இது ஒரு தொடர் பதிவு.....
எங்கள் இருக்கைக்கு அருகே நின்றபடி மிரட்டும் தொனியில் நடத்துனர் ”என்னலே எங்கனையும் இறங்காம இப்படியே தூங்குனீகனா எப்படி? எந்த ஊருடே போவனும்..?”
மற்ற இருவரும் வாயடைத்துப் போய் நிற்க நானும் பயந்தபடியே “மணிமுத்தாறு போகணும்...” எனப் பம்மினேன்.
“அப்ப ஊரு வந்தும் இறங்காம இருக்கீ...ய....? கூட பெரியவுக யாரும் தொணைக்கு வரலையா...?”என மேலும் விசாரணையை அதிகப்படுத்தினார்.
அவர் சந்தேகபடுவதை புரிந்து கொண்டு நான் சுதாகரித்து கொண்டேன்.”இங்க எங்க மாமா வீடு இருக்கு....நாங்க லீவுக்கு வந்திருக்கோம்...எங்கமாமா பஸ் ஸ்டாண்டுக்கு வந்து எங்கள கூட்டிட்டு போயிருவாரு...” என படபடவென புழுகிமுடித்தேன்.
முன்னாடி இருந்து ஓட்டுனரின் குரல் வந்தது “அவனுகள சீக்கிரம் இறக்கி விடுப்பா....சின்னப் பயளுகள போட்டு நோண்டிக்கிட்டு....”என அங்கலாய்த்தார். நாங்களும் இதுதான் சமயம் என வேகமாக இறங்கிக் கொண்டோம்.
பேருந்து கிளம்பியவுடன் கால்போனப் போக்கில் சற்று தூரம் நடந்தோம். எங்கள் வயதொத்த சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டதும் அவர்களை நெருங்கி பேச்சுக் கொடுத்தோம். அவர்களாகவே நாங்கள் ஏதும் N.C.C கேம்பிற்கு வந்துள்ளோமா? எனக் கேட்டவுடன் நாங்களும் தலையாட்டி வைத்தோம். அப்போது தான் அவர்கள் அங்கே ஒரு அணைக்கட்டு இருப்பதை சொன்னார்கள். நாங்களும் அதை சுற்றி பார்க்க விரும்பியதாக கூறியவுடன் அதற்கு வழியும் காண்பித்தார்கள். அப்போது பசியும் அடங்கிவிட்டிருந்தது. நாங்கள் அணைக்கட்டு ஏறினோம். அணைக்கட்டின் பிரம்மாண்டம் எங்களை மலைக்க செய்தது. ஏதோ சுற்றுலா பயணிகளைப் போல் அங்கே சுற்றித் திரிந்து விட்டு கால்கள் ஓய்ந்து போய் அணையிலிருந்து இறங்கினோம்.
தாகத்தால் நாக்கும் வறண்டு போயிருந்தது. கீழே இறங்கி சற்று தொலைவு ஊருக்கு எதிர்புறமாக நடந்தபோது ஒரு சின்ன நீரோடை தெரிந்தது. பசுவைக் கண்ட கன்று போல் துள்ளிக்குதித்து நீரில் விழுந்தோம். நேரம் போவதே தெரியாமல் நீரில் விளையாடிக் கொண்டிருந்து விட்டு ஒருவழியாக களைத்து ஓய்ந்து அருகிலிருந்த மரத்தின் அடியில் அமர்ந்தோம். அப்போது கருக்கலும் ஆரம்பமாக துவங்கியது....போக வழியும் தெரியவில்லை.....பையில் காசும் இல்லை.....கொஞ்சம் கொஞ்சமாய் பயம் வரத் தொடங்கியது. ஒவ்வொருவராய் புலம்ப ஆரம்பித்தோம். வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய நினைப்பு வரவும் கலங்க தொடங்கினோம். மெல்ல மெல்ல வீட்டை விட்டு ஓடி வந்தது எவ்வளவு பெரிய அபத்தம் என புரிய துவங்கியது.
இருள் அடர்த்தியாகிக் கொண்டே வர பயமும் அதிகரிக்க துவங்கியது. திசைகள் தெரியாமல் கால்களை செலுத்த துவங்கியிருந்தோம். மனித நடமாட்டமே இல்லாத அடர்ந்த மரங்கள் நிரம்பிய பகுதிகளுக்குள் பிரவேசித்திருந்தோம்....திடீரென ஒரு மனித குரல் எங்களை நோக்கி ஓங்கி ஒலித்தது நாங்கள் பயந்து போய் அப்படியே நின்று விட்டோம். மரத்திற்கு பின்னால் ஏதோ செய்து கொண்டிருந்த உருவம் எங்களை நோக்கி சத்தமிட்டபடி வந்தது.
“யாருப்பா நீங்க....? இங்க எங்க போறீக.....? ”என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். நாங்கள் பதிலற்று உரைந்து நின்றோம்.
“வாயத் தொரந்து பேசுங்க டே...”
தடுமாறியபடி நான் “இல்ல ஊருக்கு....”
ராஜ்குமார் என்னை இடைமறித்தபடி “தூத்துக்குடிக்கு போவனும்...”
“என்னது தூத்துக்குடிக்கா...? அதுக்கு இங்க எதுக்கு வந்தீக…? அதுவும் இந்த நேரத்துல...?”
“இல்ல சும்மா சுத்திப்பாக்க...”என்றேன்.
“சுத்திபாக்கவா....? நான் மட்டும் பாக்கலைன்னா காட்டுப்பன்னிக்கிட்ட கடிபட்டு செத்துலடே போயிருப்பீக...”என அவர் சொன்னவுடன் எங்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.
“சரிச்சரி... இங்கன நின்னு பேச வேண்டாம்... எம் பொறத்தால வாங்க...”என்றபடி எங்களை திரும்பி அழைத்து கொண்டு எங்கோ சென்றார். எங்களுக்கும் வேறு வழி இல்லாததால் அவரைப் பின் தொடர்ந்தோம். வழியில் அந்த கானகத்தில் உள்ள மிருகங்களைப் பற்றி ஏதோ கதைகளை சொல்லியபடி எங்களை எங்கோ அழைத்துச் சென்றார். நாங்கள் பதிலேதும் பேசாமல் மௌனமாக அவரை பின் தொடர்ந்தோம்....
மணிமுத்தாறு காவல்துறை பயிற்சி மையத்திற்கு அருகே இருந்த ஒரு சின்ன பெட்டிக்கடைக்கு எங்களை அழைத்துச் சென்றார். அப்போது பெட்டிக்கடையில் ஓரிருவர் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். எங்களை அழைத்து சென்றவரோ பெட்டிக்கடைக்காரரிடம் எங்களை சந்தித்த விவரங்களை கூறிவிட்டு “பயலுவ அமுக்குனிகளா இருக்கானுவ.....பார்த்தா பெரிய இடத்து புள்ளைவ மாதிரியும் தெரியுதுக... நீரு கொஞ்சம் என்னென்னு கேளும்...” என்றார்.
நானும், ராஜ்குமாரும் பயந்தபடியே நின்று கொண்டிருந்தோம். வினோத் விம்மி விம்மி அழத்துவங்கியிருந்தான்....பெட்டிக்கடைகாரர் வாயில் வெத்தலையை சுவைத்தபடி எங்களை நோக்கி “இன் நேரத்துல காட்டுப் பக்கமா என்ன ஜோலியா டே போனீக....? காட்டுப்பன்னிகள பசியாத்தவா....” என்றபடி பயங்கரமாய் சிரித்தார்.
நாங்களோ பயத்தால் நா எழாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தோம். அவரோ வினோத்தைப் பார்த்து “நீ ஏம்டே இப்ப அழுதுகிட்டு கெடக்க....உன் சேக்காளி மாரப்பாரு எப்படி கல்லுளிமங்கனுவ மாதிரி நிக்கானுவன்னு...”என்று நாலு பேர் முன்னிலையில் எங்களை கேலி பேசிக்கொண்டிருந்தது எனக்கு அவமானமும், கோபமும் ஒரு சேர கொள்ள செய்தது.
அதற்கு மேல் அங்கே அமைதியாக நின்று கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியதால் தைரியத்தை வரவழைத்து கொண்டு நானே பேச ஆரம்பித்தேன் “நாங்க மூணு பேரும் சும்மா சுத்தி பாக்கலாம்ன்னு இங்க வந்தோம்...சுத்தி பாத்துக்கிட்டே வழி தெரியமா காட்டுப்பக்கமா போயிட்டோம்...”
கடைக்காரர் “சுத்தி பாக்க வந்தீகளா... (என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு) எனக்கு சின்ன வயசுலே காது குத்தியாச்சுடே தம்பி.... எந்த ஊருல இருந்து வாரீக...? அது என்ன கையில பையி?”என்றபடி என் கையிலிருந்த பையை கேட்டார்.
”தூத்துக்குடி...” என்றபடி நான் கையிலிருந்த பையை கொடுக்க தயங்கவும்....அவரே தொடர்ந்தார் “குடு டே என்ன இருக்குன்னு பார்ப்போம்....” என்றபடி ஏறத்தாழ பிடுங்கிக் கொண்டார். உள்ளிருந்து நாங்கள் எதற்கும் தேவைப்படும் என பாதுகாப்பிற்காக எடுத்து வந்திருந்த கத்தி, கவுட்டை, புகைத்தது போக மீதம் வைத்திருந்த பீடிகள், எங்கள் உடைகள் என ஒவ்வொன்றையும் அவர் வெளியில் எடுத்த போது நான் கொஞ்சம் நஞ்சம் வரவழைத்திருந்த தைரியமும் மறைந்து போனது.
அருகிலிருந்த ஒருவர் “தம்பிகளா... என்ன படிக்கிறீக...?” என கேலியாக கேட்டார்.
“இந்த வயசுலே பீடிக்கட்டும், கத்தியுமா சுத்துனா என்ன படிக்கப் போறானுக....”-இது அங்கே நின்று கொண்டிருந்த மற்றொருவர்.
இப்போது எங்களை அழைத்துக் கொண்டு வந்தவர் கடைகாரரிடம் “யோவ் பயலுவ வீட்டுல இருந்து ஓடி வந்திருக்கானுக தெரியுதா...? அதான் இந்த முழிமுழிக்கிறானுவ...”
கடைகாரர் எங்களை நோக்கி ”இந்த வயசிலயே பீடி, சிகரெட்டுன்னு அலையறீகளே உருப்புடுறதுக்கா...?உங்க பேரு என்னடே..?”
நான் மூவரின் பெயரையும் சொன்னேன். ஏனென்றால் அப்போது ராஜ்குமாரும், வினோத்துடன் சேர்ந்து அழத் துவங்கியிருந்தான். எனக்கோ பயமாக இருந்ததே ஒழிய அழுகை வரவில்லை.
ராஜ்குமாரும், வினோத்தும் அழுதபடியே நாங்கள் வீட்டிலிருந்து ஓடிவந்ததிலிருந்து அங்கு சுற்றி திரிந்தவரை ஒவ்வொன்றாய் அழுதபடியே ஒப்பித்து முடித்தார்கள். நான் மௌனமாய் நின்று கொண்டிருந்தேன். எங்கள் பெற்றோர்களைப் பற்றியும் எங்களை பற்றியும் விசாரித்து விட்டு சுற்றி இருந்தவர்கள் அனைவரும் எங்களுக்கு அறிவுரைகளை அள்ளித் தெளிக்க ஆரம்பித்தார்கள். அதிலும் அந்த கடைக்காரர் அப்போது மிகவும் வாஞ்சையான குரலுக்கு மாறிவிட்டிருந்தார்.
அவர் ராணுவத்தில் பணியாற்றியதாகவும் அதில் அவரது கால்கள் பறிபோனதாகவும் சொல்லி தனது செயற்கை கால்களை எங்களிடம் காண்பித்தார். அதுவரை அமர்ந்து கொண்டு எங்களிடம் பேசியதால் நாங்கள் அவரது கால்களை கவனிக்கவில்லை. அப்படி அவர் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே தற்செயலாக அருகிலிருந்த காவல்துறை பயிற்சி மையத்திலிருந்து நான்கைந்து பணியாளர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்களிடம் எங்களைப் பற்றி கூறி எங்கள் வழி செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து அவர்களில் ஒருவருடன் அம்பாசமுத்திரம் காவல்நிலையத்திற்கு எங்களை அனுப்பி வைத்தனர்.
அம்பாசமுத்திரம் காவல் நிலையம்..... இரவு 8.00 மணிக்கு......
வாழ்வில் முதல்முறையாக காவல்நிலையத்திற்குள் காலடி எடுத்துவைத்தோம். மனம் பயத்தின் உச்சத்தில் படபடக்க துவங்கியது. சினிமாக்களில் வரும் பயங்கரமான காவல்நிலைய காட்சிகள் நினைவுகளில் நிழலாடி மேலும் அச்சம் கொள்ள செய்தது. ஆனால் எங்களோடு வந்தவர் எங்களைப் பற்றி எடுத்து கூறியதும் காவல்நிலைய அதிகாரிகள் ஏதோ தங்கள் வீட்டு பிள்ளைகளைப் போல் எங்களை கவனித்து கொண்டார்கள்.
அதிலும் அங்கிருந்த அதிகாரி ஒருவர் எங்களிடம் மிகவும் இயல்பாக உரையாடி எங்கள் வீட்டு தொலைப்பேசி எண்களை வாங்கி எங்கள் வீடுகளுக்கு தகவல் சொல்லி விட்டிருந்தார். இதற்கிடையில் எப்படியோ எங்களைப் பற்றி கேள்விப்பட்டு ஒரு பத்திரிகையின் நிருபர் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம் அந்த அதிகாரி எங்களை தனது உறவினர்களின் பிள்ளைகள் எனச் சொல்லி அனுப்பிவிட்டு அங்கிருந்த சக காவல் பணியாளர்களை எங்களுக்காக கடிந்தும் கொண்டார்.
வாடகை கார்களை பிடித்துக் கொண்டு ஓரீரு மணிநேரங்களில் பரிதவிப்போடு எங்களது பெற்றோர்களும் அம்பை காவல்நிலையம் வந்து சேர்ந்தார்கள். அதிலும் என் மாமா (அப்பாவின் அக்கா மாப்பிள்ளை) ஒருவர் தனது தேடலின் தவிப்பை கோபமாக வெளிப்படுத்தியபடி வந்ததும் வராததுமாய் தன் கைகளை ஓங்கியபடி என்னை அடிக்க நெருங்கினார். அப்போது அந்த அதிகாரி அவரை இடைமறித்து கடிந்து கொண்டார். அவர் எங்களது பெற்றோர்களை ஆசுவாசப்பட வைத்து நிதானமாக எங்கள் சார்பாக அவர்களிடம் பேசி அவர்களது கோபத்தையும் தணித்தார். பின்னர் எங்கள் பக்கம் திரும்பி கைகுலுக்கிய படி விடையளித்தார்.
அந்தச் சம்பவம் என்னை பெரிதும் மாற்றியது. என் பெற்றோர்களின் அன்பை எனக்கு புரிய வைத்த தருணம் அது. அதிலும் என் தாயின் கண்களில் தெரிந்த தவிப்பை வார்த்தைகளில் வடிக்க முடியாது. அவள் என்னை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த போது நான் ஒரு முடிவு செய்து கொண்டேன் இனி வாழ்வில் எத்தகைய சூழலிலும் அவளை விட்டு பிரியக் கூடாது என்று.
...............தொடரும்.
2 கருத்துகள்:
அருமையாக இருக்கிறது.
நன்றி தோழர்.ரத்தினவேல் அவர்களே...!
கருத்துரையிடுக