ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

16-ஆம் காம்பவுண்ட்....5



பனிமய மாதா கோயில்…..

தூத்துக்குடியின் மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்று. சமய பேதமின்றி தூத்துக்குடியின் மக்கள் மட்டுமின்றி பல்வேறு ஊருகளில் இருந்தும், தூர தேசங்களில் இருந்தும் வரும் மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் தோற்றத்திற்கும் இதில் கொலுவேற்றியிருக்கும் பனிமய அன்னைக்கும்,பரதவ மக்களுக்கும் ரத்தமும், வலியுமாய் நானூறு ஆண்டுகளுக்கும் மேலான ஒரு வரலாறு உண்டு.

16ஆம் நூற்றாண்டு……

பரதவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே முத்துக்குளித்துறையில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக நீண்ட பகையொன்று இருந்து வந்தது. அந்தக் காலக்கட்டத்தில் தூத்துக்குடி முத்துக்குளித்துறையின் தலைநகரைப் போல் விளங்கி வந்தது. அதேசமயத்தில் தான் போச்சுகீசியர்களும் முத்துகுளித்துறையை முழுவதுமாய் ஆக்கிரமிக்க துடித்து காத்துக் கொண்டிருந்தார்கள். குமரியில் இருந்து வேம்பார் வரை பிரதானமாய் ஏழு கடற்கரை கிராமங்கள் பரதவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவை மணப்பாடு,புன்னைக்காயல்,வீரபாண்டியபட்டணம், தூத்துக்குடி,வேம்பார்,திருச்செந்தூர் மற்றும் வைப்பார். இந்த ஏழு ஊர்களின் தலைவரை பட்டங்கட்டியார் என்று அழைத்து வந்தார்கள். அவர்தான் பரதவமக்களின் தலைவராகவும், அப்போது இருந்தார்
ஒரு பரதவனுக்கும், இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த ஒருவருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் அந்த பரதவனின் கடுக்கன் அணிந்த் காதை இஸ்லாமியர் கடித்து துப்பியுள்ளார்..Yes!!! it was the last straw that broke the camel’s back. என்னும் ஆங்கில சொற்றொடருக்கு இணங்க பல ஆண்டுகளாக இருவேறு இனத்தவருக்குமிடையே இருந்த தொடர் வெறுப்புக்கு அந்தச் சம்பவம் ஒரு மிகப்பெரும் கலவரத்துக்கான தொடக்கமாய் அமைந்து போனது.

பரதவன் ஒருவனின் காது கடித்தெறியப்பட்டது பரதவ இனத்துக்கே ஏற்பட்ட அவமானமாய் கருதப்பட்டது. ஆகவே இஸ்லாமிய சமூகத்தின் மீது மிகக் கடுமையான தாக்குதலை பரதவர்கள் தொடுத்தார்கள். அடிபட்ட புலியாய் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்களும் அண்டை ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்களை குவித்து பரதவ இன அழிப்பை துவங்கினர், ஒரு பரவனின் தலைக்கு ஐந்து பணம் என அறிவிக்கப்பட்டு பரவர்கள் கொல்லப்படலாயினர். பரதவ இனமே அழிவின் விளிம்பிற்கு சென்றது. பரதவர்களின் தலைவரான பட்டங்கட்டியார் செய்வதறியாமல் திகைத்து நின்றார், அப்போது குமரியில் குதிரை வாணிபம் செய்து வந்த ஜான்.டி.குரூஸ் என்பவரது வழிகாட்டுதலின் பெயரால் பரதவர்களின் தலைவரான பட்டங்கட்டியார் போர்ச்சுகீசியர்களின் உதவியை நாடினார்.

ஓடுமீன் ஓட ஒருமீன் வரும் வரை காத்திருந்த போர்ச்சுகீசியர்களும் பரதவர்களுக்கு உதவ முன்வந்தனர். ஒருநிபந்தனையுடன்…….ஆம்!! அது மதமாற்றம் தான்.

1535…….

இஸ்லாமிய சகோதரர்களின் ஆதிக்கம் அந்நியரின் உதவியோடு முறியடிக்கப்பட்டு பரதவர்களின் ஆதிக்கம் மீண்டும் வங்கக்கரையோரும் ஆரம்பித்தது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முப்பத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பரதவர்கள் ஒரே சமயத்தில் கிறுத்துவத்தை தழுவினர். பக்தியாலன்றி நன்றிக்கடன் தீர்க்க மட்டுமே மதமாறியதால் அவர்கள் கிறுத்துவ பிடிப்பில்லாமலே இருந்தனர். ஆதலால் போர்ச்சுகல்லில் இருந்து சேசு சபையினர் கிறுத்துவம் போதிக்க வரலாயினர். அப்படி சேசு சபையால் அனுப்பப்பட்டவர் தான் சவேரியார்.

மறைபோதனைக்காக வந்த சவேரியாருக்கு இங்கு வழிபாட்டுதலங்களின் குறைபாடும் பரதவ மக்களின் முந்தைய பெண் தெய்வ வழிபாட்டு முறைகளையும் அறிந்து கொண்டார். ஆகவே அவர்களை கிறுத்துவ மதத்தில் முழுமனதாய் ஈடுபடச் செய்ய மாதா கோயில்களை நிறுவுவதுதான் ஒரே வழி என்று புரிந்து கொண்டார். ஒருமுறை மணிலாவில் அவர் பார்த்திருந்த பனிமய மாதாவின் சொரூபத்தை இங்கே அனுப்பி வைக்குமாறு கேட்டுப் பார்த்தார். ஆனால் அவருக்கு அப்போது அது மணிலாவில் இருந்து அனுப்பி வைக்கப் படவில்லை.

சவேரியாரின் மறைவுக்கு பின்…….

அழகான வேலைப்பாடுகளோடு கூடிய மரத்திலான அந்த மாதா சொரூபம் மணிலாவில் இருந்து வந்திறங்கியது.

1582,ஆகஸ்ட் 5ஆம் நாள்…..

சேசுசபை குருமாரால் இங்கே இரக்கத்தின் மாதா கோவிலாக அது நிறுவப்பட்டது. காலைபோக்கில் இத்திருத்தலமே பனிமயமாதா ஆலயம் என மக்களால் அழைக்கபடலாயிற்று.

குமரியில் இருந்து மன்னார் வரையிலான கடல்பகுதிகளை இரண்டு பேரரசுகள் ஆட்சி செய்து வந்தனர். குமரியில் இருந்து புன்னைக்காயல் வரை திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னன் உன்னிக் கேரள வர்மனின் கட்டுப்பாட்டிலும் அங்கிருந்து மன்னார் வரை விஜய நகர பேரரசனின் ஆளுகையிலும் இருந்தது. பரதவர்களால் கிடைக்கும் செல்வத்தை தவிர அவர்கள் இருவருக்கும் வேறு எந்தவித அக்கறையும் அந்த கடல்மனிதர்களின் மீது இருந்ததில்லை. விஜய நகரப் பேரரசு மதுரையை தலைமையாக கொண்டு தென்தமிழகத்தையே கவனித்து கொள்ளும் பொறுப்பை நாயக்கர்களுக்கு வழங்கி இருந்தார். நாயக்கர்களின் ஆட்சிகாலத்தில் தான் இங்கு பாளையங்கள் உருவெடுத்தன. மதுரை நாயக்கர்களுக்கு இயல்பாகவே கத்தோலிக்கர்களாக மாறிய பரதவர்களின் மீது ஒரு வெறுப்பு கனன்று கொண்டு இருந்தது. அவ்வப்போது படையெடுப்புகளும் செய்து வந்தனர். அப்படி ஒரு படையெடுப்பின் காரணமாய் தூத்துக்குடியிலிருந்து கத்தோலிக்கர்கள் முயல் தீவென்று தற்போது அழைக்கப்பட்டு வரும் ராஜ தீவுக்கு தங்களோடு பனிமய மாதாவின் சொரூபத்தையும் எடுத்துச் சென்று அங்கு ஆலயம் எழுப்பினர்.
1610-ஆம் ஆண்டு நிலைமை கொஞ்சம் சகஜமாகிய பின் மீண்டும் தூத்துக்குடிக்கு பனிமய மாதாவை கொண்டு வந்து கொலுவேற்றினர். இப்படியாக தங்கள் வாழ்வின் இன்பங்களிலும், துன்பங்களிலும் இரண்டறக் கலந்து போன பனிமய மாதாவை தெய்வமாய் மட்டுமின்றி தம் இனத்தின் கௌரவமிக்க அடையாளமாகவும் பரதவர்கள் போற்றி வணங்கி வருகின்றனர்.

அவர்களது கார் லசால் பள்ளி அருகே போக்குவரத்து காவலர்களால் நிறுத்தப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வாகனங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கொடியேற்றத்துக்கும் நேரமாகிப் போனதால் வேறு வழியின்றி அவர்கள் நால்வரும் இறங்கி நடக்கத்துவங்கினர். மிகப்பெரும் ஜனத்திரள் அங்கே கோவிலை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் நால்வரும் ஒருவர் பின்னால் ஒருவராகவே செல்ல முடிந்தது. சோபியா.....ஜொஸி அவர்களுக்கு பின்னால் ஸ்வீட்டியும்,பிரவீணும் என சென்று கொண்டிருந்தார்கள்.

“யாத்தே! பாத்துப்போ.....”

“என்னக் கூட்டம்....”

“ச்சே....என்ன இடி இடிக்குதுக....”

”எய்யா....பிரவீணு எங்க வந்திட்டிருக்க?”

“பாத்து....வாய்யா....”

“ஆச்சி... சும்மா தொனதொன்னு வராம வாங்க....எம்மா அப்படியே அந்தப் பொம்பள பின்னால போவாம அங்க கொஞ்சம் எடங் கெடக்கு பாருங்க....அப்புடி போம்மா....” அவள் தன்னை மறந்தவளாய் திடீரென்று சத்தம் போட்டவள் அடுத்த நொடியே அவன் நினைவு வந்தவுடன் அமைதியானாள்.
அவனது மூச்சுக் காற்று அவள் முதுகில் வந்து மோதியது. அத்துணை ஜனநெரிசலுக்கும், புழுக்கத்திற்கும் மத்தியிலும் அவனது சுவாசம் மட்டும் அவளை தென்றலாய் தீண்டியது.


பட்டென்று.... அவனை திரும்பிப் பார்த்தவள்...அவன் கண்களை நேருக்கு நேராய் எதிர்கொண்டாள். மின்னலைப் போன்று அந்த ஒருகணச் சந்திப்பு ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை அவளுக்குள் பாய்ச்சி மயிற் கூச்செறிய செய்தது. அத்தனை கூட்டத்திலும் அவனும் அவளும் மாத்திரம் தனித்திருப்பதாய் தோன்றியது.

எத்தனையோ நாடுகளில்....எத்தனையோ விதப் பெண்களை....இத்தனை ஆண்டுகளில் அவன் எதிர்கொண்டிருந்த போதும் வாழ்வின் இந்த ஒரு கணம்....அவளது இந்த ஒரு பார்வை ஏற்படுத்திய தாக்கம் அவன் இது வரை எதிர் கொண்டிராதது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னால்..... ‘அவளை எத்தனை முறை பார்த்திருப்பேன்....அவளோடு விளையடி....அடித்து....இதைவிட நெருக்கமாய்.... இன்னும் இயல்பாய் இருந்தபோதெல்லாம் தோன்றாத உணர்வு எப்படி இப்போது? இத்தனை வருடங்கள் தனிமையில் உழன்ற போதும் அவள் நினைவுகள் பெரிதும் இல்லாது இருந்தும் எப்படி இப்போது? இதுதான் காலத்தின் விந்தையோ? வீரியமோ? எப்படி இவளால் எனக்குள் இத்தனை இலகுவாக நுழைய முடிந்தது? அதுவும் என் அனுமதியின்றி?’ என ஏதேதோ எண்ணத் தவிப்புகள் அவனுக்குள் எழுந்து ஆர்ப்பரித்து கொண்டிருந்தது.
ஒருவழியாய் அவர்கள் பெல் ஓட்டலை நெருங்கி இருந்தார்கள். இன்னும் கொடிகள் ஏற்றப்பட்டிருக்கவில்லை. அதலால் அவர்கள் கொடிமரத்தை நோக்கி பெல் ஓட்டலுக்கு எதிர்புறமாய் நகரத்துவங்கினார்கள். மனித தலைகளால் அந்த பெரிய சாலையே நிரம்பி இருந்தது.


பக்தியோடும்,பகட்டோடும் மக்கள் வெள்ளம் அங்கே அன்னையின் கொடியேற்றத்தை காண சுட்டெரிக்கும் வெயிலையும் மீறி காத்துக்கிடந்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் முன்னால்...பின்னால் நகர முடியவில்லை. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான கண்களும் உயர்ந்து கொடிமரத்தையே நோக்கிக் கொண்டிருக்க அவனது கண்கள் மட்டும் சற்றே கீழ்நோக்கி அவளது கொடியிடையை நோக்கியபடி தவித்துக் கொண்டிருந்தது. அவளது வலதுபுற இளமஞ்சள் நிற இடையின் மடிப்பில் வெண்ணிற முத்துக்கள் பூத்திருந்தது. பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் பலலட்சம் கோடி மைல்களுக்கு அப்பாலிருந்து தன் ஒளிக்கரங்களை கொண்டு அந்த வெண்ணிற முத்துக்களை தீண்டிக் களித்துக் கொண்டிருந்தான்........ஞாயிறு!!!

கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்கள் சங்கொலி எழுப்ப.... கோவில் மணி தொடர்ந்து அடிக்க.....மேலதாளங்கள் முழுங்க.....மக்கள் உணர்ச்சி பெருக்கில் ‘அம்மா....தாயே....ஏழு கடல் தயாபரியே....’ என பரவசத்தோடு குரல்கள் எழுப்பியபடி தங்கள் கரங்களை தூக்க.... ஜொஸியம்மே தன் கண்கள் பனிக்க பனிமய அன்னையின் கொடிகளை நோக்கி தம் கரங்களௌ உயர்த்தி “ஆத்தா.... தேவமாதா எம்புள்ளய நல்லபடியா எங்கிட்ட வந்து சேத்துட்ட..... என் வம்சத்தையும் பெருக வச்சு..... அத எங்கண்ணால பாத்திட்டு உங்கிட்ட வந்திர்றேன் தாயே...” என மனம் விட்டு கதற.....நேர்ச்சை புறாக்கள் வானில் பறக்க பனிமய அன்னையின் கொடிகள் ஏறியது.....காற்றும் கர்வமாய் கொடியினை வருடத்துவங்கியது!!!!!


..........தொடரும்.

கருத்துகள் இல்லை: