சனி, 21 மே, 2011

என் தேவதையின் சரிதை....2


இது ஒரு தொடர் பதிவு……


மீனாட்சி மிஷன்....நான் அப்போது நின்று கொண்டிருந்த மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வெகு அருகிலேயே இருந்தது. ஐந்து நிமிடங்களில் நடந்து போய்விடும் தொலைவு தான்.ஆனாலும் அதற்குள் ஆயிரம் எண்ணங்கள் எனக்குள் அலையடித்து ஓய்ந்தது.

ஒரு வருடத்திற்கு முன்…..

வலிக்க வலிக்க அந்த மருத்துவமனையில் வலம் வந்த நாட்கள் மீண்டும் நிழலாடியது. எந்த ஒரு மகனும் இந்த உலகில் எதிர் கொள்ள கூடாத மிக கொடுமையான நாட்கள் அவை.....

அம்மா அடிக்கடி சொல்வாள் தன் மார்பில் ஏதோ கட்டியிருப்பதாய்....நான் அப்போது பள்ளிப் படிப்பின் இறுதி வருடங்களில் இருந்தேன். என் கவனமெல்லாம் நண்பர்களோடு ஊர் சுற்றுவதிலும்...பெண் தோழிகளை சிநேகம் செய்துகொள்வதிலுமே இருந்ததே தவிர என் அம்மாவின் அந்த புலம்பல்களில் இல்லை. மேலும் அம்மாவுக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரியும்....

அவள் ஒரு வங்கியில் அதிகாரியாக இருந்து கொண்டு வீட்டின் நிர்வாகத்தையும் திறம்பட செய்து வருபவளாய் இருந்தாள் என்பதால் அவளுக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் நான் அப்போது இல்லை என நினைத்து கொண்டதும் ஒரு காரணம்.

என் அப்பாவோ பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அவருக்கோ தன் தேவைகளை நிறைவேற்றவே என் அம்மாவின் உதவியை நாடுபவராய் இருந்தார். அவளை ஒரு பெண்ணாக....உயிருள்ள மனுஷியாக பார்த்ததைவிட எங்கள் தேவைகளை எல்லாம் நிறைவேற்றி தரும் அட்சய பாத்திரமாகவே நாங்கள் பாவித்து வந்தோம் என்பதே உண்மை. அதற்கெல்லாம் நாங்கள் கொடுத்த விலைதான் மிகக் கொடுமையானது. எங்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதில் அவள் கொண்டிருந்த கவனத்தில் ஒரு சதவீகிதத்தை கூட தன் உடல்நிலை குறித்து அவள் கொண்டிருக்கவில்லை. நாங்களும் கொண்டிருக்கவில்லை.

அவளது மார்பகத்தில் இருந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாய் மாறிய பின்பே நாங்கள் விழித்து கொண்டோம். எங்கள் ஊரான தூத்துக்குடியில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க அதில் தேர்ச்சி பெற்ற சிறப்பு மருத்துவர்கள் அப்போது அவ்வளவாக இல்லையென்பதாலும் நண்பர்களிடமும்,உறவினர்களிடமும் விசாரித்த வரையில் பலரும் கூறிய வகையில் மதுரை மீனாட்சி மிஷனில் சிகிச்சைக்கு செல்வது என முடிவு செய்து அங்கு சென்றோம். அங்கோ மருத்துவர்கள் அவளது இடது மார்பகம் முழுவதும் புற்றுநோயின் பாதிப்பு பரவி விட்டபடியால் இடது மார்பகத்தை அகற்றியாக வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதுவும் உடனே அதை அகற்றவில்லை என்றால் நோயின் பாதிப்பு உயிருக்கே பாதகம் ஏற்படுத்தும் என பயமுறுத்தியும் விட்டார்கள்.

நாங்களும் ஒருவழியாக அம்மாவை சமாதானம் செய்து அறுவைசிகிச்சைக்கு சம்மதிக்க வைத்தோம். அறுவைசிகிச்சைக்கான ஆயத்த வேலைகள் துவங்கியது.அப்பா...நான்...என்னுடைய அம்மாச்சி மூவரும் தான் அம்மாவிற்கு துணையாக மருத்துவமனையில் இருந்தோம். விதவிதமான நோய்களோடு நோயாளிகள்....

இனம் புரியா ஏக்கத்தோடு அவர்களை பராமரிக்கும் உறவுகள்....

பரபரப்பாக அங்குமிங்கும் பயணித்தபடி இருக்கும் செவிலியர்கள்....

மருத்துவமனை எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் பினாயில் நெடி….. என என் கண்முன் வேறு ஒரு புது உலகம் அப்போது அங்கே எனக்கு காட்சியாகி கொண்டிருந்தது.

அம்மாவை எப்போதும் ஒரு இரும்பு மனுஷியாகவே நாங்கள் பார்த்து வந்துள்ளோம். ஆனால் அறுவைசிகிச்சைக்கு செல்லும் முன் அவள் முகம் ஒருவித பதட்டத்தோடு வெளிறிப்போயிருந்தது. அவளது கண்களில் தெரியும் தன்நம்பிக்கையின் ஒளி கொஞ்சம் குறைந்தே காணப்பட்டது. ஏதோ பிரியாவிடை சொல்வது போல் புருவத்தை உயர்த்தி கண்களை மூடித்திறந்தாள்...... நான் அவள் அருகில் சென்று கண்கள் பனிக்க நின்றேன். வார்த்தைகளற்று. அவளது கைகளைப் இறுக பற்றி நெற்றியில் முத்தமிட்டேன்... அவை அப்போது குளிர்ந்திருந்தது.

என் தந்தையும் அவள் அருகில் வந்து,”என்னம்மா...ஒண்ணுமில்ல நீ பயமில்லாம போயிட்டு வா...நாங்க எல்லாம் இங்க இருக்கோம்ல....நாம யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்ல...அதனால எல்லாம் நல்லபடியா நடக்கும்...”என நம்பிக்கை அளிப்பதாய் நினைத்து கொண்டு தழுதழுத்தார்.

என் பாட்டியோ கண்ணை கசக்கி கொண்டு இருந்தாள். அவளை பார்த்த என் அம்மா,”ஏம்மா! நீ வேற இப்படி அழுதுட்டு நிக்கிற...” என கடிந்து கொண்டாள்.

“இல்லம்மா...அம்மா அழல...நீ தைரியமா போய்ட்டு வா..நாம வணங்குற தெய்வம் நம்மள ஒருநாளும் கைவிடாது...”என தனக்கு தோன்றியதை சொல்லி தேற்றினாள்.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அறுவை சிகிச்சை நிபுணரும்,”ஒண்ணும் பயப்படாதிங்க....அதான் நாங்க இருக்கோம்மில்லையா...இன்னும் இரண்டு நாள்ல உங்க மக துள்ளி குதிச்சு எழுந்திருவாங்க....”என நம்பிக்கையான குரலில் எங்களை தேற்ற முயற்சித்தபடி ‘அறுவை சிகிச்சைக்கு அறை தயாராகிவிட்டதா?’ என அருகில் இருந்த நர்ஸிடம் கேட்டுக்கொண்டார். அவள் அதற்கு பதில் கூறும் முன் தன் அருகிலிருந்த மற்றொரு மருத்துவரிடம் வேகமாக எதையோ கிசுகிசுத்தார். அவரும் ஏதோ சொன்னவுடன்... எங்களை பார்த்து புன்னகைத்து விட்டு அறுவை சிகிச்சை அறைக்குள் சென்றுவிட்டார்.

அப்போது நேரம் சரியாக காலை 11.00மணி. நாங்கள் அனைவரும் அறுவை சிகிச்சை அறையின் வாசலில் இருப்பு கொள்ளாமல் காத்திருந்தோம். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை உள்ளிருந்து எதையாவது வெளியே கொண்டுவருவதும் அல்லது வெளியிலிருந்து எதையாவது எடுத்து செல்வதுமாய் இருந்தார்...நர்ஸ் ஒருவர். நாங்கள் பதட்டத்தோடு அவரை நெருங்கினால் வேகமாக எங்களை கடந்து சென்றிடுவார். என்னதான் அவர் வேகமாக செல்ல முயற்சித்தாலும் நாங்கள் அவரை ஓரிருமுறை நிறுத்தி உள்ளே எல்லாம் நல்லபடியாக நடக்கிறதா..என மேல் விசாரனை செய்ய தவறவில்லை.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்து கொண்டிருந்த அறுவை சிகிச்சையில்....ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சை நிபுணர் வெளியே வந்தார். நாங்கள் பதறியடித்தபடி அவர் முன்னால் போய் விழுந்தோம். அவர் பதற்றமில்லா மெல்லிய குரலில் பேச துவங்கினார்....

”ஆப்ரேஷன் கிட்டதட்ட முடிஞ்சிடுத்து...இப்ப ஸ்டிச்சிங் நடந்திட்டு இருக்குது....ரொம்ப டீப் ரூட்டடா(deep rooted) கேன்சர் செல்ஸ் பரவியிருந்தது....நாங்க முடிஞ்சமட்டும் அதை ஸ்க்ராப் (scrap) செஞ்சு எடுத்துட்டோம். இப்போதைக்கு ஒண்ணும் பயப்பட வேண்டிதில்ல...”என உள்ளே திரும்பி எதையோ நர்ஸிடம் எடுத்து வரச் சொன்னார்.

ஒரு அலுமினிய தட்டில் இரத்தம் தோய்ந்த எதையோ கொண்டு வந்தார் அந்த நர்ஸ்....அது....என் தாயின் அறுத்து எடுக்கப்பட்ட மார்பகம்! எனக்கு உயிரூட்டிய அமுத கலசத்தை வெறும் சதை பிண்டமாய் என் கண்முன் காட்டப்பட்டது. வாழ்வின் மிக கொடுமையான தருணம் அது....உலகில் எவருக்கும் அந்த நிலை வரக்கூடாது.

அதை கையில் வைத்தபடி என்னென்னவோ பேசினார்....கடைசியில் நர்ஸிடம் அந்த தட்டை கொடுத்து மேலே லேப்பில் போய் கொடுக்குமாறு சொன்னவர்.என்னைப் பார்த்து,”தம்பி உங்களுக்கு தான ’ஓ’-பாசிட்டீவ்... நீங்களும் அவுங்க கூட போய் உங்க பிளட் சாம்பிள் கொடுத்திட்டு வாங்க...”என்றார்.

என் தாயின் மார்பகங்களை அவள் ஒரு தட்டில் ஏந்தி ஒரு சிறு தூண்டை வைத்து மட்டும் மறைத்தபடி லிப்ட் நோக்கி சென்றாள்...நான் ஒரு பிணத்தை போல் அவளை பின் தொடர்ந்தேன். லேப்பிற்கு இன்னும் இரண்டு மாடிகள் செல்ல வேண்டி இருந்தது. அந்த ஒவ்வொரு நொடியும் மிகமிக கொடுமையானவை.....எங்களோடு லிப்டில் ஏறி வந்தவர் ஒருவர் நர்ஸின் கையில் உள்ள தட்டை பார்த்து ஒருவித முகச் சுளிப்போடு ஒதுங்கிக் கொண்டார். என் தாயின் மார்பை கையில் வைத்து கொண்டிருந்த நர்ஸும் ஒருவித அருவருப்புடனே அதை சுமந்து கொண்டிருந்தார். அந்த ஒவ்வொரு கணமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத வேதனைகளை எனக்கு பரிசளித்து கொண்டிருந்தது.

ஒரு மகனாய்...என் தாயின் வலியை அன்று தான் முழுவதுமாக உணர்ந்து கொண்டேன்......

மிகக் கொடுமையான அந்த நினைவுகளை அசைபோட்டபடி மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தேன்.

………………..தொடரும்

வெள்ளி, 20 மே, 2011

என் தேவதையின் சரிதை....

வெண்ணிற உடை அணிந்து....இறக்கைகள் தரித்துக்கொண்டு...நட்சத்திரங்களை சூடியபடி....வேண்டிய வரங்கள் அளிக்கும் அற்புத கன்னிகள்.. என தேவதைகளைப் பற்றி ஏராளமான கதைகளை படித்தும், கேட்டும் இருப்போம். அப்படிப்பட்ட தேவதைகள் எங்கே இருப்பார்கள்? அவர்களை காண முடியுமா? என பலவிதமான விடை காணா கேள்விகளோடும், தேவதைகள் குறித்த கனவுகளோடும் நமது குழந்தை பருவத்தை கடந்து வந்திருப்போம். அத்தகைய தேவதைகள் குறித்த தேடல்களையும், கனவுகளையும் கால ஓட்டத்தில் தொலைத்து விட்டு அன்றாட அப்பத்திற்காகவும், அளவில்லா ஆசைகளுக்காகவும் நாம் தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்கிறோம்.

தேவதைகள் நம்மை சுற்றியே வலம் வந்து கொண்டும் நம்மை வாழ்த்திக் கொண்டுமே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நம் அருகிலேயே இருப்பதாலோ என்னவோ நாம் அவர்களை அடையாளம் கண்டு கொள்வதில்லை. பெரும்பாலும் பிரியும் கணங்களே நாம் அந்த தேவதைகளை இனம் கண்டு கொள்ளும் தருணங்களாக அமைந்து விடுகிறது. ஆம்! எனக்கும் அப்படித்தான் நேர்ந்தது....

அவள் என்னோடு இருக்கும் வரை அவள் ஒரு சாதாரண மனுஷியாக மட்டுமே தெரிந்தாள். என் மீதான அவளது அளப்பெரிய அன்பு கூட எனக்கு இயல்பான ஒன்றாகவே தோன்றியது. அவளும் ஒருபோதும் தன்னை மிகைப்படுத்தி என்னை உணரச் செய்ததில்லை. ஆனால் அவளை இழந்த பின்பே உணர்ந்து கொண்டேன் ”அம்மா..” என்பவள் வெறும் மனுஷியல்ல ”அவள் ஒரு தேவதை” என்று.

ஆம்! நான் தொலைத்த என் தேவதையை பற்றிய கதை இது…….

அது 2003ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி.....

அப்போது நான் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு முடிக்கும் தருவாயில் இருந்தேன். முதல் செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரி விடுதியில் படித்துக்கொண்டிருந்தேன். வார்டன் அறையிலிருந்த ஒலிபெருக்கியில் எனக்கு வீட்டிலிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்திருப்பதாக அழைத்தார்கள். நான் வழக்கம் போல் அம்மாதான் பரீட்சை நேரத்து இலவச ஆலோசனைகளை வழங்க அழைக்கிறார் என எண்ணியபடியே வார்டன் அறைக்கு சென்றேன்.

அங்கே வழக்கத்திற்கு மாறாக என் அப்பாவின் குரல் ஒலித்தது.

”என்ன மக்களே…. எப்படி இருக்க…? பரீட்சைக்கு நல்லா தயாராயிட்டியா....”அப்பாவின் பூர்வீகம் கன்னியாக்குமரிக்கு அருகில் உள்ள கூட்டப்புளி என்னும் கடற்கரை கிராமம். என்னதான் பிழைப்புக்காக தூத்துக்குடிக்கு வந்து என் அம்மாவை திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்க்கை பயணத்தை கடத்தி விட்டாலும் அவரது நாவினால் அந்த ”இடக்கத்தி” மொழியை விட்டுவிட முடியவில்லை.

“ஆமப்பா படிச்சிட்டு தான் இருந்தேன்....என்னப்பா அம்மா எங்க..? வேலைக்கு போய் இருக்காங்களா..?”

“அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சௌரியமா இல்ல...அதான் அவளும் உங்க ஆச்சியும் ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்க..”

“என்னப்பா அம்மாவுக்கு என்ன உடம்புக்கு...?”

“அம்மாவுக்கு ஒண்ணூமில்லய்யா…. அவளுக்கு கொஞ்சம் சலி அதிகமாயிடுச்சு அவ்வளவுதான்….அதான் உங்கிட்ட அவளால பேசமுடியல...இதபத்தியெல்லாம் யோசிக்காம நீ நல்லா பரீச்சை எழுது...அதான் நாங்க எல்லாரும் இங்க இருக்கோம்மில்லைய்யா...”

“வேற ஒண்ணும் பிரச்சனை இல்லையேப்பா…?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல மக்களே…..” இதைச் சொல்லும் போதே அவர் குரல் சற்று கம்மியது.

நானும் சற்று குழப்பம் மேலிடவே “சரிப்பா அம்மாவ பாத்துக்கோங்க....முடிஞ்சா நாளைக்கு காலைல போன் பண்ணச் சொல்லுங்க... நான் நாளை மறுநாள் செமஸ்டரை முடிச்சிட்டு ஊருக்கு வந்திருவேன்...”

“நல்லா கருத்தா எழுதிட்டு பத்திரமா வாய்யா…..”

போனை வைத்துவிட்டு அறைக்கு செல்லும் போதே மனது கனத்தது போல் இருந்தது. ஏதோ சொல்ல முடியாத ஒரு பாரம் மனதை கவ்வியது போல் உணர்ந்தேன். இப்படி ஒருவிதமான மனநிலையில் அறைக்குள் நுழைந்தால்....அங்கே இருந்த என் நண்பன்..”என்ன மாமா ஒரு மாதிரி பேயரஞ்சாப்பல வார....வீட்டுலருந்து மொக்கை ஜாஸ்தியோ...?”

“இல்லய்யா மாமா... அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்...அதான் உங்கிட்ட எல்லாம் சொல்லியிருக்கேன்ல... அம்மாவுக்கு கேன்சர் இருந்திச்சுன்னு….. ஆப்ரேட் பண்ணி முடிச்ச பிறகும் கீமோதெரபி...ரேடியேஷ்ன்னு...ஒவ்வொண்ணா பண்ணிக்கிட்டு இருந்தாங்க....இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சரியாயிகிட்டு வந்திச்சு ஆனா இப்ப திடீரின்னு உடம்பு சரியில்லன்னு அப்பா சொன்னவுடனே மனசு கஷ்டமா இருக்கு...”

“அம்மாவுக்கு அதெல்லாம் ஒண்ணும் இருக்காதுய்யா....நாள மறுநாள் எப்படியும் ஊருக்கு போகப் போற ரொம்ப கொழப்பிக்காத....முதல்ல நாளைக்கு கதைய பாரு...”என ஆறுதலளித்தான்.

அப்படியே வேறு வேறு விஷயங்கள் பேசியபடி இருந்ததால் அம்மாவின் உடல்நிலை குறித்த உறுத்தல்களை ஒருவாறு மறந்து சகஜமாகியிருந்தேன். மறதி என்ற குணம் மட்டும் மனிதனுக்கு இல்லாமல் போயிருந்தால் நிம்மதி என்ற உணர்வையே மனிதன் சுவைத்திருக்க மாட்டான் போலும்.

செமஸ்டர் தேர்வுகளும் முடிந்தது...உற்சாகமாக விடுமுறையை அனூபவிக்க ஊருக்கு பயணமானோம். கல்லூரி நாட்களில்... நண்பர்களோடு கொட்டமடித்தபடி ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் நம் சொந்த ஊரை காணும் உற்சாகத்தோடு... மேற்கொள்ளும் அந்த பயணங்களின் ஒவ்வொரு கணமும் அத்தனை மகிழ்ச்சியானது. அத்தகைய பயணங்களில் எங்களோடு பேருந்தில் பயணிக்கும் பயணிகள் நிச்சயம் அந்த பயணத்தை தங்களது வாழ்வில் மறக்க முடியாத பயணங்களின் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள்.

கிண்டலும்,கேலியுமாய் ஆட்டம்பாட்டத்தோடு ஒரு ரகளையான கச்சேரியே பேருந்தில் களைகட்ட வைத்துவிடுவோம். முன்பின் அறியாத முகங்கள் கூட நெருங்கிய உறவுகளாக மாறிப்போவார்கள். சிடுமூஞ்சிகளையும், சிரிக்க தெரியாதவர்களையும் கூட சிநேக புன்னகை வீசசெய்திடும் எங்களது சேஷ்டைகள். அந்தப் பயணமும் அப்படித்தான் உற்சாகமாக இருந்தது. ஆனால் அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை அதுதான் நான் கடைசியாக என் கல்லூரி வாழ்வில் பயணிக்கபோகும் உற்சாக பயணமென்று.

மாலை முடிந்து கருக்கல் பூக்கும் நேரத்திற்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். மல்லிகை மணமும், மனித நெரிசல்களுமாய் களைகட்டியிருந்தது மதுரை பேருந்து நிலையம். பயணிகளது உடைமைகளையும்,பயண பொருட்களையும் பாதுகாக்க சொல்லி மதுரை காவல்துறை ஒலிபெருக்கியில் எச்சரித்துக் கொண்டிருந்தது. பழங்கள் முதல்...பலான புத்தகங்கள் வரை கையிலேந்தியபடி எங்களை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். நாங்கள் அவர்களையும் விட்டு வைக்காமல் எங்களது பழைய பாடபுத்தகங்களுக்கு பண்டை மாற்றாக அவர்கள் கையில் உள்ள பெருட்களை தர சொல்லி கேட்கவும் அவர்கள் எங்களை முறைத்துவிட்டு விலகிப் போனார்கள்.

மதுரை வழியாக ஊருக்கு திரும்பும் போது என் அம்மாவிற்கு பூக்கள் வாங்கி செல்வது என் வழக்கம். அதுவும் மதுரை மல்லிகை என்றால் என் அம்மாவிற்கு ரொம்ப பிடிக்கும். அவள் கையில் நான் வாங்கிப்போகும் பூவை கொடுத்தவுடம் அவள் முகத்தில் மலரும் பூரிப்பு மதுரை மல்லிகையை விட அத்துணை அழகாயிருக்கும். அதுவும் சில சமயங்களில் அந்த பூவை கையில் வைத்து கொண்டு என் அப்பாவை பார்த்து “இது எம்மவன் எனக்கு வாங்கிட்டு வந்திருக்கான்...”என அவள் சொல்லிக்காட்டும் போது நான் என் தந்தையை வென்றது போல் உணர்வேன்.

இம்முறையும் அவளுக்காக கொஞ்சம் மல்லிகையை வாங்கினேன். பூ வாங்கிய கையோடு அவளோடு பேசிவிடலாம் என எண்ணம் தோன்றியதால் அருகில் இருந்த தொலைப்பேசி நிலையத்திற்கு சென்று அழைத்தேன். வீட்டில் வேலை பார்க்கும் அக்காதான் போன் எடுத்தார்.

“என்னக்கா நான் தான் பெரியதம்பி பேசுறேன் எப்படியிருக்கீங்க....அம்மா அப்பா வீட்ல இல்லயா..?”

“தம்பி...நல்லாயிருக்கீங்களா..?”

”ஆங்….நல்லாயிருக்கேன்க்கா…”

”தம்பி…. அம்மாவுக்கு ரொம்ப மேலுக்கு முடியாம போயிடிச்சு அதனால மதுரைக்கு அப்பா கூட்டிட்டு போயிட்டாங்க...”

“மதுரையிலேயா....எந்த ஆஸ்பத்திரி...?”

“அம்மாவுக்கு ஏற்கனவே ஆப்ரேஷன் பண்ணாங்களே அந்த மீனாட்சி ஆஸ்பத்திரிக்கு தான்...”

“எந்த ரூம்முன்னு தெரியுமா..?”

“202-ன்னு சொன்னாங்க...”

”சரிக்கா...நான் இப்ப மதுரையிலதான் இருக்கேன்...நான் போயி பாத்துக்கிறேன்..”என சொல்லிவிட்டு போனை துண்டித்தேன்.

ஊருக்கு போகும் உற்சாகமெல்லாம் வடிந்து விட்டிருந்தது. ’அம்மாவுக்கு என்ன ஆகியிருக்குமா?’ என மனம் பதைபதைக்க துவங்கியது. கற்பனை குதிரை அபாயமான கற்பனைகளை கட்டவிழ்த்து விட்டு என்னை கலங்க செய்தன.

..............தொடரும்.



சனி, 30 ஏப்ரல், 2011

என் காம சுவடுகள்...


நிலைகுலையா காமம்

நிதானம் இழப்பதும்

ஒரு சுகம் தான்

அவளது நிந்தனைகள்

என்னை காமுறச் செய்யுமானால்.


இதயத்தின் யாசகம்

இதழ்கள் மோதும் நேரத்தில்-என்

இதயம் இடும் கூச்சல்- என்னை

இம்சிக்கின்றது மீண்டும் மீண்டும்

இன்னொருமுறை வேண்டு மென்று.


நிலவு சாட்சி

நிலைவை சாட்சியாக்கி

அவள் இதழ்களில் முத்தமிட்டேன்

நிலவு வெட்கி மறைந்தது-அது

அமாவாசையாம்!


வேண்டுதல்

வேண்டா வெறுப்பாய்

வேண்டு மென்றே விலகிச் சென்றேன்

அவள் மீண்டும் என்னை

வேண்டி இழுக்க வேண்டிக் கொண்டு.


அசாத்தியமான சாத்தியங்கள்…

அது எப்படி சாத்தியமாகிறது…?

அவள் என்னிடம் பேசிவிட்டு

‘சென்ற பின்னும்

அவள் மௌனங்கள் என்னை இம்சிக்கிறதே!

அது எப்படி சாத்தியமாகிறது…?

அவள் என் அருகில் இல்லாமல்

அவள் என் நினைவுகளைக் கொண்டே

என்னை தீண்டுகிறாளே!

அது எப்படி சாத்தியமாகிறது…?

அவள் தன் ஆடைகளை

களைந்த பின்பும்

அது அவள் அவயங்களை சுமக்கிறதே!

அது எப்படி சாத்தியமாகிறது…?

அவள் போதும் என்று

என்னை விலகி சென்ற பின்னும்

அவள் விரல்கள் என் தலை கோதுகிறதே!

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

என் கவிதைகள்...

பொய் சொல்லும் கண்கள்….


முகம் பார்க்கும் கண்ணாடி

முன் நின்று கொண்டு....

இனிமேல் பொய்கள் பேசுவதில்லை

என சபதமேற்றுக் கொண்டேன்

என் கண்கள் பேசும்

பொய்கள் புரியாமல்!


நிலையான கண்ணீர்


கண்ணீர் என்பது…..

துக்கத்தின் குறியீடா…?

ஆனந்தத்தின் வெளிப்பாடா…?

தெரியவில்லை-ஆனால்

ஆனந்தத்தின் ஆரம்பமும்

துக்கத்தின் முடிவும்

கண்ணீரில் நிலைக்கிறது.



விருந்தோம்பல்

வேண்டப் படாதவன்

விரும்பத் தாகத நேரத்தில்

வீட்டிற்கு வந்து விட்டால்

விடை சொல்ல வழியின்றி

விசாரிப்புகளில் துவங்குகிறது…..

”விரும்பா” விருந்தோம்பல்.



பிரியாவிடை

அவள் என்கைகள் பற்றி

கண்கள் பனிக்க கெஞ்சினாள்….

நான் நெஞ்சம் இறுக்கி

என்னை அவளிடமிருந்து

விடுவித்துக் கொண்டு

அவளுக்கு கண்ணீராவது

நிலைக்கட்டும் என எண்ணியபடி….

வந்துவிட்டேன்

மீளா துயில் கொள்ள!

“

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

காதல் என்னும் புரியாத புதிர்....

காதல் ஒரு புரியாத புதிர் தான்….

காமுறச் செய்யும் காதல்

கண்ணீர் சுரக்கவும் சொல்கிறதே…?

தியாகம் பயிற்றும் காதல்

கோபப் படவும் வைக்கிறதே….?

அக்கறை காட்டும் காதல்

நிராகரிப்பும் செய்கிறதே…?

அள்ளி அணைக்கும் காதல்

கொள்ளி வைக்கவும் துணிகிறதே…?


காதல் ஒரு புரியாத புதிர் தான்…..

கண்ணில் நுழைந்த காதல்

இதயம் சென்றபின் பார்வை இழக்கிறது.

பார்வை இழந்த காதல்

ஆசைகளின் கைப்பிடித்து கொள்கிறது.

காற்றில் மிதக்கும் இறகினைப் போல்

காதல் மிதக்க செய்கிறது.

காதல் மிதப்பில் நம் கால்களைக் கூட

மறந்து போகிறோம்.

அதனால் தானோ....

காதலில் விழுந்தவர்கள்

மீண்டும் எழுவதில்லை....?


காதல் ஒரு புரியாத புதிர் தான்…..

மனிதனைத் தவிற வேறு எந்த உயிரும்

இதனைச் செய்வதில்லை.

நேசிக்கப்பட்டவர்களால்

நிராகரிக்கப் பட்ட பின்னும்…..

அரவணைக்கப்பட்டவர்களால்

தனிமை படுத்தப்பட்ட பின்னும்….

பிரியத்துக்குரியவர்களால்

பிரிவு பரிசளிக்கப்பட்ட பின்னும்….

காதல் ஒரு புரியாத புதிர் தான்.

வியாழன், 14 ஏப்ரல், 2011

நான் பேசுகிறேன்....


“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ? எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.” என்கிறது கீதை.

மேற்கூறிய ‘அறிவுரையை’ சிலாகிக்காத ஆன்மீக வியாதிகளே இல்லை. பார்பனிய வேதத்தின் ‘மகிமை’யே இதுதான். மனிதகுலத்திற்கு விரோதமான சித்தாந்தங்களை கூட மிகவும் ஏற்புடையதாக மாற்றும் வித்தை அறிந்த கயவர்களின் வேதம் அது. ஏனென்றால் இதைவிட மிக நைச்சியமாக யாராலும் அடிமைத்தனத்திற்கு வக்காளத்து வாங்கி இருக்க முடியாது.

கீதையின் இந்தச் சாரம் நமக்குள் விதைக்க விரும்புவது என்னவென்றால் சுயமரியாதையை துறந்து நமக்கு ‘விதிக்கப்பட்ட’ அடிமைத்தனத்தை எந்தவித எதிர்ப்புகளுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே!

நடந்தவைகள் அனைத்தையும் நாம் நல்லவைகளாய் மாத்திரம் கொள்ள வேண்டுமாம். அது எப்படிச் சரியாகும்…? பிறப்பு என்பது ஒருமுறை தான். அதில் மனிதராய் பிறந்த நாம் ஏன் சக மனிதனிடம் ஜாதியின் பெயரால் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்? எப்படி நம்மைச் சுற்றி நடந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் நல்லவைகளாய் எடுத்துக் கொள்ள முடியும்?

எதனைப்பற்றியும் கவலைப்படாமல் நடப்பது எல்லாம் நன்றாகவே நடக்கும் என முடங்கிப்போவதற்கு நாம் என்ன மாக்களா…?

எந்த முயற்ச்சியும் இன்றி சோம்பிக் கிடந்துவிட்டு நமக்கு நடப்பவைகள் எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் என எதிர்பார்ப்பது அறிவீனம் இல்லையா…? அது பேராசையல்லவா…?

நமது உழைப்பினையும்,விலை மதிப்பற்ற நேரத்தையும் உறிந்து விட்டு நமது உரிமைகளையும், உடைமைகளையும் பறித்துக்கொண்டு கொழுத்துச் செழிக்கும் பெருமுதலாளிகளின் கூட்டத்திடம் நாம் இழந்தது எதுவும் இல்லை என ஏற்றுக்கொள்ளச் சொல்வது அயோக்கியத்தனமானது இல்லையா…? நமது இந்த இழப்புகளுக்காக போராட்டங்களல்ல சிறு கதறல் கூட இருக்கக் கூடாது என்றால் இதனைவிட கயமைத்தனம் வேறென்ன இருக்க முடியும்…?

நமது ஒவ்வொரு துளி வியர்வையாலும், முயற்சிகளாலும், தியாகங்களின் விளைவுகளாலும் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் மீது நமக்கு உரிமையில்லையா…? நாம் நமது உழைப்பிற்கு எஜமானர்கள் இல்லையா…? நமது சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் நாம் தானே உடைமையாளர்கள்…? உரிமை என்பது அவரவர் உழைப்பை சார்ந்த விஷயமல்லவா…? அதனை எப்படி மற்றொருவருக்கு நம்மால் கைமாற்றி விட முடியும்?

தோழர்களே!

இப்படிப்பட்ட கேள்விகள் எதுவும் நமக்குள் எழுந்துவிட கூடாது என்பதால் மிகத் தெளிவாக ஜாதியக் கட்டுமானத்தை கொண்டு நம்மை அடிமைப்படுத்திக் கொண்டது அன்றைய பார்பனியம். நம்மைக் கொண்டே நம்மை அடிமைபடுத்தும் இந்த ஜாதிய கட்டமைப்பைத் தான் இன்றளவும் நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாழ்கிறோம்.

மூத்திரச்சட்டியை வைத்துக் கொண்டு தனது தொன்னூறாவது அகவையிலும் நம்மை சிந்திக்க வைக்க பயணித்துக் கொண்டே இருந்த ஈரோட்டு சிங்கத்தின் போதனைகள் இன்னும் நம் காதருகே ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. நாம் அதற்கு செவிமடுப்போமா…?