
தீவிரவாதம் என்றால் என்ன?
வெடிகுண்டுகள் வைப்பதும்,துப்பாக்கிகள் வெடிப்பதும்,மனித உயிர்களை அழிப்பதும் மட்டும் தானா தீவிரவாதம்?
உயிர்களை மரணிக்க செய்வது மட்டுமல்ல தீவிரவாதம்.
மனிதர்களை சிந்திக்க விடாமல் அவர்களை மூளைச் சலவை செய்து,சோம்பேறிகளாக்கி தங்களது சரக்கை எந்த விதத்திலும் பகுத்தறியாமல் உட்கொள்ள செய்வதும் தீவிரவாதம் தான்.
இன்னும் நேரடியாக சொல்லவேண்டும் என்றால் மதங்களை வைத்து மதவியாபாரிகள் பல நூற்றாண்டுகளாக மனித இனத்தை துண்டாடி வருகிறார்கள்.
நான் கடவுள் உண்டா? இல்லையா? என்ற ஆராய்ச்சிக்குள் போகவிரும்பவில்லை.எனது கேள்விகள் மிகத் தெளிவானது.
மதங்களின் பெயரால் மனிதர்களான நாம் பிரிந்து கிடப்பது சரியா?
கடவுள் உண்டு என்று வைத்துக்கொண்டாலும் நிச்சயம் நான்கு ஐந்து கடவுள்கள் இருக்க முடியாது.(அப்படி இருந்தால் நிச்சயம் எல்லா கடவுள்களும் ஒருவருக்கொருவர் அடித்து பிடித்து தொகுதிகள் பிரித்து தத்தமது மதங்களுக்கு royalty வாங்கி இருப்பர்)
அப்படி என்றால் ஒரு கடவுளுக்கு இத்தனை மதங்கள் தேவையா?
கடவுள் ஒருவர் என்ற பட்சத்தில் இத்தனை மதங்களால் துண்டாடப்படுவதை அவராலே ஏற்று கொள்ள முடியாது.அப்படி என்றால் ஒரே கடவுளின் பெயரால் இத்தனை மதங்கள் இருப்பது நாம் அந்த கடவுளையே கோமாளி ஆக்குவது போல் ஆகாதா?
அதுவும் கடவுளின் பெயரால் சண்டையிடுவது எவ்வளவு பெரிய மடத்தனம்?
நான் படித்த இதிகாசத்தில் ராமர் ஹிந்து அல்ல.அவர் எந்த இடத்திலும் ஹிந்து மதத்தை தான் வழி பட வேண்டும் என அவர் ஆட்சி செய்ததாக நம்பப்படும் அயோத்தியில் வாழ்ந்த மக்களிடம் கூட சொல்லவில்லை.அவர் தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்றும் விரும்பியதில்லை.பின்பு அவர் பெயரால் இத்தனை சண்டைகளும்,உயிர் இழப்புகளும் தேவையா?
நான் படித்த பைபளில் வரும் இயேசுநாதர் கிறிஸ்தவர் அல்ல.அவர் ஒரு போதும் கிறிஸ்துவம் பரப்பவில்லை.தன்னை நேசிப்பது போல் தன் அயலானையும் நேசம் செய்ய சொன்ன ஒருவரின் பெயரால் எத்தனை சிலுவை யுத்தங்கள்?எத்தனை மதச் சண்டைகள்?பைபளில் அவர் ஒரே ஒரு இடத்தில் தான் கோபப்பட்டு சாட்டை எடுத்து மக்களை அடித்ததாக வரும். அதுவும் ஏன் என்றால் வழிபாடு நடத்தும் இடத்தில் வைத்து அவர்கள் வியாபாரம் செய்ததை பார்த்து அவர் கோபப்பட்டதாக வரும்.அதாவது தன்னை சிலுவையில் வைத்து அரையப்படும் போது கூட கோபப்படாதவர் தன் தந்தையின் ஆலயத்தை வியபாரகூடமாக ஆக்கிவிட்டதற்காக சாட்டை எடுத்து அடித்தார் என்கிறது பைபிள்.
ஆனால் கொடுமை என்னவென்றால் இன்று உலகிலேயே அதிகம் வியபாரமாக்கப்பட்ட மதம் கிறிஸ்தவம் தான்.
இஸ்லாம் ஒன்றே கடவுள் என்கிறது.நபிகள்,"மனித சமுதாயம் ஆதம் ஹவ்வா ஆகியோரிடமிருந்து உருவாகியுள்ளது.ஓர் அரபிக்கு அரபியல்லதவரை விடவோ,ஓர் அரபியல்லாதவருக்கு அரபியை விடவோ,ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விடவோ,ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விடவோ எவ்வித சிறப்பும் மேன்மையும் அல்ல.."
"ஒரு சகோதரரின் அனுமதியின்றி அவரின் உடமைகளில் உங்களுக்கு உரிமை இல்லை.....இறைவனுக்கு அஞ்சுங்கள்.."(இவை நபிகளின் இறுதி பேருரையில் சொல்லப்பட்டது)
இப்படி அன்பையும் சகோதிரத்துவத்தையுமே இஸ்லாம் முன்வைக்கிறது.ஆனால் இன்று இஸ்லாத்தை ஏதோ ஜிஹாதால் மட்டுமே பரப்ப முடியும் என பல இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு வருகிறார்கள்.
ஜிஹாத் என்றால் என்ன?
முஸ்லிம்கள் முஸ்லீம் அல்லாதவர்களோடு சண்டையிட்டு அவர்களைக் கொள்வது தான் ஜிஹாத் என்று சொல்லப்படுவதே தவறு.ஜிஹாத் என்ற அரபி சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளது.ஜிஹாத் என்றால் கடுமையாக முயற்சி செய்தல் என்று பொருள்.ஜஹத,ஜூஹ்துன் என்னும் சொற்களில் இருந்து பிறந்ததே ஜிஹாத் ஆகும்.
நபிகள்,"ஒருவன் இறைவனை அடைவதற்கு தனது மனதுடன் போராடுவதே ஜிஹாத்"என்கிறார்.
இன்னும் சிலர் இறைவன் ஒருவன் தான் என்று ஏற்று கொண்டாலும் மதங்களை இறைவனை சென்றடையும் பாதைகளாக சொல்வார்கள்.
அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது எல்லாம் எந்த இறைவனும் மதத்தை பாதைகளாக நமக்கு வகுத்து தரவில்லை.ஏன் என்றால் எந்த இறைவனும்,இறை தூதர் என்று நம்பப்படுபவரும் மதத்தை நமக்கு போதிக்கவில்லை.அவர்களது போதனை எல்லாம் அன்பை பற்றியே இருந்தது.
எல்லா மதமும் இறைவன் ஒன்று என்ற ஒத்த கருத்தை தான் சொல்கிறது.ஆனாலும் மதங்களின் பெயரால் நாம் பிரிந்தே இருப்பதற்கு காரணம் சில மத வியாபாரிகள் தான்.அவர்களது பிழைப்பே மதத்தின் பெயரால் நடப்பதால் நம்மை மதவெறியூட்டி அவர்கள் அதில் குளிர் காய்ந்து வருகிறார்கள்.
ஒரு குழந்தை பிறந்து 18 வயது ஆனால் தான் வாக்களிக்கும் உரிமையே கிடைக்கிறது.ஒருவனுக்கு 21 வயது ஆனால் தான் தனது வாழ்கை துணையையே தேர்ந்து எடுக்கும் பக்குவம் வரும் என்று நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது ஆனால் ஒருவன் பிறந்த உடனேயே அவனுக்கான மதம் முடிவு செய்யப்பட்டு திணிக்கப்படுவது எந்த விதத்தில் ஞாயம்?இப்படி கடவுளையும், மனிதனையும் கொச்சை படுத்தும் மதங்கள் நமக்கு தேவைதானா?
தோழர்களே! சிந்தியுங்கள் நாம் ஒன்று பட தடையாய் இருக்கும் இந்த மத சாயங்களை இனிவரும் தலைமுறையிடமாவது பூசாமல் விடுவோம்.நாம் காணாத அமைதியும் சமாதானமும் அவர்களாவது பார்க்கட்டும்.
3 கருத்துகள்:
நல்ல பதிவு. நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
அல்லது பத்திகளுக்கு நடுவே சற்று இடைவெளி விட்டு எழுதியிருக்கலாம்.
அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
http://joeanand.blogspot.com/2009/04/blog-post_9262.html
நன்றி தோழர்களே உங்களது அறிவுரைகள் எனக்கு ஊக்கம் அளிக்கிறது
அன்புள்ள ஆண்டோ
வணக்கம்.
நல்ல மொழி, தேர்ந்த கட்டமைப்பு
ஜோ சொன்னதுபோல கொஞ்சம்
நீளம் அதிகம்.
இது மதிரி சீரியஸ் பதிவுகளை
ரொம்ப நண்பர்கள் தவ்வி ஓடிவிடுவார்கள்.
துவழ்ந்துவிடாது தொடரட்டும்.
கருத்துரையிடுக