சனி, 18 ஜூலை, 2009

தாய்மண்


பரணில் தூசி அதிகமாக இருந்தது. கண்ட கண்ட பொருள் எல்லாம் கையில் தட்டுப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் நான் தேடுவது மட்டும் என் கண்னில் சிக்கவே இல்லை.
எப்பவோ நான் தேடிய பொருள்களெல்லாம் இப்போது தேவையற்ற நேரத்தில் கையில் சிக்குகிறது.
ஆனால் இவைகள் தேவைபட்ட நேரத்தில் நான் வீட்டை இரண்டாக்கிய போதும் இவைகள் எனக்கு கிடைக்கவில்லை.

தூசி கிளம்பி விடும் என்பதால் மின் விசிறியை வேறு போடமுடியவில்லை. அதனால் புழுக்கத்தால் உடலில் வேர்வை கசகச வென்றிருந்தது.இவ்வளவு அவஸ்தையிலும் அது எப்படியாவது கண்ணில் தட்டிவிட வேண்டும் என மனம் மட்டும் ஏங்கி கொண்டிருந்தது.

அவரை நேற்று மீட்டிங்கில் சந்தித்திராவிட்டால் இந்த அவஸ்தையே எனக்கு கிடையாது.இத்தனைக்கும் நேற்றுதான் அவரை முதன்முதலாக சந்தித்தேன்.
வெறும் பரஸ்பர புன்னகை பரிமாற்றத்தோடு கூட எங்களது அந்த சந்திப்பு முடிந்து போயிருக்கும், என்னை அவருக்கு அறிமுகப்படுத்திய என் நண்பர் நான் யாருடைய மகன் என்று சொல்லாமல் விட்டிருந்தால்....

ஆனால் நான் இன்னாரின் மகன் என்று என் தாயின் பெயரை சொன்னவுடன் அவர் வாஞ்சையுடன் என் கைகளை பற்றிக்கொள்வதாக நினைத்து கொண்டு மோதிரத்தோடு என் விரல்களை நசிக்கியபடியே என் தாயின் மறைவிற்கு தன் இரங்கலை தெரிவித்தார்.

நான் எந்த வலியால் நெளிகிறேன் என்று கூட புரியாமல் என்னைப் பற்றிய விசாரிப்பு முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார்.ஒருவழியாக பேச்சினூடே சமாளித்தவாறு என் கைகளை விடுவித்து கொண்ட போது என் விரல்களுக்கு நடுவே மோதிரத்தடம் பதிந்து வலித்தது.
இப்படி வலிக்க வலிக்க ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தவர்... திடீரன்று என்ன நினைத்தாரோ என் குடும்ப சூழல்குறித்தும் தற்போதைய எங்கள் வீட்டின் வசதிவாய்ப்பு குறித்தும் கேட்க தொடங்கினார்.

வாய்க் கொழுப்பு சீலையில் வடியுங்கிற கதையாக நானும், என் தாயின் மறைவிற்கு பின் ஏற்பட்ட கடன் தொல்லையால் எங்கள் சொந்த வீட்டை விற்ற கதையையும் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதையும் குறிப்பிட்ட போது,’கடம்பூர் பக்கத்தில் உள்ள நிலத்தையும் விற்று விட்டீர்களா?’ எனக் கேட்டார்.

”கடம்பூர் பக்கத்தில் எங்களுக்கு நிலமெல்லாம் இல்லையே...” என்று அப்பாவியாக கூறிய என்னை விடாமல்
“என்ன தம்பி இப்படி சொல்றீங்க அங்க உங்கம்மா நிலமுடிச்சது எனக்கு நல்லா தெரியுமே...”என்றவாறே தொடர்ந்து “ உங்க அப்பாகிட்ட கேட்டு நல்லா தேடிப் பாருங்க... பத்திரம் உங்க வீட்ல எங்கையாவது தான் இருக்கும். இப்ப அது பல லட்சம் தேறும்” என்று வேறு ஆசையை தூண்டி விட்டு விட்டு சென்றார்.

இரவு வீட்டுக்கு வந்து என் அப்பாவிடம் கேட்ட போது,”அப்படியெல்லாம் ஒன்னும் முடிக்கலியெப்பா....எனக்கு ஒன்னும் ஞாபகமில்லையே..”என்று இரண்டும் கெட்ட மனநிலையில் இழுத்தவர்....சற்று நேரத் தாமதத்திற்கு பின்,”உங்கம்மா! எல்லாத்தையும் அவ இஷ்டத்திற்கு தான் செய்வா எங்கிட்ட எதையும் சொல்ல மாட்டா...அவளுக்கு எல்லாமே அவ அம்மாவும்,தம்பியும் தானே.... போயி உம் மாமன்கிட்டயும்,பாட்டிக்காரிகிட்டயும் கேளு....”என்று புலம்பியவாறே அவரது அறைக்குள் போய் மீதம் வைத்த சரக்கை பொரிகடலையை சவைத்தவாறே அடிக்க ஆரம்பித்தார்.

“ஆமா! இப்படி என் நேரமும் குடி குடின்னு குடிச்சிக்கிட்டே இருக்குற ஆள நம்பி எந்தப் பொண்டாட்டி தான் சொத்து வாங்குன விஷயத்தை சொல்லுவா....பைத்தியக்காரி கூட சொல்ல மாட்டா..”என நான் படபடக்க அவர் அதற்கு பதிலுரைக்க என கொஞ்ச நேரத்தில் குருஷேத்திரமானது என் வீடு.ஒரு வழியாக என் மனைவி தலையிட்டு ’கீதா உபதேசம்’ செய்த பிறகே இருவரும் ஓய்ந்தோம்.சமாதானம் ஆனாலும் கொஞ்சம் புலம்பியபடியே தன் அறைக்குள் சென்று அப்பா படுத்துக்கொண்டார்.

ஆனாலும் மழை விட்டு தூவானம் ஓயாத கதையாக என்னிடம் மெல்ல“எப்ப பார்த்தாலும் உங்களுக்கு இப்படித்தான் சின்ன விஷயத்தையும் பெரிசாக்கி சண்ட போடாட்டி நிம்மதியா இருக்கமுடியாதே....ஏன் மாமா கூட இப்படி வார்த்தைக்கு வார்த்தை மோதுறீங்க...பேசாம படுங்க எல்லாம் காலையில பார்த்துக்கலாம்.....”என்றவளிடம்

“ஆங்! நா லூசு அதனாலதான் இப்படி பேசுறன்...வந்துட்டா எல்லா...ஆங் தெரிஞ்ச மாதிரி.”என்று சலம்பியபடியே படுக்கப்போனன்.
“எதயும் ஒத்துக்குற மாட்டீங்களே....”என்றவாறே விளக்கை அணைத்து விட்டு அவளும் படுத்தாள்.அறை இருண்டது. இரவில் சமரச ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது தானே இந்திய வரலாறு........

காலையில் எழுந்து பார்த்தால் என் அப்பா தன் அறையில் உள்ள அலமாரியில் அந்தப் பத்திரத்தை தேடிக் கொண்டிருந்தார்.என் மனைவி சிரித்தபடியே,” நீங்களும் மாமா கூட சேர்ந்து தேடுங்க...”என்றாள்.

அப்பா,”ஏம்மா!இங்க என் அலமாரியல இல்ல... அவன உங்க அத்தயோட சின்ன இரும்பு பெட்டி ஒண்ணு உண்டு அத தேடச் சொல்லு...அதுல இருக்கான்னு பாப்போம்... ”

அன்று ஆபிஸுக்கு விடுப்பு சொல்லி விட்டு அதை வீடு முழுவதும் தேடினோம்... கடைசியில் அதை தேடவே இப்போது பரண்மீது ஏறி நிற்கிறேன்.பல மணி நேரத் தேடலுக்கு பின் அந்தப் பெட்டி கிடைத்தது.ஆனால் அதனுள்ளே பத்திரம் எதுவும் இல்லை.தேடி அலுத்து ஒய்ந்த பின்பு....என் அப்பா,”டேய்!ஓங்கிட்ட சொன்ன ஆளுக்கு போன் போட்டு எந்த பத்திர ஆபிசில் எப்ப முடிச்சதுன்னு கேளு நாம மேக்கொண்டு என்ன பண்ணலாம்ன்னு பாப்போம்”என்றார்.

எனக்கும் அது சரியாக படவே அவருடைய நம்பரை என் நண்பனிடம் வாங்கி போன் செய்தேன்.என்னை அவருக்கு மீண்டும் அறிமுகம் செய்து கொண்டு சம்பரதாய நலம் விசாரிப்புகளுக்கு பிறகு.....

“சார் நேத்து நீங்க சொன்னீங்க இல்லையா எங்கம்மா கடம்பூர் பக்கத்துல நிலம் வாங்குனாங்கன்னு அது எந்த வருஷம்...?எந்த பத்திர ஆபிசுலன்னு ஞாபகமிருக்கா..? ஏன்னா வீடு முழுக்க தேடிப் பார்த்துட்டோம் பத்திரத்த எங்கயும் காணல அதான்...”

“தம்பி நான் என்ன சொன்னன்னு நீங்க சரியா புரிஞ்சிக்கலியா....உங்கம்மா அங்க நிலம் வாங்கப் போறத என்கிட்ட சொன்னாங்க அவங்க வாங்குனாங்களா இல்லையான்னு எனக்கு தெரியலையே....”என்று அவர் ஏதேதோ பேசிக் கொண்டே போக இப்போது நிஜமாகவே என் காலடியில் உள்ள நிலம் பின் வாங்குவது போல் ஆனது......

கருத்துகள் இல்லை: