அவருக்கும் எனக்கும் எந்த இரத்த உறவுமில்லை. அவர் என் பால்ய கால சிநேகிதனும் இல்லை. ஆனால் என் தாயின் மரணத்திற்கு நிகரான வலியை அவரது பணி நிறைவு எனக்கு கொடுக்கிறது… இதில் எள்ளளவும் மிகையில்லை!
“தொழிற்சங்கம்” என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவனாய் என் தாயின் மறைவிற்கு பிறகு கருணை அடிப்படையில் வங்கிப் பணிக்கு சேர்ந்த அன்றே அந்த கருத்த மெலிந்த உருவம் சங்க உறுப்பினர் படிவத்துடன் தலைமை அலுவலகத்தில் என்னை எதிர் கொண்டது. நான் தயங்கினாலும் மிக எளிதாய் என் கையொப்பத்தை அவரால் வாங்க முடிந்தது.
அவர்தான் அண்ணன்.சோலைமாணிக்கம். அவரை நான் ”அண்ணன்” என்று அழைத்தாலும் அவர் என் தாயுமானவர்!
இளம் வயதில் பெற்ற தாயை பறிகொடுப்பதே தனிமனித சோகத்தின் உச்சம் என எண்ணிக் கொண்டிருந்தவனை, என் விரல் பற்றி என் சின்னச்சிறிய உலகில் இருந்து என்னை விடுவித்தார். இந்த பரந்த உலகில் அன்றாட விதிகளாக திணிக்கப்பட்ட சமூக அவலங்களை, சமூக அநீதிகளை எனக்கு காட்சிப் படுத்தினார். ஒரு தனிமனிதனால் அசாத்தியங்களை சாத்தியமாக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்தார்.
அது 2007-என நினைக்கிறேன்… புதுதில்லியில் உள்ள ஜந்தர்மந்திர் என்னும் இடத்திற்கு என்னையும், என் தோழன்.அருணையும் அழைத்து சென்றார். அங்கே நமது அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பாய் ஒருநாள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்றோம். அங்கு தேசமெங்கும் இருந்து பல்வேறு கோரிக்கைகளோடு மக்கள் பந்தலிட்டு நாட்கணக்காய்…. மாதக்கணக்காய்… ஏன் வருடக்கணக்காய் போராடிக் கொண்டிருப்பதை காண்பித்தார்.காஷ்மீர் பிரச்சனை முதல் திபெத் தனிநாடு கோரிக்கை வரை ஒவ்வொருவரும் மிக நீண்ட வரலாறுகள் கொண்ட கோரிக்கைகளோடு போராடிக் கொண்டிருப்பதை கண்டோம்.
ஒரு பக்கம் நகரவே முடியாமல் பரபரத்த தலைநகரமாய் காட்சியளித்த புதுதில்லி மறுபக்கம் நம்பிக்கையோடு நகராமல் காத்திருந்து போராடுவதுமாய் எங்களுக்கு அங்கு இருவேறு இந்தியா காட்சியானது.
இப்படியாக அவர் எனது பிரமைகளை அத்தனை இயல்பாய் தகர்த்து வந்தார்.என் தயக்கங்களை அவர் அனுமதித்ததே இல்லை… ஆம்! ஒரு பெருவெள்ளத்தைப் போல் என்னை அவர் திசையில் அடித்துச் செல்ல துவங்கினார். அவர் ஒருபோதும் என் முன் அமர்ந்து தொழிற்சங்க பாடங்களை ஒப்புவித்ததில்லை…. அப்படி அவருக்கு செய்யவும் தெரியாது. ஆனால் தனது சுயநலமற்ற,ஆளுமை நிறைந்த செயல்பாடுகளால் மெல்லமெல்ல பெரும் தாக்கத்தோடு என்னுள் ஊடுருவ துவங்கினார்.
ஒரு மத்தியதர தொழிற்சங்கத்தை தலைமையேற்று பெரும்பான்மையோடு நடத்துவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதனையும் அத்தனை சமூக பார்வையோடும், தீவரத்தோடும் முன்னெடுப்பது என்பது பறக்கும் கொக்கின் தலையில் இருக்கும் வெண்ணையை குறிபார்த்து அடிப்பதற்கு ஒப்பானது.
மிகப்பெரும் ஆளுமையும், சுவாரஸ்யமான பேச்சாற்றலும் அவருக்கு இயல்பாய் அமைந்த குணாம்சங்கள். எவரிடத்தில், எந்நேரத்தில் என்ன தொனியில் பேச வேண்டும் என்பதில் அவர் கைதேர்ந்தவர். பலமுறை அவரோடு நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தைக்கு சென்ற அனுபவங்கள் எனக்கு உண்டு. பிரதான கோரிக்கைகளை அவர் எடுத்தவுடன் பேசிவிட மாட்டார். நிர்வாகத்திற்கு நாங்கள் எது குறித்து பேச வந்துள்ளோம் என தெரிந்தும் அமைதியாக எங்கள் கோரிக்கைகளை முன்வைக்க அனுமதித்து அதற்கான பதில்களோடு காத்திருப்பார்கள், இவர் சம்பந்தமேயில்லாமல் வேறு ஒரு இடத்தில், சமயங்களில் நிர்வாகிகள் அணிந்திருக்கும் உடையின் விலையை கேட்டு என அவர்களது இறுக்கத்தை உடைத்து இயல்பாய் வேறுபல விஷயங்களைப் பற்றி உரையாடத் துவங்குவார். சகஜமாய் அவர்கள் உரையாடத் துவங்கும் போது கோரிக்கைகளை கடைவிரிப்பார். அவர்கள் தயாரிப்புகள் எல்லாம் தகர்ந்து போய் இவரது தாளத்திற்கு தலையசைக்க ஆரம்பித்திருப்பர்.
இப்படித்தான் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என அறுதியிட்டு அவர் ஒருநடைமுறையை கடைபிடித்தது கிடையாது. ஆனால் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஒருவிதமாகவும்,வெற்றிகரமான இயக்கங்களுக்கு பிறகான காலக்கட்டங்களில் ஒருவிதமாகவும், என பலவிதங்களில் காலசூழலுக்கு ஏற்ப அவர் நடத்தியக் காட்டிய பேச்சுவார்த்தைகள் என்னளவில் எந்த பல்கலைகழகத்தில் கற்றுப் பெற முடியாத அற்புத அனுபவப் பாடங்கள்.
வெகுஜன இயக்கங்களில் எதிரிகளை அடையாளம் கண்டு கொள்வது அத்தனை முக்கியமானது. நாம் நம் எதிரிகளை அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை எனில் நாம் எத்தனை உன்னதமான நோக்கத்திற்காகவும் சமரசமற்று போராடியும் பயனற்று போகும்! இன்றைய சூழலில் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை பறிக்கும் எதிரிகளாக அதிகாரவர்க்கங்கள் மட்டும் இருப்பதில்லை பல சந்தர்பங்களில் அடிமை மனோபாவத்தின் எச்சங்களாக சில ஞமிலிகளும் இருப்பார்கள்! நாம் அவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டே நாம் நமது இயக்கங்களை முன்னெடுக்க வேண்டி இருக்கும்.அப்படி நபர்களை எடைபோடுவதில் தோழர்.சோலைமாணிக்கம் வல்லவர். ஒவ்வொரு நபரையும் அவரது இயல்புகளோடு அறிந்து வைத்திருப்பார். ஆகவே அவரால் எதிரிகளை எளிதில் அடையாளப் படுத்த முடியும். ஆகவே முன் கூட்டியே சில விஷயங்களை அனுமானித்துக் கொண்டு அவர் இயக்கங்களை தடையின்றி முன்னெடுப்பதையும் நான் ஆச்சர்யத்தோடு வியந்து பார்த்திருக்கிறேன்.
அதேபோல் பாண்டியன் கிராம வங்கியின் ஒவ்வொரு ஊழியருக்கும் மாத்திரமல்ல அவர்தம் குடும்பத்தினருக்கும் மிகவும் பரிச்சயமான நபர் அவர்! அவருக்கு ஆயிரம் காதுகளும், ஆயிரம் கண்களும் உண்டோ என பலமுறை நான் வியந்துள்ளேன். ஏனெனில் வங்கியில் எந்தக் கிளையில் எந்தப் பிரச்சனை நடந்தாலும் அது நிர்வாகத்தின் காதுகளுக்கு செல்லும் முன் அவரது கவனத்திற்கு வந்துவிடும். அப்படிப்பட்ட நேரங்களில் முடிந்தவரையில் தானே சென்று அப்பிரச்சனைகளில் தலையிட்டு ஊழியர்கள் பாதிக்கப்படா வண்ணமும், வங்கியின் பெயர் களங்கப்படா விதத்திலும் பார்த்துக்கொள்வார்.
அவருக்கான ஆளுமைக்கும் செல்வாக்கிற்கும் அவர் நினைத்திருந்தால் எப்போதோ பதவி உயர்வுகள் பெற்று அதிகாரத்தின் உயர்ந்த பதவிகளில் வீற்றிருக்கலாம். ஆனால் அவர் எல்லாவற்றையும் ஊழியர்கள் நலனுக்காகவும், தொழிற்சங்கத்தை கட்டுவதற்குமே பயன்படுத்தினாரே ஒழிய சிறு கணமேனும் அவரது சுயதேவைக்காகவோ நலனுக்காகவோ பயன்படுத்திக் கொண்டதில்லை. அவர் தன் இழப்புகளை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டார். அதுதான் அவரை வெகுஜனத் தலைவராக வலம்வரச் செய்தது.
தான் ஒரு பொதுச்செயலாளர், அகில இந்திய தலைவர்களில் ஒருவர் என்று அவர் ஒருபோதும் தன்னை எங்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டியதில்லை. எங்கள் சங்க அலுவலகத்தில் தாகம் என்று எங்கள் கைகள் நீண்டால் தண்ணீர் கொண்டு வரம் கரங்கள் அவருடையதாகவே இருக்கும், அவர் ஒருபோதும் வயது பாராட்டி பழகியதில்லை. இப்படியாக சக தோழனாய் மிகவும் இயல்போடு பழகி தொழிற்சங்க உணர்வுகளை எங்களுக்குள் செலுத்தி சமூக மனிதர்களாக எங்களை உருவாக்கவும் அவர் தவறவில்லை!
“என்னுடைய துப்பாக்கியை வேரொறுவர் எடுத்து அநீதிக்கு எதிராக போராடுவார்கள் என்றால் நான் கொல்லப்படுவதை பற்றி கவனம் செலுத்த மாட்டேன்”- என்றான் சேகுவேரா. அதுபோலவே மிகப்பெரும் நம்பிக்கையோடு தோழர். சோலைமாணிக்கத்தின் கரங்களும் எங்களை நோக்கி நகர்ந்தே வந்துள்ளது. நிச்சயம் அவர் கரங்கள் ஏமாற்றத்தோடு விடைபெறாது!!!
ஒரு சமரசமற்ற போராளியாக, நரம்பு புடைக்க வீதியில் நின்று அநீதிகளுக்கு எதிராக கோஷமிடும் கலகக்காரனாக, என்றளவில் மாத்திரம் நான் இதுவரை எழுதியதை வைத்து அவரது சித்திரத்தை குறுக்கி விடாதீர்கள்! ஏனெனில் நக்கலும், நைய்யாண்டியும் நிறைந்த குசும்புக்கார குழந்தையும் கூட அவர்!
அவருக்கு தேசமெங்கும் நண்பர்கள் உண்டு. அதற்கு அவர் தேசிய அளவில் அறிமுகமிக்க முதிர்ந்த தொழிற்சங்கவாதி என்பதை தாண்டியும் இருக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று அவருக்கு மட்டுமே தெரிந்த அந்த…. சிறப்பு பாஷை!!
“எக்கல மோன மோன…கிக்லி பிக்காலே பக்கலபக்க கிக்லிப் பப்பா…”-இதற்கான அர்தத்தை ஆய்வு செய்யாமல் இங்கு ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன்…
நான், சோலை அண்ணன், தோழர்கள். அருண், சங்கர் ஆகியோர் இரயிலில் ராஜஸ்தான்- “சிக்கார் மாநாட்டிற்கு” பயணித்துக் கொண்டிருந்தோம். எங்கள் நால்வரோடு இரண்டு ஆயுதமேந்திய இராணுவ வீரர்களும் எங்கள் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் வடநாட்டு வீரர்கள்!!! இரண்டு நாள் பயணமாதலால் இயல்பாக இரயில் சிநேகம் மலர்ந்தது.அவர்களுக்கு ஆங்கிலமும் அவ்வளவாக தெரியவில்லை, எங்கள் நால்வருக்கும் ஹிந்தியை தமிழிலும்,ஆங்கிலத்திலும் எழுதினால் மாத்திரமே அது ஹிந்தி என புரியும்.
ஆனாலும் அச்சா, பச்சா, பாணி நை… என சென்று கொண்டிருந்தோம்.அவர்கள் இருவரும் தாங்கள் விழித்திருக்கும் சமயங்களில் பெரும்பாலும் துணி சுற்றிய துப்பாக்கிகளை கையிலே வைத்துக் கொண்டு பயணித்தார்கள். சோலை அண்ணன் அவ்வப்போது எங்களிடம் திரும்பி”இவனுங்க இத ஏன்பா கைல வச்சுக்கிட்டே வர்றானுவ…? குண்டு லோட் பண்ணியிருப்பாய்ங்ளோ?வெட்டிப் பயலுவ..” என ஏதாவது கேட்டுக் கொண்டே இருந்தார். நான் “ஏண்ண நீங்களே அத கேட்டாத்தான் என்ன?” என தெரியத்தனமாய் சொல்லிவிட்டேன்.
சோலை அண்ணன் எங்களை பார்த்து திரும்பி “இப்ப நான் என்ன செஞ்சாலும் சிரிக்க கூடாது..” என உத்திரவிட்டார். நாங்க கலவரமாகிக் கொண்டிருக்கையிலே அவர் தன் வேலையை ஆரம்பித்துவிட்டார். “கண்.. நைஸ் கண்…” என்றவர் அவர்கள் புன்சிரிப்போடு தலையை ஆட்டியதும் “இக்கில பிக்காலே… கிக்கில..இக்கல பிக்கா…கேல மோன மோன…” என தன் பாஷையை ஏதோ அத்தனை சீரியஸாக பேச தொடங்கிவிட்டார், அவர்களும் பெரியவர் ஏதோ தன் மொழியில் அவர்களுக்கு அறிவுரை தான் வழங்குகிறார் என நினைத்து தலையாட்ட துவங்கினர்.
எங்களாலோ சிரிப்பை அடக்க முடியவில்லை. அருண் என் தொடையை கிள்ள…சங்கரோ ”வம்பா உண்ம தெரிஞ்சு நாம பலியாக போகிறோம்…” என வாயை பொத்திக் கொண்டு இடத்தை காலி செய்து ஓடிவிட்டார். அந்தப் பயணத்தில் தான் ’நித்திய கண்டம் பூரண ஆயிசு…’ என்ற முதுமொழியின் அர்த்தமே எங்களுக்கு முழுமையாக விளங்கிற்று.
இப்படித்தான் அவர் எப்போதும்…. பஸ்ஸில் பயணம் செய்கையில்,ஓட்டலில் சாப்பிடுகையில் என முன்பின் தெரியாத ஒருவரிடம் அத்தனை இயல்பாய் நெடு நாளைய உறவினர் போல் சிரிக்காமல் பேசத் துவங்கிவிடுவார். தோற்றத்தில் மரியாதைக்குரிய முதியவராய் இருப்பதால் யாரும் குழம்பவே செய்வார்களே ஒழிய கோபம் கொள்ள மாட்டார்கள்…. இவரும் நோகாமல் நைய்யாண்டி செய்த வண்ணமே இருப்பார், ஆனால் அவருடன் இருக்கும் நமக்குத் தான் நமது அடிவயிற்றின் ஓசை அவ்வப்போது கேட்கும்!
ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப்பெயர் வைப்பது, மற்றவர்களைப் போல் நடித்து காண்பிப்பது, என எப்போதும் துறுதுறுவென்று ஏதோ ஒன்று செய்து காட்டிக்கொண்டிருக்கும் உற்சாக மனிதர் அவர்!
பயணங்கள் அவருக்கு ஒருபோதும் சலித்ததில்லை. சின்னஞ்சிறு வசதிகளைக் கூட எதிர்பார்க்காமல் அத்தனை துடிப்போடு பயணித்துக் கொண்டே இருப்பார். அவரது கால்கள் ஓய்ந்து அமர்ந்து நான் பார்த்ததில்லை. அவர் தன் வாழ்நாளில் வீட்டில் கழித்த இரவுகளைவிட பயணத்தில் கழித்த இரவுகள் தான் அதிகமாயிருக்கும்! ஒரு தேடல் நிறைந்த தொழிற்சங்கவாதி ஓய்வறியாமல் பயணிப்பதில் வியப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் அந்தப் பயணங்களை சாத்தியமாக்கியதற்கு பின்னால் அவர்தன் சொந்த வாழ்வில் எத்தனை முக்கியமான தருணங்களை இழந்திருப்பார்? இவர் போன்ற வெளிச்சமிடப்படாத எளிய மனிதர்களின் உன்னதமான தியாகங்களில் தான் நம் தேசத்தின் இறையான்மைகள் இன்னும் இறவாமல் துஞ்சுகிறது!
வரலாறு என்பது மண்வெறி பிடித்த மன்னர்களின் பிறப்பு, இறப்புகளை நினைவில் கொள்வதோ அல்லது அவர்களது தயவால் யுத்தங்களில் சிந்தப்பட்ட இரத்தங்களின் காரணிகளை ஆராய்வதோ அல்ல. சாமான்ய எளிய மனிதர்களின் வாழ்வும், அவர்கள் சார்ந்து வாழும் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளும் சமரசமற்று பதிவு செய்யப்படுமாயின் அது தான் வரலாறு!!!
அந்த வகையில் இது ஒரு சமரசமற்ற தொழிற்சங்கவாதியின் தன்னலமற்ற,போராட்டங்கள் செறிந்த வாழ்க்கை இங்கு வரலாறாகிறது. அந்த உன்னத போராளியின் வாழ்க்கை குறிப்பை வரைவதில் எனது பேனாவின் மையும் இணைகிறது என்ற பெருமையோடு… மாற்றங்கள் தரும் வலிகளையும், விழிகளில் வழியும் நீரோடு ஏற்றுக்கொள்கிறேன்.
1 கருத்து:
தொழிற்சங்க அனுபவமேயில்லாத எனக்கு இதெல்லாம் மிகுந்த ஆவல் நிறைந்த விசயமாகவும், பெரிய இழப்பாகவும் இருக்கிறது. தொழிற்சங்க வாதிகளில் இடதுசாரிகள் மட்டும்தான் தொழிலாளர்களில் ஒருவராக இருக்கிறார்கள், மற்றவர்கள் அதிகாரவர்க்கத்தினராகவும் அல்லது புரோக்கரகளாகவும் மாறிவிடுகிறார்கள்.பகிர்வுக்கு நன்றி.
கருத்துரையிடுக