வியாழன், 9 ஜூன், 2011

விடைபெறுகிறான் ஒரு கலைஞன்....உடலின் பயணத்தில்
முதுமையின் ஒரு மைல் கல்லில்
நின்றது அந்த மூச்சு..

தூரிகையின் மொழி நிரந்தரமாக்குகிறது
ஓர் ஆளுமையின் இருப்பை..
வண்ணங்களில் தோய்த்தெடுக்கும் கலவையின்
பொது நிறமாய் மின்னும் அந்த
வெள்ளைத்தாடியே ஒரு பேசும் தூரிகைதான்..

மரபணுக்குள் பொதிந்திருக்கும்
ஆதிக்க உணர்வுகளின் உசுப்புதலில்
அடியாள் படையின் காவிக் கரங்களில்
துருத்திய கட்டாரிகளைவிடவும்
வலுத்துத் தெரிந்தது
மண்டியிட மறுத்த அந்த எளிய ஓவிய இறகு....

ஓவியக் கூடங்களில் கிழிபட்டது
ஓவியங்கள் அல்ல
தேசத்தின் சகிப்புத்தன்மையும், கலையின் விமர்சனமும்.

புனிதங்களின் போர்வையில் ஒலித்த
பழமைவாதத்தின் குரூர விரல் சொடுக்கில்
வெளியேறத் தலைப்பட்டது
அந்தக் கலைஞனின் உருவம் மட்டும்....
எண்ணங்களும், ஈர்ப்பும்,
படைப்பின் உயிர்க்கனவும் கலையின் ஆன்மாவும்
தாய்மண்ணில் ஊறியிருக்க
அனுமதிக்குக் காத்திருப்பதில்லை

விடை பெறுகிறான் ஒரு பேசப்படும் கலைஞன்
சொந்தவூர் திரும்பும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்து
மைல்களைக் கடந்த ஓர் அயல் நாட்டிலிருந்தபடி!

நினைவில் இருக்கட்டும்
சாபம் அவனுக்கு விதிக்கப்பட்டதன்று
அவன் மரணத்தோடு அது கழியப் போவதும் அன்று....
எஸ் வி வேணுகோபாலன்

.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Agape Tamil Writer சொன்னது…

அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்