ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

அவளும் பெண்தான்...

காலையில் நகரமே பரபரப்பாக தத்தமது இரைகளை தேடி விரைந்து கொண்டிருந்தது. நானும் அவர்களில் ஒருவனாக என் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருக்கும் போதுதான் அவளைப் பார்த்தேன். அவளுக்கு ஒரு நாற்பது வயது இருக்கலாம். மேலாடை எதுவும் இன்றி கையில் ஒரு உடைந்து போன வாளியுடன் அழுக்கேறிப் போன ஒரு துண்டை மட்டும் அணிந்தபடி என்னை அலட்சியமாக கடந்து சென்றாள்.

அவளை நான் அதற்கு முன்பு அங்கு பார்த்ததில்லை.பார்த்திருந்தாலும் நினைவில் இல்லை…. ஒரு சில கணங்களே ஆனாலும் அவள் என்னை வெகுவாக பாதித்திருந்தாள்…. பட்டப்பகலில் அரைநிர்வாணமாக வலம் வருவதைப் பற்றி அவள் தன்னிலை உணராதவளாய் இருந்தாள். அது அவளுக்கு பழகிப் போயிருப்பதாகவும் எனக்கு தோன்றியது.…..ஆனால் எனக்கோ அதை வாழ்வின் யதார்த்தமாக ஜீரணம் செய்து கொள்ளமுடியவில்லை.

அதற்காக ஓடிச்சென்று அவளது நிர்வாணத்தை அவளுக்கு புரியவைக்கவும் விரும்பவில்லை. ஏனென்றால் அவளது துணையாக அப்போது அவளிடம் எஞ்சியிருந்தது அந்த அறியாமை மட்டும் தான். அவளை ”பைத்தியம்” என்று வர்ணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஏனென்றால்…..

என்னைப்போல் அவளை எதிர்கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம்….அவர்களில் ஒரு ஆசிரியர்,ஒரு மருத்துவர்,ஒரு அரசியல்வாதி,ஒரு பாதிரியார்,ஒரு ஆட்டோ ஓட்டுனர்,ஒரு பெண்ணியவாதி, ஒரு வியாபாரி, ஒரு முற்போக்குவாதி, ஒரு பத்திரிக்கையாளன், ஒரு மாணவன், ஒரு போலீஸ்காரர்,ஒரு கூலித்தொழிலாளி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் யாரும் அவளுக்காக எதையும் கிள்ளிப் போடகூட தயாராக இல்லை. நான் உட்பட….

எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டோம். ஒரு பெண்ணை அவளது நிர்வாணத்தோடு ஒரு சமூகமே ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவள் நிர்வாணமாக நடந்து வலம் வருவதால் அவளை பைத்தியம் என எப்படிச் சொல்லமுடியும்?

ஒருவேளை அவளை ”பைத்தியம்” என ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவளது நிலையை ஏற்றுக்கொண்டு ஒதுங்கிச் சென்ற என் போன்றவர்களையும் ”பைத்தியம்” என்னும் அடைப்பில் அல்லவா வைக்க நேரிடும்?

சரி! இந்த ”பைத்தியம்” என்னும் ஆராய்ச்சி விபரீதமான முடிவுகளை நோக்கி இட்டுச் செல்வதால்…..புத்திசாலித்தனமாய் என் சிந்தனை ஓட்டத்தை வேறு பக்கம் திசைமாற்றினேன். ஆம்! இப்போது “அவளது இந்த நிலைக்கு யார் காரணமாக இருக்க முடியும்…?” என வேறு ஒரு திசையில் யோசிக்க ஆரம்பித்தேன்……

”அவளை எவனாவது காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி இருக்கலாம்….” “விபத்தில் உறவுகளை பறிகொடுத்து இருக்கலாம்…..”

“மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக எண்ணி குடும்பத்து உறவுகளாலே துரத்தப்பட்டிருக்கலாம்…..”

“பெற்ற பிள்ளையே இடஞ்சலாக எண்ணி அடித்துவிரட்டியிருக்கலாம்…..”அல்லது

”ஒருவேளை வறுமை காரணியாக இருக்கலாமோ….?” இப்படி எண்ண துவங்கிய பின் சிந்தனை வேகமாக கிளை பரப்ப துவங்கியது…..

”ஆம்! பாழாய்ப்போன இந்த ’சுயநல’ அரசியல்வாதிகளால் இப்படியொரு இழிநிலைக்கு இந்தப் பெண் ஆளாகி விட்டாளே….”என ஒரு முடிவுக்கு வந்தேன். அரசியல்வாதிகளின் லஞ்ச லாவண்யங்களை பட்டியலிட்டுக் கொண்டு எனக்குள் குமுறல்கள் வெடிக்கத் துவங்கியது. இப்போது அவள் மீதான பச்சாதாபம் கூட அரசியல்வாதிகள் மீதான வெறுப்பாக மாறி விட்டிருந்தது. சரி! மாற்றங்கள் தானே நிரந்தரமானவை!

”தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்றாலே ஜகத்தினை அழித்திட அந்நியர் ஆட்சியல் உறுமிய பாரதி ஆனந்த சுதந்திரம் அடைந்து ஆறுபது ஆண்டுகளுக்கும் மேலாகிய பின்பு இப்போது இருந்திருந்தால்…..இந்தப் பெண்ணை நான் கண்ட நிலையில் கண்டிருந்தால்…..என்ன செய்திருப்பான்…?” எங்கெங்கோ சுழன்ற சிந்தனையோட்டும் இப்படியொரு கேள்வியில் வந்து நிலைபெற்று நின்றது.

பாவம்…ஏழை பத்திரிக்கையாளன் காரசாரமாய் ஒரு கட்டுரை எழுதி…. ”என்று இந்த தேசத்தில் ஒரு பெண் தன்னந்தனியாய் இரவில் எந்தவொரு பயமும் இன்றி நடந்து செல்கிறாளோ அன்றே நிஜமான சுதந்தர தினம் என்று அன்று அண்ணல் காந்தி சொன்னார்கள்….இன்றோ ஒரு பெண் பட்டப்பகலில் எந்தவொரு பயமுமின்றி…. மேலாடையும் இன்றி நடந்து செல்கிறாள்…..அப்படியென்றால் நாம் நிஜமாகவே சுதந்திரம் அடைந்து விட்டோமா….?” என வினா எழுப்பியபடி கட்டுரையை இப்படி முடித்திருப்பானோ…..?

4 கருத்துகள்:

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கணும் எடுக்க சொல்லணும்.

இப்படி விடக்கூடாது..

சமூக ஆர்வலர்கள் பார்வையில் படவில்லை போல..

நிலவு சொன்னது…

http://powrnamy.blogspot.com

சாமக்கோடங்கி சொன்னது…

தலைவரே.. அந்தப் பெண்ணுக்கு உங்கள் ஆடைகளில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்து விட்டு வந்து இதனை எழுதி இருக்கலாமோ..??

என்னுடைய கருத்து ... அவ்வளவு தான்...

Unknown சொன்னது…

அன்புத் தோழர் சாமக்கோடங்கி அவர்களே....

நான் இயலாமை என்னும் போர்வையை போர்த்திக் கொண்டு நழுவிப்போன கூட்டத்தில் ஒருவன்....எனது சுயநலத்திடன் எனது மனிதாபிமானத்தை அடகுவைத்துவிட்டேன்....அதனால் நானும் அப்போது ஒருவையில் நிர்வாண கோலமே பூண்டிருந்தேன்.ஆனால் ஆடைகளோடு...