வியாழன், 30 ஏப்ரல், 2009

என் குடும்பமும் சோமாலிய பிரச்சனையும்


நேற்று என் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன்.அங்கு என் பாட்டி,தாத்தா,அத்தை,மற்றும் என் அத்தைமகள் அனைவரும் படபடப்புடன் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
எனக்கு இந்த அசாதாரணமான காட்சி பெரும் வியப்பை தந்தது காரணம் சீரியல்களிலும்,நடன நிகழ்ச்சிகளிலும் மூழ்கி இருக்க வேண்டியவர்களை செய்திகளில் கவனம் செலுத்த வைத்தது எது? ஈழ விவகாரமா?தேர்தல் நிலவரமா?அப்படியெல்லாம் இருக்க சாத்தியமே இல்லையே என்று எண்ணியவாறு,”என்ன மொத்த குடும்பமும் சாயிங்கால நேரத்தில சீரியஸாக நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்கீங்க? பார்த்து நாளைக்கு நம்ம லோக்கல் சேனல்ல இதுவே தலைப்பு செய்தியாயிரபோவுது”என்றவனை என் அத்தை ”அட நீ வேற,நானே கவலையில இருக்கேன்,உங்க மாமா நேத்து கப்பல்ல இருந்து போன் பண்ணியிருந்தாங்க அவங்க போற கப்பல் நாளைக்கு சோமாலியாவை கடக்குதாம் அங்க எல்லாரும் ரொம்ப பயத்தோட இருக்காங்களாம்,அங்க போற வர்ற கப்பல்கள கடத்தி கொண்டு வச்சு காசு கேட்டு மிரட்டுவானுங்களாமே! அதான் ரொம்ப பயமா இருக்கு....”என்றபடி கவலை ரேகையை தன் முகத்தில் படரவிட்டாள்.

நெய்தல் நில மக்களாதலால் கடலும் கடல் சார்ந்த தொழிலும் அது சார்ந்த பிரச்சனைகளும் எங்களை போன்ற குடும்பங்களுக்கு புதிதில்லை தான்.
ஆனாலும் இது போன்ற சந்தர்பங்களில் எங்கள் கவலைகள் கரைகளை கடந்து விடுகிறது.வலிகளுக்கான வரப்புகளை ஆறுதல் வார்த்தைகளால் உடைத்துவிட்டால் கவலைகள் தங்காதல்லவா?


நான்,”கவலைபடாதீங்க அத்தை அங்க ஏகப்பட்ட கப்பல்கள் போய்ட்டு வந்திட்டு இருக்கு அத்தனையையுமா புடிக்கிறானுங்க.ஏதாவது ஒன்னு இரண்டை அவனுங்க தேவைக்கு புடிச்சு வச்சுட்டு பணம் கொடுத்த பிறகு விட்டுறுவானுங்க.அதுமட்டுமில்லாம அப்படி புடிச்சு வச்ச கப்பல்கள்ல யாரையும் கொன்னு போட்டதாகவும் தெரியல.அவனுங்க நோக்கம் மிரட்டி பணம் வாங்குறது மட்டும் தானேயொழிய கொலை செய்யறது இல்லை........”ஆறுதலாக பேசுகிறோம் என்று நான் பாட்டுக்கு இப்படி பேசிக்கொண்டிருக்க என் அத்தை குறுக்கீடு செய்து,”நானே பயந்து போயிருக்கேன் நீ பாட்டுக்கு மிரட்டுவானுங்க பணம் வாங்குவானுங்கன்னு என்னென்னமோ சொல்றியே”என்று அதுக்கும் பயந்தாள்.

கண்களை டிவியிலும்,காதுகளை எங்களிடமும் கொடுத்துவிட்டு இதுவரை அமைதியாக இருந்த என் அத்தை மகளோ,”இவன் எப்பவும் இப்படித்தாம்மா எல்லாமே அவனுக்கு தெரிஞ்ச மாதிரி பேசுவான்,இவனுக்கு வேற வேலையே இல்லை....”என்று என் மேல் எரிச்சல் பட்டாள்.

இதை சற்றும் எதிர்பாராத நான்,”உனக்கு என்னடி தெரியும் சீரியலு,சினிமா,பாட்டு,கூத்து இதை விட்டா உனக்கு என்ன தெரியும்?சோமாலியாவை பற்றி என்ன தெரியும்?அங்க பசியிலும்,வறுமையிலும் மக்கள் கஷ்டப்பட்ட போது உலகமே பரிதாபம் மட்டும் தானே பட்டுச்சு,மிஞ்சி மிஞ்சிப்போனா உணவுப் பொட்டலமும்,பழைய துணியும் கொடுத்திருக்கும் அவ்வளவு தானே?ஆனா இப்போ துப்பாக்கிய காட்டி மிரட்டின உடனே கோடிக்கோடியா பணத்தை கொட்டுது.”

“ஆரம்பிச்சிட்டான்!இனிமே இவன் மொக்க போடறத நிப்பாட்டமாட்டான்....”என்றவளையும் என்னையும் பார்த்து என் அத்தை,”உங்க இரண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா? இங்க நானே பயந்து போயிருக்கேன், நீங்க என்னடான்னா தேவயில்லாம ஏதெதோ பேசி சண்டை போட்டுகிட்டு..”என்றவுடன் சற்று நேரம் அமைதி நிலவியது.

இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த என் தாத்தா அமைதியாக தன் அறைக்கு படுக்கச் சென்றார்.எழுந்து தனது மௌனத்தை கலைத்தவாறு என் பாட்டி,”ஏ!புள்ளை களா.... நாம கும்புடுற கடவுள் நம்மை கைவிட மாட்டார் தேவையில்லாம கவலைபடாம போய் சாப்பிடுங்க...எய்யா... நீ சாப்பிட்டிட்டு வந்தியா? இங்க சாப்பிடேன்யா....”என்றவளிடம், “இல்ல ஆச்சி நான் சாப்பிட்டிட்டு தான் வந்தேன்”என்றேன்.

“இப்ப இருக்கற மனநிலையில எங்கே சாப்பிடுறது....?”என்று அங்கலாய்த்தாள் அத்தை.திடீரென்று மௌனமானவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக,”ஓபாமா! சொல்லியிருக்காராமே சீக்கிரமே இந்த மாதிரி கடல் கொள்ளைகளை முடிவுக்கு கொண்டுவருவேன்னு....”என்றவளே தொடர்ட்ந்தாள்.....”ஏந்தான் இப்படியெல்லாம் செய்றானுங்களோ இவனுங்களுக்கு பொண்டாட்டி பிள்ளைகளெல்லாம் கிடையாதா?”என்று பொரிந்து தள்ளினாள்.

“எல்லா பிரச்சனைகளையும் அமெரிக்காவும்,பிரிட்டனும் தான் 90களில் இருந்தே செய்து வருகிறது.Peace keeping troops என்ற பெயரில் அமெரிக்கர்களும்,பிரிட்டனியர்களும் அனுப்பிய படைகளை எதிர்த்து சோமாலியர்கள் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டு அவர்களை விரட்டிய Battle of Mogadishu வில் ஆரம்பித்து இன்று வரை அங்குள்ள Islamic court union(ICU)ஐ அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக கூறி பல்வேறு தாக்குதல்களால் அந்த நாட்டில் ஒரு நிலையற்ற தனத்தை உருவாக்கி கடற்கொள்ளையர்களும் ,ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளும் உருவானதற்கு மறைமுகமாக அமெரிக்கர்களே காரணம். தனது ஆயுதங்களையும் வாங்க செய்து, நேரடியாகவும் மறைமுகமாகவும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான அமெரிக்கர்கள் தான் இன்று இதற்கு முடிவும் சொல்ல போகிறார்களாக்கும்?இதைத் தான் குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது.” என்றெல்லாம் பேசி தேவையில்லாமல் அவர்களை நான் குழ்ப்பாமல்,”அத்த!ரொம்ப கவலை படாதீங்க எல்லாம் நல்ல படியா நடக்கும்,காலையில மாமா போன் பண்ணும் போது நான் ரொம்ப கேட்டதாக சொல்லுங்க”என்றபடி அங்கிருந்து கிளம்பினேன்.

சோமாலியர்களை பற்றியோ அல்லது அவர்களது உள்விவகாரங்களை பற்றியோ எந்த கவலையும் அக்கறையும் இதுவரை எனக்கோ அல்ல எனது குடும்பத்திற்கோ ஏற்பட்டதில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் அவை நம்மை பாதிக்கும் என்றவுடன் இப்பொது உணர்வுகள் பீறிடுகிறது.மகாத்மா காந்திக்கே தன்னை ரயிலிலிருந்து தள்ளிய பிறகு தானே நிறவெறி புரிந்தது.
இதை நம்ம ஓர் வழக்கில் சொல்ல வேண்டும் என்றால்,தனக்கு தனக்குன்னா புடுக்கு கூட களையெடுக்குமாம்.
(பி.கு:என் மாமாவின் கப்பல் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஸோமாலியாவை கடந்துவிட்டது)

2 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

அண்டோ!

ஒரு செய்தியிலிருந்து ஒரு வரலாறை, அமெரிக்காவின் அட்டூழியத்தை என விவரிக்க முடிகிறது. வலர்ந்து கொண்டே இருக்கிறாய். நம்பிக்கையை உன்னிலிருந்து இன்று எனக்கு பெற்றிருக்கிறேன். நன்றி.

காமராஜ் சொன்னது…

ஆண்டோ மிக அருமையான பதிவு.
நிறைய்ய எழுதி பாராட்ட கனிணி
ஒத்துழைக்க மறுக்கிறது.