2010 ஜூலை 27 மாலை.....
அன்று செவ்வாய்கிழமை ஆதலால் முதலில் அவர்களது பங்கு கோயிலான அந்தோணியார் கோவிலுக்கு போய் சந்தித்துவிட்டு பிறகு துணி எடுக்க போகலாம் என முடிவு செய்து கொண்டு கோவிலுக்கு போனார்கள். பெண்கள் மூவரும் முன் வாசல் வழியே கோவிலுக்கு செல்ல ஜோசப்பும், பிரவீணும் பின் பக்கமாய் கோவிலுக்கு சென்றார்கள்.
பிரவீணின் பெற்றோர்களுக்கு திருமணமானது முதல் அவனுக்கு ஞானஸ்தானமும், முதல் திருவிருந்தும் பெற்றதிலிருந்து அவனது தாய் தந்தையரின் அடக்கப்பூசை வரை அனைத்தும் நடைபெற்று முடிந்தது இதே அந்தோணியார் கோவிலில் தான். ஏழு வருடங்களுக்கும் மேலாகி விட்டதால் கோவிலின் அமைப்பிலும், பீடத்திலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. ஆனால் அந்தோணியார் மாத்திரம் தினமும் சவரம் செய்து கொள்பவர் போல அத்தனை பொலிவுடன் அதே கனவான கண்களுடன் பாலனை கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்தார்.
பிரவீணின் நினைவுகள் கொஞ்சம் பின்னோக்கி பயணித்தது…… இங்கு அவன் பள்ளிப் பருவத்தில் தினமும் காலையில் முதல் பூசைக்கே வந்து உடுப்பணிந்து ஆல்டர் பாயாக உண்டியல் குலுக்கியதும், நன்மை வழங்க தட்டேந்தி உதவி புரிந்ததும் நினைவில் வந்து நிழலாடியது. சில ஞாயிற்று கிழமைகளில் மூன்று பூசைகளுக்குமே அவன் தொடர்ந்து உடுப்பணிந்தது உண்டு. ஆனால் இதே கோவிலில் இருந்த ஒரு சில பங்கு தந்தைகளின் சுகபோக போக்குகளை கண்டு அவன் மனம் வெதும்பி போனதும் உண்டு. அந்த சின்ன வயதிலேயே பீடத்திற்கு பின்னால் குருமார்கள் சிலரின் நிஜமான முகங்களை காண நேரிட்டதால் ஒரு கட்டத்தில் அவனுக்கு அவர்களைப் போன்றோர் வைக்கும் பூசைகளில் உடுப்பணிவதே சாவான பாவம் என எண்ணத் தோன்றியதுண்டு. ஒருமுறை தவக்காலத்தில் சுத்தபோசனத்தின் அவசியத்தை போதித்து விட்டு சாமியார் ஒருவர் தனது பங்களாவில் வைத்து மீன் குழம்பு சாப்பிட்டதை வீட்டில் போய் அதிர்ச்சியாய் சொல்லிப் பார்த்தான். ஆனால் வீட்டில் உள்ளவர்களோ அவனை ”குரு நிந்தை குல நாசம்” என பதிலுக்கு பயமுறுத்தவே செய்தனர். ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து அவனுக்கு அந்தோணியாரை ரொம்ப பிடிக்கும்.
ஏற்கனவே செய்திருந்த முடிவின் படி துணிகள் எடுக்க அனைவரும் கண்ணாசில்கிற்கு சென்றார்கள். முதலில் புடவைகள் எடுக்க பெண்கள் பகுதிக்கு சென்றனர்.
“எம்மா சோபியா…. முதல்ல ஸ்வீட்டிக்கு பாத்து எடும்மா…..”
“பிரவீண்….. அவளுக எடுத்திட்டு இருக்கட்டும் அதுக்குள்ள நாம நமக்கு எடுத்திட்டு வந்திர்வோம்”
“மாமா முதல்ல அவங்களுக்கு எடுத்திட்டு அப்புறம் நமக்கு போவோமே…..”
“கிழிஞ்சது போ….. நாம எடுத்திட்டு வந்த பெறவும் அவள்வ ஒண்ணு கூட எடுத்திருக்க மாட்டாள்வய்யா…..”
“முதல்ல உங்க மாமாவ இங்க இருந்து கூட்டிட்டு போய்யா இல்லன்னா இவுரு புழுபுழுப்பு தாங்க முடியாது….”
வேறு வழிதெரியாமல் பிரவீண் ஜோசப்பை அழைத்துக் கொண்டு ஆண்கள் ஆடைகள் பக்கம் சென்றான். ஸ்வீட்டிக்கும் அவனை அப்படி தன் அம்மாவும், அப்பாவும் அங்கிருந்து கிளம்ப செய்தது பிடிக்கவில்லை. சற்று நேரம் மூஞ்சியை தூக்கி கொண்டு இருந்தாள். சோபியா எதை காண்பித்தாலும் அதில் ஈடுபாடே இல்லாமல் ஒதுக்கி கொண்டிருந்தாள். ஒருகட்டத்தில் வெறுத்துப் போன சோபியா….”ஏய்! எதையாவது உன்ன எடுத்தா என்ன? எதுவுமே புடிக்கல புடிக்கலன்னா எப்படி?”
“எம்மா…. நீங்க இரண்டு பேரும் உங்களுக்கு முதல்ல எடுங்க பெறவு நான் எடுத்துக்கிர்றேன்….”
“இத முதல்லயே சொல்லி தொலச்சா என்ன?” எனக் கோபப்பட்டவள். “எத்த நீங்க உங்களுக்கு பாருங்கத்த…..” என்றாள்.
அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கொஞ்ச நேரத்தில் பிரவீணும் அவனது மாமனும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
“என்னம்மா எதாவது எடுத்தீங்களா?”
“எய்யா எனக்கு மட்டும் தான் எடுத்திருக்கு….. ஒம்மவளும், பொஞ்சாதியும் பாத்துகிட்டிருக்காக….”
“நான் சொன்ன மாறியே ஆயிப்போச்சா….. இவளுவ நாம எடுத்திட்டு வந்த பெறகும் அப்படியே நிக்காள்வ பாத்தியாய்யா….”
“ஆச்சி….. உங்களுக்கு எடுத்தத காமிங்க…..” அவள் ஒரு வெளீர் பச்சையில் காட்டன் சேலை ஒன்றை நானூறு ரூபாய்குள் பார்த்து எடுத்து வைத்திருந்தாள். அதைப் பார்த்தவுடன் பிரவீண் “ஆமோ இது ஒரு சேலன்னா எடுத்து வச்சிருக்கீக…..? குடுங்க இப்படி…..” என்றபடி சேல்ஸ்மேனை அழைத்தான்.
“இது வேண்டாம்….. பட்டு சேலையெல்லாம் எந்தப் பக்கம்?” எனக்கேட்டான். அவன் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு பின்பக்கம் என சொல்லவே அங்கே அனைவரையும் அழைத்து சென்றான்.
“எய்யா….. காலம் போன காலத்துல எனக்கு பட்டுச் சேலை எதுக்குய்யா…..? உங்க அம்மா போன பிறகு அதெல்லாம் நான் கெட்டுறதில்லையா…..”
“எதுவும் பேசக்கூடாது உங்களுக்கு நாந்தான் பாப்பேன்….” என்றபடி பட்டுச் சேலைகளை காண்பிக்க சொன்னான்.
“சார்…. என்ன ரேஞ்சல சாரி பாக்கனும்…..?”
“விலையப் பத்தி கவலயில்ல…..”
“அதுக்கில்ல சார்….. எந்த ரேஞ்சின்னு சொன்னீங்கன்னா அந்தந்த வரிசைல பாக்கலாம் அதுதான்…..” ஓரீரு நொடிகள் அப்படியே சேலைகளை நோட்டம் விட்டவன் ”ஆங்….. அந்த பக்கத்துல உள்ள சேலைகளை காமிங்க…”
“அது பாத்தீங்கன்னா ஆரம்பமே…… ஐயாயிரம் ரூபாய்ல இருந்துதான்……” என அவர் சொல்லி முடிக்கும் முன்னே “அய்யோ அதெல்லாம் வேண்டாம்….” என படபடத்தாள் ஜொஸியம்மே.
“ஒண்ணும் பிரச்சனையில்ல காமிங்க…… ஆங் அந்த இரண்டாவது ரோவுல கீழ இருந்து மூணாவதா ஒரு மெரூன் சாரி இருக்குல்ல அத எடுங்க……”
அவன் ஒன்று சொன்னால் அவர் அதை ஒட்டி மேலும் ஒன்பது சேலைகளை இறக்கி கடைபரப்பினார். ஸ்வீட்டி ஆச்சர்யமும், ஏக்கமுமாய் அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள். சோபியா தனது கணவன் ஜோசப்பை அவ்வப்போது முறைத்து கொண்டும், பிரவீணை செய்கையால் காண்பித்து ‘அங்கப் பாருய்யா….’ என மனசுக்குள் நினைத்ததை அவனிடம் உடல் மொழியால் வெளிப்படுத்திய படியும் இருந்தாள்.
ஒருவழியாய் அழகான குங்கும நிற பட்டுச்சேலை ஒன்றை அவளுக்காக தேர்வு செய்து முடித்தான். ஜொஸியம்மேக்கு பூரிப்பும் பெருமையும் பொங்க பொய்யாய் கோபித்துக் கொண்டு” இதெல்லான் வேண்டா(ம்)ய்யா….. வெல எவ்வளவு…..? ஆத்தி ஏழாயிரத்தி ஐநூறா?” என வாய் பிளந்தாள்.
“இவ்வளவு வெலக்கு ஆச்சிக்கு எதுக்குய்யா…..”தயங்கித் தயங்கி ஜோசப்பும் முனுமுனுத்தார்.
“நீங்க சும்மா கெடங்க மாமா……ஆச்சி உங்களுக்கு புடிச்சிருக்கில்ல…..?” அவள் பதிலை கூட எதிர்பாராமல் பில்லை போடச் சொன்னவன்.
“என்ன மாமா…… சும்மா இருக்கீங்க அத்தக்கு நீங்க பாருங்க……”
“அய்யோ எனக்கு இந்த வெலைக்கெல்லாம் வேண்டாம்பா…….”என ஏக்கம் கலந்த குரலில் ஆதங்கத்தோடு மறுத்தாள்.
“எத்த வெல கெடக்குது…..முதல்ல உங்களுக்கு புடிச்ச சேலையப் பாருங்க……அப்புறம் வெலையப் பாக்கலாம்….” என்றபடி பிரவீண் ஸ்வீட்டியை பார்த்து “என்ன நீ உனக்கு ஒண்ணும் எடுக்கலியா……?”
“எனக்கு யாரு எடுத்து தர்றா…..?” அவளையும் மீறி அவளுக்குள் இருந்து அந்த குரல் ஒலித்து விட்டது. பிரவீண் அவளிடமிருந்து இந்தப் பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
“உனக்கு எடுக்கனும்னு தானத்தா நாங்க எல்லாரும் வந்திருக்கோம்…… எய்யா ஒம்மாமன் மவளுக்கும் நீயே எடுத்துக் குடுத்திருயா…….சக்களத்தி சாபம் கீபம் போட்டுறப் போறா…..” என ஜொஸியம்மே அவர்களது ரூட்டை கிளியர் செய்து கொடுத்தாள். ஸ்வீட்டிக்கு தன் ஆச்சியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் போல் தோன்றியது.
“உனக்கு சாரி புடிக்குமா……?இல்ல சுடிதார், ஜீன்ஸ் அப்படி இப்படின்னு……”
“முதல்ல சாரி பாக்கலாமே…..” அவளாக உரிமை எடுத்துக் கொண்டாள். பிரவீணுக்கும் புரிந்தது. ஜோசப் ஒரு புன்சிரிப்போடு அவர்களை ரசிக்க துவங்கினார்.
“சார் என்ன ரேஞ்சல……பாக்கனும்?”
“மேக்ஸிமம் உங்ககிட்ட என்ன வெலக்கு இருக்கோ அதுவரைக்கும்…..” இது போன்ற அலம்பல்கள் அவருக்கு வாடிக்கையான ஒன்றாதலால் அவரும் புரிந்து கொண்டபடி புன்னகையோடு காண்பிக்க ஆரம்பித்தார்.
அவன் ஒவ்வொரு சேலையை பார்த்ததும் அவளையும் பார்த்து கொள்வான். அவளது கவனமோ சேலைகளின் மீதில்லாமல் அவன் மேலாக மாறிப்போனது. அவன் கண்டாங்கி சேலையை எடுத்துக் கொடுத்தாலும் அகமகிழ்ந்து போவாள் போலிருந்தாள்.
“இந்த முந்தி பாருங்க சார்…… நல்ல டிசைனோட……இவ்வளவு வேலைப்பாடோடெல்லாம் ரொம்ப ரேர் கலக்ஷன்ஸ் சார்…..” என அவர் ஒவ்வொன்றிற்கும் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனார். அவனோ அவர் பேசுவதை செவி மடுக்காமல் தன் கண்களை அடுக்கி வைக்கப் பட்டிருந்த சேலைகளில் ஆலைபாய விட்டுக் கொண்டிருந்தான். ஒருசில சேலைகளை அவளிடம் காண்பித்து அவ்வப்போது அவளது அபிப்ராயத்தையும் கேட்டுக் கொண்டான். அவள் எல்லாவற்றிற்கும் ஒரு மோனச் சிரிப்போடு தலையசைத்துக் கொண்டிருந்தாள்.
ஒருகட்டத்தில் சோபியா பொறுமை இழந்து தனக்கான ஆடைகளை தேர்வு செய்ய போயிருந்தாள். ஜொஸியம்மே கால் வலித்து போய் அமர்ந்து கொண்டாள். ஆனால் சேல்ஸ்மேன் மாத்திரம் எந்த சலிப்பும் இல்லாமல் சேலைகளை காண்பித்துக் கொண்டும் அவர்களது காதல் மொழியை ரசித்துக் கொண்டும் இருந்தார். அரைமணி நேரத்துக்கும் மேலான அலசலுக்கு பின் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய டார்க் பிங்க் நிறத்தில் தங்க நிற பார்டருடன் கூடிய அந்த சேலையை அவன் தேர்வு செய்து முடித்தான். ஸ்வீட்டிக்கும் அந்த சேலை மிகவும் பிடித்திருந்தது. அந்த நேரம் பார்த்து சோபியாவும் தனக்கு சேலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். அவன் பில் போட சொல்லவும் விலையை பார்த்தவளுக்கு ஒரு கணம் பூமி நின்று சுத்துவது போல் தோன்றியது….”எய்யா இதென்ன இருபத்தி ஐயாயிரத்துக்கு எடுத்து வச்சிருக்கீக…… ஏய் கழுத அறிவு இருக்கா உனக்கு நீயாவது சொல்லக் கூடாதா…..ஆன்னு பாத்திட்டு நிக்க…..” என தன் மகளையும் கடிந்து கொண்டாள்.
உண்மையில் ஸ்வீட்டியும் அதுவரை விலையை பார்க்கவில்லை. இதை பார்த்துக் கொண்டிருந்த ஜோசப்பும் வந்து சேல்ஸ்மேனை பாத்து “அதுக தான் சின்னப் புள்ளைக ஏதோ கேட்டிச்சின்னா…… நீங்க இந்த வெலைக்கா எடுத்து போடுவீக……?” என சத்தம் போட்டவரை
“மாமா…… மாமா…… ஏன் இப்படி வாரிங்க……. கொஞ்சம் ரெண்டு பேரும் சும்மா இருக்கீங்களா…..?” அவன் தன் அத்தை எடுத்து வைத்திருந்த சேலையையும் கொடுத்து ”மூணுக்கும் பில்லைப் போடுங்க போங்க…..” என்றான் நிதானமாக.
“ஐயோ மச்சான் நானும் கவனிக்கல…… வேண்டாம் மச்சான்” ஸ்வீட்டி மயக்கம் தெளிந்து பதறினாள். அவனுக்கு அவனை சுற்றி மொத்தமும் அவுட் ஆப் போக்கஸில் போய் “மச்சான்…… மச்சான்….” என்ற மகுடிச் சொற்கள் மட்டும் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.
“எங் கல்யாணச் சேலைக்கு மூணு பங்குல இந்த சேல வெல….. “ என மிரட்சியோடு எதையோ முணுமுணுத்துக் கொண்டு வந்தாள் சோபியா. அவளால் நிஜமாகவே அந்த விலையை ஜீரணிக்க முடியவில்லை. ஜோசப்பிற்கு ஒருவகையில் பெருமையாகவும், இன்னொரு புறத்தில் தன் மருமகனுக்கு இப்படி செலவை இழுத்து விட்டுவிட்டோமே என வருத்தமாகவும் இருந்தது. ஸ்வீட்டிக்கு சந்தோஷத்தைவிட ஒருவித குற்றவுணர்வே மேலோங்கி இருந்தது.
பிரவீண் இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் “ஸ்வீட்டி……. சுடிதார் பாக்க போவோமா…..?” என்றபோது “ஏன் இந்த கட மொத்தத்தையும் அவளுக்கு வாங்கி குடுக்க போறியாய்யா…..?” செல்லமாக அவனது கன்னத்தில் இடித்தாள் ஜொஸி அம்மே. “கேட்டா குடுக்குறதுதான்…… அதுக்கில்லாம பெறவு எதுக்கு மச்சான்னு…..” பிரவீணுக்கு கொஞ்சம் நஞ்சமிருந்த தயக்கமும் இப்போது விட்டிருந்தது. அவன் அப்படி பேசியதை கேட்டதும் ஸ்வீட்டிக்கு காற்றில் மிதப்பது போல் உணர்ந்தாள். “இதத்தான் துலுக்கன் திண்ணு கெட்டான்…… பரவன் உடுத்திக் கெட்டான்…. அந்த காலத்துல சொல்வாக…..” என்றாள் ஜொஸி.
எல்லாம் முடிந்து ஆடைகளை வாங்கிக் கொண்டு கண்ணா சில்கை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் மூவருக்கும் ஆட்டோ அமர்த்தி கொடுத்துவிட்டு மாமனும், மருமகனும் பைக்கில் அவர்களை பின் தொடரலானார்கள். பிரவீணின் மனதோ ஸ்வீட்டி தன்னை முதல்முறையாக “மச்சான் …..” என்றழைத்ததே அவனுக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்க துவங்க….. அவனது நெஞ்சுக்குளிக்குள் ஏதோ ஒன்று இன்பமான வலியோடு பிசைந்துக் கொண்டு சிலிர்ப்பூட்டியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக