வியாழன், 30 ஏப்ரல், 2009

என் குடும்பமும் சோமாலிய பிரச்சனையும்


நேற்று என் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன்.அங்கு என் பாட்டி,தாத்தா,அத்தை,மற்றும் என் அத்தைமகள் அனைவரும் படபடப்புடன் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
எனக்கு இந்த அசாதாரணமான காட்சி பெரும் வியப்பை தந்தது காரணம் சீரியல்களிலும்,நடன நிகழ்ச்சிகளிலும் மூழ்கி இருக்க வேண்டியவர்களை செய்திகளில் கவனம் செலுத்த வைத்தது எது? ஈழ விவகாரமா?தேர்தல் நிலவரமா?அப்படியெல்லாம் இருக்க சாத்தியமே இல்லையே என்று எண்ணியவாறு,”என்ன மொத்த குடும்பமும் சாயிங்கால நேரத்தில சீரியஸாக நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்கீங்க? பார்த்து நாளைக்கு நம்ம லோக்கல் சேனல்ல இதுவே தலைப்பு செய்தியாயிரபோவுது”என்றவனை என் அத்தை ”அட நீ வேற,நானே கவலையில இருக்கேன்,உங்க மாமா நேத்து கப்பல்ல இருந்து போன் பண்ணியிருந்தாங்க அவங்க போற கப்பல் நாளைக்கு சோமாலியாவை கடக்குதாம் அங்க எல்லாரும் ரொம்ப பயத்தோட இருக்காங்களாம்,அங்க போற வர்ற கப்பல்கள கடத்தி கொண்டு வச்சு காசு கேட்டு மிரட்டுவானுங்களாமே! அதான் ரொம்ப பயமா இருக்கு....”என்றபடி கவலை ரேகையை தன் முகத்தில் படரவிட்டாள்.

நெய்தல் நில மக்களாதலால் கடலும் கடல் சார்ந்த தொழிலும் அது சார்ந்த பிரச்சனைகளும் எங்களை போன்ற குடும்பங்களுக்கு புதிதில்லை தான்.
ஆனாலும் இது போன்ற சந்தர்பங்களில் எங்கள் கவலைகள் கரைகளை கடந்து விடுகிறது.வலிகளுக்கான வரப்புகளை ஆறுதல் வார்த்தைகளால் உடைத்துவிட்டால் கவலைகள் தங்காதல்லவா?


நான்,”கவலைபடாதீங்க அத்தை அங்க ஏகப்பட்ட கப்பல்கள் போய்ட்டு வந்திட்டு இருக்கு அத்தனையையுமா புடிக்கிறானுங்க.ஏதாவது ஒன்னு இரண்டை அவனுங்க தேவைக்கு புடிச்சு வச்சுட்டு பணம் கொடுத்த பிறகு விட்டுறுவானுங்க.அதுமட்டுமில்லாம அப்படி புடிச்சு வச்ச கப்பல்கள்ல யாரையும் கொன்னு போட்டதாகவும் தெரியல.அவனுங்க நோக்கம் மிரட்டி பணம் வாங்குறது மட்டும் தானேயொழிய கொலை செய்யறது இல்லை........”ஆறுதலாக பேசுகிறோம் என்று நான் பாட்டுக்கு இப்படி பேசிக்கொண்டிருக்க என் அத்தை குறுக்கீடு செய்து,”நானே பயந்து போயிருக்கேன் நீ பாட்டுக்கு மிரட்டுவானுங்க பணம் வாங்குவானுங்கன்னு என்னென்னமோ சொல்றியே”என்று அதுக்கும் பயந்தாள்.

கண்களை டிவியிலும்,காதுகளை எங்களிடமும் கொடுத்துவிட்டு இதுவரை அமைதியாக இருந்த என் அத்தை மகளோ,”இவன் எப்பவும் இப்படித்தாம்மா எல்லாமே அவனுக்கு தெரிஞ்ச மாதிரி பேசுவான்,இவனுக்கு வேற வேலையே இல்லை....”என்று என் மேல் எரிச்சல் பட்டாள்.

இதை சற்றும் எதிர்பாராத நான்,”உனக்கு என்னடி தெரியும் சீரியலு,சினிமா,பாட்டு,கூத்து இதை விட்டா உனக்கு என்ன தெரியும்?சோமாலியாவை பற்றி என்ன தெரியும்?அங்க பசியிலும்,வறுமையிலும் மக்கள் கஷ்டப்பட்ட போது உலகமே பரிதாபம் மட்டும் தானே பட்டுச்சு,மிஞ்சி மிஞ்சிப்போனா உணவுப் பொட்டலமும்,பழைய துணியும் கொடுத்திருக்கும் அவ்வளவு தானே?ஆனா இப்போ துப்பாக்கிய காட்டி மிரட்டின உடனே கோடிக்கோடியா பணத்தை கொட்டுது.”

“ஆரம்பிச்சிட்டான்!இனிமே இவன் மொக்க போடறத நிப்பாட்டமாட்டான்....”என்றவளையும் என்னையும் பார்த்து என் அத்தை,”உங்க இரண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா? இங்க நானே பயந்து போயிருக்கேன், நீங்க என்னடான்னா தேவயில்லாம ஏதெதோ பேசி சண்டை போட்டுகிட்டு..”என்றவுடன் சற்று நேரம் அமைதி நிலவியது.

இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த என் தாத்தா அமைதியாக தன் அறைக்கு படுக்கச் சென்றார்.எழுந்து தனது மௌனத்தை கலைத்தவாறு என் பாட்டி,”ஏ!புள்ளை களா.... நாம கும்புடுற கடவுள் நம்மை கைவிட மாட்டார் தேவையில்லாம கவலைபடாம போய் சாப்பிடுங்க...எய்யா... நீ சாப்பிட்டிட்டு வந்தியா? இங்க சாப்பிடேன்யா....”என்றவளிடம், “இல்ல ஆச்சி நான் சாப்பிட்டிட்டு தான் வந்தேன்”என்றேன்.

“இப்ப இருக்கற மனநிலையில எங்கே சாப்பிடுறது....?”என்று அங்கலாய்த்தாள் அத்தை.திடீரென்று மௌனமானவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக,”ஓபாமா! சொல்லியிருக்காராமே சீக்கிரமே இந்த மாதிரி கடல் கொள்ளைகளை முடிவுக்கு கொண்டுவருவேன்னு....”என்றவளே தொடர்ட்ந்தாள்.....”ஏந்தான் இப்படியெல்லாம் செய்றானுங்களோ இவனுங்களுக்கு பொண்டாட்டி பிள்ளைகளெல்லாம் கிடையாதா?”என்று பொரிந்து தள்ளினாள்.

“எல்லா பிரச்சனைகளையும் அமெரிக்காவும்,பிரிட்டனும் தான் 90களில் இருந்தே செய்து வருகிறது.Peace keeping troops என்ற பெயரில் அமெரிக்கர்களும்,பிரிட்டனியர்களும் அனுப்பிய படைகளை எதிர்த்து சோமாலியர்கள் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டு அவர்களை விரட்டிய Battle of Mogadishu வில் ஆரம்பித்து இன்று வரை அங்குள்ள Islamic court union(ICU)ஐ அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக கூறி பல்வேறு தாக்குதல்களால் அந்த நாட்டில் ஒரு நிலையற்ற தனத்தை உருவாக்கி கடற்கொள்ளையர்களும் ,ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளும் உருவானதற்கு மறைமுகமாக அமெரிக்கர்களே காரணம். தனது ஆயுதங்களையும் வாங்க செய்து, நேரடியாகவும் மறைமுகமாகவும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான அமெரிக்கர்கள் தான் இன்று இதற்கு முடிவும் சொல்ல போகிறார்களாக்கும்?இதைத் தான் குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது.” என்றெல்லாம் பேசி தேவையில்லாமல் அவர்களை நான் குழ்ப்பாமல்,”அத்த!ரொம்ப கவலை படாதீங்க எல்லாம் நல்ல படியா நடக்கும்,காலையில மாமா போன் பண்ணும் போது நான் ரொம்ப கேட்டதாக சொல்லுங்க”என்றபடி அங்கிருந்து கிளம்பினேன்.

சோமாலியர்களை பற்றியோ அல்லது அவர்களது உள்விவகாரங்களை பற்றியோ எந்த கவலையும் அக்கறையும் இதுவரை எனக்கோ அல்ல எனது குடும்பத்திற்கோ ஏற்பட்டதில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் அவை நம்மை பாதிக்கும் என்றவுடன் இப்பொது உணர்வுகள் பீறிடுகிறது.மகாத்மா காந்திக்கே தன்னை ரயிலிலிருந்து தள்ளிய பிறகு தானே நிறவெறி புரிந்தது.
இதை நம்ம ஓர் வழக்கில் சொல்ல வேண்டும் என்றால்,தனக்கு தனக்குன்னா புடுக்கு கூட களையெடுக்குமாம்.
(பி.கு:என் மாமாவின் கப்பல் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஸோமாலியாவை கடந்துவிட்டது)

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

தோழர்களின் மேலான கவனத்திற்கு......


தமிழீழம் குறித்த நமது பார்வையும் அணுகுமுறையும் சரியானதல்ல.போராட்டங்கள் ஒன்றும் கம்யூனிஸ்ட்களுக்கு புதிதல்ல.அது போலவே போராட்ட வடிவங்களும்.எந்த ஒரு வர்க்கப் போராட்டமானாலும் சரி,இனப் போராட்டமானாலும் சரி அதை முன்னெடுத்து செல்பவர்களுக்கு பெயர் போராளிகளே அன்று தீவிரவாதிகள் அல்ல.ஆயுதம் ஏந்தினாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்கள்.ஏனென்றால் ஆயுதபுரட்சியை கொண்டு வெற்றிகரமாக சோசியலிச ஆட்சியை நிறுவிய வரலாறு கம்யூனிஸ்ட்களுக்கு உண்டு.போராளிகளின் ஆயுதங்களை முடிவு செய்பவர்கள் அதிகாரவர்க்கம் தான் என்பதிலும் மாற்று கருத்து நமக்கு இருக்கமுடியாது.அப்படி இருக்கையில் விடுதலைபுலிகளை தீவிரவாதிகளாக நாம் கருதுவது சரியா?

சரி!இப்போது என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்படலாம் அதாவது நமது நாட்டுப் பிரதமரை நம் மண்ணில் வைத்தே கொலை செய்தார்களே அது ஞாயமா என்று? இதற்கு என்னிடம் சில பதில் கேள்விகள் உள்ளன.அவை...

நமது நாட்டின் மற்றொரு பிரதமரே நாம் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது தவறு என்று கூறி அமைதிப்படையை திரும்பபெற்றாரே அது ஏன்?அப்படியென்றால் அமைதிப்படைக்கு கொடுக்கப்பட்ட ரகசிய பணி என்னவோ?ஒரு நாட்டில் அமைதியை நிலை நாட்ட சென்ற படைபிரிவினரை அந்த நாட்டின் அரசாங்கமும் அதை எதிர்த்து போராடும் போராளிகளும் ஒன்று சேர்ந்து விரட்டியது ஏன்?

கொலைகளை நான் ஞாயப்படுத்தவில்லை ஆனால் அதே சமயம் கொலைகளுக்கு உண்டான காரணங்களையும் நாம் கவனிக்காமல் தீர்ப்பளிப்பது ஞாயமில்லை என்றே சொல்கிறேன்.இங்கு மேலும் சில விஷயங்களை நான் தெளிவு படுத்த விரும்புகிறேன் தமிழ் ஈழம் என்பதில் மார்க்சிஸ்டுகளான நாம் முரண்படுவது ஞாயமில்லை.அது பிரிவினை வாதமும் அல்ல.அது ஒரு நிர்பந்தம்.யாரும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கும் போது அதை எழுப்பவில்லை.சிங்களப் பேரினவாதிகளை பொறுத்தவரையில் தமிழர்களை அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே பார்கிறார்கள்.அவர்களை பொறுத்தவரையில் தமிழர்கள் அடிமைகளாகவும்,கூலிகளாகவும் மட்டுமே இருக்க தகுதியானவர்கள்.ஒரு போதும் அவர்கள் தமிழர்களை சமமாக கருதமாற்றார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்.அப்படி இருக்கும் போது தமிழீழம் ஒன்றே சரியான வழி.
.
இந்த சூழலில் இதை பிரிவினை வாதம் தான் என்று நாம் அடித்து சொன்னால் வரலாறுகளை சற்று திரும்பி பார்க்க உங்களை அழைக்கிறேன்.இது தவறு என்றால்.............

அம்பேத்கார் தலித் தோழர்களுக்கு இரட்டை வாக்குரிமை கோரியதை பிரிவினைவாதம் என்று சொல்லி காந்தி உண்ணாவிரதமிருந்தது தலித் மக்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தபடுத்தவில்லையா?

பாலஸ்தீனம் கேட்டு போராடும் அரேபியர்களுக்கு ஆதரவு தரும் நாம் ஏன் தமிழர்கள் கேட்கும் தமிழீழத்தை ஏற்க மறுக்கிறோம்?

இனவாத பிரிவினையை சித்தாந்தத்திற்க்கு எதிரானது என்று கொள்வோமேயானால் நாம் சித்தாந்தம் மீறி பெரும் முதலாளிகளுக்கு தொழிற்சாலை அமைக்க இடம் ஒதுக்கும் பொருட்டு விவசாயிகள் நிலத்தை கையகபடுத்தியது முறையா?அதை வேலைவாய்ப்புக்காகவும்,மாநில வருவாய் மேம்பாட்டிற்காகவும் தளர்த்தி கொள்ளலாம் என்றால் தமிழீழத்தையும் சமத்துவம் பொருட்டு ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா?

தமிழர்கள் ஆகட்டும் திபெத்தியர்களாகட்டும் நாம் இவர்களின் போராட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றால் அவர்களது அகராதியில் கம்யூனிஸ்ட்டுகள் என்றால் துரோகிகள் என்றாகிவிடும் அபாயம் ஏற்படும்.ரஷ்யாவின் வீழ்ச்சி நாம் வலுக்கட்டாயமாக ஒவ்வொரு இனக்குழுக்களையும் இழுத்துப்போட்டதால் ஏற்பட்டது என்பதை நாம் மறந்து விட வேண்டாம்.

மீண்டும் ஒரு முறை உங்களிடம் கேட்கிறேன் பிரபாகரனையும் மற்ற போராளிகளையும் விடுங்கள் மரணம் போராளிகளுக்கு மற்றுமொறு பதக்கம் தான். ஆனால் பாவம் அந்த பிஞ்சு குழந்தைகளும்,அப்பாவி ஆதரவற்ற மனிதர்களையும் பாருங்கள். அவர்கள் அங்கே போரினால் அழிந்து கொண்டு இருக்கும் போது நாம் வீதி விதியாக ஓட்டுப் பிச்சை கேட்பது எப்படி உள்ளது தெரியுமா?எவன் வீட்டில் எழவு விழுந்தாலும் என் வயிறு நிரம்பினால் போதும் என்பது போல் உள்ளது.

மற்ற கட்சிகளை போல் அல்ல மார்க்சிஸ்டுகள் என்பதாலே தொழிற்சங்க அரங்கத்தின் மூலம் ஈர்கப்பட்டு உள்ளே வந்தேன். ஆனால் இன்றோ என் மனசாட்சியின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லாமல் என் கோழைதனத்தையும்,கையாலாகததனத்தையும் எண்ணி வெட்கிதலைகுனிகிறேன்.
நமது அமைதியை வரலாறு மன்னிக்காது..............

வியாழன், 23 ஏப்ரல், 2009

சுத்தத் தமிழன்


IPL கிரிக்கெட் போட்டிகளை பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டு இருக்கும் போது தெரியாமல் ரிமோட்டில் என் விரல் பட்டு ஏதோ ஒரு செய்தி சேனலுக்கு மாறிவிட்டது .அதில், ஏதோ இலங்கை என்றொரு நாடு உள்ளதாமே அங்கு ஏதோ தமிழினம் அழிந்து கொண்டு வருவதாகவும் ,பிரபாகரன் சீக்கிரத்தில் பிடிபடுவார் என்றும்,விடுதலைப்புலிகள் கதை முடிந்து விடும் என்றும் செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.கிரிக்கெட்டை விட இது சுவாரஸ்யமாக இருந்தது இப்போது, ஆனாலும் பரபரப்பான மேட்சை பாதியில் விட முடியாதல்லவா?மீண்டும் setmax மாற்றி மேட்சில் முழ்கினேன்.பரபரப்பான போட்டியில் chennai superkings தோற்றுப்போனது எனக்கு மிகவும் கவலை அளித்தது.என்ன இருந்தாலும் நானும் ஒரு தமிழன் அல்லவா?

சனி, 18 ஏப்ரல், 2009

நம் நாட்டில் அதிகம் பேர் பார்க்கும் வேலை என்ன?


மொகலாய சக்கரவர்த்தி அக்பருக்கு தீடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது அது தன் நாட்டில் அதிகமானவர்களால் பார்க்கப்படும் வேலை என்ன?என்பதே.தனது சந்தேகத்திற்கு பீர்பால் ஒருவரால் தான் சரியான விடை சொல்ல முடியும் என முடிவு செய்து அவரை வரவழைக்க ஆள் அனுப்பினார்.பீர்பாலும் வந்தார்,அவரிடம் கேள்வியை சொல்லிய உடனே சிறிதும் யோசிக்காமல் அவர் மருத்துவம் தான் நாட்டில் அதிகமாக பார்க்கப்படும் வேலை என்று சொன்னார்.அக்பருக்கோ இந்த பதிலை கேட்டவுடன் கோபம் தலைக்கு ஏறிவிட்டது.ஏனென்றால் விவசாயம்,வியாபாரம்,அரசுப்பணிகள் என்று நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வெவ்வேறு வேலைகளில் ஈடுபடும் போது மிகச் சொற்பமானவர்கள் மட்டுமே ஈடுபடும் மருத்துவத்தை பீர்பால் சொன்னவுடன் மன்னர் பீர்பால் தன்னை கேலி செய்வதாக நினைத்துவிட்டார்.
ஆனால் பீர்பால் தான் சொல்லிய பதில் சரி தான் என்றும் அதை நிருபிக்க தன்னால் முடியும் எனவும் சொன்னார்.அக்பரும் அதை ஏற்றுக்கொண்டு மறுநாள் தன்னுடன் நகர்வலத்திற்கு பீர்பாலையும் அழைத்து செல்லவும் ஒப்புக்கொண்டார்.

நகர் வலத்திற்கு கிளம்பும் அன்று பீர்பால் தன் தலையில் ஒரு துணியை கட்டிக்கொண்டுவந்தார்.அரசர், ’என்ன தலையில் கட்டு?’ என்று கேட்டவுடன் பிர்பால் தனக்கு ’தலைவலி’ என்று சொன்னார்.அதற்கு உடனே அக்பர் தனக்கு ராஜாங்கமருத்துவர் சொல்லிக் கொடுத்த மூலிகை தைலத்தின் மகத்துவத்தை பற்றிச் சொல்லி அதையே பீர்பாலுக்கும் பரிந்துரைத்தார்.பீர்பாலும் ஒரு புன்முறுவலோடு தலையாட்டிவிட்டு நகர் வலத்திற்க்கு தான் தயார் என்றார். நகர் வலம் ஆரம்பித்தார்கள்....
.
போகும் வழியெங்கும் அவர்கள் சந்தித்த மக்கள் ஒருவர் விடாமல் அனைவரும் பீர்பாலின் தலைக்கட்டின் காரணத்தை கேட்கவும்,தலைவலி என்று பீர்பால் சொன்னவுடன், அவர்கள் அதற்கு தங்களுக்கு தெரிந்த மருந்தை சொல்லவும்.... என அவர்கள் நகர்வலம் ஒருவழியாக முடிந்தது.இப்பொது பீர்பால் அக்பரோடு இருந்தவர்களை பார்த்து நகைப்போடு பார்தீர்களா! நமது நாட்டின் அரசர் உட்பட நாம் ந்தித்த அனைவருமே மருத்துவர்களாக இருப்பதை என்று சொல்லி சிரித்தார்.அக்பரும் பிர்பாலின் மதி நுட்பத்தை ரசித்து சிரித்தார்.

இந்த கதையை ஏன் சொல்கிறேன் என்றால் கடந்த இருநாட்களாக பீர்பாலின் நிலை தான் எனக்கும்.எங்களது வங்கியில் காசாளராக பணிபுரிந்தால் ஊதியமும் கொடுத்து சிறப்புச் சலுகையாக கைவலியும் கொடுப்பார்கள்.அப்படித்தான் எனக்கும் de-quervains disease (பெருவிரலில் ஏற்படும் வலி) வந்து கைகளில் கட்டு போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
வீட்டில் உள்ள மருத்துவரிடமிருந்து(அதாங்க! வீட்டம்மா) ஒரு வழியாக தப்பித்து பஸ்ஸில் ஏறினால் டிக்கட் கொடுக்கும் டாக்டரிடம் மருந்து வாங்கி கட்டி கொண்டேன்.சக பயண மருத்துவர்கள் ஆதங்கத்தோடு பார்த்து விட்டு அள்ளி தெளித்த அறிவுரைகளை அசராமல் வாங்கி குவித்தபடி ஒரு வழியாக வங்கியில் நுழைந்தேன்.இப்போது எனது மேலாளரின் முறை.லீவு கேட்டு விடுவேனோ என்று உள்ளுக்குள் நினைத்தவாறு ’ஒன்னும் பெரிய பிரச்சனையில்லையே!’ என்று அவர் கவலையை அவர் வெளிப்படுத்தினார்.சக தோழர்கள் ??????????-குறிகளை தொடுத்த பின் மருத்துவராக மாறினார்கள்.வங்கியின் வாடிக்கையாளர்களும் இதில் விதிவிலக்கல்ல.அதிலும் வாடிக்கையாளர் ஒருவர் தன் மச்சினன் ஒருவனுக்கு கைமுறிந்து போனதை ரசித்து ரசித்து சொல்லி சிரித்து கொண்டு இருந்தார்.இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடந்து முடிந்த எனது கல்யாணத்திற்கும் கைவலிக்கும் முடிச்சுப்போட்டு சுத்தி போட சொன்னவர்களிலிருந்து,மலையாள நாட்டு வைத்தியர்களுக்கு அம்பாசிடர்களாக தங்களை தாங்களே நியமித்துகொண்டவர்கள் வரை பலரையும் இந்த கை கட்டினால் நான் எதிர்கொள்ள வேண்டிருந்தது.

கொடுமை கொடுமையென்று கோயிலுக்கு போனால் அங்கு இரண்டு கொடுமை டிங்கு டிங்கு என்று ஆடியது என்பது போல் நான் பார்த்த ஒவ்வொருவரிடமும் பதில் சொல்லி பதில் சொல்லி கை வலி போய் எனக்கு வாய் வலி வந்தது தான் மிச்சம்.
(பதில் :மொகலாய காலம் தொட்டு இன்று வரை நம் நாட்டில் மருத்துவர்கள் தான் அதிகம்.BIRBAL THE GREAT.)

வியாழன், 16 ஏப்ரல், 2009

இலங்கைத் தீவு.....


ஆம்!இலங்கை இன்றும் தீவு தான்...
நான்கு புறமும் தமிழர்களின்
கண்ணீர் சூழ்ந்து இருப்பதால்....

!தமிழினமே!...
உங்கள் செவிகள் விழிப்புடன் உள்ளதா?

நாங்கள் பள்ளிக்கூடங்கள் கேட்கவில்லை...
கல்வி கற்பதற்கு
நாங்கள் வேலைவாய்ப்பு கேட்கவில்லை...
ஊதியம் பெறுவதற்கு
நாங்கள் நீதிமன்றங்கள் கேட்கவில்லை...
ஞாயம் பெறுவதற்கு
நாங்கள் சாலைகள் கேட்கவில்லை...
பயணம் செய்வதற்கு
நாங்கள் ஆலயம் கேட்கவில்லை..
வ்ழிபாடு செய்வதற்கு
நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்...
அது... போர் நிறுத்தம்!-அதுவும்
நாங்கள் வாழ்வதற்கு கேட்கவில்லை...
மடிந்த எம் உறவுகளை நினைத்து
அமைதியாய் அழுவதற்கே!


மரண வலி!மரண வலி!-என்றார்கள்
நாமும் நினைத்தோம் 'மரணம்' வலிக்கும் என்று...
ஆனால் இப்போது வாழும் போதுதான் புரிகிறது
'வலி' மரணித்தவருக்கு அல்ல....என்று.


பாவத்தின் சம்பளம் 'மரணம்'-என்றார்கள்
ஆனால் எம்மக்களுக்கோ....
'மரணம்' வரமானது வாழ்க்கை...........?


இப்படி இறந்தவர்கள் பிணமாய்.....மிஞ்சி
இருப்பவர்களோ நடை பிணமாய்...
என்று வாழ்ந்து வரும் நம்மக்களுக்கு செய்வதற்க்கு
நம்மிடம் ஒன்று உள்ளது.
அது.... நமது நாடாளுமன்ற தேர்தல்!

இங்கு அரசியல் பிழைத்தோருக்கு அறம் குற்றமாகும்!
ஆனால் நமக்கோ!.....அது ஆயுதம்! நம் மக்களை மீட்கும் ஆயுதம் .

தேர்தல் அன்று அனைவரும் வாக்கு சாவடிக்கு செல்வோம்
49 !விற்கு வாக்களிப்போம்...
காரணம்....?அங்கே எம் மக்கள் சாக இங்கே எமக்கு சனநாயகம் வேண்டாம்!-என்று ஒன்றாய் முழங்குவோம்!

வேண்டும்!வேண்டும்!அமைதி மலர.....போர் நிறுத்தம் வேண்டும்!

திங்கள், 13 ஏப்ரல், 2009

எம் மதமும் சம்மதமில்லை


தீவிரவாதம் என்றால் என்ன?
வெடிகுண்டுகள் வைப்பதும்,துப்பாக்கிகள் வெடிப்பதும்,மனித உயிர்களை அழிப்பதும் மட்டும் தானா தீவிரவாதம்?
உயிர்களை மரணிக்க செய்வது மட்டுமல்ல தீவிரவாதம்.

மனிதர்களை சிந்திக்க விடாமல் அவர்களை மூளைச் சலவை செய்து,சோம்பேறிகளாக்கி தங்களது சரக்கை எந்த விதத்திலும் பகுத்தறியாமல் உட்கொள்ள செய்வதும் தீவிரவாதம் தான்.

இன்னும் நேரடியாக சொல்லவேண்டும் என்றால் மதங்களை வைத்து மதவியாபாரிகள் பல நூற்றாண்டுகளாக மனித இனத்தை துண்டாடி வருகிறார்கள்.

நான் கடவுள் உண்டா? இல்லையா? என்ற ஆராய்ச்சிக்குள் போகவிரும்பவில்லை.எனது கேள்விகள் மிகத் தெளிவானது.
மதங்களின் பெயரால் மனிதர்களான நாம் பிரிந்து கிடப்பது சரியா?
கடவுள் உண்டு என்று வைத்துக்கொண்டாலும் நிச்சயம் நான்கு ஐந்து கடவுள்கள் இருக்க முடியாது.(அப்படி இருந்தால் நிச்சயம் எல்லா கடவுள்களும் ஒருவருக்கொருவர் அடித்து பிடித்து தொகுதிகள் பிரித்து தத்தமது மதங்களுக்கு royalty வாங்கி இருப்பர்)

அப்படி என்றால் ஒரு கடவுளுக்கு இத்தனை மதங்கள் தேவையா?
கடவுள் ஒருவர் என்ற பட்சத்தில் இத்தனை மதங்களால் துண்டாடப்படுவதை அவராலே ஏற்று கொள்ள முடியாது.அப்படி என்றால் ஒரே கடவுளின் பெயரால் இத்தனை மதங்கள் இருப்பது நாம் அந்த கடவுளையே கோமாளி ஆக்குவது போல் ஆகாதா?
அதுவும் கடவுளின் பெயரால் சண்டையிடுவது எவ்வளவு பெரிய மடத்தனம்?

நான் படித்த இதிகாசத்தில் ராமர் ஹிந்து அல்ல.அவர் எந்த இடத்திலும் ஹிந்து மதத்தை தான் வழி பட வேண்டும் என அவர் ஆட்சி செய்ததாக நம்பப்படும் அயோத்தியில் வாழ்ந்த மக்களிடம் கூட சொல்லவில்லை.அவர் தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்றும் விரும்பியதில்லை.பின்பு அவர் பெயரால் இத்தனை சண்டைகளும்,உயிர் இழப்புகளும் தேவையா?

நான் படித்த பைபளில் வரும் இயேசுநாதர் கிறிஸ்தவர் அல்ல.அவர் ஒரு போதும் கிறிஸ்துவம் பரப்பவில்லை.தன்னை நேசிப்பது போல் தன் அயலானையும் நேசம் செய்ய சொன்ன ஒருவரின் பெயரால் எத்தனை சிலுவை யுத்தங்கள்?எத்தனை மதச் சண்டைகள்?பைபளில் அவர் ஒரே ஒரு இடத்தில் தான் கோபப்பட்டு சாட்டை எடுத்து மக்களை அடித்ததாக வரும். அதுவும் ஏன் என்றால் வழிபாடு நடத்தும் இடத்தில் வைத்து அவர்கள் வியாபாரம் செய்ததை பார்த்து அவர் கோபப்பட்டதாக வரும்.அதாவது தன்னை சிலுவையில் வைத்து அரையப்படும் போது கூட கோபப்படாதவர் தன் தந்தையின் ஆலயத்தை வியபாரகூடமாக ஆக்கிவிட்டதற்காக சாட்டை எடுத்து அடித்தார் என்கிறது பைபிள்.

ஆனால் கொடுமை என்னவென்றால் இன்று உலகிலேயே அதிகம் வியபாரமாக்கப்பட்ட மதம் கிறிஸ்தவம் தான்.

இஸ்லாம் ஒன்றே கடவுள் என்கிறது.நபிகள்,"மனித சமுதாயம் ஆதம் ஹவ்வா ஆகியோரிடமிருந்து உருவாகியுள்ளது.ஓர் அரபிக்கு அரபியல்லதவரை விடவோ,ஓர் அரபியல்லாதவருக்கு அரபியை விடவோ,ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விடவோ,ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விடவோ எவ்வித சிறப்பும் மேன்மையும் அல்ல.."
"ஒரு சகோதரரின் அனுமதியின்றி அவரின் உடமைகளில் உங்களுக்கு உரிமை இல்லை.....இறைவனுக்கு அஞ்சுங்கள்.."(இவை நபிகளின் இறுதி பேருரையில் சொல்லப்பட்டது)

இப்படி அன்பையும் சகோதிரத்துவத்தையுமே இஸ்லாம் முன்வைக்கிறது.ஆனால் இன்று இஸ்லாத்தை ஏதோ ஜிஹாதால் மட்டுமே பரப்ப முடியும் என பல இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு வருகிறார்கள்.

ஜிஹாத் என்றால் என்ன?
முஸ்லிம்கள் முஸ்லீம் அல்லாதவர்களோடு சண்டையிட்டு அவர்களைக் கொள்வது தான் ஜிஹாத் என்று சொல்லப்படுவதே தவறு.ஜிஹாத் என்ற அரபி சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளது.ஜிஹாத் என்றால் கடுமையாக முயற்சி செய்தல் என்று பொருள்.ஜஹத,ஜூஹ்துன் என்னும் சொற்களில் இருந்து பிறந்ததே ஜிஹாத் ஆகும்.
நபிகள்,"ஒருவன் இறைவனை அடைவதற்கு தனது மனதுடன் போராடுவதே ஜிஹாத்"என்கிறார்.

இன்னும் சிலர் இறைவன் ஒருவன் தான் என்று ஏற்று கொண்டாலும் மதங்களை இறைவனை சென்றடையும் பாதைகளாக சொல்வார்கள்.
அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது எல்லாம் எந்த இறைவனும் மதத்தை பாதைகளாக நமக்கு வகுத்து தரவில்லை.ஏன் என்றால் எந்த இறைவனும்,இறை தூதர் என்று நம்பப்படுபவரும் மதத்தை நமக்கு போதிக்கவில்லை.அவர்களது போதனை எல்லாம் அன்பை பற்றியே இருந்தது.

எல்லா மதமும் இறைவன் ஒன்று என்ற ஒத்த கருத்தை தான் சொல்கிறது.ஆனாலும் மதங்களின் பெயரால் நாம் பிரிந்தே இருப்பதற்கு காரணம் சில மத வியாபாரிகள் தான்.அவர்களது பிழைப்பே மதத்தின் பெயரால் நடப்பதால் நம்மை மதவெறியூட்டி அவர்கள் அதில் குளிர் காய்ந்து வருகிறார்கள்.

ஒரு குழந்தை பிறந்து 18 வயது ஆனால் தான் வாக்களிக்கும் உரிமையே கிடைக்கிறது.ஒருவனுக்கு 21 வயது ஆனால் தான் தனது வாழ்கை துணையையே தேர்ந்து எடுக்கும் பக்குவம் வரும் என்று நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது ஆனால் ஒருவன் பிறந்த உடனேயே அவனுக்கான மதம் முடிவு செய்யப்பட்டு திணிக்கப்படுவது எந்த விதத்தில் ஞாயம்?இப்படி கடவுளையும், மனிதனையும் கொச்சை படுத்தும் மதங்கள் நமக்கு தேவைதானா?

தோழர்களே! சிந்தியுங்கள் நாம் ஒன்று பட தடையாய் இருக்கும் இந்த மத சாயங்களை இனிவரும் தலைமுறையிடமாவது பூசாமல் விடுவோம்.நாம் காணாத அமைதியும் சமாதானமும் அவர்களாவது பார்க்கட்டும்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

காலணி கலாட்டா!

திருவாளர் சிதம்பரத்தின் மேல் பத்திரிக்கையாளர் ஒருவர் செருப்பு தவறு 'சூ' வீசியது சரியா?தவறா?
இந்த சம்பவத்தை நாம் இரண்டு விதமாக பார்க்கலாம்.
முதலாவதாக நமது நாட்டின் உள்துறை அமைச்சரையே செருப்பிடம் மறுபடியும் தவறு 'சூ'விடம் இருந்து காப்பாற்ற முடியாத உள்துறை அமைச்சரகம் எப்படி தீவிரவாதிகளிடமிருந்து இந்த தேசத்தை காப்பாற்றும்.
தன்னை காப்பாற்றுவது போல் (எது வந்து எப்போது விழும் என்று தெரியாத அளவிற்கு)இந்த தேசத்தை காத்து வரும் திருவாளர் சிதம்பரத்தை 'சூ' கொண்டு தாக்கியது எவ்வளவு 'பெரிய'குற்றம்?
இரண்டாவதாக என்னதான் உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்று அவரும், (நாட்டின் 'நலன்' ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல் பட்டு வரும்) 'காங்கிரஸ்' கட்சியும் நம்மை நல்ல விலைக்கு தவறு நிலைக்கு இட்டு செல்லும் இந்த நேரத்தில் செருப்பை (பாருடா!மறுபடி மறுபடி தப்புத்தப்பா எழுதிகிட்டு...)தவறு காலணிகளை கொண்டு இப்படி எறியலாமா?தேர்தலில் நாகரிகமாக நமது எதிர்ப்பை பதிவு செய்யலாம் அது ஜனநாயகம் (எங்கே!எங்கே!) ஆனால் காலணிகள் எறிவது எல்லாம் 'டூமச்'.
இந்த மாதிரி சந்தர்பங்கள் 'நம்மக்காகவே' நித்தம் நித்தம் ரத்தம் சிந்தி (ஆ!.......ஆ!....கவிதை கவிதை)பாடுபட்டும் ,உழைத்தும் வரும் நமது அரசியல் தலைவர்களுக்கு (நோ!நோ!அப்படியெல்லாம் 'manners' இல்லாம சிரிக்க கூடாது) இனிமேல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தும் முன்பு அனைவரும் 'காலணிகளை' வெளியில் கழட்டிவிட்டு தான் வரவேண்டும் என சட்டம் போடலாம் அப்படி கழட்டிவிட்டு வரும் செருப்பு காணாமல் போனால் சம்பந்த பட்ட அரசியல் தலைவரோ அல்லது அவரது கட்சியோ எந்த விதத்திலும் பொறுப்பல்ல எனவும் அறிவித்துவிடலாம்.
நமது ஒரே கவலை இப்போது என்னவென்றால் நமது 'தன்னலமற்ற' தலைவர்களை(பாருடா!மறுபடி மறுபடி சிரிச்சுகிட்டு நான் ஏதோ காமெடி பண்ற மாதிரி ஆயிடாது)எப்படியாவது காலணிகளிடம் இருந்து காப்பாத்திடனும் அவ்வளவு தான்.