சனி, 21 நவம்பர், 2009
ஞமலிபோல் வாழேல்....
”ஞமலிபோல் வாழேல்” என்கிறான் பாரதி.’ஞமலி’ என்றால் நாய் என்று பொருள்.நன்றிக்கு உதாரணமாக சொல்லப்படுவதல்லவா நாய் பின்பு ஏன் பாரதி ’ஞமிலிபோல் வாழேல்’ என்கிறான்? என்று குழப்பமாய் உள்ளதா? ஆம்! நாம் எதையும் மேலோட்டமாய் பார்த்து பழகியவர்களல்லவா? நமக்கு அப்படித்தான் தோன்றும்.ஆனால் நாய்களின் குணாதிசயங்களை உற்று நோக்கினால் உண்மை புலப்படும்.
பொதுவாக நாய்கள் சுதந்திரமாய் செயல்படும் பிராணி அல்ல.அவைகளுக்கு உணவு வழங்குபவர்களே எஜமானர்கள்.அத்தகைய எஜமானர்கள் எதை சொன்னாலும் அது செய்யும்.சுருங்கச் சொல்ல வேண்டுமானால் ஒருவேளை உணவுக்காக வாலையும் ஆட்டி,காலையும் நக்கும் கீழ்தரமான நடவடிக்கைகளை கொண்டது.அதேசமயம் போலிதனமாய் பாசாங்கு செய்து கொஞ்சி குழையும் குணமும் அதற்கு உண்டு.மொத்ததில் நாய்கள் அடிமைதனத்தின் சின்னங்கள்.
மனிதனும் ஆடு,மாடு,கோழி போன்ற உயிரனங்களை தனது அன்றாட பயன்பாட்டிற்காகவும்,தேவைக்காகவும் வளர்த்தான்.ஆனால் நாய்களை அவன் வளர்த்ததோ மற்ற உயிரனங்களை கண்கானிக்கவும்,வேட்டையாடவுமே.ஆக மனிதனின் ஆதிக்க வெறிக்கு முதலில் வாலாட்டியது நாய்களே! அதன் பரிணாம வளர்சியே இன்று அடியாட்களாகவும்,கூலிப்படையாகவும் மாற்றம் கண்டுள்ளது.
அடியாட்களுக்கும்,கூலிப்படையினருக்கும் எந்த அடிப்படை சித்தாந்தமும் கிடையாது.அவர்களை பொறுத்த வரையில் காசு கொடுப்பவரே எஜமானன்.அந்த எஜமானன் எதை சொன்னாலும் அவர்கள் செய்வார்கள்.இன்று ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து ஆதிக்க சக்திகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களும் இவர்களே!
இதில் கொடுமை என்னவென்றால் அடியாட்களாகவும்,கூலிப்படையினராகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் அடிதட்டு வகுப்பினராய் இருப்பவர்களே!(இருந்தவர்களே).இவர்களுக்கோ தாங்கள் யாருக்கு எதிராய் செயல்படுகிறோம்....?தங்களைப் போன்றோர் உருவாவதற்கு யார் காரணம்...?தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன....? என்று கூட தெரியாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை.
அப்படிப்பட்டவர்களால் கொடூரமாய் அழிக்கப்பட்டு இன்றும் தமிழக வரலாற்றில் ஒரு கறுப்பு சரித்திரமாய் இருக்கும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன்.....
1967ஆம் வருடம்...அறிஞர் அண்ணாவின் ஆட்சிகாலமது..... தஞ்சையில் பண்ணையார்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலமது.நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்ச் சிறிய விவசாய கிராமம் கீழவெண்மணி...அங்கே அப்போது விவாசாய கூலிகள் கொத்தடிமைகளாய் நடத்தப்பட்டனர்.சிறு தவறுகளுக்கு கூட சவுக்கடியும்,சாணிப்பாலும் ”பரிசளக்கப்பட்ட” காலமது.தூரத்தெரியும் விடிவெள்ளியாய் கம்யூனிச தலைவர்கள் அந்த விவசாய தோழர்களுக்கு மத்தியில் விளிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வந்தார்கள்.அதன் விளைவாக விவசாயச் சங்கம் ஒன்று உருவானது.ஒற்றுமையாய் ஒருகுரலில் தங்களது உரிமைகளை கேட்க தொடங்கினார்கள் விவசாயிகள்.அதை கண்டு அதிர்ந்த பண்ணையார்களும்,நிலச்சுவாந்தார்களும் ‘நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்’என்று ஒன்றை உருவாக்கி ஆதிக்க வெறியை ஒருங்கிணைத்தார்கள்.
அந்தச் சமயத்தில் தான் விவசாயிகள் வெறும் அரை லிட்டர் நெல்லை தங்கள் படியில் உயர்த்தி கேட்டனர்.அதற்காக அன்றைய ’அரசியல்வாதியான’ ராஜாஜியும், ”தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது” என விவசாயிகளை பரிகசித்தார்.ஆனால் விவசாயிகள் படி உயர்த்தி கேட்டதால் பண்ணையார்களுக்கும்,நிலச்சுவாந்தார்களுக்குமே பேய் பிடித்தது.அதன் விளைவாக அதே ஆண்டு டிசம்பர் திங்கள் 25ஆம் நாள்.கிறிஸ்துமஸ் தினத்தன்று.பண்ணையார்களின் அடியாட்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழவெண்மணியில் நுழைந்து தங்களது விசுவாச வெறியை கட்டவிழ்த்து விட்டார்கள்.உயிரை கையில் படித்தபடி விவசாயிகள் தப்பி ஓட முயற்சித்தனர்.
அப்போது அங்கு ஒரு தெருவின் மூலையில் ராமைய்யா என்ற விவசாயின் குடிசை இருந்தது.அந்த சின்னன்ஞ் சிறு குடிலில் 48 பேர் அடைக்கலம் கொண்டார்கள்.அதையறிந்த அந்த வெறியாட்கள் அந்த குடிசைக்கு தீவைத்தனர்.வெப்பம் தாளாமல் மரண ஓலமிட்டபடி தகித்து கொண்டிருந்த நெருப்பையும் மீறி ஆறு பேர் வெளியே ஓடினர்.அப்படி தப்பியோட எத்தனித்தவர்களில் இருவரை பிடித்து மீண்டும் உள்ளே தள்ளியது அந்த வெறிபிடித்த கும்பல்.
அப்போது ஒரு தாய் தனது மரணத்தருவாயிலும் தனது குழந்தையை வெளியே வீசியிருக்கிறாள்.ஆனால் அந்த வெறிபிடித்த கூலிப்படையினரோ குழந்தை என்று கூட பாராமல் அதை மீண்டும் எடுத்து நெருப்பில் வீசியிருக்கிறார்கள்.கடைசியாக அவர்களது வெறியாட்டத்தில் வெந்து கருகியது 44 பேர் உயிர். அதில் பெண்கள் 14 பேர். குழந்தைகள் 22 பேர்.
கூலியாக உயர்த்தி கேட்ட அரை லிட்டர் நெல்லுக்காக ஆதிக்க வெறியர்களின் கண்ணிசைவுக்கு கூலிப்படையினர் 44 உயிருக்கு வாய்கரிசி போட்டனர்.இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு கிடைத்த தீர்ப்பு என்னவென்றால்....”அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…" என்று 1973 ஏப்ரல் 6ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது.
இன்னும் கீழவெண்மணிகள்...பாப்பாபட்டியாகவும்,கீரிப்பட்டியாகவும்,மேலவளவாகவும்,உத்தப்பபுரங்களாகவும் தமிழக மண்ணில் உயிர்போடு தான் உள்ளது.நாமோ இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பாக டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவராய் சொல்லப்படும் ஏசுநாதரின் பிறந்தநாளை கொண்டாடுவோம் ஆனால் நம் அண்டை மாவட்டத்தில் சாதி வெறிக்கு வெறும் நாற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பலியான அந்த உயிர்களுக்கு துக்கம் அனுசரிக்க மாட்டோம்.உண்மையில் ஏசுநாதர் என்றொரு தேவமைந்தன் இருப்பாரேயானால் அவர்கூட நம்மை இதற்காக மன்னிக்க மாட்டார்.
தோழர்களே!
தனது உதிரம் கொடுத்து நமக்கு உயிர் கொடுத்த நம் அன்னைக்கே நமது உயிரை பலிகேட்க உரிமையில்லாத போது நாம் யார் அடுத்தவர் உயிரெடுக்க?சகமனிதனை அழித்து நாம் அடைவதற்கு இங்கு எதுவுமில்லை.இந்தச் சமூகம் என்பது முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது.நாம் சிரித்தால் அது சிரிக்கும்...நாம் அழுதால் அது அழும்....நாம் அதனை அடித்தால் அது நம்மை திருப்பியடிக்கும்.செய்யும் எல்லா வினைகளுக்கும் எதிர் வினை உண்டென்பது உலக நியதி....ஆதலால் ஞமிலி போல் அல்லாமல் உள்ளார்ந்த அன்போடு சக உயிரை காதல் செய்வீர்.....!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
அப்படியா மாப்பிள்ளே,
ஞமலின்னா அதுவா.
அடடா பாரதியில் ஆரம்பிச்சு
நகப்பட்டிணம் போய் வெண்மனி வந்து.
நல்லாவே வந்துருக்கு அண்டோ.
கைகுடு. வாழ்த்துக்கள்.
என் மகளுக்கும்.
அருமையான பதிவு.. பள்ளியில் குழந்தைகளுக்கு மனப்பாடம் செய்ய மட்டுமே உண்டானது ஆத்திசூடி என்று ஒரு பொதுவான நம்பிக்கை உலவுகிறது.. பாரதியின் ஒவ்வொரு வரியிலும் வாழ்க்கையின் வழிகாட்டுதல்கள் ஒளிந்திருக்கிறது...புதிதாய் படிக்கத் துவங்குவோம்
உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!
என்றும் அன்புடன் ,
சங்கர் ........................
http://wwwrasigancom.blogspot.com/
என்ன ஒரு அலசல்.. பாராட்டுகள் நண்பரே....
அருமையான பதிவு..
பாராட்டுகள் நண்பரே....
கருத்துரையிடுக