ஞாயிறு, 31 ஜனவரி, 2010

சரித்திரத் தேர்ச்சி கொள்....


”நம் பள்ளிக்கூடங்களில் உலக சரித்திர பாடம் கற்றுக்கொடுக்கும் முறை மிகவும் அதிருப்திகரமாக இருக்கிறது. சரித்திர பாடம் கற்றுக் கொடுப்பதன் நோக்கம்,சில தேதிகளையும் சம்பவங்களையும் மாணவர்கள் உருப்போட்டு மனப்பாடம் செய்ய வேண்டுமென்பதல்ல. ஒரு தளபதியோ அல்லது வேறொருவரோ பிறந்த தினம்,ஒரு மன்னரின் பட்டாபிஷேக நாளை அறிந்து கொள்வதில் மாணவர்களுக்கு என்ன சிரத்தையிருக்க முடியும்? அவை அவ்வளவு முக்கியமான விஷயங்களா? சரித்திரப் பிரசித்தமான சம்பவங்களுக்கு காரணங்களையும்,அச்சம்பவங்களை உருவாக்கிய சக்திகளையும் ஆராய்ந்தறியும்படி செய்வதுதான் சரித்திர பாடத்தின் தத்துவம்....”- ’மெய்ன் காம்ப்’(எனது போராட்டம்) என்னும் தனது சுயசரிதையில் அடால்பு ஹிட்லர்

”சரித்திரத் தேர்ச்சி கொள்”
என்கிறான் பாரதி. அவன் சரித்திரத்தை தெரிந்து கொள் என சொல்லவில்லை.மாறாக தேர்ச்சி கொள் என்கிறான். ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வது என்பது கற்றலின் தொடக்கம் அதுவே தேர்ச்சி கொள்வது என்பது கற்றலின் உச்சம். தேர்ச்சி கொள்ளுதல் என்றால் திறம்பட வினாக்களுக்கு விடையளித்தல் என பொருள் கொள்ளுதல் கூடாது.ஒன்றை நடுநிலையுடன் ஆராய்ந்து கசடற கற்று அதை திறம்பட கையாளுதலே தேர்ச்சியாகும்.

சரி! இன்றைய காலகட்டத்தில் சரித்திரத் தேர்ச்சி அவ்வளவு அவசியமான ஒன்றா?

இன்றைய சமூகத்தில் சரித்திர பாடத்திட்டம் ஏட்டு சுரக்காயாகவே பார்க்கப்படுகிறது. பிந்தைய தலைமுறையினருக்காக தங்களது இளமையையும்,வாழ்வையும் தொலைத்த வீர புருஷர்களின் சரித்திரங்கள் தெரிந்து கொள்ளாததால் தான் இன்றைய இளைய தலைமுறையினர் அரசியலை அருவருக்க தகுந்த ஒன்றாக பார்கிறார்கள். அதனால்தான் இன்று கண்ட கண்ட தரித்திரங்களையெல்லாம் தலையில் வைத்து தலைவனாக கொண்டாடும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும் மாறிப்போய்யுள்ளனர்.

சரித்திரங்கள் முலமாக தான் வெற்றிக்கான வழிகளையும்,தோல்விக்கான காரணங்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும்!

மனிதர்களாகிய நாம் சமூக மிருகங்களே! இந்த சமூக அமைப்பை சாராமல் வனங்களில் கூட இன்று தனித்து வாழ முடியாது. அப்படி இருக்கும் போது இந்த சமூகத்தின் கட்டுமானங்களை தெரிந்து கொள்ளாமல் வாழ முயற்சிப்பது எவ்வளவு அபத்தம்?நாம் சார்ந்த சமூகத்தில் இன்று நாம் அனுபவித்து வரும் ஒவ்வொரு சலுகைக்கும் ஒரு வரலாறு உண்டு.

ஆனால் இது எதைப்பற்றியும் அக்கறையில்லாமல் நாம் நம்மைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டு சுயநலமாய் வாழ்ந்து மடிவது நியாயமாகுமா?

முந்தைய சரித்திரங்களிலிருந்து பாடங்கள் படிக்காத எத்தனையோ இனக்குழுக்களும்,பேரரசுகளும்கூட இருந்த தடம் தெரியாமல் அழிந்து போன வரலாறுகள் ஏராளம் இங்குண்டு.

இதற்கு மிக சமீபத்தில் நாம் கண்கூடாக பார்த்த ஒரு மிகச் சிறந்த உதாரணம் இலங்கை......

விடுதலை புலிகளின் கிளர்ச்சி இலங்கை வரலாற்றில் நிச்சயம் ஒரு சகாப்தம் தான். ஆம்! வரலாற்றின் பாடமும் அதுதான். அது ஒரு சகாப்தம் மட்டுமே!(சகாப்தம்-ஒரு காலப்பகுதி). அது ஒரு நீண்ட கால தீர்வல்ல. ஆயுத முனையில் பெறப்படும் எந்த ஒரு பிரிவினையும் நிலைத்ததல்ல என்பதே சரித்திரம் நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லும் பாடம். உலகின் ”வெற்றிகரமான” பிரிவினைகள் எல்லாம் அரசியல் மூலமாய் வலிகளுடன் ”அமைதியாய்” ஏற்பட்டவையே! (உதாரணம் இந்தியா-பாகிஸ்தான்.)

அமெரிக்க கறுப்பின புரட்சி என்பது இலங்கை தமிழர் பிரச்சனையை காட்டிலும் நீண்ட கால வரலாறு கொண்டது.தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல கறுப்பினத்தின் வலிகள்.கறுப்பின தோழர்கள் பல நூற்றாண்டுகளாய் சிந்திய இரத்தம் பசிபிக் பெருங்கடலை விட அடர்த்தியானது.

இன்று வெள்ளை மாளிகையின் அதிபராக ஒரு கறுப்பின பிரதிநிதி கொலுவேறி இருப்பதற்கு காரணம் அங்கு மால்கம் எக்ஸ் போன்றவர்கள் ஆயுதம் அளித்த அதேவேளையில் மார்டின் லூதர் கிங் போன்றவர்கள் மக்களுக்கு அரசியலையும் வழங்கினார்கள்.

அமெரிக்க கறுப்பின போராட்டங்களின் வெற்றி என்பது ஏதோ ஒரு நூற்றாண்டின் போராட்ட வெற்றியல்ல.நூற்றாண்டுகால அடிமைதழைகளை ஒரு தலைமுறை போராட்டத்திலே வேரோடு களைந்திட முடியும் என நினைப்பது கடல்நீரை கையால் அள்ளி இடம்மாற்றிடலாம் என எண்ணுவது போலாகும்.

விடுதலை புலிகளின் விழ்ச்சி என்பது அவர்கள் முந்தைய சரித்திரங்களில் இருந்து பாடங்களை ஏற்காமல் இயக்கம் வேறாகவும் மக்கள் வேறாகவும் கடைசிவரை தனித்து அல்லது வேறுபட்டு இருந்ததேயாகும். எந்த ஒரு போராட்டமும் அது முழுமையான மக்கள் இயக்கமாக மாறாமல் வெற்றி அடைந்தது இல்லை என்பதே வரலாறு. ஆனால் விடுதலை புலிகள் இயக்கமோ வீட்டுக்கு ஒருவருக்கு ஆயுத பயிற்சி வழங்கிய அதேவேளையில் மற்றவர்களுக்கு அரசியல் பயிற்சியும் வழங்கி இருந்தால் இன்று நிச்சயம் இந்த வீழ்ச்சி தவிற்க பட்டிருக்கும்.

அதேசமயம் புலிகள் தரப்பு அந்தந்த காலகட்டங்களில் ஏற்படவிருந்த அமைதி ஒப்பந்தங்களில் இருந்த பாதகமான அம்சங்களுக்காக அவர்களுக்கு கிடைக்கவிருந்த சிறுசிறு வெற்றிகளையும் தங்களது இறுதி இலக்கிற்காக(தமிழீழம்) புறந்தள்ளியதும் இந்த வீழ்ச்சிக்கான மிக முக்கிய காரணிகளில் ஒன்று.

எந்த ஒரு போராட்ட வடிவத்தாலும் நேரடியாக நமது இறுதி இலக்கை அடைந்துவிட முடியாது. சிறுசிறு போராட்டங்கள் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் தற்காலிக ஒப்பந்தங்கள்.... அந்த ஒப்பந்தங்களின் சாதகமான அம்சங்களை போராட்டத்தின் வெற்றியாகவும்,பாதகமான விஷயங்களை அடுத்தகட்ட போராட்டத்தின் முதன்மை கோரிக்கையாகவும் மாற்றி... மீண்டும் போராட்டங்கள்.... அதை தொடர்ந்து வரும் சிறுசிறு வெற்றிகளின் மூலமாகவுமே இறுதி இலக்கை அடைந்திட முடியும்.

தோழர்களே!

வரலாறு என்பது காலக்கண்ணாடி. நமது இன்றைய நிலையை அதன் முன் நிறுத்தி ஒப்பீட்டு பார்த்தால் அது நமக்கான பாதையை மிக தெளிவாக காட்டும். நமது தவறுகளை அதை பார்த்து களைந்து விட்டு நம்பிக்கையோடு நமது போராட்ட பயணத்தை தொடர்ந்தால் இன்றைய நிலையும் மாறும். நாளைய வரலாறும் நமதாகும். ஆதலினால் சரித்திரத் தேர்ச்சி கொள்வீர்!

2 கருத்துகள்:

கவி அழகன் சொன்னது…

நன்றாக விபரித்துள்ளீர்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது

Unknown சொன்னது…

நன்றி தியா..

நன்றி கவிக்கிழவா...