வியாழன், 31 மார்ச், 2011

பட்டர் சிக்கன்....

அது ஒரு செட்டிநாடு ஓட்டல்…. நானும் என் தம்பியும் சாப்பிடச் சென்றிருந்தோம். எங்களிடம் ஆர்டர் எடுக்க ஒரு சிறுவன் வந்தான். அவன் நிச்சயம் பதின்ம பருவத்தை தாண்டியவன் அல்ல என்பதை அவனது குழந்தமுகமும், அதன் மேல் வளரத்துடிக்கும் பூனை முடிகளும் உணர்த்தியது. அது புதிதாய் திறக்கப்பட்ட ஓட்டலாதலால் நாங்கள் அப்போது தான் முதன்முறையாக சென்றிருந்தோம்.

நான் அவனிடம் “தம்பி இங்க என்னப்பா நல்லாயிருக்கும்…..?”

“சார்…புரோட்டா,பிரைடு ரைஸ், நூடல்ஸ்…..எல்லாமே இருக்கு. சார் உங்களுக்கு என்ன வேணும்…?” என மீண்டும் ஒரு கேள்வியையே பதிலாக்கினான்.

என் தம்பியிடம் நான் கேட்கவும் அவனும் ‘புரோட்டா சொல்லு….’ என்றான்.

நான் “தம்பி எங்க இரண்டு பேருக்குமே ஆளுக்கு இரண்டு புரோட்டா….அப்புறம் மட்டன்ல என்ன வெரைட்டி இருக்கு…?”

“மட்டன் எல்லாம் முடிஞ்சிட்டு சார் சிக்கன் தான் இருக்கு….” என்றான்.

”சரி….ஒரு பட்டர் சிக்கன் சொல்லு…”

“பட்டர் சிக்கன் நல்லாயிருக்கும்லப்பா…..?”

“நல்லா கிரேவியா இருக்கும் சார்….அதே சொல்லிடுறேன்….” என்றபடி சென்றான்.

அவன் சென்ற ஓரிரு நொடிகளில் மற்றுமொரு சிப்பந்தி எங்களிடம் வந்தான். அவன் நல்லா மூணு புல் மீல்சை ஒற்றை ஆளாய் கபளீகரம் செய்பவன் போல் இருந்தான்.

அவன் எங்களிடம் “சார்! ஆர்டர் சொல்லிட்டீங்களா…?” என வினவினான்.

நான் அவனிடம் நாங்கள் செய்த ஆர்டரை சொல்லியபடி “இங்க வேற என்ன ஸ்பெஷல்…..?”

“சார்….பெப்பர் சிக்கன் நல்லாயிருக்கும்…..”

“மட்டனெல்லாம் முடிஞ்சிட்டா….?”

“மட்டன்ல உங்களுக்கு என்ன வேணும்….?” எனக் கேட்டான்.

“அந்தப் பையன் மட்டன் முடிஞ்சிட்டுன்னு சொன்னான்…..அதனால தான பட்டர் சிக்கன் ஆர்டர் செஞ்சோம்….இப்ப நீங்க என்ன வேணும்னு கேக்குறீங்க….?”என்று நான் சொல்லியவுடன் அவன் வேகமாக விரைந்து சமையல் அறைக்குள் சென்றான். நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தபடியே அங்கு சமையலறைக்குள் நடப்பவற்றை பார்க்க ஏதுவாகவே இருந்தது.

அப்படி வேகமாக சென்றவன் அந்தப் பையனை ஏதோ கடிந்தபடி எங்களை நோக்கி அழைத்து வந்தான்.

“மட்டன் ஈரலும், மட்டன் குடலும் இருக்குன்னு சார்கிட்ட ஏண்டா சொல்லல….?” என பேசியபடி சட்டென்று அந்தப் பையனின் பிடரியில் அடித்துவிட்டான்.

நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. என் தம்பிதான் சுதாரித்துக் கொண்டு “ஈரலும், குடலும் வேண்டாம்னு நான் தான் சொன்னேன்….சரி வேற என்ன இருக்குப்பா….?”

அந்த இடிதடியன் முந்திக்கொண்டு “அப்படியா சார்….இங்க பெப்பர் சிக்கன் நல்லாயிருக்கும் சார்….” என்றான்.

எனக்கு அவனுடன் பேசவே பிடிக்கவில்லை. என் தம்பியே தொடர்ந்தான் “ சரி அதையே கொண்டுவாங்க….” என்றான்.

அந்தப் பையன் எங்களை பரிதாபமாக பார்த்தபடி உள்ளே சென்றான். எனக்கோ மிகவும் கஷ்டமாக போய்விட்டது. …

ஒரு ஐந்து நிமிட காத்திருப்பில் நாங்கள் கேட்டதை அந்த சிறுவன் பரிமாறினான். அப்போது அவனது முகம் அவமானத்தால் குறுகிப்போயிருந்தது.

அவன் என்னைப்பார்த்து மிக மெல்லிய குரலில் “சார் நீங்க கேட்ட நாலதான நான் பட்டர் சிக்கன் சொன்னேன்…..அதுக்குப் போயி…..” என அவன் சொல்லிமுடிக்கும் முன்பே அந்த தடியன் மீண்டும் எங்கள் பக்கம் வந்தான்.

அவன் எங்களை நெருங்கியதும் இவன் பேச்சை நிறுத்திக்கொண்டான். அந்த தடியன் எங்களைப் பார்த்து
“சார்….மட்டன் கொழம்பு சாப்பிட்டு பாருங்க நல்லாயிருக்கும்….” என்றபடி எங்கள் பதிலுக்கு கூட காத்திராமல் அந்தப் பையனை அக்குழம்பை ஊற்ற பணித்தான்.

அந்தப் பையனும் பதட்டத்தில் தன் கையிலிருந்த ஏதோ ஒரு குழம்பை ஊற்றினான். அவன் எங்கள் இலையில் குழம்பை விட்ட அடுத்த நொடி அந்த சிறுவனின் தலையில் மீண்டும் ஒரு அடி விழுந்தது.

“டேய்….மட்டன் கொழம்ப ஊத்துடான்னா….நீ சிக்கன் கொழம்ப ஊத்துற…..”எனக் கத்தினான்.

“அடவிடுங்க இதுக்கெல்லாம் போட்டுகிட்டு அந்தப் பையன அடிச்சிக்கிட்டு…..” என என் தம்பி சொல்லியவுடன்.

“இல்ல சார் மட்டன் கொழம்பு தான் நல்லாயிருக்கும் அதான் சொன்னேன்…” என சப்பு கட்டினான். அப்படியே அவன் எங்கள் பக்கமிருந்தும் நகர்ந்து விட்டான். அந்தச் சிறுவனின் கண்கள் கலங்கிவிட்டன. அவன் தன் கண்ணீரை சிறைபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். ஒரு அருவருப்பான மௌனத்துடன் நாங்கள் உணவருந்த துவங்கினோம்…..

தன்னை ஆசுவாசப்படுத்தியபடி ஒரு பத்து நிமிட இடைவெளியில் மீண்டும் எங்கள் அருகில் வந்து நின்றான் அந்தச் சிறுவன் “சார் வேற என்ன வேணும்…?” என்றபடி.

அவனுக்காக ஏதாவது சொல்ல வேண்டும் போல் இருந்தது. நான் “ தம்பி ஒரு தோசையும்…..பட்டர் சிக்கனும்…” என்றேன்.

அவன் என்னைப் பார்த்து புன்னகைத்தபடி உள்ளே சென்றான்.

அவன் அந்த தோசையையும் பட்டர் சிக்கனையும் பரிமாறிய போதே எனக்கு வயிறு நிரம்பி இருந்தது. இருந்தாலும் இரண்டொரு துண்டுகளை வாயில் வைத்து விட்டு இலையை மூடினேன். என் தம்பியும் என்னோடு சேர்ந்து தன் இலையை மூடினான்.

எங்களை பார்த்தபடி நின்று கொண்டிருந்தவன் “என்ன சார் பட்டர் சிக்கனை பார்சல் பண்ணிடவா….?” எனக் கேட்டான்.

நான் பதிலளிக்கும் முன்னே என் தம்பி “ வேண்டாம்ப்பா….” என்றபடி என்னோடு கை கழுவ வந்தான். அவன் என்னை புரிந்து கொண்டவன் போல் பார்த்து சிரித்தான். நாங்கள் கை கழுவி விட்டு மீண்டும் வந்து அமர்ந்தவுடன் என்னிடம் பில்லை நீட்டியபடி “இதுக்கு தான் நான் முதல்லையே பட்டர் சிக்கன் ஆர்டர் பண்ண சொன்னேன்….இப்ப பாருங்க வேஸ்ட் ஆகிட்டு…..”என்றவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு பில்லுக்கான பணத்தை கொடுத்துவிட்டு கிளம்பினோம்.