இது ஒரு தொடர் பதிவு......
என்னைப் பற்றி என்னைவிட என் தாய் தான் நன்றாக அறிந்து வைத்திருந்தாள். எனக்கு பிடித்தவைகள் என்னவென்பதே அவள் சொல்லித்தான் பலமுறை நான் அறிந்து கொள்ள நேர்ந்திருக்கிறது. தனது வாஞ்சையான அன்பினால் எனக்குள் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை அவளுக்கு இருந்தது. முதலில் என் தனிமையை புரிந்து கொண்டவள் நான் செய்த தவறுகளையும் ஏற்றுக்கொண்டாள்.
ஆனால் அவைகளை அவள் ஒருபோதும் நேரடியாக என்னிடம் குற்றங்களாக பட்டியலிட்டதுமில்லை, கண்டித்ததுமில்லை. அதேபோல் என்னைப் பற்றி அவளிடம் யாராவது குறை கூறினால் அவர்களிடம் எனக்காக எதிர்வாதம் செய்து என்னை சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் வைத்திருப்பதாய் உணரச் செய்தாள். என் மீதான அவளது அந்த அளப்பெரிய நம்பிக்கை தான் அவள் குரல்களுக்கு என் செவிகளை சாயச்செய்தது.
அந்த சமயத்தில் தான் புத்தகங்கள் என்னும் ’ராட்ஷச’நண்பனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அதேபோல் தான் ரசித்த கவிதைகளைப் பற்றி சிலாகித்து பேசி என்னையும் அவைகளை ரசிக்க செய்தாள். தூரிகைகளை கையில் கொடுத்து ஓவியம் பழக்கினாள். பாலசந்தர்,பாக்கியராஜ்,மகேந்திரன் என தனக்கு பிடித்த இயக்குனர்களின் படங்களை எனக்கும் பிடிக்க செய்தாள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் தான் விரும்பிய வகையில் என்னை செதுக்க துவங்கினாள். உளியின் வலி தெரியாமல் சிலை வடிக்கும் கலையில் கைதேர்ந்தவளாய் இருந்தாள்.
அவள் எனக்கு அறிமுகம் செய்து வைத்த புத்தகம் என்னும் ’ராட்ஷசன்’ என்னை முழுவதுமாய் சுவீகரித்து கொண்டான். ராஜேஷ்குமார், சுஜாதா, பாலகுமாரன் என பித்து பிடித்தாற் போல் படித்து திரிந்தேன். புத்தகங்களை என் கையில் கொடுத்து எனக்கு மிகப்பெரும் பிரச்சனையாக இருந்த தனிமையை என் நண்பனாக்கிவிட்டாள்.
எனக்கான எல்லா பிரச்சனைகளுக்கும் அவளிடன் ஒரு தீர்வு இருந்தது. அவளிடன் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னால் பேசமுடிந்தது. அவளும் என்னை தனது நண்பனைப் போல் உணரச்செய்தாள்.
ஆம்! அவளால் என்னிடம் அவளது கடந்த காலங்களின் சோகங்கள்….. தோல்விகள்….வெற்றிகள்….. சந்தோஷங்கள்…. என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. அது போன்ற தருணங்களில் என்னை அவள் ஒருபோதும் தன் மகன் என நினைத்து சில சம்பவங்களை விழுங்கியோ….மறைத்தோ எதுவும் சொன்னதில்லை. அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஏனென்றால் அவள் தான் ஒரு பெண்ணாக அதுவும் சமூகத்தில் பலதரப்பட்ட மனிதர்களோடு பழகும் வாய்ப்பு உள்ளவளாக இருப்பதினால் தான் சந்தித்து வந்த பாலியில் தொந்தரவுகளைக் கூட என்னிடம் இயல்பாக சொல்வாள். நானும் ஒரு ஆணாக இருப்பதினாலோ என்னவோ அவள் அப்படிச் சொல்லும் போதெல்லாம் அவைகள் எனக்கு ஒருவித குற்றவுணர்வுடன் கூடிய படிப்பினையாகவே நான் பெரும்பாலும் அதனை எடுத்துக் கொள்வதுண்டு. அவளும் ஒருவேளை அதன் பொருட்டும் சொல்லியிருக்கலாம்.
அப்படி ஒருநாள் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ”காதல்” குறித்த உரையாடல்கள் வந்தது. (அது நான் ’காதலுக்கு மரியாதை’ படம் பார்த்துவிட்டு வந்த சமயம் என நினைவு…..)
நான் ”அம்மா…. படம் சூப்பரா எடுத்திருக்கானுங்க…. அதுவும் அந்த கிளைமேக்ஸ் சீன்…. நானெல்லாம் படம் முடிஞ்சு போச்சுன்னு சோகமா கிளம்பிட்டேன்….. ஆனா நல்லவேளை விஜய ஷாலினி கூட சேத்துவிச்சு நல்ல Happy ending-ஆ கிளைமேக்ஸ மாத்திட்டானுங்க….”
அம்மா “டேய் காதல்ங்கிறது கல்யாணத்துல முடிஞ்சா தான் ஜெயிச்சதா நினைக்கிறது முட்டாத்தனம்டா….. நிச்சயமா காதலோட வெற்றி கல்யாணம் இல்லடா….. உண்மைய சொல்லனும்னா காதலோட முடிவு தான் கல்யாணம்….” என்றபடி அவள் ஏதேதோ பேசிச் சென்றாள். நானும் அவளை மறுத்தும், கேலி செய்தும் அன்று விட்டுவிட்டேன். ஆனால் அன்று அவள் பேசிய வார்த்தைகளுக்குள் இருந்த தீர்க்கம் எனக்கு உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை. இப்படி வாழ்வில் பல விஷயங்களில் அவளுக்கு மிகத் தெளிவான, தீர்க்கமான் பார்வையிருந்தது. ஆனால் ஒரு விஷயத்தை தவிர….. அது அவளது மூடத்தனமான கடவுள் பக்தி…..
அவளுக்கோ கிறுத்துவ மதத்தின் மீது அப்படியொரு பற்றும் நம்பிக்கையும் இருந்தது. என்னையும் என் தம்பியையும் அப்படியே அவள் வளர்க்க விரும்பினாள். எங்களது சிறு பிராயத்திலேயே கோயில் காரியங்களில் எங்களை ஈடுபடச் செய்தாள். வாரம் தவறாமல் பூசைக்கு கூட்டிச் சென்றாள். கிறுத்துவ மதச் சித்தாந்தங்களை போதித்தாள்.
ஆனால் இவையெல்லாம் எனக்குள் பக்தியை தந்த அளவிற்கு பல கேள்விகளையும் தொடர்ந்து எழச் செய்து கொண்டே இருந்தது. என் கேள்விகளுக்கு அவள் ”தேவ நிந்தனை” என்ற ஒற்றை வார்த்தையையே பதிலாக்கிக் கொண்டிருந்தாள். அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் நான் அப்போதும் முழுமையாக ”கடவுளின் இருப்பை” மறுத்துவிடவில்லை.
அந்தச் சம்பவம் வரை…….
அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு புதுவருடத்தின் பிறப்பை ஒட்டிய நேரம். உலகமே புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாட்டமாய் இருந்தது. எங்கள் ஊரான தூத்துக்குடியிலும் புது வருடக் கொண்டாட்டங்கள் களை கட்டிய அந்த சமயத்தில் தான் அந்த ஜாதிக் கலவரம் வெடித்தது. எங்கள் ஊரான தூத்துக்குடியில் பரதவர் இனமும், நாடார் சமுதாயமும் பெரும்பான்மை எண்ணிக்கையில் வாழும் இரு சமுகத்தவர்கள். பெரும்பாலும் பரதவர்கள் கிறுத்துவ மதத்தையும், நாடார்கள் இந்து மதத்தையும் தழுவிய நம்பிக்கையாளர்கள். இந்த இரு வேறுபாடுகளைத் தவிர வேறு எந்தவகையிலும் வேறுபடாதவர்கள். ஒருவருக்கொருவர் அத்தனை அன்னியோன்னியமாய் ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்ந்து வருபவர்கள். அப்படிப்பட்ட அந்த இரு சமுகத்தவர்களிடேயே தான் அந்தக் கலவரம் வெடித்தது. இரு சமுகத்தை சேர்ந்த ஓரிரு குடிகாரர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை ஊர் கலவரம் ஆனது.
கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ”பம்ஸ்” என்னும் கையெறி குண்டுகளும், பெட்ரோல் வெடிகளும் இரு சமுகத்து உறவுகளையும் வெடிக்கச் செய்தன. சாதிய அடிப்படையிலும், மத அடையாளங்களினாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்பாவி பொது மக்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. மனித நேயம் குற்றுயிரும் குலை உயிருமாய் ஆனது. கலவரம் மூண்ட இரண்டாம் நாளின் நடுஇரவில் எங்கள் வீட்டின் தொலைப்பேசி அலறியது நான்தான் அதை எடுத்தேன். எங்கள் உறவுக்காரர் ஒருவர் பதற்றமாய்…… எங்கள் வீட்டுப் பகுதியில் கலவரக்காரர்கள் வரப்போகிறார்கள் என்றும் அதனால் நாங்கள் உடனடியாக வீட்டைக் காலி செய்து விட்டு ஒடும் படியும் எச்சரிக்கை செய்தார்.
உடுத்திய ஆடைகளோடு வீட்டை பூட்டிவிட்டு என்னையும் என் தம்பியையும் அழைத்துக் கொண்டு என் அம்மாவும் அப்பாவும் அந்த நடுஇரவில் எங்கள் பக்கத்து தெருவில் வசித்து வந்த குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த ஒரு இரவு என் வாழ்க்கையில் மறக்க முடியாததாய் போனது. ஜாதியின் பெயரால், மதத்தின் அடிப்படையால் நாங்கள் வீதியில் ஓடிய அந்த நாள் எனக்கு உணர்த்தியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் இந்தக் கடவுளும்…..இந்த பாழாய்போன ஜாதியும்…. என் சகமனிதனை என் மேல் வெறுப்புறச் செய்யுமானால் எனக்கு இந்தக் கடவுளும் தேவையில்லை….ஜாதியும் தேவையில்லை…. என்பதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக