஜோசப் தன் மகளருகே அமர்ந்து அவளது தலையை தடவிக் கொடுத்துபடி அவளை வாஞ்சையாய் பார்த்துக் கொண்டிருந்தார். தான் எப்படி அவ்வளவு மூர்கத்தனமாய் முந்தைய தினம் தனது செல்ல மகளிடம் நடந்து கொண்டோம்?என எண்ணியபடி தன்னையே திட்டிக் கொண்டார். வழக்கமாய் அப்படி அவர் நடந்து கொள்கிறவர் அல்ல. அவருக்கு ஸ்வீட்டி ஒரே மகளென்பதால் அவள் மீது அளவுகடந்த பிரியமும் பாசமும் உண்டு. இத்தனை ஆண்டுகளில் அவர் இப்படி நடந்து கொண்டது இதுவே முதல்முறை. எத்தனை கோபமாக இருந்தாலும் அவளை திட்டுவாறேயன்றி கை நீட்டியதில்லை.

சோபியா தற்செயலாய் முழித்தவள், தன் கணவனை கண்டதும் எழுந்து அமர்ந்து தன் தலைமுடியை வாரிச் சுருட்டி கொண்டையிட்ட வாறே எழுந்த குரலில் “ முட்டாத்தனமா நடப்பானேன்..... இப்படி தலைய தடவிட்டு இருப்பானேன்...என்றாள்.

“இல்லய்யே.... எம்மவள அடிக்கனும்னா அடிப்பேன்.... ஏதோ சாத்தான் புத்தியில மதியழந்து நடந்திட்டம்யே....

நேத்து புள்ள எப்புடி ஏங்கிப் போயிட்டா தெரியுமா? ஆனா உங்கள மாறியே அழுத்தக்காரி.... அப்பனும் மவளும் சண்ட போட்டுக்கிட்டீக பேவுள்ள எங்கிட்ட பேசமாட்டேன்னு நின்னுட்டாளே..... அப்படியே சாப்புடாம கொள்ளாம தூங்குனவ தான்..... உங்களுக்கென்ன கவல நீங்க நல்ல உங்க மருமவன் கூடப் போயி கூத்தடிச்சிட்டு வந்திட்டீக....

காலங்காத்தால ஆரம்பிக்காத தாயி....

அவள் முனுமுனுத்தபடியே எழுந்து சென்றாள். தூக்கம் கலைந்து விழித்த ஸ்வீட்டி தன் தந்தை தன்னருகே அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் மெல்ல தன் தலையை மட்டும் நிமிர்த்தி அவரது மடியில் படுத்துக் கொண்டாள்.

அப்பா உன்னைய ரொம்ப கலங்க வச்சிட்டனோ....? ஸாரிம்மா....என்றபடியே அவளது தலையை வாஞ்சையாய் அழுத்தினார்.

“விடுப்பா..... எனக்கு தலையெல்லாம் ரொம்ப வலிக்கு.... நான் இன்னக்கும் காலேஜ் போலப்பா....

நேத்தும் போலியேம்மா.... ஏதாவது சொல்லிரப் போறாங்க....

அப்பா ப்ளீஸ்பா..... இன்னக்கு ஒருநாள் மட்டும்பா....

சரிடா எந்தங்கம்....

ஜொஸியம்மே பூசை முடிந்து வந்து காலை சிற்றுண்டியும் தயார் செய்துவிட்டிருந்தாள். பிரவீண் விழித்திருக்கவில்லை. அவளுக்கும் அவனை எழுப்ப மனமில்லாமல் அங்குமிங்குமாய் அலைந்த வண்னமிருந்தாள். முந்தைய நாள் நிகழ்வுகள் அவளுக்குள் ஒரு இனம்புரியாத கவலையை அளித்துக் கொண்டிருந்தது. நேரம் பத்து மணியை நெருங்கி விட்டிருந்தபடியால் அவனை எழுப்பிவிடலாம் என முடிவு செய்தபடி அவனருகே சென்றால். அப்போதுஆச்சி....என்றபடி ஸ்வீட்டி வீட்டுக்குள் நுழைந்தாள். நேற்றைய சோர்வுகள் எதுவும் அவளிடம் தென்படவில்லை. நீல நிறத்தில் ஸ்கெர்டும் டாப்ஸும் அணிந்திருந்தாள். டாப்ஸ் வஞ்சகமில்லாமல் வளைவு நெழிவுகளில் பயணித்து அவளது உடலை இறுகி அணைத்து கொண்டிருந்தது. இயல்பான துள்ளலுடன் இருந்தாள்.

“வாம்மா.... என் சீதேவி எங்க ஆத்தாளுக்கு கோவமெல்லாம் தணிஞ்சிருச்சா....?

மச்சான எங்க....?

இன்னும் எந்திக்காம தூங்குறானேன்னு இப்பதான் எழுப்ப போனேன்.... நீ வந்திட்ட....

ஆச்சி நீங்க போங்க நானே மச்சான எழுப்புறேன்...

அவள் உள்ளே வந்ததுமே பிரவீண் தூக்கம் கலைந்திருந்தான். ஆனாலும் தூங்குவது போலவே படுத்திருந்து கொண்டே அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.

சரித்தா.... நீயே ஒன் நொச்சான எழுப்பு... என்றபடி ஜொஸியம்மே கிச்சனுக்குள் சென்றாள். ஸ்வீட்டி பிரவீண் அருகே அமர்ந்து கொண்டாள். அவன் கைகள் இரண்டும் தலையனையை அணைத்தபடி குப்புற படுத்து தலையை வலப்பக்கம் வைத்திருந்தான். அவள் குனிந்து அவன் காதருகே சென்றுபிரவீண் எழும்பு டா....என்றாள். அவன் தூங்குவது போலவே பாசாங்கு செய்தபடி.... தன் தலையை மட்டும் இடப்பக்கம் திருப்பியபடி படுத்துக் கொண்டான். அவளுக்கு புரிந்து போனது அவள் விழித்து விட்டான் என. இப்போது அவள் தனது முடிகற்றை கொஞ்சம் எடுத்து அவன் மூக்கின் அருகே கொண்டு செல்லவும்.... அவன் பட்டென்று மல்லாந்து திரும்ப..... அவளது முலைகள் ரெண்டும் அவன் முகத்தில் மோத அவளை படுத்தபடியே அணைத்துக் கொண்டான்.

“ஏய்.... திருட்டுப் பூன..... விடுடா....என்றபடி அவள் திமிரவும் அவன் மீண்டும் அவளை இறுக பற்றிக் கொண்டான். தற்செயலாய் அறையின் உள்ளே நுழைந்த ஜொஸியம்மே இந்த பிரிமனை திரிப்பை கண்டு திகைத்து பதறிப் போனாள். பட்டென்று வந்து ஸ்வீட்டியின் முதுகில் செல்லமாய் ஒரு அடியை போட்டபடி ”ஏய்! கழுத எழும்புடி....” என அவள் சொல்லவும் பிரவீண் பதறிபோனவனாய் அவளை விடுவித்தான்.

அவள் சற்று தள்ளி விலகிச் சென்று நின்றபடி “ஆச்சி.... நான் மச்சான எழுப்பதான்.... வந்தேன்.... மச்சாந்தான்....” என படபடப்பு அடங்காதவளாய் பேசினாள்.

“அய்யோ ஆச்சி நீங்க நெனச்சித்தான்.... நான்... அப்படி பண்ணிட்டேன்...” என பிரவீணும் உளரிக் கொட்டினான்.

“கெழவிக்கும் கொமரிக்கும் வித்தியாசம் தெரியலையாக்கும்..... நல்லா சொல்லுவீரே?”

“அப்படி கேளுங்க ஆச்சி”

“என்ன நோளுங்க ஆச்சி....? நீ இதுக்குதான் காலேசுக்கு போவாம இங்கனையே குட்டி போட்ட பூன மாறி சுத்துறியாக்கும்?”

“ஆமோ.... ஒங்க பேரம் பெரிய மன்மத குஞ்சு.... நான் அலையறதுக்கு?”

“அடி செருப்பால.... எம் பேரனுக்கு என்ன கொறடி எட்டு சீமையில தேடுனாலும் இப்படி ஒரு ராசா உனக்கு கெடப்பானாக்கும்?”

“ஆங்.... ரொம்ப பவுசுதான்!!! காக்கா வந்து தூக்கிட்டு போயிறபோது பத்திரமா பொத்தி வச்சிக்குங்க”

“ஏய் வா கிழிஞ்ச கொமறி வந்தேன் இப்போ....” என்றபடி ஜொஸியம்மே அவளை அவள் பக்கமாய் போகவும் “வெவ் வெவ்வே....” என அளவம் காட்டிய படி ஓடியே போனாள் ஸ்வீட்டி.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு நீமரு என்ன உக்காந்து போஸ் குடுத்துட்டு இருக்கியரு... போயி பல்ல வெளக்கிட்டு சாப்பிட வாரும்” என பிரவீணை எழுப்பி கிளம்பச் செய்தாள்.

ஸ்வீட்டியால் அவளது வீட்டில் அன்று ஒரு ஐந்து நிமிடம் கூட சேர்ந்தாற் போல் இருக்க முடியவில்லை. அவள் பிரவீணையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள். முந்தைய தினத்தின் கசப்புகளெல்லாம் சுவடுகள் தெரியாமல் அவனுக்குள் அழியப்பட்டிருந்தது. சின்னச் சின்ன ஊடல்களுக்கு பிறகு ஏற்படும் அந்த கூடல்கள் அத்தனை ஆத்மார்தமானவை நாம் நமது பிரியத்துக்குரியவர்களை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை அதன் ஒவ்வொரு கணமும் நமக்கு உணர்த்தும். ஆம்!! இனிப்பின் சுவை கசப்பை சுவைத்தவனுக்கே தெரிவது போல்.

மாலை 5.00 மணி.....

அழகான கரும்பச்சை நிற சுடிதார் அணிந்து தன் தந்தை ஜோசப்பிடமிருந்து அவரது இருசக்கர வாகனத்தின் சாவியையும் வாங்கிக் கொண்டு வந்து நின்றாள் ஸ்வீட்டி.

“மச்சான் கெளம்புங்க….. வெளியில போவனும்?”

“எங்கையே கிளம்பனும்?”

“கிளம்புங்க சொல்றேன்…..”

“எங்கடி எம் பேரன கிளம்பச் சொல்ற…..?”

“கெழவி….. இங்க யாரும் உங்ககிட்ட பேசல…. மச்சான கூட்டிட்டு எங்கையாவது போவேன் உங்களுக்கு என்ன?”

“போவடி போவ….. அதெல்லாம் அவன் உங்கழுத்துல தாலிய கெட்டுன பெறவு போ…. இப்ப உங்கப்பன கூட்டிட்டு போ….”

“எங்களுக்கு எல்லாம் தெரியும்….. எங்க அப்பாகிட்டயும் சொல்லியாச்சு தெரியுதா…..” என்றபடி ஜோசப்பின் பைக் சாவியை ஆட்டிக் காண்பித்தாள்.

“எம்மா….” என்றபடியே ஜோசப்பும் உள்ளே வந்தார்.

“வாய்யா இந்த வாயாடி பேவுள்ள என்னமோ சொல்றாளே என்னனு கேளு?”

“எம்மா…. அதெல்லாம் ஒண்ணுமில்லமா…. அவ ரெண்டு நாளா காலேஜுக்கு போல இல்லையா…. அதான் ரொமிளா வீட்டுக்கு போயி ஏதோ பாடம் கேட்டிட்டு வாரேன் சொன்னா அதான் போயிட்டு வான்னு சொன்னேன்”

“அதுசரி அதுக்கு எதுக்கு இவன கூப்புடுறா?”

“அவ தனியா எப்படி போவா? பிரவீணனையும் கூட்டிட்டு போன்னு சொன்னேன்”.

“எல கூறுகீறு கெட்டுப் போச்சா உனக்கு ஒண்ணு நீ கூட்டிட்டு போவனும் இல்ல ஒம்பொண்டாட்டிய போவச் சொல்லனும் அத வுட்டிட்டு சின்னஞ் சிறுசுகள ஒண்ணா போவ சொல்றியே? ஊர் நாலு பேசும்னு வேண்டாமா?”

“என்னமா நீங்க…. எந்த காலத்துல இருக்கீங்க? ஊரு பேசும் கூறு பேசும்ட்டு”

“நீயும் ஒம்மவ கூட சேந்துகிட்டு ஆடுனா அவளுக்கு நல்ல கொண்டாட்டமாத்தான் கெடக்கும்…. நான் சொல்றத சொல்லிட்டேன் அப்புறம் நீயாச்சு, உம்மவளாச்சு, உம்மருமவனாச்சு….” என சொன்னவளுக்கு காலையில் தான் கண்ட காட்சி ஏனோ நினைவில் வந்து நிழலாடிச் சென்றது.

பிரவீண் கிளம்பி பைக்கை ஸ்டார்ட் செய்ய அவள் அவன் பின்னால் ஏறி அமர்ந்து அவனது தோள்களை பற்றிக்கொண்டாள்.

வண்டியை ஓட்டியபடியே பிரவீண் “எனக்கு உம் பிரண்டு வீடு தெரியாது எப்படி போவனும்னு சொல்லு?”

“பிரண்டு வீட்டுக்கெல்லாம் பெறவு போய்க்கிறலாம் இப்ப நீங்க எங்கையாவது போங்க. மச்சான்”

பைக்கை சட்டென்று நிறுத்தியவன் அவள் பக்கமாய் திரும்பி “ஏய்!! விளாடுறியா? எங்கையாவதுன்னா எங்க போவ?”

“மச்சான் மொதல்ல வண்டிய எடுங்க நடுரோட்ல நிப்பாட்டிகிட்டு…..”

அவன் மெல்ல வண்டியை ஓட்டியபடி “எங்க டீ போவனும்?”

“மச்சான் பீச்சுக்கு போவமா?”

“பீச்சுக்கா….. தேவையில்லாம பிரச்சனைய வெலக்கு வாங்க சொல்றீயா?”

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது….. போங்க மச்சான் பொட்டப்புள்ள நானே தைரியமா சொல்றேன்…. நீங்க என்னடான்னு இப்புடி பயப்புடுறிங்க….”

“நேரம்டி…. சரி எந்த பீச்சுக்கு போகனும்?”

“தூத்துக்குடில தொள்ளாயிரத்தி எட்டு பீச்சா இருக்கு?”

”ரோச் பார்க்கா இல்ல ஹார்பர் பீச்சான்னு கேட்டேன்”

”எது தூரமோ அங்கையே போங்க…..”

“நீ வெவரந்தாண்டி….”

“இல்லாட்டி உங்களயெல்லாம் சமாளிக்க முடியுமா?”

அவன் பைக்கை திருகி அல்பர்ட் அன்கோ வளைவிலிருந்து பீச் ரோட்டை நோக்கி வண்டியை விட்டான். வண்டி பீச் ரோட்டை நெருங்கியதும் மாதா கோயிலுக்கு மக்கள் ஓரிருவராய் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. பிஷ்ஷிங் கார்பரை வண்டி தாண்டியதும் மக்கள் நடமாட்டம் கொஞ்சம் குறைய துவங்கியது ஸ்வீட்டி அவனை இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டாள். அவனது தோளில் இருந்து தன் கையை எடுத்து அவனது இடுப்பில் படர விட்டுக் கொண்டாள். அவனும் அந்த திடீர் நெருக்கத்தால் கதகதப்படைந்து போனான். அவனது கைகள் வேறுவழியின்றி ஆக்சிலேட்டரை திருக ஆரம்பித்தது. ரோச்பார்க்கையும் அதன் பாலத்தையும் தாண்டி வண்டி விரைந்தது. கடல் நீர் ஒருபக்கமாகவும் உப்பளங்களுக்கு செல்லும் காயல் நீர் ஒருபக்கமாகவும் என ரோட்டிற்கு இருபக்கமும் நீரோடிக் கொண்டிருக்க நடுவில் சாலையில் அவளோடு அந்த மாலை நேரத்தில் பைக்கில் அவன் பயனித்தது அழகான ஓவியம் போலிருந்தது.

மாதா கோயில் திருவிழா நேரம்….. அதுவும் வியாழன் மாலை என்பதால் பீச்சிலும் அதிக கூட்டம் இருக்கவில்லை. பைக்கை கடலுக்கு அருகே கொண்டு நிறுத்தியவன் அவளோடு கைகோர்த்தபடி கரையோரம் நடக்கத் துவங்கினான்.

அங்கே மாலை மங்கிக் கொண்டிருக்க….. வஞ்சியவள் கூந்தலை வருணன் வருட….. கதிரவன் மறைய மறுத்து அவள் பொற்கன்னங்களில் தன் வீச்சிழந்த கதிர்களைக் கொண்டு முடியாமல் முகர்ந்து கொண்டிருக்க….. அலைகள் வந்து அவள் காலடியை முத்தமிட துடிக்க…. வங்கக்கடல் ஆர்ப்பரிக்க….. ஐம்பூதங்களையும் வென்ற கர்வத்தோட மங்கையவள் கரம்பிடித்து….. காற்றிற்கும் பூமிக்கும் இடையே கால்வைத்து நடக்கத்துவங்கினான்….. பிரவீண்!!!

காலம் கொஞ்ச காலாறத் துவங்க….. அங்கே இருவருக்குமான மொழி அவர்கள் கண்கள் வழியே பிறக்கத் துவங்கியது. பின்னிய கரங்கள் நசநசக்க….. கோர்த்த விரல்கள் பிசுபிசுக்க…. அவர்களது உடல்களில் காந்தவிசை படரத்துவங்கியது. மூளைக்கும் கால்களுக்குமான செய்தி தொடர்பில் ஏற்பட்ட திடீர் தடங்கள்களால் அவர்களது நடை பாதியில் நின்று போயிருந்தது. ஏதேதோ பேசிக் கொண்டார்கள்….. இருவரும் சில மனஒப்பந்தங்களும் எடுத்துக்கொண்டார்கள்….. சின்னச் சின்ன சண்டைகளும்…. செல்லச் செல்ல சீண்டல்களும்… என வார்த்தைகளற்ற அவர்களது மொழியில் நீண்ட சம்பாஷனைகள் நடக்கத் துவங்கியது. கொஞ்சம் கொஞ்சமாய் அதுவும் மௌனிக்க களைத்துப் போய் அவன் தோள்களில் அவள் சாய்ந்தாள்.

அவளது தலையை கோதியவாறு நினைவடுக்குகளிலிருந்து தமிழை மீட்டு “என்னமா…..”

“மச்சான் இப்படியே இறந்திரலாம் போல இருக்கு”

“ச்சீ…. என்ன பேச்சு பேசுற….. வாய முடு டீ”

“இல்ல மச்சான் ஏதோ பயமா இருக்கு….”

“என்ன பயம் வேண்டிக் கெடக்கு அதான் நான் இருக்கனே…. என்ன மீறி என்ன வரும் உனக்கு….”

அவள் கண்கள் திடீரென்று பனித்துக் கொண்டது.

“என்ன லூசு மாறி அழுவுற….. இதுக்குதான் பீச்சுக்கு போவோம் மச்சான்னியா?”

“உங்கள உடனே கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுது”

“நாளைக்கே பண்ணிக்கலாமா?”

“ம்….”

“அதுசரி…..உனக்கு என்னடி ஆச்சு….ஏன் லூஸு மாறியே பேசுற?”

“இல்ல மச்சான் நேத்து காலைல தான் நாம இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் மனசு விட்டு பிரியத்த சொன்னோம் ஆனா சாயந்திரமே நமக்குள்ள சண்டையாகிப் போச்சு….”

“ஏய்!!! லூஸு நம்ம சந்தோஷத்துக்கும் சரி….. சண்டைக்கும் சரி நாமதான காரணமே….. நாம எதையும் யோசிச்சு பேசியிருந்தா நேத்து சண்டையே வந்திருக்காதே….”

“அதெல்லாம் இல்ல மச்சான்…. எங்கப்பா நான் என்ன செஞ்சாலும் அடிக்க மாட்டாரு ஆனா பாருங்க நேத்து அவுரு அவ்ளோ பேர் முன்னால யோசிக்காம என்ன கை நீட்டிடாரு…. எனக்கு என்னோட சந்தோஷமெல்லாம் நிரந்தரமா இருக்காதோன்னு தோணுது மச்சான்….”

“கண்டதையும் போட்டு மனச கொழப்பிக்காத….. வா இருட்டிருச்சு வீட்டுக்கு போகலாம்” என்றபடி நடக்கத் துவங்கினான். ஏனோ இருவருக்கும் அப்போது மனம் கணத்திருந்தது. மீண்டும் பைக்கில் ஏறியவுடன் அவள் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். காற்றை கலைத்தபடி காதல் பயணம் தொடர்ந்தது…..

.......தொடரும்.

கருத்துகள் இல்லை: