சனி, 2 ஜனவரி, 2010

அக்கினிக் குஞ்சுகள்....


எங்கள் தொழிற்சங்க வாழ்வின் முக்கியமான அத்தியாயங்கள் எங்கள் வங்கி(பாண்டியன் கிராம வங்கி) நிர்வாகத்தின் உதவியால் வரையபட்டுக்கொண்டிருக்கிறது......

நிறுவனத்தை நிர்வகிப்பதற்கு பெயர் நிர்வாகம்.சரி! நிர்மூலமாக்குவதற்கு என்ன பெயர்....? தெரிந்து கொள்ள வேண்டுமா?அகராதியை தேடி ஓட வேண்டாம்.வாருங்கள்...! விருதுநகரில் உள்ள எங்கள் வங்கியின்(பாண்டியன் கிராம வங்கி) தலைமை அலுவலகத்திற்கு....

“பேய்கள் அரசாண்டால் பிணம் தின்பது சாத்திரமாகும்” என்று சொல்வார்கள்.இப்போது எங்கள் வங்கியில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.தனிமனித சர்வாதிகாரத்தால் பொதுத்துறை நிறுவனமான எங்கள் வங்கி வீழ்ச்சி பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுவாக எல்லா வங்கித்தலைவர்களும் வங்கியின் வணிகம் குறித்தும்,வளர்ச்சி விகிதம் குறித்தும் ஒப்பந்தமிட்டு பணியாற்றுவர்.ஆனால் எங்கள் வங்கியின் நிர்வாகியோ ஊழியர் விரோத போக்கை அதிகரிப்பது குறித்தும்,தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவது குறித்தும் ஒப்பந்தமிட்டு உழைத்து வருகிறார்.

தோழர்களே! சுமார் இருபத்தி ஆறு மாதங்களுக்கு முன்னால் எங்கள் வங்கியின் சேர்மேனாக(CHAIRMAN) எங்கள் தாய் வங்கியான ஐ.ஓ.பியால் அவர் நியமிக்கப்பட்டார்.அவர் ஒரு பட்டியலின சமூகத்தை சார்ந்தவர்.அப்போது எங்கள் வங்கியில் ஒரு பார்ப்பனர் சேர்மேனாக இருந்தார்.அவருக்கோ எங்கள் வங்கியின் சேர்மேன் நாற்காலியை காலி செய்வதில் துளியும் விருப்பம் இருக்கவில்லை.புதிதாக நியமிக்கப்பட்ட இப்போதைய எங்கள் சேர்மேனுக்கோ அப்போது இருக்கைகள் கூட ஒதுக்கப்படவில்லை.

ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட தொழிற்சங்கமாதலால் எங்களால் இந்த கொடுமையை காண சகியாமல் இப்போதைய சேர்மேனுக்காக நாங்கள் போரட்ட களம் கண்டோம்.அப்போது அவருக்காக எங்கள் நிர்வாக அலுவலகம் முன்பாக எங்கள் ஊழியர்களையும் தோழமை சங்கங்களையும் ஒன்றிணைத்து ஓரு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினோம்.

அதன்விளைவாக எங்கள் தாய் வங்கியும் ஒரு மாபெரும் பதட்டத்தை தவிற்கும் விதமாக அப்போதைய சேர்மனை உடனே திருப்பி அழைத்துக்கொண்டது.மாபெரும் போராட்டத்தின் விளைவாக எங்கள் வங்கி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பட்டியலினத்தவர் சேர்மேனாக பொறுப்பேற்றார்.

ஒரு சில மாதங்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி வங்கிப் பணிகள் சுமூகமாகத்தான் சென்று கொண்டிருந்தது.அப்போது ஊழியர்கள் சார்பாக சில கோரிக்கைகளை கொண்டு நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தைக்கு சென்றோம்.பேச்சுவார்த்தையும் சுமூகமாகவே இருந்தது.எங்கள் கோரிக்கைகளில் சிலவற்றை உடனே நிறைவேற்றி தருவதாகவும்,சிலவற்றை எங்கள் தாய் வங்கியிடம் அனுமதி பெற்று நிறைவேற்றி தருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.ஆனால் அவர் அனைத்தையுமே ஒப்புக்குத்தான் ஒப்புக்கொண்டாரே ஒழிய அவர் அதில் எதையும் நிறைவேற்றவில்லை.

நாங்கள் தொடர்ந்து நினைவுபடுத்தும் போதும்,வலியுறுத்தும் போதும் அப்போதைக் அப்போது தலையாட்டுவாரே ஒழிய அவர் எதையும் நிறைவேற்றவில்லை.அதேவேளையில் சாமர்த்தியமாக காலம் தாழ்த்தியும் வந்தார்.ஒரு கட்டத்தில் எங்கள் பொறுமை எல்லையை கடந்தது.நாங்கள் போராட்ட களம் புகுவதை தவிற்க முடியாமல் போகும் என நிர்வாகத்தை எச்சரித்தோம்.அவர் தனது சுயரூபத்தை மெல்லமாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்.எந்த அவசியமும் இல்லாமல் தொழிற்சங்க தலைவர்களை டிரான்ஸ்பர் என்ற பெயரில் பந்தாடினார்.நாங்கள் வேறு வழியின்றி போராட்ட களம் கண்டோம்.அதன் விளைவாக நிர்வாகம் பணிந்தது.எங்கள் போராட்டம் வென்றது.

இப்படியாக நிர்வாகம் அப்போதைக்கு அப்போது முருங்கை மரம் ஏறுவதும் நாங்கள் அதை போராட்டத்தின் மூலமாக இறக்குவதும் தொடர்கதையானது.இதற்கிடையில் நாங்கள் எங்கள் வங்கியில் பணிபுரியும் நிரந்தரமாக்கப் படாத தோழர்களுக்காக போராட்டங்கள் நடத்தினோம்.அந்த மாபெரும் போராட்டங்களையும்,அதன் அவசியத்தையும் விளக்கி நானும்,தோழர்.காமராஜ்(அடர் கருப்பு) அவர்களும் எழுதிய கட்டுரைகளுக்காக வங்கி நிர்வாகத்தால் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டோம்.அதை காணச் சகியாத எங்கள் தோழர்களும்,வங்கி சார்பற்ற மற்ற தொழிற்சங்கங்களும் எங்களுக்காக போராட்ட களம் கண்டார்கள்.அதன் விளைவாக மூன்றே நாட்களில் நாங்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டோம்.எங்கள் போராட்டம் மீண்டும் வென்றது.

இப்போது ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்த சேர்மேன் பல கிளைகளுக்கு போன் செய்து அந்தந்த கிளை மேலாளர்களை தனது அதிகார மமதையால் மிகவும் மோசமான முறையில் வசைபாடியுள்ளார்.முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் வங்கியின் வளர்ச்சியை தவிற வேறு எதையும் அறிந்திராத உழைப்பின் சின்னங்கள் அவர்கள்.இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் எங்கள் வங்கியின் மொத்த வணிகமே ஒரு கோடிக்கும் குறைவாகவே இருந்தது.ஆனால் இன்றோ மொத்த வணிகம் 3000கோடி ரூபாய்க்கும் மேல் ஆகிவட்டது.ஆனால் இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இப்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை குறைவானதே!

அதற்கு காரணம்.....

எங்கள் வங்கியின் வளர்ச்சிக்காக தங்களது உடல்நலனைப் பற்றியோ அல்லது நேரத்தைப் பற்றியோ சிறிதும் கவலைபடாமல் உழைத்ததால் இன்று எங்கள் வங்கியிலிருந்து முறைப்படி பணிமூப்பு அடைந்து சென்றவர்களை காட்டிலும் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையே அதிகம்.(அப்படி உயிர் நீத்தவர்களில் என் தாயாரும் ஒருவர்! என்பது என் பெருமிதம்).வங்கியின் வளர்ச்சியும் தங்கள் வளர்ச்சியும் வேறு வேறானதாக பிரித்தரியாத உழைப்பின் சிகரங்களால் உருவாக்கப்பட்ட வளர்ச்சி இது.அப்படிப்பட்டவர்களைத் தான் இந்த சேர்மேன் “வேலையை ராஜினாமா செய்து விட்டு போ...”என தடித்த திமிர் மிகுந்த வார்த்தைகளை கொண்டு பரிகாசம் செய்துள்ளார்.

அதேபோல் புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட பெண் தோழர் ஒருவருக்கு அவரது சொந்த மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறையால் இயங்க முடியாமல் இயங்கி வரும் எங்கள் வங்கியின் கிளை ஒன்றிற்கு பணி மாறுதல் கேட்டோம்.(அவர் புதிதாக திருமணம் ஆனவரும் கூட.)அதற்கு இந்த சேர்மேன் சொன்ன வார்த்தைகள்...”இப்ப ஊர் பக்கத்துல மாறுதல் கேப்பீங்க அந்தப் பொண்ணு போய் அவ புருஷன் கூட சேர்ந்து வாழும்,பிறகு மெட்டர்னிட்டி லீவ்(maternity leave) கேப்பீங்க இது தேவையா..?”என்றார்.

அதேபோல் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு பெண் தோழர் நிறைமாத கர்ப்பினியாக இருந்தார்.அவருக்கு கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிளைக்கு பணி மாறுதல் வழங்கினார்.அதற்கு அந்த பெண் தோழர் தான் பிள்ளையை பெற்றெடுத்த பிறகு அந்த கிளைக்கு செல்வதாகவும் அதுவரை தான் தற்போது பணிபுரியும் கிளையிலேயே பணிபுரிய அனுமதி வழங்க கோரி கேட்டார்.ஆனால் இந்த சேர்மேனோ எந்தவித இரக்கமும் இல்லாமல் அதை நிராகரித்து விட்டார்.அதனால் இப்போது அந்தப் பெண்ணின் கருகலைந்துவிட்டது.ஆனாலும் இன்றுவரை அந்தப் பணிமாறுதலை நிர்வாகம் திரும்ப பெறவில்லை.

மேலும் தொழிற்சங்க தலைவர்களோடு பேச்சு வார்த்தையின் போது அவர் வங்கி ஊழியர்களை thick skinned people என குறிப்பிட்டுள்ளார்.அதாவது ”எருமைமாடுகள்” என்று.
.
தோழர்களே!

சுயமரியாதைக்காக மானம் போற்றும் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டும்,நடத்தப்பட்டும் வரும் தொழிற்சங்கத்தால் எப்படி இந்த அக்கிரமங்களையும்,ஆணவத்தையும் கண்டு அமைதிகாக்க முடியுமா?இப்படி குறைந்த பட்ச மனித மாண்புகளே இல்லாமல் ஊழியர்களை ஏதோ ”மாக்கள்” போல் கருதி வருபவருக்கு எதிராக ஒன்று திரண்டோம்! போராட்ட களம் புகுந்தோம்!

PGBEA-PGBOU-PGBOA(PANDYAN GRAMA BANK- Employees Association-Officers Union-Officers Association) என்ற எங்கள் வங்கியின் பெரும்பான்மை ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் கடந்த நவம்பர் மாதம் நெல்லையில் கூடி எங்கள் சுயமரியாதைக்காகவும், நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கிற்கு எதிராகவும் இந்த நிர்வாகத்தை கண்டித்து “நெல்லை பிரகடனம்” ஒன்றை அறிவித்தோம்.அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பம்மாயின......

முதற்கட்டமாக 30/11/09 முதல் 04/12/09 வரை எங்கள் தலைமை அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் கண்டோம்.மாபெரும் எழுச்சி மிக்க துவக்கத்தை அது தந்தது.ஆம் தோழர்களே! எங்கள் வங்கியின் பெரும்பான்மை ஊழியர்களின் சராசரி வயது ஐம்பதுக்கும் மேல்.உடலளவில் ரத்தகொதிப்பு முதல் சர்க்கரை நோய்வரை பல உடற்கோளாறுகள் இருந்த போதிலும் தோழர்கள் கொஞ்சமும் தயக்கமின்றி மிகுந்த உற்சாகத்தோடு பட்டினிப் போராட்டம் கொண்டது என் போன்ற இளம் தலைமுறையினருக்கு “தொழிற்சங்கம்” என்ற மந்திரச் சொல்லின் வீரியத்தை உணர்த்துவதாய் அமைந்தது.

அந்தப் பேரெழுச்சியோடு அடுத்த கட்ட போராட்டங்களுக்கான திட்டமிடல்களோடு எங்கள் தொழிற்சங்கங்கள் பயனித்து கொண்டிருந்த போது எங்கள் தோழமை சங்கத்தின் தலைவர் ஒருவரை(தோழர்.முத்துவிஜயன்) எந்தவித விளக்கமும் இன்றி இடைக்கால பணிநீக்கம் செய்து தனது பழிவாங்கல் நடவடிக்கைகளை துவக்கி வைத்தது எங்கள் நிர்வாகம்.அந்த சமயத்தில் தான் தாய்வங்கியான ஐ.ஓ.பி-யின் பொதுமேலாளர்களில் ஒருவர் எங்கள் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.அவர் எங்கள் வங்கியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களையும் சந்திக்க விரும்புவதாக எங்களுக்கு அழைப்பு வந்தது.நாங்கள் சென்றோம்.எங்கள் குறைகளை கேட்டார்.நம்பிக்கை அளித்தார்.எங்களது சேர்மேனோடு மறுதினம் பேச்சுவார்த்தை நடத்த அனுமதியும் வாங்கி தந்தார்.

நம்பிக்கையோடு சென்ற தலைவர்களை கொஞ்சமும் நாகரீகமின்றி பேச்சுவார்த்தைக்கு அனுமதி தர மறுத்து அவமதித்தார் இந்த சேர்மேன்.இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டதால் தோழர்.முத்துவிஜயனுக்கு(PRESIDENT-PGBOA)பேச்சு வார்த்தையில் அனுமதி இல்லை என்றார்.தொழிற்சங்கம் தான் தனது பிரதிநிதிகளை முடிவு செய்யும்.அதுவே மரபு.ஆனால் இந்த சேர்மேனோ அதையெல்லாம் தெரிந்திருந்த போதும் வேண்டுமென்றே அப்படி சொன்னார்.

பொறுமையிழந்த எங்கள் தலைவர்களில் இருவர்(தோழர்.சோலைமாணிக்கம் மற்றும் தோழர்.செல்வகுமார் திலகராஜ்) அங்கேயே காலவரையற்ற பட்டினி போராட்டம் அறிவித்தார்கள்.காவல்துறை வருவிக்கப்பட்டது.நாங்கள் எங்கள் நிலையை எடுத்துச் சொன்னோம்.எங்கள் தரப்பு நியாயங்களை புரிந்து கொண்ட காவல்துறை நிர்வாகத்தோடு எங்களுக்காக பேசியது.வேறு வழியின்றி காவல்துறை ஆய்வாளர் முன்னிலையிலே பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டார் இந்த சேர்மேன்.

தோழர்.முத்துவிஜயன் தலைமையில் தலைவர்கள் சேர்மேனோடு பேச்சுவார்த்தை நடத்த சென்றார்கள்.ஆனால் பேச்சுவார்த்தையையே அவமதித்தார் சேர்மேன்.கோபமாக தொழிற்சங்க தலைவர்கள் வெளியேறினர்.தோழர்கள்.சோலைமாணிக்கமும்,செல்வகுமார் திலகராஜும் தங்களது பட்டினிப் போரை தொடர்ந்தார்கள்.இதற்கிடையில் தகவல் கேள்விப்பட்டு விருதுநகர் மாவட்டத்து எங்கள் வங்கித் தோழர்கள் எங்கள் தலைமை அலுவலகம் முன்பு குவியத் துவங்கினார்கள்.

எங்கள் சேர்மேனோ அதிகார செறுக்கோடு பட்டிப்போர் இருந்த தலைவர்களை கைது செய்யச் சொல்லி காவல்துறையை கேட்டுக்கொண்டார்.வேறு வழியின்றி காவல்துறையும் எங்கள் தலைவர்களை தங்கள் வண்டியில் ஏற்றினார்கள்.இதைப் பார்த்த எங்கள் தோழர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.காவல்துறை முன்னேறியது.அவசரக் கூட்டம் எங்கள் தொழிற்சங்க அலுவலகத்தில் கூட்டப்பட்டது.

நிர்வாகத்தின் இந்த தொழிற்சங்கத்திற்கு எதிரான காவல்துறை ஏவலை கண்டித்தும்,தொழிற்சங்க தலைவர்களின் கைதுக்கு மறுமொழி கொடுக்கும் விதமாகவும் மறுநாளே oneday lightening strike-ஐ அங்கு கூடிய கூட்டுச் செயற்குழு உறிப்பினர்கள் அறிவித்தார்கள்.அப்போது மணி சுமார் இரவு 8.00மணி இருக்கும்.

எங்களுக்கு வெறும் பனிரெண்டு மணி நேர அவகாசமே இருந்தது.எங்கள் வங்கிக்கு ஏறத்தாழ 200கிளைகள் ஒன்பதிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவிக்கிடக்கிறது.விருதுநகரில் இருந்தபடியே அங்கு கூடியிருந்த சொற்ப ஊழியர்களின் துணையோடு வேலைநிறுத்த அறிவிப்பை ஊழியர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தோம்.அந்த இரவு மகத்தானது.மாபெரும் சரித்திரத்திற்கான விடியலை நோக்கி அந்த இரவின் நாழிகைகள் கடக்க ஆரம்பித்தது.

விடிந்தது டிசம்பர் 10....

தொழிற்சங்க பாரம்பரியம் மிக்க அக்கினிக் குஞ்சுகள் தங்கள் தலைவர்களுக்கு ஏற்பட்ட அவமரியாதை தங்களுக்கு ஏற்பட்டதே என்றுணர்ந்தார்கள்.கொதித்தெழுந்தார்கள்.ஏறத்தாழ 125-கிளைகளின் கதவுகளுக்கு பூட்டுக்களே பகலிலும் காவல் காத்தது.விருதுநகரின் வெப்பம் அன்று வழக்கத்திற்கும் அதிகமானது..

ஆங்கிலேய படையெடுப்பின் போது இடிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இரவோடு இரவாக எழுந்து நின்றதை கண்டு மிரண்டு போன பரங்கியர் கூட்டத்தைப் போல் எங்கள் நிர்வாகம் எங்கள் தொழிற்சங்கத்தின் எழுச்சியை கண்டு மிரண்டது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள் எங்கள் சங்க அலுவலகத்தில் குவிந்தார்கள்.அங்கு முந்தைய தினம் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுவிக்கப் பட்டிருந்த தலைவர்களை கண்ட பிறகே கொஞ்சம் தணிந்தார்கள்.

பிறகு எங்கள் தொழிற்சங்க அலுவலகத்திலிருந்து பேரணியாக எங்கள் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் உள்ளே தோழர்கள் ராணுவ மிடுக்கோடு நடைபோட்டது வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது.மாபெரும் எழுச்சியை கண்டு பயந்த எங்கள் நிர்வாகம் எங்கள் நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு போட்டது.

தோழர்கள் மிகவும் நாகரீகத்தோடு தங்கள் எதிர்பை அந்த பூட்டிடப்பட்ட வாயலில் நின்றே உரக்க கர்ஜனை செய்தார்கள்.ஆம்! இந்திய தொழிற்சங்க வரலாற்றின் அசாத்தியமான விடியலை அன்று எங்கள் தோழர்கள் நிகழ்த்தி காட்டினார்கள்.அதிகாரவர்க்கங்களும்,அடிவருடி சங்கங்களும் அந்த விடியலின் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஓரிரு நாள் செய்வதறியாது திகைத்த எங்கள் நிர்வாகம் தனது கடைசி அஸ்திரமாக இதுவரை 51ஆபிஸர்களை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது.அதோடு நில்லாமல் நூற்றிற்கும் மேற்பட்ட எழுத்தர் மற்றும் மெஸஞ்சர் தோழர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கிவருகிறது.எரிமலைகளை நோக்கி கையில் உள்ள கூலாங்கற்களை எறிந்துவிட்டு காத்திருக்கிறது எங்கள் நிர்வாகம்.

எங்கள் தோழர்களோ இடைக்கால பணிநீக்க உத்தரவை தங்களது தொழிற்சங்க வாழ்வின் அங்கீகாரமாய் பார்க்கிறார்கள்.இத்தனை சஸ்பென்ஷன்கள்,குற்றப்பத்திரிகைகள் அதுவும் தொழிற்சங்க நடவடிக்கைக்காக கொடுக்கப்பட்டது சமீபகால இந்திய பொதுத்துறை வங்கிவரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.

தோழர்களே!

வருகிற 11ஆம் தேதி விருதுநகரில் வைத்து எங்கள் நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும்,தொழிற்சங்க விரோத போக்கையும் கண்டித்து பொதுமக்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் பேரணியை நடத்த இருக்கிறோம்.

இது ஏதோ எங்கள் நிர்வாகத்திற்கும்,எங்கள் வங்கி தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனை அல்ல.இது அதிகாரவர்க்கத்தின்,தொழிற்சங்க ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியே ஆகும். தனியார்மயம் தழைத்தோங்கி வளர முதலாளித்துவ சிந்தனையாளர்களின் முதல் எதிரியாய் தொழிற்சங்கங்கள் மாறிபோயிருக்கும் காலமிது.அதிகாரவர்கத்தின் துணையோடு முதலாளித்துவம் செழித்தோங்க அஸ்திவாரங்கள் ஆழமாக பதியமிடப்பட்டு வரும் இந்த சூழலில் இது போன்ற போராட்டங்கள் அவசியமாகிறது.அடுத்த தலைமுறையினருக்கு தொழிற்சங்க வாடையே இல்லாமல் பார்த்துக் கொள்ள ஆளும் வர்க்கங்கள் அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகிறது.

இவைகளை எதிர்த்து தொழிற்சங்கங்களின் அவசியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்வது ஒவ்வொரு தொழிற்சங்கத்தின் கடமையாகும்.அதனடிப்படையில் முற்போக்கு சிந்தனையுள்ள அத்துணை வெகுஜன அமைப்புகளும் எங்களோடு தோளோடு தோள் சேர்ந்து விருதுநகர் வீதியில் வருகிற 11ஆம் தேதி அதிகாரவர்கத்திற்கு எதிரான தொழிற்சங்க அரைகூவலை ஒரே குரலாய் ஒலிக்க அணிதிரண்டு வாருங்கள்!

”ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு தேசத்தின் எதாவது ஒரு பகுதியில் கிடைத்த சிறு வெற்றியானாலும் நம் அனைவரின் வெற்றி அது.ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சிறு தோல்வியானாலும் அது நம் அனைவரின் தோல்வியாகும்.”-சே

2 கருத்துகள்:

Joe சொன்னது…

போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள், தோழர். Anto!

Unknown சொன்னது…

நன்றி ஜோ..