சனி, 21 நவம்பர், 2009

ஞமலிபோல் வாழேல்....


”ஞமலிபோல் வாழேல்” என்கிறான் பாரதி.’ஞமலி’ என்றால் நாய் என்று பொருள்.நன்றிக்கு உதாரணமாக சொல்லப்படுவதல்லவா நாய் பின்பு ஏன் பாரதி ’ஞமிலிபோல் வாழேல்’ என்கிறான்? என்று குழப்பமாய் உள்ளதா? ஆம்! நாம் எதையும் மேலோட்டமாய் பார்த்து பழகியவர்களல்லவா? நமக்கு அப்படித்தான் தோன்றும்.ஆனால் நாய்களின் குணாதிசயங்களை உற்று நோக்கினால் உண்மை புலப்படும்.

பொதுவாக நாய்கள் சுதந்திரமாய் செயல்படும் பிராணி அல்ல.அவைகளுக்கு உணவு வழங்குபவர்களே எஜமானர்கள்.அத்தகைய எஜமானர்கள் எதை சொன்னாலும் அது செய்யும்.சுருங்கச் சொல்ல வேண்டுமானால் ஒருவேளை உணவுக்காக வாலையும் ஆட்டி,காலையும் நக்கும் கீழ்தரமான நடவடிக்கைகளை கொண்டது.அதேசமயம் போலிதனமாய் பாசாங்கு செய்து கொஞ்சி குழையும் குணமும் அதற்கு உண்டு.மொத்ததில் நாய்கள் அடிமைதனத்தின் சின்னங்கள்.

மனிதனும் ஆடு,மாடு,கோழி போன்ற உயிரனங்களை தனது அன்றாட பயன்பாட்டிற்காகவும்,தேவைக்காகவும் வளர்த்தான்.ஆனால் நாய்களை அவன் வளர்த்ததோ மற்ற உயிரனங்களை கண்கானிக்கவும்,வேட்டையாடவுமே.ஆக மனிதனின் ஆதிக்க வெறிக்கு முதலில் வாலாட்டியது நாய்களே! அதன் பரிணாம வளர்சியே இன்று அடியாட்களாகவும்,கூலிப்படையாகவும் மாற்றம் கண்டுள்ளது.

அடியாட்களுக்கும்,கூலிப்படையினருக்கும் எந்த அடிப்படை சித்தாந்தமும் கிடையாது.அவர்களை பொறுத்த வரையில் காசு கொடுப்பவரே எஜமானன்.அந்த எஜமானன் எதை சொன்னாலும் அவர்கள் செய்வார்கள்.இன்று ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து ஆதிக்க சக்திகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களும் இவர்களே!

இதில் கொடுமை என்னவென்றால் அடியாட்களாகவும்,கூலிப்படையினராகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் அடிதட்டு வகுப்பினராய் இருப்பவர்களே!(இருந்தவர்களே).இவர்களுக்கோ தாங்கள் யாருக்கு எதிராய் செயல்படுகிறோம்....?தங்களைப் போன்றோர் உருவாவதற்கு யார் காரணம்...?தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன....? என்று கூட தெரியாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை.

அப்படிப்பட்டவர்களால் கொடூரமாய் அழிக்கப்பட்டு இன்றும் தமிழக வரலாற்றில் ஒரு கறுப்பு சரித்திரமாய் இருக்கும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன்.....

1967ஆம் வருடம்...அறிஞர் அண்ணாவின் ஆட்சிகாலமது..... தஞ்சையில் பண்ணையார்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலமது.நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்ச் சிறிய விவசாய கிராமம் கீழவெண்மணி...அங்கே அப்போது விவாசாய கூலிகள் கொத்தடிமைகளாய் நடத்தப்பட்டனர்.சிறு தவறுகளுக்கு கூட சவுக்கடியும்,சாணிப்பாலும் ”பரிசளக்கப்பட்ட” காலமது.தூரத்தெரியும் விடிவெள்ளியாய் கம்யூனிச தலைவர்கள் அந்த விவசாய தோழர்களுக்கு மத்தியில் விளிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வந்தார்கள்.அதன் விளைவாக விவசாயச் சங்கம் ஒன்று உருவானது.ஒற்றுமையாய் ஒருகுரலில் தங்களது உரிமைகளை கேட்க தொடங்கினார்கள் விவசாயிகள்.அதை கண்டு அதிர்ந்த பண்ணையார்களும்,நிலச்சுவாந்தார்களும் ‘நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்’என்று ஒன்றை உருவாக்கி ஆதிக்க வெறியை ஒருங்கிணைத்தார்கள்.

அந்தச் சமயத்தில் தான் விவசாயிகள் வெறும் அரை லிட்டர் நெல்லை தங்கள் படியில் உயர்த்தி கேட்டனர்.அதற்காக அன்றைய ’அரசியல்வாதியான’ ராஜாஜியும், ”தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது” என விவசாயிகளை பரிகசித்தார்.ஆனால் விவசாயிகள் படி உயர்த்தி கேட்டதால் பண்ணையார்களுக்கும்,நிலச்சுவாந்தார்களுக்குமே பேய் பிடித்தது.அதன் விளைவாக அதே ஆண்டு டிசம்பர் திங்கள் 25ஆம் நாள்.கிறிஸ்துமஸ் தினத்தன்று.பண்ணையார்களின் அடியாட்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழவெண்மணியில் நுழைந்து தங்களது விசுவாச வெறியை கட்டவிழ்த்து விட்டார்கள்.உயிரை கையில் படித்தபடி விவசாயிகள் தப்பி ஓட முயற்சித்தனர்.

அப்போது அங்கு ஒரு தெருவின் மூலையில் ராமைய்யா என்ற விவசாயின் குடிசை இருந்தது.அந்த சின்னன்ஞ் சிறு குடிலில் 48 பேர் அடைக்கலம் கொண்டார்கள்.அதையறிந்த அந்த வெறியாட்கள் அந்த குடிசைக்கு தீவைத்தனர்.வெப்பம் தாளாமல் மரண ஓலமிட்டபடி தகித்து கொண்டிருந்த நெருப்பையும் மீறி ஆறு பேர் வெளியே ஓடினர்.அப்படி தப்பியோட எத்தனித்தவர்களில் இருவரை பிடித்து மீண்டும் உள்ளே தள்ளியது அந்த வெறிபிடித்த கும்பல்.

அப்போது ஒரு தாய் தனது மரணத்தருவாயிலும் தனது குழந்தையை வெளியே வீசியிருக்கிறாள்.ஆனால் அந்த வெறிபிடித்த கூலிப்படையினரோ குழந்தை என்று கூட பாராமல் அதை மீண்டும் எடுத்து நெருப்பில் வீசியிருக்கிறார்கள்.கடைசியாக அவர்களது வெறியாட்டத்தில் வெந்து கருகியது 44 பேர் உயிர். அதில் பெண்கள் 14 பேர். குழந்தைகள் 22 பேர்.

கூலியாக உயர்த்தி கேட்ட அரை லிட்டர் நெல்லுக்காக ஆதிக்க வெறியர்களின் கண்ணிசைவுக்கு கூலிப்படையினர் 44 உயிருக்கு வாய்கரிசி போட்டனர்.இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு கிடைத்த தீர்ப்பு என்னவென்றால்....”அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…" என்று 1973 ஏப்ரல் 6ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது.

இன்னும் கீழவெண்மணிகள்...பாப்பாபட்டியாகவும்,கீரிப்பட்டியாகவும்,மேலவளவாகவும்,உத்தப்பபுரங்களாகவும் தமிழக மண்ணில் உயிர்போடு தான் உள்ளது.நாமோ இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பாக டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவராய் சொல்லப்படும் ஏசுநாதரின் பிறந்தநாளை கொண்டாடுவோம் ஆனால் நம் அண்டை மாவட்டத்தில் சாதி வெறிக்கு வெறும் நாற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பலியான அந்த உயிர்களுக்கு துக்கம் அனுசரிக்க மாட்டோம்.உண்மையில் ஏசுநாதர் என்றொரு தேவமைந்தன் இருப்பாரேயானால் அவர்கூட நம்மை இதற்காக மன்னிக்க மாட்டார்.

தோழர்களே!

தனது உதிரம் கொடுத்து நமக்கு உயிர் கொடுத்த நம் அன்னைக்கே நமது உயிரை பலிகேட்க உரிமையில்லாத போது நாம் யார் அடுத்தவர் உயிரெடுக்க?சகமனிதனை அழித்து நாம் அடைவதற்கு இங்கு எதுவுமில்லை.இந்தச் சமூகம் என்பது முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது.நாம் சிரித்தால் அது சிரிக்கும்...நாம் அழுதால் அது அழும்....நாம் அதனை அடித்தால் அது நம்மை திருப்பியடிக்கும்.செய்யும் எல்லா வினைகளுக்கும் எதிர் வினை உண்டென்பது உலக நியதி....ஆதலால் ஞமிலி போல் அல்லாமல் உள்ளார்ந்த அன்போடு சக உயிரை காதல் செய்வீர்.....!

புதன், 18 நவம்பர், 2009

ஆண்மை தவறேல்....


”ஆண்மை தவறேல்” என்றான் பாரதி.ஆணுக்கு பெண் இளைப்பில்லை என கும்மியடித்த பாரதியா இப்படிச் சொன்னான்? என வினா எழுப்ப தோன்றுகிறதா? நிச்சயம் தோன்றும்.

காரணம்...

இந்த ஆணாதிக்க தமிழ்ச் சமூகத்தில் ‘ஆண்மை’ ஆண்களுக்குரியது என்றும் ’பெண்மை’ பெண்களுக்குரியது என்று தான் நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் அது சரியல்ல.

“ஆண்மை” என்பது ஒரு பெயர்ச்சொல் தான்.ஆனாலும் அதற்கு பாலின பேதமில்லை.ஏனென்றால் ”ஆண்மை” என்பது ’வீரம்’ என்று பொருள் படும்.’வீரம்’ எல்லோருக்கும் பொதுவானது.

சரி ‘வீரம்’ என்றால் என்ன?

ஒன்றை பயம் இல்லாமல் எதிர் கொள்வதே வீரமாகும்.இதைத்தான் பாரதி சொன்னான்.”ஆண்மை தவறேல்” என்று.இன்று நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை உள்ளது.இன்று தற்கொலை செய்திகளை தாங்கி வராத நாளிதழ்களே இல்லை.தேர்வெழுதி தோற்றுப் போனால் உடனே தற்கொலை....காதலில் தோற்றால் தற்கொலை....வறுமையில் வாடினால் தற்கொலை....என்று சிறு தோல்விகளுக்கும் வாழ்வை முடித்துக் கொள்ளும் அபத்தங்கள் நமது சமூகத்தில் தொடர் கதையாகவே உள்ளது.வாழ்வை எதிர் கொள்ளும் மன தைரியம் நம்மிடம் குறைந்து வருவதே இதற்கு காரணம்.

வீரத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்து மறைந்தவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நிறைய உண்டு.அவற்றுள் ஒன்றை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்...

1955ஆம் வருடம் டிசம்பர் திங்கள் 1ஆம் நாள் தனது பணி முடிந்து மாலையில் பேருந்தில் ஏறி கறுப்பினர்களுக்காக ஒதுக்கப் பட்ட இருக்கையில் அமர்ந்தாள் ரோசா பாக்ஸ்.மாண்ட்கோமரியிலிருந்து (MONTGOMERY) தான் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணச் சீட்டு பெற்றுக் கொண்டு பயணித்தாள்.அது அமெரிக்காவில் இனவெறி அதிகாரப்பூர்வமாய் அரங்கேறிக் கொண்டிருந்த காலம்.வெள்ளையர்கள் பேருந்தில் ஏறும் போது கறுப்பினத்தவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளை காலி செய்து தர வேண்டுமென்பது எழுதப் படாத விதியாகவே இருந்தது.

ஒரு நிறுத்தத்தின் போது மூன்று ,நான்கு வெள்ளையினத்தவர்கள் அந்தப் பேருந்தில் ஏறினார்கள்.அப்போது இருக்கைகள் எதுவும் காலியாக இருக்கவில்லை.இதை பார்த்த பேருந்தின் நடத்துனர் அவளையும்,அவளுடன் அமர்ந்திருந்த மற்றவர்களையும் எழுந்து வெள்ளையர்களுக்கு இடம் கொடுக்க சொன்னார்.மற்றவர்கள் முதலில் சிறிது தயக்கம் காட்டினாலும் எழுந்து கொண்டார்கள்.ஆனால் ரோசா பாக்ஸோ சிறிதும் பயமின்றி மெல்ல நகர்ந்து சன்னல் ஓரம் சாய்ந்து கொண்டு எழுவதற்கு மறுத்தாள்.நடத்துனரின் மிரட்டல்களை கண்டு சிறிதும் அஞ்சாமல் தனது இருக்கையிலே தன்னை இருத்திக் கொண்டாள்.அப்படி அவள் உறுதிபட மறுத்ததற்கு காரணம்...ஒரு உயிரினமாக...ஒரு தேசத்தின் குடிமகளாக...அவள் தனது பிறப்புரிமைகளை அறிந்து கொள்ள விரும்பியதேயாகும்.

அவளது அந்த மறுப்பு அவன் சற்றும் எதிர்பாராதது.அவளுடன் அதுவரை அமர்ந்து பயணித்த ஆண்களே மறுப்பேதும் சொல்லாமல் எழுந்த பிறகும் அவள் எழுவதற்கு மறுத்தது அந்த நடத்துனரை கோபம் கொள்ள செய்தது.அவன் காவல்துறையினரை வருவித்தான்.அவர்களிடத்தும் அவள் உறுதியாய் மறுத்தாள்.அதனால் அவள் அங்கு கைது செய்யப்பட்டாள்.அவளது கைது அங்கு அதுவரை அடிமைதனங்களை சகித்து கொண்டு வாழ்ந்த கறுப்பின சகோதிரர்களை எழுச்சி கொள்ள செய்தது.அதன் தொடர்சியாக ’மாண்ட்கோமரி எழுச்சி இயக்கம்’(MONTGOMERY IMPROVEMENT ASSOCIATION) மார்டின் லூதர் கிங் என்னும் பாதிரியாரின் தலைமையில் உருவாக்கப்பட்டது.அந்த இயக்கம் ‘மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு’ என்னும் வரலாற்று சிறப்புமிக்க அறப்போராட்டத்தை அறிவித்தது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல நூறு ஆண்டுகளாக நிறத்தின் பெயரால் தாங்கள் இழந்து வந்த உரிமைகளை மீட்டெடுக்கும் எழுச்சியுடன் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.அதன் விளைவாக பேருந்துகள் காலியாகின.போராட்டம் தொடர்ந்தது.....அந்தப் பேரியக்கத்தின் விளைவாக 1956ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் அமெரிக்க உச்சநீதிமன்றம் ”பேருந்திகளில் நிறவெறி பிரிவினைகள் சட்டத்திற்கு புறம்பானது” என்ற அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்பை வழங்கியது.

அதுவரை எந்த ஆண்மகனுக்கும் வராத துணிச்சலோடும்,ஆண்மையோடும் தனது உரிமைக்காக போராடிய ரோசா பாக்ஸின் நெஞ்சுறுதியே அந்த மாபெரும் எழுச்சிக்கான முதல் பொறி.அந்த வீர மங்கை 2005ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24ஆம் தேதி தனது 92ஆவது வயதில் காலமானார்.அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக்டோபர் 27ஆம் தேதி மாண்ட்கோமரியிலும்,டெட்ராய்டிலும் இயங்கிய அத்துணை பேருந்துகளிலும் முன் இறுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு கறுப்பு கொடிகளை தாங்கி பயணித்தது....வெள்ளை இனத்தவர் மரியாதையுடன் அதன் அருகில் நின்றபடி பயணித்தனர்.....

தோழர்களே!

கோடிக்கணக்கான விந்தணுக்களை போராடி வென்றதனாலே தான் நாம் உயிரினமாய் ஜெனித்தோம்.ஆகவே போராட்டங்கள் நமக்கு புதிதல்ல....நாம் நமது சிறகுகளை மறந்துவிட்டு சிகரங்களை கண்டு மலைக்கிறோம்.ஆகவே ந்மது சிறகுகளை விரிப்போம்!சிகரங்கள் நம் வசமாகும்!

புதன், 4 நவம்பர், 2009

வேற்றுமையில் ஒற்றுமை....



ஊனமுற்றவன்....

லஞ்சமாக வாங்கிய பணத்துடன்
பேருந்தில் ஏறி அமர்ந்தான் ஊனமுற்றோருக்கான இருக்கையில்...

கல்வித்தந்தை...

பெயர் போன தனது மருத்துவ கல்லூரியில் இடம் வேண்டிய ஏழை மாணவனுக்கு அவனது குடும்ப நிலை உணர்ந்து.....!!!!
இருபது லட்ச ரூபாயை இரண்டு தவனையில் கட்டுவதற்கு தாராளம் காட்டினான்.....
அந்த அறக்கட்டளை நிர்வாக குழுமத்தின் தலைவன்.

பட்டதாரி....

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனது தந்தையின் உதிரத்தில் விளைந்த விளைநிலத்தை அடகுவத்தான்.
வந்த பணத்தில் விசா வாங்கி விமானம் ஏறினான்.
வானில் பறக்கையில் அவனுக்கு பூமி சிறுக்கத் தொடங்கியது.....

கைமாறும் காந்தி....

காந்தி சிரிக்கும் நோட்டை கொடுத்து ஓட்டுவாங்கினான்.
கோட்டைக்குப் போனான்.
ஓட்டு போட்டவன் மனு கொடுக்க கோட்டைக்கு போனான்.
மனுவை பெற்றவன் அவன் கையிலிருந்த சிரிக்கும் காந்தியை சுட்டிகாட்டினான்.
காந்தி சிரித்தபடி மீண்டும் கைமாறினார்.

என்னைப் போல் ஒருவன்....

விபத்துக்குள்ளாகி ரத்த சகதியில் விழுந்த கிடந்தவனை கண்டு
படபடப்போடு வேகமாக விரைந்து சென்றான்......வீட்டிற்கு!

செவ்வாய், 3 நவம்பர், 2009

இனி தடையேதும் இல்லை....


விடிகாலை மூன்று மணி ஆகிவிட்டது நான் எங்கள் ஊரின் பேருந்து நிலையம் வந்திறங்கும் போது.பௌர்ணமி நிலவான் தன் ஒளிக்கதிர்களை கொண்டு இருளை துரத்திக்கொண்டிருந்தான்.மழையின் கைங்கர்யத்தால் தார்ச்சாலைகள் நீர்தேக்கங்களாக மாறியிருந்தன.

தூக்க கலக்கமும்,உடல் அசதியும் ஒன்றிணைந்து என்னை வீழ்த்த முயற்சித்துக் கொண்டிருந்த போதும் என் மனம் வீரச்சமர் புரிந்து வெற்றிக்களிப்புடன் தன் தாய்மண்ணிற்கு திரும்பிய ராணுவ வீரனைப் போல் உற்சாகமாயிருந்தது.

காரணம்...........

எனது தொழிற்சங்க வாழ்வின் மற்றுமொரு முக்கியமான தினமாய் முந்தைய நாள் மாறிப்போய் இருந்ததே....

எங்களது வங்கியில்(பாண்டியன் கிராம வங்கி) முந்நூறுக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் பணிபுரிந்து வருவது குறித்தும்,அவர்களது பணியை நிரந்தரமாக்க கோரி எங்கள் தொழிற்சங்கம் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் குறித்தும் கடந்த ஜூன் மாதமே ”நவீன கொத்தடிமைகள்” என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன்.

(அந்தப் பதிவின் விளைவாக எங்கள் நிர்வாகத்தால் நான் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதையும் அதை எதிர்த்து எமது தொழிற்சங்கத்தின் உதவியோடு போராடி மீண்டும் பணிக்கு திரும்பியது குறித்தும் “எங்கள் போராட்டம்....”,”போராட்டம் வென்றது..” என்ற எனது முந்தைய தொடர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்)

அந்த தற்காலிகப் பணியாளர்களின் பணி நிரந்தரத்திற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.அதன் தொடர்ச்சியாக மதுரையில் தொழிலாளர் நல ஆணையாளர் முன்பு ’தற்காலிகப் பணியாளர்களை’ பணி நிரந்தரம் செய்யக் கோரி ’தொழிற்தாவா’ ஒன்று தொடுத்தோம்.அதன் விளைவாக வங்கியின் நிர்வாகத் தரப்பையும்,எங்களையும்(தொழிற்சங்கம்) அழைத்து தொழிலாளர் நல ஆணையாளர் ’உடன்படிக்கை’ பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

வங்கி நிர்வாகமோ கொஞ்சமும் மனித நேயமற்ற முறையில் முழுப்பூசனியை சோற்றில் மறைப்பதைப் போல் ‘தற்காலிகப் பணியாளர்கள்’ என்று எவருமே எங்கள் வங்கியில் இல்லை என கூறி வருகிறார்கள்.மேலும் சத்தமில்லாமல் தற்காலிகப் பணியாளர்களை கொஞ்சமும் தயவு தாட்சண்யமின்றி பணி நீக்கம் செய்யும் முனைப்பில் இறங்கினார்கள்.அதனால் நாங்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தற்காலிகப் பணியாளர்களுக்கான வழக்கு முடியும் வரை அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது எனக் கோரியும், தற்போதுள்ள நிலையிலேயே status quo maintain செய்யப்பட வேண்டும் என்று கோரியும் writ of mandamus வழக்கு ஒன்று பதிவு செய்தோம்.

எமது தரப்பு நியாயங்களை நடுநிலையோடு பார்த்த மதுரை உயர்நீதிமன்றம் எங்கள் வழக்கை ஏற்றுக் கொண்டதோடு,வங்கி நிர்வாகம் தற்காலிகப் பணியாளர்களுக்கான வழக்கு முடியும் வரை யாரையும் பணிநீக்கம் செய்ய கூடாது என ஆணையிட்டு தடை உத்தரவை நேற்று வழங்கியது.இது வெறும் தடை உத்தரவு மட்டுமல்ல.....

இது அந்த தற்காலிக ஊழியர்களின் இருப்பை அங்கீகரிக்கும் உத்தரவு.இது எங்கள் போராட்டத்திற்கும் அந்த இளம் தோழர்களின் எதிர்காலத்திற்குமான கரைகள் வெகு தொலைவில் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் கலங்கரை வெளிச்சம். அந்த வெளிச்சம் தந்த உற்சாகமே எமது வலிகளை துடைத்து விட்டிருந்தது.....

ஆம் தோழர்களே!

நாம் மற்றவர்களுக்காக வாழும் போதும்,சக தோழனுக்காக போராடும் போதும் தான் நமது வாழ்விற்கான அர்த்தம் நமக்கே புரிபட துவங்குகிறது.....!

செவ்வாய், 27 அக்டோபர், 2009

இது ஒரு காதல் கதை....


வாழ்வில் சில நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடுகிறது.அப்படி ஒரு அற்புதமான நாளை கடந்த ஒரு சில தினங்களில் நான் இந்தப் பதிவை இடுகிறேன்.......

அவனை நான் முதல்முதலில் சந்தித்தது ஒரு பாரில்(BAR) வைத்துதான்.சரியாக சொல்லவேண்டுமென்றால் அந்த சந்திப்பு நடந்து ஆறுவருடங்கள் ஆகிறது.எனது தாயின் ”திடீர்” மரணம் என்னை மிகவும் பாதித்திருந்த சமயம் அது.நான் என்னை எனது மதுவுடன் கலந்து கொண்டிருக்கும் போது அவன் கையில் மதுவுடன் என் அருகில் வந்தமர்ந்தான்,வேறு இருக்கை இல்லாததால்.

அந்த அரை இருட்டும்,ஏ.சி குளிரும் என்னை புகை பிடிக்க தூண்டியதால் சிகிரெட்டை எடுத்து வாயில் வைத்தேன்.அப்போது அவனும் சிகிரெட் பற்றவைத்தபடி இருந்ததால் சற்று நிதானித்து தீப்பெட்டிக்காக கை நீட்டினேன்.அவன் சிரித்தபடி எனக்கும் பற்றவைத்து விட்டான்.பரஸ்பரம் நிக்கோடின் புகையோடு அறிமுகமாகிக் கொண்டோம்.ஒவ்வொரு லார்ஜின் இடைவெளியிலும் எங்களது பகிர்வு படலம் தொடர்ந்தது......

மதுவின் கைங்கர்யமா? அல்லது எனது துயரின் தவிப்பா? தெரியவில்லை அந்த முதல் சந்திப்பிலேயே எனக்குள் அழுந்திக்கொண்டிருந்த எனது தாயின் மரணத்திற்கும்,அதனால் எனக்குள் ஏற்பட்டிருந்த ரணத்திற்கும் அவனிடம் ஆறுதல் தேடத்துவங்கியிருந்தேன்.அவனும் பல வருடங்கள் பழகிய தோழமையுடன் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தான்.எந்த ஒளிவும் மறைவும் இன்றி நான் என் குடும்ப விவகாரங்களை அவனோடு பகிர்ந்து கொண்டதாலோ என்னவோ அவனும் தனக்குள் அறித்துக் கொண்டிருந்த தனது காதல் கதையயும் என்னோடு பகிர்ந்து கொள்ள துவங்கினான்......

அவன் தனது காதலுக்கு ஏழு வயதாகிறது என்ற அறிமுகத்தோடு ஆரம்பித்தான்.அவள் தான் தனது காதலை அவனிடம் முதலில் வெளிப்படுத்தியதாகவும், அவன் சிறு தயக்கத்துடன் அவளது காதலை ஏற்றுக்கொண்டதாகவும் சொன்னான்.அவன் தனது காதல் கதையை என்னிடம் சொல்லும் போது அந்த அறையின் இருளையும் தாண்டி அவனது முகம் மிகவும் பொலிவுடனும்,பூரிப்புடனும் காணப்பட்டது.ஒரு தேர்ந்த கதை சொல்லிக்கு உண்டான நேர்த்தியுடன் அவன் தனது காதல் அநூபவத்தின் மகிழ்ச்சியான பக்கங்களை எனக்கு புரட்டி கொண்டிருந்தான்.ஊடலும்,கூடலுமாய் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவனது காதலில் இரண்டு சம்பவங்களின் குறுக்கீடுகளால் அவனது காதல் பயணம் திசைமாற துவங்கியிருக்கிறது.

ஒன்று அவனது காதலியின் தங்கையின் திடீர் மரணம்.அதில் அவளது குடும்பமே நிலைகுலைந்து போயிருந்திருக்கிறது.அப்போது இவனும்,இவனது நண்பர்களுமே அவளது தங்கையின் இறுதிச் சடங்கின் காரியங்களை முன்நின்று செய்திருக்கிறார்கள்.அவளுக்கு உடன்பிறந்த ஆண்கள் இல்லையாதலால் இவனே ஓர் ஆண்வாரிசை போல அனைத்தையும் செய்திருக்கிறான்.அவளது குடும்பமே இவனிடம் அன்பு பாராட்டிக் கொண்டிருந்த போது தான் அந்த இரண்டாவது சம்பவம் நடந்திருக்கிறது.அது....

இவனது காதலியின் தமக்கை அவளது காதலனை கைப்பிடிக்க வீட்டிலிருந்து வெளியேறியது.கடைசி மகளை காலனும்,மூத்த மகளை காதலனும் கூட்டிச் சென்றதால் அவளது பெற்றோரின் ஒரே நம்பிக்கையாக இவனது காதலி மாற்றப்பட்டிருக்கிறாள்.அவர்கள் தங்களுக்கான ஆறுதலாய் அவளை அவளது தாய்மாமனுக்கு கல்யாணம் செய்துவைக்க தீர்மானித்திருக்கிறார்கள்.அவளது நிலை திரிசங்கு சொர்க்கமாய் மாற்றப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவள் தற்கொலைக்கும் முயன்று பார்த்திருக்கிறாள்.ஆனால் அதுவும் நிறைவேறாமல் காலத்தின் விருந்தாய் மாறிப்போயிருக்கிறாள்.இவனோ அவளது நிலை கண்டு பதைத்து எதை கேட்டாலும் தருவேன் என காதல் போதையில் உளறியிருக்கிறான். அவளோ வேறு வழியின்றி இவனிடம் ”காதல் கருணை”கேட்டிருக்கிறாள்.இவனோ நிலை குலைந்து போயிருக்கிறான்.அந்த நிலையில் தான் எங்களது சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.....

அவன் தனது காதல் கதையை சொல்லிமுடிக்கையில் ஒருவித சூன்யம் எங்களுக்கிடையில் சூழ்ந்திருந்தது.எனக்கு ஆறுதல் சொன்னவனுக்கு அப்போது ஆறுதல் சொல்ல கூட என்னிடம் வார்தையில்லை.....அதனால் மீண்டும் ஆளுக்கு ஒரு லார்ஜ் மட்டும் ஆர்டர் செய்துவிட்டு அமைதியானேன்.மது வந்தது.....அருந்தினோம்....மீண்டும் சந்திப்போம் என உறுதி சொல்லிவிட்டு பிரிந்தோம்......

மீண்டும் ஒருவாரம் கழித்து அதே பாரில் வைத்து அவனை சந்தித்தேன்.அப்போது அவனது முகம் மிகவும் வாடிப்போயிருந்தது.நான் அவன் அருகில் போய் அமர்ந்தேன்.என்னை அடையாளம் கண்டு கொண்டு என் நலம் விசாரித்தான்.முன்னுரைகளின்றி என்னால் அப்போது அவனிடம் நேரடியாகவே அவனது காதலின் நிலை குறித்து கேட்கமுடிந்தது.அவனும் உரிமையோடு என்னிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தான்.......

அவன் நேரடியாகவே போய் அவளது பெற்றோரை பார்த்திருக்கிறான்.அவர்களும் மிக தன்மையாகவே இவனிடம் அவர்களது நிலை குறித்து சொல்லி இவனை உதவிட வேண்டியுள்ளார்கள். வேறு வழியின்றி இவனும் அவர்களுக்கு உறுதியளித்தபடி திரும்பிவிட்டதாக சொன்னான்.அவனது நிலையை காண பரிதாபமாக இருந்த அதே நேரத்தில் அவன் மீது மரியாதையும் கூடிப்போயிருந்தது.....தனது காதலை தவிற வேறு எவருடைய மனநிலையையுமே பிரதானமாக நினைக்காத இன்றைய தலைமுறையினர் மத்தியில் இப்படியும் ஒருவனா? என்றிருந்தது.

அதன்பின் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம்.எங்கள் நட்பு நாளொரு பாரும் பொழுதொரு பீருமாக தொடர்ந்தது.இப்படியே குடித்துக் கொண்டிருந்தால் கவலைகள் குறைந்து விடாது என போதையே புத்தி சொன்னது.அது போதியில் கிடைத்த புத்தியல்ல....என்றாலும் போதை சொன்னதை புத்தி கேட்டது.கவலைகளை மறக்க கவனத்தை திசை மாற்ற வேண்டும் என முடிவு செய்தோம்.

அதனால் ஒன்றாக சேர்ந்து ஏதாவது ஒரு தொழில் தொடங்குவது என முடிவு செய்தோம்.அதனடிப்படையில் அத்தியாவசிய பொருள்களை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு விற்கும் STOCKIST-களாக மாறினோம்.இந்த இடைவெளியில் அவனது காதலிக்கு கல்யாணமாகி அவளும் சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட்டிருந்தாள்.மீண்டும் அவனது பார்வை பாருக்குள் செல்ல துவங்கியது.எங்களது வருவாய்களெல்லாம் மதுவகைகளாக மாறிக்கொண்டிருந்தது.அந்த நேரத்தில் தான் கருணை அடிப்படையில் எனது அம்மாவின் வேலை எனக்கு கிடைத்ததற்கான உத்தரவு வங்கியிலிருந்து வந்தது.

அவனும் மிகுந்த மகிழ்ச்சியோடு என்னை வாழ்த்தி வழியனுப்பினான்.ராமநாதபுர மாவட்டதில் போய் பணியில் அமர்ந்தேன்.அவனோ தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் தொடர் நஷ்டத்தால் தொழிலை மூடியதாய் ஒருமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது சொன்னான்.பயிற்சி காலமாதலால் என்னாலும் ஊருக்கு அதிகம் செல்லமுடியாமல் போனது.வாரங்கள் நாட்களையும்,மாதங்கள் வாரங்களையும் விழுங்கி கொண்டு சென்றது.ஒருவழியாக மூன்று மாதங்கள் கழித்து ஊருக்கு செல்வதற்கு தோதாக மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது.ஊருக்கு வந்ததும் வராததுமாய் அவனை தொடர்பு கொண்டு பாருக்கு வரச்சொல்லி விட்டு அவனை காணச் சென்றேன்.

அப்போது அவனது முகத்தில் கொஞ்சம் தேஜஸ் கூடியிருந்தது.ஆளும் உற்சகமாயிருந்தான்.எனக்கு அவனை அப்படி பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.அவனது பொலிவிற்கான காரணத்தை கேட்டேன்.அவன் சிரித்தபடி அவனுக்கு துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணி கிடைத்துள்ளதாக சொன்னான்.ஆளுக்கொரு பீரை ஆர்டர் செய்துவிட்டு,’ வேறு ஏதாவது விசேஷம் உள்ளதா?’ எனக் கேட்டேன்.எனது அந்தக் கேள்வியை எதிர் பார்த்தவன் போல் சிறு தயக்கமுமின்றி அவளை மீண்டும் சந்தித்ததாக சொன்னான்.கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் தொடர்ந்து கேட்கும் ஆவலும் வந்தது.அவனே தொடர்ந்தான்........

விசா புதுப்பிப்பதற்காக ஊருக்கு திரும்பியவளை மிக தற்செயலாக இவனது பிறந்த நாள் அன்று கடைத்தெருவில் வைத்து சந்தித்திருக்கிறான்.இவனது பிறந்தநாளை நினைவு கூர்ந்தவளாய் அவளும் வாழ்த்தியிருக்கிறாள்.சந்திப்பின் ஊடே செல்போன் நம்பர்களையும் பரிமாற்றி இருக்கிறார்கள்.வீட்டிற்கு வந்து தொடர்பு கொண்டவனிடம் மெல்ல மெல்ல அவளது தாம்பத்ய கொடுமைகளையும்,அவனது நினைவுகளை மறக்க முடியாத தன் நிலையையும் சொல்லி கண்ணீரோடு கரைந்திருக்கிறாள்.அவனது சமாதனங்கள் அவளிடம் தோற்றுப் போனதாகவும் சொன்னான்.

நான் அவளை அதுவரை ஒருமுறை கூட சந்தித்ததோ அல்லது பேசியதோ கூட கிடையாது.எனக்கு அவனை தெரியும் அவ்வளவுதான்.ஆனாலும் எனக்கு அப்போது அவனிடம் இப்படி கேட்க தோன்றியது.....

“மச்சான்! அவ திரும்பி வந்தா நீ ஏத்துக்குவியா...?” எனக்கேட்டேன்.
“டேய்! நான் அவள லவ் பண்றண்டா...”என்றான்.

ஒருவகையில் நான் அவனிடம் இந்த பதிலை எதிர்பார்த்தேன் என்பதும் உண்மை.என்னிடம் சட்டென்று சொன்ன இந்த பதிலை அவனால் அவளிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன்....காரணம் அவளாலும் நான் அவனிடம் கேட்டதைப் போல் நேரடியாய் கேட்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவித்திருக்கலாம் என தோன்றியது.

அதனால் நான் அவர்கள் இருவரிடமும் பேசவிரும்புவதாய் சொன்னேன்.அவனும் அவளிடம் கேட்டுச் சொல்வதாய் ஒப்புக்கொண்டான்.ஆனால் ஒரு அவசர அலுவலின் காரணமாக நான் மறுநாளே ராமநாதபுரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவர்களை சந்திக்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டது.

நான் மீண்டும் வருவதற்கு நாளாகக் கூடும் என்பதாலும்,செல்போனிலோ தொலைப்பேசியிலோ பேசுவதை விட கடிதமே சிறந்தது என தோன்றியதாலும் நான் அவர்களிடம் நேரில் பேச நினைத்ததை ஒரு கடிதமாக எழுதினேன்.அதை அவளோடு சேர்ந்து படிக்க சொல்லி அவனிடம் கொடுத்துவிட்டு ஊருக்கு கிளம்பினேன்.

ஓரிரு நாளில் அவனிடமிருந்து எனக்கு போன் வந்தது.அவர்களிருவரும் சேர்ந்து வாழ தீர்மானித்திருப்பதாக சொன்னவன் அவளும் என்னுடம் பேச விரும்புவதாக சொன்னான்.ஏற்கனவே சொன்னது போல் நான் அதுவரை அவளை பார்த்ததோ பேசியதோ கூட இல்லை அப்படியிருக்கையில் அவள் என்னிடம் தன் வாழ்வின் மிக முக்கயமான ஒரு முடிவை எடுக்கும் போது ஆலோசிக்க சம்மதம் தெரிவித்து என்னிடம் பேச விரும்பியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.எனக்கு பெருமையாகவும் இருந்தது.நாங்கள் மூவரும் கான்பரன்ஸ்(CONFERENCE CALL) கால் மூலமாக பேசினோம்....

பல நாள் பழகிய தோழமையுடன் இருந்தது அவளது பேச்சு.எனது குடும்பச் சூழல் குறித்தும் அவளிடம் சொல்லி இருப்பான் போல் ஆதலால் அவள் மிக அக்கறையுடன் எனக்கு ஆறுதல் சொன்னாள்.அதன்பின் வழக்கமான கிண்டல் கேலிப்பேச்சுகளுக்கு பிறகு அவளது முடிவு குறித்து கேட்டேன்.அவள் தீர்க்கமாய் இருந்தாள்.எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.அவளது பெற்றோரின் நிலை குறித்து கேட்டேன்.பெற்றவர்களின் சுயநலத்திற்காக உணர்ச்சி வேகத்தில் செய்த ’தியாகம்’ தங்களது வாழ்க்கையை சூன்யமாய் மாற்றிவிட்டதாய் சொன்னாள்.

கண்கானாத தேசத்தில் அவளை கைபிடித்தவனின் சந்தேக கொடுமைகளை அவள் விவரித்த போது எனக்கு பிரகாஷ்ராஜ் படங்களின் நினைவுகள் வந்து போனது.அவள் அங்கு மீண்டும் திரும்பி போகபோவதில்லை என்றும் அவனிடம் விவாகரத்து கோரமுடிவு செய்திருப்பதாகவும் சொன்னாள்.அவள் பேசிக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் ஆணாக பிறந்ததற்கே எனக்கு அவமானமாக கூட தோன்றியது.’காலம்காலமாக இப்படி எத்தனை நூற்றாண்டுகளுக்கு நத்தைகளைப் போல் எங்கள் விருப்பு வெறுப்புகளை அடக்கிக் கொண்டே வாழ்வது?’என அவள் கேட்ட போது என்னிடம் மௌனம் மட்டுமே மிச்சமிருந்தது.

அவள் தரப்பு நியாயங்கள் எனக்கு மிகவும் இயல்பாகவும்,சரியாகவுமே தோன்றியது.ஏனென்றால் வாழ்க்கை என்பது ஒருமுறை.அந்த அற்புதத்தை கஷ்டப்பட்டு கடமைக்காக வாழ்ந்து கழிப்பதைவிட இஷ்டப்பட்டு அனூபவித்து வாழ்வதே சரி.

இப்போது எனக்கு என் நண்பனிடம் கேட்பதற்கே கேள்விகள் மீதம் இருந்தது......

அவனது இந்த முடிவு உணர்ச்சிவயபட்டதாக இருக்ககூடாது எனக்கேட்டுக் கொண்டேன்.அவன் தனது உறுதியை ஒரு அரைமணி நேர தொடர் உரையின் மூலம் உறுதிபடுத்த முயற்சித்தான்.அவன் பேசி முடித்ததும் அவள் தொடர்ந்தாள்.....அவனது உறுதியே தன்னை இப்படியொரு துணிச்சலான முடிவெடுக்க தூண்டியதாகவும் சொன்னாள்.அவர்களது இந்த முடிவு எனக்கு காதல் மேல் மேலும் அதிக மரியாதையை தந்தது.

அவர்களது துணிச்சல் பேச்சோடு நின்றுவிடவில்லை.அதேநேரத்தில் அவர்களது இந்த முடிவை நடைமுறை படுத்துவதும் அவர்களுக்கு அத்தனை இலகுவாக இல்லை.ஏனென்றால் இருவரும் வேறு வேறு ஜாதி,அவள் ஏற்கனவே திருமணமானவள் என எதிர்புகளுக்கான காரணங்கள் மிக நீளமாகவே இருந்தது.ஆனால் இந்த சமூகத்தின் அத்துணை கலாச்சார மூடத்தனங்களையும் எதிர்த்து போராட அவர்களிடம் காதல் இருந்தது. எனவே ஒரு மிகப் பெரிய போராட்டத்திற்கு அவர்கள் தங்களை தயார் படுத்த துவங்கினார்கள்.இன்னும் சொல்லப்போனால் ஆழம் தெரிந்தே காலை வைத்தார்கள்.

முதலில் அவன் உள்ளூரில் அல்லாமல் வேறு ஏதாவது வெளியூரில் வேலை தேடுவது என முடிவு செய்யப்பட்டது.பல இடங்களுக்கு விண்ணப்பித்ததில் அவனுக்கு மும்பை துறைமுகத்தில் வேலை கிடைத்தது.அவன் அங்கு வேலையில் போய் அமர்ந்தான்.ஓரிரு மாதங்களில் அவளை அங்கு அழைத்து கொள்வதாய் முடிவானது.அந்த இடைவெளியில் அவள் விவாகரத்திற்கு விண்ணபிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியமாய் இல்லை.ஏனென்றால் அவளது தாயாரும் ஒரு வழக்கறிஞர் தான்.மேலும் அவளது வீட்டில் அவளது விவாகரத்து முடிவுக்கு கடும் எதிர்ப்பு வேறு.அவளது தாய் வழக்கறிஞராக இருப்பதால் அவரது சம்மதமின்றி அவளது விவாகரத்து வழக்கில் ஆஜராக எங்கள் ஊரில் வழக்கறிஞர்கள் யாரும் சம்மதிக்கவில்லை.அதனால் எனது நண்பன் ஒருவனின் உதிவியோடு வெளியூரிலிருந்து வேறு ஒரு வக்கீலை பிடித்து வழக்கு தொடுக்கப்பட்டது.

அவளுக்கு ’தாலிகட்டியவன்’ சிங்கப்பூரில் இருந்ததால் அவனால் தொடர்ந்து இரு சம்மன்களுக்கு கூட வரமுடியாமல் போனது.அவனும் அதற்குண்டான விளக்கமும் கொடுக்கவில்லை.அது வழக்கிற்கு சாதகமாகி அவளுக்கு வெகு விரைவிலேயே விவாகரத்தும் கிடைத்தது.விவாகரத்து பெற்ற கையோடு தான் மும்பையில் வேலைக்கு விண்ணப்பத்ததாகவும் அங்கு தனக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் வீட்டில் சொல்லிப்பார்த்தாள்.அவர்கள் சம்மதிக்க மறுத்தார்கள்.வீட்டை விட்டு வெளியேறினாள்.அவன் மும்பையில் இருந்ததால் நானே அவளை திருவனந்தபுரம் விமானநிலையம் சென்று வழியனுப்பிவைத்தேன்.அங்கே இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள்.அங்கிருந்து கொஞ்ச நாட்களில் அவனுக்கு துபாய் துறைமுகத்தில் வேலை கிடைத்தது.இருவரும் துபாய் சென்றார்கள்.

இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து தத்தம் பெற்றோர்களிடம் தாங்கள் சேர்ந்து வாழும் விஷயத்தை சொல்லி ஊர் திரும்பினார்கள்.இருவர் வீட்டிலும் கண்ணீரும்,மிரட்டலுமாய் அவர்களை பிரிக்க பார்த்தார்கள்.கடைசியில் அவர்களது காதலுக்கும்,உறுதிக்கும் முன்னால் இந்த சமூகத்தை பீடித்திருக்கும் ஜாதியமும்,கலாச்சாரத்தின் பெயரால் நடத்தப்பட்டு வரும் அபத்தங்களும் மண்டியிட்டன......
இப்போது அவன்,"மாபிள்ளை நாளைக்கு பார்டிக்கு வந்திடுன்னு" நாங்கள் முதலில் சந்தித்த பாருக்கு அழைத்துள்ளான்....

(குறிப்பு:இருவீட்டார் சமதத்துடன் கடந்த அக்டோபர் 25ஆம் அவர்களது திருமணம் இனிதே முடிந்தது.)

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ரௌத்திரம் பழகு...


பாரதியின் படைப்புகளில் என்னை மிகவும் ஈர்த்தவைகளில் ஒன்று அவனது ”புதிய ஆத்திச்சூடி”.வாமனன் போல் இரண்டு வார்த்தைகளில் உலகளந்திருப்பான்.இரண்டு அடிகளில் குறள் சொன்ன வள்ளுவனே கூட கொஞ்சம் பொறாமை கொள்ள வேண்டி வரும் இவனது இந்த படைப்பை படிக்க நேர்ந்தால்.மிகப் பெரும் தத்துவங்களையும்,வாழ்வியல் நெறிமுறைகளையும் இரண்டே வார்த்தைகளில் அநாயசமாக சொல்லியிருப்பான்.ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு புது அர்த்தங்களை நமக்கு கற்பிக்கும் வல்லமை அந்த வார்த்தைகளுக்கு உண்டு.

உதாரணமாக........

“ரௌத்திரம் பழகு”-மேலோட்டமாக பார்த்தால் அநீதிகளூக்கு எதிராக சினம் கொள் என சொல்வதாகவே புரியும்.ஆனால் அது சரியாக படவில்லை எனக்கு.ஏனென்றால் அவன் ’ரௌத்திரம் கொள்’ என சொல்லவில்லை மாறாக ரௌத்திரம் பழகு என்கிறான்.’பழகுதல்’ என்றால் தெரிந்துகொள்ளுதல், பக்குவப்படுதல்,தேர்ச்சிகொள்ளுதல் போன்ற அர்த்தங்களை உள்ளடக்கியதாகும்.உளியின் வலி தாங்கும் கற்களே சிலையாவது போல் தன் ரௌத்திரத்தை தனக்குள் அடைகாக்க தெரிந்தவனே வாழ்வில் தான் கொண்ட இலக்கை சென்று அடைகிறான்.

ஏனென்றால் ரௌத்திரம் என்பது தீக்குச்சியின் முனையில் தோன்றும் நெருப்பை போன்றது.அதை காட்டுத் தீ போல் பரவவிட்டு அழிவையும் ஏற்படுத்தலாம் அதேநேரத்தில் அதை சரியாக அடைகாத்து சரியான வகையில் பயன்படுத்தினால் இரும்பையும் உருக்கலாம்.

இன்று நமது தேசத்தின் பிரச்சனையே இது தான்.இளைய தலைமுறையினர் ரௌத்திரம் கொள்கிறார்களே தவிர ரௌத்திரம் பழகவில்லை.

ரோட்டில் ஒருவன் தற்செயலாக தனது வாகனத்தின் மீது மோதி விட்டால் போதும்.உடனே தனக்கு தெரிந்த எல்லா வசைசொற்களையும் அவன் மீதும் அந்த இடத்திலே இல்லாத அவனது குடும்பத்தார் மீதும் பிரயோகம் செய்வார்கள் அப்படியும் ரௌத்திரம் தீரவில்லையா? அவனை இழுத்து போட்டு அடிக்கவும் கூட செய்யும் இந்த தலைமுறையினர் ஒரு போதும் தன்னையும்,தனது தேசத்தையும் சுரண்டும் அரசியல் விற்பன்னர்களுக்கு எதிராகவோ,கடமையை செய்ய கையூட்டு கேட்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராகவோ,கல்வியையும்,மருத்துவத்தையும் வியாபாரமாக்கி கொழுக்கும் பெரும் முதலாளிகளுக்கு எதிராகவோ,ஜாதி,மத வெறிபிடித்த சமூகவிரோதிகளுக்கு எதிராகவோ ரௌத்திரம் கொள்வதில்லை.

தனக்கு நேர்ந்த அவமானத்தில் விளைந்த தனது ரௌத்திரத்தை தனக்குள் அடைகாத்து நிறவெறிக்கு எதிராக ஒரு மாபெரும் புரட்சி செய்து அதில் வெற்றியும் பெற்ற ஒரு மாபெரும் தலைவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன்......

தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞராக பணி செய்து கொண்டிருந்த அந்த இளைஞன் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தான் என்பதற்காக முதல் வகுப்பு பயணச்சீடு அவனிடம் இருந்த போதும் நிறவெறி பிடித்த வெள்ளை அதிகாரி ஒருவனால் வெளியில் தள்ளப்படுகிறான்.

தான் தள்ளப்பட்ட PIETERMARITZBURG என்னும் ரயில் நிலையத்திலே நிற்கும் போது அவன் மனதில் இரண்டு எண்ணங்கள் தோன்றுகிறது ஒன்று அவமானம் தாங்காமல் தாய் நாடு திரும்புவது மற்றொன்று தன்னைப் போல் அங்கு நிறவெறிக்கு ஆளாகி அடிமைகளாக வாழும் மக்களுக்காக நிறவெறியை எதிர்த்து போராடுவது.

அவனது மனதில் இரண்டு எண்ணங்கள் தோன்றினாலும் அவனது மனம் தேர்வு செய்தது இரண்டாம் வழியை தான்.

அவன் அன்று தனது ரௌத்திரத்தை அடைகாத்து, தேசம் தாண்டியும் மத ரீதியில் பிளவுண்டு கூலிகளாகவும்,கொத்தடிமைகளை போலவும் வாழ்ந்து வந்த, தனது தேசத்தாருக்கு ரௌத்திரம் பழக்கினான்.அவனது ரௌத்திரம் அவர்களுக்கு அங்கு ஒரு விடியலை தந்தது.

அதை விடுத்து அவன் அன்று தன்னை ரயிலிருந்து தள்ளிய அதிகாரியை ரௌத்திரம் தாளாமல் திருப்பி தாக்கியிருப்பானேயானால் அவன் கைது செய்யப்பட்டிருப்பானே ஒழிய ஒருபோதும் அங்கு நிறவெறிக்கு தீர்வு பிறந்திருக்காது.

அன்று கோபம் கொண்டு நிறவெறியால் தள்ளிய அந்த வெள்ளை அதிகாரியின் பெயருக்கு சரித்திரத்தில் இடமில்லை.ஆனால் அன்று முதல் வகுப்பில் இடமில்லை என நிறவெறியோடு தூக்கியெரியப்பட்டபோதும் தனது ரௌத்திரத்தை அடைகாத்துக் கொண்டு மக்கள் எழுச்சிக்கு வித்திட்ட அன்றைய இளைஞரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியே சரித்திரமானார்.

ஆகவே தோழர்களே!
நாம் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பினும் நமது ரௌத்திரத்தை நாம் சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை என்றால் நமது நியாயம் கூட மற்றவர்களுக்கு அநியாயமாகவே படும்.ஆதலால் ரௌத்திரம் பழகுவோம்...!

புதன், 16 செப்டம்பர், 2009

ஊனம் என்றால் என்ன..?

ஊனமென்பது யாதெனில்.....
மங்கிய ஒளியும் இருண்ட பார்வையும்
கொண்டோரல்ல குரூடர்-மாறாக
கெட்டவை கண்டும் காணா செருக்குடன்
கடந்து செல்வோர் குரூடர்!

ஊனமென்பது யாதெனில்.....
மௌனம் உடைத்து வார்த்தைகள் தொடுக்க
முடியாதவரல்ல ஊமை-மாறாக
உள்ளதை சொல்ல உள்ளம் நடுங்கி
உண்மையை மறைப்போர் ஊமை!

ஊனமென்பது யாதெனில்....
ஒலிகள் உணரா செவிகள்
கொண்டோரல்ல செவிடர்-மாறாக
சக உயிரின் ஓலம் கேட்டும்
உயிர் துடிப்பற்றிருப்பர் செவிடர்!

ஊனமென்பது யாதெனில்.....
கைகள் நலிந்து கால்கள் இழந்தவருக்கல்ல
ஊனம்!-மாறாக
கடமையை செய்ய காசுக்காக நீளும் கரங்களும்,
கண்ணியமற்று திரியும் கால்களும்
கொண்டிருப்போரே ஊனமுற்றோர்!

சனி, 12 செப்டம்பர், 2009

நினைவில் நின்றவள்...


நான் அவளை மீண்டும் பார்ப்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை...அதுவும் அவளை இப்படி ஒரு சூழலில் சந்திப்பேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.சில விஷயங்கள் எப்பவும் இப்படித்தான் நாம் நினைக்கும் போது அவை நடப்பதில்லை ஆனால் நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்தர்பத்தில் அவை நிகழ்ந்து விடும். வாழ்வின் சுவாரஸ்யங்களே இவை தான்.....

சில சமயங்களில் சினிமாக்களையும்,கதைகளையும் விட வாழ்வின் யதார்தங்களில் நாம் நம்பமுடியாத நிகழ்வுகளை காண நேரிடும். அப்போது நம்மிடம் எச்சங்களாய் மிச்சமிருப்பது.... ஆச்சர்யங்கள் கலந்த மௌனமும்,அதிகப்படியான தடுமாற்றமும் தான்.

ஞாயிற்று கிழமை ஆதலால் காலையில் கோயிலுக்கு அழைத்து போய்விட்டு என் மனைவியை அவளது அம்மா வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் என் செல்போன் சினுங்கியது.குமார் அழைத்து கொண்டிருந்தான்.வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு.அவன் அழைப்பை எடுத்தேன்..,”மச்சான்! என்னடா..எதுவும் அவசரமா...? நான் அவள கூட்டிட்டு அவ ஆத்தா வீட்டுக்கு போயிட்டிருக்கேன்....ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு கூப்பிடுறியா...?”

“கொஞ்சம் அவசரந்தான்....சரி நீ போய் அவள விட்டுட்டு உடனே கால் பண்ணு...”என்றான்.

செல்லை பையில் போட்டு விட்டு வண்டியை எடுத்தேன்.

“என்னங்க போன்ல யாரு..?”இந்த கேள்வியை யார் கேட்டிருப்பார் என சொல்ல வேண்டியதில்லை

“குமார் தாண்டி பேசுனான் ஏதோ அவசரமா(ம்)... அதான் ஒண்ணைய உங்க ஆத்தா வீட்டுல விட்டுட்டு கூப்புடுறேன் சொன்னேன்..”

“ஏன்! மாமியார் வீடுன்னு சொல்ல கூடாதா...அது என்ன ’எங்க ஆத்தாவீடு’ன்னு சொல்றீங்க...உங்களுக்கு எப்பவும் இப்படித்தான்...”

“மாமியார் வீடுன்னா....போலிஸ் ஸ்டேஷ்ன்னு அர்த்தம்மா... அதான் அப்படி சொன்னேன்....”மழுப்பி பார்த்தேன்...எப்படித்தான் இப்படி ஒவ்வொரு வார்த்தையிலையும் தப்பு கண்டு பிடிக்கிறாள்களோ!

“இந்த வாய் மட்டும் இல்லைனா நாம எதுக்கு தான் ஆவோமோ... நேரா பார்த்து வண்டிய ஓட்டுங்க...?”

நல்லவேளையாக அவ ஆத்...இல்ல எங்க மாமியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.அவள் இறங்கியவுடன் செல்போனை எடுத்து குமாருக்கு கால் செய்தேன்.

“வீட்டுக்குள்ள கூட வராம அதுக்குள்ள என்ன அவசரம்...”

“இல்லடீ அவன் தான் அவசரம்ன்னு சொன்னான்...”

“அவசரம்ன்னா கூட நீங்கதான் கால் பண்ணனுமா...ஏன் இப்ப கூட உங்க ஃப்ரண்டு கூப்பிடமாட்டாரோ... நல்லா வந்து சேந்திருக்காங்கலே...”எந்த வஞ்சகமும் இல்லாம என்ன வையிற மாதிரியே அவனையும் வஞ்சா....சமீபத்துல வந்த படத்துல ஒரு டயலாக் வருமே அதே மாதிரி சொல்லனும்னா....’பட்! அவளோட இந்த நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது’.

இந்த களோபரத்துக்குள் குமார் லைனுக்கு வந்துவிட்டான்.

“என்னடா! என் தங்கச்சிக்கிட்ட ஏதோ வாங்கி கெட்டுற போல...”

“ஆங்! எல்லாம் உன் பெருமைய பத்திதான் பேசிக்கிட்டிருந்தோம்...சரி அத விடு ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னியே...”

“மச்சான்...ஒண்ணுமில்லடா...உன் ரத்தம் என்ன குரூப்....”

“ஏண்டா! ரத்த காட்டேரி எதுக்குடா கேக்குற...யாருக்கும் அவசரமா தேவப்படுதா..? நான் ஓ பாஸிடிவ்டா”

“டேய் B பாஸிடிவ் பிளட் அவசரமா வேணும்டா...யாருக்குன்னு தெரியல நம்ம 'BLOOD' ராஜாதான் போன் பண்ணி சொன்னான்.ஏதோ ரொம்ப அவசரமாம்... G.H-க்கு போகணுமாம்...”

“நான் UNIVERSAL DONOR தானடா..அதுவும் இல்லாம அது ஒண்ணும் RARE GROUP இல்லையேடா...”

“அதெல்லாம் சரிதான்... ஆனா ஆப்ரேஷன் அப்ப முதல்ல FRESH BLOOD ஏத்திட்டு பிறகுதான் COLLECTED BLOOD-ஓ அல்லது ஒண்ண மாதிரி DONOR BLOOD-ஓ தேவப்பட்டா ஏத்துவாங்களாம்....சரி இப்ப உனக்கு தெரிஞ்சவங்க B-positive யாரும் இருக்காங்களா...”

“மச்சான்! என் தம்பி B-positive தாண்டா...”

“நல்லதா போச்சு சரி அவன உடனே கூட்டிட்டு GH-வந்திடு... நானும் வந்திடுறேன்”

“சரிடா! இன்னும் பத்து நிமிஷத்துல வந்திடுறோம்...”அவனது காலை துண்டித்துவிட்டு என் தம்பிக்கு போன்போட்டு அவனிடம் விஷயத்தை சொல்லி அவனை GH-க்கு வரச் சொல்லிவிட்டு....என் மனைவியிடமும் விஷயத்தை சொல்லி விட்டு நானும் விரைந்தேன். நிற்க.

அப்போது கூட எனக்கு அவளது நினைவுகள் வரவில்லை.ஏனென்றால் நான் இத்தனை ஆண்டுகளில் அவளை கிட்ட தட்ட மறந்து விட்டிருந்தேன் என்பதே என் மனம் இப்போதும் ஏற்க மறுக்கும் உண்மை.

அவ்வளவு ஏன் ரத்தம் தேவைபடுபவர் ஆணா...?பெண்ணா..? என்று கூட தெரியாத நிலையில் அவளுக்கு தான் ரத்தம் கொடுக்க போகிறோம் என்பதை அப்போது நான் அறிந்திருக்க கொஞ்சமும் ஞாயமில்லைதான்.

ஆனாலும் ஏதோ ஒன்று என்னுள் உந்துகிறது.என்னையும் அறியாமல் நான் பதைக்கிறேன்.கொஞ்சம் படபடப்பாகவும் உணர்கிறேன்.அதற்கான காரணமும் புரியவில்லை.உண்மைதான்.அந்த எனது பதபதைப்பையும்,துடிதுடிப்பையும் இப்போது நினைத்து பார்க்கும் போது தான் தெரிகிறது என்னையும் அறியாமல் ஏதோ ஒரு உள்ளுணர்வால் அந்த நாளுக்கான சிறப்பை நான் உணர்ந்துவிட்டிருந்தேன் என்று.

இந்த தவிப்புகளுக்கிடையில் ஒருவழியாக GH-க்கு வந்து சேர்ந்தேன். குமார் எங்களுக்காக வாசலில் காத்துக் கொண்டிருந்தான்.சொல்லி வைத்தாற் போல் என் தம்பியும் வந்து சேர்ந்தான்.

“அண்ணே! யாருக்கு அடி பட்டிருக்கு....என்ன பிரச்சனை....இவன் வேற உடனே கிளம்பிவான்னு மொட்டையா சொல்லிட்டான்”என்று என்னை சுட்டியபடி குமாரிடம் கேட்டான் என் தம்பி.

“ஏதோ ஒரு பொம்பளக்கி மண்டையில சரியான அடி போல...மாடி படி இறங்கும் போது வழுக்கி கீழ விழுந்திருச்சாம்...”என்று விளக்கியபடி எங்களை ரத்தம் பரிசோதிக்கும் இடத்திற்கு அழைத்து போனான். என் தம்பியின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டு....ரத்தம் எடுக்கப்பட்டது.ரத்தம் கொடுத்து முடிந்தவுடன் அவனுக்கு குடிப்பதற்கு குளிர்பானம் கொடுக்கப்பட்டது.அவன் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட பிறகு....

”அண்ணே! பேஷண்டை பார்த்திட்டு போயிடலாமா...?” என குமாரிடம் கேட்டான்.எனக்கும் அப்படி தோன்றியதால்,”என்னடா!மாப்ள பாத்திருலாம்ல...”

“அதுக்கு என்னடா வாங்க...” என்று அழைத்து சென்றான்....ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு செய்வதால் ICU-வில் இருப்பதாக சொன்னான்.அந்த கணம் வரை கூட அவளது நினைவுகள் எனக்கு வரவில்லை.எங்களை ICU-பக்கத்தில் நிற்க வைத்து விட்டு அருகிலிருந்த நர்ஸிடம் விஷயத்தை சொல்லி அனுமதி கேட்டான்.அவள் மிகுந்த தயக்கத்திற்கு பிறகு...”இரண்டு நிமிஷ்ம் தான்...இரண்டு பேர் மட்டும் போங்க...” என்று அனுமதித்தாள்.

நானும்,என் தம்பியும் உள்ளே சென்றோம்.....

அவளை...அவளை.... நான் அங்கே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை....அதுவும் இந்த நிலையில்.....என் பள்ளிப் பருவத்தில் நான் பற்றிய அந்த கரங்களா இப்படி....என் கன்னங்களையும்,நெற்றியையும் ஈரமாக்கிய இதழ்களா இப்படி...உலர்ந்து போயிருக்கின்றது....ஒளி பொருந்திய
அந்த கண்களா இன்று இருளடைந்து போயுள்ளது.....அதற்கு மேல் அங்கே என்னால் நிற்க முடியவில்லை.என் நிலையுணர்ந்தவனாய் என் தம்பி,”வா...போலாம்...” என்றான்.

கதவை திறந்து வெளியில் வந்தோம்,வெக்கை முகத்தில் அப்பியது.என் நண்பனின் தோள் பற்றினேன்,”மச்சான்!தம்பி இரத்தம் கொடுத்தது யாருக்கு தெரியுமாடா...”

“யாருடா....” குமார்

“டேய் மச்சான்! அது எங்க ஸ்கூல் ஆயாடா...”

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

இனி இவர்கள்...நம் தோழர்கள்...


அவர்களிடம் நாம் ஜாதி,மதம்,இனம்,மொழி எதையும் பார்பதில்லை.....

ஏன்? அவர்களை நாம் உயர்திணையாக கூட பார்ப்பதில்லை.....

அஃறிணைகளிடம் காட்டும் பரிவையும்,அக்கறையையும் கூட அவர்களுக்கு நாம் வழங்கியதில்லை.....

அவர்களை நமது கேலிப் பேச்சுக்களைத் தவிற வேறு எதுவும் தீண்டுவது இல்லை......

குடும்ப உறவுகள் துவங்கி.... நண்பர்கள்,சுற்றம் ,சமூகம் என திரும்பிய பக்கமெல்லாம் இவர்கள் எதிர் கொள்வது எல்லாம் கேலியும்,கிண்டலும், நிராகரிப்புமே !

வேற்றுமையில் ஒற்றுமை என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த ஜனநாயகத்தின் எந்தக் கதவுகளையும் அவர்களுக்காக நாம் இன்று வரை மறந்தும் கூட திறந்து விடவில்லை.....

இத்தனைக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குற்றம் என்று கூறும் எதையும் அவர்கள் செய்துவிடவில்லை.மனிதர்களாக பிறந்ததை தவிற......

பின் ஏன் இவர்கள் திரும்பிய திசையெல்லாம் நிராகரிக்கப்பை சந்திக்கிறார்கள்...?

நிராகரிப்புக்கு நிகரான வலியை மரணம் கூட மனிதனுக்கு தருவதில்லை.ஆனால் ஏன் இவர்களுக்கு இந்த நிலை...? யார் இவர்கள்...?

மிகச் சமீபத்தில் இந்த சமூகத்தால் திருநங்கை என்னும் ‘திரு’ நாமம் சூட்டப்பட்டு ஆதரவற்ற அபலைகளாக வாழும் எம் தோழர்களே..இவர்கள்

நமது திசுள்களில்(CELLS) இருபத்தி மூன்று ஜோடி நிறப்புரிகள்(CHROMOSOMES) இருக்கும்.அதில் உள்ள இருபத்திமூன்றாம் ஜோடி நிறப்புரியே நமது பாலினத்தை முடிவு செய்யும்.அதாவது XX-என்று இருந்தால் அது பெண்.XY-என்று இருந்தால் அது ஆண்.ஆனால் ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு நிறப்புரிகள் கருவின் வளர்ச்சி நிலையின்(MEIOSIS) போது சரியாக பிரிக்கப் படாமல் மிக அதிக அளவிலோ அல்லது மிக குறைந்த அளவிலோ பிரிக்கப்படுவது உண்டு.இதை NON-DISJUNCTION என்று சொல்வார்கள்.அதன் விளைவாக DOWN SYNDROME,PATAU SYNDROME,EDWARD SYNDROME,KLINEFELTER SYNDROME,TURNER SYNDROME,TRIPLE X SYNDROME,XYY SYNDOME போன்ற பலவகையான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

X அல்லது Y நிறப்புரிகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது தான் அவர்களது உடல் அளவிலான மாற்றங்களுக்கு காரணம்.இது ஒரு வகை பாலின ஊனம் மட்டுமே.ஆனால் இதற்காக அவர்களை ஏதோ பெரிய குற்றம் செய்தவர்களை போல நடத்துவது கொடூரம்.இந்த அநீதி அவர்களுக்கு நேற்று இன்று இழைக்கப்பட்டதல்ல.

வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் புரியும் நாம் இவர்களை எவ்வளவு இழிவாகவும்,கேவலமாகவும் பதிவு செய்தும் நடத்தியும் வந்துள்ளோம் என.....

நிப்ரூ(NIBRU) என்னும் திருநங்கையை நின்மா(NINMAH) என்னும் பெண் தெய்வம் களிமண்ணை கையில் பிடித்து உருவாக்கியதாகவும் அவன் பிறப்புறுப்பு எதுவும் இல்லாது இருந்ததால் அவனை அரசனுக்கு தலைமை அடிமையாக நியமித்ததாகவும் ஒரு புராணக்கதை சுமேரியன் நாகரீகத்தில் நம்பப்பட்டது.அதாவது சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

அதேபோல் மகாபரதத்திலும் ஒரு கதையுண்டு....பாண்டு மைந்தர்களில் ஒருவரான அர்ஜூனனால் கவரப்பட்டு கர்பமாகிறாள் வேடுவப்பெண்ணான நாகக்கன்னி.அதன் விளைவாக அவளுக்கும்,அர்ஜூனனுக்கும் அரவான் பிறக்கிறான்.

குருஷேத்திர யுத்ததில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணங்களும் பொருந்திய ஒருவனை மனிதப்பலியாக கொடுக்க வேண்டும் என அரூடம் கூறப்படுகிறது.

அதற்கிணங்க சாமுத்திரிகா லட்சணங்கள் பொருந்தியவர்களாக மூவர் முன்னிறுத்த படுகிறார்கள்.அவர்கள் அர்ஜூனன்,கிருஷ்ணர் மற்றும் அரவான்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் மகன் செத்தாலும் பரவாயில்லை தான் வென்றால் போதும் என அர்ஜுனன் ஒதுங்கி கொள்கிறான்.முக்காலும் உணர்ந்த... எல்லாவற்றையும் தீர்மானம் செய்ய கூடிய... உலகிற்கே கீதாஉபதேசம் செய்த... கடவுளின் அவதாரமான கிருஷ்ணரே கூட ஜெகா வாங்கிக் கொண்டுவிட.... அப்பாவி அரவானை பலியிட முடிவு செய்கிறார்கள்.

அரவானும் அதை ஒத்துக்கொள்கிறான் ஒரு கண்டிஷனோடு....அதாவது அவன் தனது இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒருநாள் இல்லற வாழ்வு நடத்த விரும்புவதாக தெரிவிக்கிறான்.ஆனால் அவனை மணக்க மூன்று லோகத்திலும் ஒருத்தி கூட சம்மதம் தெரிவிக்கவில்லை.கடைசியாக ”பரமாத்மாவான” கிருஷ்ணரே மோகினியாக அவதாரமெடுத்து அவனுடன் இணைகிறார்(ஏதோ அவரால் முடிந்தது).ஒருவழியாக ஒருநாள் இல்லற வாழ்வு முடிந்து மறுநாள் பலிகளம் செல்கிறான் அரவான்.

இந்த புராணக்கதையை அடிப்படையாக கொண்டு தான் இன்றும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கூவகம் கிராமத்தில் இருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமியன்று பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் ஒன்றுகூடி தங்களையே மோகினியாக சித்தரித்து கொண்டும் முந்தைய நாளில் தங்களுக்கு தாங்களே தாலி கட்டிக்கொண்டும் மறுநாளில் அந்த தாலியை அறுத்து கொண்டும் அழுகிறார்கள்.....

புராணங்கள் கூட தேவலாம் என்ற அளவில் தான் இவர்களது வாழ்வின் யதார்த்தமான நடைமுறைகள் இருந்து வருகிறது.

ஆம் தோழர்களே!....

மண்வெறி பிடித்த மன்னர்களால் படையெடுக்க படும் போது போரில் தோற்ற மன்னருக்கு வாரிசுகள் இல்லையென்றால் இடைக்கால பலி ஆடுகளாக திருநங்கைகளை நியமிக்கும் பழக்கம் இருந்ததாக வரலாற்று குறிப்புகள் சொல்கிறது.அதேபோல் அந்தப்புரங்களில் “நம்பிக்கைகுரிய” காவலர்களாகவும் நியமிக்கப் பட்டார்கள். நல்ல அரசுச்சம்பளம்... நிம்மதியான வருவாய்... என நினைத்து வறுமையில் வாடிய பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளில் ஒன்றை உறுப்பறுத்து அரண்மனைகளுக்கு அனுப்பி வைத்த சம்பவங்களும் வரலாற்றில் உண்டு.மேற்கித்திய நாடுகளில் பதினாறாம்,பதினேழாம் நூற்றாண்டுகளில் கூட மன்னர்களுக்கு மூத்திரசட்டி ஏந்துவது போன்ற பல கொடுமையான பணிவிடைகளுக்கு திருநங்கைகள் உபயோகப் படுத்தப்பட்டதாக வரலாறுகள் உண்டு.எந்தவித மயக்க மருந்துகளும் இன்றி பிறப்பு உறுப்பிகளை அறுத்து பாலின மாற்றம் செய்யப்படும் கொடூரங்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இப்படியாக அடிமைகளாகவும்,பலியாடுகளாகவும் தான் எல்லா இனக்கூட்டங்களிலும்....எல்லா நாகரீகங்களிலும்.... எல்லா காலக்கட்டங்களிலும்... நடத்தப்பட்டு வந்துள்ளார்கள்.

அந்த காலம் தொட்டு இன்றுவரை இவர்களை அந்தப்புர காவலர்களாகவே இந்த சமூகம் சித்தரிக்க முயல்கிறது.பாலியல் தொழில் செய்வதற்கே இவர்கள் பிறப்பெடுத்துள்ளார்கள் என இன்னும் பல மூடர்கள் நம்புவதே அதற்கு காரணம்.ஆணுக்கு பெண் சரி நிகர் சமம் என்று தனது பாடல்களால் சமத்துவ வேள்வி சமைத்த முண்டாசுக் கவிஞன் கூட “அலிகளுக்கு இன்பமுண்டோ...” என்றே வினவினான்.அந்தோ பரிதாபம் அறியாத மூடர்கள் என் செய்வர்...ஆனால் அவர்களது மூடத்தனத்திற்கு மூட்டை கட்டும் விதமாக பல்வேறு இன்னல்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு தங்களது சமூக அங்கீகாரத்திற்காக மிக நீண்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் எமது தோழர்கள்.

ஒரு சிறு உதாரணம்...

பல இன்னல்களையும்,அவமானங்களையும் கடந்து ஏன் பெற்றவர்களாலேயே நிராகரிக்கப்பட்டு இருந்தாலும் கூட தனது தன்னம்பிக்கையாலும்,விடாமுயர்சியாலும் பரதகலையில் பல சாதனைகள் புரிந்து வரும் நர்த்தகி நடராஜ் என்பவர் தான் திருநங்கை என்னும் முத்திரையோடு முதல் கடவுச் சீட்டு(PASSPORT) வாங்கியவர்.அதாவது இருபத்தியோரம் நாற்றாண்டில் தான் மூன்றாம் பாலினம் இருப்பதாக இந்த சமூகம் ஒத்துக்கொள்ள முனைகிறது....இதைவிட எமது தோழர்களின் நிலை சொல்ல வேறு உதாரணங்கள் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

தோழர்களே!

இப்படியாக காலம்காலமாக வெறும் அவமானங்களையும்,கேலிகளையும் மட்டுமே சரித்தரங்களாக சுமந்து கொண்டு வாழ்வில் சமத்துவத்திற்காக ஏங்கும் அந்த எளிய ஜீவன்களின் மேல் நாம் எப்போது கவனம் செலுத்தப் போகிறோம..?.உலிகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்க முனைவோர் கூட இவர்களை வெறும் கேலிச் சித்திரங்களாக பார்க்கும் கொடுமை எப்போது தீரும்...?

வாருங்கள்! பஞ்சமா பாதகர்களின் ஏய்ப்புகளுக்கு பலியாகி கிடக்கும் எம் தோழர்களின் வாழ்வு மலர......அவர்களை மனிதர்களாக காண வாருங்கள்....

இனி இவர்களும் நம் தோழர்கள் தான்....

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

விடியலை தேடி...


விடியலுக்கான ரேகைகள் வானில் படர்ந்த வண்ணம் இருந்தது. ஆனால் நகரம் இன்னும் விழிக்கவில்லை.
ஒரு நூறு மீட்டர் இடைவெளியில் எனக்கு முன்னால் ஒருவர் என்னைப்போல் நடைபயிற்சியில் இருந்தார்.
முதுமையின் காரணமாக அவரது நடையின் வேகம் சற்று நிதானமாகவே இருந்தது.
அதனால் ஒரு நிமட நடையிலே அவரை கடந்துவிட்டேன்.

சரி! தனியாக நடப்பதைவிட அவரிடம் பேசிக்கொண்டே நடக்கலாம் என தோன்றியதால் சற்று நிதானித்து அவரை என்னிடம் நெருங்க வைத்தேன்.முதுமையின் தளர்ச்சி அவரது நடையில் மட்டுமல்லாமல் முகத்திலும் பரவியிருப்பதை காண முடிந்தது.

“ஐயா! இதுக்கு முன்னாடி உங்கள இந்தப் பக்கம் பார்த்ததில்லையே!...இப்பத்தான் மொத தடவையா இந்தப்பக்கம் வாக்கிங் வாரீங்களா...?”

“அடடே!... தம்பி கரெக்டா சொல்லிட்டீங்களே நீங்க ரெகுலரா இந்தப்பக்கம் நடக்குறவர் போல அதான் சரியா கண்டுபிடிச்சிட்டீங்க...”

“ஆமாய்யா! வேற ஏரியாவுல எங்கயும் இதுக்கு முன்னாடி வாக்கிங் போனதில்லையா.....?”

“இல்லைய்யா! சொன்னா நம்ப மாட்டீக நான் பொறந்ததுல இருந்து இன்னூ வரைக்கும் விடியலை பார்த்ததே இல்லன்னா பார்த்துக்கோங்களேன்...”

“அப்படீன்னா இப்ப என்ன திடீர்ன்னு......?”

“அத ஏன் கேக்குறீங்க தம்பி நின்னது நிக்க நேத்து திடீர்ன்னு மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டேன்...இதுவரைக்கும் அப்படி ஆனதே இல்ல எம்புள்ளைவளும் பதறி அடிச்சு என்ன ஆஸ்பத்தரிக்கு கூட்டிட்டு போச்சுங்க அங்க.... தெரியாதா நம்ம டாக்டர்மாருகள பத்தி அந்த டெஸ்டு எடு இந்த டெஸ்ட் எடுன்னு சொல்லி நல்லா கறந்திட்டு...சக்கரவியாதி இருக்கு,ரத்த அழுத்தம் இருக்கு அப்படி இப்படீன்னு ரொம்ப பயமுறுத்திட்டாங்க.....அதான் இப்புடி....”

“என்னையா இது மொதல்லே கவனமா இருந்திருந்தா அப்படியெல்லாம் ஆயிருக்காதில்லையா...”

“என்ன தம்பி செய்ய பட்டாதானே புத்தி வருது...இல்லனா நம்ம பாட்டுக்கு தானே நாம அலைவோம்...என்ன சொல்றீங்க...?”

“அதுவும் சரிதான்...ஐயா! உங்கப் பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா...?”

“எம் பேரு ’சுதந்திரம்’ தம்பி......!”

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

என்னை தேடும் நான்...


உள்ளம் குமைந்து கொண்டிருக்கிறது
ஆசைக்கும் யதார்ததிற்குமான இடைவெளியில்.......

விண்ணில் பறக்க வானவில் உதவுமா?-என
சோளி போட்டு சோதிடம் பார்க்கிறேன்

கண்ணீர் துடைக்க கைகள் வேண்டி
கல்லறைச் சுவர்களில் கறைந்து போகிறேன்

வாழ்வை காண வெளிச்சம் வேண்டி
இரவல் விடியல் கேட்கிறேன்

செய்து முடித்த தவறுகளை திருத்த
கடந்து போன காலம் வேண்டுகிறேன்

மறந்து போன பாதை தேடி
பயணம் செய்ய பார்க்கிறேன்

சொல்லி முடித்த சொற்களை அள்ளி
சொப்பனமாய் மாறச் சொல்கிறேன்

மண்ணில் விழுந்த மழைதுளியை-மீண்டும்
ஒருமுறை நனைக்க நினைக்கிறேன்

காலம் கடந்த ஞானம் கண்டும்
முடிவின் முடிவில் -ஒரு
தொடக்கம் தேடுகிறேன்.....

சனி, 8 ஆகஸ்ட், 2009

ஒரு தங்கப்பெட்டியும்...ஆயிரம் முத்தங்களும்...


தனது எட்டு வயது மகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் மரத்தை ஜோடனை செய்ய தான் வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட தங்கத்தாள்களை கிழித்து கொண்டிருப்பதை பார்த்ததும் அவருக்கு கோபம் வந்தது.அவர் எச்சரித்தும் கேட்காமல் மீண்டும் கிழித்தும்,அதை வைத்து விளையாடிக் கொண்டும் இருந்ததை கண்டு குழந்தையை சரமாரியாக அடித்து திட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.வெகு நேரம் கழித்து அவர் வீட்டுக்கு திரும்பி வருகையில் அவரது மகள் தூங்கிவிட்டிருந்தாள்.

அழுது வீங்கியிருந்த குழந்தையின் முகத்தை கண்டவுடன் தனது தவறையுணர்ந்து அதை வாஞ்சையுடன் தடவி கொடுத்தபடி அவரும் தூங்கிவிட்டார்.

அதிகாலையில் ஏதோ பிஞ்சு விரல்கள் தன்னை வருடுவதாக உணர்ந்தவர் விழித்து பார்க்கையில் அவரது மகள் கையில் அழகான ஒரு சிறு தங்கப்பெட்டியுடன் அவரது பிறந்த நாளைக்கு வாழ்த்து சொல்லி அந்த தங்கப்பெட்டியை பரிசளித்தது.தனக்கு பரிசளிப்பதற்காக தான் அந்த தங்கத்தாள்களை நேற்று தனது மகள் கிழித்து கொண்டிருந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவர் கண்கள் பனிக்க தனது மகளை வாஞ்சையுடன் அனைத்து கொண்டு மன்னிப்பு கேட்டார்.

அந்தப் பெட்டிக்குள் தான் மிக விலையுயர்ந்த பரிசுப்பொருள் ஒன்றை வைத்திருப்பதாக அவரது மகள் சொன்னவுடன் ஆசையோடு அந்தப்பெட்டியை திறந்து பார்த்தவருக்கு அதில் ஒண்ணும் இல்லாததை கண்டவுடன் ஏமற்றம் ஏற்பட்டது.தனது மகள் தன்னை ஏமாற்றி விட்டதாக கோபப்பட்டவரிடம் அழுது கொண்டே அவரது மகள்,”அப்பா!உங்களுக்காக அதில் நான் ஆயிரம் முத்தங்களை வைத்திருந்தேனே அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா...”என்றது.

இப்போது அந்தப் தங்கப்பெட்டிக்குள் இருக்கும் முத்தங்களை அவரால் நன்றாக பார்க்க முடிந்தது.ஆனால் காலனின் கொடுங்கரங்கள் அந்தப் பிஞ்சு மொட்டினை பறித்துவிட்டிருந்தது.பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவருக்குள் அவரது குழந்தையின் குரலே மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்க... கண்களில் நீர் உருண்டோட அவரது மகளின் நினைவிடத்தில் நின்றபடி இருந்தவருக்கு அந்தப் பெட்டிக்குள் இருக்கும் முத்தங்கள் தான் இப்போது ஆறுதலாய்.....

எப்போதோ படித்தது இந்த ஆங்கிலச் சிறுகதை.

நாம் எப்போதும் இப்படித்தான்....

நம்மை சுற்றியுள்ள அற்புதங்கள் நமது கண்களுக்கு தெரிவதேயில்லை அதை நாம் தொலைக்கும் வரை.பிரியும் கணங்களில் தான்
உறவின் ஆழம் உணர்கிறோம்.உண்மை உணர்கையில் யாருமற்று தனித்து விடப்படுகிறோம்.

ஆதலால் காதல் செய்வோம்.... நம்மையும் நமது வாழ்வின் அற்புதங்களான நம்மை சுற்றியுள்ள அனைத்து உயிர்களையும்.....

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

அந்த ஒரு நாள்....



”ஏ.....ய்! தேவுடியா.....ஆ பயலே...இன்னொரு தடவ இந்த பக்கோம் வந்த அறுத்துருவேன் அறுத்து....”என சீறி முடித்து காரித் துப்பியவள்..
“ஒனக்கு என்ன வேணும்....ஏன் இப்புடி நிக்க...”என்று சினந்தாள்.
“ஒண்ணுமில்ல வின்சென்ட் அண்ணந்தான்......போன் பண்ணிருப்பாரே.....”
“ஆங்...ஆள் எங்க...?”
“கீழ கடைல நிக்காப்ல.வரச் சொல்லவா? பையன் புதுசு பெரிய எடோம் வேற...”
“எதுவும் வம்பு தும்பு ஆயிராதே..?”
“இல்லக்கா அதெல்லாம் ஒண்ணூ ஆவாது நம்ம கஸ்டமர்...அந்த வெள்ள ஜிப்பாகாரர் சொல்லித்தா..ன்.....வந்திருக்காப்ல”
“சரி வரச் சொல்லு...ஆங் எல்லாத்தையும் சொல்லி அனுப்பு...”

கீழிறங்கி வந்தவன் நேரே என்னிடம் வந்து,”சார். மேல மூணாவது ரூம்மு... எல்லாமே பேசியாச்சு....வேற ஏதாவது...?”என்று தலையை சொறிந்தவனிடம் இருநூறு ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு,”வேற ஒண்ணும் பிரச்சனையாயிராதே...?”எனக் கேட்டேன்.

“சார்,இது நம்ம ஏரியா நீங்க பாட்டுக்கு போங்க நா இங்க தான் இருப்ப(ன்) என்ன வேணும்னாலும் என் செல்லுக்கு கூப்பிடுங்க ஓடியாந்திர்ரேன்...”என்று சிரித்தவனிடம் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் மாடியேறினேன்.

ஒ! நான் யார்...?ஏன் இங்க வந்தேன் சொல்ல..ல இல்லையா?

நானும் திவ்யாவும் ஏழு வருஷம் ”உயிருக்கு உயிரா” காதலிச்சோம்.எனக்கு ஒண்ணுனா அவ பதறிடுவா.எம்மேல் அவ அவ்வளவு பொசசிவ்வா இருந்தா....ஆமா! இதெல்லாம் போன மாசம் வரைக்கும்.

இப்போ..... அவளுக்கு நாளைக்கு கல்யாணம். எவனோ ஒரு ”இளிச்சவாயன்” அவளுக்கு மறுபடியும் சிக்கியிருக்கான்.....என்னப் பொறுத்த வரைக்கும் காதல்ங்கிறது ஒரு ”நம்பிக்க” ஆனா அவ அதக் கெடுத்துட்டா அதுக்காக தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நான் கோழையும் இல்ல.....அவள கொலை பண்ணுற அளவுக்கு கெட்டவனும் இல்ல...அதுக்காக அவள பழிவாங்காம என்னால சும்மா இருக்கவும் முடியல....அதனாலதான் இங்கவந்தேன்....பொம்பள அவளுக்கு நாளைக்கு ஒரு ராத்திரிக்கு சாந்தி முகூர்த்தம்னா ஆம்பள எனக்கு ஒவ்வொரு ராத்திரியும் சாந்தி முகூர்த்தம்தான்.

எங் கத கிடக்கட்டும்....இப்போது மாடியில் உள்ள மூன்றாவது அறை முன் நின்று கொண்டிருந்தேன்.

கதவு பூட்டப்படாமல் சாத்தி வைக்க பட்டிருந்தது.மெல்ல கதவை திறந்தேன். குண்டு பல்பு ஒளியில் அறை மங்கலாக இருந்தது.டி.வியில் ஏதோ ஒரு லோக்கல் சேனலின் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு கட்டிலும் அதன் மேல் உள்ள மெத்தையில் இருதலையணைகளும் திசைக்கு ஒன்றாய் கிடந்தது. நான் அறையை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கையிலே பாத்ரூம் கதவை திறந்து கொண்டு முகத்தில் அப்பியிருந்த ஈரத்தை துடைத்த படி அவள் வெளிப்பட்டாள்.

ஆள் மாநிறம் கொஞ்சம் பெருத்த சரீரம் நைட்டி அணிந்திருந்ததால் மற்றவைகளை சிறப்பாக எடுத்துக் கூற முடியவில்லை.இருபத்தி ஐந்து வயதிலிருந்து முப்பது வயது வரை இருக்கும் என அவளது முகப்பொலிவு சொன்னது.

“என்னப் பார்த்துகிட்டு அப்படியே நிக்கிறீங்க வாங்க......”என ஆரம்பித்தாள்.

எனக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.
“இல்ல யாரும் இல்லயோன்னு பார்த்தேன்.....அதான்.....”என்று இழுத்தேன்.

”என்ன இதான் முத தடவையா.....?”இந்த கேள்வி என்னை ஆச்சர்யப்படுத்தியதைவிட அவளது அனுபவத்தை உணர்த்தியது.

“இல்..ஆமா முத தடவ தான் ஏன்..?எப்புடி கண்டுபிடிச்ச... ?”

“யாரும் வந்து சொல்ல வேற செய்யணுமா...அதான் பார்தாலே தெரியுதே...” என்றபடி கட்டிலில் அமர்ந்தாள்.

“ஏன் தேவயில்லாம பேசிக்கிட்டு அதான் காசு கொடுத்தாச்சுல...”

“சாருக்கு ரொம்பத்தான் அவசரம்...”என்றபடி என்னைப் பார்த்து சிரித்தாள்.

“வேணும்னா பாத்ரூம் போய்ட்டு வாங்க...”

எனக்கும் அது தேவைபட்டதால் முகத்தை அலம்பிக் கொண்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வந்தேன்..அவள் அதற்குள் அறையை சாத்திவிட்டிருந்தாள்.இப்போது டி.வியில் சன்னமான சத்தத்தில் பழைய பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது.இப்போது சற்று தைரியம் வந்திருந்ததால் அவள் அருகில் போய் அமர்ந்தேன்.

“என்ன ஆள முழுங்குற மாதிரி பாக்குறீக....”

“இல்ல நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்த....”வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாம எதோ கேட்டுத் தொலைத்தேன்.

“இப்ப என்ன ஏன் கதைய கேக்குறதுக்கா இங்க வந்தீக....சீக்கரம்.....”என்றாள்.

அதற்கு மேல் நானும் பேச்சை வளர்க்க விரும்பாமல் வந்த வேலையில் கவனமானேன் அவளது ஒத்துழைப்புடன்......இருள் சூழந்தது.....

“தம்பீ...! வாயை துறங்க...ஆ..... சொல்லுங்க....”ஏதோ ஒளி என் கண்ணில் படர்கிறது.என் தாயின் அழுகுரல் சன்னமாக என் காதுகளில் ஒலிக்கிறது.என் கால்கள் அசைவில்லாமல் நான் படுக்கையில் இப்போதும்.....

ஒருவருடத்திற்கு முன் நான் திவ்யாவை பழிவாங்குவதாக நினைத்து கொண்டு செய்த வினைகளுக்கு இப்போது எதிர்வினையாக பால்வினை நோய்களோடு படுக்கையில்..... நாட்கள் நரகத்தில் நகர்வதாக உணர்கிறேன். நிலையற்ற கோபத்தால் தடுமாறி.... என் வாழ்க்கை தடம்மாறி.... மரணத்தை யாசித்துக் கொண்டிருக்கிறேன்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

கடனாய் ஒரு கல்வி...


நேற்று எங்கள் வங்கிக் கி்ளைக்கு ஒருவர் தன் மகனுடன் வந்திருந்தார்.அவர் தனது மகனை ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்திருப்பதாகவும் அதற்கு கல்விக்கடன் வேண்டும் எனவும் கேட்டார். நாங்கள் அவரது தொழில் குறித்தும் அவரது வருமானம்,இருப்பிடம் குறித்தும் விசாரித்தபடியே கல்விக்கடன் வழங்குவதில் ஏற்படும் நடைமுறை தாமதங்கள் குறித்தும் விளக்கினோம்.

அதனால் முதல் ஆண்டுக்கான கல்லூரிக்கட்டணத்தை அவரை முதலில் செலுத்தும் படியும்.பின்பு எங்களுக்கு கடன் வழங்க அனுமதி கிடைத்த பின்பு அவர் கல்லூரிக்கு செலுத்திய கட்டணத்தை கல்லூரியின் பெயருக்கே நாங்கள் வரைவோலையாக(DEMAND DRAFT) தந்துவிடுவோம் என்றும் அதை கல்லூரியில் கொடுத்து அவர் செலுத்திய தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெளிவுபடுத்தினோம்.

ஆனால் வந்திருந்தவரோ ஒரு ஏழை விவசாயி.அவரால் அந்த நடைமுறை யதார்தங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.அவர் தனக்கு வசதியில்லாததனால் தான் வங்கியை நாடி வந்திருப்பதாகவும் முதல் ஆண்டுக்கான கட்டணத்தையும் நாங்கள் கடனாக வழங்கிய பின்பே அவரால் கட்ட முடியும் எனவும் சொல்லிக்கொண்டிருந்தார்.

மேலும் மத்திய அமைச்சரே உத்தரவிட்ட ஒரு விஷயத்திற்கு வங்கி அதிகாரிகளாகிய நாங்கள் அதையும் இதையும் சொல்லி கடன் வழங்குவதில் தாமதப்படுத்துவதாகவும் அவரது புலம்பல்கள் தொடர்ந்தன.அவரது இந்த புரிந்து கொள்ளாத தன்மை எங்களுக்கு எரிச்சலை உண்டாக்கினாலும் அவரது தோற்றமும் தவிப்பும் அவர் மேல் பரிதாபத்தை உண்டாக்கியது.

அகவே மேற்கொண்டு ஏதும் விவாதிக்காமல் அவரது நிலை எங்களுக்கு நன்றாக புரிகிறது என்றும் அதனால் எங்களால் முடிந்த அளவு எவ்வளவு விரைவாக முடிகிறதோ அவ்வளவு விரைவாக முடித்து தருவதாக உறுதியளித்து அவரை சமாதனப்படுத்தி அனுப்பிவைத்தோம்.

தோழர்களே!

ஒரு வங்கியாளனாக மட்டுமே இருந்து இதை வெறும் சம்பவமாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை.ஏனென்றால் அந்த ஏழை விவசாயியின் நிலையிலிருந்து பார்த்தால் தான் புரியும் இது ஒரு ஜனநாயக வன்முறை என்று.ஆம்! கல்வி என்பது ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படையான கடமை.

ஆனால் இங்கு நடப்பது என்ன?

கல்வி கற்பதற்கான விஷயமாக இல்லாமல் அது விற்பதற்கான விஷயமாக மாற்றப்பட்டுள்ளது.அறுபது ஆண்டுகளுக்கும் மேலான ஜனநாயக பாரம்பரியம் கொண்ட நமது நாட்டின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போரின் கல்விக் கொள்கை என்ன தெரியுமா?
கல்வி வேண்டுமா..? காசு கொடு..! காசு இல்லையா...?கடனை எடு..!

இங்கு கல்விக்கான கட்டணத்தை குறைப்பதற்கு எந்த அரசுக்கும் வக்கில்லை.ஆனால் வங்கி அதிகாரிகளை கல்விக்கடன் வழங்கச் சொல்லி மட்டும் நிர்பந்திப்பார்கள்.இது என்ன நியாயம்?

ஒரு வங்கியின் பணம் என்பது அதன் வாடிக்கையாளர்களின் அதாவது பொதுசனங்களின் சேமிப்பேயாகும்.பொதுமக்கள் தங்களது வயிற்றை கட்டி வாயை கட்டி தங்களது உழைப்பின் ஒரு பகுதியை நாளைய தேவைக்காக அரசாங்கத்தை நம்பி அரசுடைமை வங்கிகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் அரசாங்கம் அந்தப் பணத்தை என்ன செய்கிறது? எவனோ ஒரு கல்வி வியாபாரி தின்று கொழுப்பதற்கு பொதுமக்களை கடன்காரர்களாக்கி கல்வி வியாபாரத்திற்கு துணை போகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் இப்படி கடனெடுத்து நான்கு ஆண்டுகள் படித்து வரும் இளைஞர்கள் பட்டதாரிகள் ஆகிறார்களோ இல்லையோ ஆனால் நிச்சயம் இந்த ஆட்சியாளர்களின் தயவால் பல லட்சங்களுக்கு கடன்காரர்கள் ஆவார்கள்.குடியானவர்களை கடன்காரர்களாக்கி வாங்கிய கடனுக்காக அவர்களை அடிமப்படுத்தினார்கள் அன்றைய ஜமீன்களும்,ஆண்டைகளும். அதேபோல் இன்று குடிமக்களை கடன்காரர்களாக்கி கல்வி விற்பன்னர்களையும்,பெரும் முதலாளிகளையும் கொழிக்க செய்கிறார்கள் இன்றைய அரசியல்வா(வியா)திகள்.

இதைவிட பெருங்கொடுமை என்னவென்றால் பொதுமக்களோ இவை எதையும் புரிந்து கொள்ள முடியாமல் சாமி வரம் கொடுத்தும் பூசாரி தர மறுத்த கதையாக இருக்கிறதே என்று வங்கியாளர்களின் மீது கோபம் கொள்வது தான்.

அதிகாரவர்கத்தின் இது போன்ற திட்டங்கள் முழுக்கமுழுக்க முதலாளித்துவ நாடுகளின் வழிகாட்டுதலின் பெயரிலே அமல்படுத்தப்படுகிறது.இந்த சூட்சமங்கள் ஏதும் புரியாமல் பொதுமக்களோ அரசியல்வாதிகள் விரிக்கும் மாயவலையில் சிக்குண்டு கொள்கிறார்கள்.

இனியும் இது போன்று ஏமாறாமல் இருக்க வேண்டுமாயின் ஜனநாயகத்தின் மாண்புகளை மக்கள் உணர வேண்டும்.ஓட்டுப் போடுவது மட்டுமே ஜனநாயக கடமை என்றும் அதன் பின்பு ஆட்சியமைத்தவர்கள் அடிக்கும் கூத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கும் பார்வையாளராகவே இருக்கும் தன்மையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

விடியல் காண வேண்டுமாயின் விழத்திருப்பது அவசியம்.

பட்டுக்கோட்டையார் தனது பாடல் ஒன்றில் சொன்னது போல்....
“சூழ்ச்சியில் சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டிச் சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச் சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா..........

தெரிந்து நடந்து கொள்ளடா....” என்ற யதார்த்த வரிகள் காலம் கடந்து இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.....

புதன், 29 ஜூலை, 2009

போராட்டம் வென்றது


இது ஒரு தொடர் பதிவு.”எங்கள் போராட்டம்” என்ற தலைப்பில் நான் எழுதிய முந்தைய பதிவின் தொடர்சியே இது.

தோழர்களே!

எங்கள் போராட்டம் வென்றது.தோழர்.காமராஜும், நானும் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளோம்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித கருத்துரிமைக்கு எதிரானது எங்கள் தற்காலிகப் பணி நீக்கம் என்ற முறையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள பென்சிலும் வழக்கு தொடர்ந்திருந்தோம்.சொல்லி வைத்தாற் போல் சரியாக நாங்கள் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்த இருந்த 23.07.2009 அன்று எங்கள் தற்காலிகப் பணி நீக்கத்தை ரத்து செய்யச் சொல்லி நீதிமன்றம் STAYORDER வழங்கியது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.

எனவே மிகுந்த நம்பிக்கையோடும்,உற்சாகத்தோடும் இரு சங்க தலைவர்களும் (PGBEA-PGBOU), BEFI-யின் மூத்த தலைவரும்,IOB STAFF ASSOCIATION-னின் பொதுச்செயலாளருமான தோழர்.G.பாலச்சந்திரன் மற்றும் விருதுநகர் மாவட்ட DSP-யின் முன்னிலையில் எங்கள் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது எங்கள் நிர்வாகமும் தனது இறுக்கமான சூழலில் இருந்து வெளிவரத் தயாராக இருந்தது ஒரு சாதகமான அம்சம். நிர்வாகத்தின் மனநிலையை புரிந்து கொண்ட சங்கத்தலைவர்களும் வெற்றி ஆர்பரிப்புகளுக்கு முக்கியத்துவம் தராமல் ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தைக்கு வழிசெய்தார்கள்.பல மட்டங்களில் ஏற்பட்ட புரிதல் கோளாரே இத்தகைய இறுக்கமான சூழலுக்கு காரணம் என்றும் வங்கி வளர்ச்சியே அனைவருக்கும் பொதுவானது என்ற வகையிலும் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகம் சாத்யமான வழிகளை ஆராய்வதாக உறுதியளித்தது.இறுதியாக எங்கள் தற்காலிக பணி நீக்கத்தை நீதிமன்றத்தின் ஆணைபடி உடனடியாக ரத்து செய்யவும் நிர்வாகம் ஒத்துக்கொண்டது.

அதனடிப்படையில் நாங்கள் இருவரும் 24.07.2009 முதல் எங்கள் பணிக்கு திரும்பியுள்ளோம்.

எங்களுக்காக தங்களது அன்றாட பணிகளைப் பற்றியோ குடும்பச் சூழலைப் பற்றியோ சிறிதும் யோசிக்காமல் நாங்கள் வேலைக்குச் செல்லும் வரை தாங்களும் வேலைக்கு செல்வதில்லை என்ற முடிவோடும் உறுதியோடும் சங்க அலுவலகத்தில் வந்து தங்கி எங்களுக்காக போராடி நாங்கள் மீண்டும் பணிக்கு சேர்ந்த பின்பே வேலைக்கு சென்ற தோழர்களின் உறுதிக்கு கிடைத்த வெற்றியிது.

தனது குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்கு செல்வதை ரத்து செய்து விட்டு எங்களுக்காக சங்க அலுவலகத்தில் பலியாக கிடந்து எங்களுக்கு தன் சொந்த காசில் காரோட்டியாக இருந்த ”முதலாளி” சங்கரசீனி போன்றோரின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றியிது.

“மாப்பள நீ வேலக்கி போற வர நான் வேலக்கி போக மாட்டேன்....” என்று சொன்ன பழைய பேட்டை மணி மாமா,

“என்னய சஸ்பெண்ட் பண்றத விட உன்ன சஸ்பெண்ட் பண்ணினா எனக்கு அதிகம் வலிக்கும்ன்னு நிர்வாகத்திற்கு தெரிஞ்சிருக்கு...”என்று கரகரத்த சங்கரலிங்கம் மாமா,

”ஏண்டா! உனக்கு எதாவது எழுதனும்னு தோணினா டைரில எழுது அதவிட்டுட்டு பளாக்குல எழுதுன வொயிட்டுல எழுதுனன்னு தெரிஞ்சா அப்புறம் இருக்கு உனக்கு....”என்ற உரிமையோடு என்னை கேலி பேசிய மாப்பிள்ளை அருண்,அண்ணன் சங்கர்,

“டேய்! நாங்க இருக்கோம்டா தம்பி..”என்று நம்பிக்கையூட்டிய அண்ணன்கள்,

“இந்த சின்ன வயசிலே உங்களுக்கு இந்த அனுபவம்லாம் கிடைச்சது ரொம்ப நல்லது....”என்று போனில் மட்டுமே என்னிடம் இதுவரை பேசிய தோழர்.வேணுகோபால் போன்றவர்களின் ஆதரவிற்கும்,உறுதுணைக்கும் கிடைத்த வெற்றியிது.

“எங்களுக்காக பேசப் போய்தான உங்களூக்கு இந்த நெலம....எங்களால தான உங்களுக்கு வேல போயிடுச்சாம்.....”என போனில் பரிதவித்த எத்தனையோ தற்காலிக ஊழியர்களான எமது சகோதர,சகோதரிகளின் அன்பிற்கு கிடைத்த வெற்றியிது.

”ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு தேசத்தின் எதாவது ஒரு பகுதியில் கிடைத்த சிறு வெற்றியானாலும் நம் அனைவரின் வெற்றி அது.ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சிறு தோல்வியானாலும் அது நம் அனைவரின் தோல்வியாகும்.”-சே

புதன், 22 ஜூலை, 2009

எங்கள் போராட்டம்.....


”நவீன கொத்தடிமைகள்....” என்ற தலைப்பில் சென்ற மாதம் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.அதில் எங்கள் வங்கியில் (பாண்டியன் கிராம வங்கி) பணிபுரியும் தற்காலிக பணியாளர்களின் நிலை குறித்தும்,அதன் பொருட்டு எங்கள் தொழிற்சங்கங்கள்(PGBEA-PGBOU) நடத்த இருந்த போராட்டங்கள் குறித்தும் எழுதியிருந்தேன்.

அக்கட்டுரை தோழர்.மாதவராஜின்(தீராத பக்கங்கள்) பரிந்துரையின் பேரில் BANK WORKERS UNITY என்னும் மாத இதழில் வெளியிடப்பட்டது.
அதேபோல் தோழர்.காமராஜ் (அடர் கருப்பு) அவர்களும் “அவுட் சோர்சிங்கிற்கு எதிரான ஒரு முன்னோடிப் போராட்டம்” என்ற தலைப்பில் அதில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.தற்போது அந்த கட்டுரைகளுக்காக எங்கள் இருவரையும் எமது வங்கி நிர்வாகம் 17.07.2009 முதல் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

எங்கள் தொழிற்சங்கத்தில் (PGBEA-PANDYAN GRAMA BANK EMPLOYEES ASSOCIATION) நான் செயற்குழு உறுப்பினராகவும்,தோழர்.காமராஜ் அவர்கள் துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ளோம்.ஆகவே எங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கிவிடலாம் என்ற பகல் கனவோடும்,இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித கருத்துரிமையை பறிக்கும் விதமாகவும் வழங்கப்பட்ட இந்த இடைக்கால பணி நீக்க உத்தரவை இந்திய தொழிற்சங்களுக்கு எதிரான அதிகாரவர்கத்தின் அறைகூவலாக பார்த்த எங்கள் தொழிற்சங்கம் எங்கள் வங்கி நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களை துவங்கியுள்ளது.

தோழர்களே!

எங்களை பொறுத்தவரை இந்த இடைகால பணி நீக்க உத்தரவை எங்கள் தொழிற்சங்க வாழ்விற்கான அங்கீகாரமாகவே பார்க்கிறோம்.எமது வட்டார மேலாளர் இந்த உத்திரவை எனது கிளையில் (பசுவந்தனை) வைத்து எனக்கு வழங்கும் போது எங்களது தொழற்சங்க தலைவர்கள் எனக்கு மாலை அணிவித்து பாராட்டு கோஷங்கள் எழுப்பியதை பார்த்த எங்கள் கிளை வாடிக்கையாளர்களில் ஒருவர் ஏதோ எனக்கு ’பதவிஉயர்வு’ கிடைத்துள்ளது என நினைத்து விசாரித்தார்.அப்போது தோழர்கள் சுப்பிரமணியனும்,அருண் பிரகாஷ் சிங்கும் எனக்கு ’சஸ்பன்ஷன் ஆர்டர்’ வழங்கப்படுவதாக தெரிவித்தபோது விசாரித்தவர் மட்டுமல்லாமல் அருகிலிருந்த அத்துணை வாடிக்கையாளர்களும் அதிர்ந்தே போய்விட்டார்கள்.

ஒருவகையான பெருமிதமான மனநிலையில் தான் அங்கிருந்து விருதுநகரில் உள்ள எங்கள் தொழற்சங்க அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தேன்.தோழர்.காமராஜ் அவர்களையும் என்னையும் தோழர்கள் அனைவரும் கட்டித்தழுவி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.அதிலும் எங்கள் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கமும்,தோழர்.செல்வகுமார் திலகராஜ்(PGBOU-CHIEF ADVISER) அவர்களும் தங்களது முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தொழிற்சங்க வாழ்வில் தங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் மூன்று ஆண்டு தொழிற்சங்க அனுபவம் மட்டுமே கொண்ட தொழிற்சங்க ஜீனியரான எனக்கு கிடைத்துவிட்டதாக சொல்லி என் உச்சிமுகர்ந்தது என் வாழ்வின் மிகப்பெருமையான தருணங்கள்.

பல்வேறு கிளைகளிலிருந்து அதிகம் பரீச்சயமில்லாத தோழர்கள் கூட தங்கள் ஆத்மார்த்தமான ஆதரவையும்,தோழமையையும் வெளிப்படுத்தியபோது ஏற்பட்ட உணர்வுகளை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை......

20.07.2009 அன்று மாலையில் விருதுநகரில் உள்ள எங்கள் வங்கி நிர்வாக அலுவலகத்தினுள் சேர்மேன் அறை முன்பாக அமைதியாக அமர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட தோழர்கள் எங்களது இடைகால பணி நீக்கம் ரத்தாகும்வரை அங்கிருந்து அகலப்போவதில்லை என உறுதிபட கூறி போராட்டத்தை துவக்கினார்கள். இதற்கிடையில் தகவல் கேள்விபட்டு விருதுநகரில் உள்ள சகோதர தொழிற்சங்கங்களான அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள்,விருதுநகர் மாவட்ட வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள்,BEFI தோழர்கள்,CITU,DYFI,தமுஎச,சாலைபணியாளர் துறை சங்கப் பிரதிநிதிகள்,சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் என பல தரப்பட்ட தோழர்களும் எங்களோடு தோள் கோர்க்க வந்துவிட்டார்கள்.

நிர்வாகம் போராட்டத்தை வலுவிழக்க வைக்க தன்னால் முடிந்த அத்துணை முயற்சிகளையும் மேற்கொண்டது.ஆனால் தோழர்களின் உறுதியை கண்டு நிலைகுலைந்தார்கள்.அதனை தொடர்ந்து காவல்துறையை வைத்து எங்களை அகற்றப்பார்த்தார்கள். ஆனால் காவல்துறையினர் எங்களது கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு எங்கள் தொழிற்சங்க தலைவர்களை நிர்வாகத் தரப்பினரோடு சமரச பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக தீர்த்து வைக்க முயற்சித்தார்கள்.ஆனால் நிர்வாகம் தன் பிடியிலிருந்து இறங்குவதாயில்லை.போராட்டம் தொடர்ந்தது....

ஒருகட்டத்தில் மாவட்ட இணை காவல் கண்காணிப்பாளர் வரவழைக்கப்பட்டார்.அவர் சிவகாசி அருகில் ஒரு தீ விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் இங்கு வந்ததாகவும் அவர் அங்கு அவசரமாக செல்ல வேண்டியிருப்பதாகவும்,மேலும் வருகிற 23.07.2009 அன்று தனது முன்னிலையிலே நிர்வாகத் தரப்போடு தொழற்சங்க தலைவர்களை பேசவைத்து பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.அதனடிப்படையில் அவரது பணிச் சூழலை மனிதாபிமானத்தோடு பார்த்த தோழர்கள் அவரது வார்த்தைகளை நம்பி போராட்டத்தை ஒத்திவைக்க சம்மதம் தெரிவித்தார்கள்.

ஒரு உன்னதமான நோக்கத்திற்கான போராட்டத்தில் எதிரிகளின் ஆயுதங்களால் தாக்கப்படும் போது ஏற்படும் காயங்களே போராளிகளுக்கான நிஜமான பதக்கங்கள்.அந்த பதக்கங்கள் வழங்கப்படும் போது போராளிகளுக்கு ஏற்படுவது பெருமித உணர்வேயன்றி வலியல்ல...இந்த உணர்வோடு எங்கள் போராட்டப் பயணம் தொடரும்.......

” நமது போர்முழக்கம் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால்,இன்னொரு கரம் நம் ஆயுதத்தை கையிலெடுக்க துணியுமானால்,மற்றவர்கள் நமது இறுதிச்சடங்குகளில் இயந்திரத் துப்பாக்கிகளோடு வந்து புதிய போர் முழக்கத்தை அறிவிப்பார்களேயானால்,மரணம் திடீரென வந்தால் கூட அதே வரவேற்கலாம்”-சே

சனி, 18 ஜூலை, 2009

தாய்மண்


பரணில் தூசி அதிகமாக இருந்தது. கண்ட கண்ட பொருள் எல்லாம் கையில் தட்டுப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் நான் தேடுவது மட்டும் என் கண்னில் சிக்கவே இல்லை.
எப்பவோ நான் தேடிய பொருள்களெல்லாம் இப்போது தேவையற்ற நேரத்தில் கையில் சிக்குகிறது.
ஆனால் இவைகள் தேவைபட்ட நேரத்தில் நான் வீட்டை இரண்டாக்கிய போதும் இவைகள் எனக்கு கிடைக்கவில்லை.

தூசி கிளம்பி விடும் என்பதால் மின் விசிறியை வேறு போடமுடியவில்லை. அதனால் புழுக்கத்தால் உடலில் வேர்வை கசகச வென்றிருந்தது.இவ்வளவு அவஸ்தையிலும் அது எப்படியாவது கண்ணில் தட்டிவிட வேண்டும் என மனம் மட்டும் ஏங்கி கொண்டிருந்தது.

அவரை நேற்று மீட்டிங்கில் சந்தித்திராவிட்டால் இந்த அவஸ்தையே எனக்கு கிடையாது.இத்தனைக்கும் நேற்றுதான் அவரை முதன்முதலாக சந்தித்தேன்.
வெறும் பரஸ்பர புன்னகை பரிமாற்றத்தோடு கூட எங்களது அந்த சந்திப்பு முடிந்து போயிருக்கும், என்னை அவருக்கு அறிமுகப்படுத்திய என் நண்பர் நான் யாருடைய மகன் என்று சொல்லாமல் விட்டிருந்தால்....

ஆனால் நான் இன்னாரின் மகன் என்று என் தாயின் பெயரை சொன்னவுடன் அவர் வாஞ்சையுடன் என் கைகளை பற்றிக்கொள்வதாக நினைத்து கொண்டு மோதிரத்தோடு என் விரல்களை நசிக்கியபடியே என் தாயின் மறைவிற்கு தன் இரங்கலை தெரிவித்தார்.

நான் எந்த வலியால் நெளிகிறேன் என்று கூட புரியாமல் என்னைப் பற்றிய விசாரிப்பு முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார்.ஒருவழியாக பேச்சினூடே சமாளித்தவாறு என் கைகளை விடுவித்து கொண்ட போது என் விரல்களுக்கு நடுவே மோதிரத்தடம் பதிந்து வலித்தது.
இப்படி வலிக்க வலிக்க ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தவர்... திடீரன்று என்ன நினைத்தாரோ என் குடும்ப சூழல்குறித்தும் தற்போதைய எங்கள் வீட்டின் வசதிவாய்ப்பு குறித்தும் கேட்க தொடங்கினார்.

வாய்க் கொழுப்பு சீலையில் வடியுங்கிற கதையாக நானும், என் தாயின் மறைவிற்கு பின் ஏற்பட்ட கடன் தொல்லையால் எங்கள் சொந்த வீட்டை விற்ற கதையையும் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதையும் குறிப்பிட்ட போது,’கடம்பூர் பக்கத்தில் உள்ள நிலத்தையும் விற்று விட்டீர்களா?’ எனக் கேட்டார்.

”கடம்பூர் பக்கத்தில் எங்களுக்கு நிலமெல்லாம் இல்லையே...” என்று அப்பாவியாக கூறிய என்னை விடாமல்
“என்ன தம்பி இப்படி சொல்றீங்க அங்க உங்கம்மா நிலமுடிச்சது எனக்கு நல்லா தெரியுமே...”என்றவாறே தொடர்ந்து “ உங்க அப்பாகிட்ட கேட்டு நல்லா தேடிப் பாருங்க... பத்திரம் உங்க வீட்ல எங்கையாவது தான் இருக்கும். இப்ப அது பல லட்சம் தேறும்” என்று வேறு ஆசையை தூண்டி விட்டு விட்டு சென்றார்.

இரவு வீட்டுக்கு வந்து என் அப்பாவிடம் கேட்ட போது,”அப்படியெல்லாம் ஒன்னும் முடிக்கலியெப்பா....எனக்கு ஒன்னும் ஞாபகமில்லையே..”என்று இரண்டும் கெட்ட மனநிலையில் இழுத்தவர்....சற்று நேரத் தாமதத்திற்கு பின்,”உங்கம்மா! எல்லாத்தையும் அவ இஷ்டத்திற்கு தான் செய்வா எங்கிட்ட எதையும் சொல்ல மாட்டா...அவளுக்கு எல்லாமே அவ அம்மாவும்,தம்பியும் தானே.... போயி உம் மாமன்கிட்டயும்,பாட்டிக்காரிகிட்டயும் கேளு....”என்று புலம்பியவாறே அவரது அறைக்குள் போய் மீதம் வைத்த சரக்கை பொரிகடலையை சவைத்தவாறே அடிக்க ஆரம்பித்தார்.

“ஆமா! இப்படி என் நேரமும் குடி குடின்னு குடிச்சிக்கிட்டே இருக்குற ஆள நம்பி எந்தப் பொண்டாட்டி தான் சொத்து வாங்குன விஷயத்தை சொல்லுவா....பைத்தியக்காரி கூட சொல்ல மாட்டா..”என நான் படபடக்க அவர் அதற்கு பதிலுரைக்க என கொஞ்ச நேரத்தில் குருஷேத்திரமானது என் வீடு.ஒரு வழியாக என் மனைவி தலையிட்டு ’கீதா உபதேசம்’ செய்த பிறகே இருவரும் ஓய்ந்தோம்.சமாதானம் ஆனாலும் கொஞ்சம் புலம்பியபடியே தன் அறைக்குள் சென்று அப்பா படுத்துக்கொண்டார்.

ஆனாலும் மழை விட்டு தூவானம் ஓயாத கதையாக என்னிடம் மெல்ல“எப்ப பார்த்தாலும் உங்களுக்கு இப்படித்தான் சின்ன விஷயத்தையும் பெரிசாக்கி சண்ட போடாட்டி நிம்மதியா இருக்கமுடியாதே....ஏன் மாமா கூட இப்படி வார்த்தைக்கு வார்த்தை மோதுறீங்க...பேசாம படுங்க எல்லாம் காலையில பார்த்துக்கலாம்.....”என்றவளிடம்

“ஆங்! நா லூசு அதனாலதான் இப்படி பேசுறன்...வந்துட்டா எல்லா...ஆங் தெரிஞ்ச மாதிரி.”என்று சலம்பியபடியே படுக்கப்போனன்.
“எதயும் ஒத்துக்குற மாட்டீங்களே....”என்றவாறே விளக்கை அணைத்து விட்டு அவளும் படுத்தாள்.அறை இருண்டது. இரவில் சமரச ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது தானே இந்திய வரலாறு........

காலையில் எழுந்து பார்த்தால் என் அப்பா தன் அறையில் உள்ள அலமாரியில் அந்தப் பத்திரத்தை தேடிக் கொண்டிருந்தார்.என் மனைவி சிரித்தபடியே,” நீங்களும் மாமா கூட சேர்ந்து தேடுங்க...”என்றாள்.

அப்பா,”ஏம்மா!இங்க என் அலமாரியல இல்ல... அவன உங்க அத்தயோட சின்ன இரும்பு பெட்டி ஒண்ணு உண்டு அத தேடச் சொல்லு...அதுல இருக்கான்னு பாப்போம்... ”

அன்று ஆபிஸுக்கு விடுப்பு சொல்லி விட்டு அதை வீடு முழுவதும் தேடினோம்... கடைசியில் அதை தேடவே இப்போது பரண்மீது ஏறி நிற்கிறேன்.பல மணி நேரத் தேடலுக்கு பின் அந்தப் பெட்டி கிடைத்தது.ஆனால் அதனுள்ளே பத்திரம் எதுவும் இல்லை.தேடி அலுத்து ஒய்ந்த பின்பு....என் அப்பா,”டேய்!ஓங்கிட்ட சொன்ன ஆளுக்கு போன் போட்டு எந்த பத்திர ஆபிசில் எப்ப முடிச்சதுன்னு கேளு நாம மேக்கொண்டு என்ன பண்ணலாம்ன்னு பாப்போம்”என்றார்.

எனக்கும் அது சரியாக படவே அவருடைய நம்பரை என் நண்பனிடம் வாங்கி போன் செய்தேன்.என்னை அவருக்கு மீண்டும் அறிமுகம் செய்து கொண்டு சம்பரதாய நலம் விசாரிப்புகளுக்கு பிறகு.....

“சார் நேத்து நீங்க சொன்னீங்க இல்லையா எங்கம்மா கடம்பூர் பக்கத்துல நிலம் வாங்குனாங்கன்னு அது எந்த வருஷம்...?எந்த பத்திர ஆபிசுலன்னு ஞாபகமிருக்கா..? ஏன்னா வீடு முழுக்க தேடிப் பார்த்துட்டோம் பத்திரத்த எங்கயும் காணல அதான்...”

“தம்பி நான் என்ன சொன்னன்னு நீங்க சரியா புரிஞ்சிக்கலியா....உங்கம்மா அங்க நிலம் வாங்கப் போறத என்கிட்ட சொன்னாங்க அவங்க வாங்குனாங்களா இல்லையான்னு எனக்கு தெரியலையே....”என்று அவர் ஏதேதோ பேசிக் கொண்டே போக இப்போது நிஜமாகவே என் காலடியில் உள்ள நிலம் பின் வாங்குவது போல் ஆனது......

புதன், 15 ஜூலை, 2009

வாங்க...சிரிங்க...


சமீபத்தில் நான் ரசித்து படித்த சில குறுஞ்செய்திகள்......இந்த பதிவின் நோக்கம் இதை படிப்பவர்களை சிரிக்க வைப்பது மட்டுமே அதனால் இதில் தத்துவார்த்த குற்றங்களை கண்டுபிடித்து யாரும் கெட்ட வார்த்தையில் பின்னூட்டம் போட வேண்டாம்...

***ஆதாமும்,ஏவாளும் சீனர்களாக பிறந்திருந்தால் என்னவாகியிருக்கும்...?

நாம் இன்னும் ”ஏதேன்” தோட்டத்தில் தான் வாழ்ந்திருப்போம்.ஏனென்றால் அவர்கள் பழத்தை விட்டு விட்டு பாம்பை தின்றிருப்பார்கள்.

***தேன் சொன்னது,” நான் தான் இந்த உலகத்திலே அதிகம் சுவை படைத்தவன்”

கடவுள் சிரித்தவாறே பதிலுரைத்தார்,”அவசரப்படாதே! நீ இன்னும் இந்த குறுஞ்செய்தியை படிப்பவரை பார்க்கவில்லை அதனால் தான்
இப்படி சொல்கிறாய்..”என்றார்.
( நீதி: கடவுளும் சில சமயங்களில் பொய் சொல்வது உண்டு...)

***ஒரு குட்டிச் சாத்தான் என்னிடம் ,” நான் யாரையாவது தொந்தரவு செய்ய வேண்டும்.”என்றது.

நான் உன் பெயரை சொன்னேன்.அது ஓங்கி என் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னது,” நாங்கள் எங்கள் தலைவரிடம் அப்படி
விளையாடுவதில்லை..” என்று.

***ஓர் அற்புதமான வாக்கியம்.... நெடுஞ்சாலை பெயர் பலகையில் இப்படி இருந்தது.,”மிஸ்டர்.லேட் என்பது லேட்.மிஸ்டர் என்பதை விட
சிறந்தது.” அதனால் மித வேகம் மிக நன்று...

***கண்டக்டர்: டிக்கெட் பரிசோதகர் வருகிறார்...எல்லோரும் அவரவர் டிக்கெட்டை காண்பியுங்கள்.

மாணவ பயணி: முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல சார்.போன ஸ்டாப்ல தான் என்னோட டிக்கெட் இறங்கி போச்சு.

***மனைவி:என்னங்க! ”பின்னாடி FIGURE இருந்தா கண்ணு தெரியாதா”..ன்னு லாரிகாரன் உங்கள திட்டிட்டு போறான். நீங்க சிரிக்கிறீங்க?

கணவன்:பின்ன சிரிக்காம என்ன பண்றதாம்.உன்னை போய் FIGURE ன்னு சொல்றானே குருட்டுப் பய....

***ஒரு சர்தார்ஜியிடம் நேர்முக தேர்வின் போது......

மேலாளர்: உங்களது பிறந்த தேதி என்ன?
சர்தார்ஜி : ஏப்ரல் 25ஆம் தேதி.

மேலாளர்: எந்த வருடம்?
சர்தார்ஜி : என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி இது...ஒவ்வொரு வருடமும் தான்.

கடைசியாக இரு அஜால் குஜால் குறுஞ்செய்திகள்.......

*** 90 வயது முதியவர் ஒருவர் மருத்துவரிடம் வருகிறார்.....

முதியவர்:ஐயா! இந்த வயதில் நான் எந்த கோணத்தில் உடலுறவு கொள்வது நல்லது?

மருத்துவர்: நாய்கள் செய்வது போல்.....(அவர் முடிக்கும் முன்பு)

முதியவர்:அதாவது பின்னாலிருந்தா...?

மருத்துவர்:இல்லை இல்லை... நாய்களை போல் என்றால்....அவைகளை முகர்ந்து விட்டு மட்டும் செல்வதே நல்லது என்று சொல்ல
வந்தேன்.

***குற்ற உணர்ச்சியின் உச்ச கட்டம் எது...?
இரவு உறக்கத்தில் மனைவியின் உளறல்...”சீக்கரம் என் புருஷன் வந்திட்டார்....”
பக்கத்தில் படுத்து இருந்தவர் அவசரமாக ஜன்னல் வெளியே குதித்து விட்டு...”ஐயோ! இது என்ன மடத்தனம் பக்கத்திலிருந்தது என்
மனைவியல்லவா...”என்று தாமதமாக உணர்வது.

வெள்ளி, 10 ஜூலை, 2009

நான் பேசுகிறேன்....


தொடர்ந்து எங்கள் வங்கி நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை எதிர்த்து எங்களது தொழிற்சங்கத்தின் சார்பில் இயக்கங்கள் நடந்து வருவதால் ஒரு சிறு இடைவேளை விழுந்து விட்டது.இந்த இடைவேளையில் ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன.சரி ஒவ்வொன்றாய் பார்போம்....

***இந்திய அரசின் குற்றவியல் சட்டம் 377-ன் கீழ் ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு முரணானது என தண்டிப்பது அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்ற (இந்திய) வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.பாராட்டுக்குறியது.

மேலை நாடுகளில் ஓரின ஜோடிகள் சட்டப்பூர்வமாக பதிவு செய்வது நடைமுறையில் இருந்தாலும் கலாச்சாரம்,கருமாந்திரம் என உளரி கொட்டும் மூடர்கள் நிறைந்த நமது தேசத்தில் இந்த தீர்ப்பு நீதிமன்றங்களின் மேல் மரியாதையை அதிகரிக்க செய்கிறது.

இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த தீர்ப்பு வந்த தினமே இந்திய ஓரினத் தம்பதிகளின் சுதந்திர தினம் ”.

***நீதிபதி ரகுபதி தன்னை ஒரு மத்திய அமைச்சர் அவருக்கு வேண்டிய ஒருவருக்கு ஜாமீன் தரச் சொல்லி மிரட்டியதாக பகிரங்கமாக சொன்னது நாடு தழுவிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் சாமான்யர்களின் நம்பிக்கைச் சின்னங்கள்.

அப்படிப்பட்ட நீதிமன்றங்களை ஆளும் நீதிபதிகளை மிரட்டியோ அல்லது வேறு வகையிலோ அடிபணிய வைக்க முடியும் என ஒருவர் நினைக்கிறார் என்றால் அவர் தன்னை சர்வாதிகாரியாக கருதுகிறார் என்றே அர்த்தம்.அப்படிப்பட்ட ஒருவர் மக்கள் பிரதிநிதி என்ற போர்வையில் ஒளிந்திருப்பது நம் ஜனநாயகத்திற்கே ஆபத்தானது.

அந்த ஜனநாயக விரோதியை அடையாளம் காட்டத் தவறுவது குற்றத்திற்கு துணை போவதற்கு சமம்.ஆகவே தன்னை மிரட்டியவரை மக்கள் மன்றத்திற்கு முன் அம்பலப்படுத்துவது நீதிபதி ரகுபதியின் ஜனநாயக கடமை.

***அவனது திறமையாலும்,விடா முயற்சியாலும்,தன்நம்பிக்கையாலும் அவனை நிராகரித்தவர்களும்,வெறுத்து ஒதிக்கியவர்களும் கூட அவனை கொண்டாட செய்தான்.

ஐந்து வயதிலே தொழில்முறை நடனக்குழுவிற்கு வந்து தன் குழந்தைபருவத்தை தொலைத்தவன்.அதை மீட்டெடுக்கும் விதமாக 2700 ஏக்கர் பரப்பளவில் கலிபோர்னியாவில் நெவர்லேண்ட் ராஞ்ச் என்னும் குழந்தைகளுக்கான மாளிகை கட்டி அதில் தானும் ஒரு குழந்தையாக வாழ முயற்சித்தான்.ஆனால் சில சுயநல விஷமிகளால் வீண் பழிக்கும் கடும் விமர்சனங்களுக்கும் ஆளான போதும் அவனை கோடிக்கணக்கான இதயங்கள் நேசிக்கவே செய்தன.

உலகின் எல்லா மூலைக்கும் தன் இசைதிறமையாலும், நடன அசைவுகளாலும் அவன் அறிமுகமாகி புகழும்,பணமும் அவனை வந்து சேர்ந்த போதும் அவன் நாடியது தனிமையும், நிம்மதியுமே. நிம்மதியாய் துயில மாத்திரைகள் வாங்கினான் அவன் உயிரை விலையாய் கொடுத்து.

ஆம்!இப்போது நிம்மதியாய் துயில்கிறான்.....மைக்கேல் ஜாக்சன்

திங்கள், 8 ஜூன், 2009

நவீன கொத்தடிமைகள்.....


நேற்று எனது தொழிற்சங்க வாழ்வில் ஒரு முக்கியமான நாள். எங்களது பாண்டியன் கிராம வங்கியில் (முற்றிலும் மத்திய அரசிற்கு சொந்தமானது)இருநூற்றி ஐம்பதிற்கும் மேலான தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்கள் கிளைகளில் நிரந்தரப் பணியாளர்களான நாங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வார்கள்(சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் செய்யும் வேலைகளில் பாதியளவு கூட நாங்கள் செய்வது இல்லை).

ஆனால் அவர்களுக்கு நாள் ஒன்றிற்கு ஐம்பது முதல் நூறு ருபாய் வரை என வாரக்கூலி வழங்கப்படுகிறது.அவர்களுக்கு பணிபாதுகாப்பு கிடையாது.(மேலாளர்களோ அல்லது உடன் புரியும் எவரேனும் நினைத்தால் எந்த முகாந்திரமும் இன்றி எந்த நிமிடமும் அவர்களை வேலையிலிருந்து நீக்க முடியும்).

அவர்கள் பணிபுரியும் கால நேரம் என்பது நாள் ஒன்றிற்கு 10 முதல் 12 மணி நேரம் வரையாகும்.தேவைப்பட்டால் மேலாளர் அவர்களை விடுமுறை நாட்களிலும் வருவிப்பார்.அவர்கள் பதிலேதும் பேசாமல் வரவேண்டும் இல்லையேல் வேலை காலி.அவர்கள் ஒரு நாள் வேலைக்கு வரவில்லை என்றாலும் அவர்களுக்கு சம்பளம் கிடையாது.மேலும் லீவு(ஞாயிற்றுக்கிழமை உட்பட) நாட்களில் அவர்களூக்கு சம்பளம் கிடையாது.

இந்த உழைப்பு சுரண்டல் எல்லாம் செய்யும் எங்கள் நிர்வாகமே தந்திரமாக மேலாளர்களிடம் ஒவ்வொரு மாதமும் தற்காலிகப் பணியாளர்கள் யாரும் அந்தந்த வங்கியில் இல்லை என (போலி) சான்றிதல் வாங்கிவிடும்.மேலாளர்களும் அப்படியே செய்திடுவர்.

வருகைப் பதிவேடுகளிலோ அல்லது அவர்களுக்கு வழங்கும் சம்பளச் சீட்டுகளிலோ தற்காலிகப் பணியாளர்களின் கையொப்பம் வராமல் பார்த்துக் கொள்வர். நபார்டிலிருந்தோ(NABARD) அல்லது வேறு மத்திய சர்காரின் ஆய்வுத்துறையிலிருந்தோ எவரேனும் வந்தால் அந்த தற்காலிகப் பணியாளர்களை அவர்களின் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்வர்.

ஆம்! இப்படியாக அவர்கள் நவீன கொத்தடிமைகளை உருவாக்கும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இப்படியொரு சூழலில் தான் இந்த கொடுமைகளை காணச் சகியாது எங்கள் தொழிற்சங்கம் (PGBEA-PANDYAN GRAMA BANK EMPLOYEES ASSOCIATION) இதை மேலும் வளர விடக்கூடாது என முடிவு செய்தது.முதற் கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள எங்கள் வங்கிக் கிளைகளில் பணிபுரியும் அத்துணை தற்காலிகப் பணியாளர்களையும் விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்கத்தில் நேற்று ஒன்று திரட்டியது.அதில் நூற்றி அறுபதிற்கும் மேலான இளம் தற்காலிகப் பணியாளர் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.அதில் பெரும்பான்மக்கும் மேலாக பெண் தோழர்களே வந்தது குறிப்பிடத்தக்கது.

காலை 10 மணக்கு கூட்டம் ஆரம்பிக்கப்படும் என்று நாங்கள் அறிவித்து இருந்தோம்.அதனால் இராமநாதபுரம்,சிவகங்கை,தேனி,திண்டுக்கல், நாகர்கோவில்,திருநெல்வேலி,தூத்துக்குடி,திருச்செந்தூர் என பல்வேறு தொலைதூரப் பகுதிகளிலிருந்து கிளம்பியவர்கள் நேரமாகிவிடுமோ என தங்களது காலை உணவைக் கூட துறந்து விட்டு வந்திருந்தனர்.

சில இளம் பெண் தோழர்கள் தங்களது தாய்,தந்தை,கணவன்,சகோதிரன் என அழைத்து வந்திருந்தனர்.இதில் கணவனால் கைவிடப்பட்டோர்,மாற்றுத்திறனுடையோர் என சமூகத்தாலும்,இயற்கையாலும் வஞ்சிக்கப்பட்டோர் இங்காவது தங்களுக்கான உரிமைகள் நிலை நாட்டப்படாதா? என அவர்களின் கண்களில் ஏக்கத்தோடு எங்களை பார்த்துக்கொண்டிருந்தனர்.

வெவ்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் வரவேண்டி இருந்ததால் கூட்டம் ஒருமணி நேரம் தாமதமாகவே துவங்கியது.அந்த இடைப்பட்ட நேரத்தில் வந்திருந்த தோழர்கள் கிளைகளில் தங்களது பணிச் சூழலைப் பற்றியும் தாங்கள் எதிர் கொள்ளும் அன்றாட சிரமங்கள் குறித்தும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.அதாவது அவர்களின் எல்லா துயர்களையும் எங்களால் துடைக்க முடியும் என்ற அவர்களது நம்பிக்கையே அதில் மேலோங்கி இருந்தது.

நிகழ்ச்சி துவங்கியது.தலைமை தாங்கிய தோழர்களான (மாதவராஜ்,சோலைமாணிக்கம்,சங்கர்,செல்வகுமார் திலகராஜ்,பிச்சைமுத்து)ஆகியோரின் சிறப்புரைகளுக்கு பின் அந்த தோழர்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கை எழுச்சி அவர்களுக்குள் எழுந்ததை காண முடிந்தது.அந்த இளம் தோழர்களின் நம்பிக்கையும் எழுச்சியும் எங்கள் தொழிற்சங்கத்திற்கான கடமையையும்,எதிர்காலப் பயணத்தையும் உணர்த்துவதாக அமைந்தது.

எங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக வருகிற 20ஆம் தேதி ஒருநாள் உண்ணாவிரதம் அவர்களூக்காக இருக்க எங்களது ஊழியர் சங்கமும்,அலுவலர் சங்கமும் முடிவு செய்துள்ளது.

நண்பர்களே!

இது ஏதோ எங்கள் வங்கியில் உள்ள பிரச்சனை மட்டும் அல்ல.இது இந்த தேசத்தின் பிரச்சனை.ஆம்! BSNL,NLC,TNEB,போன்றவற்றில் ஏற்கனவே இது போன்ற தற்காலிக ஊழியர்களூக்கான நிரந்தரமாக்கும் போராட்டங்கள் ஆரம்பமாகிவிட்டது(சமீபத்தில் மின்சார வாரியத்தில் இரண்டாம் கட்டமாக ஜுன் 3ஆம் தேதி ஆறாயிரம் ஊழியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்கியது தமிழக அரசு).

வங்கித்துறையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.அதேபோல் மாநில மற்றும் மத்திய அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களிலும்,அரசு அலுவலகங்களிலும் கூட பல ஆயிரம் காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன அவை இன்று தற்காலிக ஊழியர்களின் உதவியாலே இயங்குகிறது.

ஏன்?ஏன்?ஏன்?ஏன் இந்த நிலை.....?

ஒரு பக்கம் வேலவாய்ப்பு திண்டாட்டம்.வறுமை.என மத்தியில் மாநிலத்தில் ஆளும் அத்துனை கட்சிகளும் எந்தவித கட்சிப் பாகுபாடும் இல்லாமல் கூச்சலிட்டுக் கொண்டே.....அந்நிய முதலீடுகளுக்கு ஒரு பக்கம் கதவுகளை திறந்து விட்டுக்கொண்டே...காசுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள்.

மறுபக்கம் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகளை இந்தியஅரசு வெகு வேகமாக பார்த்து வருகிறது.ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டு பெரும் முதலாளிகளூக்கும் அந்நிய முதலீட்டாளர்களூக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அரை சதவிகித வட்டிக்கும்,ஒரு சதவிகத வட்டிக்கும் (பொது மக்களின் பணமான)அரசு வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன் வழங்குகிறது.அப்படி கடனாக வாங்கும் பணத்தையும் அந்த ”பணக்கார தொழில் முனைவோர்” திரும்ப செலுத்த மாட்டார்கள்.அதை ஒவ்வொரு நிதியாண்டிலும் ‘மாண்புமிகு’ நிதியமைச்சர் அவர்கள் மக்கள் வரிப்பணத்தை கொண்டு தள்ளுபடி செய்து அந்த ’பணக்கார’ கடன்காரர்களை காப்பாற்றி விடுவார்.(இதில் தொழிற்சாலைகள் அமைக்க,தொழிற்பூங்காக்கள் தொடங்க என விவசாயிகளின் விளைநிலங்களை வேறு கையகப்படுத்தி தனியாருக்கு தாரை வார்ப்பார்கள்.)

ஆனால் விவசாயிகளுக்கு 7சதவிகித வட்டியில் கடன் கொடுப்பதற்கோ ஆயிரத்தி எட்டு நொள்ளை நொட்டை பார்பார்கள்.சிறு தொழில் முனைவோருக்கு கடன்கள் 12%ற்கு வழங்குவதற்கு கூட இந்த பொதுத்துறை வங்கிகள் தயாரில்லை.ஆனால் சுயதொழில் சுயதொழில் என கூப்பாடு மட்டும் போடுவார்கள்.

வேலை வாய்ப்பு திண்டாட்டத்தை ஒழிக்க இங்கு காலியாக கிடக்கும் மத்திய மாநில அரசுகளின் பணியிடங்களில் முறையான ஆள் எடுக்கும் பணி தொடங்க வேண்டும்.அதே நேரத்தில் எந்த வித பணி பாதுகாப்பும் இன்றி இரவுபகல் பாராமல் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி வரும் அத்துனை தற்காலிகப் பணியாளர்களும் அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலை நிரந்திரம் செய்திடல் வேண்டும்.

தொழிற்சங்க அமைப்புகளை பலவீனப்படுத்தவும், போராடிப் பெற்ற எட்டுமணி நேர வேலை உரிமை போன்ற தொழிலாளர் நலச் சட்டங்களை நிர்மூலமாக்க துடிக்கும் தனியார் ’கைகூலிகளின்’ தந்திரங்களை முறியடிக்கவும் அத்துனை வெகுஜன அமைப்புகளூம் போராட துவங்கவேண்டும். நாம் அனுபவிக்கும் அதே சலுகைகளை அடுத்த நம் தலைமுறையினருக்கும் கிடைத்திட வழி செய்திட வேண்டியது நமது கடமை.

நாங்கள் இந்த நவீன கொத்தடிமைகள் முறைக்கு எதிராக வீதியில் இறங்கி போராட துவங்கிவிட்டோம்.வாருங்கள் எங்கள் கரங்களை பலப்படுத்த நீங்களும்.......