சனி, 4 ஜூன், 2011

என் தேவதையின் சரிதை....11


இது ஒரு தொடர் பதிவு.............

சில நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் நம் வாழ்க்கை முழுவதும் நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் அத்தகைய முடிவுகள் நம் சுயநலத்தின் வெளிப்பாடுகளே! ஆனால் நாம் அதை ஒப்புக்கொள்வதில்லை. என் தாய் அடிக்கடி சொல்வாள் ‘தப்பு செய்வதைவிட பெரும் பாவம் அதை நாம் ஒப்புக் கொள்ளாமல் நடிக்கும் போது நம்மை வந்து சேரும்’ என்று. கிறுத்துவ மதத்தில் ஒரு நடைமுறை உண்டு அதை ’பாவ சங்கீர்த்தனம்’ என்பார்கள். அதாவது நாம் செய்த தவறுகளை குற்றங்களை பாதிரியாரிடம் கூறி அதற்கு பாவ மன்னிப்பு கேட்பதற்கே அப்படி ஒரு பெயர்.

எனக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. கிறுத்துவ மதத்தின் மீதும் ஏராளமான விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் இந்த பாவ மன்னிப்பு கோரும் நடைமுறையில் எனக்கு மரியாதை உண்டு. ஏனென்றால் இல்லாத கடவுளுக்கு உண்மையாக இல்லாவிட்டாலும் வாழும் மனிதர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புவன் நான். மேலும் இது பாவங்களை குறைக்க உதவாமல் இருக்கலாம் ஆனால் நம் மன உறுத்தல்களுக்கு நிச்சயம் ஒரு வடிகாலாய் இருக்கும். அந்த நம்பிக்கையில் தான் நான் இந்த சரிதையை எழுத ஆரம்பித்தேன்……

எத்தனையோ முறை அவளை காயப்படுத்தி இருக்கிறேன். எத்தனையோ விஷயங்களில் அவளை அழச் செய்திருக்கிறேன். ஆனால் இவையாவும் அவள் என்னோடு இருக்கும் வரை எனக்கு புரியவில்லை. அவளது ஈடு இணையற்ற அந்த அன்பைக் கூட உணர முடியாத முடனாய்….. சுயநல பிண்டமாய் வாழ்ந்திருப்பதை எண்ணி எனக்கே என்மேல் அருவருப்பாய் இருக்கிறது. உலகில் எந்த ஒரு உறவும் பெற்ற அன்னைக்கு ஈடாக முடியாது என்ற எளிய யதார்த்தம் கூட உணராமல் வாழ்ந்தமைக்கு வெட்கி தலை குனிகிறேன்.

நான் உடைந்து விழும் ஒவ்வொரு முறையும் என்னை தேற்றி எழச்செய்தவள் என் அன்னை. என் வாழ்க்கை முழுவதற்குமான நம்பிக்கை ஊற்றாய் அவள் இருந்தாள்….. இருக்கிறாள். இந்த இடத்தில் அதற்கு ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்பிகிறேன்……

நான் பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பரீட்சை முடிவுக்காக காத்திருந்தேன். பரீட்சை முடிவுகளும் வந்தது. நான் பாஸாகி விட்டாலும் மிக குறைந்த மதிப்பென்களே பெற்று தேர்வாகி இருந்தேன். அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. நான் வீட்டில் உடைந்து போய் அழுது கொண்டிருந்தேன். என்னோடு படித்தவர்கள் எல்லாம் நல்ல மதிப்பென்கள் பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு உற்சாகமாக தயாராகி கொண்டிருந்தனர். நானோ வீட்டிலே முடங்கிக் கிடந்தேன். அப்போது என் தாய் தான் வந்து என்னை தேற்றி எழச்செய்தாள். அவள் அப்போது என் தோள்கள் தொட்டு உதிர்த்த வார்த்தைகள் என் வாழ்க்கை முழுவதற்குமானது……

“டேய் ஏண்டா அழுவுற இப்ப என்ன நடந்து போச்சு மார்க்கு குறைஞ்சு போச்சு அவ்வளவுதானே….. இதோட வாழ்க்கையே ஒண்ணும் முடிஞ்சு போயிடலியே….?

டாக்டர் ஆனாதான்….இன்ஜினியர் ஆனாதானா….. வாழ்க்கையில ஜெயிச்சதா அர்த்தம்ன்னு ஏன் நினைக்குற….?

நீ எந்த படிப்பு வேணா படி ஆனா படிக்கிறத விரும்பி படி….. நீ படிக்கிற துறையில நீ செஞ்சு காட்டுற சாதனை தான் நீ யாருன்னு சொல்லும். கக்கூஸ் கழுவுறது உன் தொழில் ஆனால் அதை உன்னை மாதிரி எவனும் செய்ய முடியாதுன்னு சொல்ல வைக்கனும் அதுக்கு பேருதான் வெற்றி!

செய்யுற தொழில்ல அசிங்கம்….. கேவலமானதுன்னு ஒண்ணும் கிடையாது. அடுத்தவன் காசுல அடிச்சு பிடுங்கி கோடிக்கோடியா சம்பாதிச்சு சேக்குறதுக்கு பேரு தான் கேவலம்…. கால் காசுனாக்கூட அதை கண்ணியமா உழைச்சு சம்பாதிச்சு சேக்குறது தான் நிலைக்கும். நான் இருவது வயசுல தோள்ள பையத் தூக்கிப் போட்டவ நாம இன்னைக்கு வாழ்ற வாழ்க்கை அதுல இருந்து தான் வந்திச்சு அதுக்காக நான் எவன் முன்னாடியும் பல் இழிச்சது இல்ல…..அன்னைக்கும் நான் நெருப்புதான் இன்னைக்கும் நான் நெருப்புதான்! நீ எம்மவண்டா….. நீ படிச்ச புள்ள புரிஞ்சுக்குவ….. அம்மா என்ன சொல்ல வர்றேன்னு…… கோடிக்கணக்கான விந்துக்கள்ல நீதாண்டா என் வயித்துல புள்ளைய ஜெனிச்சவன்…. உன்னால முடியும்டா….அம்மா இருக்கேன்……உங்கூட…..”

இந்த மந்திர வார்த்தைகள் தான் நான் ஒவ்வொரு முறை விழும் போதும் என்னை எழச்செய்து கொண்டிருப்பவை. என் வாழ்வில் வலியும் துயரும் மிகுந்தோடும் கணங்களில் நான் மீண்டும் மீண்டும் எனக்குள் நினைவூட்டிக்கொள்ளும் நம்பிக்கை வார்த்தைகள் இவை.

அவளிடம் நான் பார்த்து மலைத்த மற்றொரு விஷயம் அவளது அபாரமான தன்நம்பிக்கை. அந்த தன்நம்பிக்கை தான் அவளை இயக்கியது….

அவள் தன் நாற்பதாவது வயதில் இருசக்கர வாகனம் பழகப்போகிறேன் என்றபோது நான் உட்பட என் குடும்பத்தார் அனைவருமே அவளை கேலி செய்தோம். ஆனால் அவள் அதையெல்லாம் சட்டை செய்யாமல் எங்கள் உதவியும் இன்றி அவள் தனது பருத்த சரீரத்தை வைத்துக் கொண்டு முன்பின் சைக்கிள் ஓட்டிய அனுபவமும் இல்லாமல் தட்டுத் தடுமாறி அவளே வண்டியை ஓட்டிப் பழகிய போது உண்மையில் நாங்கள் அவளது உறுதிக்கு முன் சிறுத்துப் போனோம்.

அதேபோல் அவளுக்கு மார்பக புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை முடிந்து அவள் வீட்டில் ஓய்வில் இருந்த காலத்தில் அவள் கீ-போர்ட் வாசிக்க கற்றுக் கொண்டாள். இப்படி அவளால் ‘முடியாது’ என்று எதுவும் இல்லை என உறுதியாக நம்பினாள். அதுதான் உண்மையும் கூட. வாழ்க்கை முழுக்க ஏராளமான தோல்விகளை சந்தித்த சாதாரண மனுஷி தான் அவள். ஆனால் அந்த தோல்விகளால் அவள் ஒருபோதும் தேங்கி நின்றது இல்லை. மிக இயல்பாக அவளால் தன் தோல்விகளை கடந்து வரமுடிந்தது. அதுதான் அவள் வாழ்வின் வெற்றிக்கான ரகசியமும் கூட.

..............தொடரும்.

3 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

முடியாது என்பது கிடையாது.. அம்மாவின் வார்த்தைகளில் பலம்...நம்பிக்கை. அருமை..வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
எனது கருத்தும் அது தான். எந்த வேலையும் கேவலம் கிடையாது. செய்யும் வேலையில் முழுமை, நாம் செய்யும் வேலையில் நமக்கு மன நிறைவு இருக்க வேண்டும்.
நன்றி - வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

நன்றி தோழர்.சரவணன்...!!!

நன்றி தோழர்.ரத்தினவேல்....!!!