புதன், 4 நவம்பர், 2015

தாம்பத்தியம்



தனிமை என்பது இன்பம்தான் – அதனை

திருமணம் தகர்தெரியும் போது

பேரின்பம் பிறக்கின்றது…

ஆம்! பேரின்பம் தான்…


மலர் தூவிய ராஜபாட்டையில்

இனிய உளவாக சிறுமுட்கள்

இடரும் போது….

ஊடல் பேரின்பம்தான்!!!


அலுத்து ஓய்ந்த இரவில்

ஆறுதல் ஒத்தட மிடும்

உதடுகள் பேரின்பம்தான!!!


அடைகாத்த  சிறகுகளை

அடமானமாய் கேட்கும்போது

சிறகற்று விரியும்

புதுவானம் பேரின்பம்தான்!!!


இனியநினைவுக் கண்ணாடி முன்-

நின்று கொள்ளுங்கள்… தாம்பத்தியம்!!!

காலத்தை வென்ற செருக்கோடு

நிலைத்துப் போகும் பேரின்பங்கள்!!!

நினைவுகள்…



பறவை போல் இருக்கிறாய்
இரவெல்லாம் பறக்கிறாய்
நெருங்கினால் எரிகிறாய்- நீ யாரோ?

மேகக் கூட்டம்
புணரும் வானில் தரிக்கிறாய்
கரையில் மோதும்
கடலின் அலையில் எழுகிறாய்
மலையில் வீசும்
தென்றல் காற்றில் மலர்கிறாய் - நீ யாரோ?

என்னை துரத்தும் பொழுதிலே
உன்னை தொலைத்து விடுகிறாய்
எனக்குள் இருக்கும் உன்னை
வெளியில் தேட சொல்கிறாய்
காற்றின் கரங்கள் பற்றியிழுக்க
மறுந்து மீண்டும் இணைகிறாய்- நீ யாரோ?

மரணம் வீழ்த்தி பிறக்கிறாய்
மீண்டும் மீண்டும் வருகிறாய்
உறங்கும் போதும் வருகிறாய்
உறங்க விடாமல் தடுக்கிறாய்
விழித்துக் கொண்டால் மடிகிறாய்
மடிந்தும் மீண்டும் துளிர்கிறாய்- நீ யாரோ?

வியாழன், 14 மே, 2015

வானமாகிப் போனவள்...

என் சிறகுகளின் வண்ணங்களால்
அறியப்பட்டவன் – நான்!
என் சிறகுகளின் வண்ணங்களால்
கவரப்பட்டவள்- அவள்!
நான் அவளுக்குரியவன் ஆனேன்…
அவள் என் இறகுகள் ஒவ்வொன்றாய்
கேட்கத் துவங்கினாள்….
நானும் பரிசளிக்கத் துவங்கினேன்.
என் இறகுகள் எல்லாம் உதிர்ந்து விட்டன….
அவள் என் வானமாகிப் போனாள்!!!!

ஒரு புத்தக வெளியீடும் சில அனுபவங்களும்....

"பதினாறாம் காம்பவுண்ட் "என்ற பெயரில் நான் எனது முதல் நாவலை எழுதி வெளியீட்டும் உள்ளேன். இங்கு நாவல் எழுதுவதை விட சவால் நிறைந்ததும், சோதனை மிகுந்ததுமாய் இருப்பது நாம் நமது படைப்பை பொது வெளிக்கு கொண்டுவருவதே ஆகும். நான் இந்த நாவலை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி முடித்தேன். எதை எப்படி புத்தகமாக வெளியிடுவது? அதற்கு யாரை அணுக வேண்டும்? என பல கேள்விகளுடன் நான் கூகுளில் பதிப்பகத்தார் சிலரின் தொடர்பு எண்களையும், முகவரியையும் தேடி குறித்துக் கொண்டு ஒவ்வொன்றாய் தொடர்பு கொண்டேன். ஆசை யாரை விட்டது.... நான் தீவிர புத்தக வாசகனாதலால் சில பதிப்பகங்கள் மீது எனக்கு அளப்பெரிய மரியாதை இருந்தது... அந்த தினுசில் முதலில் ஒரு பிரபலமான பதிப்பகத்தை தொடர்பு கொண்டேன், அவர்களும் மிக மரியாதையுடனும் பொறுப்புணர்வுடனும் என் படைப்பை பற்றி சில கேள்விகள் கேட்டு விட்டு அதன் தட்டச்சு பிரதி ஒன்றை அவர்களது முகவரிக்கு அனுப்பி வைக்க சொன்னார்கள். அப்படி அனுப்பிய பின் ஒரு மாதம் கழித்தே என்னை தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.
அந்த ஒரு மாதம் என் வாழ்நாளில் மறக்க முடியாது சில பல நாள், வார இதழ்களுக்கு நான் அளிக்க வேண்டிய பேட்டிகளுக்கு என்னை தயார் படுத்தி கொண்ட காலமது.இருக்காதா பின்னே! எத்தனை பெரிய பதிப்பகம் நம் படைப்பை அங்கீகரிக்க இருக்கிறது. நாமும் லேசுப்பட்டவரா தமிழ் இலக்கிய உலகை நெம்புகோலிட்டு தூக்கிவிடும் படைப்பையல்லவா வழங்கி இருக்கிறோம் என மிதமிதப்பில் திரிந்த காலமது. சரி! ஒருவழியாய் ஒரு மாதகாலம் ஒருண்டோடியது. நானும் பதிப்பகத்தாரை மீண்டும் தொடர்பு கொண்டேன். அவர்கள் மேலும் சில வாரங்கள் அவகாசம் கேட்டார்கள். நான் மீண்டும் காத்திருக்க துவங்கினேன்... ஆனால் இப்போது அவர்கள் மீது கொஞ்சம் எரிச்சல் அதிகரிக்க துவங்கியது. சில வாரங்கள் கழித்து தொடர்பு கொண்ட போது மேலும் சில காரணங்களை சொல்லி சில தினங்கள் கேட்டார்கள்... நான் கொஞ்ச கொஞ்சமாய் நம்பிக்கை இழக்க துவங்கினேன்... ஒருவழியாய் என் படைப்பு பிரசூரிக்க தகுதியற்றது என திருப்பி அனுப்பி வைத்தார்கள். நொந்து வெந்து அவலாய் போனேன் என்பார்களே! அப்படி ஆகிப்போனேன்.
அதிலிருந்து மீண்டு வர சில தினங்கள் பிடித்தது... மீண்டும் என் நண்பன் ஜெபாவின் வற்புறுத்தலால் வேறு சில பதிப்பகங்களை தொடர்பு கொள்ள துவங்கினேன். இம்முறை நான் பெரிய பதிப்பகங்களை அணுகாமல் சின்ன புதிய பதிப்பகங்களை அணுக துவங்கினேன்.சிலர் படைப்பை பற்றி எல்லாம் கேட்காமல் நேரடியாய் டீலில் இறங்கினார்கள். இருபதாயிரம், இருபத்தி ஐந்தாயிரம், முப்பதாயிரம் என அந்தக் குரல்கள் ஒலித்தது எனக்கு சபலம் தட்டினாலும் எனது நிதி நிலைமை ”பிம்பிலிக்கி பிலாபியாக....” இருந்தது.
காலம் கடந்தது காத்திருந்தேன், இந்த இடைப்பட்ட காலங்களில் முகநூலில் பதிப்பகத்தார் ஒவ்வொருவருக்காய் நட்பு கோரிக்கை வைத்து என் நண்பர்கள் வட்டத்துக்குள் உள் இழுத்துக் கொண்டேன். மெல்ல சாட்டிங்கை ஆன் செய்து விட்டு அவர்களது வருகைக்காக கொக்கைபோல் காத்திருந்தேன். ஒருநாள் ஒரு பெரிய பதிப்பகத்தின் உரிமையாளரும், கவிஞருமாய் இருப்பவரிடம் சாட்டிங்கை துவங்கினேன். அவரும் நல்ல மூடில் இருந்திருப்பார் போல நல்ல பேசிக் கொண்டு வந்தார்... நான் மெல்ல இப்படி ஒரு நாவல் எழுதியுள்ளேன் அதை தங்கள் பதிப்பகம் மூலம் பதிப்பிக்க என்ன செய்ய வேண்டும்? என கேட்டதும் தான் தாமதம் அவர் பதிலளிப்பதை நிறுத்திக் கொண்டார்.
வேறு ஒருவரை இப்படி தொடர்பு கொண்ட போது நான் பல விஷயங்கள் எழுத வேண்டி உள்ளது தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டார்.நானும் எனது படைப்பை கெடப்பில் போட்டு விட்டு என் வேலைகளை பார்க்க துவங்கினேன். வங்கியில் பதவி உயர்வு அளித்து இராமநாதபுரம் அனுப்பி வைத்தார்கள்.... அடர் தனிமை வாசிப்பும் எழுத்துமாய் இருந்த போது எனது இந்த படைப்பினை மீண்டும் எழுத துவங்கினேன்.பெரிய மாற்றங்கள் என்று இல்லாமல் சின்ன சின்ன சேர்ப்புகள் செய்தேன்.
அதன் பிறகு எழுத்தாள நண்பர்கள் சிலருக்கு அனுப்பி கருத்து கேட்டேன். அதில் தோழர்.மூர்த்தி மட்டும் படித்து விட்டு ”தோழா நல்லா வந்திருக்கு....” என்றார்.அவரது உதவியோடு வம்சி பதிப்பகத்தாரை தொடர்பு கொண்டேன்.... ஒரு அற்புதமான குடும்பம் எனக்கு கிடைத்தது...! என் புத்தகத்தை அவர்கள் அச்சிலேற்றியதை விட எனக்கு இன்பம் தருவித்தது தோழர்.ஷைலஜா அவர்கள் என் படைப்பு குறித்து சிலாகித்ததே!!! நிச்சயமாய் அவர்களுக்கு நன்றி மட்டும் சொல்லமாட்டேன்...ஏனெனில் அந்த ஒற்றைச் சொல்லால் நான் எதிர்வினை ஆற்ற விரும்பவில்லை, அதற்கு ஈடாய் வாழ்நாளுக்குமான எனது நட்பு.....!
சரி! புத்தகம் தான் வந்துவிட்டதே வெளியீடு எதற்கு என்ற மனநிலையில் தான் இருந்தேன். ஆனால் தோழர். ஷைலஜா அவர்கள் தான் டிசம்பர் மாதம் வெயிடலாம், சனவரியில் வெளியிடலாம் என ஒவ்வொன்றாய் சொல்லி வந்தார். ஒருகட்டத்தில் எனக்கும் அப்படி நடத்த வேண்டும் என ஆசை வந்தது.ஒருவழியாய் பிப்ரவிரி 22 நடத்திவிடலாம் என முடிவு செய்தோம். த.மு.எ.க.ச தோழர்கள் கேட்டு கொண்டதால் அந்த தேதியையும் மாற்றினோம். மார்ச்1 என முடிவானது. ஆனால் தோழர்.ஷைலஜா அவர்கள் தவிர்க்கவே முடியாத காரணங்களால் வர இயலாமல் போனது. இந்த நேரங்களில் எல்லாம் அண்ணன் மாதவராஜின் அரவணைப்பும், ஊக்கமும் ஆறுதலாய் இருந்தது. ஒருவழியாய் புத்தகம் வெளியிட பட்டது...உச்சி முகர்தலும், சின்னச் சின்ன விமர்சனங்களுமாய் என் காயங்களுக்கு மருந்தாகிக் கொண்டிருக்கிறது.... இந்த கனத்தில் வள்ளுவனின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது...” தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்...”என்று!!!!

இந்திய கோயில்கள் விற்பனைக்கு!

கிராம வங்கிகள் என்னும் ”ஆபரணத்தை” தனியார்களுக்கு சூட்டி அழகு பார்க்க முடிவு செய்து விட்டது இந்திய அரசாங்கம். ஆம்! கால் நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக நம் தேசமெங்கும் உள்ள கிராமங்களின் பொருளாதார மேம்பாட்டில் பெரும்பங்காற்றி வரும் கிராம வங்கிகளின் பங்குகளை ”மறுமுதலீடு” என்னும் பெயரில் தனியார்கள் வசமாகிறது.
1975-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசாங்கம் ஒரு சிறப்பு சட்டத்தின் மூலம் கிராம பொருளாதார மேம்பாட்டிற்காக தேசமெங்கும் கிராம வங்கிகள் துவங்க முடிவு செய்தது. “இந்தியா பெரு நகரங்களில் வாழவில்லை… மாறாக அது கிராமங்களில் தான் வாழ்கிறது” என்றுரைத்த அண்ணல் காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2, 1976-ல் முதன்முதலாக ஐந்து கிராம வங்கிகள் தேசமெங்கும் துவங்கப்பட்டது.
அதுவரை வங்கிகள் பெரும் நகரங்களில் மாத்திரம் இயங்கி வந்த சூழலில் எளிய கிராம மக்களுக்கும் வங்கிச்சேவை சென்றடைந்தது. புளிச் சட்டிகளில் சுருட்டி பதுக்கி பாதுக்காக்கப் பட்டு வந்த அந்த எளிய மனிதர்களின் வேர்வை மிச்சங்களை பாதுகாப்பாய் சேமிக்க வழி செய்து அவைகளை வட்டி போட்டு பெருக்கி அந்த எளிய மனிதர்களுக்கென்று ஒரு நிதி ஆதாரத்தை அமைத்து கொடுத்தது கிராம வங்கிகள். கந்துவட்டிக்கு கடன் பட்டு மீளாதுயரில் தவித்த விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுத்து விவசாயத்தை மாத்திரமல்ல அவர்களது மரியாதையையும் மீட்டெடுத்து கொடுத்தது கிராம வங்கிகள். இப்படியாக லாப நோக்கோடு மாத்திரம் நின்றுவிடாமல் ஒரு சமூகப் பார்வையோடும் கிராம வங்கிகள் செயல்பட்டு வருகிறது.
தற்போது மொத்தம் 56 கிராம வங்கிகள், ஏறத்தாழ 19000 கிளைகளோடு 27 மாநிலங்களில் உள்ள 639 மாவட்டங்களில் தேசமெங்கும் இயங்கி வருகிறது. இதில் 18000 கிளைகள் வரை கிராமங்களில் மாத்திரம் இயங்கி வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பாண்டியன் கிராம வங்கி 272 கிளைகளோடும், வட மாவட்டங்களில் பல்லவன் கிராம வங்கி 150-க்கும் மேற்பட்ட கிளைகளோடும் இயங்கி வருகிறது. இன்று வரை சுமார் 15.5 கோடி மக்கள் வரை கிராம வங்கிகளின் சேவையால் பயனடைந்து வருகின்றனர். இதுவரை சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் கோடிகள் வரை வைப்பு நிதியாக திரட்டப்பட்டுள்ளது அதில் ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய்கள் வரை ஏழை எளிய மக்களுக்கு கடனாக வழங்கிப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான வங்கிச் சேவைக்குப் பின்னால் வெறும் 196 கோடி ரூபாய்கள் தான் அரசாங்க பங்கு முதலீடாக இதுவரை உள்ளது. கிராம வங்கிகளின் மூலம் இதுவரை திரட்டப்பட்ட லாப இருப்பானது பதினைந்தாயிரம் கோடிகளுக்கு மேல் உள்ளது. இப்படி லாபகரமாய் இயங்கி வரும் அரசு நிறுவனத்தை தான் “மறுமுதலீட்டு தேவை” என்னும் காரணத்தை சொல்லி தனியார்களிடம் கொடுக்க துடிக்கிறது மோடி அரசாங்கம்.
இதுவரை கிராம வங்கிகளின் பங்குகள் 50% மத்திய அரசிடமும், 35% ஸ்பான்ஸர் (தாய்) வங்கியிடமும், 15% மாநில அரசிடமும் இருந்து வந்தது. தற்போது இதில் மூன்று முக்கிய சட்டதிருத்தங்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது, இதுவரை கிராம வங்கிகளில் அனுமதிக்கப்பட்ட 5 கோடி மூலதனத்தை 2000 கோடியாக உயர்த்தியுள்ளார்கள். அப்படி உயர்த்துவதற்கு தற்போது உள்ள பங்குகளில் 51% பங்குகளை மாத்திரம் இவர்கள் வைத்துக் கொண்டு மீதம் 49% பங்குகளை தனியார்களுக்கு கொடுக்க வசதியாக சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக குழுமத்தில் அதிகப்பட்சமாய் மூன்று இயக்குனர்கள் வரை தனியார் பங்குதாரர்கள் நியமித்து கொள்ளும் வகையிலும் வழிவகை செய்துள்ளார்கள்.
இதற்கு மோடி அரசு சொல்லும் காரணம் இன்னும் தினுசானது. அதாவது கிராம வங்கிகள் லாபகரமாய் இயங்கி வருகிறதாம். அவைகளை மேலும் சிறப்பாய் இயங்கச் செய்ய வேண்டுமானால் தனியார்கள் தான் முதலீடு செய்ய வேண்டுமாம். அரசாங்கத்திடம் இப்படி லாபம் கொழிக்கும் ஒரு நிறுவனத்தில் ”மறுமுதலீடு” செய்ய பணம் இல்லையாம். ஆகவே, லட்சக்கணக்கான கோடிகளின் வர்த்தகத்தை சில ஆயிரம் கோடிகளுக்கு அடகு வைக்க போகிறார்களாம்!
கிராம வங்கிகளின் இந்த அசூர வளர்ச்சிக்கு பின்னால் இருப்பது 80000 கிராம வங்கி ஊழியர்களின் கால் நூற்றாண்டுக்கும் மேலான உறிஞ்சப்பட்ட அவலம் நிறைந்த வாழ்வும், ”அப்பாவித்தனமான” கிராம மக்களின் அரசாங்கத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் தான்! உலகமெங்கும் உள்ள தனியார் பெரும் வங்கிகள் 2008-ஆம் ஆண்டில் துவங்கிய மாபெரும் பொருளாதார வீழ்ச்சியில் தரைமட்டமான போது இந்திய பொதுத்துறை வங்கிகள் மாத்திரம் சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் கம்பீரமாய் உலக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் பொதுத்துறையாய் நாம் நீடிப்பதாலே இந்திய வங்கிகள் பாதுகாக்கப்பட்டது என மார்தட்டிக் கொண்டாலும், அவர்களே தேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதிலே முன்னோடிகள்! ஆட்சிகள் மாறினாலும் நம் தேசத்தில் இந்த தனியார் மோக அவலக் காட்சிகள் மட்டும் மாறவில்லை.
ஏற்கனவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்றதினால் தான் அங்கு கார்ப்பரேட்களுக்கு அதிக கடன் கொடுக்கப்பட்டு அவைகள் வராக்கடன்களாக முடங்கியுள்ளது. அந்த நிலையை கிராம வங்கிகளுக்கும் தொடர அனுமதிப்பது எப்படி நியாயமாகும்? கிராம மக்களின் சேமிப்பையும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்ப்பதை எப்படி வேடிக்கைப் பார்க்க முடியும்? இந்த அவலங்களுக்கு எதிராக கிராம வங்கி ஊழியர்கள் தேசமெங்கும் தங்களது ஒன்றுபட்ட எதிர்ப்புக் குரலை உரத்து எழுப்பி வருகிறார்கள்.
”பொதுத்துறை நிறுவனங்களை இந்திய ஜனநாயக நாட்டின் கோயில்கள்” என முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு வர்ணித்தார். இன்றைய பாரத பிரதமருக்கோ அக்கோயில்களில் அம்பானிகளையும், அதானிகளையும் கொலுவேற்றி பார்ப்பதே பெருங்கடமையாகிப் போனது

நொருங்காது இந்திய குடி அரசு:


தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் சமீபத்திய தீர்ப்பு அவருக்கும், அவரது சகாக்களுக்கும் சாதகமாக நீதிபதி.குமாரசாமியால் வழங்கப்பட்டதும், அது குறித்தான ஏராளமான விமர்சனங்களும், விவாதங்களும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருப்பதும் நாம் அறிந்ததே!

இந்திய தேசத்தின் இறையாண்மையே அதன் ஜனநாயகம் தான்! ஒரு மாபெரும் ஜனநாயக தேசத்தில் உச்சபட்ச அதிகாரம் கொண்டதும் மக்களின் ஏகோபித்திய நம்பிக்கைக்குரிய கடைசி இடமுமாக இருக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொலுவேற்றியிருக்கும் பாராளுமன்றமே ஆகும்! ஆனால் பெருக்கெடுத்துப் போன ஊழல்களாலும், தவறான பொருளாதார கோட்பாடுகளாலும், ஆட்சியாளர்களின் சுயநல அதிகார துஷ்பிரயோகங்களாலும் அதன் மாட்சிமை பெரும் விமர்சனத்துக்கும், கேலிகளுக்கும் உள்ளாகி மக்களின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக மாறிவிட்டதாக கற்பிதம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் அதேசமயம் சாமான்யர்களுக்கு நீதிமன்றமே கடைசி புகலிடம் என்னும் ஒரு நம்பிக்கையும் தொடர்ந்து இதே காலங்களில் விதைக்கப்பட்டும் வந்துள்ளது. நீதிமன்றங்கள் வரையறுக்கப்பட்ட சட்டங்களுக்கு கட்டுப்பட்ட ஒரு அதிகார அமைப்பு. சட்டங்களும் அதன் சடங்குகளுக்கு கட்டுப்பட்ட நீதியும் நிலையற்றது. ஆகவே தான் உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் மேல்மூறையீட்டுக்கான வசதிகளோடு கட்டமைக்கப்பட்டது. இங்கு “வழங்கப்பட்ட நீதிகள்” மாற்றப்படுவதும், மறுதலித்து ஏற்றுக்கொள்ளப் படுவதும் ஒன்றும் விந்தையல்ல. ஆக ”நீதி” என்பது சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அது வழங்கும் நபர்கள் சார்ந்தே இருந்து வருகிறது என்பதே யதார்த்தம். எனவே நீதிமன்றங்கள் என்பது பூர்ஷுவா தனமான ஒரு கட்டமைப்பு முறையே ஆகும்.

அந்த வகையில் பார்க்கப் போனால் இந்த வழக்கும் ஒரு முரண் நகையே! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி அம்மக்களின் நம்பிக்கைக்கு விசுவாசமாக இல்லாமல் அதிகார துஷ்பிரயோகத்தால் தம் ஆட்சிகாலத்தில் வரம்புக்கு மீறி சொத்து குவித்ததாக ஒரு வழக்கு. சாமான்யர்களை உடனே தீண்டும் நீதி ஆட்சியாளர்கள் குற்றம் சுமத்தப்பட்டால் மட்டும் சிறப்பு நீதிமன்றமே அமைத்தாலும் மெல்ல ஊர்ந்தே நகரும் விந்தை. ஒருவழியாய் ஆண்டுகள் பல தேய்ந்த பின்பு காலம் கடந்து ஒரு “நீதி” வழங்கப்படுகிறது. மக்கள் பிரதிநிதி பதவி இழக்கிறார். குற்றம் நிருபிக்கப்பட்டாலும் அதனை ஏற்க மறுத்து ஒரு கும்பல் கோயில்களை கூடாரமாக்குகிறது. தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்கிறார்கள். வழங்கப்பட்ட நீதி இங்கு கூட்டி கழித்து மாற்றப்படுகிறது.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் இருக்கிறது…. குற்றம் சாட்டப்பட்டு மாறி மாறி நீதி வழங்கப்பட்டதோ தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருக்கு! வழக்கு நடைபெற்றதோ கர்நாடகத்தில்! ஏற்கனவே இரு மாநிலங்களுக்கு இடையில் நதி நீர் பங்கீட்டில் பல ஆண்டுகளாக முரண்பாடு. கடந்த சில வாரங்களுக்கு முன்னால் கூட தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவர் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி தமிழகத்தின் நீர்வரத்தை வதைக்கும் திட்டமான மேகதாது அணைக்கட்டுமானத்திற்கு எதிராக மத்தியில் போய் கர்நாடகா சட்டசபை தீர்மானத்திற்கு எதிராய் முறையிட்டு வந்தார். இங்கோ ஒருபோதும் தமிழக விவசாயிகள் குறித்து சிந்திக்காதவர்கள் கூட தமிழின சாயம் பூசி இனவெறி மூட்டினார்கள். கர்நாடகத்திலும் தமிழர்களுக்கு எதிரான இந்த வெறியாட்டம் பலகாலமாக திட்டமிடப்பட்டு இனவெறியர்களால் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு சூழலில் தான் தமிழகத்தின் முன்னால் முதல்வர் குற்றமற்றவர் என கர்நாடக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழர்கள் எதிர்கிறார்கள்! நீதியை மறு ஆய்வு செய்யக் கோரி கர்நாடக சட்ட அமைச்சருக்கு தமிழக கட்சி தலைவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். நீருக்காக கர்நாடகத்தாரை விமர்சித்த தமிழக வெகுஜன ஊடகங்கள் நீதிக்காக கரம் நீட்டுகிறார்கள்! இந்த முரண்பாடுகளுக்கு இடையே தான் ஒளிந்திருக்கிறது எம் தேசத்தின் சமன்பாடுகளும்! இங்கு பார்க்கப்பட வேண்டியதும் உரத்து பேசப்பட வேண்டியதும் நீதி சாமான்யர்களுக்கு ஒன்று ஆட்சியாளர்களுக்கு ஒன்று என்பதை பற்றியல்ல மாறாக இந்திய ஜனநாயக தேசத்தில் ஆட்சியாளர்கள், அதிகாரமிக்கவர்கள், பெருமுதலாளிகள் எவர் குற்றம் செய்தாலும் இந்திய மக்களாகிய நாம் நம் மொழி, இன, மத உணர்வுகளை கடந்து அநீதிக்கு எதிராய் ஒன்றுபடுவோம் என்பதேயாகும்.

தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
 
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்- வழக்குரை காதை(சிலப்பதிகாரம்)

புதன், 30 அக்டோபர், 2013

தாயுமானவர்

அவருக்கும் எனக்கும் எந்த இரத்த உறவுமில்லை. அவர் என் பால்ய கால சிநேகிதனும் இல்லை. ஆனால் என் தாயின் மரணத்திற்கு நிகரான வலியை அவரது பணி நிறைவு எனக்கு கொடுக்கிறது… இதில் எள்ளளவும் மிகையில்லை!

“தொழிற்சங்கம்” என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவனாய் என் தாயின் மறைவிற்கு பிறகு கருணை அடிப்படையில் வங்கிப் பணிக்கு சேர்ந்த அன்றே அந்த கருத்த மெலிந்த உருவம் சங்க உறுப்பினர் படிவத்துடன் தலைமை அலுவலகத்தில் என்னை எதிர் கொண்டது. நான் தயங்கினாலும் மிக எளிதாய் என் கையொப்பத்தை அவரால் வாங்க முடிந்தது.

அவர்தான் அண்ணன்.சோலைமாணிக்கம். அவரை நான் ”அண்ணன்” என்று அழைத்தாலும் அவர் என் தாயுமானவர்!

இளம் வயதில் பெற்ற தாயை பறிகொடுப்பதே தனிமனித சோகத்தின் உச்சம் என எண்ணிக் கொண்டிருந்தவனை, என் விரல் பற்றி என் சின்னச்சிறிய உலகில் இருந்து என்னை விடுவித்தார். இந்த பரந்த உலகில் அன்றாட விதிகளாக திணிக்கப்பட்ட சமூக அவலங்களை, சமூக அநீதிகளை எனக்கு காட்சிப் படுத்தினார். ஒரு தனிமனிதனால் அசாத்தியங்களை சாத்தியமாக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்தார்.

அது 2007-என நினைக்கிறேன்… புதுதில்லியில் உள்ள ஜந்தர்மந்திர் என்னும் இடத்திற்கு என்னையும், என் தோழன்.அருணையும் அழைத்து சென்றார். அங்கே நமது அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பாய் ஒருநாள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்றோம். அங்கு தேசமெங்கும் இருந்து பல்வேறு கோரிக்கைகளோடு மக்கள் பந்தலிட்டு நாட்கணக்காய்…. மாதக்கணக்காய்… ஏன் வருடக்கணக்காய் போராடிக் கொண்டிருப்பதை காண்பித்தார்.காஷ்மீர் பிரச்சனை முதல் திபெத் தனிநாடு கோரிக்கை வரை ஒவ்வொருவரும் மிக நீண்ட வரலாறுகள் கொண்ட கோரிக்கைகளோடு போராடிக் கொண்டிருப்பதை கண்டோம்.
ஒரு பக்கம் நகரவே முடியாமல் பரபரத்த தலைநகரமாய் காட்சியளித்த புதுதில்லி மறுபக்கம் நம்பிக்கையோடு நகராமல் காத்திருந்து போராடுவதுமாய் எங்களுக்கு அங்கு இருவேறு இந்தியா காட்சியானது.
இப்படியாக அவர் எனது பிரமைகளை அத்தனை இயல்பாய் தகர்த்து வந்தார்.என் தயக்கங்களை அவர் அனுமதித்ததே இல்லை… ஆம்! ஒரு பெருவெள்ளத்தைப் போல் என்னை அவர் திசையில் அடித்துச் செல்ல துவங்கினார். அவர் ஒருபோதும் என் முன் அமர்ந்து தொழிற்சங்க பாடங்களை ஒப்புவித்ததில்லை…. அப்படி அவருக்கு செய்யவும் தெரியாது. ஆனால் தனது சுயநலமற்ற,ஆளுமை நிறைந்த செயல்பாடுகளால் மெல்லமெல்ல பெரும் தாக்கத்தோடு என்னுள் ஊடுருவ துவங்கினார்.

ஒரு மத்தியதர தொழிற்சங்கத்தை தலைமையேற்று பெரும்பான்மையோடு நடத்துவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதனையும் அத்தனை சமூக பார்வையோடும், தீவரத்தோடும் முன்னெடுப்பது என்பது பறக்கும் கொக்கின் தலையில் இருக்கும் வெண்ணையை குறிபார்த்து அடிப்பதற்கு ஒப்பானது.

மிகப்பெரும் ஆளுமையும், சுவாரஸ்யமான பேச்சாற்றலும் அவருக்கு இயல்பாய் அமைந்த குணாம்சங்கள். எவரிடத்தில், எந்நேரத்தில் என்ன தொனியில் பேச வேண்டும் என்பதில் அவர் கைதேர்ந்தவர். பலமுறை அவரோடு நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தைக்கு சென்ற அனுபவங்கள் எனக்கு உண்டு. பிரதான கோரிக்கைகளை அவர் எடுத்தவுடன் பேசிவிட மாட்டார். நிர்வாகத்திற்கு நாங்கள் எது குறித்து பேச வந்துள்ளோம் என தெரிந்தும் அமைதியாக எங்கள் கோரிக்கைகளை முன்வைக்க அனுமதித்து அதற்கான பதில்களோடு காத்திருப்பார்கள், இவர் சம்பந்தமேயில்லாமல் வேறு ஒரு இடத்தில், சமயங்களில் நிர்வாகிகள் அணிந்திருக்கும் உடையின் விலையை கேட்டு என அவர்களது இறுக்கத்தை உடைத்து இயல்பாய் வேறுபல விஷயங்களைப் பற்றி உரையாடத் துவங்குவார். சகஜமாய் அவர்கள் உரையாடத் துவங்கும் போது கோரிக்கைகளை கடைவிரிப்பார். அவர்கள் தயாரிப்புகள் எல்லாம் தகர்ந்து போய் இவரது தாளத்திற்கு தலையசைக்க ஆரம்பித்திருப்பர்.

இப்படித்தான் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என அறுதியிட்டு அவர் ஒருநடைமுறையை கடைபிடித்தது கிடையாது. ஆனால் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஒருவிதமாகவும்,வெற்றிகரமான இயக்கங்களுக்கு பிறகான காலக்கட்டங்களில் ஒருவிதமாகவும், என பலவிதங்களில் காலசூழலுக்கு ஏற்ப அவர் நடத்தியக் காட்டிய பேச்சுவார்த்தைகள் என்னளவில் எந்த பல்கலைகழகத்தில் கற்றுப் பெற முடியாத அற்புத அனுபவப் பாடங்கள்.

வெகுஜன இயக்கங்களில் எதிரிகளை அடையாளம் கண்டு கொள்வது அத்தனை முக்கியமானது. நாம் நம் எதிரிகளை அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை எனில் நாம் எத்தனை உன்னதமான நோக்கத்திற்காகவும் சமரசமற்று போராடியும் பயனற்று போகும்! இன்றைய சூழலில் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை பறிக்கும் எதிரிகளாக அதிகாரவர்க்கங்கள் மட்டும் இருப்பதில்லை பல சந்தர்பங்களில் அடிமை மனோபாவத்தின் எச்சங்களாக சில ஞமிலிகளும் இருப்பார்கள்! நாம் அவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டே நாம் நமது இயக்கங்களை முன்னெடுக்க வேண்டி இருக்கும்.அப்படி நபர்களை எடைபோடுவதில் தோழர்.சோலைமாணிக்கம் வல்லவர். ஒவ்வொரு நபரையும் அவரது இயல்புகளோடு அறிந்து வைத்திருப்பார். ஆகவே அவரால் எதிரிகளை எளிதில் அடையாளப் படுத்த முடியும். ஆகவே முன் கூட்டியே சில விஷயங்களை அனுமானித்துக் கொண்டு அவர் இயக்கங்களை தடையின்றி முன்னெடுப்பதையும் நான் ஆச்சர்யத்தோடு வியந்து பார்த்திருக்கிறேன்.

அதேபோல் பாண்டியன் கிராம வங்கியின் ஒவ்வொரு ஊழியருக்கும் மாத்திரமல்ல அவர்தம் குடும்பத்தினருக்கும் மிகவும் பரிச்சயமான நபர் அவர்! அவருக்கு ஆயிரம் காதுகளும், ஆயிரம் கண்களும் உண்டோ என பலமுறை நான் வியந்துள்ளேன். ஏனெனில் வங்கியில் எந்தக் கிளையில் எந்தப் பிரச்சனை நடந்தாலும் அது நிர்வாகத்தின் காதுகளுக்கு செல்லும் முன் அவரது கவனத்திற்கு வந்துவிடும். அப்படிப்பட்ட நேரங்களில் முடிந்தவரையில் தானே சென்று அப்பிரச்சனைகளில் தலையிட்டு ஊழியர்கள் பாதிக்கப்படா வண்ணமும், வங்கியின் பெயர் களங்கப்படா விதத்திலும் பார்த்துக்கொள்வார்.

அவருக்கான ஆளுமைக்கும் செல்வாக்கிற்கும் அவர் நினைத்திருந்தால் எப்போதோ பதவி உயர்வுகள் பெற்று அதிகாரத்தின் உயர்ந்த பதவிகளில் வீற்றிருக்கலாம். ஆனால் அவர் எல்லாவற்றையும் ஊழியர்கள் நலனுக்காகவும், தொழிற்சங்கத்தை கட்டுவதற்குமே பயன்படுத்தினாரே ஒழிய சிறு கணமேனும் அவரது சுயதேவைக்காகவோ நலனுக்காகவோ பயன்படுத்திக் கொண்டதில்லை. அவர் தன் இழப்புகளை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டார். அதுதான் அவரை வெகுஜனத் தலைவராக வலம்வரச் செய்தது.

தான் ஒரு பொதுச்செயலாளர், அகில இந்திய தலைவர்களில் ஒருவர் என்று அவர் ஒருபோதும் தன்னை எங்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டியதில்லை. எங்கள் சங்க அலுவலகத்தில் தாகம் என்று எங்கள் கைகள் நீண்டால் தண்ணீர் கொண்டு வரம் கரங்கள் அவருடையதாகவே இருக்கும், அவர் ஒருபோதும் வயது பாராட்டி பழகியதில்லை. இப்படியாக சக தோழனாய் மிகவும் இயல்போடு பழகி தொழிற்சங்க உணர்வுகளை எங்களுக்குள் செலுத்தி சமூக மனிதர்களாக எங்களை உருவாக்கவும் அவர் தவறவில்லை!
“என்னுடைய துப்பாக்கியை வேரொறுவர் எடுத்து அநீதிக்கு எதிராக போராடுவார்கள் என்றால் நான் கொல்லப்படுவதை பற்றி கவனம் செலுத்த மாட்டேன்”- என்றான் சேகுவேரா. அதுபோலவே மிகப்பெரும் நம்பிக்கையோடு தோழர். சோலைமாணிக்கத்தின் கரங்களும் எங்களை நோக்கி நகர்ந்தே வந்துள்ளது. நிச்சயம் அவர் கரங்கள் ஏமாற்றத்தோடு விடைபெறாது!!!

ஒரு சமரசமற்ற போராளியாக, நரம்பு புடைக்க வீதியில் நின்று அநீதிகளுக்கு எதிராக கோஷமிடும் கலகக்காரனாக, என்றளவில் மாத்திரம் நான் இதுவரை எழுதியதை வைத்து அவரது சித்திரத்தை குறுக்கி விடாதீர்கள்! ஏனெனில் நக்கலும், நைய்யாண்டியும் நிறைந்த குசும்புக்கார குழந்தையும் கூட அவர்!
அவருக்கு தேசமெங்கும் நண்பர்கள் உண்டு. அதற்கு அவர் தேசிய அளவில் அறிமுகமிக்க முதிர்ந்த தொழிற்சங்கவாதி என்பதை தாண்டியும் இருக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று அவருக்கு மட்டுமே தெரிந்த அந்த…. சிறப்பு பாஷை!!

“எக்கல மோன மோன…கிக்லி பிக்காலே பக்கலபக்க கிக்லிப் பப்பா…”-இதற்கான அர்தத்தை ஆய்வு செய்யாமல் இங்கு ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன்…

நான், சோலை அண்ணன், தோழர்கள். அருண், சங்கர் ஆகியோர் இரயிலில் ராஜஸ்தான்- “சிக்கார் மாநாட்டிற்கு” பயணித்துக் கொண்டிருந்தோம். எங்கள் நால்வரோடு இரண்டு ஆயுதமேந்திய இராணுவ வீரர்களும் எங்கள் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் வடநாட்டு வீரர்கள்!!! இரண்டு நாள் பயணமாதலால் இயல்பாக இரயில் சிநேகம் மலர்ந்தது.அவர்களுக்கு ஆங்கிலமும் அவ்வளவாக தெரியவில்லை, எங்கள் நால்வருக்கும் ஹிந்தியை தமிழிலும்,ஆங்கிலத்திலும் எழுதினால் மாத்திரமே அது ஹிந்தி என புரியும்.

ஆனாலும் அச்சா, பச்சா, பாணி நை… என சென்று கொண்டிருந்தோம்.அவர்கள் இருவரும் தாங்கள் விழித்திருக்கும் சமயங்களில் பெரும்பாலும் துணி சுற்றிய துப்பாக்கிகளை கையிலே வைத்துக் கொண்டு பயணித்தார்கள். சோலை அண்ணன் அவ்வப்போது எங்களிடம் திரும்பி”இவனுங்க இத ஏன்பா கைல வச்சுக்கிட்டே வர்றானுவ…? குண்டு லோட் பண்ணியிருப்பாய்ங்ளோ?வெட்டிப் பயலுவ..” என ஏதாவது கேட்டுக் கொண்டே இருந்தார். நான் “ஏண்ண நீங்களே அத கேட்டாத்தான் என்ன?” என தெரியத்தனமாய் சொல்லிவிட்டேன்.
சோலை அண்ணன் எங்களை பார்த்து திரும்பி “இப்ப நான் என்ன செஞ்சாலும் சிரிக்க கூடாது..” என உத்திரவிட்டார். நாங்க கலவரமாகிக் கொண்டிருக்கையிலே அவர் தன் வேலையை ஆரம்பித்துவிட்டார். “கண்.. நைஸ் கண்…” என்றவர் அவர்கள் புன்சிரிப்போடு தலையை ஆட்டியதும் “இக்கில பிக்காலே… கிக்கில..இக்கல பிக்கா…கேல மோன மோன…” என தன் பாஷையை ஏதோ அத்தனை சீரியஸாக பேச தொடங்கிவிட்டார், அவர்களும் பெரியவர் ஏதோ தன் மொழியில் அவர்களுக்கு அறிவுரை தான் வழங்குகிறார் என நினைத்து தலையாட்ட துவங்கினர்.

எங்களாலோ சிரிப்பை அடக்க முடியவில்லை. அருண் என் தொடையை கிள்ள…சங்கரோ ”வம்பா உண்ம தெரிஞ்சு நாம பலியாக போகிறோம்…” என வாயை பொத்திக் கொண்டு இடத்தை காலி செய்து ஓடிவிட்டார். அந்தப் பயணத்தில் தான் ’நித்திய கண்டம் பூரண ஆயிசு…’ என்ற முதுமொழியின் அர்த்தமே எங்களுக்கு முழுமையாக விளங்கிற்று.

இப்படித்தான் அவர் எப்போதும்…. பஸ்ஸில் பயணம் செய்கையில்,ஓட்டலில் சாப்பிடுகையில் என முன்பின் தெரியாத ஒருவரிடம் அத்தனை இயல்பாய் நெடு நாளைய உறவினர் போல் சிரிக்காமல் பேசத் துவங்கிவிடுவார். தோற்றத்தில் மரியாதைக்குரிய முதியவராய் இருப்பதால் யாரும் குழம்பவே செய்வார்களே ஒழிய கோபம் கொள்ள மாட்டார்கள்…. இவரும் நோகாமல் நைய்யாண்டி செய்த வண்ணமே இருப்பார், ஆனால் அவருடன் இருக்கும் நமக்குத் தான் நமது அடிவயிற்றின் ஓசை அவ்வப்போது கேட்கும்!
ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப்பெயர் வைப்பது, மற்றவர்களைப் போல் நடித்து காண்பிப்பது, என எப்போதும் துறுதுறுவென்று ஏதோ ஒன்று செய்து காட்டிக்கொண்டிருக்கும் உற்சாக மனிதர் அவர்!

பயணங்கள் அவருக்கு ஒருபோதும் சலித்ததில்லை. சின்னஞ்சிறு வசதிகளைக் கூட எதிர்பார்க்காமல் அத்தனை துடிப்போடு பயணித்துக் கொண்டே இருப்பார். அவரது கால்கள் ஓய்ந்து அமர்ந்து நான் பார்த்ததில்லை. அவர் தன் வாழ்நாளில் வீட்டில் கழித்த இரவுகளைவிட பயணத்தில் கழித்த இரவுகள் தான் அதிகமாயிருக்கும்! ஒரு தேடல் நிறைந்த தொழிற்சங்கவாதி ஓய்வறியாமல் பயணிப்பதில் வியப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் அந்தப் பயணங்களை சாத்தியமாக்கியதற்கு பின்னால் அவர்தன் சொந்த வாழ்வில் எத்தனை முக்கியமான தருணங்களை இழந்திருப்பார்? இவர் போன்ற வெளிச்சமிடப்படாத எளிய மனிதர்களின் உன்னதமான தியாகங்களில் தான் நம் தேசத்தின் இறையான்மைகள் இன்னும் இறவாமல் துஞ்சுகிறது!

வரலாறு என்பது மண்வெறி பிடித்த மன்னர்களின் பிறப்பு, இறப்புகளை நினைவில் கொள்வதோ அல்லது அவர்களது தயவால் யுத்தங்களில் சிந்தப்பட்ட இரத்தங்களின் காரணிகளை ஆராய்வதோ அல்ல. சாமான்ய எளிய மனிதர்களின் வாழ்வும், அவர்கள் சார்ந்து வாழும் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளும் சமரசமற்று பதிவு செய்யப்படுமாயின் அது தான் வரலாறு!!!

அந்த வகையில் இது ஒரு சமரசமற்ற தொழிற்சங்கவாதியின் தன்னலமற்ற,போராட்டங்கள் செறிந்த வாழ்க்கை இங்கு வரலாறாகிறது. அந்த உன்னத போராளியின் வாழ்க்கை குறிப்பை வரைவதில் எனது பேனாவின் மையும் இணைகிறது என்ற பெருமையோடு… மாற்றங்கள் தரும் வலிகளையும், விழிகளில் வழியும் நீரோடு ஏற்றுக்கொள்கிறேன்.