இது ஒரு தொடர் பதிவு......
வயிறு நிறைய இரையை நிரப்பிக் கொண்டு குந்தானிக் குலுங்க குண்டியை ஆட்டியபடி நகரும் பன்னிக் குட்டியை போல் பேருந்து நகர முடியாமல் நகர துவங்கியது. மனித நெருக்கம் ஒரு அடர்த்தியான வெக்கையை பேருந்துக்குள் பாய்ச்சி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் பேருந்து வேகமெடுக்க எடுக்க…. அந்த வெக்கை குறைந்து காற்றின் கரங்கள் தீண்ட ஆரம்பித்தன.
எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை. என்னை ஒருவித மனச்சோர்வு அழுத்திக் கொண்டிருந்தது. அம்மாவை பற்றிய ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. இடையிடையே என் காதலியும் வந்து போனாள். ஆனால் அப்படி எண்ணங்கள் சிதறும் போதெல்லாம் நான் என்னையே எனக்குள் கடிந்து கொண்டு என் மன ஓட்டத்தை என் அம்மாவை மையப்படுத்தியே இருக்குமாறு மாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு சொல்ல முடியாத ஒரு குழப்பமான போராட்டம் எனக்குள் அரங்கேறிக் கொண்டிருந்தது.
என் வாழ்வில் அப்படி ஒரு நிம்மதி இழந்த…. குழப்பமான நாளை நான் அதுவரை எதிர் கொண்டதேயில்லை. அலைகழிப்பில் இருந்த என் மனதில் இதுதான் என் தாயின் கடைசி நாளாக இருக்குமோ என என்னுள் ஒரு எண்ணம் தோன்றியது. அது ……அப்படி…. நிச்சயம் இருக்க கூடாது என எனக்குள் விகாரமாக சொல்லி நானே மறுத்துக் கொண்டேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் அந்த எண்ணம் தோன்றவே செய்தது. அது எனக்கு மிக கொடூரமான மனச் சித்ரவதையை அளித்தது. இப்படியே குழம்பிக் கொண்டிருந்தவாறே என்னையும் அறியாமல் தூங்கிப் போனேன்.
பேருந்து மேலக்கரந்தையில் ஒரு மோட்டலில் நிறுத்தப்பட்ட போதே விழிப்பு தட்டியது. என் காதருகே ஒருவன் பேருந்துக்கு கீழே நின்றபடி…..”வண்டி ஒரு பத்துப் பதினைஞ்சு நிமிஷம் நிக்கும்… காபி….டீ…..டிபன் சாப்புடுறவுங்க சாப்பிடலாம்…..” என கறைந்து கொண்டிருந்தான்.
நானோ கீழே இறங்க விருப்பமற்றவனாக என் இருக்கையிலே அமர்ந்திருந்தேன்……பேருந்தே காலியாகி இருந்தது தன்னை ஆசுவாசப் படுத்துக் கொள்ள. மாமாவும், தம்பியும் கீழே இறங்கியபடி என்னை டீ குடிக்க அழைத்தார்கள். நான் வர மறுத்ததும். அவர்கள் சென்றார்கள். நான் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் தம்பியை தேநீர் வாங்க சொல்லிவிட்டு மாமா அங்கிருந்த வாடகை தொலைப்பேசி கூண்டிற்குள் நுழைந்தார்…… ஒரு ஐந்து நிமிடம் கடந்திருக்கும் மாமாவின் அழுகுரல் என் ஜன்னலோரம் கேட்டது. என் தம்பியும் அவர் பக்கத்தில் நின்று கொண்டு விசும்பிக் கொண்டிருந்தான்.
அவர் என்னை பார்த்து,” டேய் அம்மா….. நம்மள அநாதையா விட்டிட்டு போயிட்டாடா…..” என அலறிய போது….
நான் பாய்ந்தோடி கீழி இறங்கி அவர் சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டு “யார்கிட்ட என்ன பேசுற…..? இதையே வேற எவனாவது சொல்லியிருப்பான்னா… அவன் தலை இந்நேரம் தரையில கிடக்கும்…..” என கிட்டத்தட்ட ஒரு மிருகமாகவே மாறி கத்தியபடி நான் அவரை ஏறத்தாழ அடிக்கவே பாய்ந்தேன்.
மிகப்பெரும் மனப்போராட்டத்தோடும், குற்றவுணர்வோடும் தவித்துக் கொண்டிருந்த என்னிடம் அவர் அப்படி சொன்னபோது…..என் மனசாட்சியின் குரலாகவே அவரது குரல் எனக்கு ஒலித்தது. நான் என் மீதான கோபத்தையே அவர்மீது வெளிப்படுத்தி நின்றேன்.
அங்கிருந்த அத்தனை பேரும் என்னமோ ஏதோவென்று எங்களை நெருங்கிய சமயம்……
“அப்பா…. இப்பதாண்டா போன்ல சொன்னாங்க…..” என அவரும் பெருங்குரலெடுத்தார். எனக்கு எதுவும் புரியாமல் செயலற்று அவர் சட்டையை பற்றியவாறே நின்று கொண்டிருந்தேன். அவர் என்னை அணைத்துக் கொண்டார். நிச்சயம் நான் அப்போது அழவில்லை. எனக்குள் கோபமும்…. ஒருவகையான மரத்துப் போன நிலையுமே மேலோங்கியது. என் தம்பியும் என் மாமாவை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.
நான் என்னை அவரிடம் இருந்து விடுவித்துக் கொண்டு…..” அப்ப நாங்க அநாதையாயிட்டோமா….?” என்று கேட்டேன்.
அவர் எங்களை அணைத்துக் கொண்டு ”அப்படி சொல்லாதடா…..அப்படி சொல்லாத….”என மீண்டும் அழ ஆரம்பித்தார். எங்களை சுற்றி நின்றவர்கள் ஒருவாறு எங்களை தேற்றி ஆசுவாசப்படுத்த முயற்சித்தனர்.
என் மாமா தான் முதலில் சுதாகரித்து கொண்டார். என் தம்பி விசும்பிக் கொண்டே இருந்தான். நான் ஒரு பிணத்தைப் போல் அவர்கள் பின் சென்றேன்.
“இனிமேல் நாம மதுரைக்கு போக வேண்டாம்….. நம்ம ஊருக்கே போயிருவோம்….. அப்பா அப்படித்தான் சொன்னாங்க…..” என்றபடி அங்கே தூத்துக்குடிக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த பேருந்தில் எங்களை ஏற்றினார்.
என் அம்மாவிற்கு “மரணம்” என்ற வார்த்தையே பிடிக்காது. அவள் பொதுவாக இறந்தவர்கள் வீட்டிற்கு கூட செல்ல விரும்பமாட்டாள். ஆம்! மரணம் அவளுக்கு ஒருவித பயமும் தான்.
ஏனென்றால் அவள் வாழ்வை அப்படி நேசித்தாள். பொதுவாகவே அவளுக்கு ”பிறந்தாள்” என்பதை ஒரு கொண்டாட்டமான நாளாகவே பார்க்கும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு வருடமும் அவள் தனது பிறந்தநாளையும், எங்களது பிறந்தநாள்களையும் கொண்டாடும் வழக்கத்தை எங்கள் குடும்பத்தில் ஏற்படுத்தி இருந்தாள். ”பிறப்பு” என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்ட வரம் என்பாள். அப்படியொரு வரம் அருளப்பட்ட நாளை கொண்டாடுவது அவசியம் என்பது அவளது திண்ணமான கருத்து.
எங்களது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மெழுகுவர்த்தி ஏற்றி அதை ஊதி அணைப்பதும், கேக் வெட்டுவதும் முக்கியமான சடங்காக இருந்தது. நான் அப்படியொரு எனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தான் என் அம்மாவிடம் எனது அந்த கேள்வியை கேட்டேன்………
’ஏன் கேக்கை மட்டும் வெட்டிக் கொடுக்காமல்…. அதில் தேவையில்லாமல் மெழுகுவர்த்தியை ஏற்றி அதை ஊதி அணைக்க வேண்டும்?’ என்று.
அதற்கு அவள் சிரித்தபடியே என்னைப் பார்த்து சொன்னாள் “நீ பிறக்குறதுக்கு முன்னாடி இருண்டு போயிருந்த எங்க வாழ்க்கைக்கு வெளக்கோட வெளிச்சம் அந்த இருளை விரட்டுறதுக்கு தேவப்பட்டுச்சு…..ஆனா நீ பிறந்த பின்னால எங்களுக்கு வெளக்கோட வெளிச்சம் தேவையில்லாம போச்சு…..ஏன்னா நீதான் எங்க வாழ்க்கைக்கான வெளிச்சம். இதுக்குத்தான் உன்னோட ஒவ்வொரு பிறந்தநாள் அன்ணைக்கும் இந்த மெழுவர்த்தி ஏத்தி ஊதி அணைக்கிறோம்….” என்றாள்.
அந்த அளவிற்கு வாழ்வை அர்த்தப்படுத்தி வாழ விரும்பியவள் என் அன்னை. அப்படி அணுவணுவாய் வாழ்வை யாசித்தவளை….. மரணம் பற்றிக் கொண்டது. எங்கள் குடும்பத்தின் வெளிச்சத்தை இருள் வென்றுவிட்டது. இனி எத்தனை கோடி விளக்கேற்றினாலும் அவளது ஓளிக்கு ஈடாகுமா…? நாங்கள் நிலையான இருளுக்குள் தள்ளப்பட்டோம். மரணம்! நிச்சயம் துயரத்தின் உச்சம் தான். ஆனால் மரணித்தவருக்கு அல்ல….. மரணித்தவரை நேசித்தவர்களுக்கு!
இலைகள் சருகாவது
இயற்கைதான்…..ஆனால்
மரங்கள் அவைகளை
பாரமாய் நினைப்பதில்லை-இருந்தபோதும்
காற்று அதனை அனுமதிப்பதில்லை.
........தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக