வெள்ளி, 20 மே, 2011

என் தேவதையின் சரிதை....

வெண்ணிற உடை அணிந்து....இறக்கைகள் தரித்துக்கொண்டு...நட்சத்திரங்களை சூடியபடி....வேண்டிய வரங்கள் அளிக்கும் அற்புத கன்னிகள்.. என தேவதைகளைப் பற்றி ஏராளமான கதைகளை படித்தும், கேட்டும் இருப்போம். அப்படிப்பட்ட தேவதைகள் எங்கே இருப்பார்கள்? அவர்களை காண முடியுமா? என பலவிதமான விடை காணா கேள்விகளோடும், தேவதைகள் குறித்த கனவுகளோடும் நமது குழந்தை பருவத்தை கடந்து வந்திருப்போம். அத்தகைய தேவதைகள் குறித்த தேடல்களையும், கனவுகளையும் கால ஓட்டத்தில் தொலைத்து விட்டு அன்றாட அப்பத்திற்காகவும், அளவில்லா ஆசைகளுக்காகவும் நாம் தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்கிறோம்.

தேவதைகள் நம்மை சுற்றியே வலம் வந்து கொண்டும் நம்மை வாழ்த்திக் கொண்டுமே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நம் அருகிலேயே இருப்பதாலோ என்னவோ நாம் அவர்களை அடையாளம் கண்டு கொள்வதில்லை. பெரும்பாலும் பிரியும் கணங்களே நாம் அந்த தேவதைகளை இனம் கண்டு கொள்ளும் தருணங்களாக அமைந்து விடுகிறது. ஆம்! எனக்கும் அப்படித்தான் நேர்ந்தது....

அவள் என்னோடு இருக்கும் வரை அவள் ஒரு சாதாரண மனுஷியாக மட்டுமே தெரிந்தாள். என் மீதான அவளது அளப்பெரிய அன்பு கூட எனக்கு இயல்பான ஒன்றாகவே தோன்றியது. அவளும் ஒருபோதும் தன்னை மிகைப்படுத்தி என்னை உணரச் செய்ததில்லை. ஆனால் அவளை இழந்த பின்பே உணர்ந்து கொண்டேன் அம்மா.. என்பவள் வெறும் மனுஷியல்ல அவள் ஒரு தேவதை என்று.

ஆம்! நான் தொலைத்த என் தேவதையை பற்றிய கதை இது…….

அது 2003ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி.....

அப்போது நான் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு முடிக்கும் தருவாயில் இருந்தேன். முதல் செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரி விடுதியில் படித்துக்கொண்டிருந்தேன். வார்டன் அறையிலிருந்த ஒலிபெருக்கியில் எனக்கு வீட்டிலிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்திருப்பதாக அழைத்தார்கள். நான் வழக்கம் போல் அம்மாதான் பரீட்சை நேரத்து இலவச ஆலோசனைகளை வழங்க அழைக்கிறார் என எண்ணியபடியே வார்டன் அறைக்கு சென்றேன்.

அங்கே வழக்கத்திற்கு மாறாக என் அப்பாவின் குரல் ஒலித்தது.

என்ன மக்களே…. எப்படி இருக்க…? பரீட்சைக்கு நல்லா தயாராயிட்டியா....அப்பாவின் பூர்வீகம் கன்னியாக்குமரிக்கு அருகில் உள்ள கூட்டப்புளி என்னும் கடற்கரை கிராமம். என்னதான் பிழைப்புக்காக தூத்துக்குடிக்கு வந்து என் அம்மாவை திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்க்கை பயணத்தை கடத்தி விட்டாலும் அவரது நாவினால் அந்த ”இடக்கத்தி” மொழியை விட்டுவிட முடியவில்லை.

ஆமப்பா படிச்சிட்டு தான் இருந்தேன்....என்னப்பா அம்மா எங்க..? வேலைக்கு போய் இருக்காங்களா..?

அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சௌரியமா இல்ல...அதான் அவளும் உங்க ஆச்சியும் ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்க..

என்னப்பா அம்மாவுக்கு என்ன உடம்புக்கு...?

அம்மாவுக்கு ஒண்ணூமில்லய்யா…. அவளுக்கு கொஞ்சம் சலி அதிகமாயிடுச்சு அவ்வளவுதான்….அதான் உங்கிட்ட அவளால பேசமுடியல...இதபத்தியெல்லாம் யோசிக்காம நீ நல்லா பரீச்சை எழுது...அதான் நாங்க எல்லாரும் இங்க இருக்கோம்மில்லைய்யா...

வேற ஒண்ணும் பிரச்சனை இல்லையேப்பா…?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல மக்களே…..” இதைச் சொல்லும் போதே அவர் குரல் சற்று கம்மியது.

நானும் சற்று குழப்பம் மேலிடவே சரிப்பா அம்மாவ பாத்துக்கோங்க....முடிஞ்சா நாளைக்கு காலைல போன் பண்ணச் சொல்லுங்க... நான் நாளை மறுநாள் செமஸ்டரை முடிச்சிட்டு ஊருக்கு வந்திருவேன்...

நல்லா கருத்தா எழுதிட்டு பத்திரமா வாய்யா…..

போனை வைத்துவிட்டு அறைக்கு செல்லும் போதே மனது கனத்தது போல் இருந்தது. ஏதோ சொல்ல முடியாத ஒரு பாரம் மனதை கவ்வியது போல் உணர்ந்தேன். இப்படி ஒருவிதமான மனநிலையில் அறைக்குள் நுழைந்தால்....அங்கே இருந்த என் நண்பன்..என்ன மாமா ஒரு மாதிரி பேயரஞ்சாப்பல வார....வீட்டுலருந்து மொக்கை ஜாஸ்தியோ...?

இல்லய்யா மாமா... அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்...அதான் உங்கிட்ட எல்லாம் சொல்லியிருக்கேன்ல... அம்மாவுக்கு கேன்சர் இருந்திச்சுன்னு….. ஆப்ரேட் பண்ணி முடிச்ச பிறகும் கீமோதெரபி...ரேடியேஷ்ன்னு...ஒவ்வொண்ணா பண்ணிக்கிட்டு இருந்தாங்க....இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சரியாயிகிட்டு வந்திச்சு ஆனா இப்ப திடீரின்னு உடம்பு சரியில்லன்னு அப்பா சொன்னவுடனே மனசு கஷ்டமா இருக்கு...

அம்மாவுக்கு அதெல்லாம் ஒண்ணும் இருக்காதுய்யா....நாள மறுநாள் எப்படியும் ஊருக்கு போகப் போற ரொம்ப கொழப்பிக்காத....முதல்ல நாளைக்கு கதைய பாரு...என ஆறுதலளித்தான்.

அப்படியே வேறு வேறு விஷயங்கள் பேசியபடி இருந்ததால் அம்மாவின் உடல்நிலை குறித்த உறுத்தல்களை ஒருவாறு மறந்து சகஜமாகியிருந்தேன். மறதி என்ற குணம் மட்டும் மனிதனுக்கு இல்லாமல் போயிருந்தால் நிம்மதி என்ற உணர்வையே மனிதன் சுவைத்திருக்க மாட்டான் போலும்.

செமஸ்டர் தேர்வுகளும் முடிந்தது...உற்சாகமாக விடுமுறையை அனூபவிக்க ஊருக்கு பயணமானோம். கல்லூரி நாட்களில்... நண்பர்களோடு கொட்டமடித்தபடி ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் நம் சொந்த ஊரை காணும் உற்சாகத்தோடு... மேற்கொள்ளும் அந்த பயணங்களின் ஒவ்வொரு கணமும் அத்தனை மகிழ்ச்சியானது. அத்தகைய பயணங்களில் எங்களோடு பேருந்தில் பயணிக்கும் பயணிகள் நிச்சயம் அந்த பயணத்தை தங்களது வாழ்வில் மறக்க முடியாத பயணங்களின் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள்.

கிண்டலும்,கேலியுமாய் ஆட்டம்பாட்டத்தோடு ஒரு ரகளையான கச்சேரியே பேருந்தில் களைகட்ட வைத்துவிடுவோம். முன்பின் அறியாத முகங்கள் கூட நெருங்கிய உறவுகளாக மாறிப்போவார்கள். சிடுமூஞ்சிகளையும், சிரிக்க தெரியாதவர்களையும் கூட சிநேக புன்னகை வீசசெய்திடும் எங்களது சேஷ்டைகள். அந்தப் பயணமும் அப்படித்தான் உற்சாகமாக இருந்தது. ஆனால் அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை அதுதான் நான் கடைசியாக என் கல்லூரி வாழ்வில் பயணிக்கபோகும் உற்சாக பயணமென்று.

மாலை முடிந்து கருக்கல் பூக்கும் நேரத்திற்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். மல்லிகை மணமும், மனித நெரிசல்களுமாய் களைகட்டியிருந்தது மதுரை பேருந்து நிலையம். பயணிகளது உடைமைகளையும்,பயண பொருட்களையும் பாதுகாக்க சொல்லி மதுரை காவல்துறை ஒலிபெருக்கியில் எச்சரித்துக் கொண்டிருந்தது. பழங்கள் முதல்...பலான புத்தகங்கள் வரை கையிலேந்தியபடி எங்களை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். நாங்கள் அவர்களையும் விட்டு வைக்காமல் எங்களது பழைய பாடபுத்தகங்களுக்கு பண்டை மாற்றாக அவர்கள் கையில் உள்ள பெருட்களை தர சொல்லி கேட்கவும் அவர்கள் எங்களை முறைத்துவிட்டு விலகிப் போனார்கள்.

மதுரை வழியாக ஊருக்கு திரும்பும் போது என் அம்மாவிற்கு பூக்கள் வாங்கி செல்வது என் வழக்கம். அதுவும் மதுரை மல்லிகை என்றால் என் அம்மாவிற்கு ரொம்ப பிடிக்கும். அவள் கையில் நான் வாங்கிப்போகும் பூவை கொடுத்தவுடம் அவள் முகத்தில் மலரும் பூரிப்பு மதுரை மல்லிகையை விட அத்துணை அழகாயிருக்கும். அதுவும் சில சமயங்களில் அந்த பூவை கையில் வைத்து கொண்டு என் அப்பாவை பார்த்து இது எம்மவன் எனக்கு வாங்கிட்டு வந்திருக்கான்...என அவள் சொல்லிக்காட்டும் போது நான் என் தந்தையை வென்றது போல் உணர்வேன்.

இம்முறையும் அவளுக்காக கொஞ்சம் மல்லிகையை வாங்கினேன். பூ வாங்கிய கையோடு அவளோடு பேசிவிடலாம் என எண்ணம் தோன்றியதால் அருகில் இருந்த தொலைப்பேசி நிலையத்திற்கு சென்று அழைத்தேன். வீட்டில் வேலை பார்க்கும் அக்காதான் போன் எடுத்தார்.

என்னக்கா நான் தான் பெரியதம்பி பேசுறேன் எப்படியிருக்கீங்க....அம்மா அப்பா வீட்ல இல்லயா..?

தம்பி...நல்லாயிருக்கீங்களா..?”

”ஆங்….நல்லாயிருக்கேன்க்கா…”

”தம்பி…. அம்மாவுக்கு ரொம்ப மேலுக்கு முடியாம போயிடிச்சு அதனால மதுரைக்கு அப்பா கூட்டிட்டு போயிட்டாங்க...

மதுரையிலேயா....எந்த ஆஸ்பத்திரி...?

அம்மாவுக்கு ஏற்கனவே ஆப்ரேஷன் பண்ணாங்களே அந்த மீனாட்சி ஆஸ்பத்திரிக்கு தான்...

எந்த ரூம்முன்னு தெரியுமா..?

202-ன்னு சொன்னாங்க...

சரிக்கா...நான் இப்ப மதுரையிலதான் இருக்கேன்...நான் போயி பாத்துக்கிறேன்..என சொல்லிவிட்டு போனை துண்டித்தேன்.

ஊருக்கு போகும் உற்சாகமெல்லாம் வடிந்து விட்டிருந்தது. அம்மாவுக்கு என்ன ஆகியிருக்குமா? என மனம் பதைபதைக்க துவங்கியது. கற்பனை குதிரை அபாயமான கற்பனைகளை கட்டவிழ்த்து விட்டு என்னை கலங்க செய்தன.

..............தொடரும்.கருத்துகள் இல்லை: