செவ்வாய், 24 மே, 2011

என் தேவதையின் சரிதை....4


இது ஒரு தொடர் பதிவு....

எந்தவொரு நட்சத்திரத்திற்கும் வால் முளைக்காத ஒரு இயல்பான நாளில் சாதாரண மீனவக் குடும்பத்தில் ஒரு தம்பிக்கும், தங்கைக்கும் மூத்தவளாக பிறந்தவள் என் அன்னை. அவளது பூர்வீகம் தூத்திக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்திருக்கும் “பழையகாயல்” என்னும் கடற்கரை கிராமம். ஆனால் பிள்ளைகளின் படிப்பிற்காக அறுபதுகளின் ஆரம்பத்திலேயே தூத்துக்குடிக்கு குடிபெயர்ந்து வந்துவிட்டனர் எனது பாட்டியும் ,தாத்தாவும். என் தாத்தாவோ கப்பலில் மாலுமியாக இருந்தவர். கடலாறு மாதம் கரை ஆறு மாதம் என கடலில் தத்தளித்து குடும்பத்தை கரையேற்றி வந்திருக்கிறார். அவர் திடீரென ஒருமுறை மனச்சிதைவுக்கு ஆளாகி உடல் சுகவீனமில்லாமல் படுத்தபடுக்கையாகி போனார். கையிலிருந்த பணம், வீட்டிலிருந்த நகை, பொருள் என எல்லாமும் தாத்தாவின் மருத்துவ செலவிற்கு தாரைவார்க்கப் பட்டதால் எதிர்பாராத வறுமைக்கு அப்போது என் அம்மாவின் குடும்பம் ஆளாகியிருக்கிறது.

அது எழுபதுகளின் இறுதிக் காலம்......

வண்ணக்கனவுகளுடன் கல்லூரிச் சாலைக்குள் நுழைந்த என் அன்னைக்கோ குடும்பச் சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே விடவேண்டிய நிர்பந்தம். இருந்த கல்வி தகுதியை வைத்துக் கொண்டு கிடைத்த வேலைக்கு சென்றுள்ளார். முதலில் ஒரு பெயிண்ட் கம்பெனியில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் வேலை கிடைத்திருக்கிறது. வீடு...வீட்டை விட்டால் பள்ளி என சிறு வட்டத்தில் சுழன்று வந்தவளுக்கு வெளியுலகின் யதார்த்தங்கள் அப்போது புரிந்திருக்கவில்லை.

கள்ளம் கபடமற்ற சிநேகங்களோடும், பிரியமான உறவுகளோடும் மட்டுமே பழகியிருந்தவளுக்கு ஓநாய்களின் ஓரப்பார்வையும், வல்லூறுகளின் வட்டமிடலும் அப்போது தெரிந்திருக்கவில்லை. அதனால் தன்னுடன் வேலை பார்த்து வந்த அனைவருடனும் சகஜமாக பழகி வந்திருக்கிறாள். அதை சாதகமாக எடுத்துக்கொண்ட அங்கிருந்த சூப்பர்வைசர் ஒருவன் அவளிடம் சில சில்மிஷங்களை முயற்சித்திருக்கிறான். அதில் பயந்து போனவள் வீட்டிற்கு வந்து இனிதான் எங்கும் வேலைக்கே போகப்போவதில்லை என சொல்லி அழுதிருக்கிறாள். ஆனால் குடும்பத்தின் வறுமைச் சூழல் அவளை விடுவதாயில்லை. மீண்டும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்....

இம்முறை ஒரு டூடோரியல் சென்டரில் ஆங்கிலப் பாடம் எடுக்கும் வேலை கிடைத்திருக்கிறது. கொஞ்சம் கௌரவமான வேலை எனப் போனவளுக்கு. அங்கே பசங்களின் கேலிகளும், கிண்டல்களும் தொல்லையாக மாறியிருக்கிறது. ஆனால் அவைகள் அவளுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கவில்லை காரணம்... அதை அவள் முன்கூட்டியே கொஞ்சம் யூகித்திருந்தாள். அதனால் அவர்களது கேலிப்பேச்சுகளை கேட்டும் கேட்காததைப் போல் அவளது வேலையில் மட்டுமே கருத்தாய் இருக்க தன்னை பழக்கிக்கொண்டாள். நாட்கள் செல்ல செல்ல அவளது இயல்பான ஆளுமையால் அத்தகைய கேலிப் பேச்சுக்களும் குறைந்து விட்டிருந்தது.

வாழ்வின் யதார்த்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கு பழக்கப்பட இந்த சமூகத்தின் நிஜமான முகமும் புரிபட துவங்கியிருந்தது. அந்தசமயத்தில் தான் ஒரு அரசு வங்கியில் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்தவும், தேர்வெழுதவும் கூட அப்போது அவளிடம் பணம் இருந்திருக்கவில்லை. உறவுகளே கூட சீண்ட தயங்கிய அந்த வறுமையான சூழலில் ஒரே தெருவில் குடியிருந்த பழக்கத்தை தவிர வேறு எந்த உறவும் இல்லாது எங்கள் தெருவாசியாக இருந்த கனியாச்சியின் தயவிலே தான் அந்த வேலைக்காக என் தாயால் விண்ணப்பிக்க கூட முடிந்திருக்கிறது.

சிறுசிறு தேவைகளுக்காக வாழ்க்கையில் மிகப் பெரும் போராட்டம் நடத்தி வந்தவளுக்கு அந்த அரசு வங்கியில் வேலை கிடைத்தது வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இருபது வயதில் தோளில் பையை தூக்கிக் கொண்டு குடும்பத்தை வறுமையின் பிடியில் இருந்து மீட்க சென்றவள் தற்போது புற்றுநோயின் பிடியில் சிக்கும் வரை ஓய்வென்பதே அறிந்திராமல் ஓடிக்கொண்டிருந்தாள். தனது திருமணம்....தங்கையின் திருமணம்....தந்தையின் மருத்துவ செலவினங்கள்.....குடும்பத்தின் பொருளாதார ஏற்றம் என எங்களது குடும்பத்தின் அத்துணை காரியங்களையும் ஒரு பொறுப்புள்ள ஆண்மகனைப் போல் நடத்திக்காட்டியவள் என் அன்னை.

ஒரு ஆணாதிக்க சமூகத்தில் எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் எந்தவித பக்கபலமும் இன்றி அவள் தன் வாழ்வில் கண்டுள்ள ஏற்றங்கள் எல்லாம் சாதாரணமானவை அல்ல. அதற்கு பின்னால் அவளது அளப்பெரிய உழைப்பும், தனித்துவம் வாய்ந்த ஆளுமையும் நிறைந்திருந்தது. அப்படிப்பட்ட ஒரு கம்பீரமான வாழ்வுக்கு சொந்தக்காரியானவள் என் அன்னை. ஒரு சுயம்புவைப் போல் தன்னைத் தானே வளர்த்துக்கொண்டு எங்களுக்கெல்லாம் ஒரு ஆலமரத்தைப் போல் நிழலளித்து வந்த என் அன்னையின் கைகளைத்தான் பிடிக்க மரணத்தின் கொடுங்கரங்கள் நீண்டு கொண்டிருந்தது.....

யாரோ என் தோள்களை தடதடவென தட்டினார்கள்.....திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன்....நீல நிறை உடையில் அந்தக் குட்டை மனிதர் தன் வழுக்கை தலையை தடவியபடி எரிச்சலோடு என்னிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு புரியவில்லை....சில கணங்கள் பிடித்தது நான் சுயநினைவிற்கு வர...அப்போது தான் மெல்ல உரைத்தது நான் பேருந்தில் இருப்பது. வெளியில் பார்த்தேன்....தூத்துக்குடி பேருந்து நிலையம் என மங்கலாக தெரிந்தது. ஆம்! கடுமையான அயர்ச்சியில் தூங்கி விட்டிருந்தேன்....மெல்ல எழுந்து பேருந்திலிருந்து இறங்கினேன். இரவு மணி 1.30க்கு மேல் அகியிருந்தது....கால்கள் இயல்பாக ஆட்டோக்கள் நிற்கும் இடைத்தை நோக்கி பயணப்பட்டது. நான் அங்கு போகும் முன்பே அவர் என்னை தன் ஆட்டோவோடு வந்து எதிர்கொண்டு..என்ன அண்ணாச்சி எங்க போகனும்.... என எதிர்கொண்டார். அவருக்கு நிச்சயம் என் தந்தை வயதை ஒத்திருக்கும்.

நான் முத்தம்மாள் காலனி 7ஆவது தெரு போகனுண்ணே..என்றேன். அவர் தன் ஆட்டோவின் கதவுகளை திறந்து என்னை ஏற்றிக்கொண்டார். அவரிடம் பேசுவதற்கு தோன்றாததால் நான் மௌனமாய் இருந்தேன். பலவகைப்பட்ட மனிதர்களை பார்த்தவராதலால் அவரும் என் மௌனத்தை கலைக்கவில்லை. எனக்கு அது பிடித்திருந்தது. நளினமாய் தன் உடலை வளைத்து செல்லும் பாம்பினைப்போல் குண்டு குழிகளில் விழந்து விடாமல் அவர் தன் ஆட்டோவை என் வீட்டை நோக்கி ஊரச்செய்தார். எங்கள் தெருவுக்குள் ஆட்டோ நுழையும் சமயத்தில் என் பக்கம் திரும்பாமலே என் வீட்டின் அடையாளத்தை கேட்டார். மஞ்சள் நிற பூக்களை சூடியபடி அந்த இரவிலும் நிலவின் ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்த எங்க வீட்டின் மதில்சுவரை அடையாளப்படுத்தி காட்டினேன்.

அவரோ புன்முறுவல் பூத்தபடிஓ! பேங்க்கார அக்கா வீடா...என்றார். எனக்கு அது ஆச்சர்யமாய் இல்லை. ஏனென்றால் இது வழக்கம் தான். பெரும்பாலும் என் அம்மாவை தெரியாத ஆட்டோக்காரர்கள் எங்கள் ஊரின் புதிய பேருந்து நிலையத்தில் இருக்க முடியாது. அவள் எப்போது பணி முடிந்து திரும்பினாலும் ஏதோ ஒரு ஆட்டோவில் தான் வீடு வந்திறங்குவாள். ஆட்டோ ஓட்டுனர் என்ற கோணத்தில் அல்லாமல் சகமனிதனாக உள்ளார்ந்த அன்போடு அவள் உரையாடுவதே அதற்கு காரணமாய் இருந்தது. எளிய மனிதர்கள் பணத்தை காட்டிலும் இனிய வார்த்தைகளுக்கும் அன்புடன் கூடிய மரியாதைக்குமே அதிகம் மதிப்பளிப்பவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் நாம் இதை உணர்வதில்லை.

ஆமண்ணே..! என்றேன்.

நீங்க தான் வெளியூர்ல டாக்டருக்கு படிக்கிறீகளா...?

ஆங்...அது நான் தாண்ணே..உணர்ச்சிகளற்று பதிலளித்து கொண்டிருந்தேன். இதுவே மற்ற நேரமாக இருந்தால் கர்வத்தோடு கூடிய பெருமிதத்தை வார்த்தைகளாக்கியிருப்பேன்.

எம் மூத்த மவனும் இப்ப இஞ்சினியரிங் படிக்கிறாப்ல...திண்டுக்கல்ல...நம்ம அம்மாதான் பாரம்லாம் (APPLICATION FORM) நிரப்பி தந்தாவ...என பெருமிதம் பொங்கச் சொன்னார்.

அவர் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆட்டோ என் வீட்டை அடைந்திருந்தது.அவரது உணர்வை அங்கீகரிக்கவோ...அல்லது அவரது மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவோ அப்போது எனக்கு தோன்றவில்லை. அதனால் வெறுமையாக அப்படியா...என்று மட்டும் சொல்லிவிட்டு இறங்கிக்கொண்டேன். அவருடன் மேலும் பேச்சை வழக்காமல் வீட்டின் வாசலில் இறங்கி அவருக்கான பணத்தை எடுத்து கொடுத்தேன். அவரது முகம் அப்போது ஏமாற்றம் அடைந்ததைப் போல் இருந்தது அல்லது எனக்கு அப்படி தோன்றியது. ஆனால் நான் அதை பற்றியெல்லாம் அப்போது அலட்டிகொள்ளாமல் வீட்டின் இரும்பு கதவுகளுக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அழைப்பு மணியின் விசையை அழுத்தினேன்.

எந்த சலனமும் இல்லாததால் மீண்டும் தொடர்ந்து விசையை அழுத்திப் பிடித்தேன். இது போன்ற அழிச்சாட்டியங்கள் என்னைத் தவிர யாரும் செய்யமாட்டார்கள் என்பதால் வீட்டிற்குள்ளிருந்தபடியே வெளியில் உள்ள கதவை திறக்கும் முன்பே வேலைக்கார அக்கா தம்பி தோ...வாரேன் வாரேன்...என பதறியடி குரல் கொடுத்தார். படபடப்போடு வீட்டின் கதவை திறந்து கொண்டு நான் நின்று கொண்டிருந்த வாயில் கதவை நோக்கி ஓடி வந்தார்.

கதவை திறந்தபடியே.... என்ன தம்பி அம்மாவ பாத்திட்டு வாரீங்களா...?என்றார்

ஆமா..

எப்புடி இருக்காங்க அம்மா....

நாளைக்கு காலைல வந்திருவாங்க...என்றபடி வீட்டிற்குள் நுழைந்து என் அறைக்குள் விரைந்தேன்.

தம்பி சாப்பிட்டாச்சா...?பதில் தெரிந்தாலும் கடமைக்காக கேள்வி வந்தது.

ஆச்சு...நீங்க படுத்துக்கோங்க.... என உள்ளிருந்தபடியே அவருக்கு பதிலளித்தேன்.

சரிதம்பி... என சொல்லி முடிக்கும் முன்பே சமையலறை விளக்குகள் அணைக்கப்பட்டது.

மனப்புழுக்கமும்,உடல் சோர்வும் சேர்ந்து என்னை கசகசக்க செய்தது. கொஞ்சம் குளித்தால் தேவலாம் என தோன்றியதால் உடைகளை களைந்து கைலி மாற்றிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தேன். ஷவரைத் திறந்து குளிர்ந்த நீரை உடலில் பரவவிட்டேன். நீரில் கரையாதது ஒன்றுமில்லை என்று ஒரு விஞ்ஞான கூற்று உண்டு. ஆம்! அது உண்மைதான்.... எனக்கு மீண்டும் ஒருமுறை அப்போது அது நிரூபனம் ஆனது.

நீரின் குளிர்ச்சி என்னை கொஞ்சம் கொஞ்சமாய் இளக்கி அதுவரை நான் கட்டுபடுத்தி வைத்திருந்த என் கண்ணீரை கரை உடைக்க செய்தது. என் கண்ணீரின் வெப்பம் நீரின் குளிர்ச்சியையே கொஞ்சம் கதகதப்பாக்கியது. வலிக்க வலிக்க அழுது ஓய்ந்தேன். மனம் காற்றில் மிதக்கும் இறகு போல் மாறிப்போனது. அந்த நீரின் குளிர்ச்சி கொஞ்சம் தேவைப்பட்டதால் குளித்து முடித்த பின்பும் தலை துவட்ட பிடிக்காமல் ஈரம் சொட்டியே சென்று மின்விசிறியை சுழலவிட்டு படுக்கையில் விழுந்தேன்.காத்திருந்த காதலனை கண்ட காதலி போல் நித்திரை என்னை ஆரத்தழுவிக் கொண்டாள்.

............தொடரும்.

2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
தொடர்ந்து படிக்கிறேன்.

Unknown சொன்னது…

நன்றி தோழர்.ரத்தினவேல்.... உங்களது ஊக்கம் எனக்கு உற்சாகமளிக்கிறது!!!!!!