சனி, 21 மே, 2011

என் தேவதையின் சரிதை....2


இது ஒரு தொடர் பதிவு……


மீனாட்சி மிஷன்....நான் அப்போது நின்று கொண்டிருந்த மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வெகு அருகிலேயே இருந்தது. ஐந்து நிமிடங்களில் நடந்து போய்விடும் தொலைவு தான்.ஆனாலும் அதற்குள் ஆயிரம் எண்ணங்கள் எனக்குள் அலையடித்து ஓய்ந்தது.

ஒரு வருடத்திற்கு முன்…..

லிக்க வலிக்க அந்த மருத்துவமனையில் வலம் வந்த நாட்கள் மீண்டும் நிழலாடியது. எந்த ஒரு மகனும் இந்த உலகில் எதிர் கொள்ள கூடாத மிக கொடுமையான நாட்கள் அவை.....

ம்மா அடிக்கடி சொல்வாள் தன் மார்பில் ஏதோ கட்டியிருப்பதாய்....நான் அப்போது பள்ளிப் படிப்பின் இறுதி வருடங்களில் இருந்தேன். என் கவனமெல்லாம் நண்பர்களோடு ஊர் சுற்றுவதிலும்...பெண் தோழிகளை சிநேகம் செய்துகொள்வதிலுமே இருந்ததே தவிர என் அம்மாவின் அந்த புலம்பல்களில் இல்லை. மேலும் அம்மாவுக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரியும்....

அவள் ஒரு வங்கியில் அதிகாரியாக இருந்து கொண்டு வீட்டின் நிர்வாகத்தையும் திறம்பட செய்து வருபவளாய் இருந்தாள் என்பதால் அவளுக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் நான் அப்போது இல்லை என நினைத்து கொண்டதும் ஒரு காரணம்.

என் அப்பாவோ பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அவருக்கோ தன் தேவைகளை நிறைவேற்றவே என் அம்மாவின் உதவியை நாடுபவராய் இருந்தார். அவளை ஒரு பெண்ணாக....உயிருள்ள மனுஷியாக பார்த்ததைவிட எங்கள் தேவைகளை எல்லாம் நிறைவேற்றி தரும் அட்சய பாத்திரமாகவே நாங்கள் பாவித்து வந்தோம் என்பதே உண்மை. அதற்கெல்லாம் நாங்கள் கொடுத்த விலைதான் மிகக் கொடுமையானது. எங்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதில் அவள் கொண்டிருந்த கவனத்தில் ஒரு சதவீகிதத்தை கூட தன் உடல்நிலை குறித்து அவள் கொண்டிருக்கவில்லை. நாங்களும் கொண்டிருக்கவில்லை.

அவளது மார்பகத்தில் இருந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாய் மாறிய பின்பே நாங்கள் விழித்து கொண்டோம். எங்கள் ஊரான தூத்துக்குடியில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க அதில் தேர்ச்சி பெற்ற சிறப்பு மருத்துவர்கள் அப்போது அவ்வளவாக இல்லையென்பதாலும் நண்பர்களிடமும்,உறவினர்களிடமும் விசாரித்த வரையில் பலரும் கூறிய வகையில் மதுரை மீனாட்சி மிஷனில் சிகிச்சைக்கு செல்வது என முடிவு செய்து அங்கு சென்றோம். அங்கோ மருத்துவர்கள் அவளது இடது மார்பகம் முழுவதும் புற்றுநோயின் பாதிப்பு பரவி விட்டபடியால் இடது மார்பகத்தை அகற்றியாக வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதுவும் உடனே அதை அகற்றவில்லை என்றால் நோயின் பாதிப்பு உயிருக்கே பாதகம் ஏற்படுத்தும் என பயமுறுத்தியும் விட்டார்கள்.

நாங்களும் ஒருவழியாக அம்மாவை சமாதானம் செய்து அறுவைசிகிச்சைக்கு சம்மதிக்க வைத்தோம். அறுவைசிகிச்சைக்கான ஆயத்த வேலைகள் துவங்கியது.அப்பா...நான்...என்னுடைய அம்மாச்சி மூவரும் தான் அம்மாவிற்கு துணையாக மருத்துவமனையில் இருந்தோம். விதவிதமான நோய்களோடு நோயாளிகள்....

இனம் புரியா ஏக்கத்தோடு அவர்களை பராமரிக்கும் உறவுகள்....

பரபரப்பாக அங்குமிங்கும் பயணித்தபடி இருக்கும் செவிலியர்கள்....

மருத்துவமனை எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் பினாயில் நெடி….. என என் கண்முன் வேறு ஒரு புது உலகம் அப்போது அங்கே எனக்கு காட்சியாகி கொண்டிருந்தது.

ம்மாவை எப்போதும் ஒரு இரும்பு மனுஷியாகவே நாங்கள் பார்த்து வந்துள்ளோம். ஆனால் அறுவைசிகிச்சைக்கு செல்லும் முன் அவள் முகம் ஒருவித பதட்டத்தோடு வெளிறிப்போயிருந்தது. அவளது கண்களில் தெரியும் தன்நம்பிக்கையின் ஒளி கொஞ்சம் குறைந்தே காணப்பட்டது. ஏதோ பிரியாவிடை சொல்வது போல் புருவத்தை உயர்த்தி கண்களை மூடித்திறந்தாள்...... நான் அவள் அருகில் சென்று கண்கள் பனிக்க நின்றேன். வார்த்தைகளற்று. அவளது கைகளைப் இறுக பற்றி நெற்றியில் முத்தமிட்டேன்... அவை அப்போது குளிர்ந்திருந்தது.

என் தந்தையும் அவள் அருகில் வந்து,என்னம்மா...ஒண்ணுமில்ல நீ பயமில்லாம போயிட்டு வா...நாங்க எல்லாம் இங்க இருக்கோம்ல....நாம யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்ல...அதனால எல்லாம் நல்லபடியா நடக்கும்...என நம்பிக்கை அளிப்பதாய் நினைத்து கொண்டு தழுதழுத்தார்.

என் பாட்டியோ கண்ணை கசக்கி கொண்டு இருந்தாள். அவளை பார்த்த என் அம்மா,ஏம்மா! நீ வேற இப்படி அழுதுட்டு நிக்கிற... என கடிந்து கொண்டாள்.

இல்லம்மா...அம்மா அழல...நீ தைரியமா போய்ட்டு வா..நாம வணங்குற தெய்வம் நம்மள ஒருநாளும் கைவிடாது...என தனக்கு தோன்றியதை சொல்லி தேற்றினாள்.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அறுவை சிகிச்சை நிபுணரும்,ஒண்ணும் பயப்படாதிங்க....அதான் நாங்க இருக்கோம்மில்லையா...இன்னும் இரண்டு நாள்ல உங்க மக துள்ளி குதிச்சு எழுந்திருவாங்க....என நம்பிக்கையான குரலில் எங்களை தேற்ற முயற்சித்தபடி அறுவை சிகிச்சைக்கு அறை தயாராகிவிட்டதா? என அருகில் இருந்த நர்ஸிடம் கேட்டுக்கொண்டார். அவள் அதற்கு பதில் கூறும் முன் தன் அருகிலிருந்த மற்றொரு மருத்துவரிடம் வேகமாக எதையோ கிசுகிசுத்தார். அவரும் ஏதோ சொன்னவுடன்... எங்களை பார்த்து புன்னகைத்து விட்டு அறுவை சிகிச்சை அறைக்குள் சென்றுவிட்டார்.

அப்போது நேரம் சரியாக காலை 11.00மணி. நாங்கள் அனைவரும் அறுவை சிகிச்சை அறையின் வாசலில் இருப்பு கொள்ளாமல் காத்திருந்தோம். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை உள்ளிருந்து எதையாவது வெளியே கொண்டுவருவதும் அல்லது வெளியிலிருந்து எதையாவது எடுத்து செல்வதுமாய் இருந்தார்...நர்ஸ் ஒருவர். நாங்கள் பதட்டத்தோடு அவரை நெருங்கினால் வேகமாக எங்களை கடந்து சென்றிடுவார். என்னதான் அவர் வேகமாக செல்ல முயற்சித்தாலும் நாங்கள் அவரை ஓரிருமுறை நிறுத்தி உள்ளே எல்லாம் நல்லபடியாக நடக்கிறதா..என மேல் விசாரனை செய்ய தவறவில்லை.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்து கொண்டிருந்த அறுவை சிகிச்சையில்....ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சை நிபுணர் வெளியே வந்தார். நாங்கள் பதறியடித்தபடி அவர் முன்னால் போய் விழுந்தோம். அவர் பதற்றமில்லா மெல்லிய குரலில் பேச துவங்கினார்....

ஆப்ரேஷன் கிட்டதட்ட முடிஞ்சிடுத்து...இப்ப ஸ்டிச்சிங் நடந்திட்டு இருக்குது....ரொம்ப டீப் ரூட்டடா(deep rooted) கேன்சர் செல்ஸ் பரவியிருந்தது....நாங்க முடிஞ்சமட்டும் அதை ஸ்க்ராப் (scrap) செஞ்சு எடுத்துட்டோம். இப்போதைக்கு ஒண்ணும் பயப்பட வேண்டிதில்ல...என உள்ளே திரும்பி எதையோ நர்ஸிடம் எடுத்து வரச் சொன்னார்.

ஒரு அலுமினிய தட்டில் இரத்தம் தோய்ந்த எதையோ கொண்டு வந்தார் அந்த நர்ஸ்....அது....என் தாயின் அறுத்து எடுக்கப்பட்ட மார்பகம்! எனக்கு உயிரூட்டிய அமுத கலசத்தை வெறும் சதை பிண்டமாய் என் கண்முன் காட்டப்பட்டது. வாழ்வின் மிக கொடுமையான தருணம் அது....உலகில் எவருக்கும் அந்த நிலை வரக்கூடாது.

அதை கையில் வைத்தபடி என்னென்னவோ பேசினார்....கடைசியில் நர்ஸிடம் அந்த தட்டை கொடுத்து மேலே லேப்பில் போய் கொடுக்குமாறு சொன்னவர்.என்னைப் பார்த்து,தம்பி உங்களுக்கு தான -பாசிட்டீவ்... நீங்களும் அவுங்க கூட போய் உங்க பிளட் சாம்பிள் கொடுத்திட்டு வாங்க...என்றார்.

என் தாயின் மார்பகங்களை அவள் ஒரு தட்டில் ஏந்தி ஒரு சிறு தூண்டை வைத்து மட்டும் மறைத்தபடி லிப்ட் நோக்கி சென்றாள்...நான் ஒரு பிணத்தை போல் அவளை பின் தொடர்ந்தேன். லேப்பிற்கு இன்னும் இரண்டு மாடிகள் செல்ல வேண்டி இருந்தது. அந்த ஒவ்வொரு நொடியும் மிகமிக கொடுமையானவை.....எங்களோடு லிப்டில் ஏறி வந்தவர் ஒருவர் நர்ஸின் கையில் உள்ள தட்டை பார்த்து ஒருவித முகச் சுளிப்போடு ஒதுங்கிக் கொண்டார். என் தாயின் மார்பை கையில் வைத்து கொண்டிருந்த நர்ஸும் ஒருவித அருவருப்புடனே அதை சுமந்து கொண்டிருந்தார். அந்த ஒவ்வொரு கணமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத வேதனைகளை எனக்கு பரிசளித்து கொண்டிருந்தது.

ரு மகனாய்...என் தாயின் வலியை அன்று தான் முழுவதுமாக உணர்ந்து கொண்டேன்......

மிகக் கொடுமையான அந்த நினைவுகளை அசைபோட்டபடி மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தேன்.

………………..தொடரும்

1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

படிக்கும்போதே வேதனையாக இருக்கிறது. நீங்கள் - நேரில் - நினைக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.