செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

கடனாய் ஒரு கல்வி...


நேற்று எங்கள் வங்கிக் கி்ளைக்கு ஒருவர் தன் மகனுடன் வந்திருந்தார்.அவர் தனது மகனை ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்திருப்பதாகவும் அதற்கு கல்விக்கடன் வேண்டும் எனவும் கேட்டார். நாங்கள் அவரது தொழில் குறித்தும் அவரது வருமானம்,இருப்பிடம் குறித்தும் விசாரித்தபடியே கல்விக்கடன் வழங்குவதில் ஏற்படும் நடைமுறை தாமதங்கள் குறித்தும் விளக்கினோம்.

அதனால் முதல் ஆண்டுக்கான கல்லூரிக்கட்டணத்தை அவரை முதலில் செலுத்தும் படியும்.பின்பு எங்களுக்கு கடன் வழங்க அனுமதி கிடைத்த பின்பு அவர் கல்லூரிக்கு செலுத்திய கட்டணத்தை கல்லூரியின் பெயருக்கே நாங்கள் வரைவோலையாக(DEMAND DRAFT) தந்துவிடுவோம் என்றும் அதை கல்லூரியில் கொடுத்து அவர் செலுத்திய தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெளிவுபடுத்தினோம்.

ஆனால் வந்திருந்தவரோ ஒரு ஏழை விவசாயி.அவரால் அந்த நடைமுறை யதார்தங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.அவர் தனக்கு வசதியில்லாததனால் தான் வங்கியை நாடி வந்திருப்பதாகவும் முதல் ஆண்டுக்கான கட்டணத்தையும் நாங்கள் கடனாக வழங்கிய பின்பே அவரால் கட்ட முடியும் எனவும் சொல்லிக்கொண்டிருந்தார்.

மேலும் மத்திய அமைச்சரே உத்தரவிட்ட ஒரு விஷயத்திற்கு வங்கி அதிகாரிகளாகிய நாங்கள் அதையும் இதையும் சொல்லி கடன் வழங்குவதில் தாமதப்படுத்துவதாகவும் அவரது புலம்பல்கள் தொடர்ந்தன.அவரது இந்த புரிந்து கொள்ளாத தன்மை எங்களுக்கு எரிச்சலை உண்டாக்கினாலும் அவரது தோற்றமும் தவிப்பும் அவர் மேல் பரிதாபத்தை உண்டாக்கியது.

அகவே மேற்கொண்டு ஏதும் விவாதிக்காமல் அவரது நிலை எங்களுக்கு நன்றாக புரிகிறது என்றும் அதனால் எங்களால் முடிந்த அளவு எவ்வளவு விரைவாக முடிகிறதோ அவ்வளவு விரைவாக முடித்து தருவதாக உறுதியளித்து அவரை சமாதனப்படுத்தி அனுப்பிவைத்தோம்.

தோழர்களே!

ஒரு வங்கியாளனாக மட்டுமே இருந்து இதை வெறும் சம்பவமாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை.ஏனென்றால் அந்த ஏழை விவசாயியின் நிலையிலிருந்து பார்த்தால் தான் புரியும் இது ஒரு ஜனநாயக வன்முறை என்று.ஆம்! கல்வி என்பது ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படையான கடமை.

ஆனால் இங்கு நடப்பது என்ன?

கல்வி கற்பதற்கான விஷயமாக இல்லாமல் அது விற்பதற்கான விஷயமாக மாற்றப்பட்டுள்ளது.அறுபது ஆண்டுகளுக்கும் மேலான ஜனநாயக பாரம்பரியம் கொண்ட நமது நாட்டின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போரின் கல்விக் கொள்கை என்ன தெரியுமா?
கல்வி வேண்டுமா..? காசு கொடு..! காசு இல்லையா...?கடனை எடு..!

இங்கு கல்விக்கான கட்டணத்தை குறைப்பதற்கு எந்த அரசுக்கும் வக்கில்லை.ஆனால் வங்கி அதிகாரிகளை கல்விக்கடன் வழங்கச் சொல்லி மட்டும் நிர்பந்திப்பார்கள்.இது என்ன நியாயம்?

ஒரு வங்கியின் பணம் என்பது அதன் வாடிக்கையாளர்களின் அதாவது பொதுசனங்களின் சேமிப்பேயாகும்.பொதுமக்கள் தங்களது வயிற்றை கட்டி வாயை கட்டி தங்களது உழைப்பின் ஒரு பகுதியை நாளைய தேவைக்காக அரசாங்கத்தை நம்பி அரசுடைமை வங்கிகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் அரசாங்கம் அந்தப் பணத்தை என்ன செய்கிறது? எவனோ ஒரு கல்வி வியாபாரி தின்று கொழுப்பதற்கு பொதுமக்களை கடன்காரர்களாக்கி கல்வி வியாபாரத்திற்கு துணை போகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் இப்படி கடனெடுத்து நான்கு ஆண்டுகள் படித்து வரும் இளைஞர்கள் பட்டதாரிகள் ஆகிறார்களோ இல்லையோ ஆனால் நிச்சயம் இந்த ஆட்சியாளர்களின் தயவால் பல லட்சங்களுக்கு கடன்காரர்கள் ஆவார்கள்.குடியானவர்களை கடன்காரர்களாக்கி வாங்கிய கடனுக்காக அவர்களை அடிமப்படுத்தினார்கள் அன்றைய ஜமீன்களும்,ஆண்டைகளும். அதேபோல் இன்று குடிமக்களை கடன்காரர்களாக்கி கல்வி விற்பன்னர்களையும்,பெரும் முதலாளிகளையும் கொழிக்க செய்கிறார்கள் இன்றைய அரசியல்வா(வியா)திகள்.

இதைவிட பெருங்கொடுமை என்னவென்றால் பொதுமக்களோ இவை எதையும் புரிந்து கொள்ள முடியாமல் சாமி வரம் கொடுத்தும் பூசாரி தர மறுத்த கதையாக இருக்கிறதே என்று வங்கியாளர்களின் மீது கோபம் கொள்வது தான்.

அதிகாரவர்கத்தின் இது போன்ற திட்டங்கள் முழுக்கமுழுக்க முதலாளித்துவ நாடுகளின் வழிகாட்டுதலின் பெயரிலே அமல்படுத்தப்படுகிறது.இந்த சூட்சமங்கள் ஏதும் புரியாமல் பொதுமக்களோ அரசியல்வாதிகள் விரிக்கும் மாயவலையில் சிக்குண்டு கொள்கிறார்கள்.

இனியும் இது போன்று ஏமாறாமல் இருக்க வேண்டுமாயின் ஜனநாயகத்தின் மாண்புகளை மக்கள் உணர வேண்டும்.ஓட்டுப் போடுவது மட்டுமே ஜனநாயக கடமை என்றும் அதன் பின்பு ஆட்சியமைத்தவர்கள் அடிக்கும் கூத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கும் பார்வையாளராகவே இருக்கும் தன்மையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

விடியல் காண வேண்டுமாயின் விழத்திருப்பது அவசியம்.

பட்டுக்கோட்டையார் தனது பாடல் ஒன்றில் சொன்னது போல்....
“சூழ்ச்சியில் சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டிச் சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச் சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா..........

தெரிந்து நடந்து கொள்ளடா....” என்ற யதார்த்த வரிகள் காலம் கடந்து இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.....

9 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

முக்கியமான விஷயம். பொறுக்க முடியாத அநீதிகள் கண்முன்னே. எல்லாவற்றையும் எழுது தம்பி தொடர்ந்து....

Unknown சொன்னது…

நிச்சயம் அண்ணா! எனது பயணத்தின் பாதையில் வரும் ஒவ்வொரு மைல் கல்லிலும் நின்று எனக்கான திசையை நிச்சயம் செய்வதில் உங்களின் அறிவுரைகளுக்கு முக்கிய பங்குண்டு. நன்றி அண்ணா....

காமராஜ் சொன்னது…

தூள்கிளப்பும் பதிவு.

கால்கிலோ அரைக்கிலோ கல்விக்கு நெத்தியடி.

இந்த வருஷம் நம்ம தமிழகத்தில் மட்டும் கூடுதலாக
சுமார் 60 சுயநிதிக்கல்விக் கடைகள் திறக்ந்தாச்சு.
எல்லாமே சென்னையில் ஓடுகிற ஆட்டோக்கள் மாதிரித்தான்.

உலகம் ஒரு நாள் திரும்பும். அதுவரை அசத்து மாப்ளே.

அன்புடன் அருணா சொன்னது…

சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்!

Unknown சொன்னது…

நன்றி மாமா மாது அண்ணனுக்கு எழுதிய எனது பின்னூட்டத்தை படித்துக்கொள்ளவும் உங்களுக்கு என்று புதிதாக சொல்ல வேறு வார்த்தைகள் என்னிடம் இல்லை... நன்றி அருணா மேடம்...

முத்துக்குமார் சொன்னது…

நன்றாக உள்ளது தொடருங்கள்

சாமக்கோடங்கி சொன்னது…

//
அதிகாரவர்கத்தின் இது போன்ற திட்டங்கள் முழுக்கமுழுக்க முதலாளித்துவ நாடுகளின் வழிகாட்டுதலின் பெயரிலே அமல்படுத்தப்படுகிறது.//
இதன் விளக்கத்தை இன்னொரு தனி இடுகையாக இடுங்களேன். ...

சாமக்கோடங்கி சொன்னது…

//
அதிகாரவர்கத்தின் இது போன்ற திட்டங்கள் முழுக்கமுழுக்க முதலாளித்துவ நாடுகளின் வழிகாட்டுதலின் பெயரிலே அமல்படுத்தப்படுகிறது.//
இதன் விளக்கத்தை இன்னொரு தனி இடுகையாக இடுங்களேன். ...

Unknown சொன்னது…

கோடங்கி!உங்களது கருத்துரைகள் எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது.நன்றி.

//
அதிகாரவர்கத்தின் இது போன்ற திட்டங்கள் முழுக்கமுழுக்க முதலாளித்துவ நாடுகளின் வழிகாட்டுதலின் பெயரிலே அமல்படுத்தப்படுகிறது.//
இதன் விளக்கத்தை இன்னொரு தனி இடுகையாக இடுங்களேன். ...//

நிச்சயம் முயற்சிக்கிறேன்...