நிராகரிக்க முடியாத
ஆளுமையை
ஏற்கத் தயாரில்லாத சிறுமனங்கள்
அவமதிப்பின் மூலம்
நினைவுபடுத்திக் கொள்கின்றன அவரை
தங்களை அலைக்கழிக்கிற ஒரு பெயரை
முடிகிற இடங்களில் எல்லாம்
நீக்கிவிட்ட நிறைவோடு
படுக்கைக்குச் செல்பவர்கள்
உறக்கத்தில் குறுக்கிடும்
அவரது பிம்பத்தின் முன் நடுங்கி எழுந்திருக்கின்றனர்
யுகங்களுக்குப் பின்னால் சென்று
சாத்திர சம்மதத்தோடு
நியாயப் படுத்தும் அவர்களது தீண்டாமையை
கால காலத்திற்குமாய்த் தகர்த்தெறிந்த
அவரது வாதத்தின் வெம்மையில்
பொசுங்கிய புத்தகங்களின்
அதே கருகிய வாசத்தோடு
தொடர்ந்து அச்சாகின்றன
திரிக்கப்பட்ட வரலாற்றின் பிரதிகள்
மரபணுக்குள் வேர் விட்டிருக்கும்
சாதிய ஆதிக்கத்தை
சமத்துவத்தின் மைந்தர்கள்
தத்துவ வாள் கொண்டு
சமருக்கு அழைப்பார்கள்
மனுவை விஞ்சும் அவனது
நவீன வாரிசுகள் உலவும் பெருவெளியில்
பிறந்து கொண்டே இருப்பார்கள்
மனுவைத் தோலுரிப்பவர்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக