28 ஜூலை,2010.....
காலையில் பிரவீண் தன் மாமன் ஜோசப்புடன் ஆட்டுக்கறி வாங்க வ.உ.சி சந்தைக்கு சென்ற போது கறிக்கடையில் கசாப்பு போட்டுக் கொண்டிருந்தார் ஜெயம் மாமா…... மனிதன் வளர்வதற்கு எந்த தடையும் இல்லை என்றே ஒரே காரணத்துக்காக ஆறரை அடிக்கும் மேல் வளர்ந்த உருவம். எம்.ஜீ.ஆர் படங்களில் வில்லனாய் வரும் ஜஸ்டினை நினைவு படுத்தும் தோற்றம். சவரம் செய்ய செலவளிப்பதில்லை என சத்தியம் செய்ததை போல் முடியும், தாடியும் வளர்த்திருந்தார். நல்ல பஞ்சு மிட்டாய் நிறத்தில் இருக்கும் உள்பனியன் தெளிவாய் தெரியும் அளவுக்கு நான்கு பொத்தான்கள் வரை அணியாமல் முழுக்கை சட்டையை முழங்கைக்கு மேல் மடிப்பாக இல்லாமல் கசங்கலாக ஏற்றியிருக்கும் அலட்சியம் என ஐம்பது வயதிலும் டெரர் கெட்டப்பிலே இருந்தார்.
பிரவீணையும்,ஜோசப்பையும் கண்டதும் தனது கரகரப்பான குரலில் “என்ன ஜோசப்பு மருமகனோட காலங்காத்தால கறி வாங்க வந்திருக்காப்ல தெரியுது….? மருமகப்புள்ள எப்படி இருக்கீரு? என்னப்பா வாலிபப் புள்ள இப்படியா தவங்கிப் போயிருக்கிறது?”
“நல்லா இருக்கேன் மாமா….. நீங்க எப்புடி இருக்கீங்க?”
“ஓடுதுப்பா….. ஜொஸியம்மே எப்படி இருக்காங்க? நீ வந்ததே அவுகளுக்கு தெம்பாயிருக்கும்….. நல்லா பாத்துக்கையா….. என்ன ஜோசப்பு நான் சொல்றது? இனி நம்ம காலமெல்லாம் முடிஞ்சது இவுங்க தானப்பா இனிமே…..”
“அதென்ன உங்களோட என்னையும் சேத்து கிட்டீங்க….. நான் இளமையா தான இருக்கண்ணே?”
“ஆமப்பா….. நீ மைனருதான்…… மருமகப்புள்ள உங்க அத்தக்காரி கிட்ட சொல்லி ஒம் மாமனுக்கு ஒரு சோடி பாக்க சொல்லு?” என்றபடி பெருங்குரலெடுத்து ’கபகப…. வென’ சிரித்தார்.
“ஜெயண்ணே….. சாப்ஸ் கறி ஒரு கிலோவும்….. எலும்பு கறி ஒரு கிலோவும் போடுங்க…. நல்லா எளங் கறியா பாத்து போடுங்க…..”
“உம்மாமனுக்கு இன்னும் எளங் கறி கேக்குது பாருப்பா…..” மீண்டும் ‘கப கப….’
“ஜெயண்ணே உங்களுக்கு வெவஸ்தையே கெடையாதா….. மருமகப்புள்ளகிட்ட என்ன பேசுறதுன்னு….?”
“சும்மா தமாஷ் தானடே…..” என்றபடி கறி வெட்டுவதில் மும்முரமானார்.
ஜெயம் மாமா…..
சின்னக் காம்பவுண்டிற்கு எதிராக இருந்த டேவிட்டுக்கு
சொந்தமான இடம் முன்பு காலிமனையாக இருந்த போது அதில் ஒரு மூலையில் சிறிய ஓட்டுச் சாய்ப்பு வீடு போட்டு தனது மனைவி மகனோடு வாழ்ந்து வந்தார். அவர் டேவிட் சொல்கிற வேலைகளையெல்லாம் சிரமேற் கொண்டு செய்து குடுப்பார். அதேபோல் சார்லஸ் தியேட்டரிலும்
பகலில் பத்துமணிக்கு மேல் டிக்கெட் கிழிக்க
வைக்க….. கூட்டத்தை ஒழுங்கு படுத்த என சிறுசிறு வேலைகள் பார்க்க
போய்விடுவார்.
ரஜினி,கமல் போன்றவர்களின் திரைபடங்களுக்கு மக்கள் கூட்டம் முண்டியடித்த போதும்
16-ஆம் காம்பவுண்ட் வாசிகள் எந்தவித சிரமமுமின்றி பால்கனி டிக்கெட்டுகளில்
குடும்பத்தோடு படம் பார்த்து வர ஜெயமாமா வழிசெய்திடுவார். அதேபோல் 16-ஆம் காம்பவுண்ட் சிறுவர்களை அவர்களது விடுமுறை நாட்களில் மொத்தமாய்
அழைத்து சென்று சார்லஸ் தியேட்டரில் படம் பார்க்க வைத்து பத்திரமாய் கூட்டி வந்து
வீட்டில் விடுவார்.
சார்லஸ் தியேட்டர்.....
தூத்துக்குடியின் பிரம்மாண்டமான அடையாளங்களில் ஒன்றாய்......
அரைநாற்றாண்டுக்கும் மேலாக தூத்துக்குடி மக்களின் பிரதான பொழுதுபோக்கு அரங்கமாய்
வி.இ.ரோட்டில் இருந்தது. ”தென்னகத்தின் தாஜ்மஹால்” என அதை வர்ணிப்பர்.
ஆம்!!! உண்மைதான்.... பெங்களூரின் பிருந்தாவன் கார்டனின் முகப்பைப் போல்
செயற்கை நீர்வீழ்ச்சி, வண்ணமலர்ச் செடிகளின் அணிவகுப்பு என அத்தனை அலங்காரமாய் இருக்கும் சார்லஸ் தியேட்டரின் முகப்பே.
வாகனங்கள் நிறுத்த அத்தனை விஸ்தாரமான இடத்தை ஒருஅடி ஆக்கிரமிப்பு கூட இல்லாமல்
காலியாக விட்டிருப்பர். அந்த பிரம்மாண்டமான திரையை காண தரைதளத்தில் பெஞ்சு
டிக்கெட்டும், தரை டிக்கெட்டும் வழங்கப்படும். மேல் தளத்தில் சேர் டிக்கெட்.
அதேபோல் குடும்பமாய் தனியாய் அமர்ந்து பார்க்க ஷூவடிவிலான பால்கனி டிக்கெட்டுகளும்
உண்டு. வெறும் வியாபாரத்திற்காக மட்டுமல்லாமல் சினிமாவின் மீதிருந்த தனது
அளப்பெரிய காதலினால் சேவியர் மிசியரால்
கட்டப்பட்டது அந்த திரையரங்கம். அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலான
வெள்ளித்திரையின் உச்சநட்சத்திரங்கள் பலரும் வந்துபோன அரங்குகளில் அதுவும்
ஒன்று.....
சில ஆண்டுகளுக்கு முன்னால்....
சார்லஸ் தியேட்டர் கடன் பிரச்சனையின் காரணமாய் மிசியரின் கையைவிட்டு போய்
தற்போது அது இடிக்கப்பட்டு ஷாப்பிங் காம்ப்லெக்ஸாக உருவெடுத்துள்ளது.
எதையும் எளிதாய் கடந்து போகவும்..... மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும்.... செய்யும்
மனதே காலத்தால் அழியா நினைவுகளையும் தன்னகத்தே வைத்து இருக்கிறது.
பிரவீண் உட்பட அவன்
வயதொத்தவர்கள் சிறுவர்களாய் இருந்த போது ஜெயமாமா தான் அவர்களுக்கு பூச்சாண்டி. வீட்டுக்கு
அடங்காதவர்கள் எல்லாம் அவரை கண்டவுடன் பொட்டி பாம்பாய் மாறி விடுவார்கள். அவர்களே கொஞ்சம் வளர்ந்ததும் ஜெயமாமா அவர்களுக்கு அசாத்தியங்களை கூட
அநாயசமாய் செய்து காட்டும் முரட்டு சாகசகாரனாய் தெரிய ஆரம்பித்தார். இதோ இப்போது அவர்களது வாலிப பருவத்தில் கேளிக்குரிய மனிதனாய் மாறிப்போனார்.
ஆனால் அவர் ஒருபோதும் மாறியதில்லை. உண்மையில்
எந்த பாசாங்கும் செய்யத்தெரியாத….. பேராசைகளற்ற….. முரட்டு முகமூடி அணிந்த குழந்தை அவ்வளவே!!!
ஸ்வீட்டி அன்று
கல்லூரிக்கு செல்லவில்லை. ஏதேதோ காரணங்கள் சொல்லி வீட்டிலேயே இருந்துவிட்டாள்.
பிரவீணுக்கு தடபுடலாய் ஜோசப்பின் வீட்டில் சோபியா விருந்து தயார் செய்து
கொண்டிருந்தாள். ஜொஸியம்மே கனியாச்சியின் வீட்டுக்கு முந்தைய நாள் கதைகளை பற்றி
பெருமை அடித்துக் கொள்ள சென்றிருந்தாள். ஜோசப்பும் இரண்டு நாட்களாய் விடுப்பிலே
இருந்துவிட்ட படியால் தமது ஷிப்பிங் கம்பெனிக்கு சென்று தலையை காட்டிவிட்டு மதியம்
சாப்பாட்டிற்கு வருவதாய் உறுதியளித்து சென்றிருந்தார்.
பிரவீண் அவனது பாட்டி வீட்டில் தனியாக தனது லேப்-டாப்பை
நோண்டிக் கொண்டிருந்தான். ஸ்வீட்டி தற்செயலாய் வருவது போல் அங்கு
வந்தாள்.....சற்று நேரம் மௌனமாய் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன்
தற்செயலாய் நிமிர்ந்து அவளைப் பார்த்ததும்.....
“என்ன மச்சான் ஆச்சிய காணோம் எங்க போயிருக்காக....?”
பிரவீண் தன் லேப்-டாப்பை மூடியவாறு....”அப்ப நீ ஆச்சியை
தேடித்தான் வந்தியா....?”
“ஆமோ....
ஆச்சி கூட உக்காந்து பேசுறதுக்குதானே இன்னக்கி லீவே போட்டேன்....” என முனுமுனுப்பாய்
ஆனால் அவனுக்கு கேட்கும் விதமாகவே முனங்கினாள்.
“என்ன சொன்ன....?”
“ஒண்ணுங் கேக்கலையாக்கும்....”
“எல்லாம் கேட்டிச்சு....”
“மச்சான் நான் ஒண்ணு கேப்பன்..... நீங்க உண்மைய சொல்லனும்?”
“கேளு....”
“ஆமோ இத்தன வருசத்துல என்னைக்காவது என் நெனப்பு உங்களுக்கு வந்திருக்கா.....?”
“ஏன் இப்புடி கேக்குற.....?”
“பதில் சொல்லுங்க மச்சான்....”
அவன் எழுந்து அவள் அருகில் வந்து நின்று கொண்டு”ம்....” என்றான். அவனது
அந்த திடீர் நெருக்கம் அவளை ஏதோ செய்தது. ஆனாலும் சுதாகரித்து கொண்டு “பொய்
சொல்லாதிங்க மச்சான்....” என்றாள்.
“நெனப்புல என்னடி
இருக்கு இனி நீதான என் வாழ்க்க பூரா இருக்க போற.....” என்றபடி அவளது கைகளை பற்றிக் கொண்டான். அவளுக்கோ மூச்சு திணறியது. அவனது அந்த
திடீர் நெருக்கம் அவளை நிலைகுலைய செய்தது.
ஆனாலும்” மச்சான் இதெல்லாம் தப்பு.... வேண்டாம்” என கைகளை விடுவிக்க விரும்பாமல் சொன்னாள்.
“அப்ப நீ என் வாழ்க்க பூரா கூட இருக்க மாட்டியா....?”
“நான் அத சொல்லல.....
நீங்க இப்ப புடிச்சிட்டு இருக்கிறத சொன்னே.....”பட்டென்று அவளது கைகளை விடுவித்தவன்.....”இப்ப சரியா.....” என்றான். ஆவலும் ஏக்கமுமாய் அவனை பார்த்தாள். அவனது கண்கள் அவளை ஊடுருவிக்
கொண்டிருந்தது.
“என்ன இப்புடி
பாக்கீங்க.....”
“இப்புடின்னா.....?”
”ஆங்..... ஆளையே திங்கிற மாறி.....”
“ஏன் திங்கக் கூடாதா....?” மௌனம் படர்ந்தது. அவளை வெட்கம் தின்றது.
அதற்குமேல் தர்க்கம் செய்ய முடியாமல் நாவும் வறண்டு போனது. அவன் மெல்ல அவள் கைகளை
பற்றி உள் அறைக்குள் கூட்டிச் சென்றான். அவளும் பதிலேதும் கூறாமல் அவனோடு
சென்றாள். சுவற்றோரம் அவளை நிற்க வைத்து தன் கைகள் இரண்டுக்குமிடையே அவளை
சிறைபிடித்தான். அவள் மேல் பட்டும் படாமலும் நெருக்கமாய் நின்றான். அவள் முடிகளை
கோதி அவளது காதின்
இடுக்குகளில் சொருகியபடி அவள் கண்களை உற்று நோக்கினான். அவள் தன்னையுமறியாமல் வேகமாய்
மூச்செறிய துவங்கினாள். அவளது இமைகள் திரையிடத் துவங்கின. அவன் தனது கைகளைக் கொண்டு அவளது கன்னங்களைப் பற்றி தன்னருகே கொண்டு
சென்றபோது..... அவள் தன் கைகளால் அவனது கரங்களைப் பற்றிக்கொண்டாள். அவனோ உதடுகளால்
அவளை பற்றிக்கொண்டான்....... தேன்னெடுக்கும் வண்டுகளாய் மாறிப்போனார்கள். காலம்
அவர்களை விட்டு சென்றது.
ஒருவழியாய்
மீண்டும் காலம்பற்றி நினைவுகள் மீண்ட போது..... மொழிகள் அழிந்து மௌனத்தின்
சர்வாதிகாரம் கோலோச்சி இருந்தது. தன்னை விடுவித்து கொண்டு நகர
முயற்சித்தவளை.....பற்றி இழுத்து மீண்டும் அணைத்துக் கொண்டான். முதலில்
திகைத்தவள்.....அவனே எதிர்பாரா வண்ணம் அவனை அழுத்தமாய் பற்றி.... இறுகஅணைத்து.....
அவனது கழுத்தில் வேகமாய் முத்தமிட்டாள்....அவனது பிடிகள் தளர..... தன்னை
விடுவித்துக் கொண்டு..... சிறகசைத்து பறக்கத் துவங்கினாள்.....
பட்டாம்பூச்சியாய்!!!!
காலத்தின் ஒவ்வொரு
நொடிக்குள்ளும் புதைந்து போயிருக்கும் நமக்கான ஆச்சர்யங்களையும், அதிசயங்களையும்
நமது அறியாமையால் எதிர்கொள்ளும் போதே வாழ்க்கை சுவாரஸ்யமானதாய் போகிறது. எதிர்காலத்தின் ரகசியங்கள் கட்டுடைக்க
படுமாயின் வாழ்க்கை பாரமாகிப் போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக