புதன், 7 டிசம்பர், 2011

விழிப்பாய் தமிழா......




எனக்கு வியப்பாக இருக்கிறது…….!!! எங்கிருந்தோ புற்றீசல்களைப் போல விவசாய குடிகளின் இன்னல் போக்க துடிக்கும் இரட்சகர்களாக மாறிப்போயிருக்கிறார்கள் இங்கிருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளும், ’வாழ்க-ஒழிக’ குரலெழுப்பிகளும். ஊடகங்களின் சமீபத்திய பொம்பலாட்டதுக்கு இரையாகிக் கொண்டிருப்பது தமிழக-கேரள எல்லையோர அப்பாவிகள்.


முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்க அளவில் இரு மாநில அரசுகளிடத்தே இருவேறு கருத்தாக்கம் எழுந்தவுடனே அதை “முல்லை பெரியாறு விவகாரம்” என விஷயத்தை விகாரப் படுத்தியது ஊடகங்கள் தான். தற்போது விவகாரமாகிப் போன விஷயத்தை செய்தியாக்கி கொண்டிருப்பவர்களும் அவர்கள் தான்.

இனி பரபரப்பான விற்பனையில் தமிழக கேரள மக்களின் உறவும்,சர்சைகளும் இருக்கும். நாம் இந்த தொடர் அரசியலை புரிந்து கொள்ளவில்லையெனில் வழக்கம் போல் விழியிருந்து குருடராய் வீழ்வதை தவிர வேறு வழியில்லை……


1979ல் கேரள அரசுக்கு அணையின் பாதுகாப்பு நிலை குறித்து எழுந்த ஐயத்தின் விளைவாக அப்போது 152 அடியில் சேகரிக்கப் பட்டு வந்த நீரின் அளவை 136அடியாக குறைத்தது. அப்போதைய தமிழக அரசு கேரள அரசின் ஐயத்தை போக்கும் பொருட்டு அணையை பலப்படுத்த சில நடவடிக்கைகளை செய்து நீரின் அளவை உயர்த்த கோரியது. ஆனால் கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்தவில்லை.


இருமாநில அரசுகளும் தத்தம் கருத்துகளில் உறுதியாக இருந்தபடியால் விஷயம் உச்சநீதி மன்றத்தில் வழக்கானது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை ஏற்கவில்லை.

அதேசமயம் கேரள அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தரவும் மறுக்கவில்லை. கேரள அரசின் நிலைபாடானது முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டி முடித்து அதன் பின்னர் நீர் தேக்க அளவை உயர்த்தி கொடுக்கலாம் என்பதாகவே உள்ளது.

ஆனால் தமிழகத்தின் நிலைபாடு…. முல்லை பெரியாறு அணையே வலுவாக உள்ள போது ஏன் நீர் தேக்க அளவை உயர்த்த புதிய அணை கட்ட வேண்டும்? என்பதே.

ஒரே தேசத்தை சார்ந்த இருமாநில அரசுகளுக்கு இடையேயான கருத்து மாற்றத்தை இருவேறு தேசிய இனத்துக்கு இடையேயான பிரச்சனையாக உருமாறியது எப்போது?

எவர் ஊதினாலும் வீங்கவும்….. எவர் உதைத்தாலும் பறக்கவும் நாம் என்ன வெறும் காற்றடைத்த பலூனா?

நம்மிடையே உள்ள மிகப்பெரும் பலவீனம் எந்தவொரு பிரச்சனையையும் நாம் உணர்வுபூர்வமாகவே அணுகுவது தான். சக உயிர்களிடத்தே….. மனிதன் தன்னை உயர்திணையாக மாற்றிக் கொள்ள உதவியது அவனது பகுத்து ஆராயும் அறிவு தான். ஆனால் ஏனோ இது போன்ற நேரங்களில் நாம் எதையும் பகுத்து ஆராய்வதில்லை.

நிஜமாகவே விவசாயத்தின் மீதும் விவசாயிகள் மீதும் நமக்கு இத்துணை பற்று இருப்பது உண்மையானால் முல்லை பெரியாறு அல்ல நாம் கையில் எடுக்க வேண்டிய முதல் பிரச்சனை.

இனம்,மொழி பேதங்களற்று தம் உயிரையும், இளமையையும், நல்வாழ்க்கையையும் இழந்து நமக்காக நம் முந்தைய தலைமுறையினர் போராடிப் பெற்ற ஜனநாயக அரசியலை இன்று தம் சுயநலத்திற்காகவும், பதவிக்காகவும் பெருமுதலாளிகளிடத்தே அடகு வைத்துவிட்டு விவசாயிகளிடமிருந்து “பொருளாதார மண்டலங்கள்” என்னும் பெயரில் நிலத்தை பறிக்கும் கயவர்களை நோக்கி அல்லவா நாம் முதலில் பாய்ந்திருக்க வேண்டும்?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே….. தமிழகத்தில் அப்போது மன்னராட்சியாக இருந்த போதும் கூட தம் குடிகளுக்காக அவர்கள் கட்டிய நீர் தேக்கங்களும், நீர் நிலைகளுமான கணக்கற்ற கண்மாய்களும், குளங்களும் கடும் வறட்சியிலும், கோடையிலும் தமிழனின் தாகம் தீர்த்து வந்ததே அவைகள் மக்களாட்சியாக மாறிப் போனபின் அதுவும் குறிப்பாக புதிய பொருளாதார கொள்கையை நாம் கடைபிடிக்க துவங்கியதும் அனைத்தும் பட்டா நிலங்களாக மாறிப்போனதே அப்போது எங்கே போயிருந்தது இந்த ரௌத்திரம்?

மலட்டு விதைகளையும், இரசாயனமிக்க உரத்தையும் விற்பனை செய்வதே பசுமை புரட்சியாக அறிவித்து விவசாய குடிகளை ஏமாற்றி அவர்களை கடனாளிகளாக்கி….. மண்ணை மலடாக்கி…. உணவை விஷமாக்கி நம் கண்களை விற்று சித்திரம் வாங்கச் செய்த போதல்லவா நாம் கிளர்ந்து எழுந்திருக்க வேண்டும்?

விஷத்திற்கு கூட இங்கு காப்பிரைட் உரிமை உண்டு. ஆனால் தான் விளைவித்த பொருளுக்கு விலை வைக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகளை சுரண்டுப் பிழைக்கும் அட்டைப் பூச்சிகளுக்கு எதிராகவல்லவா நாம் கோஷம் எழுப்பியிருக்க வேண்டும்?

ஆனால் இதுவெல்லாம் நமக்கு பிரச்சனையாகவும் தெரியாது…….நாம் நம்மை தமிழனாகவும் உணர்வதில்லை. ஆனால் அதுவே நம் அண்டை மாநிலத்தானோடு ஒரு பிரச்சனையென்றால் உடனே நாம் தமிழனாகி விடுவோம்.

கொம்வு சீவப்பட்ட காளைகளாக கூட்டத்தில் பாய்வதில் தானே அத்துணை பெருமை நமக்கு. மறந்துவிட வேண்டாம்….. காளைகளின் வீரம் எத்தகையதாயினும் ஒருபோதும் காளைக்கு அது பயன் தரா மாறாக அது மேய்பானின் அடிமையே!!!