சனி, 18 ஏப்ரல், 2009

நம் நாட்டில் அதிகம் பேர் பார்க்கும் வேலை என்ன?


மொகலாய சக்கரவர்த்தி அக்பருக்கு தீடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது அது தன் நாட்டில் அதிகமானவர்களால் பார்க்கப்படும் வேலை என்ன?என்பதே.தனது சந்தேகத்திற்கு பீர்பால் ஒருவரால் தான் சரியான விடை சொல்ல முடியும் என முடிவு செய்து அவரை வரவழைக்க ஆள் அனுப்பினார்.பீர்பாலும் வந்தார்,அவரிடம் கேள்வியை சொல்லிய உடனே சிறிதும் யோசிக்காமல் அவர் மருத்துவம் தான் நாட்டில் அதிகமாக பார்க்கப்படும் வேலை என்று சொன்னார்.அக்பருக்கோ இந்த பதிலை கேட்டவுடன் கோபம் தலைக்கு ஏறிவிட்டது.ஏனென்றால் விவசாயம்,வியாபாரம்,அரசுப்பணிகள் என்று நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வெவ்வேறு வேலைகளில் ஈடுபடும் போது மிகச் சொற்பமானவர்கள் மட்டுமே ஈடுபடும் மருத்துவத்தை பீர்பால் சொன்னவுடன் மன்னர் பீர்பால் தன்னை கேலி செய்வதாக நினைத்துவிட்டார்.
ஆனால் பீர்பால் தான் சொல்லிய பதில் சரி தான் என்றும் அதை நிருபிக்க தன்னால் முடியும் எனவும் சொன்னார்.அக்பரும் அதை ஏற்றுக்கொண்டு மறுநாள் தன்னுடன் நகர்வலத்திற்கு பீர்பாலையும் அழைத்து செல்லவும் ஒப்புக்கொண்டார்.

நகர் வலத்திற்கு கிளம்பும் அன்று பீர்பால் தன் தலையில் ஒரு துணியை கட்டிக்கொண்டுவந்தார்.அரசர், ’என்ன தலையில் கட்டு?’ என்று கேட்டவுடன் பிர்பால் தனக்கு ’தலைவலி’ என்று சொன்னார்.அதற்கு உடனே அக்பர் தனக்கு ராஜாங்கமருத்துவர் சொல்லிக் கொடுத்த மூலிகை தைலத்தின் மகத்துவத்தை பற்றிச் சொல்லி அதையே பீர்பாலுக்கும் பரிந்துரைத்தார்.பீர்பாலும் ஒரு புன்முறுவலோடு தலையாட்டிவிட்டு நகர் வலத்திற்க்கு தான் தயார் என்றார். நகர் வலம் ஆரம்பித்தார்கள்....
.
போகும் வழியெங்கும் அவர்கள் சந்தித்த மக்கள் ஒருவர் விடாமல் அனைவரும் பீர்பாலின் தலைக்கட்டின் காரணத்தை கேட்கவும்,தலைவலி என்று பீர்பால் சொன்னவுடன், அவர்கள் அதற்கு தங்களுக்கு தெரிந்த மருந்தை சொல்லவும்.... என அவர்கள் நகர்வலம் ஒருவழியாக முடிந்தது.இப்பொது பீர்பால் அக்பரோடு இருந்தவர்களை பார்த்து நகைப்போடு பார்தீர்களா! நமது நாட்டின் அரசர் உட்பட நாம் ந்தித்த அனைவருமே மருத்துவர்களாக இருப்பதை என்று சொல்லி சிரித்தார்.அக்பரும் பிர்பாலின் மதி நுட்பத்தை ரசித்து சிரித்தார்.

இந்த கதையை ஏன் சொல்கிறேன் என்றால் கடந்த இருநாட்களாக பீர்பாலின் நிலை தான் எனக்கும்.எங்களது வங்கியில் காசாளராக பணிபுரிந்தால் ஊதியமும் கொடுத்து சிறப்புச் சலுகையாக கைவலியும் கொடுப்பார்கள்.அப்படித்தான் எனக்கும் de-quervains disease (பெருவிரலில் ஏற்படும் வலி) வந்து கைகளில் கட்டு போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
வீட்டில் உள்ள மருத்துவரிடமிருந்து(அதாங்க! வீட்டம்மா) ஒரு வழியாக தப்பித்து பஸ்ஸில் ஏறினால் டிக்கட் கொடுக்கும் டாக்டரிடம் மருந்து வாங்கி கட்டி கொண்டேன்.சக பயண மருத்துவர்கள் ஆதங்கத்தோடு பார்த்து விட்டு அள்ளி தெளித்த அறிவுரைகளை அசராமல் வாங்கி குவித்தபடி ஒரு வழியாக வங்கியில் நுழைந்தேன்.இப்போது எனது மேலாளரின் முறை.லீவு கேட்டு விடுவேனோ என்று உள்ளுக்குள் நினைத்தவாறு ’ஒன்னும் பெரிய பிரச்சனையில்லையே!’ என்று அவர் கவலையை அவர் வெளிப்படுத்தினார்.சக தோழர்கள் ??????????-குறிகளை தொடுத்த பின் மருத்துவராக மாறினார்கள்.வங்கியின் வாடிக்கையாளர்களும் இதில் விதிவிலக்கல்ல.அதிலும் வாடிக்கையாளர் ஒருவர் தன் மச்சினன் ஒருவனுக்கு கைமுறிந்து போனதை ரசித்து ரசித்து சொல்லி சிரித்து கொண்டு இருந்தார்.இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடந்து முடிந்த எனது கல்யாணத்திற்கும் கைவலிக்கும் முடிச்சுப்போட்டு சுத்தி போட சொன்னவர்களிலிருந்து,மலையாள நாட்டு வைத்தியர்களுக்கு அம்பாசிடர்களாக தங்களை தாங்களே நியமித்துகொண்டவர்கள் வரை பலரையும் இந்த கை கட்டினால் நான் எதிர்கொள்ள வேண்டிருந்தது.

கொடுமை கொடுமையென்று கோயிலுக்கு போனால் அங்கு இரண்டு கொடுமை டிங்கு டிங்கு என்று ஆடியது என்பது போல் நான் பார்த்த ஒவ்வொருவரிடமும் பதில் சொல்லி பதில் சொல்லி கை வலி போய் எனக்கு வாய் வலி வந்தது தான் மிச்சம்.
(பதில் :மொகலாய காலம் தொட்டு இன்று வரை நம் நாட்டில் மருத்துவர்கள் தான் அதிகம்.BIRBAL THE GREAT.)

8 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

பீர்பால் கலக்குறார்.
அடேயப்பா,
என்னென்ன மாதிரியான சிந்தனைகள்.
ஆனால் எல்லாமே பீர்பாலின், தெனாலியின்
மனைவிகளுக்கு சொந்தமானவை.

தீப்பெட்டி சொன்னது…

நல்லாயிருக்கு

மாதவராஜ் சொன்னது…

அண்டோ!

பிரமாதப்படுத்துகிறாய். நல்ல சுவாராசியமான நடை. லேசான நகைச்சுவை. வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் அன்பு அண்ணனுக்கும் , அருமை மாமாவிற்கும் நன்றி.திப்பெட்டிக்கும் என் நன்றி.

மங்களூர் சிவா சொன்னது…

ஹா ஹா
மிக நல்ல நடையில் நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க.

கைவலி சரியாயிடுச்சா??

Unknown சொன்னது…

நன்றி சிவா.உங்களிடமும் ஏதாவது வைத்தியம் உள்ளதா????!!!!!!.....

விக்னேஷ்வரி சொன்னது…

சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கும் பொது பீர்பால் கதை படிச்சது. திரும்பவும் படிக்க வச்சதுக்கு தேங்க்ஸ்.

கொடுமை கொடுமையென்று கோயிலுக்கு போனால் அங்கு இரண்டு கொடுமை டிங்கு டிங்கு என்று ஆடியது என்பது போல் நான் பார்த்த ஒவ்வொருவரிடமும் பதில் சொல்லி பதில் சொல்லி கை வலி போய் எனக்கு வாய் வலி வந்தது தான் மிச்சம். //

ஹிஹிஹி...... வாய் வலிக்கு யாரும் வைத்தியம் சொல்லலையா....

Unknown சொன்னது…

விக்னேஷ்வரி உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.வாய் வலிக்கு உங்களிடம் மருத்துவம் உண்டா?