2010,ஜூலை 26.....
அதிகாலை3.00மணி.....
தூக்கம் பிடிக்காமல் கண்களை மூடியபடியே ஒருவித தவிப்போடு பாயில் புரண்டு கொண்டிருந்தாள் ஜொஸி. அவளது மனம் முழுவதையும் அவளது பேரன் பிரவீணின் வருகையே ஆக்கிரமித்து இருந்தது. வயது எழுபதை கடந்துவிட்ட போதிலும் அவள் எந்தவித நோயுமின்றி ஆரோக்கியமாகவே இருந்தாள். ஒருநாளில்....ஒருபொழுதில்.... அவளை யாரும் சோம்பேறித்தனமாய் கண்டிருக்க மாட்டார்கள். எப்போதுமே சுறுசுறுப்பாய் அங்குமிங்கும் ஓயாது அலைந்த வண்ணமாய் இருப்பாள். தனது உடல் குறித்து எப்போதும் அதீத அக்கறையோடே இருப்பாள். காரணம் தான் படுக்கையில் விழுந்து தனது மகனுக்கோ அல்லது மருமகளுக்கோ பாரமாய் விடக்கூடாது என்பதே!
தனது அன்றாட வாழ்வில் தனக்கென்று ஒரு ஒழுங்குமுறை அட்டவணையை வகுத்துக் கொண்டு அதை தவறாது பின்பற்றும் வழக்கத்தை இயல்பாக்கி கொண்டிருந்தாள். அவள் விழிக்கும் போது அதிகாலை 5.00மணி ஆகவில்லை என்றால் கடிகாரத்தில் ஏதோ பிசகு உள்ளதென்றே அர்த்தம். எழுந்த அரைமணி நேரத்தில் தனது காலைப் பணிகளை நிறைவு செய்துவிட்டு காபி லோட்டாவோடு ஜெபமாலை உருட்டத்துவங்குவாள்.
தேவமரியாளுக்கு அருளை வழங்குவதும்,அவளிடமே கருணைக்கு இறைஞ்சுவதுமாய்.....இடையிடயே பரலோகப் பிதாவையும் ஒருவழி செய்வதுமாய் ஜெபமாலை சொல்லி முடிப்பாள். ஜெபமாலை முடித்த கையோடு கிளம்பி கோயிலுக்கு இரண்டாம் பூசைக்கு சென்றிடுவாள். அந்தோணியார் கோயிலில் பூசைமுடிந்து வீடு திரும்பிய பின்னே தான் மற்றைய அன்றாட பணிகளை பார்ப்பாள். முன்பு அவளது மகள் இருந்த வீட்டில்..... அதாவது முதல் வீட்டில் இப்போது அவளது மகன் ஜோசப் தனது மனைவி மகளோடு இருக்கிறார். ஜொஸி மட்டும் தனியாக அவளது வீட்டில் இருக்கிறாள். பல சமயங்களில் அவளது பேத்தி ஸ்வீட்டி அவளோடு தங்குவாள்.சில நேரங்களில் அவளது பாட்டியோடு செல்லச் சண்டைகள் போட்டால் அன்று மட்டும் தனது வீட்டிலே தூங்கிடுவாள்.
ஸ்வீட்டி….. ஜோசப்பின் ஒரே செல்ல மகள். இருப்பத்தியொரு வயது இளங்குமரி. செயிண்ட் மேரிஸ் கல்லூரியில் மூன்றாமாண்டு கணிதம் படித்து வருகிறாள். நல்ல கோதுமை நிறம். அவளை ஒருமுறை சந்தித்த கண்கள் மூளையின் செயல்பாட்டில் இருந்து விடுபட்டு நம் அனுமதியின்றி மீண்டும் மீண்டும் அவளை பார்க்க துடிக்கும் பேரழகி. அவளது வஞ்சகமில்லா வளைவு நெளிவுகள் நமக்குள் உண்டாக்கும் விளைவுகள் அபாயகரமானவை.
ஜொஸியின் தயவால் ஸ்வீட்டியின் நினைவுகளை முழுவதுமாய் பிரவீண் ஆக்கிரமித்து இருந்தான். வழக்கமான பாட்டிக்கதைகளில் பூதங்கள்,பஞ்சவர்ணக்கிளிகள்,நாடாண்டமன்னர்கள்,காடுகள்,கோட்டைகள்,விதவிதமான பட்சிகள் என ஏதேதோ நிரம்பியிருக்கும். ஆனால் ஸ்வீட்டிக்கு வழங்கப்பட்ட பாட்டி கதைகளில் ’பிரவீண்….பிரவீண்….பிரவீண்’ மட்டுமே நிறைந்திருந்தான். அதனால் ஒரு கட்டத்தில் அவளே தன் பாட்டியிடம்”ஆச்சி….ஆச்சி….மச்சான் கத சொல்லு”ன்னு கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டிருந்தாள்.
ஜொஸியின் தயவால் ஸ்வீட்டியின் நினைவுகளை முழுவதுமாய் பிரவீண் ஆக்கிரமித்து இருந்தான். வழக்கமான பாட்டிக்கதைகளில் பூதங்கள்,பஞ்சவர்ணக்கிளிகள்,நாடாண்டமன்னர்கள்,காடுகள்,கோட்டைகள்,விதவிதமான பட்சிகள் என ஏதேதோ நிரம்பியிருக்கும். ஆனால் ஸ்வீட்டிக்கு வழங்கப்பட்ட பாட்டி கதைகளில் ’பிரவீண்….பிரவீண்….பிரவீண்’ மட்டுமே நிறைந்திருந்தான். அதனால் ஒரு கட்டத்தில் அவளே தன் பாட்டியிடம்”ஆச்சி….ஆச்சி….மச்சான் கத சொல்லு”ன்னு கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டிருந்தாள்.
ஸ்வீட்டி பருவம் அடைவதற்கு முன்பே பிரவீண் கப்பல் ஏறிவிட்டபடியால் அவனுக்கு அவள் குறித்த பெரிய கற்பனைகள் ஏதும் இருக்கவில்லை. அவனது ஆச்சிதான் அவனிடம் போனில் பேசும்போதெல்லாம் ஸ்வீட்டியைப் பற்றி சொல்வாள். அவ்வப்போது அவளையும் அவனிடம் பேச வைத்துள்ளாள். அப்போதும் அவன் பெரும்பாலும் அவளது படிப்பு குறித்தோ அல்லது அவனது அம்மாச்சியின் உடல் நலன் குறித்தோ தான் அவளிடம் பேசியுள்ளான். ஆனால் ஸ்வீட்டிக்கு அவனிடம் பேசிவிட்டு வைத்த ஒவ்வொரு முறையும் ஏதேதோ எண்ணங்களும், பிம்பங்களும் தோன்றி மறையும் அவளது மார்புக்குள் ஏதோ பிசைவது போலவும் பல சமயங்களில் தோன்றியதுண்டு. அவனிடம் பேசிவிட்டு வைத்த ஒருசில நிமிடங்களுக்கு அவள் ஏதோ ஒரு மாய உலகில் சஞ்சீகரித்து விட்டே மீண்டும் இயல்புக்கு திரும்புவாள். கடந்த ஒருவாரமாகவே ஸ்வீட்டியின் வீட்டில் பிரவீணின் வருகை குறித்த பேச்சாகவே இருந்தது. அவளும் நாட்களையும், மணித்துளிகளையும் எண்ணத்துவங்கியிருந்தாள்.
ஜொஸியின்…… வாழ்க்கை காத்திருப்புகளால் நிரம்பியது. தன் வாழ்வின் பெரும் பகுதியை தவிப்பும், காத்திருப்புமாகவே கழித்தவள். அவளது தாய்வழித் தாத்தா சி.பி.பர்னாந்து பழையகாயலில் மிகப்பெரும் செல்வந்தராய் இருந்தார். அவருக்கு மொத்தம் பதிமூன்று பிள்ளைகள். அதில் மொத்தம் ஆறு ஆண்கள்,ஏழு பெண்கள். அவர்களில் ஜொஸியின் தாயார் மங்களம் ஏழாவது பிள்ளை. செல்வச்சீமான் சி.பி.பர்னாந்து ஊரும் உறவும் வியக்கும் படி தனது மகள் மங்களத்தை தூத்துக்குடியில் அப்போதிருந்த பெரும் செல்வந்தர்களில் ஒருவரான தன்சிலாஸ் பொன்சேகாவின் மகன் இம்மானுவேல் பொன்சேகாவிற்கு திருமணம் முடித்து வைத்தார். வாழ்வாங்கு வாழ்வாள் என எண்ணியவள் திருமணமாகி ஒரே வருடத்தில் ஆறுமாத கைகுழந்தையோடு(ஜொஸி) கைம்பெண்ணாய் வந்துநின்றாள். கலங்கிப்போனார் சி.பி.பர்னாந்து. அப்போது தூத்துக்குடியின் ஆயராய் ரோச் ஆண்டகை இருந்தார். அவர் ஒருவகையில் சி.பி.பர்னாந்துக்கு உறவும் கூட.
சி.பி.பர்னாந்தும் தனது எல்லா குடும்ப விவகாரங்களிலும் அவரை கலந்தே முடிவு செய்யும் பழக்கம் கொண்டிருந்தார். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் அப்போது பேராசிரியராய் இருந்த டிமெல் அவர்கள் சி.பி.பர்னாந்தின் மற்றொரு மருமகன் ஆவார். ரோச் ஆண்டகையும்,பேராசிரியர் டிமெல் அவர்களும் சேர்ந்து அளித்த ஆலோசனையின் பெயரில் தமது மகள் மங்களத்திற்கு மறுமணம் செய்துவைக்க சி.பி.பர்னாந்து முடிவு செய்தார். அவரது செல்வச்செழிப்பும் அதற்கு உதவியது. சி.பி.பர்னாந்திற்கு கொழும்பு நகரில் சொந்தமாய் இருந்த துணிக்கடைக்கு அருகே இருந்த ஓட்டலில் பொன்னையா ரொட்ரிகோ என்றொரு புன்னைக்காயலை சேர்ந்த பையன் வேலை செய்துகொண்டிருந்தான். பையன் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவனாய் இருந்தாலும் நல்ல உழைப்பாளியாகவும், பொறுப்பானவனாகவும் இருந்தான். ஆதலால் அவனையே அவரது மகள் மங்களத்திற்கு மறுமணம் செய்து வைத்தார்.
என்னதான் மறுமணம் செய்து கொண்டாலும் அப்போது மாப்பிள்ளை வீட்டாருக்கு கொஞ்சம் நெருடலாய் இருந்தது மங்களத்தின் மகள் ஜொஸி பற்றிதான். ஆனால் யாருக்கும் அதைப்பற்றி சி.பி.பர்னாந்திடம் பேச துணிவு வரவில்லை. பொன்னையா ரொட்ரிகோவின் தந்தை ராஜேந்திர ரொட்ரிகோவும் இதில் தயக்கம் காட்டி நின்ற போது. சி.பி.பர்ணாந்துக்கு அவர்களது நிலை புரிந்து அழுத்தமாக அனைவரிடமும் சொல்லி விட்டார். “நீங்களாய் கேட்டாலும் இவளை தருவதற்கில்லை…….ஏனெனில் இவள் என் பேத்தி அல்ல எனது பதினான்காம் பிள்ளை…..”என்று சபையிலே அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டார்.
என்னதான் செல்வச்செழிப்பான தாத்தாவும் பாட்டியும் வளர்த்தாலும் பெற்ற தாயின் அன்புமின்றி, தந்தையின் அரவணைப்புமின்றி வளர்வது எத்தனை கொடுமை? பிறந்ததிலிருந்து தந்தை முகம் பார்த்தரியாத வேதனை ஒருபுறமென்றால் மறுபுறம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தாயிருந்தும் தாய்மை கிடைக்காத வலியோடும் வளரத்துவங்கினாள் ஜொஸி. எப்போதவது தன் தந்தையை பார்க்க மங்களம் வரும்போதே பெற்றவளை பார்க்கவும், அவள் மடியில் தவழ்ந்து தன் ஆசைகளை தீர்த்துக் கொள்ளவும் ஜொஸியால் முடிந்தது. ஆம்!! குழந்தைப் பருவத்தே அவளது காத்திருப்பு வாழ்க்கை துவங்கியது.....
பேத்தியின் கண்ணசைவுக்கு மாத்திரமே காத்திருந்தார் சி.பி.பர்னாந்து. அவளது கனவுகளை நினைவாக்குவதையே தம் வாழ்வின் முதல் பணியாய் கொள்ள துவங்கினார். ஆசையாசயாய் பேத்தியை பரதநாட்டியம் பயிலச் செய்தார். ஊரே மெச்ச ஆயர்.ரோச் ஆண்டகையின் தலைமையில் அரங்கேற்றமும் செய்து அழகு பார்த்தார். பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து கல்வி பயிலச் செய்தார்.
காலம் பூக்க காய்கனிந்தது….. தம் பார்வை விழுமுன்னே அவளுக்கு ஒரு கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்தார். பதிமூன்று பிள்ளைகள் பெத்தவரானாலும் பேத்தியை பிரிய மனமின்றி தனது அண்ணனின்(சின்னைய்யா மகன்) மகன் சூசைப்பர்னாந்துக்கே மனமுடித்து வைத்தார்.
சூசைப்பர்னாந்தின் குடும்பம் அத்தனை வசதியானதில்லை.ஆனால் சூசைப்பர்னாந்து கடுமையான உழைப்பாளி. மாலுமியாய் இருந்தார். ஒருமுறை கப்பலுக்கு போனால் தொடர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் வரையாகும் திரும்பி வர. இந்தச் சமயத்தில் சி.பி.பர்னாந்தும் இறந்து போனார். ஜொஸி குடும்பத்தோடு தூத்துக்குடியில் குடியேறினாள். ஜெயா…..ஜோசப் இருகுழந்தைகளுக்கும் இந்த காலகட்டத்தில் தாயாகிப்போனாள். திருமணத்துக்கு பின்னும் அவளது வாழ்வு கணவனுக்கான காத்திருப்புகளாலே கழிய துவங்கியது.....
சூசைப்பர்னாந்தின் குடும்பம் அத்தனை வசதியானதில்லை.ஆனால் சூசைப்பர்னாந்து கடுமையான உழைப்பாளி. மாலுமியாய் இருந்தார். ஒருமுறை கப்பலுக்கு போனால் தொடர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் வரையாகும் திரும்பி வர. இந்தச் சமயத்தில் சி.பி.பர்னாந்தும் இறந்து போனார். ஜொஸி குடும்பத்தோடு தூத்துக்குடியில் குடியேறினாள். ஜெயா…..ஜோசப் இருகுழந்தைகளுக்கும் இந்த காலகட்டத்தில் தாயாகிப்போனாள். திருமணத்துக்கு பின்னும் அவளது வாழ்வு கணவனுக்கான காத்திருப்புகளாலே கழிய துவங்கியது.....
ஆனாலும் அந்த நெடிய காத்திருப்பின் வலியை ஒவ்வொரு முறை சூசைப்பர்னாந்தின் வருகையின் போதும் ஓரளவுக்கேனும் ஆற்றிக் கொள்ள முடிந்தது. அந்த சின்ன்ஞ் சிறு ஆறுதலும் பேரிடியாய் மாறி அவளை தாக்கியது..... சூசைப்பர்ணாந்து திடீரென்று மன அழுத்தத்தால் முடங்கிப் போய் கரை கண்டபோது. ஒரு கடற்பயணத்தின் போது எப்போதும் அவரோடவே திரியும் மாலுமி ஒருவன் திடீரென்று தற்கொலை செய்து கொண்டான். அந்த நிகழ்விற்கு பின் ஏற்பட்ட வெறுமையால் அவர் மன அழுத்தத்திற்கு உள்ளானார். திரைகடலோடி திரவியத்தோடு திரும்புவார் என காத்திருந்த ஜொஸிக்கு தன்னிலை மறந்த நிலையில் கணவன் திரும்பி வந்தபோது நொந்தேபோனாள்.
சி.பி.பர்னாந்தால் சீதனமாக அவளது கல்யாணத்தின் போது கொடுக்கப்பட்ட வயல்வெளி,உப்பளம்,நகை நட்டுகள் என கொஞ்சம் கொஞ்சமாய் கரையத் துவங்கியது. மந்திரம் பாதி…..மருத்துவம் மீதி என எல்லாம் கரைந்த நிலையில் சூசைபர்ணாந்து கொஞ்சம் கொஞ்சமாய் இயல்புக்கு திரும்பினார். அப்போது கிட்டதட்ட அவளது குடும்பம் வறுமையில் சிக்குண்டிருந்தது. பிள்ளைகளும் பிராயத்தை தொட்டிருந்தனர்.
சூசைப்பர்ணாந்து மீண்டும் கப்பலுக்கு செல்ல ஆரம்பித்தார். எல்லாம் சரியாகி பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி,பேரப்பிள்ளைகள் என மகழ்ச்சி தென்றல் மெல்ல வீசத்துவங்கியது. தனது அந்திம காலத்திலாவது நிம்மதியாய் காத்திருப்புகளற்று கழியும் என ஜொஸி எண்ணிக்கொண்டிருந்தபோது தான் அவளது குடும்பத்தில் காலனின் கரங்கள் தொடர்ச்சியாக படர்ந்து மகள்…… கணவன்…… மருமகன் என தொடர் மரணங்கள் நிகழ்ந்தன. ஓரிரு வருடங்களில் பேரன் பிரவீணும் கடலுக்கு சென்றுவிட்டான். மீண்டும் அவளது காத்திருப்பு வாழ்க்கை துவங்கியது.....
அவள் வாழ்வதற்கான ஒற்றை காரணமாய் இருப்பது அவளது பேரன் பிரவீண் மட்டுமே!!! அவள் கண்மூடுவதற்கு முன்னால் தனது பேரன் பிரவீணுக்கும் பேத்தி ஸ்வீட்டிக்கும் திருமணம் முடித்து வைத்து தனது வம்சத்தை பெருகச் செய்து கண்குளிர பார்த்துவிட வேண்டுமெனவே அவள் தன் உயிரை மிச்சம் வைத்திருந்து நம்பிக்கையோடு காத்திருக்க துவங்கினாள்......
இப்படியாக காலமெல்லாம் அவள் வாழ்வு காத்திருப்புகள் நிரம்பியதாகவே மாறிப்போனது..... பிறந்ததிலிருந்து வளரும் வரை தாயின் வருகைக்காவும், அன்பிற்காகவும் ஏக்கமாய் காத்திருக்க துவங்கியவள்…… மணவாழ்வுக்கு பின் கடலோடியான தன் கணவனின் வருகைக்காக ஒவ்வொரு ஆண்டும் காத்திருக்க பணிக்கப்பட்டாள்….. இதோ இப்போது தன் பேரனின் வருகைக்காக காத்திருப்பது வரை அவள் தன் வாழ்வின் பெரும் பகுதியை காலத்தோடு மல்லுக்கெட்டியபடியே கடந்து வந்துள்ளாள். இப்போது அந்த இரவின் நீட்சி அவள் காத்திருப்பை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. ஞாயிறின் ஓளிக்கீற்றுகள் கொஞ்சம் கொஞ்சமாய் இருளை விலக்கி வானில் படரத்துவங்கியது…………..
..........தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக