புதன், 8 ஜூன், 2011

என் தேவதையின் சரிதை......14


இது ஒரு தொடர் பதிவு....


நாங்கள் விடிகாலை 4.00 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்தோம். வீடு மரணக் கோலம் பூண்டது. கொஞ்சம் கொஞ்சமாய் என் தாயின் மரணச்செய்தி ஊருக்குள் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், சுற்றத்தார்கும் பரப்பப்பட்டது. எங்கள் வீடின் சுவர்கள் மனித ஓலத்தை எதிர் ஓலித்துக் கொண்டு கதற துவங்கியது. எங்கள் வீட்டின் வரவேற்பரையில் அவளது உயிரற்ற உடலை ஏந்த எங்கள் அறையில் கிடந்த இரும்புக் கட்டில் எடுத்துப் போடப்பட்டது. அவள் உழைப்பில் வாங்கிய மெத்தை அக்கட்டிலில் இருந்து அகற்றப்பட்டு…..பழைய ஈச்சம் பாய் விரிக்கப்பட்டது.

சொந்தவீடு…..

எல்லா மனிதர்களையும் போல் என் அன்னைக்கும் அது மிகப்பெரும் கனவாக இருந்த காலமது. நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம்…. ஒருநாள் மாலை நானும் என் தம்பியும் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாலையில் என் அம்மாவும், அப்பாவும் எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு தாங்கள் வாங்கிய அந்த புதிய காலிமனையை காண்பிக்க அழைத்து சென்றார்கள். அப்போது அந்த தெருவில் ஓரிரு வீடுகளே இருந்தது. எங்கள் இடத்தில் கருவேலஞ் செடிகளும், காய்ந்து போன புதர்களும் மண்டிக் கிடந்தன. அதனை விலக்கியபடி எங்களை அழைத்துச் சென்று அதன் எல்லைகளை காண்பித்தார்கள். அந்த இடம் மொத்தம் பத்து செண்ட் என குறிப்பிட்டார்கள். நாங்கள் ஏன் ஏக்கர் கணக்கில் வாங்கவில்லை என கேட்ட போது என் அம்மா சிரித்தபடி” நீங்க ரெண்டு பேரும் சம்பாதிச்சு அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ஏக்கர் கணக்குல வாங்கி கொடுங்கடா….” என்றாள். எங்களுக்கு அப்போது அது ஏமாற்றமாக இருந்தாலும் அவர்களது உற்சாகத்தில் அது வீடு வந்து சேரும் போது மறைந்து போனது.

அன்றிலிருந்து நாங்கள் அந்த வீடு கட்டி குடிவந்த நாள் வரையிலான ஒருவருடத்திற்கும் மேலான காலத்தின் ஒவ்வொரு நாளும் பொழுதும் அவளுக்கு அந்த வீடு பற்றிய எண்ணத்தோடும்,கனவுகளோடுமே கழிந்தது. எங்கள் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அவள் தனது ரசனைக்கேற்ப செதுக்கி வந்தாள். வீட்டை எப்படி அமைத்தால் வெளிச்சம் அதிகம் இருக்கும்….? என்ன கற்களை தரைக்கு பயன்படுத்தினால் உஷ்ணம் குறைவாக இருக்கும்…..? என்ன வண்ணத்தை ஒவ்வொரு அறைக்கும் அடிக்க வேண்டும்…? என்பது முதல் படுக்கை அறையினுள்ளே குளியலறையும், கழிப்பறையும் இருந்தால் எனக்கும் ,தம்பிக்கும் திருமணமாகி வரப்போகும் மருமகள்களுக்கு வசதியாக இருக்கும் என்பது வரை அவள் யோசித்து யோசித்து கட்டிய வீடு அது.

அப்படி அவள் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு தன் எஜமானியை முதலும் கடைசியுமாக வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தது……

அதிகாலை 7.00 மணியளவில் என் அப்பாவும், பாட்டியும், வேலைக்கார அக்காவும் என் அம்மாவுடன் ஆம்புலன்சில் வந்திறங்கினார்கள்.

என் தாய் வெள்ளைத்துணிகளால் சுற்றிப்பட்ட ஒரு மனிதப் பொட்டலமாய் வீட்டிற்குள் எடுத்துவரப்பட்டாள். மரண ஓலங்களோடு அவள் அந்த கட்டிலில் கிடத்தப்பட்டாள். என் தாயின் சடலத்தின் மீது விழுந்து அழுதுக்கொண்டிருந்தவர்களை விலக்கி நான் அவள் முகத்தின் மீது போர்த்தியிருந்த துணியை விலக்கினேன்…… வாடிய மலரைப் போன்று அவளது முகம் காய்ந்து போயிருந்தது. அவள் எப்படி எப்போதும் நித்திரையில் அரைக்கண்கள் திறந்தபடி தூங்குவாளோ அப்படியே அப்போதும் அவளது கண்களும் பாதி திறந்தபடியே இருந்தது. அவள் உதடுகள் என்னிடம் ஏதோ சொல்ல துடுத்தது போல் பிளந்து காணப்பட்டது. அதில் அவளது இடைப்பல்லும் கொஞ்சம் தெரிந்தது. நான் அவளது கன்னங்களை என் கைகளால் பற்றி அள்ளியபோது அவளது நாசியிலிருந்த இரத்தம் என் கைகளை நனைத்தது. என் கைகள் எங்கும் என் தாயின் குருதி பரவியது……

அதுவரை எனக்குள் சிறைப்பட்டு கிடந்த நான் என்னையும் மீறி வாய்விட்டு ”அம்மாஆஆஆஆஆஆஅ…….”எனக் கதறினேன். நான் சின்னதாக முனங்கினாலே பதறி துடிப்பவள் என் கதறல்களை கேட்டும் அமைதியாகவே இருந்தாள்………….

அன்று மாலையில் அவளுக்கு அந்தோனியார் கோயிலில் வைத்து இரங்கல் பூசை நடந்தது.எழு பாதிரிமார்கள் அந்த பூசையை வைத்தார்கள். அப்போது அந்த பூசையில் செய்யப்பட்ட பிரசங்கத்தில் ஒரு பாதிரியார் இப்படி குறிப்பிட்டார்…..

“மலர்கள் செடிகளில் முளைத்தாலும் அவைகள் அனைத்துமே அந்த தோட்டத்தின் எஜமானனுக்கே சொந்தம்…. அந்த தோட்டத்தின் எஜமானனுக்கு தன் மலர்களை எப்போது கொய்ய வேண்டும் என நன்றாக தெரியும். அவன் தனக்கு உகந்தமான நேரத்தில் அந்த மலரை கொய்துவிடுவான். மலரினை செடியிழந்தாலும் அது உரியவனிடமே சென்றிருப்பதை அவைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்…. தேவன் தனக்கு உகந்தமான மகளை தன்னிடத்தே அழைத்து கொண்டுவிட்டார்…..”என்றார்.

நாம் உணர்வுகளற்ற மரமோ….. செடியோ…. அல்லது உயிர் தழைத்தலும், இனப்பெருக்கமும் மட்டுமே கொண்ட ஆஃறிணைகளோ அல்ல. நாம் தான்தோன்றிகளும் அல்ல.

நாம் மாறாத அன்பும், வற்றாத காதலும், பிரியாத நேசமும் மிக்க மனிதசமூகமல்லவா…..?.

நாம் நமது உயிர் தழைக்க வேண்டும் என மட்டுமே வாழ்பவர்கள் அல்ல…. மாறாக தியாகமும், விட்டுக்கொடுத்தலும், பகிர்தலும் நிரம்பிய வாழ்க்கையை கொண்டிருப்பவர்கள் அல்லவா….?

அப்படியிருக்கும் போது நாம் காதலோடு நேசித்த உறவுகள் நமக்கு சொந்தமானவையல்லவா…..? நமக்கு சொந்தமானதை “மரணம்” பிடுங்கிக் கொள்ளும் போது நமக்கு வலிக்காதா….?

”மரணம்” இயற்கையின் நிலையான விதியாக இருக்கலாம்……ஆனால் அழியாத நம் நினைவுகளிடத்தே மரணமும், இயற்கையும் தோற்ற போகின்றது!!!

என் தாயின் உடலை மண்ணில் புதைக்கும் முன் அவள் பெட்டியின் அருகே மண்டியிட்டு நான் அவள்: காதுகளில்…..

”அம்மா…..

நான் உன்னை இன்று

இங்கு புதைக்கவில்லை……

என்னுள் உன்னை விதைக்கிறேன்….”எனச் சொல்லி என் தாயின் நெற்றியில் இட்டேன் என் கடைசி முத்தத்தை………..!!!!!!!!!!!!!


முடிந்தது.......!!!!!


கருத்துகள் இல்லை: