புதன், 1 ஜூன், 2011

என் தேவதையின் சரிதை......9


இது ஒரு தொடர் பதிவு....


விடுமுறைகள் முடிந்து கல்லூரி துவங்கும் நாளும் வந்தது…..எனக்கோ என் அம்மாவை விட்டு பிரிய மனமில்லை. நான் எடுத்த முடிவுகளை சொல்லவும் தைரியமில்லை. அப்போது அவள் தான் என்னைத் தேற்றி மீண்டும் கல்லூரிக்குச் செல்ல வைத்தாள். தாயின் காவலுக்கு காலனை அமர்த்திவிட்டு

கல்லூரிக்குச் சென்றேன்.

கண்களில் கனவுகளை தேக்கி வைத்தபடி ஆசையும், படபடப்புமாய் நான் கால் பதித்த அதே கல்லூரிச்சாலை இப்போது எனக்கு சிறைச்சாலையாக காட்சியளித்தது. என் தாயின் கடைசி நாட்களில் கூட அவளுடன் இருக்க முடியாமல் போகிறதே என்ற எண்ணம் என்னை மேலும் வதைத்தது. என் உடல்தான் அங்கு சிறைபட்டு கிடந்ததே ஒழிய என் மனமோ என் தாயை தான் சுற்றிக்கொண்டே இருந்தது. வீட்டிலிருந்து போன் வரும் ஒவ்வொரு முறையும் நான் செத்து செத்தே பிழைத்தேன்.

என்னால் எதிலும் அப்போது கவனம் செலுத்த முடியவில்லை. என் நிலையறிந்த நண்பர்களும் என்னை முடிந்தவரை தேற்றவே செய்தனர். ஆனாலும் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. வாரத்தின் இறுதி நாட்களுக்காக வாரம் முழுக்க காத்திருக்க துவங்கினேன்…..

அப்படித்தான் ஒரு வாரத்தின் இறுதிநாளில் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்றேன். மீண்டும் கல்லூரிக்கு திரும்புவதில்லை என்னும் உறுதியுடன். எதையாவது சொல்லி வீட்டிலே இருந்துவிட வேண்டும் என வீட்டிற்குச் சென்றேன். ஆனால் அங்கோ நான் எதுவும் சொல்ல வேண்டிய தேவையே இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டிருந்தது.

ஆம்! என் தாய் மிகவும் பலகீனமாய் மாறியிருந்தாள். அவளை வீட்டில் வைத்து கவனிக்க முடியாத அளவுக்கு அவளது உடல் நிலை மாறியிருந்தது. அவளை மதுரைக்கு அலைய வைக்க வேண்டாம் என மருத்துவர் கூறியதால் எங்கள் ஊரில் உள்ள கிருத்தவ கன்னிமார்களின் சேவையில் நடைபெற்று வரும் மருத்துவமனை ஒன்றில் அவளை அட்மிட் செய்தோம். அங்கிருந்த கன்னிமார்களுக்கும் என் அன்னைக்கும் ஏற்கனவே நல்ல சினேகம் உண்டு. அவளின்பால் அவர்களுக்கு எப்போதும் ஒரு தனிக் கருணை உண்டு. அதுமட்டுமின்றி என் அம்மாவிற்கு மருத்துவ ஆலோசனைகள் சொல்லி வந்த டாக்டர் சரவணன் அவர்களும் மதுரையிலிருந்து வாரமொருமுறை எங்கள் ஊருக்கே வந்து என் அம்மாவை பார்த்துச் செல்வதாகவும் உறுதியளித்திருந்தார்.

என் அம்மாவிற்கு கால்களில் நீர்கோர்க்க ஆரம்பித்தது. கால்கள் வீங்கியதால் எழுந்து நிற்கவே அவளுக்கு முடியாமல் போனது. கழிவறையில் கூட ஒருவர் துணைக்கு நிற்க வேண்டிய அவலத்திற்கு ஆளானாள். படுக்கையிலேயே கிடந்ததால் BED SOAR எனச் சொல்லப்படும் முதுகுப் புண்களும் வந்து அவளை வதைத்தது. படுக்கவும் முடியாமல்….எழுந்து நடக்கவும் முடியாமல் அவள் அனுபவத்தை வாதைகள் துயரத்தின் உச்சம். நானும் என் பாட்டியும் தான் அவளுக்கான துணைகளாக இருந்தோம். ஒருவர் மாற்றி ஒருவராக அவளைப் பார்த்துக்கொண்டு மருத்துவமனையும் வீடுமாக எங்கள் வாழ்க்கை பயணம் மாறிப்போனது.

அப்படி ஒரு கடுமையான சூழலையும் என் தாய் மிகத் தைரியமாகவே எதிர்கொண்டாள். அவள் ஒருபோதும் அதை தன் வாழ்வின் கடைசி நாட்களாக எண்ணியதேயில்லை. தான் எப்படியும் குணமாகி மீண்டும் வேலைக்கு செல்வோம் என அவள் உறுதியாக நம்பினாள். அந்த நம்பிக்கைக்கு காரணம் அவளது தீவிர கடவுள் பக்தியே ஆகும். ஆம்! அவள் தன்னைவிட அதிகமாக கிருத்துவ மதத்தையும் அதன் கடவுளரையும் உளமார நம்பினாள். தன் வாதைகளிலிருந்து தன்னை இயேசு கிறுஸ்து விடுவிப்பார் என உறுதியாய் இருந்தாள். அவளது அந்த ஆழமான நம்பிக்கையை வைத்து ஆதாயம் தேட ஒரு கூட்டமும் அடிக்கடி அவளை பார்க்க வந்து போனது. செபம் என்ற பெயரில் அவர்கள் அடித்த கொட்டமும் ஒவ்வொரு முறையும் என்னை இரத்தம் கொதிக்க வைத்தது. எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் என்பது போல் இருந்தது அவர்களது செயல்பாடுகள். ஆனால் நான் என் தாயின் பொருட்டு அதை சகித்துக் கொண்டேன்.

என் தாயின் நிலையும், எனது இயலாமையும் ஒரு சேர என்னை மனச்சிதைவுக்குள்ளாக்கியது. என்னால் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் இயல்பாக நடமாட முடியவில்லை. அதனால் நான் மீண்டும் கல்லூரிக்குச் செல்ல முடிவெடுத்தேன்.

நான் கல்லூரிக்கு செல்வதாய் என் அம்மாவிடம் சொல்லிய போது அவளால் என்னை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை, வழி அனுப்பவும் அவளுக்கு மனமில்லை. ஆனாலும் நான் பிடிவாதமாக கல்லூரிக்கு கிளம்பிச் சென்றேன். கல்லூரிக்கு வந்து விட்டாலும் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. பெரும்பாலும் ஏதாவது உடல் உபாதையை காரணம் காட்டி விடுதியிலேயே தங்க ஆரம்பித்தேன். அப்படி விடுதியில் தனிமையில் இருக்கும் நாட்களில் பெரும்பாலும் மதுவிலும், சிகரெட்டிலுமே என் பொழுதுகளை கழிக்க துவங்கினேன். என் நிலையறிந்து என் நண்பர்களும் என்னோடு சேர்ந்து கொண்டார்கள். படிப்பில் நாட்டம் இன்றி சுற்றத் துவங்கினேன்.

ஒருநாள் காலையில் திடீரென்று என் வீட்டிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் பதறியடித்தபடி போனால் அங்கு என் அம்மாவின் குரல்….

“என்னடா எப்படி இருக்க…?”

“அம்மா…..எப்படிம்மா இருக்கீங்க…?”

“நீ நல்லாயிருக்கியாப்பா…. ?எனக்கென்னடா இயேசப்பா கிருபையில நான் நல்லா ஆயிட்டேன் தெரியுமா? இப்ப எனக்கு எந்த நோயும் இல்ல….” அவள் நம்பிக்கையோடு பேசிக்கொண்டே போனாள். என்னால் என் காதுகளை நம்பவே முடியவில்லை. அத்தனை உற்சாகமான அவளது குரலைக் கேட்டு பலநாட்கள் ஆகியிருந்ததால் நான் மகிழ்ச்சியில் உறைந்தே போனேன்.

“என்னடா சத்தத்தையே காணோம்…?”

எப்பம்மா ஆஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தீங்க….?”

“நான் நேத்து சாயிங்காலமே டிஸ்சார்ஜ் அயிட்டேண்டா….நீதான் வரவே மாட்டைக்க….உனக்கு அம்மாவ பாக்கணும்ன்னு தோணலையா….?”

அந்தக் கேள்வியால் நான் உடைந்து விட்டேன். என்னையும் மீறி என் கண்களில் நீர் வழியத்துவங்கியது. நான் அதை அவள் அறியாத வண்ணம் என் குரலை திடப்படுத்திக் கொண்டு….”எம்மா வர்ற செப்டம்பர் 5ஆம் தேதியில இருந்து எனக்கு ஓனம் ஹாலிடேஸ் விடுறாங்க நான் அப்ப வாரேன்மா….”

“சரிப்பா….கைல செலவுக்கு காசு வச்சிருக்கியா இல்ல போட்டுவிடவா….?”

“வேண்டாம்மா…..என்கிட்ட இருக்கு. நான் வந்திருவேன்ம்மா….”

“சரிடா….உடம்ப பாத்துக்கோ பத்திரமா வா….” அவள் போனை துண்டித்தாலும் எனக்குள் சொல்லொன்னா உற்சாகம் தொற்றிக் கொண்டது. எனது அத்துணை கவலைகளையும் அவளது குரல் துடைத்து விட்டிருந்தது. உற்சாகமாக செப்டம்பர் 5ஆம் தேதிக்காக காத்திருக்க துவங்கினேன்.

...........தொடரும்.

1 கருத்து:

போளூர் தயாநிதி சொன்னது…

//அந்தக் கேள்வியால் நான் உடைந்து விட்டேன். என்னையும் மீறி என் கண்களில் நீர் வழியத்துவங்கியது. நான் அதை அவள் அறியாத வண்ணம் என் குரலை திடப்படுத்திக் கொண்டு….”எம்மா வர்ற செப்டம்பர் 5ஆம் தேதியில இருந்து எனக்கு ஓனம் ஹாலிடேஸ் விடுறாங்க நான் அப்ப வாரேன்மா….”// parattukal