வெள்ளி, 6 ஏப்ரல், 2012

16-ஆம் காம்பவுண்ட்....2.



தூத்துக்குடியின் மையப் பகுதியில் செல்லும் வி.இ.ரோட்டில் உள்ளது அந்தோணியர் கோயில். அந்தோணியார் கோயிலுக்கு மேற்கே ஏ.எஸ்.கே.ஆர் மரக்கடைக்கு அடுத்தாற் போல் வடக்கு பார்த்த வாயிலோடு பெரிய காம்பவுண்ட் ஆரம்பமாகிறது. 16-ஆம் காம்பவுண்ட் என்பது பெரிய காம்பவுண்ட், சின்ன காம்பவுண்ட் என இரு காம்பவுண்ட்களும் இணைந்த ஒன்றேயாகும்.



பெரிய காம்பவுண்டில் 16 வீடுகள்,சின்னக் காம்பவுண்டில் 16 வீடுகள் என மொத்தம் முப்பத்தி இரண்டு வீடுகள் இருந்தாலும் இரண்டையும் சேர்த்தே பதினாறாம் காம்பவுண்ட் என வழங்கப்பட்டு வருகிறது. பெரிய காம்பவுண்டில் அடுத்தடுத்தாற் போல் பதினாறு வீடுகளும் கிழக்கு பாத்த வாசல்களோடு தொடர்ந்து அமைந்திருக்கும். அதன் தொடர்ச்சியாக உள்ள சின்னக் காம்பவுண்டில் எழு வீடுகள் மேற்கு பார்த்த வாசல்களோடும் ஒன்பது வீடுகள் கிழக்கு பார்த்த வாசல்களோடும் எதிரும் புதிருமாய் அமைந்திருக்கும். ஒரு ஐந்தடி கட்டைச் சுவர் சின்னக் காம்பவுண்டின் இரு பக்க வீடுகளையும் பிரித்து நிற்கும்.



ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் விடுதிக்கு பின் புறமாக சின்னக் காம்பவுண்டில் தெற்கு பார்த்த மற்றுமொரு வாயிலும் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே நடந்து செல்லும் அகலம் கொண்டது பதினாறாம் காம்பவுண்ட். அத்தைமார்களும், அக்காமார்களுமாய் அங்கிருந்த ஒவ்வொரு வீடும் பிரவீணுக்கு உறவுகளால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தது. தட்டுத்தடுமாறி நடக்க ஆரம்பித்த காலத்திலிருந்து..... விழுந்து எழுந்து சைக்கிள் ஓட்டிப் பழகியது.... கோலிக்காய்களுக்கும், பம்பரங்களுக்கும் சண்டையிட்டது.... என இனிமையான நினைவுகளை அவனுக்குள் அது சுமந்து கொண்டிருந்தது.



கதை நடமாடக் கூடிய களம் என்பதற்காக மட்டும் அல்ல இத்தனை விவரணைகள். இந்தக் காம்பவுண்ட் இன்றும் தூத்துக்குடியில் உள்ள ஒரு பகுதி. தூத்துக்குடியின் இருபெரும் சமூகங்களான நாடார் சமூகமும்,பரதவர் சமூகமும் சம அளவில் இரண்டறக் கலந்து பல தலைமுறைகளாக ஒருதாய் பிள்ளைகளாக வாழ்ந்து வரும் பகுதி இது. இங்குள்ள அனைவரும் தம் அண்டை வீட்டாரை பேர்கள் சொல்லி அழைப்பதில்லை மாறாக உறவுகளைச் சொல்லியே அழைத்து வரும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.



சாதிய ஆதிக்கம் பதிந்து போன இந்தச் சமூக கட்டமைப்பில் உணர்வும்,உயிருமாய் மனித மாண்புகளை மட்டுமே பிரதானப் படுத்தி தமது சாதிய உணர்வுகளை புறந்தள்ளி உறவுகளாய் வாழும் அந்த உன்னத மனிதர்களின் இருப்பை உறுதி செய்யவே இத்தனை பொழிப்ப்புறைகள்.
சின்னக் காம்பவுண்டின் முதல் இரண்டு வீடுகள் பிரவீணின் தாய்வழி தாத்தா சூசைப்பர்னாந்துக்கு சொந்தமானது. சூசைபர்னாந்துக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் ஜெயா பிரவீணின் தாயார். இரண்டாவது..... மகன் ஜோசப். பிரவீணின் தந்தை நிக்கோலாஸுக்கு பூர்வீகம் கூட்டப்புளி.
நிக்கோலாஸின் தாய்,தந்தை இருவரும் அவரது சிறு பிராயத்திலேயே இறந்து போன படியால் கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தா மிஷனின் உதவியோடு தமது படிப்பை முடித்து வேலைக்காக அலைந்து கொண்டிருந்தார்.



அந்தச் சமயத்தில் சூசைப்பர்னாந்து தனது மகள் ஜெயாவிற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார். அவரது ஒரே நிபந்தனையாக தனது பெண்ணுக்கு வரும் மாப்பிள்ளை படித்தவனாகவும், கடல் சார்ந்த தொழில் பார்க்காதவனாகவும் இருக்க வேண்டுமென்பதே. தலைமுறை தலைமுறையாக தாம் கடலோடியாக இருந்து படும் துயரத்தை தமது அடுத்த தலைமுறையாவது அனுபவியாமல் இருக்க வேண்டுமென்பதே அதற்கு காரணம். அதனால் தமது மகன் ஜோசப்பை கூட காலேஜில் சேர்த்து படிக்கவைத்திருந்தார்.



அந்தச் சமயத்தில் அந்தோணியார் கோயிலின் பங்குத்தந்தையாக இருந்தவர் அதற்கு முன்பு கூட்டப்புளியில் குருவாய் இருந்தவர். அவரது வார்த்தையின் பேரிலேயே தமது மகளை நிக்கோலாஸுக்கு மணமுடித்து கொடுத்து மருமகனுக்கு தனது பூர்வீக கிராமமான பழையகாயலில் இருந்த நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியப் பணியும் வாங்கிக் கொடுத்தார்.



தனது இரண்டு வீடுகளில் ஒன்றில் மகளை குடியேற்றி தனது பார்வையிலேயே வைத்துக் கொண்டார். சூசைப்பர்னாந்துக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்தும் குழந்தை பாக்கியம் இல்லாது இருந்தது. அவரும் அவர் மனைவி ஜொஸியும் தவமாய் தவமிருந்து பெற்ற மகள் என்பதால் அவருக்கு ஜெயா என்றால் அப்படியொரு கொள்ளைப் பிரியம்.
ஆசையும் பாசமுமாய் பெற்று வளர்த்த மகள்…. ஆசிர்வாதத்தோடும், மகழ்ச்சியோடும் சீமந்தம் செய்து பெருமைப்பட்ட மகள்…. வாழைக் குருத்து போன்ற பேரப்பிள்ளையின் வருங்காலத்தை காணக் கொடுத்து வைக்காமல் திடீரென்று பெயர் தெரியாத காய்ச்சலில் விழுந்து அகால மரணம் தழுவிய போது சூசைப்பர்னாந்து முற்றிலுமாய் உடைந்து நொறுங்கிப் போனார்.
மகளின் முப்பதாம் நாள் நினைவு வரைக் கூட காத்திருக்க முடியாமல் தன் செல்ல மகளை தேடிச் சென்றுவிட்டார். காலனின் கொடுங்கரங்களில் சிக்கிய சூசைப்பர்ணாந்தின் குடும்பம் அந்த தொடர் மரணங்களால் நிலைகுலைந்து போனது. ஆனால் அந்த துயரமான நிலையிலும் அவர்களுக்கு உறவுக்கு உறவாய்,தோழனுக்கு தோழனாய் என அனைத்துமாகவும் இருந்து ஆறுதல் சொல்லி தேற்றியது 16-ஆம் காம்பவுண்ட் மக்களே!



மனிதமனமும் வாழ்வும் அத்துணை விசித்தரமானது. எத்தனை பெரிய அடிகள்….. எத்தனை பெரிய பிரிவுகளை சந்திக்க நேர்ந்த போதும் மனம் புதுப்புது கற்பிதங்களை சொல்லி நம்மை தேற்றி எழச் செய்து கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு புள்ளியை நம் மிச்சமீதி வாழ்க்கைக்கான ஒட்டுமொத்த அர்த்தமாகவும் மாற்றி விட்டு நம்மை வாழச் சொல்லி வற்புறுத்துகிறது. அர்த்தமுள்ள ஆசைகள் கரைகளில் மோதும் அலைகளைப் போன்றது. அவைகள் ஒருபோதும் நம்மை அழிவிற்கு அழைத்து செல்வதில்லை......



பழைய துயரமான நினைவுகளில் மனதை தொலைத்துக் கொண்டிருந்தவனை அவன் தோளில் படிந்த அந்த கரம் நிகழ்காலத்துக்கு மீண்டும் அழைத்து வந்தது. பலவித எண்ண ஓட்டங்களோடு திரும்பியதால் அவனால் சட்டென்று அந்தக் கரத்துக்குரிய நபரை அடையாளம் காண முடியவில்லை. தனது நினைவடுக்குகளில் அந்த நபரை அவன் தேடிக் கொண்டிருக்கும் போதே….



“நீங்க……நீ…..எல மாப்ள பிரவீணு!!!!!!!!” உற்சாகத்தில் அவன் இவனை அணைக்க முயல சட்டென்று நினைவுகள் இவனுக்குள்ளும் மீட்கப்பட






“பிரேம்…….” என்றபடி அவனை அணைத்துக் கொண்டான். பிரேமின் வீடும் சின்னக் காம்பவுண்டில் தான் உள்ளது.பெரிய காம்பவுண்டிற்கும் சின்னக் காம்பவுண்டிற்கும் இடையில் உள்ள கடைசி வீடு பிரேமுடையது.



பிரேமின் வீட்டாரும் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக அங்கே இருந்து வருகிறார்கள். பிரேமின் ஆத்தா(அம்மா பாட்டி) பெயர் விமலா. அவள் கருத்து பெருத்த நல்ல திடகாத்திரமான உடலுக்கு சொந்தக்காரி. அவளது பூர்வீகம் தாழை. பஞ்சம் பிழைக்க அவள் சின்னவளாக இருக்கும் போதே அவளது குடும்பம் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது. முதலில் மணல்மேட்டில் குடியேறிவர்கள் மாதா கோயில் தெருவில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து பிழைத்து வந்தார்கள். அப்படி விமலா வேலை செய்யப் போன வீடுகளில் ஒன்று வின்செண்ட் பூபாலராயரது.






வின்செண்ட் பூபாலராயருக்கு மொத்தம் நான்கு பெண் பிள்ளைகளும், மூன்று ஆண் மக்களும் இருந்தனர். வின்செண்ட் பூபாலராயரின் குடும்பம் அப்போது செல்வச் செழிப்போடு இருந்துள்ளது. அவரது இரண்டாவது மகன் ஜெயராஜ் பூபாலராயர் கட்டிளம் வாலிபன்…. .நல்ல அழகன்…. வஞ்சியரை மயக்கும் தோரணையோடு வலம் வரும் மைனர். விமலாவை வீழ்த்த பெரிய பிரயத்தனங்கள் ஏதும் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை. அவரது இயல்பான கேலிப்பேச்சும்,கிண்டலுமே விமலாவை அவர் பக்கம் ஈர்க்க போதுமானதாய் இருந்தது.



வெறும் வாய்ப்பேச்சில் மட்டுமே வீரனாய் இல்லாமல் விளைவுகளைப் பற்றி எண்ணாமல் கர்ம வீரனாகவும் மாறிப்போனார். நட்டவிதை நன்னிலமாதலால் நான்கே மாதத்தில் இருவீட்டாரின் மனமொத்த எதிர்ப்போடு இருவரும் தத்தம் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டனர். அபலைகள் வந்தடைந்தார்கள் 16-ஆம் காம்பவுண்டிற்கு.



விமலாத்தா……



பெருவாழ்வுக்கு சொந்தக்காரி. முரட்டு உருவமும்….. தடித்த குரலும்……. சுங்கான் சுருட்டு புகையோடும் கூடிய அவளது தோரணையான பிம்பமே இன்றும் பிரவீணின் நினைவுகளில் நிழலாடியது. விமலாத்தா என்றால் 16-ஆம் காம்பவுண்ட் மக்களுக்கு மரியாதையும்,பயமும் கலந்த உணர்வையே தரும்.



மரியாதை…..



அவள் போராடி வென்ற வாழ்க்கைக்கான வெகுமதி. வறுமையின் பெயரால் சிறுவயதிலேயே சொந்த மண்ணைவிட்டு வாடி வந்தவள்….. வாழ்க்கைப்பட்ட பின்னும் அவளை வறுமைவிட்ட வழியில்லை. அரை வயிற்று கஞ்சியோடு தூங்கப் போனாலும் பூபாலராயரின் புண்ணியத்தில் இரண்டு ஆண் மக்களுக்கும், இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் தாயாகும் பேறு அவளுக்கு வாய்க்கவே செய்தது, நான்கு பிள்ளைகள் பெற்ற பின்னும் ஜெயராஜ் பூபாலராயர் மைனராகவே திரிந்தார்.



பெட்டிக்கடை வைத்து….. இட்லி,வடை சுட்டு…… வட்டிக்கு விட்டு….. என பல குட்டிக்கரனங்கள் அடித்து பிள்ளைகளையும் வளர்த்து, மைனரையும் பேணி, வறுமையையும் விரட்டி வாழ்க்கையை தன்வசமாக்கிக் கொண்ட போராட்டக்காரி அவள்.



பயம்……



அவள் திருநாவில் இருந்து சுரக்கும் தமிழ்த்தேனால் தான். அவள் பேசும் பத்து வார்த்தைகளில் எட்டு வார்த்தைகள் தமிழே தன்னை தரவிறக்கம் செய்துகொள்ள துணிந்துவிடும் அளவிற்கு இருக்கும்.
“எல தூமைய குடிச்ச கண்டார ஓலி……இங்க வால……” என அவள் பாசமாக அழைக்கும் போதே ஆண்களுக்கு அண்டி கலங்கிப் போகும். அப்படி இருக்க ஒருமுறை அவள் வீட்டிற்கு இரவில் ஒருவன் திருடச் சென்றுள்ளான்.






அவள் அந்த நேரம் பார்த்து கொல்லப் பக்கம் சுருட்டை பற்ற வைத்தவாறு சென்றுள்ளாள். அவன் இவளது வீட்டின் கொல்லப்புரத்தில் இருந்து ஒரு அலுமினிய ஏனத்தையும், இரும்பு வாளியையும் எடுத்துக்கொண்டு மதிலேற முற்படவும், இவள் சுருட்டோடு அங்கே செல்லவும் சரியாக இருந்துள்ளது. போன வேகத்திற்கு அவனது கைலியை பிடித்து இழுத்து சுவற்றோடு சாய்த்து சுருட்டைக் கொண்டு அவன் பின்புறத்தில் சூட்டைப் போடவும் அவன் அலறி துடித்து கத்த…..வீட்டில் உள்ளோரும், அக்கம்பக்கத்து வீட்டாரும் எழுந்து வந்து பார்த்தபோது சிங்கத்தின் குகைக்குள் சிக்கிய எலிபோல் சுருண்டு கிடந்துள்ளான்.






இப்படிப்பட்ட பராக்கிரமக்காரி தான் பிரவீண் பிறந்தபோது முதன்முதலில் சேனை காய்ச்சி ஊட்டியவள். பிரவீணின் அம்மாச்சி ஜொஸியும் விமலாத்தாவை தன் கூடப்பிறந்த தங்கையாகவே எண்ணி வந்தாள். அங்குசத்தை கண்டு சுணங்கும் வாரணத்தைப் போல் விமலாவும் ஜொஸியின் அன்பிற்கு கட்டுபட்டவளாகவே இருந்தாள். விமலாவின் பிள்ளைகளும்,பேரக்குழந்தைகளும் கூட அவளது தூசனத்தில் இருந்து தப்பியதில்லை ஆனால் ஜொஸியின் பேரக்குழந்தைகளைக் கூட அவள் பிரியமாக பன்மையில் தான் அழைப்பாள். ஆரம்பகாலங்களில் இருவீட்டாரும் துரத்தி அனுப்பியபோது அவள் நிறைமாத கர்ப்பினியாய் தனது கணவனோடு 16-ஆம் காம்பவுண்டிற்கு அநாதரவாய் வந்து நின்றபோது அவளை அரவணைத்த கரங்கள் ஜொஸியினுடையது. ஆகவே இருவீட்டாரும் ஒருவீட்டு உறவுகளைப் போலவே வாழ்ந்து வந்தார்கள்.



பிரவீணும், பிரேமும் தத்தமது பழைய நினைவுகளை மீட்டெடுத்து பேசிக் கொண்டே வந்த போது பிரேம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சக்கரை நோய் முற்றிப் போய் விமலாத்தா இறந்து போனதை சொன்ன போது பிரவீண் கலங்கிப் போனான். ஒருவித கனத்த மௌனம் அங்கே புகுந்தது. நேசமிக்க உறவுகளின் பிரிவின் போது தான் வாழ்வின் நிலையற்ற தன்மை நமது நினைவுக்கு வந்து உறுத்தும். இந்த மறதிதான் மனிதனின் பேராசைகளுக்கு பெருந்தீனியாய் மாறிப்போய் விடுகிறது. அதேவேளையில் மரணம் ஒருபோதும் மனிதர்களுக்கு பழக்கப்பட்டு போவதில்லை. அதனால் ஒவ்வொரு முறையும் நம் உயிருக்கும் மேலான உறவுகள் நம்மை விட்டு பிரியும் போதும் வாழ்க்கை நம் வசமிருந்து போய்விட்டதாய் உணர்கிறோம். இந்த உணர்வு தான் இல்லாத விதியின் கரங்களில் நம் வாழ்வை ஒப்படைக்க வைக்கிறது.



ரயிலின் பேரிரச்சல் கொஞ்சம் கொஞ்சமாய் குறையத் துவங்கியது. இருளை விரட்டியபடி நியான் விளக்குகள் ஒளிரந்து கொண்டிருந்தது. ரயில் விழுப்புரம் சந்திப்பிற்கு வந்து சேர்ந்தது. விழுப்புரத்தில் ரயிலேற காத்திருந்த பயணிகள் ஓரிருவர் அவர்கள் நின்று கொண்டிருந்த வாயிலை நோக்கி வந்தார்கள்.
பிரேம்,”சரிடா.... மாப்ள நேரம் போனதே தெரியல காலைல பாப்போம் நீ போய் படு......”



”சரி....பாப்போம்....நீ மேலூர்ல இறங்குறியா இல்ல ரெயில்வே ஜங்ஷன்லையா?”



“நான் அங்க ஸ்டேசன்ல இறங்குவன் மாப்ள.....நீ....?”



“நான் மேலூர்லையே இறங்கிருவேன்....அதான்....சரி பாப்போம்....” என்றபடி பிரவீண் தனது இருக்கைக்கு சென்றான். அங்கே ஆஸ்கரை தவிர அனைவரும் படுத்திருந்தனர். ஆஸ்கர் பிரவீணின் இருக்கையில் அமர்ந்து ஐ-பாடில் ஏதோ பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தார். பிரவீணை பார்த்தும் எழுந்து கொண்டு காதில் மாட்டியிருந்த இயர்போனை கழற்றியபடி....”எண்ண சார்....உங்கள ஆளையே ரொம்ப நேரமா காணோமே....” எனக் கேட்டார்.



“என் பழைய பிரெண்டு ஒருத்தன தற்செயலா பாத்தேன்.....அதான் நேரம் போனதே தெரியாம பேசிட்டே இருத்திட்டோம்....”



“நீங்க ஊருலர்ந்து போய் எத்தன வருஷமாச்சுன்னு சொன்னீங்க...?”



“அது ஆச்சு சார் ஏழு வருஷத்துக்கும் மேல....”



“எப்படி இவ்ளோ நாள் இருந்தீங்க....எடையில ஊருக்கு வரணும்னு தோணவே இல்லயா உங்களுக்கு?”



“ஊருக்கு வரணும்னு தோணாம இல்ல..... அம்மா, தாத்தா, அப்பான்னு வருசையா தொடர்ந்து அடிமேல அடி.... எனக்கே ஒரு மாத்தம் வேணும்னு தோணுச்சு....அப்பத்தான் இந்த வேலையும் கெடச்சிச்சு.....ஊருக்கு போயி என்ன செய்யப்போறம்னு......அப்படியே இருந்திட்டேன்...... இப்பவும் எங்க ஆச்சிக்காக தான் ஊருக்கே போறன்....அவுங்கதான் போன் பண்ணும்போதெல்லாம் எப்ப வார? எப்ப வாரன்னு? கேட்டுகிட்டே கெடப்பாக.....”



”உங்க ஆச்சி மட்டும் தானியாவா இருக்காங்க ஊருல?”



“இல்ல எங்க மாமா கூடத்தான் இருக்காங்க.....” சற்று நேர மௌனத்துக்கு பின் பிரவீணே தொடர்ந்தான்.....



“நீங்க என்ன சார் பண்றீங்க....?”



“ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன்.....”



“எந்த ஸ்கூல்ல.....?”



“செந்தாமஸ்ல பயாலஜி எடுக்கேன்”



“ஐயோ.... செந்தாமஸா!!!!! நான் அங்கதான் சார் +2வரைக்கும் படிச்சேன்.... அதெல்லாம் மறக்கமுடியாத காலம் சார்.... அத்தன சந்தோசமா எந்தக் கவலயும் இல்லாம ஜாலியா சுத்திகிட்டு தெரிஞ்சோம்.... இப்ப நெனச்சாலும் ஏக்கமா இருக்கு..... ‘முதல்வன்’ படத்துல அர்ஜூனுக்கு அப்பாவா வர்றவரு சொல்வாரு பாருங்க ’வாழ்க்கையிலயும் வி.சி.ஆர்ல உள்ள மாதிரி ஒரு ரீவைண்டு பட்டின் மட்டும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு?’ அதத்தான் சார் இப்ப நெனைக்க தோணுது....”



“அதுசரி......யாருக்குதான் அந்த ஆச இல்ல.....குடும்போம் புள்ளங்கன்னு வந்தபெறவு நாம ஆசப்படுற மாதிரியா வாழமுடியிது...?”



“சார்....இப்பவும் அங்க பழைய ஆள்களெல்லாம் இருக்காங்களா? நம்ம ஜெயபால் சாரு....அப்புறம் ஜெரால்டு,ஜேம்ஸு சாரெல்லாம் இருக்காங்களா? நம்ம ஆசுவால்டு பாதரு....குமாரராஜா பாதெரெல்லாம் என்ன பண்றாங்க? ஏதாவது தெரியுமா?”



“செந்தாமஸ்ல பி.யெட்டு காலேஜ் ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க.....ஜெரால்டு, ஜேம்ஸ் சாரெல்லாம் அத பாத்துகிற்றாங்க.....ஜெயபால்னு ஒரு சார் இருந்தாருன்னு சொல்லுவாங்க அவுரு இப்ப வேற எங்கயோ வேல பாக்காரு.... நான் வேலக்கு அங்க சேந்து நாலு வருசம்தான் ஆகுது....குமார்ராஜா பாதர் பி.எட்.காலேஜ் பிரின்சிபாலா இருக்காரு......ஆசுவால்டு பாதர் பிஷப் ஹைஸ்ல இருக்காருன்னு நெனக்கேன்....”



“அவுங்கள எல்லாம் கொஞ்சப்பாடா படுத்தி இருக்கோம்..... இப்ப நெனச்சா வேடிக்கையா இருக்கு..... என்னையல்லாம் அத்தன சீக்கிரோம் மறந்திருக்க மாட்டாங்க.....உங்க ஸ்கூல்ல நான் பண்ண சேட்டைக்கு என்ன தண்டன குடுக்குறதுன்னே தெரியாம என்னதான் மொதமொத சஸ்பண்ட் பண்ணாங்க....அதுவும் பரீச்சையில பிட் அடிச்சதுக்கு......என்ன புடிச்சது நம்ம சித்தானந்தா சாரு.....தண்டன குடுத்தது குமார்ராஜா பாதரு....அது மட்டுமா வாத்தியார அடிக்க ஆளக்கூட்டிட்டு வந்தேன் அது இது அயிரத்தெட்டு பஞ்சாயத்து எம்மேல அங்க உண்டு......ஆனா ஒண்ணு சார் படிக்கிற காலத்துல எவ்வளவு சொன்னாலும் அதோட அரும நமக்கு புரியாது.....வாழ்க்கைல அடிமேல அடிவிழும் போதுதான் நாம பண்ணுன தவறுகள்லாம் நமக்கு உறுத்தும்” ஏதேதோ நினைவுகளில் மூழ்கியபடி நிறுத்தினான்.



“இப்பெல்லாம் பசங்க முன்ன மாதிரி வால்தனமே பண்ணமுடியாது அத்தன ஸ்டிரிக்ட்...பசங்களும் பாக்குறாங்க இல்ல படிச்சாத்தான் வாழ்க்கன்னு....”



“சார்.... நாம ஸ்கூல்ல காலேஜ்ல படிக்கிறதுக்கும் வாழ்கையில.... நாம வேலைபாக்குற எடத்துல.... நாம சந்திக்கிற விசயங்களுக்கும் சம்பந்தமே இல்ல சார்.... இங்க படிப்பு படிப்புன்னு பசங்கள பந்தயக்குதுரையா மாத்திர வேலதான நடக்குது சார்.....”



“நீங்க சொல்றது சரிதான்..... ஆனால் உலக எதார்த்தம் அப்படியில்லயே.....நல்ல மார்க் எடுத்தாதான் நல்ல காலேஜ்ல எடம் கெடக்கும்.....நல்ல காலேஜ்ல படிக்கும் போதுதான் ஒரு நல்ல எக்ஸ்போஷர் கெடக்குது அது மட்டுமில்லாம கேம்பஸ்ல நல்ல கம்பெனில வேலயும் கெடக்கும்....நல்ல வேலையும் பணமும் தான வருங்காலத்துக்கு உத்தரவாதம்...பெத்தவங்களும் அதத்தான விரும்புறாங்க”



“அப்ப படிப்புங்கிறது ஒழுக்கத்த.....அறிவ வளக்குற சமாச்சாரமா இல்லாம வேல வாங்குற விசயமா சுருங்கிப் போச்சுன்னு சொல்றீங்க....”



“அப்படியேன் சொல்றீங்க நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போனும்னு நெனச்சு ஒரு குறிக்கோளாட இருக்குற புள்ளக்கு ஒழுக்கம்.... சொல்லிக் கொடுக்காம தானா வராதா....?”



“கூண்டுக்குள்ள அடச்சுவச்சு மூணு வேளயும் சாப்பாடும் தண்ணியும் மட்டுமே குடுத்து அடிமபடுத்தி அதோட இயல்ப மறக்கடிச்சு வளத்துட்டா சிங்கம் கூட மானா மாறிப்போவும் சொல்ற மாறியில்ல இருக்கு நீங்க சொல்றது.....அது எவ்வளவு பெரிய அநியாயம்? ஜூவுல வளந்த மிருகத்த காட்ல விட்டால தெரியும் அதோட நிலமைய....இங்க பொத்திபொத்தி வச்சு வளத்து விட்டுருவீங்க அவனுக வெளி உலகத்த பாக்குறப்பல மெரண்டு உருண்டு போயிடுறானுவ..... நான் இப்ப கடசியா வேல பாத்து இறங்குன கப்பல்ல போன வருசம் ஒரு மலயாளிப் பையன் டிரையினி எஞ்சனியரா வேலக்கு வந்தான்.....பய படிச்சது பிட்ஸ் பிலானியில....அதுதான் அவனுக்கு மொத வாயேஜு.....வயசு இருபத்தி நாலுதான் இருக்கும் சின்னச் சின்ன வேலைகளுக்கு கூட தெகச்சு போவாம்.....சீப் இஞ்சனியரு எதாவது திட்டிட்டா ஒடன ஒடஞ்சு போயி ஒக்காந்திருவாம்.....என் ரூம்லதான் கெடப்பான்னா பாத்துக்கோங்க.....நானும் அவனுக்கு என்னலாமோ சொல்லி தைரியங் குடுப்பேன்......பயவுல்ல திடீர்ன்னு ஒருநா கடல்லபாஞ்சிட்டாம்..... நல்ல நேரத்துக்கு அப்ப நம்ம பயல்வ இரண்டு பேரு அத பாத்திட்டானுவ..... கப்பலும் பெர்த் கெடக்காம ஆங்கரேஜ்ல இருந்திச்சு அதனால உடனே அவன ரெஸ்கியூ பண்ண முடிஞ்சது....இதுவே செயிலிங்ல இருந்து யாரும் பாத்திருந்தாலும் புண்ணியமில்ல போங்க.....இப்படித்தான் இருக்குது இப்ப உள்ள பயலுவ அறிவும்,தைரியமும்.”



சாதாரணமாய் ஆரம்பித்த பேச்சு மெல்ல மெல்ல விவாதமாய் மாறிக் கொண்டிருப்பதை அவதானித்த ஆஸ்கர் புன்னகையை மட்டுமே அப்போது அவனுக்கு பதிலாக்கினார். பிரவீணும் அவரது மனநிலையை புரிந்து கொண்டவனாக அமைதியானான். அந்த ஓரிரு நொடி மௌனம் அவர்கள் இருவருக்கும் சில விஷயங்களை உணர்த்தி இருக்க வேண்டும். தத்தமது இயல்புக்கு மெல்ல திரும்பினர்.



பிரவீண் ” எல்லாம் தூங்கிட்டாங்க.....நான் தான் உங்கள தூங்கவிடாம எதையோ பேச ஆரம்பிச்சு....எங்கயோ போயிடிச்சு நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்காதிங்க.....ஏதோ மனசுல தோண்ணத வச்சு பேசிட்டேன்....“



”அய்யோ....நீங்க வேற....ரொம்ப நாள் கழிச்சு நம்ம மக்க மனுசர பாத்த உடன யாருக்கும் வர்றது தான்... நீங்களும் தொடர்ந்து பயணத்துல அலுப்பா இருப்பீங்க....சரி காலைல பேசுவோம்”



“சரி சார்....”



ரயில் அப்போது ஏதோ ஒரு பாலத்தின் மீது சென்றதால் வினோதமான சத்தத்தை எழுப்பியபடி காற்றைக் கிழித்து பாய்ந்து கொண்டிருந்தது. ஜன்னலை கடந்து மின்னல் ஒளியைப் போல் வெளிச்ச கீரல் பாய்ந்து வந்து சென்றது. பிரவீணுக்கு அப்போது தூக்கம் வரவில்லை என்றாலும் அப்படி கைகால்களை நீட்டி படுத்திருப்பது சுகமாய் இருந்தது.சிந்தனைகள் சிதற துவங்கியது. சற்று நேரம் அப்படியே படுத்திருந்தவன் தீடீரென்று எழுந்து தனது சீட்டுக்கு அடியில் வைத்திருந்த மலையேறிப் பையை எடுத்தான். அதன் சைடுசிப்பை திறந்து இயர்போன் ஒன்றை வெளியில் எடுத்தான்.தன் பையை கீழே மறுபடியும் சீட்டுக்கு அடியில் தள்ளிவிட்டு தனது ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் இருந்து ஆப்பிள் மொபைலை எடுத்து அந்த இயர்போனை அதில் மாட்டி இளையராஜாவின் பழைய பாடல்களை ஒலிக்கவிட்டபடி படுத்துக் கொண்டான். எஸ்.பி.பி,யேசுதாஸ், மலேசிய வாசுதேவன்,ஜானகி என காலத்தால் அழியா குரல்கள் அவனை தாலாட்ட துவங்கியது.........






........தொடரும்.

1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான எழுத்து நடை.
வாழ்த்துகள்.