சனி, 21 நவம்பர், 2009

ஞமலிபோல் வாழேல்....


”ஞமலிபோல் வாழேல்” என்கிறான் பாரதி.’ஞமலி’ என்றால் நாய் என்று பொருள்.நன்றிக்கு உதாரணமாக சொல்லப்படுவதல்லவா நாய் பின்பு ஏன் பாரதி ’ஞமிலிபோல் வாழேல்’ என்கிறான்? என்று குழப்பமாய் உள்ளதா? ஆம்! நாம் எதையும் மேலோட்டமாய் பார்த்து பழகியவர்களல்லவா? நமக்கு அப்படித்தான் தோன்றும்.ஆனால் நாய்களின் குணாதிசயங்களை உற்று நோக்கினால் உண்மை புலப்படும்.

பொதுவாக நாய்கள் சுதந்திரமாய் செயல்படும் பிராணி அல்ல.அவைகளுக்கு உணவு வழங்குபவர்களே எஜமானர்கள்.அத்தகைய எஜமானர்கள் எதை சொன்னாலும் அது செய்யும்.சுருங்கச் சொல்ல வேண்டுமானால் ஒருவேளை உணவுக்காக வாலையும் ஆட்டி,காலையும் நக்கும் கீழ்தரமான நடவடிக்கைகளை கொண்டது.அதேசமயம் போலிதனமாய் பாசாங்கு செய்து கொஞ்சி குழையும் குணமும் அதற்கு உண்டு.மொத்ததில் நாய்கள் அடிமைதனத்தின் சின்னங்கள்.

மனிதனும் ஆடு,மாடு,கோழி போன்ற உயிரனங்களை தனது அன்றாட பயன்பாட்டிற்காகவும்,தேவைக்காகவும் வளர்த்தான்.ஆனால் நாய்களை அவன் வளர்த்ததோ மற்ற உயிரனங்களை கண்கானிக்கவும்,வேட்டையாடவுமே.ஆக மனிதனின் ஆதிக்க வெறிக்கு முதலில் வாலாட்டியது நாய்களே! அதன் பரிணாம வளர்சியே இன்று அடியாட்களாகவும்,கூலிப்படையாகவும் மாற்றம் கண்டுள்ளது.

அடியாட்களுக்கும்,கூலிப்படையினருக்கும் எந்த அடிப்படை சித்தாந்தமும் கிடையாது.அவர்களை பொறுத்த வரையில் காசு கொடுப்பவரே எஜமானன்.அந்த எஜமானன் எதை சொன்னாலும் அவர்கள் செய்வார்கள்.இன்று ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து ஆதிக்க சக்திகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களும் இவர்களே!

இதில் கொடுமை என்னவென்றால் அடியாட்களாகவும்,கூலிப்படையினராகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் அடிதட்டு வகுப்பினராய் இருப்பவர்களே!(இருந்தவர்களே).இவர்களுக்கோ தாங்கள் யாருக்கு எதிராய் செயல்படுகிறோம்....?தங்களைப் போன்றோர் உருவாவதற்கு யார் காரணம்...?தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன....? என்று கூட தெரியாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை.

அப்படிப்பட்டவர்களால் கொடூரமாய் அழிக்கப்பட்டு இன்றும் தமிழக வரலாற்றில் ஒரு கறுப்பு சரித்திரமாய் இருக்கும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன்.....

1967ஆம் வருடம்...அறிஞர் அண்ணாவின் ஆட்சிகாலமது..... தஞ்சையில் பண்ணையார்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலமது.நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்ச் சிறிய விவசாய கிராமம் கீழவெண்மணி...அங்கே அப்போது விவாசாய கூலிகள் கொத்தடிமைகளாய் நடத்தப்பட்டனர்.சிறு தவறுகளுக்கு கூட சவுக்கடியும்,சாணிப்பாலும் ”பரிசளக்கப்பட்ட” காலமது.தூரத்தெரியும் விடிவெள்ளியாய் கம்யூனிச தலைவர்கள் அந்த விவசாய தோழர்களுக்கு மத்தியில் விளிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வந்தார்கள்.அதன் விளைவாக விவசாயச் சங்கம் ஒன்று உருவானது.ஒற்றுமையாய் ஒருகுரலில் தங்களது உரிமைகளை கேட்க தொடங்கினார்கள் விவசாயிகள்.அதை கண்டு அதிர்ந்த பண்ணையார்களும்,நிலச்சுவாந்தார்களும் ‘நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்’என்று ஒன்றை உருவாக்கி ஆதிக்க வெறியை ஒருங்கிணைத்தார்கள்.

அந்தச் சமயத்தில் தான் விவசாயிகள் வெறும் அரை லிட்டர் நெல்லை தங்கள் படியில் உயர்த்தி கேட்டனர்.அதற்காக அன்றைய ’அரசியல்வாதியான’ ராஜாஜியும், ”தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது” என விவசாயிகளை பரிகசித்தார்.ஆனால் விவசாயிகள் படி உயர்த்தி கேட்டதால் பண்ணையார்களுக்கும்,நிலச்சுவாந்தார்களுக்குமே பேய் பிடித்தது.அதன் விளைவாக அதே ஆண்டு டிசம்பர் திங்கள் 25ஆம் நாள்.கிறிஸ்துமஸ் தினத்தன்று.பண்ணையார்களின் அடியாட்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழவெண்மணியில் நுழைந்து தங்களது விசுவாச வெறியை கட்டவிழ்த்து விட்டார்கள்.உயிரை கையில் படித்தபடி விவசாயிகள் தப்பி ஓட முயற்சித்தனர்.

அப்போது அங்கு ஒரு தெருவின் மூலையில் ராமைய்யா என்ற விவசாயின் குடிசை இருந்தது.அந்த சின்னன்ஞ் சிறு குடிலில் 48 பேர் அடைக்கலம் கொண்டார்கள்.அதையறிந்த அந்த வெறியாட்கள் அந்த குடிசைக்கு தீவைத்தனர்.வெப்பம் தாளாமல் மரண ஓலமிட்டபடி தகித்து கொண்டிருந்த நெருப்பையும் மீறி ஆறு பேர் வெளியே ஓடினர்.அப்படி தப்பியோட எத்தனித்தவர்களில் இருவரை பிடித்து மீண்டும் உள்ளே தள்ளியது அந்த வெறிபிடித்த கும்பல்.

அப்போது ஒரு தாய் தனது மரணத்தருவாயிலும் தனது குழந்தையை வெளியே வீசியிருக்கிறாள்.ஆனால் அந்த வெறிபிடித்த கூலிப்படையினரோ குழந்தை என்று கூட பாராமல் அதை மீண்டும் எடுத்து நெருப்பில் வீசியிருக்கிறார்கள்.கடைசியாக அவர்களது வெறியாட்டத்தில் வெந்து கருகியது 44 பேர் உயிர். அதில் பெண்கள் 14 பேர். குழந்தைகள் 22 பேர்.

கூலியாக உயர்த்தி கேட்ட அரை லிட்டர் நெல்லுக்காக ஆதிக்க வெறியர்களின் கண்ணிசைவுக்கு கூலிப்படையினர் 44 உயிருக்கு வாய்கரிசி போட்டனர்.இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு கிடைத்த தீர்ப்பு என்னவென்றால்....”அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…" என்று 1973 ஏப்ரல் 6ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது.

இன்னும் கீழவெண்மணிகள்...பாப்பாபட்டியாகவும்,கீரிப்பட்டியாகவும்,மேலவளவாகவும்,உத்தப்பபுரங்களாகவும் தமிழக மண்ணில் உயிர்போடு தான் உள்ளது.நாமோ இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பாக டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவராய் சொல்லப்படும் ஏசுநாதரின் பிறந்தநாளை கொண்டாடுவோம் ஆனால் நம் அண்டை மாவட்டத்தில் சாதி வெறிக்கு வெறும் நாற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பலியான அந்த உயிர்களுக்கு துக்கம் அனுசரிக்க மாட்டோம்.உண்மையில் ஏசுநாதர் என்றொரு தேவமைந்தன் இருப்பாரேயானால் அவர்கூட நம்மை இதற்காக மன்னிக்க மாட்டார்.

தோழர்களே!

தனது உதிரம் கொடுத்து நமக்கு உயிர் கொடுத்த நம் அன்னைக்கே நமது உயிரை பலிகேட்க உரிமையில்லாத போது நாம் யார் அடுத்தவர் உயிரெடுக்க?சகமனிதனை அழித்து நாம் அடைவதற்கு இங்கு எதுவுமில்லை.இந்தச் சமூகம் என்பது முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது.நாம் சிரித்தால் அது சிரிக்கும்...நாம் அழுதால் அது அழும்....நாம் அதனை அடித்தால் அது நம்மை திருப்பியடிக்கும்.செய்யும் எல்லா வினைகளுக்கும் எதிர் வினை உண்டென்பது உலக நியதி....ஆதலால் ஞமிலி போல் அல்லாமல் உள்ளார்ந்த அன்போடு சக உயிரை காதல் செய்வீர்.....!

புதன், 18 நவம்பர், 2009

ஆண்மை தவறேல்....


”ஆண்மை தவறேல்” என்றான் பாரதி.ஆணுக்கு பெண் இளைப்பில்லை என கும்மியடித்த பாரதியா இப்படிச் சொன்னான்? என வினா எழுப்ப தோன்றுகிறதா? நிச்சயம் தோன்றும்.

காரணம்...

இந்த ஆணாதிக்க தமிழ்ச் சமூகத்தில் ‘ஆண்மை’ ஆண்களுக்குரியது என்றும் ’பெண்மை’ பெண்களுக்குரியது என்று தான் நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் அது சரியல்ல.

“ஆண்மை” என்பது ஒரு பெயர்ச்சொல் தான்.ஆனாலும் அதற்கு பாலின பேதமில்லை.ஏனென்றால் ”ஆண்மை” என்பது ’வீரம்’ என்று பொருள் படும்.’வீரம்’ எல்லோருக்கும் பொதுவானது.

சரி ‘வீரம்’ என்றால் என்ன?

ஒன்றை பயம் இல்லாமல் எதிர் கொள்வதே வீரமாகும்.இதைத்தான் பாரதி சொன்னான்.”ஆண்மை தவறேல்” என்று.இன்று நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை உள்ளது.இன்று தற்கொலை செய்திகளை தாங்கி வராத நாளிதழ்களே இல்லை.தேர்வெழுதி தோற்றுப் போனால் உடனே தற்கொலை....காதலில் தோற்றால் தற்கொலை....வறுமையில் வாடினால் தற்கொலை....என்று சிறு தோல்விகளுக்கும் வாழ்வை முடித்துக் கொள்ளும் அபத்தங்கள் நமது சமூகத்தில் தொடர் கதையாகவே உள்ளது.வாழ்வை எதிர் கொள்ளும் மன தைரியம் நம்மிடம் குறைந்து வருவதே இதற்கு காரணம்.

வீரத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்து மறைந்தவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நிறைய உண்டு.அவற்றுள் ஒன்றை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்...

1955ஆம் வருடம் டிசம்பர் திங்கள் 1ஆம் நாள் தனது பணி முடிந்து மாலையில் பேருந்தில் ஏறி கறுப்பினர்களுக்காக ஒதுக்கப் பட்ட இருக்கையில் அமர்ந்தாள் ரோசா பாக்ஸ்.மாண்ட்கோமரியிலிருந்து (MONTGOMERY) தான் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணச் சீட்டு பெற்றுக் கொண்டு பயணித்தாள்.அது அமெரிக்காவில் இனவெறி அதிகாரப்பூர்வமாய் அரங்கேறிக் கொண்டிருந்த காலம்.வெள்ளையர்கள் பேருந்தில் ஏறும் போது கறுப்பினத்தவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளை காலி செய்து தர வேண்டுமென்பது எழுதப் படாத விதியாகவே இருந்தது.

ஒரு நிறுத்தத்தின் போது மூன்று ,நான்கு வெள்ளையினத்தவர்கள் அந்தப் பேருந்தில் ஏறினார்கள்.அப்போது இருக்கைகள் எதுவும் காலியாக இருக்கவில்லை.இதை பார்த்த பேருந்தின் நடத்துனர் அவளையும்,அவளுடன் அமர்ந்திருந்த மற்றவர்களையும் எழுந்து வெள்ளையர்களுக்கு இடம் கொடுக்க சொன்னார்.மற்றவர்கள் முதலில் சிறிது தயக்கம் காட்டினாலும் எழுந்து கொண்டார்கள்.ஆனால் ரோசா பாக்ஸோ சிறிதும் பயமின்றி மெல்ல நகர்ந்து சன்னல் ஓரம் சாய்ந்து கொண்டு எழுவதற்கு மறுத்தாள்.நடத்துனரின் மிரட்டல்களை கண்டு சிறிதும் அஞ்சாமல் தனது இருக்கையிலே தன்னை இருத்திக் கொண்டாள்.அப்படி அவள் உறுதிபட மறுத்ததற்கு காரணம்...ஒரு உயிரினமாக...ஒரு தேசத்தின் குடிமகளாக...அவள் தனது பிறப்புரிமைகளை அறிந்து கொள்ள விரும்பியதேயாகும்.

அவளது அந்த மறுப்பு அவன் சற்றும் எதிர்பாராதது.அவளுடன் அதுவரை அமர்ந்து பயணித்த ஆண்களே மறுப்பேதும் சொல்லாமல் எழுந்த பிறகும் அவள் எழுவதற்கு மறுத்தது அந்த நடத்துனரை கோபம் கொள்ள செய்தது.அவன் காவல்துறையினரை வருவித்தான்.அவர்களிடத்தும் அவள் உறுதியாய் மறுத்தாள்.அதனால் அவள் அங்கு கைது செய்யப்பட்டாள்.அவளது கைது அங்கு அதுவரை அடிமைதனங்களை சகித்து கொண்டு வாழ்ந்த கறுப்பின சகோதிரர்களை எழுச்சி கொள்ள செய்தது.அதன் தொடர்சியாக ’மாண்ட்கோமரி எழுச்சி இயக்கம்’(MONTGOMERY IMPROVEMENT ASSOCIATION) மார்டின் லூதர் கிங் என்னும் பாதிரியாரின் தலைமையில் உருவாக்கப்பட்டது.அந்த இயக்கம் ‘மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு’ என்னும் வரலாற்று சிறப்புமிக்க அறப்போராட்டத்தை அறிவித்தது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல நூறு ஆண்டுகளாக நிறத்தின் பெயரால் தாங்கள் இழந்து வந்த உரிமைகளை மீட்டெடுக்கும் எழுச்சியுடன் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.அதன் விளைவாக பேருந்துகள் காலியாகின.போராட்டம் தொடர்ந்தது.....அந்தப் பேரியக்கத்தின் விளைவாக 1956ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் அமெரிக்க உச்சநீதிமன்றம் ”பேருந்திகளில் நிறவெறி பிரிவினைகள் சட்டத்திற்கு புறம்பானது” என்ற அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்பை வழங்கியது.

அதுவரை எந்த ஆண்மகனுக்கும் வராத துணிச்சலோடும்,ஆண்மையோடும் தனது உரிமைக்காக போராடிய ரோசா பாக்ஸின் நெஞ்சுறுதியே அந்த மாபெரும் எழுச்சிக்கான முதல் பொறி.அந்த வீர மங்கை 2005ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24ஆம் தேதி தனது 92ஆவது வயதில் காலமானார்.அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக்டோபர் 27ஆம் தேதி மாண்ட்கோமரியிலும்,டெட்ராய்டிலும் இயங்கிய அத்துணை பேருந்துகளிலும் முன் இறுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு கறுப்பு கொடிகளை தாங்கி பயணித்தது....வெள்ளை இனத்தவர் மரியாதையுடன் அதன் அருகில் நின்றபடி பயணித்தனர்.....

தோழர்களே!

கோடிக்கணக்கான விந்தணுக்களை போராடி வென்றதனாலே தான் நாம் உயிரினமாய் ஜெனித்தோம்.ஆகவே போராட்டங்கள் நமக்கு புதிதல்ல....நாம் நமது சிறகுகளை மறந்துவிட்டு சிகரங்களை கண்டு மலைக்கிறோம்.ஆகவே ந்மது சிறகுகளை விரிப்போம்!சிகரங்கள் நம் வசமாகும்!

புதன், 4 நவம்பர், 2009

வேற்றுமையில் ஒற்றுமை....



ஊனமுற்றவன்....

லஞ்சமாக வாங்கிய பணத்துடன்
பேருந்தில் ஏறி அமர்ந்தான் ஊனமுற்றோருக்கான இருக்கையில்...

கல்வித்தந்தை...

பெயர் போன தனது மருத்துவ கல்லூரியில் இடம் வேண்டிய ஏழை மாணவனுக்கு அவனது குடும்ப நிலை உணர்ந்து.....!!!!
இருபது லட்ச ரூபாயை இரண்டு தவனையில் கட்டுவதற்கு தாராளம் காட்டினான்.....
அந்த அறக்கட்டளை நிர்வாக குழுமத்தின் தலைவன்.

பட்டதாரி....

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனது தந்தையின் உதிரத்தில் விளைந்த விளைநிலத்தை அடகுவத்தான்.
வந்த பணத்தில் விசா வாங்கி விமானம் ஏறினான்.
வானில் பறக்கையில் அவனுக்கு பூமி சிறுக்கத் தொடங்கியது.....

கைமாறும் காந்தி....

காந்தி சிரிக்கும் நோட்டை கொடுத்து ஓட்டுவாங்கினான்.
கோட்டைக்குப் போனான்.
ஓட்டு போட்டவன் மனு கொடுக்க கோட்டைக்கு போனான்.
மனுவை பெற்றவன் அவன் கையிலிருந்த சிரிக்கும் காந்தியை சுட்டிகாட்டினான்.
காந்தி சிரித்தபடி மீண்டும் கைமாறினார்.

என்னைப் போல் ஒருவன்....

விபத்துக்குள்ளாகி ரத்த சகதியில் விழுந்த கிடந்தவனை கண்டு
படபடப்போடு வேகமாக விரைந்து சென்றான்......வீட்டிற்கு!

செவ்வாய், 3 நவம்பர், 2009

இனி தடையேதும் இல்லை....


விடிகாலை மூன்று மணி ஆகிவிட்டது நான் எங்கள் ஊரின் பேருந்து நிலையம் வந்திறங்கும் போது.பௌர்ணமி நிலவான் தன் ஒளிக்கதிர்களை கொண்டு இருளை துரத்திக்கொண்டிருந்தான்.மழையின் கைங்கர்யத்தால் தார்ச்சாலைகள் நீர்தேக்கங்களாக மாறியிருந்தன.

தூக்க கலக்கமும்,உடல் அசதியும் ஒன்றிணைந்து என்னை வீழ்த்த முயற்சித்துக் கொண்டிருந்த போதும் என் மனம் வீரச்சமர் புரிந்து வெற்றிக்களிப்புடன் தன் தாய்மண்ணிற்கு திரும்பிய ராணுவ வீரனைப் போல் உற்சாகமாயிருந்தது.

காரணம்...........

எனது தொழிற்சங்க வாழ்வின் மற்றுமொரு முக்கியமான தினமாய் முந்தைய நாள் மாறிப்போய் இருந்ததே....

எங்களது வங்கியில்(பாண்டியன் கிராம வங்கி) முந்நூறுக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் பணிபுரிந்து வருவது குறித்தும்,அவர்களது பணியை நிரந்தரமாக்க கோரி எங்கள் தொழிற்சங்கம் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் குறித்தும் கடந்த ஜூன் மாதமே ”நவீன கொத்தடிமைகள்” என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன்.

(அந்தப் பதிவின் விளைவாக எங்கள் நிர்வாகத்தால் நான் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதையும் அதை எதிர்த்து எமது தொழிற்சங்கத்தின் உதவியோடு போராடி மீண்டும் பணிக்கு திரும்பியது குறித்தும் “எங்கள் போராட்டம்....”,”போராட்டம் வென்றது..” என்ற எனது முந்தைய தொடர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்)

அந்த தற்காலிகப் பணியாளர்களின் பணி நிரந்தரத்திற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.அதன் தொடர்ச்சியாக மதுரையில் தொழிலாளர் நல ஆணையாளர் முன்பு ’தற்காலிகப் பணியாளர்களை’ பணி நிரந்தரம் செய்யக் கோரி ’தொழிற்தாவா’ ஒன்று தொடுத்தோம்.அதன் விளைவாக வங்கியின் நிர்வாகத் தரப்பையும்,எங்களையும்(தொழிற்சங்கம்) அழைத்து தொழிலாளர் நல ஆணையாளர் ’உடன்படிக்கை’ பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

வங்கி நிர்வாகமோ கொஞ்சமும் மனித நேயமற்ற முறையில் முழுப்பூசனியை சோற்றில் மறைப்பதைப் போல் ‘தற்காலிகப் பணியாளர்கள்’ என்று எவருமே எங்கள் வங்கியில் இல்லை என கூறி வருகிறார்கள்.மேலும் சத்தமில்லாமல் தற்காலிகப் பணியாளர்களை கொஞ்சமும் தயவு தாட்சண்யமின்றி பணி நீக்கம் செய்யும் முனைப்பில் இறங்கினார்கள்.அதனால் நாங்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தற்காலிகப் பணியாளர்களுக்கான வழக்கு முடியும் வரை அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது எனக் கோரியும், தற்போதுள்ள நிலையிலேயே status quo maintain செய்யப்பட வேண்டும் என்று கோரியும் writ of mandamus வழக்கு ஒன்று பதிவு செய்தோம்.

எமது தரப்பு நியாயங்களை நடுநிலையோடு பார்த்த மதுரை உயர்நீதிமன்றம் எங்கள் வழக்கை ஏற்றுக் கொண்டதோடு,வங்கி நிர்வாகம் தற்காலிகப் பணியாளர்களுக்கான வழக்கு முடியும் வரை யாரையும் பணிநீக்கம் செய்ய கூடாது என ஆணையிட்டு தடை உத்தரவை நேற்று வழங்கியது.இது வெறும் தடை உத்தரவு மட்டுமல்ல.....

இது அந்த தற்காலிக ஊழியர்களின் இருப்பை அங்கீகரிக்கும் உத்தரவு.இது எங்கள் போராட்டத்திற்கும் அந்த இளம் தோழர்களின் எதிர்காலத்திற்குமான கரைகள் வெகு தொலைவில் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் கலங்கரை வெளிச்சம். அந்த வெளிச்சம் தந்த உற்சாகமே எமது வலிகளை துடைத்து விட்டிருந்தது.....

ஆம் தோழர்களே!

நாம் மற்றவர்களுக்காக வாழும் போதும்,சக தோழனுக்காக போராடும் போதும் தான் நமது வாழ்விற்கான அர்த்தம் நமக்கே புரிபட துவங்குகிறது.....!