16-ஆம் காம்பவுண்டே துக்க கோலம் பூண்டிருந்தது…… டேவிட்டின்
செல்வாக்கால் அன்று சனிக்கிழமையாக இருப்பினும்….. பிரவீணின் பிரதேப் பரிசோதனையும் அதை
தொடர்ந்த மற்ற போலீஸ் விவகாரங்களும் விரைவாகவே முடிந்து அவனது உடலை மாலை நான்கு மணிக்குள்
தூத்துக்குடிக்கே கொண்டுவர முடிந்தது.
அவனது உடல் சின்னக் காம்பவுண்டின் வாயில் வழியே அவனது மாமன்
வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட போது மரண ஓலத்தால் அங்கிருந்த ஒவ்வொரு வீடும் அதிரத் துவங்கியது.
ஏழு வருடங்களுக்கும் மேலாக கடலில் கிடந்து ஊருக்கு வந்தவனால் ஏழு நாட்கள் கூட நிலத்தில்
வாழ கொடுத்து வைக்கவில்லை.
மணவரையில் தன் மகளுக்கு இணையாக மாலையிட்டு கண்குளிர காணலாம்
என கனவு கொண்டிருந்த ஜோசப் அவனை பிணமாய் தானே தூக்கி வர வேண்டியதாகிவிட்டதே என நிலைகுலைந்து
போயிருந்தார். கண்ணீர் காய்ந்த கன்னங்களோடு தொண்டை வற்றிப் போய் ஏதேதோ அரற்றிக் கொண்டிருந்தார்.
ஒருமாயமானைப் போல வந்து தன் வாழ்வின் வசந்தங்களையெல்லாம் தன்னோடு
அள்ளிச் சென்றவனை….. ஆசையாசையாய் தன் இளமையை அள்ளிப் பருகியவனை…. உயிரற்ற உடலாய்….
தன் வீட்டு நடுக்கூடத்தில் பிணமாய்…. கடத்தி வைக்கப்பட்ட போது அதுவரையிலும் அவன் மரணத்தை
ஏற்றுக் கொள்ளாதிருந்த அவளது மனது உடைந்து கதறத் துவங்கியது. நிஜத்தின் வலி உரைத்தபோது
பெருங்குரலெடுத்து அலறத்துவங்கினாள்….. ஸ்வீட்டி!!!!
தலைவிரி கோலமாய்…. அவள் தன் மாரடித்துக் கொண்டு அவன் மேல் விழுந்து
புரண்டு அழுதபோது அங்கிருந்த அனைவரும் செய்வதறியாது போய் உரைந்த கல்லாய் நின்றனர்.
“எதுக்கு மச்சான் ஏழு வருசம் கழிச்சு இங்க வந்தீங்க…. இப்படி
ஒரேடியா என்னைய விட்டு போய்ச் சேரவா….?”
“இனி நாதியத்த மூளியா நான் வாழவா வந்தீக?”
“ஏம் மச்சான்….. என்னய இப்படி மோசம் பண்ணிட்டு போணீங்க,,,,,?
நான் தான் இன்னக்கு என்னய கோயிலுக்கு கூட்டிட்டு போவச் சொன்னனே….. என்னய விட்டுட்டு
சொல்லாம கொள்ளாம போயி பிணமா வந்து கெடக்கீகளே….. என் உயிரு எங்க போச்சு…..?”
அவள் அரற்றிக் காற்றில் வீசிய கேள்விகளுக்கு அங்கிருந்த ஒருவராலும்
பதில் சொல்ல முடியவில்லை. சோபியாவுக்கு மருமகனின் மரணம் ஏற்படுத்திய வலியை காட்டிலும்
தன் மகளின் கதறல் அதிர்ச்சியாகவும் அவளை உருக்குலைத்தும் கொண்டிருந்தது. 16-ஆம் காம்பவுண்ட்டில்
கலங்காதவரும் கதறியபடி இருக்க அங்கு வந்து சென்ற காற்றும் கண்ணீர் வடித்து செல்ல….
ஜொஸியம்மே இரும்பை போல் புடித்த புடியாய்….. இமைகள் மூட மறந்தவளாய் பிணமாய் கிடத்தப்
பட்டிருந்த தன் பேரன் பிரவீணையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் ஒரு
சொட்டி நீர் கூட கோர்க்காமல் வெறித்தது வெறித்தபடியே…. இருந்தது. அவளை நெருங்கி ஏதேதோ
சொல்லியபடி அவளை அழச்செய்ய தம்மால் முடிந்ததை அங்கிருந்தவர்கள் அனைவரும் செய்து பார்த்தார்கள்.
ஆனால் அவள் எதற்கும் கலங்காமல் யாரிடமும் பேசாமல் உறைந்து போய் வீற்றிருந்தாள்.
அவனது உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப் பட்டிருப்பதால் அன்றே அடக்கத்தை
முடித்துவிட வேண்டும் எனவும் சொல்லப்பட்டது. மேலும் வெளியூரில் இருந்து யாரும் வரவேண்டிய
அவசியம் இல்லாததால் அன்றே அடக்கத்தை எடுக்க முடிவும் செய்யப்பட்டது. அந்தோணியார் கோயிலில்
மாலை ஆறுமணிக்கு அடக்க பூசைக்கு நேரம் கொடுக்கப்பட்டது.
மாலை 6.00 மணி…..
வண்ணக் கனவுகளோடும்….. நீண்ட பிரிவுக்கு பின் உறவுகளை சந்திக்கும்
ஆர்வத்தோடும்….. பழைய நினைவுகளை சுமந்தபடி வந்தவனுக்கு அள்ள அள்ளக் குறையாத அன்பைத்
தர ஒரு குடும்பமும், உறவுகளாக உரிமை பாராட்ட 16-ஆம் காம்பவுண்ட் மக்களும், அவனது வாழ்வின்
ஒவ்வொரு நொடியையும் வசந்தமாக்க அழகான காதலியும் இருக்க மரணம் அவர்களை முந்திக் கொண்டு
அவனை மாலையிட்டு அழைத்து சென்றது. அந்தோணியார் கோயிலில் வைத்து அவனது இறுதிபலி நிறைவேற……
’சென்று வா….. கிறுத்தவனே’ என மலர்கள் தூவி…. மக்கள் வெள்ளம் அவனைப் பற்றி பரிதாபமாகவும்,
பெருமையாகவும் பேசிக் கொண்டே பின் தொடர அவனது தாயும், தந்தையும் புதைக்கப்பட்ட இடம்
மீண்டும் தோண்டப்பட்டு இருந்தது. கல்லறையில் வைத்து…. செபங்கள் முனங்கி அவனது கையில்
ஜெபமாலை அணிவித்து, ஓடி-கோலன் ஊற்றப்பட….. வாழ்வின் வாசம் மறுக்கப்பட்டவன் மண்ணின்
மடியில் புதைக்கப்பட்டான்.
2010 ஆகஸ்ட்,1…..
அதிகாலை மணி 5.01….
ஜொஸியம்மே தன் பேரன் பிரவீண் தனக்கு எடுத்துக் கொடுத்திருந்த
பட்டுப்புடவையை அணிந்தபடி கலையாத் துயிலில் கலந்திருந்தாள்….. ஸ்வீட்டி தூக்கம் வராமல்
தன் வயிற்றை தடவியபடி காத்திருக்க துவங்கினாள்……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக