சனி, 26 மே, 2012

என்று தணியும் எந்தன் சுதந்திர தாகம்

அன்பானவர்களுக்கு

தியாகமே வாழ்வாகி விடுதலைப் போரிலும், இடதுசாரிகள் இயக்கத்திலும் பெரும் பங்களிப்பு செய்த வீராங்கனை, எளிய தாயுள்ளம் கொண்ட உன்னதத் தோழர் மீனா கிருஷ்ணசாமி தமது 90 ம் வயதில் இன்று காலை பிரியா விடை பெற்றார்.....
மகத்தான அந்தத் தோழர் நினைவுக்கு செவ்வணக்கம் செலுத்துகிறேன்..

                                           

தேசியத்தின் விளைநிலமான மதுரையில் 1922ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி பிறந்தேன். அக்கால கட்டத்தில் மதுரையின் தேச பக்தி வெள்ளம் யாரையும் தனக்குள் இழுத்துக் கொண்டு போய்விடும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. ருக்மணி லெட்சுமிபதியும், சரோஜினி நாயுடுவும் தங்கள் தோளில் கதரைப் போட்டுக் கொண்டு, கெஜக்கோலுடன் வீடு வீடாகச் சென்று கதர்த் துணியை விற்பனை செய்து வந்த காலமது.

எனது தந்தையார் கோபால்ராவ் எனது சிறுவயதின்போதே காலமாகிவிட்டதால், தாயார் லக்ஷ்மிபாயே குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.

எனது தாயார் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்திலும், சுதேசி துணி மறியலிலும் (அந்நிய துணி பகிஷ்காரம்) தீவிரமாக ஈடுபட்டவர். ஒரு முறை எனது தாயார் சுதேசி துணி மறியலில் ஈடுபட்டபோது அவரையும் அவரது தோழி சொர்ணம்மாளையும் தீச்சட்டி கோவிந்தன் என்ற போலீஸ் அதிகாரி கைது செய்து வேனில் ஏற்றினான. வேன் ஊருக்கு வெளியில் வரும்வரை அவர்கள் இருவரையும் அடித்து உதைத்தான் கோவிந்தன். பிறகு அவர்களைப் பிறந்த மேனியாக்கிக் காட்டில் ஒரு பள்ளத்தில் தள்ளி விட்டுச் சென்று விட்டான். இருவரின் அலறலையும் கேட்டு ஓடிவந்த கிராமவாசிகள், அவர்களின் மானம் மறைக்கத் துணி கொடுத்து அழைத்துச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் கூட எனது தாயார் தேசியப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இத்தகைய தேசபக்தி மிகுந்த தாய்க்கு மகளாகப் பிறந்ததால், எனக்கும் இயற்கையாகவே தேசிய உணாச்சி அதிகமிருந்தத

வாழ்க்கையில் ஜான்சிராணி லக்ஷ்மிபாய், சிட்டகாங் வீராங்கனை கல்பனாததைப் போன்று நானும் சாதனைகள் செய்யவேண்டும்; வெள்ளையர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று சபதமெடுத்தேன்.

தேசிய உணர்ச்சி அதிகமிருந்ததால் பன்னிரெண்டு வயதாக இருக்கையில் சுதேசி துணி மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டேன். நீதிபதியிடம் 'பதினாறு வயது' என்று பொய் சொல்லிச் சிறை சென்றேன். பத்து நாட்கள் மதுரை சிறையில் வாசம் செய்த பிறகு கேரளம் கண்ணனூர் சிறைக்கு மாற்றினார்கள்.

நிலாவே வா!

கண்ணனூர் சிறையில் வெளியுலகத்தையோ, வானத்தையோ பார்க்க முடியாது. ஒரு நாள் வார்டன் அம்மாவிடம், "நிலாவைப் பார்க்க ஆசையாக இருக்கிறது" என்று சொன்னேன். மனிதாபிமானமிக்க அந்த வார்டன் எல்லோரும் உறங்கியபிறகு கதவைத் திறந்து எனக்கு நிலாவைக் காண்பித்து எனது ஆசையை நிறைவேற்றினார்கள்.

மகாத்மா காந்தி மதுரைக்கு வந்தபோது சுதேசி இயக்கத்திற்காக என் காதில் போட்டிருந்த சிறு கம்மலைக் கழற்றி அவரிடம் தந்தேன். அவர், "இனிமேல் நீ நகையே போடக் கூடாது" என்று என்னிடம் சொன்னார். அதன் பிறகு நானும் நகைகள் அணிவதையே நிறுத்திவிட்டேன்.

அப்போது காந்தி காதர், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, இந்தி படித்தல் ஆகிய தன் நான்கு அம்சத் திட்டத்தை நாடெங்கும் பிரயாணம் செய்து பிரச்சாரம் செய்து வந்தார். அந்த திட்டத்தின்படி, இந்தி படிக்க தலைவர்கள் என்னைத் தேர்வு செய்தார்கள்.

ஞானயாத்திரை

பி.ராமமூர்த்தி வழிகாட்டுதல்படி 'ஞானயாத்திரை' என்ற பெயரில் நானும் சில இளைஞர்களும் பிரபல இந்தி கவிஞரான மகாதேவி வர்மா நடத்தி வந்த 'மகிலா வித்யா பீடத்தில்' சேர்ந்து இந்தி படிக்க அலகாபாத் சென்றோம்.

மகாதேவி வர்மா, பதினான்கு வயதான நான் இந்தி படித்தால் மட்டும் போதாது என்று கூறி, முறையான கல்வியும் பயில்வதற்காக ஆறாம் வகுப்பில் சேர்த்தார். ஏழு ஆண்டுகள் அலகாபாத்தில் கல்வி பயின்று, பனாரஸ் மெட்ரிக்கில் தேறினேன். இந்தியில் உயர் பட்டமும் பெற்றேன்.

வாழ்க்கைப் பயணத்தில் எனது துணைவராக இணைந்த திரு எஸ் கிருஷ்ணசாமி அப்போது காசியில் உள்ள பனாரஸ் சர்வகலாசாலையில் தேசிய கல்வி பயின்று வந்தார். என்னை சந்தித்துப் பேச அவர் சில சமயம் அலகாபாத்திற்கு வருவதுண்டு.

காந்தி ஆசிரமம்

1939ம் ஆண்டு மதுரைக்குத் திரும்பினேன். அப்போது வார்தாவிலுள்ள காந்தி ஆசிரமத்திற்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் காந்தி ஆசிரமத்தில் சேவை புரிந்தேன். பல தேசிய தலைவர்களை அருகிலேயே பார்க்கவும், அவர்கள் உரையைக் கேட்கவும் அறிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

ஒருமுறை நேருஜி சீனப் பயணம் செய்துவிட்டு வருகையில் ஒரு பேனாவிற்குள் அடங்கும் பட்டுத் துணியை வாங்கிவந்து எங்களிடம் காண்பித்து எங்களை அசர வைத்தார்.

செய் அல்லது செத்துமடி!

1942ம் ஆண்டு ஆகஸ்டு கிளர்ச்சியில், காந்தி கைதாகும்போது அவருக்கு வெற்றித் திலகமிட்டு வழியனுப்பினோம்.

'செய் அல்லது செத்துமடி' (Do or Die) என்ற கோஷத்தை எழுப்பிக் கொண்டு வார்தாவின் வீதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களுக்குக் கிளர்ச்சியூட்டினோம்.

1942
ல் 'வெள்ளையனே வெளியேறு ' போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு ஜபல்பூர் சிறைக்குக் கொண்டு செல்லப் பட்டேன். பதின்மூன்று மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, 1943ல் விடுதலையாகி மீண்டும் மதுரைக்கு வந்தேன்.

காங்கிரசிலிருந்து கம்யூனிசத்திற்கு

அச்சமயம் மக்கள் கொதித்துக் கொண்டிருந்தனர். ராட்டையும், கதரும், தீண்டாமையும் மட்டும் எப்படி சுதந்திரத்தை வாங்கித் தரும் என்ற கேள்வியை மக்கள் எழுப்பினர். அக்கேள்வி என்னுள்ளும் எழுந்தது. சிறையிலிருக்கையில் பொதுவுடைமை நூல்களை நிறைய படித்ததால் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையின்பால் மெல்ல மெல்ல பற்று உண்டாயிற்று.

தோழர் எஸ் கிருஷ்ணசாமி அப்போது மதுரையில் சோஷியலிஸ்ட் கட்சியின் கிளையினை உருவாக்கி அதன் செயலாளராகப் பணியாற்றி வந்தார். காலத்தின் கட்டாயத்தால் சோஷியலிஸ்ட் கட்சியே மெல்ல மெல்ல 'கம்யூனிஸ்ட்' கட்சியாக உருவானது. நானும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, சுரண்டல் இல்லாத சமுதாயம் உருவாக்க உறுதி கொண்டேன்.

பெப்பர்மின்ட் கல்யாணம் !

1944ல் மதுரையில் வைத்து எனக்கு திருமணம் நடந்தது. கல்யாண நாளன்று காலையில் மறியல், ஆர்ப்பாட்டம், மாலையில் கல்யாணம் என்று முடிவு செய்திருந்தோம். அன்று காலை மறியலில் ஈடுபட்டதற்காக வேண்டுமென்றே கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டேன்.

 அன்று மாலைப் பொழுதில் எனக்கும், எஸ் கிருஷ்ணசாமிக்கும் தோழர் பி ராமமூர்த்தி தலைமையில் கே பி ஜானகி அம்மாள் மாலை எடுத்துக் கொடுக்க திருமணம் நடந்தது. திருமண ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட பின் நாங்களிருவரும் மாலை மாற்றிக் கொண்டோம்.

M.R.S. மணி என்ற தோழர் ஒரு பெரிய பொட்டலம் நிறைய பெப்பர்மின்ட் வாங்கி வந்து கல்யாணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் கொடுத்து விழாவை நிறைவு செய்தார். எங்கள் கல்யாணம் எளிமையான கல்யாணம்.

அன்றிரவு அம்பாள் ஓட்டலில், எனக்கும் எனது கணவருக்கும் தலைவர் பி ராமமூர்த்தி ஒரு தோசையும், காப்பியும் வாங்கித் தந்து கல்யாண விருந்து வைத்தார்.

பஞ்சும் பசியும்

1944 , 45 ல் கே.பி ஜானகி அம்மாளுடன் சேர்ந்து ஏழை மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அரிசி, பருப்பு, விறகு, மண்ணெண்ணெய்க்காகப் போராட்டங்கள் நடத்தினேன்.

குறிப்பாக பெண்களின் பசியைப் போக்க, மதுரை ஹார்வி மில்லில் பனி புரியும் பெண் தொழிலாளர்களை எல்லாம் ஒன்று திரட்டி, ஒரு குறிப்பிட்ட தினத்தன்று ஊர்வலத்திற்கு வர ஏற்பாடு செய்தோம்.

 ஏற்கெனவே சொல்லிவைத்தபடி, மில்லின் பெண் தொழிலாளர்கள் அன்றைய தினம் பகல் 12 மணிக்கு தங்களது ஷிப்டு முடிந்ததும் தலைகளை உதறாமல் அப்படியே பஞ்சுத் தலையுடன் ஊர்வலமாகத் திரண்டு வந்தனர்.

 மதுரை ஆற்றுப் பாலம் முழுவதும் வெண்பஞ்சுத் தலைகளாக இருந்தது. அந்த பஞ்சுத் தலைகள் பனித்தலைகளாகத் தெரிந்தன.அந்த ஊர்வலத்தைப் பார்க்கையில், இமயமலையே நகர்ந்து வருவதைப் போலிருந்தது. ஊர்வலமாகச் சென்று நாங்கள் கலெக்டரைச் சந்தித்துப் பேசி கஞ்சித் தொட்டிகளைத் திறக்கச் செய்தோம்.

 மக்களின் தோழன்

 பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கைப்பிடித்து அழைத்துச் சென்று அவர்களின் துயரங்களைத் துடித்தது அன்று கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. ஒவ்வொரு நாளும் விடியற்காலை ஆறு மணிக்கே ரேஷன் கடைக்குச் சென்று ஏழைகளுக்கு அரிசி, பருப்பு விநியோகம் செய்யப்படுவதைக் கண்காணிப்போம். அரிசி மூட்டைகளும், எண்ணெய் டின்களும் காலியான பிறகு தான் நாங்கள் வீடு திரும்புவோம். இந்த இயக்கங்களையும், போராட்டங்களையும் முன்னின்று நடத்தியவர் எம்.ஆர்.வெங்கட்ராமன்.

இந்த இயக்கங்கள் தான் கம்யூனிஸ்டுகள் தேச விரோதியல்ல, மக்களுக்காக உண்மையாகப் பாடுபடக் கூடியவர்கள், கண்ணியமானவர்கள் என்ற எண்ணப் போக்கை மக்களிடம் தோற்றுவித்தது.

1945ல் எனது கணவர் எஸ் கிருஷ்ணசாமி பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகையில் ஹார்வி மில்லில் ஒரு மாபெரும் வேலை நிறுத்தம் ஏற்பட்டது. அதில் கலந்து கொள்கையில் எனது மகன் மோகனுக்கு ஒரு வயது. மேலும் என் வயிற்றில் மூன்று மாதக் கரு. அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் எனக்கு கருச் சிதைவு ஏற்பட்டது. ஹார்வி மில் நிர்வாகத்தின் தாக்குதலைத் தடுத்தபோது, ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்குதான் பிற்காலத்தில் மதுரை கம்யூனிஸ்ட் சதி வழக்கு என்று அறியப்பட்டது. இந்த வழக்கிற்காக கட்சியின் முக்கிய தலைவர்களையும், தொண்டர்களையும் தேடித் தேடி போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.

கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் ஆறேழு மாதங்களாகச் சிறையிலிருந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சி பெண்களால் தான் நடத்தப் பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் 1947 ஆகஸ்ட் மாதம் விடுதலையாகி வரும் வரை, ஆறேழு மாதங்கள் கம்யூனிஸ்ட் கட்சியைக் காப்பாற்றி அதன் தலைவர்களிடம் திருப்பிக் கொடுத்த பெருமை பெண்களையே சாரும்.

செங்குருதிப் புனல்

1948-50 காலகட்டத்தில் இந்தியாவெங்கும் எதேச்சதிகாரம் கோலோச்சியது. தமிழகத்தின் சிறைகளில் கம்யூனிஸ்டுகள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து இரத்தம் சிந்திய காலமது. குறிப்பாக கடலூர் சிறையில் கம்யூனிஸ்டுகளின் செங்குருதி புனலாக ஓடியது. கட்சியின் அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

வறுமையும் சிவப்பும்

1950ல் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்து பார்த்தால், கட்சியிடமே பணமில்லை; எங்களிடமும் பணமில்லை; வயிறு காய்ந்தது; வறுமை துரத்தியது. குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை அதிகமானது.

 இந்தி பிரச்சார சபாவில் டீச்சர் வேலை கேட்டுச் சென்றேன். கட்சிப் பணிகளில் ஈடுபட மாட்டேன் என்று கடிதம் எழுதி அதில் என்னைக் கையெழுத்திடச் சொன்னார்கள். கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டு வெளியே வந்தேன். வறுமையும், பசியும் நிழலைப் போல் எங்களைப் பின் தொடர்ந்து வந்த காலமது. இந்தி ட்யூஷன் எடுத்துக் குடும்பத்தை சில காலம் ஓட்டினேன். பின்னர் எனது கணவர் ஜனசக்தியிலும், நியூ செஞ்சுரி புத்தக நிலையத்திலும் நிர்வாகியாகப் பணியாற்றினார். நிலைமை சிறிது சீரானது.

 நல்ல டீச்சர்

 எனக்கும் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் உதவியால் அவரது சிந்தாதிரிப்பேட்டை ஹை ஸ்கூலில் இந்தி டீச்சர் வேலை கிடைத்தது. அந்தப் பள்ளியிலேயே இருபத்தியெட்டு ஆண்டுக்காலம் பணியாற்றி 1980ல் ஓய்வு பெற்றேன். அந்த வருடத்திலேயே எனது கணவரையும் இழக்க நேரிட்டது.

 1964 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவு பட்டபோது நானும் எனது கணவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலேயே எங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தோம். கொள்கைகளில் மாறுபட்டாலும், எங்களுடன் எம் ஆர் வெங்கட்ராமனும், பி. ராமமூர்த்தியும் இறுதிவரை நட்புறவோடு தான் பழகி வந்தனர்.

 சுதந்திர தாகம்

 காலங்கள் கடந்து போய்க் கொண்டே இருக்கின்றன. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்திற்காகவும், பாட்டாளிகளுக்காகவும் போராட்டங்களில் ஈடுபட்ட எனக்கு இன்று கட்சி இயக்கங்களில் பங்கு பெறாமல் இருப்பது சந்தோஷத்தைத் தரவில்லை. கண்ணொளி பாதிக்கப்பட்டு இருப்பதால், எனது குடும்பத்தினர் நான் தனியாக வெளியே போகக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருக்கின்றனர். அவர்களுக்கு என்மேல் அவ்வளவு அக்கறை.

 ஆனால் சின்னப் பிள்ளைகளை வெளியே போகக் கூடாது என்று சொல்லும்போது அவர்களுக்கு வருமே கோபம், அதைவிட பல மடங்குக் கோபம் எனக்கு வருகின்றது. என்ன செய்வது? காந்தி வாழ்ந்த காலத்தில் பிறந்த எனக்கு அவ்வளவு சீக்கிரத்தில் சுதந்திர தாகம் தணிந்து விடுமா?

 எழுத்தாக்கம்: ராஜன் பாபு (இந்தியன் வங்கி)

நன்றி: பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி: ஆகஸ்ட் 2006
தொகுப்பு : எஸ் வி வேணுகோபாலன்




                                    
                                                             



வெள்ளி, 11 மே, 2012

அவமதிப்பு புதிதல்ல....


நிராகரிக்க முடியாத
ஆளுமையை
ஏற்கத் தயாரில்லாத சிறுமனங்கள்
அவமதிப்பின் மூலம்
நினைவுபடுத்திக் கொள்கின்றன அவரை

தங்களை அலைக்கழிக்கிற ஒரு பெயரை
முடிகிற இடங்களில் எல்லாம்
நீக்கிவிட்ட நிறைவோடு
படுக்கைக்குச் செல்பவர்கள்
உறக்கத்தில் குறுக்கிடும்
அவரது பிம்பத்தின் முன் நடுங்கி எழுந்திருக்கின்றனர்

யுகங்களுக்குப் பின்னால் சென்று
சாத்திர சம்மதத்தோடு
நியாயப் படுத்தும் அவர்களது தீண்டாமையை
கால காலத்திற்குமாய்த் தகர்த்தெறிந்த
அவரது வாதத்தின் வெம்மையில்
பொசுங்கிய புத்தகங்களின்
அதே கருகிய வாசத்தோடு
தொடர்ந்து அச்சாகின்றன
திரிக்கப்பட்ட வரலாற்றின் பிரதிகள்

மரபணுக்குள் வேர் விட்டிருக்கும்
சாதிய ஆதிக்கத்தை
சமத்துவத்தின் மைந்தர்கள்
தத்துவ வாள் கொண்டு
சமருக்கு அழைப்பார்கள்

மனுவை விஞ்சும் அவனது
நவீன வாரிசுகள் உலவும் பெருவெளியில்
பிறந்து கொண்டே இருப்பார்கள்
மனுவைத் தோலுரிப்பவர்களும்

                                                                                      -எஸ் வி வேணுகோபாலன்

செவ்வாய், 8 மே, 2012

கண்ணகி நின்னை காமுறுகிறேன்....






கண்ணகி நின்னை காமுறுகிறேன்….

கயவர்கள் போதித்த கற்பை

உரைசால் பத்தினியாய்

ஏந்தி நின்றமைக்காய் அல்ல…..



கண்ணகி நின்னை காமுறுகிறேன்…..

கோவலன் கேவலனாய்

மாறிய பின்பும்

காதலோடு காத்திருந்தமைக்காய் அல்ல…..



கண்ணகி நின்னை காமுறுகிறேன்…..

கொலு மண்டபத்தில் சிலம்புடைத்து

கணவன் கள்வனல்ல வென்று

நீதியை நிலை நாட்டியமைக்காய் அல்ல…..



கண்ணகி நின்னை காமுறுகிறேன்…..

நீதி மறுக்கப்பட்ட நாட்டில்

நிரபராதி யொருவன்

நியாயமின்றி அதிகாரச் செருக்கிற்கு

பலியான பின்பும்

நமக்கேன் வீண் வம்பு……

நாட்டில் நடக்கும் அநியாயங்களை

நாம் ஏன் தட்டிக் கேட்க வேண்டும்?

நாமுண்டு நம் தேவையுண்டு

நமக்கென்று வந்தால் பார்த்துக் கொள்ளலாம்….

அண்டை வீடு பற்றி எறிந்தால்

நமக்கென்ன….? என்று

கண்டும் காணாமல் போன

கயவர்களை….. சுயநல பேடிகளை…..

எரியும் தனல் கொண்டு

அழித்தாயே!!! -அதற்காகவே

கண்ணகி நின்னை காமுறுகிறேன்….

சனி, 5 மே, 2012

16-ஆம் காம்பவுண்ட்.....14.






16-ஆம் காம்பவுண்டே துக்க கோலம் பூண்டிருந்தது…… டேவிட்டின் செல்வாக்கால் அன்று சனிக்கிழமையாக இருப்பினும்….. பிரவீணின் பிரதேப் பரிசோதனையும் அதை தொடர்ந்த மற்ற போலீஸ் விவகாரங்களும் விரைவாகவே முடிந்து அவனது உடலை மாலை நான்கு மணிக்குள் தூத்துக்குடிக்கே கொண்டுவர முடிந்தது. 

அவனது உடல் சின்னக் காம்பவுண்டின் வாயில் வழியே அவனது மாமன் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட போது மரண ஓலத்தால் அங்கிருந்த ஒவ்வொரு வீடும் அதிரத் துவங்கியது. ஏழு வருடங்களுக்கும் மேலாக கடலில் கிடந்து ஊருக்கு வந்தவனால் ஏழு நாட்கள் கூட நிலத்தில் வாழ கொடுத்து வைக்கவில்லை.

மணவரையில் தன் மகளுக்கு இணையாக மாலையிட்டு கண்குளிர காணலாம் என கனவு கொண்டிருந்த ஜோசப் அவனை பிணமாய் தானே தூக்கி வர வேண்டியதாகிவிட்டதே என நிலைகுலைந்து போயிருந்தார். கண்ணீர் காய்ந்த கன்னங்களோடு தொண்டை வற்றிப் போய் ஏதேதோ அரற்றிக் கொண்டிருந்தார்.

ஒருமாயமானைப் போல வந்து தன் வாழ்வின் வசந்தங்களையெல்லாம் தன்னோடு அள்ளிச் சென்றவனை….. ஆசையாசையாய் தன் இளமையை அள்ளிப் பருகியவனை…. உயிரற்ற உடலாய்…. தன் வீட்டு நடுக்கூடத்தில் பிணமாய்…. கடத்தி வைக்கப்பட்ட போது அதுவரையிலும் அவன் மரணத்தை ஏற்றுக் கொள்ளாதிருந்த அவளது மனது உடைந்து கதறத் துவங்கியது. நிஜத்தின் வலி உரைத்தபோது பெருங்குரலெடுத்து அலறத்துவங்கினாள்….. ஸ்வீட்டி!!!!

தலைவிரி கோலமாய்…. அவள் தன் மாரடித்துக் கொண்டு அவன் மேல் விழுந்து புரண்டு அழுதபோது அங்கிருந்த அனைவரும் செய்வதறியாது போய் உரைந்த கல்லாய் நின்றனர்.

“எதுக்கு மச்சான் ஏழு வருசம் கழிச்சு இங்க வந்தீங்க…. இப்படி ஒரேடியா என்னைய விட்டு போய்ச் சேரவா….?”

“இனி நாதியத்த மூளியா நான் வாழவா வந்தீக?”

“ஏம் மச்சான்….. என்னய இப்படி மோசம் பண்ணிட்டு போணீங்க,,,,,? நான் தான் இன்னக்கு என்னய கோயிலுக்கு கூட்டிட்டு போவச் சொன்னனே….. என்னய விட்டுட்டு சொல்லாம கொள்ளாம போயி பிணமா வந்து கெடக்கீகளே….. என் உயிரு எங்க போச்சு…..?”

அவள் அரற்றிக் காற்றில் வீசிய கேள்விகளுக்கு அங்கிருந்த ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. சோபியாவுக்கு மருமகனின் மரணம் ஏற்படுத்திய வலியை காட்டிலும் தன் மகளின் கதறல் அதிர்ச்சியாகவும் அவளை உருக்குலைத்தும் கொண்டிருந்தது. 16-ஆம் காம்பவுண்ட்டில் கலங்காதவரும் கதறியபடி இருக்க அங்கு வந்து சென்ற காற்றும் கண்ணீர் வடித்து செல்ல…. ஜொஸியம்மே இரும்பை போல் புடித்த புடியாய்….. இமைகள் மூட மறந்தவளாய் பிணமாய் கிடத்தப் பட்டிருந்த தன் பேரன் பிரவீணையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் ஒரு சொட்டி நீர் கூட கோர்க்காமல் வெறித்தது வெறித்தபடியே…. இருந்தது. அவளை நெருங்கி ஏதேதோ சொல்லியபடி அவளை அழச்செய்ய தம்மால் முடிந்ததை அங்கிருந்தவர்கள் அனைவரும் செய்து பார்த்தார்கள். ஆனால் அவள் எதற்கும் கலங்காமல் யாரிடமும் பேசாமல் உறைந்து போய் வீற்றிருந்தாள்.

அவனது உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப் பட்டிருப்பதால் அன்றே அடக்கத்தை முடித்துவிட வேண்டும் எனவும் சொல்லப்பட்டது. மேலும் வெளியூரில் இருந்து யாரும் வரவேண்டிய அவசியம் இல்லாததால் அன்றே அடக்கத்தை எடுக்க முடிவும் செய்யப்பட்டது. அந்தோணியார் கோயிலில் மாலை ஆறுமணிக்கு அடக்க பூசைக்கு நேரம் கொடுக்கப்பட்டது.

மாலை 6.00 மணி…..

வண்ணக் கனவுகளோடும்….. நீண்ட பிரிவுக்கு பின் உறவுகளை சந்திக்கும் ஆர்வத்தோடும்….. பழைய நினைவுகளை சுமந்தபடி வந்தவனுக்கு அள்ள அள்ளக் குறையாத அன்பைத் தர ஒரு குடும்பமும், உறவுகளாக உரிமை பாராட்ட 16-ஆம் காம்பவுண்ட் மக்களும், அவனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வசந்தமாக்க அழகான காதலியும் இருக்க மரணம் அவர்களை முந்திக் கொண்டு அவனை மாலையிட்டு அழைத்து சென்றது. அந்தோணியார் கோயிலில் வைத்து அவனது இறுதிபலி நிறைவேற…… ’சென்று வா….. கிறுத்தவனே’ என மலர்கள் தூவி…. மக்கள் வெள்ளம் அவனைப் பற்றி பரிதாபமாகவும், பெருமையாகவும் பேசிக் கொண்டே பின் தொடர அவனது தாயும், தந்தையும் புதைக்கப்பட்ட இடம் மீண்டும் தோண்டப்பட்டு இருந்தது. கல்லறையில் வைத்து…. செபங்கள் முனங்கி அவனது கையில் ஜெபமாலை அணிவித்து, ஓடி-கோலன் ஊற்றப்பட….. வாழ்வின் வாசம் மறுக்கப்பட்டவன் மண்ணின் மடியில் புதைக்கப்பட்டான்.

2010 ஆகஸ்ட்,1…..

அதிகாலை மணி 5.01….

ஜொஸியம்மே தன் பேரன் பிரவீண் தனக்கு எடுத்துக் கொடுத்திருந்த பட்டுப்புடவையை அணிந்தபடி கலையாத் துயிலில் கலந்திருந்தாள்….. ஸ்வீட்டி தூக்கம் வராமல் தன் வயிற்றை தடவியபடி காத்திருக்க துவங்கினாள்……


.......நிறைந்தது.

வியாழன், 3 மே, 2012

16-ஆம் காம்பவுண்ட்....13.



31, ஜூலை 2010…………

அந்த நாளின் விடியல் மிக இயல்பாகவே இருந்தது. ஜொஸியம்மே வழக்கம் போல் 5.00மணிக்கு எழுந்தாள். காலை பணிகளை முடித்துவிட்டு காபி லோட்டாவோடு அமர்ந்து ஜெபமாலை உருட்டத் துவங்கினாள். அரைமணி நேரம் கழிந்ததும் கோயிலுக்கு செல்ல கிளம்பினாள். அங்கே படுத்துக் தூங்கிக் கொண்டிருந்த பிரவீணின் கைலி விலகி இடுப்புக்கு மேல் இருந்தது. அவள் அவனது கைலையை சரியாக்கி விட்டு….. போர்வையையும் அவன் மேல் போர்த்தி விட்டு கோயிலுக்கு இரண்டாம் பூசை காண சென்றாள்……

ஸ்வீட்டி காலையில் எழுந்து திரியாத்திரைக்கு கிளம்பிவிட்டிருந்தாள். அவளுக்கு 6.15 மணிக்கு அலாய்சியஸ் பள்ளியிலிருந்து திரியாத்திரை ஆரம்பமாகும். பிரவீண் தன்னை அழைத்து செல்ல வருவான் என எண்ணியவள் அவன் எழுந்திருக்காததைக் கண்டு காலையிலேயே உஷ்ணமானாள்…… சரி!!! வந்து பார்த்துக் கொள்ளலாம் என எண்ணியவளாய் தன் தந்தை ஜோசப்புடன் கிளம்பிச் சென்றாள்.

ஒருவழியாய் ஒன்பது மணிக்கு மேல் எழுந்தான் பிரவீண்….. அவன் எழுந்தவுடன் ஸ்வீட்டி முந்தைய நாள் திரியாத்திரைக்கு அழைத்து செல்ல சொன்னது நினைவுக்கு வந்தது. இப்படி அடித்து போட்டது போல் அவள் சொன்னதைப் பற்றிக் கவலைப்படாமல் தூங்கியதை எண்ணி தன்னையே திட்டிக்கொண்டான். ‘சரி!!! இன்று முழுக்க ஸ்வீட்டியின் கோபப் பார்வைக்கு தான் ஆளாக வேண்டுமே என எண்ணியபடி இருந்தான்….’

அதற்குள் அவனை அழைத்துப் போக ராஜாவும், ரீகனும் வந்தார்கள். அவனுக்கு அவர்களிடம் மறுப்பு சொல்ல வழியின்றி அவர்களது வற்புறுத்தலால் வருவதற்கு ஒப்புக் கொண்டான். ஒருவழியாய் ஜொஸியம்மேவிடம் சென்று தான் அவர்களோடு படத்துக்கு செல்வதாய் சொல்லிவிட்டு கிளம்பினான்.

மூன்று பைக்குகளில்…… மொத்தம் ஆறு பேராக….. ஏரலை நோக்கி குளிப்பதற்கு விரைந்தார்கள்…..

காலைச் சூரியன் இளம் வெயிலாய் ஒளிர்ந்து கொண்டிருந்தான். முத்தையாபுரம் தாண்டியதிலிருந்து அவர்களில் பிரவீணையும், சாமையும் தவிர அனைவருமே வாய்ப்பு கிடைத்த இடங்களிலெல்லாம் வண்டிகளை நிறுத்தி முந்தைய தினமே வாங்கி கலந்து வைத்திருந்த சரக்குகளை காலி செய்தபடியே உற்சாகமாய் சென்று கொண்டிருந்தார்கள்.

அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அன்று பிரவீண் திடமாய் குடிக்க மறுத்துவிட்டான். அவர்கள் நிறுத்தி நிறுத்தி சென்றதால் ஏரலை சென்றடைய ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகியிருந்தது. ஒருவழியாய் ஆற்றை வந்து அடைந்தவர்கள்……. அங்கேயும் ஒரு பெக்கை போட்டுவிட்டு குதூகலமாய் ஆற்றில் இறங்கி குளிக்கத்துவங்கினர்..;… 

“என்னல மாப்ள திடீர்னு சாமியாராயிட்ட?”-சாமி.

“ஏ மயிரு ஒன்னயெல்லாம் மனசன்னு மதிச்சு ஒருத்தன் பொண்ணு கொடுத்திருக்கான் பாரு அவன சொல்லனும்ல…… கல்யாணத்த முடிச்சிட்டு இப்புடி குடிச்சிட்டு அலையிறியல…..”- பிரவீண்.

“மாப்ள சாமி…… அன்னைக்கு இவன பாக்க போனப்பவும் உன்னப் பத்தி பேசும் போது இதே மாறி கேவலமாத்தான்ல சொன்னான்….. “-ரீகன்.

“விடுல நம்ம மாப்ள தான….”

“எல மயிரு….. அவன் அப்ப உன்னப் பத்தி அப்படி சொல்லும் போது கூட நான் எவ்வளவு பெருமையா உன்னய பத்தி சொன்னேன் தெரியுமா?”

”அப்படி என்னல சொன்னே?”-அப்பாவியாய் சாமி.

“நீ இப்படி மோசமா பேசுறத சாமிகேட்டா நாண்டிட்டு செத்திருவாம்னு் உன்னப் பத்தி பெருமையா ஒரு கவரிமான் ரேஞ்சுல சொல்லிவச்சா….. நீ மாப்ள தான்ல….ன்னு நக்கிட்டு அலையிற”

“எல அவன போட்டு ஏன் நோண்டிக்கிட்டு….. விடுல ரீகன்”- ராஜூ.

”நம்ம எல்லாம் இப்படி ஒண்ணா வெளியே வந்து எவ்வளவு நாளாச்சு என்ன மாப்ள?”- சாமி.

“முதல்ல பிரவீண் தான் கப்பலுக்கு போனான்….. அப்புறம் ராஜா சிங்கப்பூருக்கு…. இவன் பிரேம் இப்ப கூட வர முடியாதுண்ட்டான்….. பொறவு எங்கல ஒண்ணா போவ?”- ரீகன்.

“நானும் வந்ததுல இருந்து பாக்கேன் நம்ம காம்பவுண்டே ரொம்ப மாறிப்போச்சேல? பழைய ஆள்க நிறைய பேர காணோமே? எல்லாம் புதுசு புதுச்சால்ல தெரியுறாங்க?”-பிரவீண்.

“பெரிய காம்பவுண்ட்ல தான் முதல்ல ஒண்ணு ரெண்டா காலி பண்ண ஆரம்பிச்சாங்க….. இந்த நம்ம சாமி வீட்ல….. எங்க வீட்ல…. அப்புறம் நம்ம கிறஸ்டோபர் அண்ணன் ஞாபகம் இருக்கா? அதான் எஸ்தர் பாட்டி வீட்ல….. இப்படியே ஒவ்வொண்ணா வெளியில போக ஆரம்பிச்சாங்க…..”-சாம்.

“கிறிஸ்டோபர் அண்ணன்…… எங்கல இருக்காரு இப்போ…..? நாமெல்லாம் முன்னாடி பெரிய காம்பவுண்டே கெதின்னு விளாண்டுகிட்டே கெடப்போம்….பெட் மேட்சு அதுஇதுன்னு எவ்ளோ ஜாலியா இருக்கும்….. அப்பல்லாம் கிறிஸ்டோபர் அண்ணன்னா மலைப்பா இருக்கும்….. அவரு செகண்ட்ஸ் டீமில இருந்தாரு என்ன?”-பிரவீண்.

“மறக்க முடியுமா மாப்ள….. எல உனக்கு ஞாபகமிருக்கு இப்ப நம்ம சாம் வீடு இருக்குற எடத்த கொடுக்காப்புளி காம்பவுண்டின்னு சொல்வோமே அங்க ஒரு பெட் மேட்ச் நடந்து செம ரகளையா இருந்திச்சே….?”-ராஜா.

“பிரவீண் தாம்ல அன்னைக்கு கலக்கி எடுத்துட்டானே….. பெரிய தெரு பயலுவளுக்கு நம்ம நாளே ஒரு எளக்காரமாத்தான் அலையிவானுங்க….. அன்னைக்கு மேச்சுல பிரவீண் குடுத்த குடுப்புல அதுக்கு அப்புறம் நம்ம பக்கமே அவனுவ வர பயந்திட்டான்வள்ள….”-சாமி.

“கோலிக்கா, பம்பரம், சில்லி பந்து, எறிபந்துன்னு காம்பவுண்டே நம்மளால கலகலக்கும்….. இப்ப பாரு நம்ம காம்பவுண்டே ’ஓ’ன்னு கெடக்கு…..”-ராஜா.

”ஏம்ல….. இப்ப பொடிசுக கொறஞ்சி போச்சா?”-பிரவீண்.

“எல…. இப்ப எங்கல புள்ளையல வெளியில விளாட விடுறாங்க? எல்லாம் வீட்டுக்குள்ளேயே…. ரெஸ்லிங்….. ப்ளே ஸ்டேஷ்ன்னு ஆயிப் போச்சா…..முன்ன மாறி இல்லாம புள்ளையிலு விளாட்டுலாம் கொறஞ்சு போச்சு….”-ரீகன்.

“நாம அப்படி அன்னைக்கு ஒண்ணா விளாண்டு சுத்துன பழக்கத்துக்கு தான ஆளாலுக்கு ஒரு பக்கமிருந்தாலும்….. இப்பவும் இத்தன வருசங் கழிச்சும் இப்படி ஒண்ணா இருக்க முடியுது….. என்ன மாப்ள?”-ராஜா.

அவர்கள் தங்கள் பழைய நினைவுகளை அசைபோட்டபடி ஆற்றில் மிதந்து கொண்டிருந்தார்கள்.

பிரவீண் “எல இப்படியே நின்ன எடத்துலயே நின்னு பேசுறதுக்கா இவ்ளோ தூரம் வந்தோம்? அக்கறை வரைக்கு நீந்திப் போயிட்டு வருவோம்ல….”

“என்னய போட்டுத் தள்ளனும்னு முடிவு பண்ணிட்டியோல…..? நானே நீச்சல் தெரியாம மெயிண்டேன் பண்ணிகிட்டு இருக்கேன்….. இதுல அக்கறைக்கு எங்க போவ…..?”-சாமி.

“நீச்சல் தெரியாதவம்லான் ஏம்மல ஆத்துக்கு குளிக்க வாரீங்க? கழுத வயசாச்சு நீச்ச தெரியலன்னு சொல்ல வெக்கமா இல்லயால?”

“அட மயிரு…. நீ கப்பல் வேல பாக்குறவன் உனக்கு நீச்சல் தெரிஞ்சிருக்கனும்…. மளிக கடை வச்சிருக்கவனுக்கு எதுக்குல நீச்சல் தெரியனும்…..?”-சாமி.

”வாயிலயே நீச்சல் அடிக்கிறதுல ஒண்ண அடிக்க ஆளே இல்லல”-ராஜு

“சரி….. நீச்சல் தெரிஞ்சவம்லா வாங்கல அக்கறைக்கு போயிட்டு யார் முதல்ல வர்றாங்கன்னு பாப்போம்…” பிரவீண்.

“நான் ரெடி மாப்ள….”சாம்.

“எல நீங்க ரெண்டு பேருந்தான் சரக்கு அடிக்கல அதனால நீங்களே நீந்திட்டு வாங்கல”-ரீகன்.

பிரவீணும், சாமும் அக்கறை நோக்கி நீந்தத் துவங்கினார்கள்……ஆரம்பத்தில் இருவரும் ஒன்றுபோல் நீந்துவது போல் தெரிந்தாலும் பிரவீண் சாமைக் காட்டிலும் அதிகவேகமாய் நீந்த…. பிரவீணே அக்கறைக்கு முதலில் சென்று சேர்ந்தான். அக்கறை சென்று கரையேறியவன் சாமிற்காக காத்திருந்தான். சாமும் ஒருவழியாய் ஒரு சில நிமிடங்களில் கரை வந்து சேர்ந்தான். அங்கே நால்வரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும் இவர்களுக்காக பார்த்துக் கொண்டும் இருந்தார்கள்.

மீண்டும் அக்கறையிலிருந்து சாமும், பிரவீணும் ஒன்றாக நீந்த துவங்கினார்கள்….. இம்முறை அவ்வப்போது பிரவீண் தண்ணீருக்குள் முங்கிய வண்ணம் உள்நீச்சலாய் வந்து கொண்டும்…. இடையில் நின்று இளைப்பாறிக் கொண்டும் வந்தான். சாம் இம்முறை அவனைக் காட்டிலும் வேகமாய் அக்கறை வந்து சேர்ந்தான். சாம் அவர்களை நெருங்கிய பின்னே அவர்கள் நால்வரும் அவனை கவனித்தார்கள்.

சாம்” என்னமோ சொன்னானே….. யார் முதல்ல வர்றாங்கன்னு….. எங்கல அவன…?”

“ஒங்கூடத்தாம்ல வந்திட்டு இருந்தான்…. நீ இங்க வந்து அவன எங்கன்னா எப்புடி?”-ரீகன்.

“மாப்ளைக்கு மூச்சு வாங்கிருச்சு போல…. பெரிய மயிரு மாறி உள்நீச்சல் போட்டு வந்தாம்ல….எங்கையாவது நிப்பான்”- என சாம் சொல்லவும் அவர்கள் கொஞ்சம் சமாதானமாகி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவ்வப்போது பேசிக்கொண்டே அவன் வருகிறானா என்று அக்கறை நோக்கியும் பார்த்துக் கொண்டார்கள். பிரவீணின் தலையே தென்படவில்லை. சாம் வந்து பத்து நிமிடத்திற்கு மேலாகியும் பிரவீண் வராத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் அவனை தேடி ஆரம்பித்தார்கள்.

“எல மாப்ள…. உங்கூடத்தான வந்தான்? இல்ல அக்கறையிலேயே நின்னுட்டானா?”-ராஜா.

“எல நான் தான் சொல்றம்ல…. எனக்கு முன்னால அவன் தான் முதல்ல அங்க இருந்து உள்நீச்சல் போட்டபடி நீந்துனான்….” சாமிற்கு மெல்ல படபடப்பு அதிகரித்தது.

“மாப்ள பைக்க எடுத்திட்டு அக்கறைக்கு போயி அவன் நிக்கானான்னு நான் பாத்திட்டு வர்றம்ல”-ராஜு

“எல நானும் வாரேன்…”-சாமி.

“சாம் நீயும் ராஜாவும்…. அக்கறைக்கு நீந்தி போய் பாருங்கல…. நான் எங்கன பாக்குறேன்”-ரீகன்.

திசைக்கொரு பக்கமாய் அவனை தேடத் துவங்கினார்கள். அரைமணி நேரத்திற்கு மேலாகியும் அவன் தென்படாததால் அவர்களுக்குள் பதட்டம் அதிகரித்தது.

“மாப்ள….. வேற வழி இல்ல ஒண்ணும் யோசிக்காம பக்கத்துல போலிஸ் ஸ்டேஷன்ல சொல்லி….. அவங்களையும் தேடச் சொல்லுவோம்ல”-ரீகன்.

“மடக் கூதிமவன் மாறி பேசாத நாம தண்ணி அடிச்சிருக்கோம்ல”-ராஜா.

“தண்ணிதான அடிச்சோம் கொலையா செஞ்சோம்….. நீ சும்மா இருல யாரு எங்கூட வாரா?”-ரீகன்.

சாமும் ரீகன் சொல்வதே சரியென்று சொல்ல. ராஜாவையும், ராஜூவையும் அங்கே நிற்க செய்துவிட்டு மூவரும் ஏரல் காவல் நிலையத்திற்கு சென்று படபடப்போடு விஷயத்தை விவரித்தனர். அங்கே அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அனுப்பினர். ஒருவழியாய்  இரண்டு மூன்று தீயணைப்பு வீரர்களும் அவர்களுடன் ஆற்றிற்கு சென்றனர்.

“ஏம்ல பொத்திக்கிட்டு ஊர்ல கெடக்க முடியலியோ”

“சனி….ஞாயிறு ஆச்சுன்னா….. தண்ணியடிச்சுட்டு இங்க குளிக்க வந்து எங்க தாலிய அறுக்க வேண்டியது”

பதினைந்து இருபது நிமிட தேடலுக்கு பின்னும் பிரவீணை கண்டுபிடிக்க முடியாததால்….. மீண்டும் சாமிடம் அவர்கள் அக்கறையில் எங்கு கரையேறினார்கள்? அவன் எதுவரை சாமோடு ஒன்றாக நீந்தி வந்தான்? கடைசியில் அவனை எந்தப் பக்கத்தில் சாம் பார்த்தான்? என கேள்விகளால் துளைத்து எடுத்து மீண்டும் அவனைத் தேடி ஆற்றில் இறங்கினார்கள்.

இதற்குள் ராஜா பதற்றமடைந்தவனாய் 16-ஆம் காம்பவுண்டில் பிரவீணின் வீட்டிற்கும் மற்றவர்கள் வீட்டிற்கும் தகவல் கொடுத்திருந்தான். ஜோசப், ஜெயம்மாமா, டேவிட், கனியாச்சி வீட்டுப் பிள்ளைகள் என ஒரு பெரும் பட்டாளம் தூத்துக்குடியிலிருந்து ஏரலை நோக்கி விரைந்து வர ஆரம்பித்தனர்.

ஒருமணி நேரத்திற்கும் மேலான  தேடலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்களில் ஒருவர் மற்றவர்களுக்கு குரல் கொடுத்தார். அங்கே அவர்கள் சென்று பார்த்த போது கால்கள் செடியில் சிக்கிய வாறு தண்ணீருக்குள் விரைத்தபடி இருந்தான் பிரவீண்…..

......தொடரும்.

செவ்வாய், 1 மே, 2012

16-ஆம் காம்பவுண்ட்.....12.





2010 ஜூலை 30….

அன்று ஸ்வீட்டி தன் கல்லூரிக்கு சென்றிருந்தாள்….. அங்கு ரொமிளாவிடம் இரண்டு நாட்களும் தனக்கு நடந்த எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவு ஏதுமின்றி சொல்லிக்கொண்டிருந்தாள். ரொமிளாவும் ஸ்வீட்டியை சில விஷயங்களுக்கு கடிந்து கொண்டாலும்….. அவனுடனான நெருக்கத்தைப் பற்றி ஸ்வீட்டி சொன்ன போது ரொமிளாவுக்குள் கொஞ்சம் பொறாமை எட்டிப் பார்க்கவே செய்தது. ஆனால் அந்த எண்ணமே தன் நட்புக்கு செய்யும் துரோகம் என எண்ணியவளாய் உடனே அதை மாற்றிக் கொண்டு “உங்க மச்சான் தான்னாலும் கொஞ்சம் பாத்தே நடந்துக்கோயே….. எதுவும் அவசரப் பட்டுறாத…..” என எச்சரிக்கையும் செய்தாள்.

ரொமிளா அப்படி பேசியது ஸ்வீட்டிக்கு பிடிக்கவில்லை. தான் எல்லாவற்றையும் அவளிடம் அவசரப்பட்டு ஒப்புவித்து விட்டோமோ எனவும் அவளுக்கு எண்ணத் தோன்றியது. ஆனாலும் ஸ்வீட்டி அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஏதேதோ சிந்தனை வயப்பட்டவளாகவே அன்று முழுக்க கல்லூரியில் இருந்தாள். வீட்டிற்கு போகவேண்டும் என்பதற்காக மதியம் மணி 2.00 எப்போது ஆகும்? என ஒவ்வொரு அரைமணிக்கும் ஒருமுறை நேரத்தை பார்த்த வண்ணமே வீற்றிருந்தாள். அவள் எண்ணமெல்லாம் பிரவீணைப் பற்றியதாகவே இருந்தது.

மதியம் மணி 2.00…..

வழக்கம் போல் தன்னை அழைக்க தன் தந்தை ஜோசப்தான் வருவார் என சென்றவளுக்கு அங்கே ஆச்சர்யமாய் பிரவீண் அவளுக்காக காத்திருந்தது சொல்லொண்ணா இன்பத்தை அளித்தது. தனது தோழி ரொமிளாவுடன் வெளியே வந்தவள்….. ரொமிளாவுக்கு பிரவீணை அறிமுகம் செய்து வைத்தாள். பிரவீணும் சம்பிரதாயமாக சிரித்து வைத்தான். ஓரிரு நிமிடங்கள் நின்று பேசிய ரொமிளா கிளம்பியவுடன் ஸ்வீட்டி உற்சாகமாக பிரவீணோடு வண்டியில் ஏறியபடி….”என்ன மச்சான் ஆச்சர்யமா இருக்கு இன்னக்கு நீங்களே என்னைய கூப்பிட வந்திட்டீங்க?”

“மாமாவும் அத்தையும் புன்னக்காயலுக்கு ஒரு அடக்க வீட்டுக்கு போயிருக்காங்க…. அதான் நான் கூப்புட வந்தேன்…”

“அடக்க வீடா யாரு?”

“யாரோ உங்க அம்மாவோட பெரியம்மா மகளாம் அங்க கெட்டி குடுத்திருந்தாங்களாமே அவுகதான் இறந்து போனதாம்….”

“யாரு லூர்து பெரியம்மாவா?”

“ஆமோ அப்படித்தான் எதுவோ சொன்ன மாறி இருந்திச்சு….. ஏன் உனக்கு ரொம்ப தெரியுமோ?”

“இது என்ன கேள்வி எங்க பெரியம்மாவ எனக்கு தெரியாதா?”

“அவுகன்னா உனக்கு ரொம்ப பிரியமோ?”

“ஏன் உங்ககிட்ட மட்டுந்தான் பிரியமா இருக்கனுமா என்ன?”

அவன் சிரித்துக் கொண்டான். இருவரும் ஏதேதோ பேசியபடி வீடு வந்து சேர்ந்தனர். ஜொஸியம்மே அவர்களுக்காக வாசலிலே அமர்ந்து காத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் வீட்டுக்குள் வந்ததும்….

“ஏ!!!! புள்ளையளா…. ரெண்டு பேரும் முஞ்சிய கழுவிட்டு சாப்பிடுங்க ஆச்சி செத்த இங்க கனியாச்சி வீடு வரைக்கும் போயிட்டு வாரேன்.”

“என்ன ஆச்சி இந்நேரத்துல அங்க போறீங்க? சாப்புட்டீகளா?”

“சாப்புட்டம்யா….. அங்க சூட்டாண்ணே (ஜூடு கனியாச்சியின் கடைசி மகன்) பொண்டாட்டிக்கு ஏதோ வயிறு வலி கண்ட மாறியிருக்காம்….. நான் கொஞ்சம் கூடமாட இருந்தா அவளுக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்…. ஒரு எட்டுல போயிட்டு வந்திர்றேன்….. எம்மா ஸ்வீட்டி மச்சானுக்கு சாப்பாட்ட போட்டு கவனிச்சுக்கம்மா….” என்றபடி அவள் கனியாச்சி வீட்டை நோக்கி விரைந்தாள்.

”மச்சான் நீங்க முதல்ல சாப்புட உக்காருங்க”

“ஏன் நீ எங்க போற?”

“கசகசன்னு இருக்கு மச்சான் நான் குளிச்சிட்டு சாப்புடுறேன்”

“சரி…. நீ குளிச்சிட்டு வா…. பெறவு சாப்பிடுவோம்”

“சொன்னா கேளுங்க மச்சான்”

“நான் சொல்றத நீ முதல்ல கேளு போயி குளிச்சிட்டு வாடி….”

“இந்த அதிகாரமெல்லாம் எங்கிட்ட வேண்டாம்….”

“சரி….டி போ….”

அவள் தன் வீட்டிற்கு குளிக்க சென்றாள். அரைமணி நேரத்துக்கும் மேலாகியும் அவள் வரவில்லை என்பதால் காத்துக் கொண்டிருக்க பொறுமையின்றி அவன் அவள் வீட்டுக் கதவை தட்டினான். அவள் உள்ளிருந்து பேசியது அவனுக்கு கேட்கவில்லை. அவன் தொடர்ந்து தட்டிய வண்ணமிருந்தான். உள்ளிருந்தபடியே கத்திக் கொண்டிருந்தவள் அவன் தொடர்ந்து தட்டுவதை நிறுத்தாததாள்…… டாப்ஸை மட்டும் மாட்டிக் கொண்டு வேகமாக வந்து கொண்டியை இழுத்து கதவை திறந்து விட்டபடி தன் அறைக்குள்….. அவன் வருவதற்குள் சென்றுவிடலாம் என எத்தனித்தவளின் கால் கட்டைவிரல் கதவில் மோத….. வலியால் துடித்துப் போனாள். அவன் உள்ளே சென்றதும் அவள் வலியால் துடிப்பதை கண்டவுடன்….. பதறிப்போய் அவளருகே சென்றபடி “என்ன ஆச்சுயே….. என்ன ஆச்சு?”

“கால் பெருவெரல…. கதவுல மோதிட்டேன் மச்சான்…..”

“எங்க காட்டுடி?”

அவளும் தன்னிலை மறந்தவளாய் வலியில் தன் கால்விரலை காட்ட காலை அவனை நோக்கி திருப்பிக் காட்டினாள். குனிந்து பார்த்தான்……

அங்கே மெழுகில் மொழுகிய செவ்வாழை தண்டாட்டம் அவளது கால்கள் பளபளத்துக் கொண்டிருந்தது. அத்தனை நெருக்கமாய் ஒரு பெண்ணை….. அதுவும் அவன் காதலியை அப்படி ஒரு அரை நிர்வாணக் கோலத்தில் கண்டவுடன் தன்னிலை மறந்தவனாய்…… அவள் விரல் நீவ நீண்ட கைகள் அவள் தொடையில் படரத் துவங்கியது.

அவன் கைகள் அவள் கால்களை தீண்டியவுடன்…… வலியின் சுவடுகள் மறைந்து காமத்தின் ரேகைகள் அவளுக்குள்ளும் எழுச்சி கொண்டது. பெண்களின் கண்களில் விழுந்தவர்களே மீண்டதில்லை என்னும் போது கால்களில் விழுந்தவன் நிலை?

விழுந்தவன் எழுந்தான்…… எழுந்தவன் அணைந்தான்…… அணைந்தவன் மீண்டும் விழுந்தான் அவளோடு…. எழுச்சியும் வீழ்ச்சியுமாய் அங்கே ஒரு உன்னத இயக்கம் தோன்றியது. இதழியல் மோதல்…. ஈருடல் சேர்க்கை….. ஓருடல் இயக்கத்தின் தொடர் முயற்சியால் கனலில் புனல் பாய்ந்தது. அவள் வெந்து தனிந்தாள்….. அவன் வீழ்ந்து அணைந்தான். இருவரும் களைத்து பிரிந்த கணத்தின் நீட்சியில் காமன் மீண்டும் ஆட்சிக்கு அங்கு வந்தான்……

அங்கே நொடிகள் புனர….. நிமிடம் பிறந்தது….. நிமிடங்கள் புனர நாழிகைகள் உருக்கொண்டது….. ஒருவழியாய் இருவரும் காமன் கைபிடியிலிருந்து விடுபட்டபோது முழுதாய் ஒன்னரை மணி நேரம் கடந்திருந்தது. நேரம் பாராமல் கூடியவர்கள் நேரம் பார்த்து விழித்துப் பிரிந்தார்கள்.

பிரவீணுக்கு சொல்லொண்ணா உணர்வுகளுக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்தான். ’தான் அவசரப்பட்டு விட்டேனோ?’ என தோன்றிய மறுகணம் ’நாம் தானே அவளை கெட்டிக்கப் போவது? இதில் தவறென்ன?’ என மாற்றி ஆறுதல் சொல்லிக் கொண்டான். ‘என்னவிருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னால் இப்படி அவசரப் பட்டுடிருக்க கூடாதோ?’ என தோன்றிய போதே ‘ஓரிரு மாதங்களில்….. அவள் படிப்பை முடிக்கும் முன்பே கூட கல்யாணம் செய்து வைக்க சொன்னாள் மறுத்தா விடுவார்கள்?’ என எண்ணங்களால் மாற்றி மாற்றி தவித்துக் கொண்டிருந்தான்.

ஸ்வீட்டியோ எந்த கவலையுமின்றி உற்சாகமாய் இருந்தாள். அவளுக்குள் முந்தைய தினம் ஏதோ ஒரு மூலையில் காரணமின்றி அழுத்திக் கொண்டிருந்த பயம் கூட இப்போது போன இடம் தெரியாமல் மறைந்து விட்டிருந்தது. அவள் எந்த குழப்பமும் இன்றி மிகத்தெளிவாய் இருந்தாள்.

மாலை 4.30 மணி……

பிரவீண் தன் பாட்டி வீட்டில் சிந்தனை வயப்பட்டவனாய் அமர்ந்திருந்தான். அவனுக்குள் இன்னும் மனக்கடல் ஓய்ந்திருக்கவில்லை. ஸ்வீட்டி உற்சாகமாய் அங்கு வந்தவள் “என்ன மச்சான்….. ரொம்ப பீலிங்கா இருக்கீங்க?” என்றபடி அவன் காதருகே குனிந்து “யாராவது ரேப் பண்ணிட்டாங்களா?” என கிண்டலடித்தாள்.

“உன்னால எப்படியே இப்புடி இருக்க முடியுது?”

“என்ன எப்புடி இருக்க முடியுது?”

“இவ்வளவு சகஜமா எப்படியே?”

“மச்சான்….. எப்படினாலும் நமக்கு கல்யாணம் முடிஞ்சிட்ட பொறவு இதெல்லாம் நடக்குறது தான்….. அது இப்பவே நடந்திருச்சு அவ்வளவுதான்…..”

“நீ சாதாரணமா சொல்ற…… நாளைக்கே ஒன்ணுகெடக்க ஒண்ணு ஆயி….. நாந்தான…. மாமா அத்த முகத்துல முழிக்கனும்?”

“அதுக்காக வாடைகக்கா மொகம் வாங்க முடியும்?”

அவள் ஏதேதோ பேசி அவனை இயல்புக்கு திரும்ப செய்து கொண்டிருந்தாள். ஜொஸியம்மே வீடு வந்து சேர்ந்தாள். கிச்சனுக்குள் போனவள் எல்லாம் வைத்தது வைத்தபடி இருக்க…..

“ஏ!!! புள்ளையிளா…… என்ன எல்லாம் அப்படியே இருக்கு ரெண்டு பேரும் சாப்பிடளையா?”

“பசிக்கல ஆச்சி….. பேசிக்கிட்டே இருந்தோம் நேர போனது தெரியல” என்றான் பிரவீண்.

”என்ன நேரம் போனது தெரியலங்கிறீரு….? சாப்புடாம கொள்ளாம அப்படியென்ன மாய சொக்குபொடி போட்டா ஒம் மாமன் மவ?”

“ஆமோ….. அங்க போனீங்களே என்ன ஆச்சு?” என லாவகமாய் பேச்சை மாற்றினான். வழக்கம்போல சூட்டு வலிதான்….. இன்னும் ரெண்டு நா பாப்போம்னு டாக்டரம்மா சொல்லிட்டாக….”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பிரவீணை தேடி அவனது நண்பர்கள் ரீகனும், சாமும் வந்தார்கள். அவனுக்கும் அங்கிருந்து சற்று நேரம் அவர்களோடு சென்று வந்தால் நன்றாய் இருக்கும் என தோன்றியதால் வேகமாய் கிளம்பிச் சென்றான்.

வழக்கம் போல் மோகன் அண்ணன் கடை…..

“எல இப்படி வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்கியே நாங்க வந்தாதான் வெளிய வருவன்னு இருக்கியோ?”-ரீகன்

“அதெல்லா(ம்) இல்லல…… நான் வந்தே நாலு அஞ்சு நாள்தான் ஆவுது….. இங்க வீட்லையே நேரம் சரியா போவுது என்ன செய்ய சொல்ற?”

“அதுசரி!!! உனக்கென்னப்பா…… லட்டு மாறி மாமன் மவ இருக்கா….. நாளு பூரா அவள பாத்துக்கிட்டே கெடப்ப…… எங்களுக்கு அப்படியா?”-ரீகன்.

“உனக்கு வேற பேச்சே கெடையாதால?”

“சரி!!! விடு தேவையில்லாதத போட்டு பேசாம அவன் கிட்ட விஷயத்த சொல்லு?”-என ரீகனைப் பார்த்து சொன்னான் சாம்.

“என்னல விஷயம்?”-பிரவீண்.

“அவஞ் சொல்லுவான் இரு”-சாம்.

பிரவீண் ரீகனை ஏறிடவும்….. “மாப்ள நாளக்கி சனிக்கிழம பயலுவ எல்லாருக்கும் லீவு….. நீ வேற வந்திருக்க…… நாம காலையில ஒம்போது பத்து மணி போல ஆத்தூருக்கோ ஏரலுக்கோ போய்….. நல்லா குடிச்சிட்டு குளிச்சிட்டு மதியம் போல வந்திரலாம்ல….”

“திடீர்னு சொன்னா எப்புடில? வீட்ல ஆச்சிகிட்ட சொல்ல வேண்டாமா?”

“ஆம உங்க ஆச்சிகிட்ட அத்தகிட்ட எல்லார்டையும் சொல்லிட்டு பெர்மிஷன் வாங்கிட்டு வால….. பேசுறான் பாரு கேனத்தனமா…. எதாவது சினிமா….. கினிமா போயிட்டு வாரேன்னு சொல்லிட்டு வருவியா அதவுட்டிட்டு….”

பிரவிணுக்கு ஏனோ அவர்களுடன் செல்ல விருப்பம் இருக்கவில்லை. ஆனாலும் அவர்களிடம் அப்போது முஞ்சியில் அடித்த மாதிரி தான் வரவிரும்பவில்லை என சொல்லவும் பிரியமில்லை. எவ்வளவோ பிடிகொடுக்காமல பேசி சமாளித்துப் பார்த்தான் அவர்கள் கேட்பதாய் தெரியவில்லை. சரி!!!! நாளை பார்த்துக் கொள்ளலாம் என எண்ணியவாறு அவர்களுடன் பேசிவிட்டு வீட்டுக்குச் சென்றான்.

அவன் வீடு திரும்பிய போது அவனது மாமாவும், அத்தையும் வந்திருந்தனர். துக்க வீட்டு கதைகளையும், தன் அக்காளுக்கும் தனக்குமான நினைவுகளையும் சோபியா பிரவீணிடமும், ஜொஸியம்மேவிடமும் பகிர்ந்த வண்ணமிருந்தாள். அப்படியே பேச்சு வாக்கில் மறுநாள் மாலை குடும்பத்தோடு அனைவரும் மாதா கோவிலுக்கு செல்ல வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது ஸ்வீட்டி தனக்கு நாளை காலையில் கல்லூரியிலிருந்து திரியாத்திரை பூசை இருப்பதாக சொன்னாள். அவர்கள் கூடி உணவருந்த துவங்கிய போது ஸ்வீட்டி பிரவீணுக்கு மட்டும் கேட்கும் விதமாய் வந்து தன்னை நாளைக்கும் அவன் தான் திரியாத்திரை பூசைக்கு அழைத்து சென்று கூட்டிவர வேண்டும் என திடமாக கூறினாள்.

திருயாத்திரை….. என்பது தான் மருவி திரியாத்திரை என வழங்கப்பட்டு வருக்கிறது. அதற்கு புனித பயணம் என்று பொருள். பனிமயமாதா கோயிலின் திருவிழா காலங்களில் இப்படி ஒரு பழக்கமுண்டு….. தூத்துக்குடியில் உள்ள ஏனைய பங்குகளில் உள்ள சபைகளில் இருந்தும், கிறுத்தவ கல்வி நிறுவனங்களில் இருந்தும் திருவிழா நடக்கும் பத்து நாட்களில் ஏதேனும் ஒரு நாளின் பகல் பொழுதில் தமது பங்கிலிருந்தோ…… அல்லது கல்வி நிறுவனத்திலிருந்தோ திரியாத்திரையாக மக்கள் ஒன்று கூடி கிளம்பிச் சென்று பனிமய மாதாவிற்கு திருப்பலி நிறைவேற்றி வழிபட்டு வருவர்.

பிரவீணுக்கு அன்றைய இரவு அத்தனை நீளமானதாய் இருந்தது. அவனுக்கு தூக்கம் பிடிக்கவேயில்லை. தனது இத்தனை ஆண்டுகள் தவத்தை ஒருசில நொடிகளில் அவள் களவாடிச் சென்றதை எண்ணி தவித்துக் கொண்டிருந்தான். இன்னும் அவன் மேல் அவளது வாசனை படர்ந்து இருப்பதாகவே தோன்றியது. தலையனைகள் திடீரென்று அவளாய் மாறிவிடாதா? என எண்ணிக் கொண்டான். ஒருவித பரவசித்திலே மிதந்து கொண்டிருந்தான். அவனது ஆண்மை விரைத்து அவனை படுத்திக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி எழுந்து குளியலறைக்குள் சென்று மதியம் அவளுடன் சல்லாபித்ததை எண்ணி எண்ணி சுய இன்பத்தில் திளைந்தான். விந்துகள் வெளியேறியவுடன் நிதானத்துக்கு வந்தவனாய்….. கொஞ்சம் கொஞ்சமாய் அயற்சி பரவ தூங்கலாணான்.
..........தொடரும்.