புதன், 25 மே, 2011

என் தேவதையின் சரிதை....5


இது ஒரு தொடர் பதிவு....

அவள் பிடியிலிருந்து நான் விடுபட்ட போது காலை முடிந்து நன்பகல் பிறந்துவிட்டது. மதுரையிலிருந்து அம்மா,அப்பா,பாட்டி,தாத்தா என அனைவரும் வந்துவிட்டிருந்தனர். பயணம் செய்த களைப்பில் அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள்.பாட்டி சமையலறையின் நுழைவில் நின்று கொண்டு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த வேலைக்கார அக்காவிடம் மருத்துவமனை அனூபவங்களை புலம்பலாக கொட்டிக் கொண்டிருந்தாள். அவள் சொன்னதையே விதவிதமான வாக்கியங்களில் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாலும் அதையும் ஏதோ சுவாரஸ்யமாய் கேட்பதைப் போல் கேட்டுக்கொண்டு அவள் புலம்பல்களுக்கு இசைவான வார்த்தைகளை பதிலாகவும் தந்துக்கொண்டிருந்தாள் அந்த அக்கா.

நான் என் அறையிலிருந்து வெளியில் வந்த போது எங்கோ வெளியில் போக தயாராய் இருந்த தாத்தா என்னைப் பார்த்துவிட்டு பாட்டியை நோக்கி எம்மா...இங்க பாரு பேரப்புள்ள முழுச்சிட்டாரு அவனுக்கு சாப்பாட்ட போடு...

அவனே இப்பதான் முழுச்சிருக்கான்....உடனே எப்படி சாப்புடுவான்...?" என தாத்தாவை கடிந்தபடி என்னைப் பார்த்து என்னய்யா நல்ல நித்திரையோ...?எனக் கேட்டாள்.

ம்...நீங்க எல்லாம் எப்ப வந்தீங்க...?

இப்பதான்...ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்....முதல்ல நீ போய் பல்ல வெளக்கிட்டு வா...என்றாள்.

தாத்தா மருமகன் குளிச்சாச்சா...? என பாட்டியிடம் கேட்டார்.

வருவாங்க....அதுக்குள்ளையும் என்ன அவசரம் உங்களுக்கு...? என சினந்து கொண்டாள் பாட்டி.

அவள் எப்போதும் இப்படித்தான் ஒருவித செல்லக் கோபத்தோடே தாத்தாவிடம் உரையாடுவாள். தாத்தாவும் அந்த எரிச்சாலான வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் உரிமைச் சீண்டலை புரிந்துகொண்டு ரசித்துக் கொள்வார். பெரும்பாலும் பொதுவிடங்களில் அவர்களது உரையாடல்கள் இந்த வகையை சார்ந்ததாகவே அமையும். அதேசமயம் அவள் தன்னைத் தவிர வேறு யாரும் தாத்தாவை கடிந்து கொள்ள அனுமதிக்க மாட்டாள். தான் பெற்ற பிள்ளைகள்...பேரப்பிள்ளைகள் என எந்தவித விதிவிலக்கும் அதில் இருந்ததில்லை. முதுமையில் காதல் கூட கோபத்தின் ரூபமாகவே வெளிப்படும் போலும்.

என்ன ஆச்சி...தாத்தா எங்க கெளம்பி இருக்காங்க..?முகத்தை அலம்பிவிட்டு பிரஷ்ஷில் பேஸ்டை வைத்தபடி கேட்டேன்.

உங்க தாத்தாவுக்கு துணி தொவைக்கனுமாம்....இன்னக்கி அங்க தண்ணி வர்ற நாளு வேற....அதனால அதையும் புடிச்சுவச்சிட்டு வாங்கன்னு சொல்லியிருக்கேன்....

தாத்தா....உங்கள வீட்ல கொண்டு போய் விடனுமா...?

இல்லய்யா.....அப்பா தம்பிய கூட்டிட்டு வர மாமா வீட்டுக்கு போறாங்களாம்....அதான் அப்படியே போற வழியில என்னைய வீட்டுல இறக்கி விட்டிற்றதா சொன்னாங்க....என்றவரிடம் பதிலேதும் பேசாமல் பற்களை விளக்க துவங்கினேன்.

வழக்கம்போல் அன்றாட நிகழ்வுகள் இயல்பாக தொடங்கியது........

ஆம்! எனக்கு ஒரு தம்பி உண்டு அவன் என்னைவிட நான்கு வயது இளையவன். அப்போது அவன் பத்தாம் வகுப்பு தேர்வுகள் எழுதிவிட்டு பரீட்சை முடிவுக்காக காத்திருந்தான். நாங்கள் இரண்டு பிள்ளைகள் தான்.பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகிறவர்களாக இருந்தபடியால் திசைக்கொன்றாய் வளர வேண்டிய சூழல். அவன் ஆரம்பத்திலிருந்தே என் தாய்மாமாவின் வீட்டில் தான் அதிகம் வளர்ந்து வந்தான். ஆரம்பகாலத்தில் நாங்கள் தாத்தா,பாட்டி,மாமா,அத்தை என கூட்டு குடும்பமாக தான் இருந்து வந்தோம்.

தூத்துக்குடியின் மைய பகுதிகளில் ஒன்றான அந்தோனியார் கோயிலை ஒட்டிய ஒரு சிறு தெருவில் இருந்த எங்கள் பாட்டியின் பூர்வீக வீட்டில்தான் ஒன்றாக இருந்தோம். தனிநபர் தேவைகள் கொஞ்சம் பெருகியவுடன் இட நெருக்கடியும்,மன நெருக்கடியும் அதிகரிக்க துவங்கியது. உறவுகள் நிலைக்க கொஞ்சம் இடைவெளி இருப்பது அவசியம் என புரிந்து கொண்டாள் என் அன்னை. அதனால் அப்போது நகருக்கு கொஞ்சம் ஒதுக்குப் புறமாகவும் எங்கள் பள்ளிக்கூடத்திற்கு அருகேயும் இருந்த வாடகை வீட்டிற்கு குடிபோவது என முடிவு செய்யப்பட்டு தனிக்குடித்தனம் சென்றோம்.

எங்களது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் அந்த அமைதியும், தனிமையும் தேவையானதாய் இருந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கோ கூட்டு குடும்பத்தில் உறவுகளின் அரவணைப்பிலும், வண்ணத்துப் பூச்சிகள் போன்ற நண்பர்களின் கூட்டத்திலும் திளைத்திருந்து விட்டு திடீரென அவர்களை பிரிய நேர்ந்ததால் வேரோடு பிடிங்கி வேறு இடத்தில் நடப்பட்ட செடிகளைப் போல் வாடிப்போனோம். வாழ்வில் தனிமை என்ற ஒன்றையே சுவைத்திராத நான் முதன்முதலாக ஒரு நாளின் அதிகப்பட்சமான நேரங்களை தனிமையுடன் கழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளான சமயம் அது. தனிமைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு நாமாக விருப்பத்துடன் அதை ஏற்றுக்கொள்ளும் போது தனிமை நமக்கு இனிமை சேர்க்கும் மாறாக அது மற்றவர்களால் நமக்கு திணிக்கப்படும் போதோ தனிமை கொடுமையான தண்டனையாக மாறிப்போகும்.

எனக்கும் அது அப்படித்தான் ஆகிப்போனது....

நான் அப்போது ஆறாம் வகுப்பும் தம்பி இரண்டாம் வகுப்பும் படித்து கொண்டிருந்த சமயம் அது. தம்பியோ பள்ளி முடிந்தவுடன் அவனுக்காக அமர்த்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி என் தாய்மாமா விட்டிற்கு சென்றிடுவான். ஆனால் நானோ பள்ளி முடிந்தபின்பும் பள்ளிக்கூடத்திற்கு உள்ளேயே டியூஷனும் முடித்துவிட்டு எனக்கு வாங்கி கொடுக்கப்பட்டிருந்த சைக்கிளில் எங்கள் வீட்டிற்கு போய்விட வேண்டும். அம்மாவும்,அப்பாவும் வெவ்வேறு வெளியூர்களில் பணிபுரிந்து வந்தனர். தினமும் பணிமுடிந்து முதலில் ஊர் திரும்புபவர் தம்பியை மாமா வீட்டிலிருந்து அழைத்து வரவேண்டும். பெரும்பாலும் அதற்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிடும். இதுதான் எங்களது அன்றாடம்...... அதாவது என் அம்மாவிற்கு எங்கள் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு மாறுதல் கிடைக்கும் வரை ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கும் மேல் இதுதான் நடைமுறையாக இருந்தது.

பெற்றவர்களின் தீவிர பொருளாதார தேடலால் என் பதின்ம பருவத்தில் எனக்கு பரிசளிக்கப்பட்ட தனிமையை தவிர்க்க நான் புதிய நண்பர்களை உருவாக்கி கொண்டேன். அவர்கள் புகைவடிவாகவும், திரவ வடிவாகவும், நிர்வாணத்தின் நிழல் வடிவாகவும் உருவகம் கொண்டவர்கள். ஆம்! தண்ணியடிப்பதும், புகைபிடிப்பதும் எனக்கு ஆறாம் வகுப்பிலேயே பழக்கம் ஆகியிருந்தது. கையில் கிடைக்கும் அல்லது எடுக்கும் காசுகளை எல்லாம் எனது இந்த புதிய நண்பர்களுக்காக அர்ப்பணம் செய்ய ஆரம்பித்தேன். பள்ளிப்பருவத்திலே இவர்களது சகவாசம் கிடைத்து விட்டதால் படிப்பும் பல்லை இழிக்க ஆரம்பித்தது. இதற்கு கைமாறாக இவர்களோ என்னைப் போன்றே குடும்பச் சூழல் அமையப்பெற்ற என் வயதொத்தவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

வாழ்க்கை இலக்குகள் இல்லாமல் பயணிக்க துவங்கியது. பெற்றவர்கள் இருக்கும் நேரத்தில் ஒருமாதிரியும் அவர்களது கண் மறைவில் வேறு ஒரு உலகிலும் சஞ்சீகரிக்க துவங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தின் மீதான பிடிப்புகள் குறையத் துவங்கியது. எங்களை தனிமைப்படுத்திய சமூகத்தை நாங்கள் ஒன்றாக இணைந்து ஒதுக்க முடிவெடுத்தோம். ஆம்! நண்பர்களோடு சேர்ந்து ஊரை விட்டே ஓடிப்போக முடிவு செய்தேன்.....

அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். முதலில் நான் இந்த திட்டத்தை முன்மொழிந்ததும் என் நண்பர்கள் வட்டத்தில் ஏகபோக வரவேற்பு இருந்தது. பத்திற்கும் மேற்பட்டோர் தாங்களும் வருவதாக ஒப்புக்கொண்டார்கள். நாட்கள் செல்ல செல்ல திட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்ததும் பயத்தால் ஒப்புக்கொண்ட ஒவ்வொருவராய் திட்டத்திலிருந்து விலக ஆரம்பித்தார்கள். கடைசியில் என்னுடன் சேர்ந்து வர வினோத்தும்,ராஜ்குமாரும் மட்டுமே ஒப்புக்கொண்டார்கள். ஒரு சனிக்கிழமை ஓடிப்போவதாய் முடிவுசெய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு அன்றே வீட்டிலிருந்த உண்டியலை எடுத்து பதுக்கிக் கொண்டேன். மறுநாள் சனிக்கிழமை விடுமுறை நாளாதலால் விளையாடப் போவதாய் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன். ஏற்கனவே பேசி வைத்த ஒதுக்குப்புரமான இடத்தில் மூவரும் சந்தித்து கொண்டோம். மற்ற இருவரும் எனக்கு முன்பே வந்திருந்தனர். இருவர் முகமும் வாடிப் போயிருந்தது. காரணம் கேட்ட போது வீட்டில் பணமே எடுக்க முடியவில்லை என்றும் இருவர் கையிலுமாய் சேர்த்து மொத்தம் பதினைந்து ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறினார்கள். அதனால் திட்டத்தை வேண்டுமானால் வேறு ஒருநாளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என சொல்லிப்பார்த்தார்கள்.

நான் திடமாக மறுத்துவிட்டு நான் எடுத்து வந்த உண்டியலை அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் உற்சாகமானார்கள். உண்டயலை உடைத்து எண்ணிப்பார்த்த போது ஐம்பத்தி ஆறு ரூபாய் மாத்திரமே இருந்தது. இருவரும் மீண்டும் சோர்ந்து போனார்கள். நான் இருவருக்கும் ஆறுதலளித்து பேசி திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொள்ள வைத்தேன். கையில் உள்ள காசு தீரும் வரை பயணம் செய்வதென்றும்....காசு தீரும் இடத்தில் இறங்கி உழைத்து பிழைத்து கொள்வதென்றும் ஏகமனதாக தீர்மானம் செய்து பயணத்தை துவக்கினோம்.

என் பெற்றோருடன் திருநெல்வேலியில் உள்ள என் அத்தை (அப்பாவின் அக்கா) வீட்டிற்கு அதிகம் பயணம் செய்திருந்தபடியால் அந்த அனூபவத்தின் அடிப்படையில் முதலில் திருநெல்வேலிக்கு பயணமானோம். அதுவரை பெற்றோர்கள் உடன் மட்டுமே பயணம் செய்திருந்தவர்களுக்கு அது ஒரு உற்சாகமான அனூபவமாகவே இருந்தது. வீட்டை விட்டு ஓடிப்போகிறோம் என கொஞ்சம் நஞ்சம் இருந்த பதட்டமும் அந்த பயணத்தின் உற்சாகத்தில் மறைந்துவிட்டிருந்தது. வழக்கமாக பேருந்தில் ஏறிய அடுத்த கணமே நான் தூங்கிவிடுவேன். ஆனால் அன்றோ எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை.

அடிக்கடி பயணம் செய்த பாதையாக இருந்த போதிலும் அன்று நான் பார்த்த இடங்கள் எல்லாம் புதியனவையாகவே தோன்றிற்று. மனதுக்கினிய நண்பர்கள்....கனவுகள் நோக்கிய பயணம்......கட்டுப்பாடுகள் இல்லா புதிய உலகம்...என சிறகடித்துக் கொண்டிருந்தோம். அப்படியே முடிவில்லாமல் பேருந்து பயணித்து கொண்டே இருக்காதா? என்பதே அப்போதைய எங்களது ஒரே ஆசையாக இருந்தது. இன்பமான தருணங்கள் வேகமாக கடந்து போய்விடும் என்னும் சார்பியல் தத்துவத்தின் கூறுகள் படி அந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயணம் ஒரு நொடிப் பொழுதைப் போல் கடந்துபோனது. நாங்களும் திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டிருந்தோம்.

மேற்கொண்டு மீதம் இருந்த காசில் எவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ள குறைவான பயணிகள் இருந்த பேருந்துகளில் ஏறி பின் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அங்கிருந்த பயணிகள் நடத்துனரிடம் அவர்கள் பயணிக்கும் ஊர்களின் பெயரை சொல்லி பயணக் கட்டணத்தை கேட்பதை வைத்து எங்கள் கையிருப்பை சரிபார்த்து கொண்டே வந்தோம். எங்கள் கையிருப்புக்கு அதிகமாக கட்டணம் வரும் பேருந்துகளிலிருந்து நடத்துனர் எங்களை நெருங்கும் முன்பே இறங்கிவிடுவோம்.

இப்படியாக ஓரிரு பேருந்துகளில் ஏறி இறங்கி கடைசியாக மணிமுத்தாறு செல்லும் பேருந்தில் ஏறினோம். எங்கள் கையிருப்புக்கு அது ஒத்துவருவதாய் இருந்தது. அதனால் மணிமுத்தாறுக்கு மூன்று டிக்கெட்டுகள் வாங்கி பயணத்தை தொடர்ந்தோம். நாங்கள் எடுத்து வந்த பணம் முழுவதும் பயணக் கட்டணத்திற்கே செலவாகிப் போனதால் மதிய உணவருந்த காசு இல்லாமல் போனது. அதுவரை நேரத்திற்கு சாப்பிட்டு பழகிய எனக்கு பசி என்ற புதிய நண்பன் அறிமுகமானது அப்போது தான். வாழ்வில் முதல் முறையாக அவனை நான் அன்று தான் சந்தித்தேன்.

அதுவரை ஏட்டிலும் மற்றவர்களது பேச்சிலுமே அவனைப் பற்றி கேள்விப்பட்டிருந்த எனக்கு அவனது நேரடி அறிமுகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாழ்வின் யதார்த்தங்கள் எங்கள் முகத்தில் அறைந்தது. சற்று நேரத்திற்கு முன் கரைபுரண்ட உற்சாகம் திடீரென்று மறைந்துபோயிருந்தது. மூவரும் பசியின் பிடியில் சிக்கியதால் சோர்ந்து போய் தூங்கிவிட்டோம்.....முரட்டுக்கரம் ஒன்று எங்களை துயில் கலைத்தது. நாங்கள் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தோம் பேருந்து காலியாக இருந்தது......

.............தொடரும்.

கருத்துகள் இல்லை: