திங்கள், 30 மே, 2011

என் தேவதையின் சரிதை.....8


இது ஒரு தொடர் பதிவு..............

வாசகர்களே…..! எதையோ சொல்ல ஆரம்பித்து எங்கெங்கோ எனது பழைய நினைவுகளுக்குள் உங்களை அழைத்து சென்றுவிட்டேன். நமது பழைய இனிய நினைவுகளை கொண்டு வலிமிகுந்த தருணங்களில் ஆறுதல் தேடிக் கொள்வது மனித இயல்புகளில் ஒன்று. மனிதனின் அதிசயிக்க தக்க குணாதிசயங்களில் இதுவும் ஒன்று. சரி! மீண்டும் என் வாழ்வின் வலிநிறைந்த அத்தியாயங்களுக்குள் செல்வோம்…..

அவள் எங்களுடன் இருக்கப் போகும் ஒவ்வொரு கணமும் அவளுக்கானதாய் நான் மாற்றத் துடித்தேன். முதலில் என் அம்மாவிற்கு அவளது நோய் கொஞ்சம் கொஞ்சமாய் குணமாகி வருவதாய் ஒரு எண்ணத்தை உருவாக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் நோயை காட்டிலும் அதன் மூலம் ஏற்படும் சுயபட்சாதாபமே நம்மை அதிகம் வதைக்கும். அதனால் நான் அவளிடம் முடிந்தவரை இயல்பாகவே பழகினேன்.

இதற்கு எனக்கு பெரிதும் உதவியது என் அம்மாவிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சரவணன் அவர்கள். ஏதோ எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போலவே அவர் அந்த நாட்களில் இருந்தார். எந்த இரவிலும் அவரிடம் தயக்கமின்றி பேசும் உரிமை எனக்கு அளித்திருந்தார். என் நிலை உணர்ந்து தைரியமும் அளித்தார். மருத்துவமே வர்த்தகமயமாகிப் போன இந்தக் காலத்தில் மனித நேயத்தின் எச்சங்களாக இவர் போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் பூமியின் ஈரம் இன்னும் காயாமல் இருக்கிறது போலும்.

எங்கள் வீட்டின் வழக்கங்கள் எல்லாம் முற்றிலும் மாறிப்போயிருந்தது. யாராவது ஒருவர் என் தாயுடன் எப்போதுமே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. அவள் தனது அடிப்படை தேவைகளுக்கு கூட யாரையாவது

எதிர்பார்த்தே செய்யும் நிலைக்கு ஆளாகியிருந்தாள். வார்த்தைகளில் எளிதாக சொல்லிவிட்டேன் ஆனால் அவளுக்கோ அப்படி ஒருவரை அண்டி வாழ்வது துயரத்தின் உச்சமாக இருந்தது. எங்கள் குடும்பத்தின் வேராக எங்களை தாங்கி நின்றவள் அவள். இப்போதோ எழுந்து அமரவோ, நடந்து செல்லவோ முடியாதபடி காய்ந்த சருகாய் கட்டிலில் சுருண்டு இருந்தாள். அவளது அந்தக் கோலமே எங்கள் இயல்புகளை குலைக்க போதுமானதாய் இருந்தது.

எங்கள் குடும்ப பொருளாதாரத்தின் அடிப்படையே என் தாயின் வருமானத்தை பெருமளவு நம்பியிருந்தது. என் தந்தை அரசு பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றி வந்தாலும் அவரது வருமானத்தை வைத்து மட்டுமே எங்கள் குடும்பத்தின் அன்றாட தேவைகளை எதிர்கொள்ள முடியாதிருந்தது. அதற்கு நாங்கள் பழகிவிட்டிருந்த வாழ்க்கை முறையும் ஒரு மிகப்பெரிய காரணம். இப்போதோ என் தாயும் படுத்த படுக்கையாகிவிட்டாள். மருத்துவ செலவினங்களோ எங்கள் குடும்பத்தின் தனரேகையை கொஞ்சம் கொஞ்சமாய் மறைய செய்து கடன்ரேகைகளாக மாற்றிவிட்டிருந்தது.

அப்போது எனக்குள் ஒரு தீர்மானம் செய்து கொண்டேன் நான் என் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுவது என்று. ஆனால் எனது தீர்மானத்தை என் அம்மாவிடமோ அல்லது வீட்டில் உள்ளவர்களிடமோ நான் அப்போது வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால் என் தாயின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று என் கல்வி. அதை எதன் பொருட்டும் அவள் சமரசம் செய்து கொண்டதில்லை. ஒருமுறை தனது மருத்துவ செலவினங்களுக்காக வாங்கிய கடனில் என் கல்லூரி கட்டணத்தை கட்டியிருந்தாள். அப்படிப்பட்டவளிடம் நான் என் தீர்மானத்தை சொன்னால் வேறு நோயே தேவையில்லை அவளை கொன்றுவிட.

இப்படி பல விஷயங்களை எனக்குள் புதைத்து கொண்டு அவள் முன் இயல்பாக இருப்பது போல் நடிக்க துவங்கினேன். உலகில் எந்தப் பிள்ளையும் ஏற்க கூடாத பாத்திரமது. அழுகையை கூட சிரிப்பால் மறைக்க வேண்டிய துரதிஷ்டசாலியாய் ஆகிப்போனேன். வலிக்க வலிக்க ஒரு வாழ்க்கை வாழ ஆரம்பித்தேன். என்னை சுற்றி இருந்தவர்கள் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். அப்படி எல்லா வகையிலும் மனப்புழுக்கத்தால் வாடிய எனக்கு ஒரு ஆறுதலும் இருந்தது அது என் காதல்!

ஆம்! நானும் ஒரு பெண்ணும் காதலித்து வந்தோம். அவள் என் அக்காவின் தோழி. முதலில் இந்த இடத்தில் என் அக்காவை உங்களுக்கு அறிமுகம் செய்து விடுகிறேன். அவள் பெயர் பிரவீணா. என் தந்தையின் அண்ணன் மகள். கூட்டப்புளி என்னும் எங்கள் கடலோர கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தூத்துக்குடியில் எங்கள் வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வந்தாள். என்னைவிட இரண்டு வயது மூத்தவள்.

அவளுடைய கல்லூரித் தோழி ஒருத்திதான் என் காதலி. என் அக்காவை வைத்து அறிமுகமானாள். எனக்கும் நல்ல தோழியாகவே. ஆனால் எங்கள் நட்பு மெல்லமெல்ல அடுத்த படி நிலையை எட்டத் துவங்கியது. அதற்கு தொலைப்பேசி பேரூதவியாக இருந்தது. பதின்ம பருவத்தில் காதலிப்பதே சுகம்! அதிலும் நாம் காதலிக்கப்படுவோமேயானால் அது பரமானந்தம்!

அந்தப் பரமானந்ததிற்கு ஜாதி,மதம்,வயது எதுவும் தடைபோட்டு விட முடியாது. எத்தகைய சமூக அடிப்படைகளையும் தூக்கியெறியும் வல்லமை அதற்கு உண்டு. ஆம்! எங்கள் காதலுக்கும் அது இருந்தது. வாழ்வின் அழகான நாட்கள் அவை. எனக்கான ஒரு உலகத்தை நான் சிருஷ்டித்துக் கொண்டு வாழ்ந்த அற்புதமான காலம் அது.

எனக்கு பல பெண் தோழிகள் உண்டென்பது என் அம்மாவிற்கு தெரியும். நான் அவர்களுடன் இயல்பாக பழகுவதற்கு என் அம்மா தான் முக்கிய காரணம். ஏனென்றால் நான் அவளிடம் இருந்து தான் பாலின பேதங்களை கற்றதும்….கடந்ததும். அதனால் அவள் எங்களது நட்பை சந்தேகிக்கவில்லை. அவளது என்மீதான அந்த திடமான நம்பிக்கையே அவளிடம் என் காதல் கதையை மறைக்க செய்தது. அதுவரை எல்லாவற்றையும் மிக எளிதாக பகிர்ந்து கொள்ள முடிந்த என்னால் என் காதலியை ஒரு தோழியாக மட்டுமே என் அம்மாவிடம் அறிமுகம் செய்ய முடிந்தது….. விந்தையல்ல…..யதார்த்தமே!

எனக்கு ”சரி”க்கும் “தவறு”க்குமான எளிய வித்தியாசங்களை இனம் கண்டுக்கொள்ள கற்றுக்கொடுத்ததே அவள் தான். என்னால் அவளிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடிந்த எந்தவொரு செய்கையையும் ”சரியானவை”யே என்றும் பகிர்ந்து கொள்ள தயக்கம் ஏற்படுத்தும் எல்லாம் ”தவறானவை”யே என்றும் போதித்திருந்தாள். நானும் அதையே அளவுகோளாய் கொண்டு எனது சரிகளை அவளிடத்திலும் தவறுகளை என் அந்தரங்கத்திடமும் அடைகாக்க துவங்கினேன். ஆம்! என் அந்தரங்கத்தின் முதல் அறையை என் காதலுக்காக ஒதுக்கிக் கொடுத்தேன்.

என் காதலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் காதலித்து வளர்த்தேன். ஏதோ உலகையே வென்ற மிதப்பில் நடமாடத் துவங்கினேன். காதல் என்பதை இன்பத்தின் மறுபெயராய் எண்ணி காலத்தை என் காதலுக்காக கறைக்க துவங்கினேன். காதலை கொஞ்சம் அதிகமாகவே கொண்டாடி விட்டேன் போலும். இயற்கைக்கு மட்டுமல்ல காதலிலும் நிலையாமையே நிரந்திரமானது என்பதை காலம் சொல்லி கொடுக்க தொடங்கியது…..

கூடிக் கொண்டாடிய காதல் பொழுதுகளை கண்ணீருக்கு தாரை வார்க்க வேண்டி வரும் என எந்தக் கனவுகளும் என்னிடம் அப்போது ஆரூடம் சொல்லி இருக்கவில்லை. ஆனால் சொல்லப்படாத ஆரூடங்கள் தான் எப்போதும் பலித்தே போகும். எனக்கும் அப்படித்தான் ஆகிப்போனது. நான் காதல் மொழி பேசி கனிந்து உருக வேண்டிய கணங்களை என் தாயின் நிலை சொல்லியும்….எனக்கு நானே ஈசிக் கொண்ட அரிதாரத்தைப் பற்றிச் சொல்லியும் கறைக்கவே சரியாக இருந்தது. என் தாயின் கடைசி நாட்களில் எனக்கிருந்த ஒரே ஆறுதலாய் என் காதல் மாறிப்போனது.

நான் உடையும் போது என்னை தேற்றி எழச்செய்தாள். நான் உருகும் போது என்னை உறுதி கொள்ள செய்தாள். நம்பிக்கையால் காதல் கொடுத்தாள். எல்லாம் முடிந்து போகப்போகிறது என நான் எண்ணிய போது "தான்" இருப்பதாய் சொல்லி நிழல் கொடுத்து நின்றாள். தலை கொள்ளும் வெள்ளத்தில் தோள் கொடுத்து நீந்தச் செய்தாள்…..நீந்தத்துவங்கினேன்.

...............தொடரும்.

கருத்துகள் இல்லை: