வியாழன், 14 மே, 2015

ஒரு புத்தக வெளியீடும் சில அனுபவங்களும்....

"பதினாறாம் காம்பவுண்ட் "என்ற பெயரில் நான் எனது முதல் நாவலை எழுதி வெளியீட்டும் உள்ளேன். இங்கு நாவல் எழுதுவதை விட சவால் நிறைந்ததும், சோதனை மிகுந்ததுமாய் இருப்பது நாம் நமது படைப்பை பொது வெளிக்கு கொண்டுவருவதே ஆகும். நான் இந்த நாவலை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி முடித்தேன். எதை எப்படி புத்தகமாக வெளியிடுவது? அதற்கு யாரை அணுக வேண்டும்? என பல கேள்விகளுடன் நான் கூகுளில் பதிப்பகத்தார் சிலரின் தொடர்பு எண்களையும், முகவரியையும் தேடி குறித்துக் கொண்டு ஒவ்வொன்றாய் தொடர்பு கொண்டேன். ஆசை யாரை விட்டது.... நான் தீவிர புத்தக வாசகனாதலால் சில பதிப்பகங்கள் மீது எனக்கு அளப்பெரிய மரியாதை இருந்தது... அந்த தினுசில் முதலில் ஒரு பிரபலமான பதிப்பகத்தை தொடர்பு கொண்டேன், அவர்களும் மிக மரியாதையுடனும் பொறுப்புணர்வுடனும் என் படைப்பை பற்றி சில கேள்விகள் கேட்டு விட்டு அதன் தட்டச்சு பிரதி ஒன்றை அவர்களது முகவரிக்கு அனுப்பி வைக்க சொன்னார்கள். அப்படி அனுப்பிய பின் ஒரு மாதம் கழித்தே என்னை தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.
அந்த ஒரு மாதம் என் வாழ்நாளில் மறக்க முடியாது சில பல நாள், வார இதழ்களுக்கு நான் அளிக்க வேண்டிய பேட்டிகளுக்கு என்னை தயார் படுத்தி கொண்ட காலமது.இருக்காதா பின்னே! எத்தனை பெரிய பதிப்பகம் நம் படைப்பை அங்கீகரிக்க இருக்கிறது. நாமும் லேசுப்பட்டவரா தமிழ் இலக்கிய உலகை நெம்புகோலிட்டு தூக்கிவிடும் படைப்பையல்லவா வழங்கி இருக்கிறோம் என மிதமிதப்பில் திரிந்த காலமது. சரி! ஒருவழியாய் ஒரு மாதகாலம் ஒருண்டோடியது. நானும் பதிப்பகத்தாரை மீண்டும் தொடர்பு கொண்டேன். அவர்கள் மேலும் சில வாரங்கள் அவகாசம் கேட்டார்கள். நான் மீண்டும் காத்திருக்க துவங்கினேன்... ஆனால் இப்போது அவர்கள் மீது கொஞ்சம் எரிச்சல் அதிகரிக்க துவங்கியது. சில வாரங்கள் கழித்து தொடர்பு கொண்ட போது மேலும் சில காரணங்களை சொல்லி சில தினங்கள் கேட்டார்கள்... நான் கொஞ்ச கொஞ்சமாய் நம்பிக்கை இழக்க துவங்கினேன்... ஒருவழியாய் என் படைப்பு பிரசூரிக்க தகுதியற்றது என திருப்பி அனுப்பி வைத்தார்கள். நொந்து வெந்து அவலாய் போனேன் என்பார்களே! அப்படி ஆகிப்போனேன்.
அதிலிருந்து மீண்டு வர சில தினங்கள் பிடித்தது... மீண்டும் என் நண்பன் ஜெபாவின் வற்புறுத்தலால் வேறு சில பதிப்பகங்களை தொடர்பு கொள்ள துவங்கினேன். இம்முறை நான் பெரிய பதிப்பகங்களை அணுகாமல் சின்ன புதிய பதிப்பகங்களை அணுக துவங்கினேன்.சிலர் படைப்பை பற்றி எல்லாம் கேட்காமல் நேரடியாய் டீலில் இறங்கினார்கள். இருபதாயிரம், இருபத்தி ஐந்தாயிரம், முப்பதாயிரம் என அந்தக் குரல்கள் ஒலித்தது எனக்கு சபலம் தட்டினாலும் எனது நிதி நிலைமை ”பிம்பிலிக்கி பிலாபியாக....” இருந்தது.
காலம் கடந்தது காத்திருந்தேன், இந்த இடைப்பட்ட காலங்களில் முகநூலில் பதிப்பகத்தார் ஒவ்வொருவருக்காய் நட்பு கோரிக்கை வைத்து என் நண்பர்கள் வட்டத்துக்குள் உள் இழுத்துக் கொண்டேன். மெல்ல சாட்டிங்கை ஆன் செய்து விட்டு அவர்களது வருகைக்காக கொக்கைபோல் காத்திருந்தேன். ஒருநாள் ஒரு பெரிய பதிப்பகத்தின் உரிமையாளரும், கவிஞருமாய் இருப்பவரிடம் சாட்டிங்கை துவங்கினேன். அவரும் நல்ல மூடில் இருந்திருப்பார் போல நல்ல பேசிக் கொண்டு வந்தார்... நான் மெல்ல இப்படி ஒரு நாவல் எழுதியுள்ளேன் அதை தங்கள் பதிப்பகம் மூலம் பதிப்பிக்க என்ன செய்ய வேண்டும்? என கேட்டதும் தான் தாமதம் அவர் பதிலளிப்பதை நிறுத்திக் கொண்டார்.
வேறு ஒருவரை இப்படி தொடர்பு கொண்ட போது நான் பல விஷயங்கள் எழுத வேண்டி உள்ளது தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டார்.நானும் எனது படைப்பை கெடப்பில் போட்டு விட்டு என் வேலைகளை பார்க்க துவங்கினேன். வங்கியில் பதவி உயர்வு அளித்து இராமநாதபுரம் அனுப்பி வைத்தார்கள்.... அடர் தனிமை வாசிப்பும் எழுத்துமாய் இருந்த போது எனது இந்த படைப்பினை மீண்டும் எழுத துவங்கினேன்.பெரிய மாற்றங்கள் என்று இல்லாமல் சின்ன சின்ன சேர்ப்புகள் செய்தேன்.
அதன் பிறகு எழுத்தாள நண்பர்கள் சிலருக்கு அனுப்பி கருத்து கேட்டேன். அதில் தோழர்.மூர்த்தி மட்டும் படித்து விட்டு ”தோழா நல்லா வந்திருக்கு....” என்றார்.அவரது உதவியோடு வம்சி பதிப்பகத்தாரை தொடர்பு கொண்டேன்.... ஒரு அற்புதமான குடும்பம் எனக்கு கிடைத்தது...! என் புத்தகத்தை அவர்கள் அச்சிலேற்றியதை விட எனக்கு இன்பம் தருவித்தது தோழர்.ஷைலஜா அவர்கள் என் படைப்பு குறித்து சிலாகித்ததே!!! நிச்சயமாய் அவர்களுக்கு நன்றி மட்டும் சொல்லமாட்டேன்...ஏனெனில் அந்த ஒற்றைச் சொல்லால் நான் எதிர்வினை ஆற்ற விரும்பவில்லை, அதற்கு ஈடாய் வாழ்நாளுக்குமான எனது நட்பு.....!
சரி! புத்தகம் தான் வந்துவிட்டதே வெளியீடு எதற்கு என்ற மனநிலையில் தான் இருந்தேன். ஆனால் தோழர். ஷைலஜா அவர்கள் தான் டிசம்பர் மாதம் வெயிடலாம், சனவரியில் வெளியிடலாம் என ஒவ்வொன்றாய் சொல்லி வந்தார். ஒருகட்டத்தில் எனக்கும் அப்படி நடத்த வேண்டும் என ஆசை வந்தது.ஒருவழியாய் பிப்ரவிரி 22 நடத்திவிடலாம் என முடிவு செய்தோம். த.மு.எ.க.ச தோழர்கள் கேட்டு கொண்டதால் அந்த தேதியையும் மாற்றினோம். மார்ச்1 என முடிவானது. ஆனால் தோழர்.ஷைலஜா அவர்கள் தவிர்க்கவே முடியாத காரணங்களால் வர இயலாமல் போனது. இந்த நேரங்களில் எல்லாம் அண்ணன் மாதவராஜின் அரவணைப்பும், ஊக்கமும் ஆறுதலாய் இருந்தது. ஒருவழியாய் புத்தகம் வெளியிட பட்டது...உச்சி முகர்தலும், சின்னச் சின்ன விமர்சனங்களுமாய் என் காயங்களுக்கு மருந்தாகிக் கொண்டிருக்கிறது.... இந்த கனத்தில் வள்ளுவனின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது...” தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்...”என்று!!!!

1 கருத்து:

vimalanperali சொன்னது…

வாழ்த்துக்கள்.