31, ஜூலை 2010…………
அந்த நாளின் விடியல் மிக இயல்பாகவே இருந்தது. ஜொஸியம்மே வழக்கம்
போல் 5.00மணிக்கு எழுந்தாள். காலை பணிகளை முடித்துவிட்டு காபி லோட்டாவோடு அமர்ந்து
ஜெபமாலை உருட்டத் துவங்கினாள். அரைமணி நேரம் கழிந்ததும் கோயிலுக்கு செல்ல கிளம்பினாள்.
அங்கே படுத்துக் தூங்கிக் கொண்டிருந்த பிரவீணின் கைலி விலகி இடுப்புக்கு மேல் இருந்தது.
அவள் அவனது கைலையை சரியாக்கி விட்டு….. போர்வையையும் அவன் மேல் போர்த்தி விட்டு கோயிலுக்கு
இரண்டாம் பூசை காண சென்றாள்……
ஸ்வீட்டி காலையில் எழுந்து திரியாத்திரைக்கு கிளம்பிவிட்டிருந்தாள்.
அவளுக்கு 6.15 மணிக்கு அலாய்சியஸ் பள்ளியிலிருந்து திரியாத்திரை ஆரம்பமாகும். பிரவீண்
தன்னை அழைத்து செல்ல வருவான் என எண்ணியவள் அவன் எழுந்திருக்காததைக் கண்டு காலையிலேயே
உஷ்ணமானாள்…… சரி!!! வந்து பார்த்துக் கொள்ளலாம் என எண்ணியவளாய் தன் தந்தை ஜோசப்புடன்
கிளம்பிச் சென்றாள்.
ஒருவழியாய் ஒன்பது மணிக்கு மேல் எழுந்தான் பிரவீண்….. அவன் எழுந்தவுடன்
ஸ்வீட்டி முந்தைய நாள் திரியாத்திரைக்கு அழைத்து செல்ல சொன்னது நினைவுக்கு வந்தது.
இப்படி அடித்து போட்டது போல் அவள் சொன்னதைப் பற்றிக் கவலைப்படாமல் தூங்கியதை எண்ணி
தன்னையே திட்டிக்கொண்டான். ‘சரி!!! இன்று முழுக்க ஸ்வீட்டியின் கோபப் பார்வைக்கு தான்
ஆளாக வேண்டுமே என எண்ணியபடி இருந்தான்….’
அதற்குள் அவனை அழைத்துப் போக ராஜாவும், ரீகனும் வந்தார்கள்.
அவனுக்கு அவர்களிடம் மறுப்பு சொல்ல வழியின்றி அவர்களது வற்புறுத்தலால் வருவதற்கு ஒப்புக்
கொண்டான். ஒருவழியாய் ஜொஸியம்மேவிடம் சென்று தான் அவர்களோடு படத்துக்கு செல்வதாய் சொல்லிவிட்டு
கிளம்பினான்.
மூன்று பைக்குகளில்…… மொத்தம் ஆறு பேராக….. ஏரலை நோக்கி குளிப்பதற்கு
விரைந்தார்கள்…..
காலைச் சூரியன் இளம் வெயிலாய் ஒளிர்ந்து கொண்டிருந்தான். முத்தையாபுரம்
தாண்டியதிலிருந்து அவர்களில் பிரவீணையும், சாமையும் தவிர அனைவருமே வாய்ப்பு கிடைத்த
இடங்களிலெல்லாம் வண்டிகளை நிறுத்தி முந்தைய தினமே வாங்கி கலந்து வைத்திருந்த சரக்குகளை
காலி செய்தபடியே உற்சாகமாய் சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அன்று பிரவீண் திடமாய் குடிக்க
மறுத்துவிட்டான். அவர்கள் நிறுத்தி நிறுத்தி சென்றதால் ஏரலை சென்றடைய ஒன்றரை மணி நேரத்திற்கும்
மேலாகியிருந்தது. ஒருவழியாய் ஆற்றை வந்து அடைந்தவர்கள்……. அங்கேயும் ஒரு பெக்கை போட்டுவிட்டு
குதூகலமாய் ஆற்றில் இறங்கி குளிக்கத்துவங்கினர்..;…
“என்னல மாப்ள திடீர்னு சாமியாராயிட்ட?”-சாமி.
“ஏ மயிரு ஒன்னயெல்லாம் மனசன்னு மதிச்சு ஒருத்தன் பொண்ணு கொடுத்திருக்கான்
பாரு அவன சொல்லனும்ல…… கல்யாணத்த முடிச்சிட்டு இப்புடி குடிச்சிட்டு அலையிறியல…..”-
பிரவீண்.
“மாப்ள சாமி…… அன்னைக்கு இவன பாக்க போனப்பவும் உன்னப் பத்தி
பேசும் போது இதே மாறி கேவலமாத்தான்ல சொன்னான்….. “-ரீகன்.
“விடுல நம்ம மாப்ள தான….”
“எல மயிரு….. அவன் அப்ப உன்னப் பத்தி அப்படி சொல்லும் போது கூட
நான் எவ்வளவு பெருமையா உன்னய பத்தி சொன்னேன் தெரியுமா?”
”அப்படி என்னல சொன்னே?”-அப்பாவியாய் சாமி.
“நீ இப்படி மோசமா பேசுறத சாமிகேட்டா நாண்டிட்டு செத்திருவாம்னு்
உன்னப் பத்தி பெருமையா ஒரு கவரிமான் ரேஞ்சுல சொல்லிவச்சா….. நீ மாப்ள தான்ல….ன்னு நக்கிட்டு
அலையிற”
“எல அவன போட்டு ஏன் நோண்டிக்கிட்டு….. விடுல ரீகன்”- ராஜூ.
”நம்ம எல்லாம் இப்படி ஒண்ணா வெளியே வந்து எவ்வளவு நாளாச்சு என்ன
மாப்ள?”- சாமி.
“முதல்ல பிரவீண் தான் கப்பலுக்கு போனான்….. அப்புறம் ராஜா சிங்கப்பூருக்கு….
இவன் பிரேம் இப்ப கூட வர முடியாதுண்ட்டான்….. பொறவு எங்கல ஒண்ணா போவ?”- ரீகன்.
“நானும் வந்ததுல இருந்து பாக்கேன் நம்ம காம்பவுண்டே ரொம்ப மாறிப்போச்சேல?
பழைய ஆள்க நிறைய பேர காணோமே? எல்லாம் புதுசு புதுச்சால்ல தெரியுறாங்க?”-பிரவீண்.
“பெரிய காம்பவுண்ட்ல தான் முதல்ல ஒண்ணு ரெண்டா காலி பண்ண ஆரம்பிச்சாங்க…..
இந்த நம்ம சாமி வீட்ல….. எங்க வீட்ல…. அப்புறம் நம்ம கிறஸ்டோபர் அண்ணன் ஞாபகம் இருக்கா?
அதான் எஸ்தர் பாட்டி வீட்ல….. இப்படியே ஒவ்வொண்ணா வெளியில போக ஆரம்பிச்சாங்க…..”-சாம்.
“கிறிஸ்டோபர் அண்ணன்…… எங்கல இருக்காரு இப்போ…..? நாமெல்லாம்
முன்னாடி பெரிய காம்பவுண்டே கெதின்னு விளாண்டுகிட்டே கெடப்போம்….பெட் மேட்சு அதுஇதுன்னு
எவ்ளோ ஜாலியா இருக்கும்….. அப்பல்லாம் கிறிஸ்டோபர் அண்ணன்னா மலைப்பா இருக்கும்….. அவரு
செகண்ட்ஸ் டீமில இருந்தாரு என்ன?”-பிரவீண்.
“மறக்க முடியுமா மாப்ள….. எல உனக்கு ஞாபகமிருக்கு இப்ப நம்ம
சாம் வீடு இருக்குற எடத்த கொடுக்காப்புளி காம்பவுண்டின்னு சொல்வோமே அங்க ஒரு பெட் மேட்ச்
நடந்து செம ரகளையா இருந்திச்சே….?”-ராஜா.
“பிரவீண் தாம்ல அன்னைக்கு கலக்கி எடுத்துட்டானே….. பெரிய தெரு
பயலுவளுக்கு நம்ம நாளே ஒரு எளக்காரமாத்தான் அலையிவானுங்க….. அன்னைக்கு மேச்சுல பிரவீண்
குடுத்த குடுப்புல அதுக்கு அப்புறம் நம்ம பக்கமே அவனுவ வர பயந்திட்டான்வள்ள….”-சாமி.
“கோலிக்கா, பம்பரம், சில்லி பந்து, எறிபந்துன்னு காம்பவுண்டே
நம்மளால கலகலக்கும்….. இப்ப பாரு நம்ம காம்பவுண்டே ’ஓ’ன்னு கெடக்கு…..”-ராஜா.
”ஏம்ல….. இப்ப பொடிசுக கொறஞ்சி போச்சா?”-பிரவீண்.
“எல…. இப்ப எங்கல புள்ளையல வெளியில விளாட விடுறாங்க? எல்லாம்
வீட்டுக்குள்ளேயே…. ரெஸ்லிங்….. ப்ளே ஸ்டேஷ்ன்னு ஆயிப் போச்சா…..முன்ன மாறி இல்லாம
புள்ளையிலு விளாட்டுலாம் கொறஞ்சு போச்சு….”-ரீகன்.
“நாம அப்படி அன்னைக்கு ஒண்ணா விளாண்டு சுத்துன பழக்கத்துக்கு
தான ஆளாலுக்கு ஒரு பக்கமிருந்தாலும்….. இப்பவும் இத்தன வருசங் கழிச்சும் இப்படி ஒண்ணா
இருக்க முடியுது….. என்ன மாப்ள?”-ராஜா.
அவர்கள் தங்கள் பழைய நினைவுகளை அசைபோட்டபடி ஆற்றில் மிதந்து
கொண்டிருந்தார்கள்.
பிரவீண் “எல இப்படியே நின்ன எடத்துலயே நின்னு பேசுறதுக்கா இவ்ளோ
தூரம் வந்தோம்? அக்கறை வரைக்கு நீந்திப் போயிட்டு வருவோம்ல….”
“என்னய போட்டுத் தள்ளனும்னு முடிவு பண்ணிட்டியோல…..? நானே நீச்சல்
தெரியாம மெயிண்டேன் பண்ணிகிட்டு இருக்கேன்….. இதுல அக்கறைக்கு எங்க போவ…..?”-சாமி.
“நீச்சல் தெரியாதவம்லான் ஏம்மல ஆத்துக்கு குளிக்க வாரீங்க? கழுத
வயசாச்சு நீச்ச தெரியலன்னு சொல்ல வெக்கமா இல்லயால?”
“அட மயிரு…. நீ கப்பல் வேல பாக்குறவன் உனக்கு நீச்சல் தெரிஞ்சிருக்கனும்….
மளிக கடை வச்சிருக்கவனுக்கு எதுக்குல நீச்சல் தெரியனும்…..?”-சாமி.
”வாயிலயே நீச்சல் அடிக்கிறதுல ஒண்ண அடிக்க ஆளே இல்லல”-ராஜு
“சரி….. நீச்சல் தெரிஞ்சவம்லா வாங்கல அக்கறைக்கு போயிட்டு யார்
முதல்ல வர்றாங்கன்னு பாப்போம்…” பிரவீண்.
“நான் ரெடி மாப்ள….”சாம்.
“எல நீங்க ரெண்டு பேருந்தான் சரக்கு அடிக்கல அதனால நீங்களே நீந்திட்டு
வாங்கல”-ரீகன்.
பிரவீணும், சாமும் அக்கறை நோக்கி நீந்தத் துவங்கினார்கள்……ஆரம்பத்தில்
இருவரும் ஒன்றுபோல் நீந்துவது போல் தெரிந்தாலும் பிரவீண் சாமைக் காட்டிலும் அதிகவேகமாய்
நீந்த…. பிரவீணே அக்கறைக்கு முதலில் சென்று சேர்ந்தான். அக்கறை சென்று கரையேறியவன்
சாமிற்காக காத்திருந்தான். சாமும் ஒருவழியாய் ஒரு சில நிமிடங்களில் கரை வந்து சேர்ந்தான்.
அங்கே நால்வரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும் இவர்களுக்காக பார்த்துக் கொண்டும்
இருந்தார்கள்.
மீண்டும் அக்கறையிலிருந்து சாமும், பிரவீணும் ஒன்றாக நீந்த துவங்கினார்கள்…..
இம்முறை அவ்வப்போது பிரவீண் தண்ணீருக்குள் முங்கிய வண்ணம் உள்நீச்சலாய் வந்து கொண்டும்….
இடையில் நின்று இளைப்பாறிக் கொண்டும் வந்தான். சாம் இம்முறை அவனைக் காட்டிலும் வேகமாய்
அக்கறை வந்து சேர்ந்தான். சாம் அவர்களை நெருங்கிய பின்னே அவர்கள் நால்வரும் அவனை கவனித்தார்கள்.
சாம்” என்னமோ சொன்னானே….. யார் முதல்ல வர்றாங்கன்னு….. எங்கல
அவன…?”
“ஒங்கூடத்தாம்ல வந்திட்டு இருந்தான்…. நீ இங்க வந்து அவன எங்கன்னா
எப்புடி?”-ரீகன்.
“மாப்ளைக்கு மூச்சு வாங்கிருச்சு போல…. பெரிய மயிரு மாறி உள்நீச்சல்
போட்டு வந்தாம்ல….எங்கையாவது நிப்பான்”- என சாம் சொல்லவும் அவர்கள் கொஞ்சம் சமாதானமாகி
பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவ்வப்போது பேசிக்கொண்டே அவன் வருகிறானா என்று அக்கறை நோக்கியும்
பார்த்துக் கொண்டார்கள். பிரவீணின் தலையே தென்படவில்லை. சாம் வந்து பத்து நிமிடத்திற்கு
மேலாகியும் பிரவீண் வராத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் அவனை தேடி ஆரம்பித்தார்கள்.
“எல மாப்ள…. உங்கூடத்தான வந்தான்? இல்ல அக்கறையிலேயே நின்னுட்டானா?”-ராஜா.
“எல நான் தான் சொல்றம்ல…. எனக்கு முன்னால அவன் தான் முதல்ல அங்க
இருந்து உள்நீச்சல் போட்டபடி நீந்துனான்….” சாமிற்கு மெல்ல படபடப்பு அதிகரித்தது.
“மாப்ள பைக்க எடுத்திட்டு அக்கறைக்கு போயி அவன் நிக்கானான்னு
நான் பாத்திட்டு வர்றம்ல”-ராஜு
“எல நானும் வாரேன்…”-சாமி.
“சாம் நீயும் ராஜாவும்…. அக்கறைக்கு நீந்தி போய் பாருங்கல….
நான் எங்கன பாக்குறேன்”-ரீகன்.
திசைக்கொரு பக்கமாய் அவனை தேடத் துவங்கினார்கள். அரைமணி நேரத்திற்கு
மேலாகியும் அவன் தென்படாததால் அவர்களுக்குள் பதட்டம் அதிகரித்தது.
“மாப்ள….. வேற வழி இல்ல ஒண்ணும் யோசிக்காம பக்கத்துல போலிஸ்
ஸ்டேஷன்ல சொல்லி….. அவங்களையும் தேடச் சொல்லுவோம்ல”-ரீகன்.
“மடக் கூதிமவன் மாறி பேசாத நாம தண்ணி அடிச்சிருக்கோம்ல”-ராஜா.
“தண்ணிதான அடிச்சோம் கொலையா செஞ்சோம்….. நீ சும்மா இருல யாரு
எங்கூட வாரா?”-ரீகன்.
சாமும் ரீகன் சொல்வதே சரியென்று சொல்ல. ராஜாவையும், ராஜூவையும்
அங்கே நிற்க செய்துவிட்டு மூவரும் ஏரல் காவல் நிலையத்திற்கு சென்று படபடப்போடு விஷயத்தை
விவரித்தனர். அங்கே அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அனுப்பினர். ஒருவழியாய் இரண்டு மூன்று தீயணைப்பு வீரர்களும் அவர்களுடன்
ஆற்றிற்கு சென்றனர்.
“ஏம்ல பொத்திக்கிட்டு ஊர்ல கெடக்க முடியலியோ”
“சனி….ஞாயிறு ஆச்சுன்னா….. தண்ணியடிச்சுட்டு இங்க குளிக்க வந்து
எங்க தாலிய அறுக்க வேண்டியது”
பதினைந்து இருபது நிமிட தேடலுக்கு பின்னும் பிரவீணை கண்டுபிடிக்க
முடியாததால்….. மீண்டும் சாமிடம் அவர்கள் அக்கறையில் எங்கு கரையேறினார்கள்? அவன் எதுவரை
சாமோடு ஒன்றாக நீந்தி வந்தான்? கடைசியில் அவனை எந்தப் பக்கத்தில் சாம் பார்த்தான்?
என கேள்விகளால் துளைத்து எடுத்து மீண்டும் அவனைத் தேடி ஆற்றில் இறங்கினார்கள்.
இதற்குள் ராஜா பதற்றமடைந்தவனாய் 16-ஆம் காம்பவுண்டில் பிரவீணின்
வீட்டிற்கும் மற்றவர்கள் வீட்டிற்கும் தகவல் கொடுத்திருந்தான். ஜோசப், ஜெயம்மாமா, டேவிட்,
கனியாச்சி வீட்டுப் பிள்ளைகள் என ஒரு பெரும் பட்டாளம் தூத்துக்குடியிலிருந்து ஏரலை
நோக்கி விரைந்து வர ஆரம்பித்தனர்.
ஒருமணி நேரத்திற்கும் மேலான தேடலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்களில் ஒருவர் மற்றவர்களுக்கு
குரல் கொடுத்தார். அங்கே அவர்கள் சென்று பார்த்த போது கால்கள் செடியில் சிக்கிய வாறு
தண்ணீருக்குள் விரைத்தபடி இருந்தான் பிரவீண்…..
......தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக