செவ்வாய், 17 ஏப்ரல், 2012

16-ஆம் காம்பவுண்ட்....6



கனி ஆச்சி......!!!!






அவளும் அவளது பிள்ளைகளில் மூத்த மகளையும், இரண்டாவது மகனையும் தவிர மற்றவர்கள் அனைவரும் பெரிய காம்பவுண்டில் அடுத்தடுத்த வீடுகளாய் நான்கு வீடுகளில் வசித்து வருகிறார்கள். ராஜகனியும் அவளது கணவர் ஜான் பர்னாந்தும் கொழும்பிலிருந்து அறுபதுபதுகளின் இறுதியில் 16-ஆம் காம்பவுண்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருவருக்கும் பூர்வீகம் உவரி. உவரியிலிருந்து இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் கொழும்பிற்கு பிழைக்கப் போனவர்கள் அங்கே செல்வச் செழிப்பாக வாழ்ந்துள்ளனர். ஆனால் பௌத்த சிங்கள இனவெறி அறுபதுகளின் இறுதியில் அங்கே வாழ்வாங்கு வாழ்ந்து வந்த இலங்கை தமிழருக்கு எதிராக கிளம்பியபோது பிழைக்க வந்த இடத்தில் பொல்லாப்பு வேண்டாம் என திரும்பிய குடும்பங்களுள் ஒன்று ராஜகனியினுடையது.



அவர்கள் கொழும்பிலிருந்து திரும்பும் போதே அவர்களுக்கு இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களுமாய் நான்கு குழந்தைகள் இருந்தன. 16-ஆம் காம்பவுண்டிற்கு குடியேறியதை முன்னிட்டு சிறப்பு கொண்டாட்டமாய் பெண்ணொன்றும், ஆணொன்றுமாய் மேலும் இரண்டு பெற்றுக் கொண்டார்கள். அந்தக் காலக்கட்டங்களில் ஜொஸியும் அவரது குடும்பத்தாரும் தான் அவளுக்கு உறவுக்கு உறவாய் இருந்தார்கள்.



ஜான் பர்னாந்திற்கு வீடும் மியூசியத்தைப் போலவே எல்லாவற்றிலும் நேர்தியோடும் ஒழுங்கோடும் இருக்க வேண்டும். அவர் வீட்டில் இருக்கும் போது வீடு அப்படி ஒரு நிசப்தமாய் இருக்கும். ஆனால் வீட்டின் இயல்பு அதற்கு நேர்மாறானது. நல்ல பாம்பே டையிங் மாடலைப் போல அத்தனை டீக்காக சப்பாத்தனிந்தே எப்போதும் வெளியில் செல்வார். காலையில் எழுந்ததும் முதல் பூசைக்கு போவதில் இருந்து இரவில் மூன்று போட்டுவிட்டு உணவருந்தும் வரை எல்லாம் அவருக்கு அட்டவணைப் படிதான்.



கனி ஆச்சி.....எப்போதும் அதிர்ந்தே பேசாத இயல்புக்குரியவள். யாரையும் மரியாதையுடனே அழைக்கும் பண்பும், யாருக்கும் கனிவுடன் இறங்கும் இரக்க குணமுமாய் கனிவான ஆச்சி!!! ஆச்சர்யமான பரத்தி!!! பிரவீண் தன் சிறு பிராயத்தில் அதிகம் வளர்ந்தது அவள் வீட்டில் தான். ஆனானப்பட்ட ஜான் பர்னாந்தே அவனிடம் மட்டும் குழந்தையாகிப் போவார். அவரிடம் நேரடியாக சொல்ல வேண்டிய விஷயங்களைக் கூட அவரது பிள்ளைகள் பிரவீண் மூலமாகவே சொல்லி காரியம் சாதித்து கொள்வர்.



ஜொஸியும், கனியும் ஆத்ம தோழிகளாய் இருந்தனர். இருவரும் தத்தமது மனச்சுமைகளையும், வீட்டுப் பிரச்சனைகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு ஆறுதல் தேடிக் கொள்வர். அதுபோலவே பிரவீணின் அம்மா ஜெயாவும் கனிக்கு மூத்த மகளைப் போலவே இருந்து வந்தாள். அவளது பிள்ளைகளும் அவளிடமும் சரி நிக்கோலசிடமும் சரி அக்கா, மச்சான் என்றே உரிமையுடன் பழகி வந்தார்கள்.



“எம்மா....இந்த பிரவீண் கழுத ஒருவழியா திரும்ப வந்திட்டானாம்.....இங்க வந்தானா பாருங்க.....வரட்டும் அவன கவனிச்சுகிர்றேன்....” என கனியின் இரண்டாவது மகள் பிம்லா தன் தாயிடம் ஆவலாதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரவீணும், ஜொஸியும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
“என்ன எம்பேச்சுதான் ஓடிட்டு இருக்கு போல?” என்றபடியே பிரவீண் உள்ளே சென்றான்.



“வால எரும மாட்டுக் கழுத.....!!!! நீ வந்தா நேர இங்க வரமாட்ட....பெரிய மனுசனாயிட்ட....” என்றபடி அவன் தலைமயிரை தன் கைகளால் பிடித்து இரண்டு ஆட்டு ஆட்டிவிட்டு அவனது கன்னத்தில் ஓங்கி செல்லமாய் அடித்தாள் பிம்லா.



“ஏய்!!! வந்ததும் வராத்துமாய் புள்ளய போட்டு அடிச்சிக்கிட்டு..... எவ்ளோ பெரிய புள்ளயா வளந்திட்டாரு.... நீ இன்னும் கழுத அது இதுன்னு பேசிகிட்டு....” என தன் மகளை கோபித்துக் கொண்டாள் கனியாச்சி.



“நான் வளத்த பய நாளக்கே இவனுக்கு கல்யாணோ(ம்) ஆச்சுனாலும் இவன் பொண்டாட்டி முன்னாலையே இவன இப்படித்தான் அடிப்பேன்....”



“ஆமோ....எம்மா நீங்க அடிக்கிறத வர்ற புள்ள பாத்திட்டு நிக்குமாக்கும்.....நெனச்சுக்க வேண்டியதுதான்....”-ஜொஸி.



“ரொம்ப நாள் கழிச்சு வந்தா....எப்படி இருக்க? நல்லா இருக்கியா...?ன்னு நாலு வார்த்த கேப்பீகன்னு பாத்தா.....ஐய்யய்யோ.....இந்தப் பாடு படுத்துறீக?”-பிரவீண்



“பாத்தாலே தெரியல நல்லா....தடிமாடு மாறி வளந்திருக்கன்னு....இதுல ஐயாவ குசலம் வேற விசாரிக்கனுமாக்கும்...”



“இவ ஒருத்தி.... சும்மா கெடக்க மாட்டா.... வாங்க பிரவீண் இப்படி உக்காருங்க.... ஏ!புள்ள... அவருக்கும் ஜொஸி அக்காவுக்கும் குடிக்க ஏதாவது கொண்டுவா.....”



“எல என்ன வேணும் ஜீஸா.... காபியா...?”



”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.... மத்தியானம் சாப்பிட்டதே இன்னும் செமிக்கல.....நீங்க வேற....”



“என்னல ஒங்க ஜோசப் மாமா வீட்ல செம கவனிப்போ....? ஒங்....ஆளு என்ன சொல்றா?”



“எம்மா தாயே உங்ககிட்ட நான் எந்த வம்புக்கும் வரல..... உள்ள போயி ஜூஸப் போட்டுக் கொண்டு வாங்க....”



“பயலுக்கு அந்தப் புள்ளய பத்தி சொன்ன உடனே வெக்கத்தப் பாருங்க?”



“போ புள்ள..... புள்ளயப் போட்டு நோண்டிக்கிட்டு...”



“எல........எப்ப வந்த....?”- இது கனியாச்சியின் கடைசி மகள் சூட்டி.



“கழுத....காலையிலையே வந்திருச்சு.... ஆனா இப்பதான் இங்க வர்றதுக்கு வழி தெரிஞ்சிருக்கு”-பிம்லா கிச்சனுக்குள் இருந்தபடியே குரல் கொடுத்தாள்.



“நீங்க இன்னும் ஜூஸ் போடலையா?”-பிரவீண்.



“எல என்னல ஜாமான் வாங்கிட்டு வந்த எங்களுக்கு?”



“அரைகிலோ தங்கமும்....ஒரு கிலோ வைரமும் வாங்கிட்டு வந்திருக்கான்”



“ஏய்!!! என்ன புள்ளைய போட்டு ஆளாளுக்கு பாடா படுத்திகிட்டு.... எட்டு வருஷம் கழிச்சு அவரு நமக்கு புள்ளையா வந்திருக்காரே அதவிட வேற என்ன நமக்கு வேணும்....?”-கனியாச்சி



”அதச் சொல்லு கனிம்மா மொதல்ல..... எனக்கு என்னமா இருக்கு வாழ்க்கைல இவன விட்டா.... இவன் வந்ததே ஜீவன் திரும்பி வந்த மாறி இருக்கு....” என கண்ணை கசக்கினாள் ஜொஸி.



“ஜொஸி அக்கா.... நீங்க என்ன....? அதான் புள்ள நல்ல படியா வந்திட்டாரில்லையா.... இனிமே ஒருகால் கட்ட போட்டுட்டா எல்லாம் சரியாயிரும்....”



“இனும போறன்னா....யார் விடுறா இவன....?”-சூட்டி.



“நீங்க அக்காமரெல்லாம் புடிச்சு நல்ல புத்தி சொல்லி.... இவன ஒருவழி பண்ணுங்ககிறதுக்கு தான உங்ககிட்ட இழுத்திட்டு வந்திருக்கேன்....” என்றாள் ஜொஸி.



“ஏ!! புள்ள சூட்டி.... அவ பேச்செடுத்தாலே இவன் வழியுறான்..... இவனா அவள இழுத்திட்டு போகாம இருந்தாலே பெருசு..... இதுல நாம வேற சொல்லனுமாக்கும்?” என மீண்டும் கிண்டினாள் பிம்லா.



“எல....பிரவீணு.....பிம்லா புல்பார்மல இருக்காடா நீ வாயகீய குடுத்துறாத....”-சூட்டி.



“நானும் வந்ததுல இருந்து பாக்குறன் என்னைய வாரிகிட்டு இருக்காக....பாத்துகிர்றேன்”



கனியாச்சியின் மற்ற பிள்ளைகளும் மருமக்களும் ஒவ்வொருவராய் வரத்துவங்கினர். அங்கு ஒரு நீண்ட நேரக் கச்சேரியே பிரவீணை மையமாய் வைத்து அரங்கேறத் துவங்கியது. நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்ட இருந்தார்கள். மணி சரியாக ஏழைக் கடந்ததும் ஜான் தாத்தா தனது கடையை மூடிவிட்டு வீடு திரும்பினார். அவர் வலைகள்,போயா போன்ற கடல் சம்பந்தமான பொருட்களை மொத்தமாக விற்கும் கடை ஒன்றை






“பர்னாண்டோ ஸ்டோர்ஸ்” என்ற பெயரில் வைத்திருந்தார்.
அவர் வந்ததும் ஆர்பாட்டங்கள் குறைய ஆரம்பித்த்து.



“வாங்க.....பிரவீண்....எப்படிய்யா இருக்கீங்க? ஹட் எ லாங் டிரிப்....அங்?”



“கிரேட் தாத்தா.... நீங்க எப்படி இருக்கீங்க?”
துர இங்கிலீஸ்லாம் பேசுது என பிம்லா தன் தங்கையிடம் கிசுகிசுத்தாள்.



“ஆல்வேஸ் பைன் யங் மேன்...சாப்டீங்களாய்யா? ஏய்! கனி.....பிரவீண் சாப்டாரா?”



“புள்ளங்க பேசிகிட்டிருந்திச்சு.....”



“சாப்பாட்ட எடுக்க வேண்டியதுதான....”



“இல்ல தாத்தா.... எனக்கு சாப்பிட நேரம் ஆகும்....”



“ஓ!!! மத்தது சாப்பிடுவீங்களாய்யா?”



“அப்படி இல்ல தாத்தா....”



“அதுல ஒண்ணுமில்ல.... பட் யூ ஷுட் பி கேர்புல் இன்வாட் யுஆர் ஹெவிங்.... ஈவன் டூமச் ஆப் மெடிசன் பிகம்ஸ் பாய்சன்....அம் ஐ ரைட்யா?”



“ஐ டூ அக்ரி தாத்தா..... பட் ஐம் எ சோஷியல் டிரிங்கர்...”



“தென் இட்ஸ் வெல் அண்ட் பைன்....”
அவர் தன் ஆடைகளை கலைய ரூம்மிற்குள் சென்றதும் மெல்ல மெல்ல அவரவர் தத்தமது வீடுகளுக்கு கிளம்பலாயினர். பிரவீணும், ஜொஸியும் மீண்டும் நாளை வருவதாய் சொல்லி விடை பெற்று கிளம்பினர்.



ஏழு வருடத்து கதைகளையும் ஒற்றை நாளில் அவனோடுபேசி தீர்த்துவிட வேண்டும் என்ற வேட்கை ஜொஸிக்கு இருந்தது. மீண்டும் இளமை திரும்பியதைப் போல் அத்தனை உற்சாகமாய் இருந்தாள். தனது இத்தனை ஆண்டுகள் தனிமை அவனது வருகையால் மீட்டெடுக்கப்பட்டதாகவே உணர்ந்தாள். மருமகள் சோபியாவிற்கு அவ்வப்போது கட்டளைகள் பிறப்பித்தும்..... பேத்தி ஸ்வீட்டியை வாரிக்கொண்டும்..... அக்கம்பக்கத்து வீடுகளிலெல்லாம் பெருமை பேசிக்கொண்டும்..... அன்று முழுக்க பரபரப்பாகவே காணப்பட்டாள்.



“பேரன் வந்திட்டான்னு என்ன ஆட்டம் போடுது கெழவி”-அவ்வப்போது தனது மகளிடம் கிசுகிசுப்பாய் சோபியா.



“சும்மா கெடக்க முடியாம என்னய வேற நோண்டிட்டு திரியுது......என்ட்ட.... தனியா சிக்காமையா போவும்? அப்ப வச்சுக்கிர்றேன்....”-ஸ்வீட்டி



“அத்தாடி..... ஜொஸியம்மேக்கு வந்த திடீர் பவுசப் பாரேன்.....”-அக்கம்பக்கத்தார்.
ஸ்வீட்டி அன்று ஒருவித பரபரப்போடவே திரிந்தாள். ஓராயிரம் முறையாவது அன்று முகக்கண்ணாடியில் தன் முகம் பார்த்திருப்பாள். அவ்வப்போது கடலை மாவு தேய்த்து முகத்தையும் கழுவிக்கொண்டு அலைந்தாள். அவன் பார்வையிலே இருக்கும்படியே தன்னை வைத்துக் கொண்டாள். அவளது வாழ்வில் அன்றைய தினம் மறக்க முடியாத ஒன்றாய் மாறச்செய்வதில் அத்தனை பிரயாசப் பட்டுக்கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாய் அவளும் பிரவீணுடன் சகஜமாய் பேசத் துவங்கியிருந்தாள்.



“ஏக்கி ஒருநாளக்கி எத்தன தடவ தான் மொகரைய கழுவுவ….”-சோபியா.



“............”-ஜோசப்.
ஆம்! அவருக்கு மகளின் எண்ணங்கள் புரியவே செய்தது. அவருக்கும் அதில் உள்ளூர விருப்பம் தான். ’இருந்தாலும் யார் யார்க்கு எங்கெங்கே விதிக்கப்பட்டுள்ளதோ....?’ என்றும் அடிக்கடி தனுக்குள் சொல்லிக் கொள்வார். ஜோசப்பும் சோபியாவும் காதலித்து தான் கரம் பிடித்தார்கள். இருவருக்கும் இடையே சாதிமத வேற்றுமைகள் இல்லையென்றாலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை.



சோபியாவின் குடும்பம் மணல்தெருவில் அப்போது வசித்தது. ஜோசப்பின் குடும்பத்தை வைத்து பார்த்தால் சோபியாவின் குடும்பத்தில் இன்னும் வறுமை அதிகம் தான். சோபியாவின் தந்தை மிக்கேல் பர்னாந்து ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த ஒற்றை வருமானத்தில் நான்கு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டிய சூழல். சோபியாவின் அம்மா மடோனா நிஜமாகவே சாம்ர்த்தியசாலிதான். அந்த சின்ன வருமானத்திலும் அவளால் சிக்கனமாய் வாழ முடிந்தது. ஒருபோதும் தன் கணவன் மிக்கேல் பர்னாந்தை அவள் அதற்காக நொந்து கொண்ட்தில்லை. சோபியா வீட்டில் இரண்டாவது பிள்ளை. அவளுக்கு ஒரு அண்ணனும், தம்பியும், தங்கையும் இருந்தனர். சோபியா நல்ல நிறம். சிறுவயதில் அவளைப் பார்பதெற்கென்று அந்தப் பக்கத்தில் ஒரு கூட்டம் எப்போதும் கூடுவதுண்டு. ஜோசப்பின் ஷிப்பிங் கம்பெனி அலுவலகம் அப்போது மணல்தெருவில் உள்ள சிறிய வீட்டில்தான் இருந்தது. அவனது அலுவலகத்திற்கு அடுத்தாற்போல் இருந்து சின்ன சந்து ஒன்றில் தான் சோபியாவின் வீடும் இருந்தது.



சோபியாவின் வீட்டில் பெரிதாக காதலுக்கு எதிர்ப்பில்லை. ஆனால் ஜோசபின் வீட்டில் அவனது அம்மா ஜொஸிதான்...... பொங்கி எழுந்து போர்க் கோலம் பூண்டுவிட்டாள். அது சூசைப்பர்னாந்து மனநலம் தேறி மீண்டும் கப்பலுக்கு சென்றிருந்த நேரம். ஒருவழியாய் ஜெயாவும் அவளது கணவர் நிக்கோலஸும் சேர்ந்து அவனுக்கும் சோபியாவிற்கும் திருமணம் செய்து வைத்தனர். தானே காதலித்து கல்யாணம் செய்து கொண்ட்தால் அவர் தன் மகள் ஸ்வீட்டி விஷயத்திலும் தனது எண்ணங்களை திணிக்க விரும்பியதில்லை. ஆனால் தற்போது அவள் தன் மருமகன் பிரவீணை விரும்பிகிறாள் என புரிந்து கொண்டதும் அவருக்கும் உள்ளூர பெருமகிழ்ச்சி தான்.



தொடர் மரணங்களாலும்...... பிரவீணின் நெடும் பிரிவினாலும் களையிழந்து போயிருந்த குடும்பத்திற்கு அன்று அவனது வருகையால் கொண்டாட்டமும் கும்மாளமுமாய் கழிந்தது. பிரவீணும்.... தனது வைராக்கியத்தால் இத்தனை நாட்கள் தான் எத்தனை விஷயங்களை இழந்துள்ளோம் என எண்ணிக் கொண்டான்.






.....தொடரும்.

கருத்துகள் இல்லை: