வியாழன், 14 மே, 2015

இந்திய கோயில்கள் விற்பனைக்கு!

கிராம வங்கிகள் என்னும் ”ஆபரணத்தை” தனியார்களுக்கு சூட்டி அழகு பார்க்க முடிவு செய்து விட்டது இந்திய அரசாங்கம். ஆம்! கால் நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக நம் தேசமெங்கும் உள்ள கிராமங்களின் பொருளாதார மேம்பாட்டில் பெரும்பங்காற்றி வரும் கிராம வங்கிகளின் பங்குகளை ”மறுமுதலீடு” என்னும் பெயரில் தனியார்கள் வசமாகிறது.
1975-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசாங்கம் ஒரு சிறப்பு சட்டத்தின் மூலம் கிராம பொருளாதார மேம்பாட்டிற்காக தேசமெங்கும் கிராம வங்கிகள் துவங்க முடிவு செய்தது. “இந்தியா பெரு நகரங்களில் வாழவில்லை… மாறாக அது கிராமங்களில் தான் வாழ்கிறது” என்றுரைத்த அண்ணல் காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2, 1976-ல் முதன்முதலாக ஐந்து கிராம வங்கிகள் தேசமெங்கும் துவங்கப்பட்டது.
அதுவரை வங்கிகள் பெரும் நகரங்களில் மாத்திரம் இயங்கி வந்த சூழலில் எளிய கிராம மக்களுக்கும் வங்கிச்சேவை சென்றடைந்தது. புளிச் சட்டிகளில் சுருட்டி பதுக்கி பாதுக்காக்கப் பட்டு வந்த அந்த எளிய மனிதர்களின் வேர்வை மிச்சங்களை பாதுகாப்பாய் சேமிக்க வழி செய்து அவைகளை வட்டி போட்டு பெருக்கி அந்த எளிய மனிதர்களுக்கென்று ஒரு நிதி ஆதாரத்தை அமைத்து கொடுத்தது கிராம வங்கிகள். கந்துவட்டிக்கு கடன் பட்டு மீளாதுயரில் தவித்த விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுத்து விவசாயத்தை மாத்திரமல்ல அவர்களது மரியாதையையும் மீட்டெடுத்து கொடுத்தது கிராம வங்கிகள். இப்படியாக லாப நோக்கோடு மாத்திரம் நின்றுவிடாமல் ஒரு சமூகப் பார்வையோடும் கிராம வங்கிகள் செயல்பட்டு வருகிறது.
தற்போது மொத்தம் 56 கிராம வங்கிகள், ஏறத்தாழ 19000 கிளைகளோடு 27 மாநிலங்களில் உள்ள 639 மாவட்டங்களில் தேசமெங்கும் இயங்கி வருகிறது. இதில் 18000 கிளைகள் வரை கிராமங்களில் மாத்திரம் இயங்கி வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பாண்டியன் கிராம வங்கி 272 கிளைகளோடும், வட மாவட்டங்களில் பல்லவன் கிராம வங்கி 150-க்கும் மேற்பட்ட கிளைகளோடும் இயங்கி வருகிறது. இன்று வரை சுமார் 15.5 கோடி மக்கள் வரை கிராம வங்கிகளின் சேவையால் பயனடைந்து வருகின்றனர். இதுவரை சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் கோடிகள் வரை வைப்பு நிதியாக திரட்டப்பட்டுள்ளது அதில் ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய்கள் வரை ஏழை எளிய மக்களுக்கு கடனாக வழங்கிப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான வங்கிச் சேவைக்குப் பின்னால் வெறும் 196 கோடி ரூபாய்கள் தான் அரசாங்க பங்கு முதலீடாக இதுவரை உள்ளது. கிராம வங்கிகளின் மூலம் இதுவரை திரட்டப்பட்ட லாப இருப்பானது பதினைந்தாயிரம் கோடிகளுக்கு மேல் உள்ளது. இப்படி லாபகரமாய் இயங்கி வரும் அரசு நிறுவனத்தை தான் “மறுமுதலீட்டு தேவை” என்னும் காரணத்தை சொல்லி தனியார்களிடம் கொடுக்க துடிக்கிறது மோடி அரசாங்கம்.
இதுவரை கிராம வங்கிகளின் பங்குகள் 50% மத்திய அரசிடமும், 35% ஸ்பான்ஸர் (தாய்) வங்கியிடமும், 15% மாநில அரசிடமும் இருந்து வந்தது. தற்போது இதில் மூன்று முக்கிய சட்டதிருத்தங்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது, இதுவரை கிராம வங்கிகளில் அனுமதிக்கப்பட்ட 5 கோடி மூலதனத்தை 2000 கோடியாக உயர்த்தியுள்ளார்கள். அப்படி உயர்த்துவதற்கு தற்போது உள்ள பங்குகளில் 51% பங்குகளை மாத்திரம் இவர்கள் வைத்துக் கொண்டு மீதம் 49% பங்குகளை தனியார்களுக்கு கொடுக்க வசதியாக சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக குழுமத்தில் அதிகப்பட்சமாய் மூன்று இயக்குனர்கள் வரை தனியார் பங்குதாரர்கள் நியமித்து கொள்ளும் வகையிலும் வழிவகை செய்துள்ளார்கள்.
இதற்கு மோடி அரசு சொல்லும் காரணம் இன்னும் தினுசானது. அதாவது கிராம வங்கிகள் லாபகரமாய் இயங்கி வருகிறதாம். அவைகளை மேலும் சிறப்பாய் இயங்கச் செய்ய வேண்டுமானால் தனியார்கள் தான் முதலீடு செய்ய வேண்டுமாம். அரசாங்கத்திடம் இப்படி லாபம் கொழிக்கும் ஒரு நிறுவனத்தில் ”மறுமுதலீடு” செய்ய பணம் இல்லையாம். ஆகவே, லட்சக்கணக்கான கோடிகளின் வர்த்தகத்தை சில ஆயிரம் கோடிகளுக்கு அடகு வைக்க போகிறார்களாம்!
கிராம வங்கிகளின் இந்த அசூர வளர்ச்சிக்கு பின்னால் இருப்பது 80000 கிராம வங்கி ஊழியர்களின் கால் நூற்றாண்டுக்கும் மேலான உறிஞ்சப்பட்ட அவலம் நிறைந்த வாழ்வும், ”அப்பாவித்தனமான” கிராம மக்களின் அரசாங்கத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் தான்! உலகமெங்கும் உள்ள தனியார் பெரும் வங்கிகள் 2008-ஆம் ஆண்டில் துவங்கிய மாபெரும் பொருளாதார வீழ்ச்சியில் தரைமட்டமான போது இந்திய பொதுத்துறை வங்கிகள் மாத்திரம் சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் கம்பீரமாய் உலக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் பொதுத்துறையாய் நாம் நீடிப்பதாலே இந்திய வங்கிகள் பாதுகாக்கப்பட்டது என மார்தட்டிக் கொண்டாலும், அவர்களே தேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதிலே முன்னோடிகள்! ஆட்சிகள் மாறினாலும் நம் தேசத்தில் இந்த தனியார் மோக அவலக் காட்சிகள் மட்டும் மாறவில்லை.
ஏற்கனவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்றதினால் தான் அங்கு கார்ப்பரேட்களுக்கு அதிக கடன் கொடுக்கப்பட்டு அவைகள் வராக்கடன்களாக முடங்கியுள்ளது. அந்த நிலையை கிராம வங்கிகளுக்கும் தொடர அனுமதிப்பது எப்படி நியாயமாகும்? கிராம மக்களின் சேமிப்பையும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்ப்பதை எப்படி வேடிக்கைப் பார்க்க முடியும்? இந்த அவலங்களுக்கு எதிராக கிராம வங்கி ஊழியர்கள் தேசமெங்கும் தங்களது ஒன்றுபட்ட எதிர்ப்புக் குரலை உரத்து எழுப்பி வருகிறார்கள்.
”பொதுத்துறை நிறுவனங்களை இந்திய ஜனநாயக நாட்டின் கோயில்கள்” என முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு வர்ணித்தார். இன்றைய பாரத பிரதமருக்கோ அக்கோயில்களில் அம்பானிகளையும், அதானிகளையும் கொலுவேற்றி பார்ப்பதே பெருங்கடமையாகிப் போனது

கருத்துகள் இல்லை: