சனி, 2 மே, 2009

வாழ்வை காதல் செய்வோம்!!!


எங்கள் வீட்டை கவனித்து வரும் அக்கா நேற்று காலையில் நான் வேலைக்கு செல்லும் நேரத்தில், செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவள் தீடீரென்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். நான் பதறியபடி என்னவென்று விசாரித்தேன்.அவள் அழுதுகொண்டே தனது மகள் முந்தைய நாள் இரவே பாட்டி வீட்டிற்கு செல்வதாக பொய் சொல்லி வேறு ஜாதி பையனோடு ஓடிப் போய்விட்டதாக கூறி அழுகையை தொடர்ந்தாள். நான் சமாதானம் என்ற பெயரில் ஏதேதோ சொல்லிவிட்டு பஸ்ஸை பிடிக்க ஓடிவிட்டேன்.அலுவலகம் முடிந்து வீடு திரும்பினேன்.இப்போது அந்த அக்காவின் முகத்தில் கொஞ்சம் தெளிவு தெரிந்தது.ஆனாலும் சோகம் குறையவில்லை(பிறகு மகள் ஓடிப்போனாள் குதுகலமா கொப்பளிக்கும்?).
நானும் என் முகத்தில் கொஞ்சம் வாட்டத்தை வீம்பாக வரவழைத்துக் கொண்டு ,”என்னக்கா ஏதும் தகவல் தெரிஞ்சதா?”என்று வினவினேன்.
ஏற்கனவே இந்தக் கேள்வியை அதிகம் முறை எதிர்கொண்டிருந்தாள் போலும்.அதனால் எந்த தடுமாற்றமும் இல்லாமல் மிக சரளமாக வார்த்தைகள் வந்து விழுந்தன,”அந்தக் கழுத! திருப்பூரில் இதுக்கு முன்னாடி அவ வேலை பார்த்த போது தங்கியிருந்த ரூமுக்கு போய் இருந்திருக்கா....ஒருவழியா அவ இருந்த இடத்தை கண்டுபிடிச்சு அவளை கூட்டியார ஆள் போயிருக்கு..” என்றபடி அவள் பிள்ளைகள் வளர்க்க பட்ட கஷ்டத்தையும், அவள் குடும்ப சூழலை உணராத குழந்தைகளை பற்றிய கவலைகளாகவும் அவளது குமுறல்கள் தொடர்ந்தன... ஒருவாறு அவளை ஆறுதல் படுத்தி அனுப்பிவைத்தோம்.(அவளது மகள் இருந்த இடத்தை கண்டுபிடிச்ச விதம்.அவர்கள் போலீஸுக்கு போனார்களா? இல்லையா?,அந்த பையன் வீட்டாருடன் என்ன பேசிக்கொண்டார்கள்? போன்ற தகவல்கள் இந்த பதிவிற்கு அவசியமாக எனக்கு படாததால் அதை எழுதவில்லை).

இரண்டு நாட்களாக அந்த அக்கா வீட்டு வேலைக்கு வராததால் என்னவென்று பார்க்க சென்றபோது தான் தெரிந்தது அந்த அக்காவின் மகள் விஷம் அருந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள் என்று.

அந்த பிள்ளை பிழைத்துக்கொண்டாளா? அவள் காதல் கைகூடியதா?இல்லையா?என்பதை பகிர்ந்து கொள்வதல்ல என் பதிவின் நோக்கம்.
மேற் சொன்ன சம்பவத்தை உங்களுடன் ஏன் பகிர்ந்து கொண்டேன் என்றால்.....

ஒரு பெண் அதுவும் சமூகத்தின் கடை நிலை பொருளாதார சூழலில் வளர்கப்பட்டவள்.கல்வியின் நிழலை மிகக் கடுமையான குடும்பச் சிக்கல்களுக்கு இடையே காண கிடைத்தவள்.வறுமைக்கும்,தேவைக்கும் இடையே தன் தாய் எந்த வித சமூக பாதுகாப்புமின்றி தனியொரு மனுஷியாக நின்று போராடிக்கொண்டிருப்பதை பார்த்து வளர்ந்தவள்.இவை எதைப் பற்றியும் கவலைபடாமல் தன் காதல்ஆசை ஒன்றே பிரதானம் எனக் கொண்டு வாழ்வை முடித்துக்கொள்ள முடிவு செய்தது என்னை இந்த என் தலைமுறையினரைப் பற்றி மிக கவலை கொள்ள செய்தது.

ஏனென்றால் இது நம் சமூகத்தின் ஏதோ ஒரு இடத்தில் ஒரு பெண்ணுக்கோ அல்ல ஆணுக்கோ நடக்கும் விஷயமல்ல.இந்த பதிவை எழுதும் நானும் அதை படிக்கும் நிங்களும் கடந்து வந்த (வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒருமுறை கடக்கப் போகும்) ஒரு பகுதி தான் இது.

காதல் ஒரு அற்புதமான உணர்வு.ஜாதி,மதம்,இனம்,மொழி,என உலகில் உள்ள அத்தனை பேதங்களையும் களைந்து எறியும் வல்லமை கொண்டது காதல்.இதனால் தான் பாரதி போன்றோர் மானிடத்தை காதல் செய்யச் சொன்னார்கள்.எனக்கும் இதில் மாற்றுக்கருத்து கிடையாது.தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லைதான்.ஆனால் தீதையும் நன்றையும் நம்மை புரிய வைப்பதில் நமது புறச்சூழல் பெரிதும் காரணமாகிறது.

காதல் தவறில்லை தான்.ஆனால் காதல் என்றால் என்ன?காதலின் வெற்றி கல்யாணமா?என்பதில் நமக்கு தெளிவு வேண்டும்.

***முதலில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே நேசிக்கவேண்டும்.நாம் நம்மிலிருந்தே நமது காதலை தொடங்கினால்தான் நாம் காணும் விஷயங்கள்,பழகும் மனிதர்கள்,செல்லும் இடங்கள்,பார்க்கும் வேலைகள் என நமது காதல் விரிவடையும்.

***காதலின் வெற்றி கல்யாணம் என்பது மிகவும் அபத்தமானது.உணர்வுகள் வெற்றி தோல்விகளை சந்திப்பதில்லை. நாம் நேசித்த நபரை நிர்பந்தத்தால் பிரிய நேர்ந்தால் நமது காதல் இல்லை என்று ஆகிவிடுமா?இரண்டு நபர்கள் பிரிய நேருமாயின் அப்பிரிவால் ஒருவரையொருவர் வெறுக்க முடிந்தால் அவர்களுக்கு இடையே இருந்தது ஏதோ ஒரு எதிர்பார்ப்பேயன்று காதல் இல்லை.

***கல்யாணம் செய்வதாக உறுதி செய்த இருவரில் ஒருவர் வார்த்தை தவறினால் அதிக இழப்பு யாருக்கு?ஏமாற்றியவருக்கா?ஏமாற்றப்பட்டவருக்கா?
நிச்சயமாக ஏமாற்றியதாக நினைப்பவருக்கே.ஏனென்றால் நிஜமான காதலை இழந்தவர் அவரே.மாறாக ஏமாற்றப்பட்டதாக சொல்லப்படுபவரோ தவறான நபரிடமிருந்து தப்பிப்பிழைத்த அதிஷ்டசாலியே.

***செய்தி ஊடகங்களும், திரைப்படங்களும் காதலை வியாபார சரக்காக மட்டுமே பார்கின்றது.இங்கு நூற்றிற்கு தொன்னூற்றி ஒன்பது திரைப்படங்கள் காதலை மையமாக வைத்தே எடுக்கப்படுகிறது.அவைகள் சொல்லி கொடுப்பது எல்லாம் பெண்ணை எப்படி வசியம் செய்வது என்றே.அவர்களை பொறுத்தவரையில் பெண்ணும் ஒரு பொருளே.அவளை அடைய வேண்டியது ஒரு ஆணின் கடமை அவ்வளவுதான்.காதலர்கள் ஒன்று கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது காதலித்த பாவத்திற்காக இறந்து விட வேண்டும்.காதலுக்காக எதுவும் செய்யலாம் யாரை வேண்டுமானலும் கொலையும் செய்யலாம்.இதை தான் இன்றைய திரைபடங்கள் போதிக்கின்றன.
இந்த உலகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது.அதை பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை.வாழ்க்கை பயணத்தில் காதல் ஒரு சம்பவம் என்று இல்லாமல் காதல் தான் வாழ்க்கை என்று போதனை செய்து எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கையையும் இந்த சமூகத்தின் எதிர் காலத்தையும் பின்னடைய செய்த பெருமை இந்த திரைப்படத்துறைக்கு உள்ளது.

***ஏ உலக காதலர்களே! தாஜ்மகாலை உலக அதிசயமாகவும் காதலின் ஒப்பற்ற சின்னமாகவும் போற்றுபவர்களே...உங்களுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க காதல் கதையை சொல்கிறேன் கேளுங்கள்.......

குராம் என்றொரு அரச குமாரன் இருந்தான்.அவன் மிக எளிதில் எந்த ஒரு கட்டழகியும் கண்டு மயங்கும் பேரழகை கொண்டிருந்தான்.ஒரு நாள் அவன் கடைத்தெருவிற்கு சென்றிருந்த போது ஒரு கண்ணாடிக் கடையில் ஒரு பெண் துருதுருவென்று வேலை செய்து கொண்டிருந்தாள்.அவள் எப்பட்ப் பட்ட அழகி என்றால்......அவளை கண்ட பின்பு ஒருவன் செயலற்றுப் போனால் தான் அவன் ஆரோக்கியமான ஆண்மகன். மாறாக அவளை வர்ணிக்க வார்த்தைகள் தேடினால் அவனுக்குள் ஆண்மை சுரப்பிகள் வேலை செய்யவில்லை என்றே பொருள்.அந்தப் பேரழகி! அர்ஜுமண்ட் பானு பேகம்.(வசதிக்காக பேகம் என்று கொள்வோம்).இப்படிப் பட்ட இருவர் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டபிறகு என்ன பிறக்கும்? கழுதையும் ,குதிரையுமா பிறக்கும்?.....ஆம்!....அதேதான்....
காதல் பிறந்தது.அவளும் பார்சீய ராஜ வம்சத்தை சேர்ந்தவள்.அதனால் எந்த குத்தும் வெட்டும் இல்லாமல் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்பட்டது.அரச சோதிடர்கள் அவர்களது திருமணத்தை ஐந்து ஆண்டுகள் கழித்து முடிவு செய்தார்கள்.இதற்கு இடையில் குராம் அவளை உளமாற காதலித்துக் கொண்டே இரண்டே இரண்டு திரும்ணங்கள் மட்டும் செய்து கொண்டான்.ஒரு வழியாக பேகத்தை ஐந்து ஆண்டுகள் கழித்து மூன்றாவதாக மணம் முடித்துக் கொண்டான்.அவளை மணம் முடித்த பிறகும் அவன் ஏராளமான பெண்களை தவிற்க முடியாத காரணங்களால் மணந்து கொண்டாலும்.பேகத்தை மற்றவரை காட்டிலும் அதிகம் நேசித்தான்.அதற்கு சாட்சியாக அவர்களுக்கு பதினான்கு குழந்தைகள் பிறந்தன.பதினான்காவது பிரசவத்தின் போது பேகம் இறந்து விட்டபடியால் அவளால் மேலும் குழந்தைகள் பெற முடியவில்லை!!!!.காதல் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் குராமும் வளைத்து வளைத்து கல்யாணம் கட்டி பார்த்தார் துக்கம் அடங்கவில்லை.கடைசியாக மனைவியின் ஆசைப்படி யமுனை ஆற்றங்கரையில் பளிங்கு கல்லறை ஒன்றே பேகத்தை புதைத்த இடத்தில் கட்டினார்.....ஆம்!!!அது தான் தாஜ்மகால்.குராமின் பட்டப் பெயர் தான்(பட்டம் சூட்டப்பட்ட போது தான்) ஷாஜஹான்.அவரை மணந்து கொண்டதால் அர்ஜுமண்ட் பானு பேகம்..மும்தாஜ் மகால் ஆனார். இது தான் உலக காதல் சின்னத்தின் வரலாறு!!!

ஆகவே! காதல் காதல் காதல் காதல் போயின்.........................சாதலா?மற்றொரு காதலா.....?
எப்போதோ படித்த ஒரு கவிதை ஞாபகம் வருகிறது.
உலக அதிசயமாய்.....காதல் சின்னமாய்.....
நம்மிடம் மிஞ்சியது ....
ஒரே ஒரு கல்லறைதான்.

ஆகவே!நம்மை கொன்று நம் காதலை வளர்க்கவோ வாழவைக்கவோ முடியாது.காதல் வாழ வாழ்வை காதலிப்போம்.

2 கருத்துகள்:

SUREஷ் சொன்னது…

என்ன கொடுமை சரவணன்

anto சொன்னது…

உங்கள் வருகைக்கு நன்றி சுரேஷ்.