சனி, 21 மே, 2011

என் தேவதையின் சரிதை....3


இது ஒரு தொடர் பதவு…..

நான் மருத்துவமனைக்குள் நுழைகையிலேயே கேண்டீனில் பால் வாங்க வந்திருந்த என் தந்தையை எதிர்கொண்டேன். என்னைப் பார்த்தவுடன் என்னுடன் பேசியபடியே மருத்துவமனை வரவேற்பரையை நோக்கி திரும்ப நடக்க ஆரம்பித்தார்.

என்ன மக்களே….காலேஜில் இருந்து நேரா இங்கதான் வர்றீயா...பரீட்சையெல்லாம் எப்படி எழுதுன...? மிக சகஜமாய் என்னை எதிர் கொண்டார்.

நல்லா பண்ணியிருக்கேன்பா....ஆமா என்ன ஆச்சு அம்மாவுக்கு..?முந்தாநாளு பேசும் போது கூட ஏதோ சலின்னு ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறதா சாதாரணமா சொன்னீங்க... எப்ப இங்க அட்மிட் பண்ணீங்க...? அம்மாவுக்கு என்னாச்சுப்பா…?

உனக்கு போன் பண்ணும் போதே அம்மாவை இங்கே அட்மிட் பண்ணியாச்சு....அவதான் உங்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொன்னா...இருமல் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு....கொஞ்சம் இரத்தம் வேற வந்திடிச்சு...அதான் பயந்து போயி இங்க வந்திட்டோம்...

என்னப்பா சொல்றீங்க....நான் என்ன சின்ன பையனா...? எங்கிட்ட முதல்லே சொல்லக்கூடாதா...? சரி! இப்ப டாக்டர் என்ன தான் சொல்றாரு..?

நான் இப்படி கேட்டவுடன்...அதுவரை இயல்பாய் பேசிக்கொண்டிருந்தவர் சற்று உடைந்து போனார். நான் இதை அவரிடம் எதிர்பார்க்கவில்லை. எனக்கும் பதற்றமாகி போனது...

என்னென்னமோ சொல்றாங்க மக்களே....ரொம்ப பயமாயிருக்கு.....அம்மா இன்னும் மூணு மாசந்தான் நம்ம கூட இருப்பான்னு டாக்டர் சொல்றாரு....நீயே அவருகிட்ட போயி பேசிப்பாரு...அவர் பேசி முடிக்கும் முன் எனக்கு கோபம் தலைக்கேறி விட்டது. அப்போது எங்களை சுற்றியிருந்தவர்களைப் பற்றியெல்லாம் பிரஞ்ஞை அற்றவனாக அப்பாவைப் பார்த்து கத்தினேன்…

லூஸு மாதிரி உளராதீங்க...போயும் போயும் உங்ககிட்ட கேட்டேன் பாருங்க...அவரிடமிருந்து விலகி நேராக என் அம்மாவை பார்க்க விரைந்தேன்.

தனது கம்பீரங்களையெல்லாம் நோய்க்கு கொடுத்துவிட்டு காய்ந்த சருகை போல் கட்டிலில் கிடந்தாள் என் அன்னை. இடைவிடாத இருமல் மட்டுமே அவளது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தது. தனது மகளின் நிலையை கண்டு உருக்குலைந்து போய் அங்கிருந்த பென்ச்சில் சுருண்டு கிடந்தார் என் தாத்தா....அவரது கால்பக்கமாய் தலைவைத்தபடி சாய்ந்தவாக்கில் அமர்ந்திருந்தார் என் பாட்டி....நான் உள்ளே நுழைந்தவுடன் ஏதோ புத்துயிர் பெற்றவர்களைப் போல் என்னை வாஞ்சையுடன் வரவேற்றார்கள். நான் என் தாயின் அருகில் சென்றேன். அவள் என்னை கண்டவுடன் எழுந்து கொள்ள பிரயாசைப்பட்டாள்....நான் அவள் தோள் தொட்டு அவளது முயற்சிக்கு மறுப்பு தெரிவித்தேன்.

இல்லடா நான் ரொம்ப நேரமா படுத்து தான் கெடக்கேன்....கொஞ்சம் எழும்பி உக்கார்ந்தா ஆத்தலா இருக்கும்...என்றவளை மெல்ல தூக்கி அமரச்செய்து தலையனையை அவள் முதுகுக்கு அடை கொடுத்தேன்.

மொரட்டு கையா இருக்குடா...பாத்து பாத்து...என முனங்கியபடி எழுந்து அமர்ந்தவள் என்னைப் பார்த்து செமஸ்டர் எக்ஸாம் எல்லாம் நல்லபடியா எழுதிட்டியா...?என்றாள்.

அதெல்லாம் பண்ணியாச்சும்மா...நீங்க எப்படி இருக்கீங்க..? என்ன இப்படி இருமிகிட்டு இருக்கீங்க.....?சொல்லச் சொல்ல கேட்காம ஜெபக் கூட்டம்...மண்ணாங்கட்டின்னு...போயிட்டு ஒழுங்கா மாத்திரை கூட திங்காம இப்படி இழுத்து வச்சிருக்கீங்க...

நானே இந்த கெடையா கெடக்கேன்....நீ இதுல தேவ நிந்தனை வேற பண்ணாதப்பா...என்னால தாங்க முடியல...

நீங்கெல்லாம் படிச்சு என்ன பிரயோஜனம்....இப்படியே முட்டாத்தனமா நம்பி நம்பி காச பறிகொடுத்தது தான் மிச்சம்...நானும் அவள் நிலை மறந்து எதிர்வாதம் பண்ணத்துவங்கினேன்.

என்னை இடைமறித்த பாட்டி...வந்துட்டாரு பெரிய அஞ்ஞானி...சட்டம் பேசிக்கிட்டு…. உங்கய்யா இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இங்க மனுஷனை பாடாய் படுத்திக்கிட்டு அலையறாரு...இப்ப இவரும் அவருக்கு துணையா வந்திருக்காரு...என ஏதேதோ பேசிக்கொண்டு போனவளை அங்கிருந்த என் தாத்தா... என்ன ஆளாளுக்கு வந்ததும் வராததுமாய் புள்ளைக்கிட்ட வரிஞ்சுகெட்டிட்டு நிக்கிறீங்க...என செல்லமாய் அதட்டினார்.

குண்டில போற குசு தெரியாம கெடந்தவருக்கு...பேரனை பாத்தவுடனே பவுஸு வந்திருச்சி பாரேன்...என அம்மாவை பார்த்து பாட்டி கூறினாள்.

எம்மா...நீங்க சும்மா கெடங்க ஆஸ்பத்திரியில இருக்கோம்ன்னு நெனைப்பே இல்லாம என்னத்தையாவது பேசாதீங்க....யாரும் கேட்டா என்ன நினைப்பாங்க...என பாட்டியை பொய் கோபத்துடன் கடிந்து கொண்டாள் அம்மா..

உனக்கு உங்க அப்பன சொன்னா பொறுக்காதே...என பாட்டி அம்மாவைப் பார்த்து சொல்லிக்கொண்டிருக்கும் போதே அப்பா பால் பாத்திரத்தோடு உள்ளே நுழைந்தார்.

என்ன அத்தைக்கும் மாமாவுக்கும் இளமை திரும்புதாக்கும்...உங்க இரண்டு பேர் சத்தம் தான் வெளிய வரைக்கும் கேக்குது..என்றவரை பார்த்து பாட்டி...எல்லாம் உங்க மாமாதான் பேரனை பார்த்தவுடன் துள்ளிக்கிட்டு இருக்காப்ல...

பாட்டியை பார்த்து சிரித்துவிட்டு என்னை நோக்கி நீ முகங்கால் கழுவிட்டு டாக்டரை போய் பாத்திட்டு வா...என்றார்.

ம்..போறேன்..என்றபடி அருகிலிருந்த துண்டை எடுத்துக்கொண்டு அங்கு இருந்த சிறிய குளியல்+கழிப்பறைக்குள் சென்று முகம் அலம்பிக்கொண்டு வந்தேன்.சற்று நேரம் அவர்களோடு பேசிக்கொண்டிருந்து விட்டு மருத்துவரை காணச் சென்றேன். தரைத்தளத்தில் அவரது அறை இருந்தது. படியிறங்க சோம்பேறித்தனம் கொண்டு லிப்டிற்காக காத்து நின்று அது மேலே வந்தவுடன் இறங்கிப்போனேன்.

ஆச்சர்யமாக அப்போது டாக்டரை காண அவ்வளவு கூட்டம் இல்லை....அதனால் ஒரு பத்து நிமிட காத்திருப்பிலேயே அவரைக் காண அனுமதி கிடைத்தது. நான் என் அம்மாவின் பெயரைச் சொல்லி அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். தமிழ் சினிமா நாயகர்களைப் போல் யாரும் தனது வயதை எளிதில் கணித்து விடக் கூடாது என்ற முனைப்பில் இருப்பவரை போல் இருந்தது அவரது தோற்றம். வழக்கமான தனது சன்னமான குரலிலே என்னிடம் பேச ஆரம்பித்தார் ஏதோ மெடிக்கல் சம்பந்தமா படிக்கிறதா அம்மா சொன்னாங்களே அது நீங்க தானா..?

ம்ம்ம்...நாந்தான் பிஸியோதிரபி படிக்கிறேன் டாக்டர்...

ஓ..

இப்ப அம்மாவோட ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கு டாக்டர்...?

நீங்க படிக்கிற பையன்....அதுவும் மெடிக்கல் அலைட்டா(medical allied) படிக்கிறவரு....நான் உங்களுக்கு அதிகம் சொல்லனும்ன்னு இல்ல...அம்மாவுக்கு இப்ப கேன்சர் ரொம்ப அட்வான்ஸ்டு ஸ்டேஜ்ல இருக்கு.....அதிகப்பட்சம் இன்னும் மூணு மாசம்தான்....குணப்படுத்துற கட்டத்தை அவங்க தாண்டிட்டாங்க...”

அவரது ஒவ்வொரு வார்த்தையும் என் தலையில் இடியை இறக்குவது போல் இருந்தது. என் தந்தை சொல்லும் போது கூட அவர் ஏதோ மிகைபடுத்தப்பட்ட பயத்தில் பேசுவதாகவே எண்ணிக்கொண்டேன். ஆனால் இப்போதோ என் தலையில் யாரோ நெருப்பை அள்ளி கொட்டியதை போல் உணர்ந்தேன். ஒருவாறு சமாளித்தபடி அவரைப் பார்த்துடாக்டர்...நீங்க சொல்றது புத்திக்கு உரைக்கு ஆனா மனசு கேக்க மாட்டேங்குது....நீங்க தப்பா எடுக்கலைன்னா ஒண்ணு கேக்குறேன்...” என்று தயங்கியவனை பார்த்து அவர்..”சும்மா கேளுங்க...” என்று தைரியம் அளித்தார்.

இதைவிட அட்வான்ஸ்டு டிரீட்மண்ட் (advanced treatment) எங்கயாவது கொடுக்க முடியுமா சொல்லுங்க....நாங்க எங்க வேணா எங்க அம்மாவ கூட்டிட்டு போறோம்...

நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கனும் இன்னைக்கி மருத்துவ உலகம்கிறதை ஒரு உள்ளங்கைகுள்ள அடக்கிடலாம் எங்க என்ன லேட்டஸ்ட் டிவெலப்மெண்ட் (latest developement) வந்தாலும் அதை நாம உடனே இங்கே கொண்டுவந்திர முடியும்...அதனால இந்த ஸ்டேஜ்ல நீங்க உலகத்துல எங்க கூட்டிட்டு போனாலும் இது தான் டிரீட்மெண்ட்....நாம அது பரவுற வேகத்தை குறைக்கலாமே தவிற அதை குணப்படுத்த முடியாது...அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான்....இப்ப கொடுக்குற மருந்து மாத்திரை எல்லாம் ஒரு சைகாலஜிக்கல் சப்போர்டுக்குதான் (pshycological support)...அதனால இப்போ உங்கம்மாவோட கண்டிஷனை புரிஞ்சிக்கோங்க....அவங்கள முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா பாத்துக்கோங்க இதுதான் நாம இப்போ பண்ணக்கூடியது....

என்னிடம் எதிர்வாதம் பண்ணக்கூடிய அளவுக்கு அப்போது வார்த்தைகளில்லை...உங்கம்மாவை முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா பாத்துக்கோங்க..என்ற அவரது கடைசி வரிகள் மட்டும் எனக்குள் பதிந்து இருந்தது....ஒரு திடீர் மௌனம் எங்களுக்குள் நிலவியது நானே அந்த அமைதியை உடைத்து கொண்டு..டாக்டர் நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணணும்...

ம்… சொல்லுங்க...

ஒண்ணுமில்லை இப்ப எங்கம்மாவோட ஹெல்த் கண்டிஷனை எங்கப்பா கிட்டயும் எங்கிட்டயும் தான சொல்லியிருக்கீங்க....?

’ஆம்’ என்பது போல் தலையசைத்தார்.

தயவு செய்து இனிமே யார் கேட்டாலும் அம்மாவோட ஹெல்த்துல நல்ல முன்னேற்றம் இருக்கு...அவங்க சீக்கிரமா குணமாயிடுவாங்கன்னு சொல்லமுடியுமா டாக்டர்..?

அவர் தன் புருவத்தை உயர்த்தி ஒரு நொடி என்னைப் பார்த்தார். பின்னர் என்னை புரிந்து கொண்டவரைப் போல் தாடையில் கைவைத்தபடி புன்முறுவல் செய்தார்.

நானே தொடர்ந்தேன் இல்ல டாக்டர் எங்கம்மா தான் எங்க குடும்பத்துல எல்லாமே...அவங்களுக்கு ஒண்ணுனா நாங்கெல்லாம் ஒண்ணுமில்லாம போயிருவோம்...வார்த்தைகள் தடை பட்டு கண்ணீர் கரை உடைந்திருந்தது...எல்லாம் நடக்கும் போது நடக்கெட்டும் டாக்டர் அதுவரைக்காவது எல்லாரும் கொஞ்சமாவது சந்தோஷமா இருப்பாங்க இல்லையா...

நீங்க என்னையும் உங்கள்ல ஒருத்தராவே எடுத்தக்கலாம்....என்னால நிச்சயமா என்ன முடியுமோ அதை செய்யுறேன்....இது என்னோட கார்ட் நீங்க எந்த நேரத்திலேயும் என்னை காண்டக்ட் பண்ணலாம்... என்றபடி அவர் தனது விசிட்டிங் கார்டையும் என்னிடம் கொடுத்தார். எப்போதும் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாதவர் என நான் எண்ணிக்கொண்டிருந்தவர் என்னிடம் அப்படி பேசியது எனக்கு அந்த கணத்திலும் ஆச்சிர்யமாகவே இருந்தது.

அம்மாவ எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க டாக்டர்...?

நீங்க நாளைக்கே உங்க அம்மாவை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம்...அதான் நான் சொல்லிட்டேன்லியா இனிமே நீங்க பாத்துக்கிறதுல தான் எல்லாமே இருக்கு...

ரொம்ப நன்றி டாக்டர்... என கையெடுத்து அவரை வணங்கிவிட்டு விடைபெற்றேன்.

என்னுடைய நிலையை கண்டு எனக்கே அப்போது பரிதாபமாக இருந்தது. தாயின் மரண தேதியை முன்கூட்டியே அறிந்து கொண்டு வாழ்வதைவிட ஒரு மகனுக்கு வேறு என்ன கொடுமை வாழ்வில் நேர்ந்துவிடும். மனிதன் என்பவன் எவ்வளவு அற்பமானவன் என்பதை நான் உணர்ந்து கொண்ட தருணம் அது. தாய்மையின் உன்னதமும் எனக்கு அப்போதுதான் புரிந்தது. நமக்காக பத்துமாதங்கள் சுவாசித்து உயிரளித்தவளுக்கு நம்மால் ஒரு நொடி கூட சுவாசம் அளிக்க முடியவில்லையே என்ற யதார்த்தம் எனக்கு உரைத்து என்னை மேலும் முடக்கியது.

இரண்டு மாடிகளை சுயநினைவே இல்லாமல் ஏறிச்சென்று அம்மாவின் அறைக்கு சென்றேன். அவளது அறையை நெருங்க நெருங்க நான் மேலும் உடைந்து கொண்டே இருந்தேன்...கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை....ஒருவழியாக அறைக்கு வெளியே நின்று முகத்தை கைகுட்டையால் துடைத்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு உள்ளே சென்றேன். என் வருகைக்காக எல்லோரும் ஆவலாக காத்து இருந்தார்கள். அப்பா மட்டும் எங்கோ வெளியில் போயிருந்தார்.

நான் நேராக கட்டிலில் அமர்ந்திருந்த என் அம்மாவிடம் சென்று அவளை இறுக அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன். என் உதடுகளை பிரிக்கும் முன்பே அவளது கண்ணீர் என் கன்னத்தை நனைத்து விட்டிருந்தது. நான் சுதாகரித்து கொண்டு அவளிடமிருந்து விலகி...எம்மா உங்களுக்கு ஒண்ணுமில்லையாம்...எல்லாம் சரிபடுத்திறலாம்ன்னு நம்பிக்கையாதான் டாக்டர் சொன்னாரு....

அதுக்குள்ளையும் உங்க அய்யா என்னென்னவோ சொல்லி எங்களை பயமுறுத்திட்டாரு....உங்கம்மா கிட்டையே நேர வந்து ரொம்ப சிரமம்தான்.. டாக்டர் சொன்னதா சொல்லிட்டாரு என் ஈரக்கொலையே அறுந்து போன மாதிரி ஆயிருச்சு...அதான் உங்கம்மாகிட்ட சொல்லிகிட்டு இருந்தேன் உம்மவன் வந்தா எல்லாம் தெளிவா கேட்டு சொல்வான்னு...ஆண்டவனுக்கு தோத்திரமய்யா... என படபடத்து முடித்தாள் என் பாட்டி.

எம்மா அவுரு கெடக்காரு....இன்னைக்கு நேத்தா நான் இதை அனூபவிக்கேன்...அவருக்கு வாக்கப்பட்ட நாளில் இருந்து இந்தப் பாடுதான பட்டுட்டு இருக்கேன்...என அம்மாவும் அங்கலாய்த்தாள்.

எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கன்னு கேட்டியாம்மா...? என பாட்டி என்னைப் பார்த்து கேட்டாள்.

நாளைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்கலாம்...அநேகமா இப்ப ரவுண்ட்ஸ் வரும் போது சொல்லிருவாருன்னு நினைக்கிறேன்...நீங்களும் ஒருதடவை அவருக்கு ஞாபகப்படுத்திடுங்க...

எம்மா...நான் இப்போ ஊருக்கு கிளம்புறேன்....நாளைக்கு போடுறதுக்கு கூட எனக்கு துணியில்ல....எல்லாம் அழுக்காகெடக்கு...அதுமட்டுமில்லாம இங்க படுக்கவைக்க அவ்வளவு வசதியும் இல்லை...எனக்கும் ரொம்ப டயர்டா இருக்கு...என ஏதேதோ காரணங்களை அடுக்கி நான் ஊருக்கு கிளம்புவதாய் சொன்னேன். உண்மையில் அப்போது எனக்கு அங்கு இருக்கமுடியவில்லை என்பதே நிஜம்...ஒருவகையான தனிமையும் அப்போது எனக்கு தேவைப்பட்டது.

அதான் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்கன்னு சொல்றியே ஒரு ராத்திரி எனக்காக இங்க இருக்ககூடாதா...”என ஏக்கத்தோடு அம்மா என்னைப் பார்த்துக் கேட்டாள்.

ஆனாலும் நான் பிடிவாதமாக ”என்னைய புரிஞ்சுக்கோங்கம்மா....எனக்கு உடம்பெல்லாம் ரொம்ப வலிக்கு ஏற்கனவே அஞ்சு மணிநேரத்துக்கும் மேலா பஸ் பிரயானம் வேற செஞ்சிருக்கேன் கொஞ்சமாவது தூங்கனும்மா...”

நான் சொல்றத சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம்...” என்றாள் விரக்தியாக.

அவதான் இவ்வளவு சொல்றாள்ல நீயுந்தான் ஒரு ராத்திரி இருக்ககூடாதா....தாத்தாவ வேணும்னா வெளியில உள்ள பெஞ்ச்சுல படுக்க சொல்லிடுறேன்...” என பாட்டி அம்மாவிற்காக என்னிடம் வக்காலத்து வாங்கினாள்.

ஆமய்யா...நான் வேணும்னா வெளியில படுத்துக்கிறேன்...” இது தாத்தா.

நீங்க இரண்டு பேரும் சும்மா இருக்க மாட்டீங்களா....எனக்கு தெரியும் எல்லாம்...” நான் அவர்களை பார்த்து எரிச்சலோடு கத்தினேன்.

விடுங்கம்மா....அவன் இஷ்டம்...நீங்க யாரும் எனக்காக பேச வேண்டாம்....நீ போயிட்டு வாப்பா...”

அதற்குமேல் அங்கே நின்று கொண்டிருந்தால் நானே மனம் மாறி விடுவேன் என்பதால் வேகமாக கிளம்பினேன். அப்போது மணி இரவு ஒன்போதரைக்கு மேல் ஆகியிருந்தது. ஒருவாறு எல்லோரையும் சமாளித்துவிட்டு அறையை விட்டு வெளியேறி படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது அப்பாவை எதிர் கொண்டேன். அவர் கையில் இரவு சாப்பாட்டுக்கான பொட்டலத்தோடு இருந்தார். அவர் வாயில் போட்டிருந்த வெத்தலையையும் மீறி மதுவின் நெடி அடித்தது.

என்னய்யா...எங்க கெளம்பிட்ட..? ஊருக்கா..?

ஆமப்பா...ஊருக்குதான். நாளைக்கு காலைல அம்மாவ டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்களாம் பாத்து கூட்டிட்டு வாங்க...

உனக்கும் சாப்பாடு வாங்கிட்டேனே....இத கொண்டு போறியா... என்றபடி ஏதோ ஒரு பொட்டலத்தை நீட்டினார்.

அதெல்லாம் வேண்டாம்ப்பா....நான் கிளம்புறேன்... என்றபடி அவரது பதிலுக்கு கூட காத்திராமல் படியிறங்கி மருத்துவமனையின் வாசலுக்கு வந்து சேர்ந்தேன். நான் வாசலுக்கு வரவும் தூத்துக்குடிக்கு செல்லும் பேருந்து ஒன்று மருத்துவமனை நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி கொண்டிருந்தது. நான் வேகமாக ஓடிச் சென்று அதில் ஏறிக்கொண்டேன்.

இரவு நேரமாதலால் பேருந்தில் கூட்டமும் அவ்வளவாக இல்லை. இரண்டு பேர் அமரக்கூடிய ஒரு காலியான இருக்கையில் ஜன்னலோரும் சென்று அமர்ந்து கொண்டேன்.நடத்துனரும் நான் தூத்துக்குடிக்கே நேரடியாக டிக்கெட் கேட்டதால் எந்தவொரு புலம்பலும் இல்லாமல் கட்டணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட்டை கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார். பேருந்தின் வேகம் அதிகமாகிய போது குளிர்ந்த காற்று முகத்தில் அறைய துவங்கியது....குதூகலமாய் ஆரம்பித்த அன்றைய பயணம் எதிர்பாராத திடீர் அதிர்ச்சிகளால் என்னை மிகவும் பலவீனமாக மாற்றியிருந்தது. மனவலியும்,இயலாமையும் மேலும் முடக்கியது. ஏதோ ஒரு சூன்யமான மனநிலையில் அந்த இருளையே வெறித்தபடி கண்ணயர்ந்தேன்.....

…………….தொடரும்

கருத்துகள் இல்லை: