ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

அவளும் பெண்தான்...

காலையில் நகரமே பரபரப்பாக தத்தமது இரைகளை தேடி விரைந்து கொண்டிருந்தது. நானும் அவர்களில் ஒருவனாக என் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருக்கும் போதுதான் அவளைப் பார்த்தேன். அவளுக்கு ஒரு நாற்பது வயது இருக்கலாம். மேலாடை எதுவும் இன்றி கையில் ஒரு உடைந்து போன வாளியுடன் அழுக்கேறிப் போன ஒரு துண்டை மட்டும் அணிந்தபடி என்னை அலட்சியமாக கடந்து சென்றாள்.

அவளை நான் அதற்கு முன்பு அங்கு பார்த்ததில்லை.பார்த்திருந்தாலும் நினைவில் இல்லை…. ஒரு சில கணங்களே ஆனாலும் அவள் என்னை வெகுவாக பாதித்திருந்தாள்…. பட்டப்பகலில் அரைநிர்வாணமாக வலம் வருவதைப் பற்றி அவள் தன்னிலை உணராதவளாய் இருந்தாள். அது அவளுக்கு பழகிப் போயிருப்பதாகவும் எனக்கு தோன்றியது.…..ஆனால் எனக்கோ அதை வாழ்வின் யதார்த்தமாக ஜீரணம் செய்து கொள்ளமுடியவில்லை.

அதற்காக ஓடிச்சென்று அவளது நிர்வாணத்தை அவளுக்கு புரியவைக்கவும் விரும்பவில்லை. ஏனென்றால் அவளது துணையாக அப்போது அவளிடம் எஞ்சியிருந்தது அந்த அறியாமை மட்டும் தான். அவளை ”பைத்தியம்” என்று வர்ணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஏனென்றால்…..

என்னைப்போல் அவளை எதிர்கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம்….அவர்களில் ஒரு ஆசிரியர்,ஒரு மருத்துவர்,ஒரு அரசியல்வாதி,ஒரு பாதிரியார்,ஒரு ஆட்டோ ஓட்டுனர்,ஒரு பெண்ணியவாதி, ஒரு வியாபாரி, ஒரு முற்போக்குவாதி, ஒரு பத்திரிக்கையாளன், ஒரு மாணவன், ஒரு போலீஸ்காரர்,ஒரு கூலித்தொழிலாளி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் யாரும் அவளுக்காக எதையும் கிள்ளிப் போடகூட தயாராக இல்லை. நான் உட்பட….

எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டோம். ஒரு பெண்ணை அவளது நிர்வாணத்தோடு ஒரு சமூகமே ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவள் நிர்வாணமாக நடந்து வலம் வருவதால் அவளை பைத்தியம் என எப்படிச் சொல்லமுடியும்?

ஒருவேளை அவளை ”பைத்தியம்” என ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவளது நிலையை ஏற்றுக்கொண்டு ஒதுங்கிச் சென்ற என் போன்றவர்களையும் ”பைத்தியம்” என்னும் அடைப்பில் அல்லவா வைக்க நேரிடும்?

சரி! இந்த ”பைத்தியம்” என்னும் ஆராய்ச்சி விபரீதமான முடிவுகளை நோக்கி இட்டுச் செல்வதால்…..புத்திசாலித்தனமாய் என் சிந்தனை ஓட்டத்தை வேறு பக்கம் திசைமாற்றினேன். ஆம்! இப்போது “அவளது இந்த நிலைக்கு யார் காரணமாக இருக்க முடியும்…?” என வேறு ஒரு திசையில் யோசிக்க ஆரம்பித்தேன்……

”அவளை எவனாவது காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி இருக்கலாம்….” “விபத்தில் உறவுகளை பறிகொடுத்து இருக்கலாம்…..”

“மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக எண்ணி குடும்பத்து உறவுகளாலே துரத்தப்பட்டிருக்கலாம்…..”

“பெற்ற பிள்ளையே இடஞ்சலாக எண்ணி அடித்துவிரட்டியிருக்கலாம்…..”அல்லது

”ஒருவேளை வறுமை காரணியாக இருக்கலாமோ….?” இப்படி எண்ண துவங்கிய பின் சிந்தனை வேகமாக கிளை பரப்ப துவங்கியது…..

”ஆம்! பாழாய்ப்போன இந்த ’சுயநல’ அரசியல்வாதிகளால் இப்படியொரு இழிநிலைக்கு இந்தப் பெண் ஆளாகி விட்டாளே….”என ஒரு முடிவுக்கு வந்தேன். அரசியல்வாதிகளின் லஞ்ச லாவண்யங்களை பட்டியலிட்டுக் கொண்டு எனக்குள் குமுறல்கள் வெடிக்கத் துவங்கியது. இப்போது அவள் மீதான பச்சாதாபம் கூட அரசியல்வாதிகள் மீதான வெறுப்பாக மாறி விட்டிருந்தது. சரி! மாற்றங்கள் தானே நிரந்தரமானவை!

”தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்றாலே ஜகத்தினை அழித்திட அந்நியர் ஆட்சியல் உறுமிய பாரதி ஆனந்த சுதந்திரம் அடைந்து ஆறுபது ஆண்டுகளுக்கும் மேலாகிய பின்பு இப்போது இருந்திருந்தால்…..இந்தப் பெண்ணை நான் கண்ட நிலையில் கண்டிருந்தால்…..என்ன செய்திருப்பான்…?” எங்கெங்கோ சுழன்ற சிந்தனையோட்டும் இப்படியொரு கேள்வியில் வந்து நிலைபெற்று நின்றது.

பாவம்…ஏழை பத்திரிக்கையாளன் காரசாரமாய் ஒரு கட்டுரை எழுதி…. ”என்று இந்த தேசத்தில் ஒரு பெண் தன்னந்தனியாய் இரவில் எந்தவொரு பயமும் இன்றி நடந்து செல்கிறாளோ அன்றே நிஜமான சுதந்தர தினம் என்று அன்று அண்ணல் காந்தி சொன்னார்கள்….இன்றோ ஒரு பெண் பட்டப்பகலில் எந்தவொரு பயமுமின்றி…. மேலாடையும் இன்றி நடந்து செல்கிறாள்…..அப்படியென்றால் நாம் நிஜமாகவே சுதந்திரம் அடைந்து விட்டோமா….?” என வினா எழுப்பியபடி கட்டுரையை இப்படி முடித்திருப்பானோ…..?

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

சிம்ம சொப்பனம்...


எங்கள் வங்கியில் தற்போது ஊழியர்களுக்கு ”C.B.S” (core banking solution) என்ற மூன்றெழுத்து ஆங்கில வார்த்தைதான் சிம்மசொப்பனமாய் விளங்கிவருகிறது. ஆம்! தங்களது கிளையை CBS-ஆக மாற்ற ஆள் வருகிறார்கள் என்றால் ஏதோ காலரா ஊசிபோட ஊருக்குள் மருத்துவர்கள் வருகிறார்கள் என்பது போல் ஊழியர்கள் பயத்தால் நடுங்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு வேண்டுமானால் இதெல்லாம் என்ன பெரிய விஷயம்? நாங்கள் பார்க்காத CBS-ஆ? என இப்போது தோன்றலாம். ஆனால் கிராம வங்கி ஊழியர்களான எங்களுக்கோ இன்று மிகப்பெரும் பிரச்சனையே இதுதான். மாற்றங்கள் என்பதை படிப்படியாக எதிர்கொள்ளும் போது நாம் அதற்கு இயல்பாகவே பழக்கமாகிவிடலாம். ஆனால் மாற்றங்கள் நம்மீது திணிக்கப்படும் போது நாம் திகைத்துபோவதே இயற்கை. அப்படித்தான் ஆகிப்போனது தற்போது எங்களது நிலையும்.

எங்கள் வங்கியில் புதிதாக பொறுப்பேற்ற வங்கித்தலைவர் அவர்கள் எந்த சாமிக்கு கற்பூரம் ஏற்றி வாக்கு கொடுத்தாரோ தெரியவில்லை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் எங்கள் வங்கியின் அனைத்து கிளைகளையும் CBS-ஆக்கிவிட வேண்டும் என நிர்வாக இயந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளார். சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளைகளும் இயந்திரமாய் சுழல தற்போது நூற்றிக்கும் மேற்பட்ட கிளைகள் CBS-ஆகிவிட்டது.

எல்லாமே வணிகமயமாகிப் போன இக்காலத்தில் பலம் நிறைந்த போட்டியாளர்களை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது யதார்த்தம்தான். ஆனால் அதற்குமுன் ஊழியர்களுக்கும் அத்தகைய புதிய தொழில்நுட்பம் குறித்த அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டியதும் நிர்வாகத்தின் கடமைதானே?

ஆனால் அதை பற்றியெல்லாம் எந்த கவலையும் இன்றி தான் எடுத்த முடிவுகளை நிறைவேற்றுவதே முக்கியம் என நாலுகால் பாய்ச்சலில் சென்றுகொண்டிருக்கிறது எங்கள் நிர்வாகம். இதன்விளைவாக தற்போது ஊழியர்கள் மட்டுமின்றி வங்கியின் வாடிக்கையாளர்களும் வெகுவாக அவதிக்குள்ளாகியுள்ளனர். வழக்கமான நடைமுறைகள் அடியோடு மாற்றப்பட்டதால் வாடிக்கையாளர் சேவைகளில் காலதாமதம் தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது.

பிள்ளைபேறுக்கு கூட பத்துமாதம் காத்திருப்பதை அநாவசியமாக கருதும் இந்தக் காலத்தில் வங்கிச் சேவையில் ஏற்படும் இது போன்ற காலதாமதங்களை வாடிக்கையாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? இதனால் அந்தந்த கிளைகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்களின் மீதே வாடிக்கையாளர்கள் தங்களது கோபத்தையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ”உரலுக்கு ஒரு பக்கம்னா மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் அடி” என்னும் சொலவடைக்கு இலக்கணமாய் எங்கள் நிலையாகிப் போனது.

எங்கள் வங்கியில் பெரும்பான்மையான கிளைகளில் ஒரு அலுவலர், ஒரு எழுத்தர் மற்றும் ஒரு கடைநிலை ஊழியர் ஆக மொத்தம் மூன்றே மூன்று நிரந்தர ஊழியர்கள் மட்டுமே! இதைவிட மிகவும் மோசமாக கடைநிலை ஊழியரே இல்லாத கிளைகளும் ஏராளம் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் கிளைகளை CBS-ஆக மாற்றிக் கொண்டு வருகிறார்கள். ஒரு அலுவலர்….ஒரு எழுத்தர்…. இவர்கள் இருவர் மட்டுமே மொத்த வர்த்தகத்தையும் இயக்க வேண்டும். அந்த இருவரில் எவருக்கேனும் உடல் நலக்குறைவோ அல்லது வேறு ஏதாவது அத்தியாவசிய காரணங்களுக்காக விடுப்பு தேவைப்பட்டால் அவர்களது நிலை திரிசங்கு சொர்க்கம்தான்!

பல கிளைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையைவிட அங்கிருக்கும் கணினிகளின் எண்ணிக்கையே அதிகம். ஏனென்றால் கிளைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றாலோ அல்லது இறந்துபோனாலோ அவர்களது இடத்திற்கு வேறு நபர்களை எங்கள் நிர்வாகம் பணிநியமனம் செய்யமாட்டார்கள். அடிமைகளைப் போல் வேலைபார்த்து வரும் தற்காலிகப் பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்யமாட்டார்கள். ஆனால் கிளையின் வர்த்தகத்தை மட்டும் சிறிதும் குறையாமல் பார்த்துக் கொண்டும் அதனை மேலும் அதிகரிக்க வைக்கவும் செய்யவேண்டும். ஆளும் தரமாட்டார்கள்….அம்பும் தரமாட்டார்கள் ஆனால் போரில் மட்டும் வெற்றிவாகை சூடவேண்டும்.

இவற்றையெல்லாம் நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்பியது எங்கள் நிர்வாக குறைபாடுகளை சுட்டுக் காட்டுவதற்காக மட்டும் அல்ல. இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குமேயாகும். ஏன் என்றால் இது எங்கள் வங்கியில் நிலவும் நிலை மாத்திரம் அல்ல. இங்கு உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் நிலவும் நிலையும் இதுதான். இது ஏதோ தற்செயலாக ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறை அல்ல. இதற்கு பின்னால் பெரும் முதலாளிகளும் அவர்களது அடிவருடிகளான அதிகார அரசியல் விற்பன்னர்களும் மிகத் தெளிவாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் அரசியல் ஒன்று உள்ளது.

ஆம்! தோழர்களே!

அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிகரித்து போன வேலைப்பளு மனச்சிதைவை உண்டாக்கும் அதனால் ஒன்று ஊழியர்கள் விருப்ப ஓய்வு கோருவார்கள் அல்லது தமது வேலைப்பளுவினை குறைத்துக் கொள்ள தற்காலிகமாய் ஒருவரை குறைந்த வருவாய்க்கு பணி அமர்த்திக்கொள்வார்கள். ஊழியர்களை பொறுத்தவரை தங்களது பிரச்சனை தீர்ந்தால் போதும். ஆனால் அவர்களுக்கு புரிவதில்லை தாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் போராடிப் பெற்ற தமது தொழிற்சங்க உரிமைகளை அடுகு வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று.

அதேநேரத்தில் வாடிக்கையாளர்களான பொதுமக்களையும் அரசு இயந்திரங்களை குறைகூற செய்து தனியார் நிறுவனங்களே மக்கள் சேவைக்கு உகந்தது என்னும் கருத்தையும் ஆளமாக அவர்களுக்குள் விதைக்கிறார்கள். இதனால் பெரும்பான்மையான தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கு பொதுமக்களின் அதரவு கரங்கள் நீழுவதில்லை. இப்படித்தான் நம் கைகளைக் கொண்டே நமது கண்களை குத்திக் கொள்ளவைக்கிறது முதலாளித்துவ வர்க்கம்.

பெரும்முதலாளிகளின் வியாபாரபசிக்கு பொதுத்துறைகளை இரையாக்க அதிகாரவர்க்கத்திற்கு பெரும் இடஞ்சலாய் இருப்பது தொழிற்சங்கங்கள் மட்டுமே!

இன்று ஜனநாயகத்தின் கடைசி குரலாய் எஞ்சி இருப்பதும் தொழிற்சங்கங்கள் மட்டுமே! அதன் ஆணிவேரே அரசு மற்றும் பொதுத்துறைகளின் ஊழியர்கள் தான்.

அதனால் தொழிற்சங்கங்களை நீர்த்துப் போகவைக்கவும் செயலிழக்க செய்யவும் இது போன்ற நரித்தனங்களை செய்துவரும் அதிகாரவர்க்கத்திற்கு எதிராக நாம் அணிதிரள வேண்டியது அவசியம். தொழிற்சங்க வாடையே படியாமல் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கி அடிமைபடுத்தி விடலாம் என மனப்பால் குடிக்கும் மக்கள் விரோத கூட்டத்தை இனம் கண்டு போராட வேண்டியது நம் கடமை.


புதன், 2 பிப்ரவரி, 2011

நலமான பொய்கள்

பொய்கள் பல சமயங்களில்

நிஜங்களை விட நல்லவைகளாகி

போய்விடுகிறது.

ஆம்!

நெஞ்சை கிழிக்கும் நிஜங்கள்

இனிய உளவாக இல்லாமல்

போவதும் இயற்கை தானே!

இங்கு பொய்களுக்காக பரிந்துபேசி

நிஜங்களை வெறுக்க கற்றுக்

கொடுக்க வரவில்லை-ஆனால்

வலித்து வலித்து மரத்துப்போன

ஒரு இதயத்தில்

சிறு தளிராய் முளைவிடும்

சிறுதுளி நம்பிக்கையை கூட

நிஜங்களை கொண்டு

பிடிங்கி எறிவது எப்படிச் சரியாகும்…?

நிஜங்கள் நெஞ்சத்து நம்பிக்கையை

சிதைக்கும் போது……

பொய்கள் நெஞ்சிற்கு அரண்களாகி

நிஜங்களை வெறுக்க துணைபோகிறது.

ஆம்!

எல்லாம் இழந்த இதயத்திற்குத் தான்

தெரியும் பெரும் வலிதரும்

நிஜங்களைவிட

சிறு ஆறுதல் தரும் பொய்கள்

அதனினும் மேலானவை என்று…….

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மலரின் நிழலைத் தேடி....

பயணங்கள் நமக்கு புதிதல்ல…..

வாழ்க்கை என்பதே ஒரு

தொடர் பயணம் தானே!

சில பயணங்கள்……

இறுதியிட்ட இலக்கை நோக்கி

இருக்கும்.

சில பயணங்கள்……

இலக்குகளை இறுதி செய்யாமல்

இருக்கும்.

என் பயணத்திற்கோ…

நோக்கம் உண்டு- ஆனால்

திசைகள் தெரியாது.

பயணத்திற்கான நோக்கம் இருந்தும்

திசைகள் தெரியாதது

விந்தையாக தோன்றலாம்.

இதில் விந்தை எதுவும் இல்லை

காரணம் என் பயணத்திற்கான

நோக்கம் அப்படியானது…..

ஆம்!

தன் இதழ்களை உதிர்த்துவிட்ட

மலரின் நிழலைத்தேடி நான்

இருளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

மலர்கள் அழகானவைதான் –ஆனால்

காற்று அதை உணர்வதில்லை

அதற்காக காற்றை குற்றம் சுமத்தமுடியாது.

ஏனென்றால் காற்றுக்கு தெரிவதில்லை

தான் மலர்களுக்கு காலனாய்

மாறிப்போவது.

அதுமட்டுமின்றி……

என் மலரின் சுவாசம்

இப்போது

அந்த காற்றில் கலந்துவிட்டது.

காற்றில் கலந்துபோன என் மலரின்

சுவாசத்தை வாடை பிடித்துக்கொண்டு-என்

மலரின் நிழலைத்தேடி பயணிக்கிறேன்.

சனி, 25 செப்டம்பர், 2010

அயோத்தியா யாருக்கு சொந்தம்..?



’அயோத்தியா’ என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு “வெற்றி கொள்ள முடியாத பகுதி” எனப் பொருளாகும். இப்போது நம் தேசத்தையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி ‘அயோத்தியின் சர்ச்சைக்குரிய பகுதியை வெற்றி கொள்ளப்போவது யார்?’என்பதே.

மிக நீண்ட வரலாறு கொண்ட இந்த கேள்விக்கு பதிலாக பல நூறு ஆண்டுகளாக பல்லாயிரம் உயிர்களை பலிகொடுத்தும் பதிலற்று நிற்கிறோம். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் அயோத்தி. இதை இந்துக்கள் ராமர் பிறந்த பூமி என நம்புவதால் அது தங்களுக்கே சொந்தம் என்கிறார்கள். முஸ்லிம்களோ 1528ஆம் ஆண்டு மிர் பக்கி என்னும் முகலாய படைத்தலைவனால் கட்டப்பட்ட பாபர் மசூதி இருந்த பகுதி என்பதால் அது தங்களுக்கே சொந்தம் என்கிறார்கள்.

இந்த சொத்து சண்டை இன்று நேற்றல்ல 1855ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை அங்கு பல மதக்கலவரங்களாக வெடித்த வண்ணம் உள்ளது. சரி! நீதிமன்றத்தின் மூலமாவது இதற்கு ஒரு தீர்வு பிறக்கும் என காத்திருந்தால்...’புதிய’நீதியால் மறுபடியும் கலவரங்கள் உண்டாக வாய்ப்பிருப்பதாக நீதிபதிகளும் பீதி கொள்வதால் நீதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்படி நீதிமன்றங்களே வாய்தா வாங்கும் இந்த வழக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விட பழமையானது. ஆம்! இதன் முதல் வழக்கு 1885 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபீர் தாஸ் என்பவரால் அப்பகுதியில் கோயில் கட்ட அனுமதி கேட்டு தொடரப்பட்டது.மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட அந்த வழக்கு அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

1949ஆம் ஆண்டு உள்ளூர் சாது ஒருவனின் கைங்கர்யத்தால் அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டு ஒரு பெரும்கலவரம் நடந்தேறி அதற்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது. அதை தொடர்ந்து அப்பகுதியின் நுழைவாயிலை அடைத்து வழிபாட்டு அனுமதியை மறுத்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகந் ராமசந்திர தாஸ்பரமஹன்ஸ் என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

12ஆண்டுகள் கழித்து 1961ஆம் ஆண்டு உத்திரபிரதேச மத்திய சன்னி வக்பு வாரியத்தின் சார்பாக முகமது அன்சாரி என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் 1996ஆம் இந்த நான்கு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த வழக்கின் தீர்பு தான் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

’சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி’என்றொரு சொலவடை உண்டு. இந்தப் பிரச்சனையில் நமது அரசாங்கங்களின் பங்கு அந்த ஆண்டியை போலத்தான். ஆங்கிலேயே ஆட்சியில் கூட அண்ணன் தம்பிகளாக ஒரே இடத்தில் வழிபாடு நடத்திவந்தவர்களை அங்காளி பங்காளியாக்கி அலங்கோலப்படுத்தியது இந்திய ஆட்சியாளர்கள் தான். இப்போது ‘கலவரம்,கலவரம்’ என கூப்பாடு போடுபவர்களும் அவர்கள் தான்.

அதேபோல் இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கிய அடுத்த பெரியபங்கு ஊடகத்துறைக்கே சாரும். அவர்கள் தங்களது வர்த்தகத்தை அதிகரிக்க இந்தப் பிரச்சனையை முடிந்த அளவுக்கு அரசியலாக்கி ஆதாயம் பார்த்தாகிவிட்டது.அடுத்து மத விற்பன்னர்கள்....சொல்லவே வேண்டாம் இந்தப் பிரச்சனையின் மூலமும் அவர்களே முடிவும் அவர்களே!

இப்போது வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் கலவரங்களில் இறந்து போன அப்பாவி பொதுஜனங்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை...அவர்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை.... நாம் தொலைத்து விட்டு நிற்கும் சகோதிரத்துவத்திற்கும் தீர்வு பிறக்க போவதில்லை... இதையெல்லாம் இழந்துவிட்ட பிறகு கிடைக்கும் அந்த நிலத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம்? மீண்டும் ஒரு பாபர் மசூதியா? அல்லது ராமர் கோயிலா?

லட்சகணக்கான உயிர்களின் தன்னலமற்ற போராட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த சுதந்திரத்தை...இந்த ஜனநாயகத்தை....பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக சொல்லப்படும்...நம்பப்படும் மன்னர்களுக்கு சொந்தமானது எனச் சொல்லி சண்டையிட்டு கொள்வது எத்தனை அபத்தமானது? இந்த தேசத்தின் ஒவ்வொரு மூலையும் இந்தியர்களாகிய நம் அனைவருக்குமே சொந்தமானது என்பதை நாம் எப்போது உணர்வோம்?

ஆரியர்கள் வந்தார்கள் இந்துக்களோனோம்... முகலாயர்கள் வந்தார்கள் முஸ்லிம்களானோம்... ஆங்கிலேயர்கள் வந்தார்கள் கிறுத்தவர்களானோம்... சுதந்திரம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது நாம் எப்போது இந்தியர்கள் ஆவோம்?

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சிரிங்க ப்ளீஸ்...


எச்சரிக்கை : இவை சிரிப்பதற்கு மட்டுமே...

***இளைஞன் ஒருவன் வேகமாக தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான்.
ஒரு இளம் பெண் அவனைவிட வேகமாக அவனது காரை முந்திச் சென்றாள்.
உடனே அந்த இளைஞன் அவளைப் பார்த்து ‘ஏய் கழுதை..’ என கத்தினான். உடனே அவனுக்கு மறுமொழியாக அவளும் அவனைப் பார்த்து,’நீதான் பன்னி, நாய், கழுதை...’எனத் திட்டினாள்.
திடீரென்று அவளது வண்டி விபத்துக்குள்ளானது....ஒரு கழுதை மீது மோதி.

***கணவன்: டார்லிங். நான் இந்த மாதம் சம்பளத்திற்கு பதில் உனக்கு 500 முத்தங்கள் தரலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற?

மனைவி: தாராளமா தாங்க. ஒரு பிரச்சனையும் இல்ல. நானும் அப்படியே கேபிள்காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர்காரனுக்கு 20முத்தம், மளிகைக்கடைக்காரனுக்கு 150 முத்தம், வீட்டு ஓனருக்கு 250 முத்தம்ன்னு பிரிச்சு கொடுத்துடுறேன். சரிதானே..?

கணவன்: ?????

***ஒருவன்: டாக்டர் சார், மரணமே இல்லாம வாழ்றதுக்கு ஏதாவது வழியிருக்கா?

டாக்டர்: அதுக்கு நீங்க கல்யாணம் தான் பண்ணிக்கனும்.

ஒருவன்: என்னது கல்யாணம் பண்ணிட்டா மரணமே இல்லாம வாழ வழி கிடைக்குமா?

டாக்டர்: நீங்க வேற...அப்பத்தான் இப்படிப்பட்ட விபரீதமான எண்ணங்கள் வராது.

***ஒருவன்: சார். என்னோட பொண்டாட்டிய காணோம்.

போஸ்ட்மாஸ்டர்: யோவ் இது போஸ்ட் ஆபீஸ் யா..போயி போலிஸ் ஸ்டேஷன்ல புகார் கொடு.

ஒருவன்: அய்யோ...சந்தோசத்துல எங்க போறதுன்னே தெரியாமபோச்சே!!!

***மனைவி: நான் இப்படியே உங்களுக்கு சமைச்சு கொட்டிக்கிட்டே இருந்தா எனக்கு என்ன கிடைக்க போவுது?

கணவன்: ஆங். என்னோட இன்ஷுரன்ஸ் பணம் கிடைக்கும்...சீக்கிரமா...

***நட்புக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம்?
வீட்டிலிருப்பவனை ஒயின் ஷாப்பிற்கு போகவைப்பது காதல்.
ஒயின் ஷாப்பிலிருந்து தள்ளாட்டமாய் திருப்பி வீட்டிற்கு கூட்டி செல்வது நட்பு.

***அப்பா: டேய்! ஏண்டா இப்படி அழுவுற..?

மகன்: அம்மா அடிச்சிட்டாங்க...

அப்பா: இதுக்கா அழுவுற.ச்சீ அழாத...

மகன்: யோவ் போயா...உன்ன மாதிரியெல்லாம் என்னால அடிதாங்க முடியாது.

அப்பா: ????

வியாழன், 9 செப்டம்பர், 2010

ஒரு பட்டுப்பூச்சியின் மரணம்...


அவள் என் நண்பனின் மகள். வண்ண வண்ண கனவுகளுக்கும், மனம் மலரும் ஆசைகளுக்கும் சொந்தக்காரி. ஆறு வயது கிழவி அவள்.ஆம்! அத்தனை முதிர்ச்சியாக வாயாடுவாள். ஏதோ கேள்விகளின் அரசி போல் அத்தனை கேள்விகள் அவளிடம் உண்டு. சமாளிப்பாக நாம் எதுவும் சொல்லிவிட முடியாது. குடைந்து எடுத்துவிடுவாள். அதனாலே அவளிடமிருந்து வரும் கேள்விகளை நான் மிகவும் கவனமாகவே எதிர் கொண்டு பதிலளிப்பேன். எப்போதும் சுறுசுறுப்பாகவும்,சிறு குறும்பு பார்வையுடனும் உலா வரும் அவள் அன்று அவள் வீட்டிற்கு சென்றபோது அமைதியே உருவாக அமர்திருந்தாள்.

நான் அவள் அருகே சென்று அமர்ந்தேன். சோகமே உருவாக கன்னத்தில் கை வைத்து அம்ர்திருந்தவளை என் பக்கம் திருப்பினேன்.

‘என்னடா செல்லம் ஏன் கோவமா இருக்கீங்க..?’என்றவுடன்.

’டாடியும், மம்மியும் ஏசிட்டாங்க..’என்றது.

‘என் தங்கத்தயா திட்டுனான்....டேய்!ஏண்டா புள்ளய திட்டுனே...’அவளுக்காக நண்பனிடம் பொய் கோபம் காட்டினேன்.

‘நீ உன் செல்லத்துக்கிட்டேயே கேளு...வர வர கழுதக்கு அடம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு..’என்று அவனும் விரைத்தான்.

நான் அவனை முறைத்துவிட்டு எனக்கு தேநீர் கொடுக்க வந்த அவன் மனைவியிடம் ‘ஏம்மா இந்தப் பய சும்மா இருக்க மாட்டானா? நீயும் ஏன் அவன் கூட சேந்துகிட்டு புள்ளய திட்டுற...’

‘அண்ணே! உங்களுக்கு தெரியாது வரவர இவளுக்கு எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் தான்...எது நாளும் புடிச்ச புடில வேணும்...’என்று அவளும் சேர்ந்து கொண்டாள்.

‘பக்கத்து விட்டு பொண்ணுக்கு இன்னக்கி பொறந்த நாளு அவ முட்டாய் கொடுக்க இங்க வந்தா...அவள பாத்திட்டு அவ போட்டிருந்த மாதிரியே இவளுக்கும் பட்டுப்பாவாடை வேணுமாம்..சரி! உனக்கு பர்த்டே வரும் போது வாங்கித் தாரேன் இவுங்க அப்பா சொன்ன பிறகும் ஒரே அடம். உடனே வேணுமாம்...’

‘எப்பா...ஆ இவ இப்படி பிடிவாதம் பிடிச்சா இவளுக்கு ஒண்ணும் வாங்கி கொடுக்காதீங்க....’என மேலும் எரியூட்டிய படி சமையல் அறைக்குள் சென்று பாத்திரங்களை உருட்ட துவங்கினாள்.

இப்போது குழந்தை மௌனம் உடைத்து விசும்ப தொடங்கியது.

நான் அவள் கண்களை துடைத்தபடி ‘உங்க ரெண்டு பேருக்கும் அறிவே கிடையாதா? அவளே அழுதுகிட்டு இருக்கா...இதுல நீ வேற சும்மா இருக்க மாட்டியாம்மா?’என நண்பனின் மனைவியை கடிந்தபடி..’வாடா! செல்லம் அங்கிள் உனக்கு பட்டுப்பாவாடை வாங்கித் தரேன்...அழக்கூடாது கிளம்பு..’ என்றேன்.

நான் ஏதோ சமாளிப்பதாய் நினைத்து கொண்டவள் கொஞ்சமும் சமாதானம் ஆகாமல் எழுந்து அழுதபடியே சோபாவில் போய் படுத்துக்கொண்டாள்.

இதைப் பார்த்து கொண்டிருந்த என் நண்பன் ‘விடு அவ அப்படித்தான்...அழுத்தக்காரி...கொஞ்ச நேரத்துல அவளே அழுது அடங்கிருவா... சரி! வாடா நாம போகலாம் ...’என்றான் எதையும் அலட்டிக்கொள்ளாமல்.

‘டேய்! அவ அழுதுக்கிட்டு இருக்காடா...பாவம் புள்ளய கூட்டிட்டு போவோம்..’என்றேன்.

அதற்கு உள் இருந்தபடியே அவன் மனைவி,’அண்ணே! நீங்க போயிட்டு வாங்க அவ சரியாயிருவா...நான் தான் இருக்கேன்ல...’என்றபடி நண்பனுக்கும் ஏதோ குறிப்பால் உணர்த்தினாள்.

அதை கவனிக்காதவன் போல் நானும் நண்பனோடு கிளம்பினேன்.

வழக்கமாக போகும் கடைக்கு சென்று ஆளுக்கு ஒரு சிகிரெட்டை பற்ற வைத்தபடி அவனிடம் ‘டேய்! நீயும் தான் அவளுக்கு அத வாங்கி கொடுத்தா என்ன?’என்றேன்.

‘மச்சான் மாச கடைசி வேற...அடுத்த மாசம் அவளுக்கு பொறந்த நாளு வருது அப்ப பாத்துக்கலாம் விட்டுட்டேன்’ என்றான்.

ஒருவழியாக நானும் சமாதானம் ஆகி வேறு விஷயங்களை கதைக்க தொடங்கினோம்.நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்து விட்டு கலைந்தோம்.

நாட்கள் சென்றது...அவளது பிறந்தநாளும் வந்தது...நானும் ஞாபகமாக அவளுக்கு ஒரு பட்டுப்பாவாடையை பிறந்தநாள் பரிசாக வாங்கிச் சென்றேன்.

என்னை உற்சாகமாக ஜீன்ஸ் பேண்டிலும், டீ சர்டிலும் எதிர்கொண்டு இனிப்பு வழங்கினாள். அவள் பட்டுப்பாவாடையை மறந்து விட்டாள் போலும் என நினைத்தபடி அவளிடம் ‘அங்கிள் இன்னக்கி உனக்கு என்ன கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லு பாப்போம்...’என அவளிடம் கேட்டேன்..

‘தெரியலியே..! நீங்களே சொல்லுங்களேன்...’என்றவளிடம் மேலும் புதிர் போட விரும்பாமல் பார்சலை பிரித்து ‘என் செல்லத்துக்கு பிடித்த பட்டுப்பாவாடை டோய்...’என்றபடி அவளிடம் நீட்டினேன்.

அதுவரை உற்சாகமாக இருந்த அவளது விழிகள் பட்டுப்பாவாடையை பார்த்தவுடன் சுருங்கியது ‘ஓ! இதுவா...’ என்றாள் உற்சாகமின்றி.

அவளே தொடர்ந்தாள் ‘அங்கிள் இது வேணாம் எனக்கு...’என்றாள்.

‘ஏம்மா...’ என்றேன் எதுவும் புரியாமல்.

‘அங்கிள் இத பட்டுப்பூச்சிய கொன்னு அதுல இருந்து செய்வாங்களாம் மம்மி சொன்னாங்க...பாவம் அதுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்...அதோட மம்மி,டாடி எல்லாம் ரொம்ப அழுதிருப்பாங்க இல்ல...அதானால இது எனக்கு வேண்டாம் அங்கிள்...’என்றாள்.

நான் வாயடைத்து போய் நின்று கொண்டிருந்தேன். என்னை ஏறிட்டு பார்த்தவள் ‘அங்கிள் இதை பத்திரமா அடக்கம் பண்ணிருங்க அங்கிள்...’என கூறிவிட்டுச் சென்றாள்....

ஏதோ போதி மரம் என்னிடம் உரையாடி விட்டு சென்றதைப் போல் உணர்ந்தேன்.