திங்கள், 6 ஜூன், 2011

என் தேவதையின் சரிதை.......12


இது ஒரு தொடர் பதிவு.....

நான் வீட்டிற்கு வந்து சேர மாலை 4.00 மணிக்கு மேல் ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்ததும் வேலைக்கார அக்காவிடம் அம்மாவை அட்மிட் செய்த விஷயத்தை சொல்லிவிட்டு அவள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களின் விபரங்களையும் எடுத்துக் கூறி அவளை கிளம்பச் செய்தேன்.

இரண்டொரு நாளில் என் அம்மாவின் சித்தி மகனுக்கு கல்யாணம் நடக்கவிருந்ததால் என் மாமா, தாத்தா, அத்தை, தம்பி, என எல்லோரும் அந்தக் கல்யாண வீட்டிற்கு சென்றிருந்தார்கள். என் அக்கா பிரவீணா (பெரியப்பா மகள்) மட்டும் வீட்டில் இருந்தாள். நான் அவளிடம் என் நண்பர்களை காணச் செல்வதாய் பொய் சொல்லிவிட்டு என் காதலியை பார்க்க கிளம்பிச் சென்றேன். ஆம்! அவளுக்கு நான் அவளது கல்லூரித் தோழியை காதலிப்பதை பிடிக்கவில்லை. என்னை பலமுறை எச்சரித்து விட்டிருந்தாள். நான் கேட்காதபடியால் என் காதலியுடனான நட்பையும் முறித்துக் கொண்டாள். அதனால் தான் அவளிடம் பொய் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றேன்.

என் காதலியின் வீடோ முத்தையாபுரத்தில் அமைந்திருந்த HWP-(HEAVY WATER PLANT) குடியிருப்பில் இருந்தது. அவளது தந்தைக்கு அங்குதான் வேலை. அவர்கள் ”பிரம்மணின்” நெற்றியில் இருந்து முளைத்தவர்கள் என நம்பிக்கை கொண்டவர்கள். அத்தனை ஆச்சாரமான குடும்பம். அவளுக்கு ஒரு அக்காவும் உண்டு அவள் திருமணமாகி லண்டனில் செட்டில் ஆகியிருந்தாள்.

நான் எப்போதும் அவள் வீட்டிற்கு செல்லும் முன் அவளது வீட்டிற்கு அருகில் இருக்கும் தொலைப்பேசியில் அவளை தொடர்பு கொண்டு வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்துவிட்டு செல்வது தான் வழக்கம். அன்றும் அப்படி அவளுக்கு போன் செய்தேன். ஆனால் எடுத்ததோ அவளது அப்பா. அவரிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லாததால் லைனை துண்டித்தேன். மீண்டும் ஒரு பத்து நிமிடம் கழித்து அடித்தவுடன் அவள் எடுத்து அவள் தன் தோழியிடம் பேசுவது போல் பேசி அவளது அம்மாவும், அப்பாவும் கிளம்புவதற்கு நேரமாகும் என தகவல் சொன்னாள். ரகசிய மொழியில் என்னை காத்திருக்கவும் பணித்தாள். நான் காத்திருக்க துவங்கினேன்……

அவர்கள் செல்வதற்கு பதிலாய் நேரம் தான் சென்று கொண்டிருந்தது. மாலையை விரட்டிக் கொண்டு இருள் பரவத் துவங்கியது அவர்களும் கிளம்புவதாய் தெரியவில்லை. என் அம்மாவை அப்படி சுயநலத்தோடு விட்டுவிட்டு இங்கு என் காதலிக்காக காத்திருப்பதை எண்ணிப்பார்த்த போது ஏனோ காதலிக்கு பரிசளிக்க தாயின் இருதயத்தை எடுத்துச் சென்ற மகனின் கதை அப்போது என்னோடு ஒத்திருப்பதாய் தோன்றி என்னை என் மனம் இம்சித்தது.

நான் என் பொறுமையை இழந்து மீண்டும் அவளுக்கு தொடர்பு கொண்டேன். இம்முறை அவள் அம்மாதான் போனை எடுத்தாள் நான் கடுப்பில் மீண்டும் போனை துண்டித்துவிட்டேன். என் மனதோடு மிகப்பெரும் தர்மயுத்தமே நடத்த துவங்கியிருந்தேன். தர்மயுத்தங்களில் எப்போதுமே சுயநலமே வெல்லும் போல….என் மனம் எழுப்பிய குற்றவுணர்வுகளை குழி தோண்டி புதைத்து விட்டு மீண்டும் காத்திருக்க துவங்கினேன். மேலும் ஒரு பத்து பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின் மீண்டும் அவளுக்கு போன் செய்தேன். ஒரு இரண்டு மூன்று அழைப்புகளில் அவளே எடுத்தாள்.

“சாரிப்பா….…இப்பதான்….just now…. அவா ரெண்டு பேரும் கெளம்பி போறா…..ரொம்ப நேரம் உன்ன காக்க வச்சுட்டேனா…..?....”.என அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே…..

எனக்கு எரிச்சலும், கோபம் தலைக்கேறியது….

“ஆமா நான் உன் வீட்டு நாய் பாரு நீ வா…ன்னா வரனும்…. போ….ன்னா போகனும்….. அங்க எங்கம்மாவ விட்டிட்டு ஒண்ணப் பாக்கனுன்னு தெருநாய் மாதிரி வந்து நிக்கேன் பாரு……எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்……”என்றபடி அவளது பதிலுக்கு கூட காத்திராமல் போனை கட் பண்ணிவிட்டு என் வீட்டிற்கு கிளம்பிச் சென்று விட்டேன்.

நிச்சயம் அவளுக்கு நான் நடந்து கொண்டவிதம் கஷ்டமாக தான் இருந்திருக்கும். எனக்கும் அது தெரியும். அதேசமயத்தில் அவளுக்கும் இது புதிதல்ல……என்னையும் என் கோபத்தையும் சேர்த்து நேசிப்பவளாயிற்றே!

தவறுகளை செய்துவிட்டு வருந்துவது என் வாடிக்கைகளில் ஒன்றுதான். அவளை அப்படி கடிந்திருக்க கூடாது என்று தோன்றினாலும் அவளை அப்படி கடிந்து கொண்டது அப்போது எனக்குள் ஒரு மனநிறைவை அளித்தது. ஏதோ என் மனசாட்சியிடம் நான் குற்றமற்றவனைப் போல் நிருபித்த திருப்தி அப்போது எனக்குள் மேலோங்கியது.

.நான் வீட்டிற்கு சென்றபோது ஏறத்தாழ இரவு மணி 8.00ற்கு மேல் ஆகிவிட்டிருந்தது. அங்கே எனக்காக என் அக்காவும், தாத்தாவும், தம்பியும் பதைபதைப்போடு காத்துக் கொண்டிருந்தார்கள். என் அம்மாவிற்கு திடீரென்று உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டதாகவும் அதனால் அவளை ICU-வில் வைத்திருப்பதாகவும் சொல்லி நான் காலதாமதமாய் சென்றமைக்காக என்னை கோபித்தும் கொண்டார்கள். என்னையும், தம்பியையும் உடனே அம்மா பார்க்க விரும்புவதாகவும் அதனால் நாங்கள் உடனே மதுரைக்கு செல்ல வேண்டும் எனவும் அக்கா சொன்னாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனென்றால் மறுநாள் காலையில் வந்துவிடுவதாக சொன்னார்களே…..? அம்மாவும் ஓரளவுக்கு தெளிவாக இருந்தாளே…. ? எனக் குழப்பமாய் இருந்தது. அத்தோடு அப்போது இருந்த மனநிலையில் எனக்கு பிரயாணம் செய்ய விருப்பம் இருக்கவில்லை. அதனால் நான் அவர்களோடு வழக்காடாமல் என் அறைக்கு சென்று கட்டிலில் படுத்துக் கொண்டேன். என் அக்காவும்,தம்பியும் என் படுக்கை அறைக்குள் வந்தார்கள். நான் படுத்திருப்பதை எரிச்சலோடு பார்த்தவர்கள்…..

“ஏய்! நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்லை….. அங்க சித்தி சீரியஸா இருக்காங்கன்னு சொல்றேன்….. நீ என்னடான்னா இங்க வந்து உம்பாட்ல படுத்துக் கெடக்க….. நீயும் தம்பியும் கிளம்புங்க முதல்ல….” என சற்று கோபமாகவே என் மீது வார்த்தைகளை அள்ளித்தெளித்தாள் அக்கா.

”எனக்கு தெரியும்….. என்னால இப்ப போக முடியாது….. அவ்வளவுதான்….. வேணும்னா நீ அவன கூட்டிட்டு போயிட்டு வா…” என படுத்திருந்தபடியே அவள் மீது முட்டாள்தனமாய் கோபப்பட்டேன்.

“நீ சரிப்பட மாட்ட நான் மாமாவுக்கு போன் பண்ணிக்கிறேன்….” என்றபடி என் பதிலுக்கு கூட காத்திராமல் என் அறையை விட்டு அவளும், தம்பியும் வெளியேறினார்கள்.

ஆனால் எனக்கு நித்திரை பிடிக்கவில்லை. மனம் சோர்ந்து போயிருந்தது. ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டிருந்தது……அம்மாவை ICU-வில் வைத்திருப்பதாக சொன்ன பிறகும் நான் அங்கு செல்ல விருப்பமற்று இருந்தது எனக்கே குழப்பமாக இருந்தது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் ஒருவித சோம்பேறித்தனத்தாலும்….. சுயநலத்தாலும் நான் என்னை சுருக்கிக் கொண்டிருந்தேன்.

மனம் என்னும் ‘ராட்ஷசன்’ மிகப்பெரும் நீதிமானைப் போல என்னை தன் விமர்சனக் கூண்டிலேற்றி வதைத்துக் கொண்டிருந்தான். என்னால் அப்போது படுத்திருக்கவும் முடியாவில்லை. எழுந்து அமர்ந்து கொண்டேன். அறையின் ஒரு மூலையில் ஏதேதோ சிந்தனைகளோடு வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன். எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தேன் என்றே தெரியவில்லை……

திடீரென்று அப்போது என் தோள் தட்டி உசுப்பியது அந்த முரட்டுக் கரங்கள்…..

நான் எந்த திடுக்கிடலும் இல்லாமல் என் நிலை மறந்து அந்த கரங்களுக்கு சொந்தமான உருவத்தை தன்னிச்சையாக திரும்பி பார்த்தேன். மெல்ல உறைத்தது நின்று கொண்டிருப்பது என் தாய்மாமாவென்று.

“என்னடா நான் வந்தது கூட தெரியாம ஏதோ யோசிச்சுகிட்டு இருக்க….. அங்க அம்மா உன்னையும், தம்பியையும் வரச்சொல்லிக்கிட்டு இருக்கா….. நீ என்னடான்னா இப்படி உட்கார்ந்திருக்க…… எந்திரி வா நான் மாமாவும் உங்ககூட வாரேன்….கிளம்பு போவோம்……”

“மாமா…. இல்ல மாமா…. நான் வரல….. எனக்கு முடியல…..அதான் அவுங்க நாளைக்கு வந்திருவாங்கல்ல….?” எனக்கே உடன்பாடில்லாத அந்த பதிலை என் உதடுகள் உதிர்த்தன.

“என்னடா பேசுற நீ…… அவளே அங்க முடியாம கெடக்கா…. அவளுக்கு இப்ப உடனே உங்கள பாக்கனுங்குறா….. நீ என்னடான்னா இல்ல மாமா…. நொள்ள மாமாண்ட்டு கெடக்குற….என்ன புள்ளடா நீ….? சரி…சரி… கெளம்பு போவோம்….”

அவர் எப்போதும் இப்படித்தான். அவருக்கு தன் அக்கா சொல்வதெல்லாம் வேத வாக்குதான். என் அம்மா மீது அத்தனை பிரியம் அவருக்கு. அவளை அக்காவாக மட்டும் அல்ல…. ஒரு அன்னையாகவும் அவர் பாவித்ததே அதற்கு காரணம். அவருக்கு கல்யாணம் ஆன பின்பும் என் அம்மாவை கலந்து ஆலோசனை பெறாமல் எந்த ஒரு சிறு முடிவையும் தனிச்சையாக எடுத்ததே இல்லை. ஒரு தாய்மாமனுக்கான சர்வ இலக்கணங்களையும் பூர்த்தி செய்யும் என் தாயின் மறு பிரதி அவர். என்னளவில் என் தந்தையைவிட என்னை அதிகம் பாதித்த ஆண் அவர்தான். என் தாய்மீதான அவரது அன்பும், எங்கள் மீதான தனிப்பாசமும் அவர் மீது எனக்கு மரியாதையை அதிகரித்து இருந்தது. பொதுவாக நான் அவர் பேச்சை தட்டியதே இல்லை.

அதனால் வேறு வழியின்றி ஒருவித எரிச்சலோடு நானும் கிளம்பினேன். நானும்,என் தம்பியும், மாமாவும் எங்கள் ஊரின் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சேரும் போது மணி ஏறத்தாழ இரவு11.30க்கு மேல் ஆகியிருந்தது. நாங்கள் ஒரு அரைமணி நேரம் அங்கு மதுரை பேருந்திற்காக காத்திருந்தோம். அப்போது என் மாமா நாங்கள் கிளம்பிய தகவலைச் சொல்ல மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அங்கிருந்த வாடகை தொலைப்பேசி ஒன்றின் மூலம் தொடர்பு கொண்டார். போனை வைத்துவிட்டு வரும் போது அவரது முகம் கருத்திருந்தது.

நான் “ மாமா….. அப்பா என்ன சொன்னாங்க….?”

“அம்மாவுக்கு ரொம்ப முடியலையாம்….. அதான் அப்பா ரொம்ப பயமா இருக்குன்னு சொல்றாங்க….. அம்மா….. உங்க ரெண்டு பேரையும் தான் ரொம்ப தேடுறாளாம்…..” என சொல்லியபடி தழுதழுத்தார்.

என் தம்பிக்கு ஏதும் சொல்ல முடியாதபடி விக்கித்து நின்று கொண்டிருந்தான். அவன் அப்போது பதினோராம் வகுப்பு படித்து கொண்டிருந்தாலும் அவன் ஒரு குழந்தையாகவே இருந்தான். அவன் அப்போது வீட்டின் நிலைமையை உணர்ந்திருக்கவில்லை. ஆனால் நிச்சயம் ஏதோ விபரீதம் இருப்பதாக உணர்ந்திருந்தான். அதனால் ஒருவித கலவரத்தோடு அவன் காணப்பட்டான்.

இப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மதுரைக்கான பேருந்து ஒன்று வந்தது. அந்தப் பேருந்தில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. நாங்களும்…. எங்களோடு காத்துக் கொண்டிருந்த மற்ற பிரயாணிகளும் இருக்கைகள் பிடிப்பதற்காக விரைந்து ஓடினோம். கூட்டத்தின் நெரிச்சலை சமாளித்தப் படி ஒரு வழியாக பேருந்துக்குள் எங்களை திணித்துக் கொண்டோம்….. இருக்கைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டோம்.

பொதுவாகவே கூட்ட நெரிசலில் பேருந்தில் இடம் பிடிப்பது என்பது ஜீவமரண போராட்டத்தைப் போன்றது. அதில் வலிமைக்கும், இரக்கமற்ற சுயநலவாதிகளுக்குமே இருக்கைகள் கிடைக்கும். மனிதநேயம் முற்றிலும் மடிந்துபோன ஒரு போர்க் கோலக் காட்சியை அது ஒத்திருக்கும்.

மாமாவும்,தம்பியும் எனக்கு இரு இருக்கைகளுக்கு முந்தி அமர்ந்து கொண்டார்கள். எனக்கோ கடைசியில் உள்ள இருவர் அமரும் இருக்கையே கிடைத்தது. அதில் நான் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டேன்….. என் அருகில் உள்ள நடத்துனர் இடத்தை ஆக்கிரமிக்காமல். ஒரு பத்து பதினைந்து நிமிடத்தில் நடத்துனரும், ஓட்டுனரும் சாயாவும், சிகிரெட்டும் அடித்துவிட்டு வந்த பிறகு பேருந்து கிளம்பியது. அப்போது இரவு மணி 12.30 ஆகியிருந்தது.

அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி பிறந்துவிட்டிருந்தது…..


...............தொடரும்.

கருத்துகள் இல்லை: