ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

தோழர்களின் மேலான கவனத்திற்கு......


தமிழீழம் குறித்த நமது பார்வையும் அணுகுமுறையும் சரியானதல்ல.போராட்டங்கள் ஒன்றும் கம்யூனிஸ்ட்களுக்கு புதிதல்ல.அது போலவே போராட்ட வடிவங்களும்.எந்த ஒரு வர்க்கப் போராட்டமானாலும் சரி,இனப் போராட்டமானாலும் சரி அதை முன்னெடுத்து செல்பவர்களுக்கு பெயர் போராளிகளே அன்று தீவிரவாதிகள் அல்ல.ஆயுதம் ஏந்தினாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்கள்.ஏனென்றால் ஆயுதபுரட்சியை கொண்டு வெற்றிகரமாக சோசியலிச ஆட்சியை நிறுவிய வரலாறு கம்யூனிஸ்ட்களுக்கு உண்டு.போராளிகளின் ஆயுதங்களை முடிவு செய்பவர்கள் அதிகாரவர்க்கம் தான் என்பதிலும் மாற்று கருத்து நமக்கு இருக்கமுடியாது.அப்படி இருக்கையில் விடுதலைபுலிகளை தீவிரவாதிகளாக நாம் கருதுவது சரியா?

சரி!இப்போது என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்படலாம் அதாவது நமது நாட்டுப் பிரதமரை நம் மண்ணில் வைத்தே கொலை செய்தார்களே அது ஞாயமா என்று? இதற்கு என்னிடம் சில பதில் கேள்விகள் உள்ளன.அவை...

நமது நாட்டின் மற்றொரு பிரதமரே நாம் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது தவறு என்று கூறி அமைதிப்படையை திரும்பபெற்றாரே அது ஏன்?அப்படியென்றால் அமைதிப்படைக்கு கொடுக்கப்பட்ட ரகசிய பணி என்னவோ?ஒரு நாட்டில் அமைதியை நிலை நாட்ட சென்ற படைபிரிவினரை அந்த நாட்டின் அரசாங்கமும் அதை எதிர்த்து போராடும் போராளிகளும் ஒன்று சேர்ந்து விரட்டியது ஏன்?

கொலைகளை நான் ஞாயப்படுத்தவில்லை ஆனால் அதே சமயம் கொலைகளுக்கு உண்டான காரணங்களையும் நாம் கவனிக்காமல் தீர்ப்பளிப்பது ஞாயமில்லை என்றே சொல்கிறேன்.இங்கு மேலும் சில விஷயங்களை நான் தெளிவு படுத்த விரும்புகிறேன் தமிழ் ஈழம் என்பதில் மார்க்சிஸ்டுகளான நாம் முரண்படுவது ஞாயமில்லை.அது பிரிவினை வாதமும் அல்ல.அது ஒரு நிர்பந்தம்.யாரும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கும் போது அதை எழுப்பவில்லை.சிங்களப் பேரினவாதிகளை பொறுத்தவரையில் தமிழர்களை அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே பார்கிறார்கள்.அவர்களை பொறுத்தவரையில் தமிழர்கள் அடிமைகளாகவும்,கூலிகளாகவும் மட்டுமே இருக்க தகுதியானவர்கள்.ஒரு போதும் அவர்கள் தமிழர்களை சமமாக கருதமாற்றார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்.அப்படி இருக்கும் போது தமிழீழம் ஒன்றே சரியான வழி.
.
இந்த சூழலில் இதை பிரிவினை வாதம் தான் என்று நாம் அடித்து சொன்னால் வரலாறுகளை சற்று திரும்பி பார்க்க உங்களை அழைக்கிறேன்.இது தவறு என்றால்.............

அம்பேத்கார் தலித் தோழர்களுக்கு இரட்டை வாக்குரிமை கோரியதை பிரிவினைவாதம் என்று சொல்லி காந்தி உண்ணாவிரதமிருந்தது தலித் மக்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தபடுத்தவில்லையா?

பாலஸ்தீனம் கேட்டு போராடும் அரேபியர்களுக்கு ஆதரவு தரும் நாம் ஏன் தமிழர்கள் கேட்கும் தமிழீழத்தை ஏற்க மறுக்கிறோம்?

இனவாத பிரிவினையை சித்தாந்தத்திற்க்கு எதிரானது என்று கொள்வோமேயானால் நாம் சித்தாந்தம் மீறி பெரும் முதலாளிகளுக்கு தொழிற்சாலை அமைக்க இடம் ஒதுக்கும் பொருட்டு விவசாயிகள் நிலத்தை கையகபடுத்தியது முறையா?அதை வேலைவாய்ப்புக்காகவும்,மாநில வருவாய் மேம்பாட்டிற்காகவும் தளர்த்தி கொள்ளலாம் என்றால் தமிழீழத்தையும் சமத்துவம் பொருட்டு ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா?

தமிழர்கள் ஆகட்டும் திபெத்தியர்களாகட்டும் நாம் இவர்களின் போராட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றால் அவர்களது அகராதியில் கம்யூனிஸ்ட்டுகள் என்றால் துரோகிகள் என்றாகிவிடும் அபாயம் ஏற்படும்.ரஷ்யாவின் வீழ்ச்சி நாம் வலுக்கட்டாயமாக ஒவ்வொரு இனக்குழுக்களையும் இழுத்துப்போட்டதால் ஏற்பட்டது என்பதை நாம் மறந்து விட வேண்டாம்.

மீண்டும் ஒரு முறை உங்களிடம் கேட்கிறேன் பிரபாகரனையும் மற்ற போராளிகளையும் விடுங்கள் மரணம் போராளிகளுக்கு மற்றுமொறு பதக்கம் தான். ஆனால் பாவம் அந்த பிஞ்சு குழந்தைகளும்,அப்பாவி ஆதரவற்ற மனிதர்களையும் பாருங்கள். அவர்கள் அங்கே போரினால் அழிந்து கொண்டு இருக்கும் போது நாம் வீதி விதியாக ஓட்டுப் பிச்சை கேட்பது எப்படி உள்ளது தெரியுமா?எவன் வீட்டில் எழவு விழுந்தாலும் என் வயிறு நிரம்பினால் போதும் என்பது போல் உள்ளது.

மற்ற கட்சிகளை போல் அல்ல மார்க்சிஸ்டுகள் என்பதாலே தொழிற்சங்க அரங்கத்தின் மூலம் ஈர்கப்பட்டு உள்ளே வந்தேன். ஆனால் இன்றோ என் மனசாட்சியின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லாமல் என் கோழைதனத்தையும்,கையாலாகததனத்தையும் எண்ணி வெட்கிதலைகுனிகிறேன்.
நமது அமைதியை வரலாறு மன்னிக்காது..............

கருத்துகள் இல்லை: