சனி, 28 ஏப்ரல், 2012

16-ஆம் காம்பவுண்ட்.....10.

மாதா கோயிலில் திருவிழா நடக்கும் பத்துநாள் மாலையும் மக்கள் வெள்ளத்தால் கோயிலே அல்லோகல்லோப் படும். குடும்பம் குடும்பமாய் மாலை ஆசிர்வாதத்தை பார்த்துவிட்டு பீச்சு ரோட்டில் நீண்ட வரிசையாய் போடப்பட்டிருக்கும் கடைகளுக்கு போகவும்…… சவேரியானா மைதானத்தில் மாதா கோவில் திருவிழாவையொட்டி போடப்படும் பொருட்காட்சியை காணவும்…… கோயில் காம்பவுண்டிற்குள் அமர்ந்தவாறு அன்றன்று நடந்தேறும் பள்ளி,கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை காணவும், உறவினர்களோடும், நண்பர்களோடும் சேர்ந்து குதுகலிக்கவும்…… மக்கள் கூட்டம் தினமும் அலைமோதும்.

பிரிந்த உறவுகளுடன் முறுக்கி திரியவும், அலங்கார ஆடம்பரத்தோடு பவுசை காட்டவும், திருமணங்களுக்கு வரன்கள் கூடவும், ஊர்வம்பை உற்சாகமாக பேசவும்….. என வேறு சில காரணங்களுக்கும் கூடுவோர் உண்டு. காரணங்கள் எதுவாக இருந்தாலும் பல்வேறு தரப்பட்ட மக்கள் ஓரிடத்தில் வருடத்தின் இந்தப் பத்து நாட்களிலாவது ஒன்றாய் கூடுவதென்பது எத்தனை மகிழ்ச்சியானது. தொலைக்காட்சிகளுக்கு பின்னால் துண்டாடப்பட்ட இந்தச் சமூகத்தை…… தனித்தனித் தீவுகளாய் மாறிப்போன வீடுகளில் வாழும் இந்த காலத்து மனிதர்களை ஒன்றிணைக்கும் வல்லமை ஒன்றிற்காவது பனிமய மாதாவை நாம் வணங்குவதில் தவறில்லை என எண்ணுகிறேன்.

ஏனெனில் மிகப்பெரும் சர்வாதிகார அரசுகள் எல்லாம் கூட அச்சம் கொள்வது மனித சங்கமிப்பை கண்டுதான். மக்கள் சங்கமிப்பது ஆட்சியாளர்களை கலவரப் படுத்தும். இதுவரை உலகில் நடந்தேறிய மாபெரும் மாற்றங்கள் எல்லாம் மனித சங்கமத்தாலே சாத்தியமானது. பலதரப்பட்ட மனிதர்களை ஒற்றை நோக்குடன் ஒன்று கூட்டிவிட்டால் இங்கு எல்லா மாற்றங்களும் சாத்தியமாகும். இயேசு பிரானை கண்டு அஞ்சவில்லை ஏரோது மன்னனின் மதக்குருமார்கள் அவர்கள் அஞ்சியது அவர் பின்னால் கூடிய கூட்டத்தை. இயேசு நாதரில் ஆரம்பித்து…….கரம் சந்த் காந்தி வரை மாற்றங்களை சாத்தியமாக்கியது அவர்களல்ல…….அவர்கள் பின்னால் அணிவகுத்த அறியாமை நிறைந்த மனித சங்கமங்களே‼‼

பிரவீணும் அவனது குடும்பத்தாரும் ஆசிர்வாதம் முடிந்து கோயில் மணிக் கூண்டிற்கு அருகே வெளியே வீற்றிருந்தனர். ஸ்வீட்டியும், பிரவீணும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அந்த மௌனப் பார்வை இருவருக்குமே பிடித்திருந்தது.

ஜோசப்ஏன்யே இப்படியே உக்காந்திருக்கீக…… அப்படியே ஒரு சுத்து போயிட்டு வரலாம்ல

நீங்க கூட்டிட்டு போன நாங்க ஏன் வர மாட்டோம்னா சொல்றோம்”-சோபியா.

எனக்கு கொஞ்சம் வேல இருக்குயே…… பிரவீண் தான் இருக்கான்ல? நீங்க எல்லாம் போயிட்டு வாங்க…..”

ஏன் உங்களுக்கு என்ன இந்நேரத்துல வேல…..?”

நம்ம வின்செண்டை கூட்டிட்டு ஒரு எடத்துக்கு போவனும் பாத்துக்க….”

நீங்க ஒரு எடத்துக்கும் போக வேண்டாம்…… நீங்க போனா எங்க போவீங்கன்னு தெரியும்….. அதனால எங்க கூடயே வாங்க…..”

இவ ரொம்ப கண்டா….. போயிட்டு வான்னா….. ஏட்டிக்கு போட்டி பேசிக்கிட்டு…..”

இரண்டு நாளா மருமகப்புள்ள வந்திட்டார்னு சும்மாதான கெடந்தீங்க…..அந்த கருமத்த குடிக்க முடியாம இப்ப தூக்கி போட்டு உதையுதாக்கும்?”

இவ ஒருத்தி என்னத்தையாவது ஒளரிக் கொட்டிக்கிட்டு……போய்யே போ…..”

நா போத்தான் போறேன்…… நான் போனாத்தான் என் அரும உங்களுக்கு புரியும்…..”

கொஞ்சம் கொஞ்சமாய் இருவருக்குமிடையே ஆரம்பித்த வாக்குவாதம் சண்டையாகிப் போனது. இதை பார்த்து கொண்டிருந்த ஜொஸி….”ஏ புள்ளைகளா….‼‼ என்ன பேச்சு பேசுறீங்க ரெண்டு பேரும்? சின்னஞ் சிறுசுக கணக்கா சண்ட போட்டுகிட்டு….. எல அய்யா ஜோசப்பு நீ எங்கையும் போக வேண்டா(ம்) கேட்டியா…..”

எம்மா நீங்க வேற….. சும்மா இருங்க என்ன?”

விடுங்கத்த இவருக்கு நம்மள விட அதுதான் முக்கியோ(ம்)….. தான் புடிச்சா புடிச்ச புடிதான்…..”

மாமா…… நீங்க இப்ப எங்கையும் போக வேண்டாம் முதல்ல நாம சுத்திப் பாப்போம் பிறகு இவங்கள வீட்ல விட்டிட்டு நானே உங்கள கூட்டிட்டு போறேன் சரியா…..?” பிரவீண் இப்படி சொன்னதும் சோபியா வாயடைத்துப் போனாள். இதுவரை அமைதியாய் இருந்த ஸ்வீட்டியின் கண்கள் தான் ஆங்காரத்தில் மின்ன ஆரம்பித்தது. பிரவீண் அவளை கவனிக்கவே செய்தான்.

தன் அத்தை சோபியாவை பார்த்து…..”எத்த நீங்க தப்பா நெனச்சுக் காதீங்க….. மாமாவ ரொம்ப குடிக்க உட்டுறமாட்டேன் எப்படி கூட்டிட்டு போறேனோ அப்படியே கூட்டிட்டு வர்றேன்……”

இல்லய்யா….. கொஞ்சமா குடிச்சமா விட்டமான்னு இருக்க மாட்டாருய்யா…. இவுரு தனக்கு மிஞ்சி குடிச்சிட்டு அந்த கெடையா கெடப்பாரு அதுக்குத்தான் வேண்டாங்கிறேன்.

சரித்த.... மாமாவ கூட்டிட்டு எங்கையும் போகல.... நானே போய் வாங்கிட்டு வந்து நம்ம ஆச்சி வீட்டு மாடில வச்சு சாப்புடுறோம் சரியா....?

அவளுக்கு அதில் பெரிதாக விருப்பம் இல்லையென்றாலும் பிரவீணின் பேச்சுக்கு கட்டுபட்டவளாய் அமைதியாகிப் போனாள். ஒருவழியாய் எல்லோரும் கிளம்பி கடைதெருவுக்கு போனார்கள். ஸ்வீட்டி மாத்திரம் அவனை முறைத்து கொண்டு கோபத்துடன் யாருடனும் பேசாமல் நடந்து சென்றாள்.

டில்லி அப்பளமும், அவித்த கடலையும் வாங்கினான். ஸ்வீட்டியிடம் அப்பளத்தை நீட்டவும்நான் ஒண்ணும் சின்ன பப்பா இல்ல அப்புளோம் சாப்பிட....என விறைத்தாள்.

“ஏட்டி உனக்கு என்ன ஆச்சு உன் ஆத்தா பேயி உம்மேல ஏறிக்கிச்சோ....?என சிடுசிடுத்தார் ஜோசப்.

“ஆமோ எங்க ஆத்தா பேயிதான் இப்ப அதுக்கு என்னங்குறீங்க?

அடிச் செருப்பால வாய்க்கு வாய் பேசிக்கிட்டு....

மாமா நீங்க சும்மா இருங்க அவ ஏதோ விளாட்டுக்கு பேசுறா....?

நீங்க என்ன எனக்கும் எங்க அப்பாவுக்கும் நடுவுல....என அவள் பேசி முடிக்கும் முன்பே அத்தனை பெரிய கூட்டத்திலும் ஜோசப்பின் கை அவள் கன்னத்தை பதம் பார்த்தது. அவமானத்தால் துடித்து அழுது..... அங்கேயே அமர்ந்து விட்டாள்.

“இவுருக்கு கொஞ்சம் கூட அறிவே கெடையாது வயசுக்கு வந்த புள்ளயை நாலு பேரு முன்ன இப்படியா அடிக்கிறது.எனச் சோபியா சொன்னதும் தன் தவறை உணர்ந்தவராய் ஜோசப்பும் அமைதியாகிப் போனார். பட்டென்று அவர்களை சுற்றி ஒரு கூட்டமும் கூடத் துவங்கவே..... மேற்கொண்டு யாரும் பேசாமல் நிலைமையை புரிந்தவர்களாக அங்கிருந்து நடக்கத் துவங்கினார்கள்.

வீட்டிற்கு சென்றதும் துணிகளை கூட மாற்றாமல் ஸ்வீட்டி போய் படுத்துக் கொண்டு விம்மத்துவங்கினாள். சோபியாவும், ஜொஸியம்மேவும் அவள் அருகே அமர்ந்து கொண்டு அவளை சாமாதானப் படுத்த முயற்சித்து கொண்டிருந்தார்கள்.

பிரவீணும், ஜோசப்பும் அவர்களை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு மது அருந்த ஹோட்டல் ஜோனிக்கு சென்றார்கள். மங்கலான விளக்கொளியில் சிகிரெட் நெடி ஏ.சி குளிரில் உலவ.... தடுப்புகளுக்கிடையில் போடப்பட்டிருந்த சோபாவில் இருவரும் தங்களை இருத்திக் கொண்டார்கள். ஆர்டர் எடுக்க பேரர் இவர்களை நெருங்கிய போது....என்ன மருமகனே என்ன சாப்புடுவீங்க..... பீரா...? இல்ல மத்தெதா?

மாமா உங்களுக்கு....?

நமக்கு எப்பவும் எம்.சி.பிராந்தி தான்....

ஆளுக்கு மூணு எம்.சி. லார்ஜ்......மாமா தண்ணி தானே? இல்ல சோடா....எதாவது?

தண்ணிதான்....

சரி.... ஒரு லிட்டர் கூல் வாட்டரும்..... ஒரு லெகர் சோடாவும்....

சார் சைட் டிஷ் என்ன வேணும்?

அவன் தன் மாமனை பார்த்தான். அவரோ அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.... நீங்க வழக்கமா குடுக்குறத மட்டும் குடுங்க....அவர் தலையாட்டியவாறே சென்று விட்டார்.

பேரர் மீண்டும் வந்து அவர்கள் கேட்டதை சப்ளை செய்யும் வரை அவர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பிரவீணுக்கு இன்னும் அதிர்ச்சி அடங்கவில்லை ‘அவளா இப்படிச் சொன்னாள்?என்றே அவனுக்குள் தோன்றிக் கொண்டிருந்தது. மாதா கோயிலில் வைத்து பேசும்போது கூட அவன் அன்று மது அருந்துவதாய் முடிவு செய்யவில்லை. தன் மாமனுக்கு மட்டும் வாங்கிக் கொடுத்து விட்டு சும்மா பேசிக் கொண்டிருக்கவே அவன் விரும்பினான். அவளை கலவரப்படுத்தவே தானும் குடிக்க வருவதாய் அப்போது சொல்லி வைத்தான். ஆனால் அவள் அப்படி பேசியதும் இப்போது வீம்புக்காக குடிக்க வந்து விட்டான்.

“எய்யா.... அந்தக் கழுத பேசுனத நீ தப்பா எடுத்துக்காத.....”

“ச்சே..... நீங்க என்ன மாமா..... ஆனாலும் நீங்க அவள அடிச்சிருக்க கூடாது...”

“அது இல்லய்யா.... உன்னைய நீ யாரு கேக்குறதுக்குன்னு? அவ கேட்டவுடனே எனக்கு தாங்க முடியலைய்யா..... நீ எம் மருமவன்.... என் அக்கா மவன்....” என்றபடி பாதியில் நிறுத்தியவர் ஒரு லார்ஜை படக்கென்று ஒரே மடக்கில் குடித்து முடித்தவர் “அவ எப்படிய்யா கேக்கலாம்....? நான் மாமன் இப்ப சொல்றன்.... இங்க வச்சு அத பேசக்கூடாது.... சரி! விடுய்யா....”

“மாமா சும்மா இருங்க முடிஞ்சு போனத பத்தி பேசிக்கிட்டு.....”

“எதுய்யா முடிஞ்சு போச்சு..... எதுவும் முடியல.... இதுல கொஞ்சம் தண்ணி ஊத்துங்கய்யா....” என்றபடி அடுத்த லார்ஜை நீட்டினார். அவன் அதில் தண்ணியை ஊற்றிக் கொண்டே ”என்ன மாமா? ஏன் இவ்ளோ வேகமா குடிக்கீங்க?”

அவர் பதிலேதும் பேசாமல் முதல் ரவுண்டைப் போல அடுத்ததையும் காலி செய்தவர். அங்கு வைக்கப்பட்டிருந்த பொறிகடலையை கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுக் கொண்டார்.

“என்னய்யா அது என்ன மாதா கோயில் தீத்தமா...? சும்மா வச்சு பாத்துகிட்டு இருக்க குடிய்யா....”

அவரையே பார்த்துக் கொண்டிருந்த பிரவீண் உணர்வு மீண்டவனாய்” ஆங் சரி மாமா....” என்றபடி அவன் தன் லார்ஜை கொஞ்சம் சுவைத்து விட்டு வைத்தான்.

“என்னே மருமவனே....? சின்னப் புள்ள பால சப்புன மாறி நக்கி நக்கி குடிச்சிகிட்டு....” அவர் அப்படி சொல்லி முடிக்கவும் மீதத்தை ஒரே மடக்காக அடித்து முடித்தான்.

“ஆங்.... இப்புடி சாப்பிடுவியா... அத வுட்டிட்டு....” என்றபடி கொஞ்சம் மிக்சரையும் அள்ளி வாயில் போட்டுக்கொண்டார்.

பிரவீண் இதற்கிடையில் தனக்கு அடுத்த லார்ஜை ஊத்திக் கொண்டு சுவைக்க போனவன் கடைசி நொடியில் தன் முடிவை மாற்றிக் கொண்டு வேகமாய் அருந்த முயற்சிக்க.... அது புரையேறி தொலைத்தது..... ஜோசப் பதறியவறாக அவன் தலையை தட்டியவாறு “பாத்துய்யா பாத்து..... பேசுறதையும் பேசிட்டு அவதான் நெனைக்கா போல....” என நிறுத்தியவரை பிரவீண் அர்த்ததோடு பார்த்தவுடன் “ எனக்கு எல்லாம் தெரியும்யா..... நீ எம் மருமவன்.... ஒன் வயசக் கடந்து தான நானும் வந்திருக்கேன்..... அதான் எனக்கும் ஆச்சர்யம் மச்சான் மச்சாண்டு கெடந்தவ எப்படி படக்குனு அப்படி பேசுனான்னு?”

பிரவீண் அவர் பேசுவதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான். அவர் ஒவ்வொரு லார்ஜுக்கும் கொஞ்சம் எக்ஸ்டிரா லார்ஜாகவே பேசிக் கொண்டே போனார். பிரவீண் நான்கு லார்ஜோடு நிறுத்திய பின்னும் அவர் ஆறு லார்ஜ் வரை போய் ஒரு ஸ்மாலுக்கு அடிபோட்டு பார்த்தார். அதற்கு மேல் அவரை விட்டால் முதலுக்கே மோசமாய் போய் அவரை தூக்கி செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகிப் போவோம் என உணர்ந்தவனாய் அவரது நச்சரிப்பையும், அன்புத்தொல்லைகளையும் மீறி பில்லுக்கு ஆர்டர் கொடுத்து கணக்கை முடித்தான்.

ஒருவழியாய் இருவரும் வீடு வந்து சேர பதினோரு மணிக்கு மேலாகி விட்டிருந்தது. கதவை உள்தாழிடாமல் சோபியாவும், ஸ்வீட்டியும் தூங்கி இருந்தபடியால் ஜோசப்பை ஒருவாறு வீட்டுக்குள் தள்ளிவிட்டு விட்டு அவன் தன் பாட்டி வீட்டு கதவை தட்டினான். ஜொசியம்மே அவனுக்காக தூங்காமல் காத்திருந்தாள்.

மாமனும், மருமவனும் நல்லா குடிச்சு கூத்தடிச்சிட்டு வந்திருக்கீய என்னல…..?”

அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆச்சி….. நான் கொஞ்சமாத்தான் அடிச்சேன் உங்க மவன் தான் யம்மாடி ஆளே மட்டையாகிப் போயிட்டாரு”.

கழுத விட்டைல முன்விட்ட வேற பின்விட்ட வேறையாஇருக்க போகுது? இந்த ஆச்சி உங்கிட்ட கேடுக்குறதெல்லாம் ஓண்ணே ஒண்ணுதான் மறுபடியும் குடிக்காதய்யா….. எனக்காக இல்லாட்டினாலும் உம் மாமன் மவ ஸ்வீட்டிக்காகவாவது இந்தக் கருமத்தை இன்னையோட விட்டிருய்யா…..”

போங்க ஆச்சி…. எனக்கும் உங்கள விட்டா யாரு இருக்கா?”

என்ன அப்புடி சொல்லிட்டியரு….. அந்த சின்னக் குட்டிக்கு உம்மேல அவ்ளோ பிரியம்…. அத அப்படி நெனைகாதய்யா……”

அப்ப ஏன் அப்படி சொன்னா…..?

எய்யா ராசா..... அத இத போட்டு மனச அலட்டிக்காத…. ஆச்சி சொல்றங் கேளு….. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப காலத்துக்கு நல்லா இருப்பீகய்யா…. அவளுக்கு உம்மேல கோவமே நீ தண்ணியடிப்பேன்னு சொன்னது தான்….. சின்னப் புள்ள இல்ல அவளுக்கு அத எப்புடி பக்குவமா உங்கிட்ட சொல்றதுன்னு தெரியல….. நாளக்கே பாரு மச்சான்னு வந்து நிக்காளா இல்லையான்னு….”

அவள் ஏதேதோ பேசி அவனை ஒருவாறு சமாதானப் படுத்தி தூங்கச் செய்தாள். ’ஆத்தி எம்புள்ளையலுக்கு யார் கண்ணு பட்டிச்சோ....’ என எண்ணிக் கொண்டவள் மறுநாள் விடிய சுத்தி போட வேண்டும் என எண்ணிய வாறு அவளும் தூங்கப் போனாள்.

 .......தொடரும்.

கருத்துகள் இல்லை: