புதன், 4 செப்டம்பர், 2013

ஆல்டர் பாய்ஸ்



மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அவனை கடந்த ஞாயிற்று கிழமை பனிமய மாதா கோயில் வாசலில் வைத்து சந்தித்தேன். என்னை அடையாளம் கண்டு பிடித்தவனாக ஒருவித பரபரப்போடு என்னை அணுகினான்.

“மாப்ள… எப்புடி இருக்க…? பாத்து எவ்வளவு நாளாச்சு… என்னல பண்ணுற…? இது ஒம் மவனும் மவளுமா?” என தொடர் கேள்விகளை தொடுத்தவன் என் பதில்களுக்கு கூட காத்திராமல் என் மனைவியிடம் திரும்பி “நல்லா… இருக்கீங்களா…?” என அவளிடன் வெகு நாள் பழகியவனைப் போல அத்தனை சிநேகமாய் நலம் விசாரித்தான். உண்மையில் அவனை என் கல்யாணத்திற்கு கூட நான் அழைத்திருக்கவில்லை. அந்தக் குற்றவுணர்வு அந்தக் கணம் மேலோங்கினாலும் நான் அதை மறைத்தபடியே என்னை இயல்பாக காட்டிக் கொண்டு ,” என்னடா எப்படி இருக்க? அன்னைக்கு பாத்த மாறியே இருக்கியேடே…”

“நான் இருக்குறது இருக்கட்டும்… நீ என்னல இப்படி ஊதிட்ட… எனக்கே உன்ன முதல்ல பாத்த ஒடனே அடையாளம் கண்டுபிடிக்க முடியல  பாத்துக்க… ஆளே மாறிட்டேயே டே… அதுவும் மாதா கோயிலுக்குலாம் வாறே… தங்கச்சி மாத்திட்டாளோ?”

“நல்லா மாறுனாப்ளயே நீங்க வேறன்ணே எட்டு மணிக்கு கோயில் வாசல்ல எங்கள எறக்கிவிட்டிட்டு போறவுகதான்…. பூச முடிஞ்சு நான் போன் பண்ண பொறவுதான்… எங்கள கூப்பிடயே வருவாப்ல…இதெல்லாம் மாறத ஜென்மங்க..” என அவனிடம் என் மனைவி தன் ஆதங்கத்தை சமயம் பார்த்து இறக்கி வைத்தாள்.

“ நீ வேறம்மா இவன் அப்பவே பெரிய அங்ஞானி…. அதான் எங்க பய திருந்திட்டானோன்னு எனக்கே ஆச்சர்யமா போச்சு…” என்றபடி என்னைப் பார்த்து “ எல நீ இன்னும் திருந்தவே இல்லயா?” என்றான்.

“ஆம…ல நான் நாலு கொல, அஞ்சு வழிபறி, அப்பப்ப வீடு பூந்து கொள்ளன்னு அடிச்சிட்டு திரியிறம்பாரு திருந்துறத்துக்கு… அவதான் சொல்லுறான்னா இவனும் வக்காலத்து வாங்கிட்டு…”

“இப்படித்தாண்ணே நாம ஒண்ணு சொன்னா குண்டக்க மண்டக்க ஏதாவது குதற்க்கமா பேசி நம்ம வாய அடச்சிருவாப்ல…”

“நீ விடும்மா… இப்ப இவ்வளவு பேசுறானே….  ஒரு நேரத்துல பூசக்கி உடுப்பு போடுறதுக்கு எவ்வளவு சண்ட போட்டிருக்கான் தெரியுமா…? தொடர்ந்து மூணு பூசக்கெல்லாம் இவனும் நானும் முந்தி ஆல்டர் பாய்ஸா உடுப்பு போடிருக்கோம்… ஒரு பெரிய வெள்ளிகெழமைக்கு சாமிக்கு முன்னால சிலுவையெல்லாம் இவன் புடிச்சிட்டு போயிருக்கான் அந்தக் கதையெல்லாம் உங்கிட்ட சொல்லி இருக்கானா…?” என ஏதேதோ பேசியவன் பழைய நினைவுகளை எனக்குள் மீட்டத்துவங்கினான். ஒருவாறு அவனிடம் பேசி முடித்து அலைப்பேசி எண்களை சம்பிரதாயமாக மாற்றிக் கொண்டு விடைபெற்று வீட்டிற்கு வந்த பின்பும் அவன் கிளறிய அந்த பசுமையான நாட்களுக்குள் என் நினைவுகள் செல்லத் துவங்கியது.

அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்தோணியார் கோயிலுக்கு அதிகாலை ஆறு மணி பூசைக்கு என்னை அழைத்து சென்று கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் கிறுத்துவ வாழ்வை பழக்கப் படுத்த என் அம்மாச்சி பிரயாசை பட்டுக் கொண்டிருந்தாள். அவளோடு அப்படி பூசைக்கு செல்லும் போதெல்லாம் என் வயதொத்த சிறுவர்கள் பூசையில் சாமியாருக்கு உதவியாக அவரோடு பீடத்தில் அவரைப்போன்று அங்கியும், இடுப்பில் வண்ண வண்ண பட்டைகளும் அணிந்து கொண்டு கம்பீரமாக வலம் வருவது எனக்கும் ஆசையை தூண்டியது. நானும் அவர்களில் ஒருவனாக மாற ஆசைப்பட்டேன்.
என் ஆசையை ஒருநாள் என் அம்மாச்சியிடம் சொன்னபோது அவள் பேருவகையோடு என்னை அழைத்துச் சென்று பங்குச் சாமியாரிடம் ஒப்படைத்தாள். என்னைப்போலவே ஆல்டர் பாயாக மாற ஆசைப்பட்டபடியே ஜூடும் ஆவலாக காத்துக்கொண்டிருந்தான். அப்போது தான் அவன் எனக்கு அறிமுகமானான். ஆனால் நாங்கள் நினைத்தது போல் ஆல்டர் பாயாக மாறுவது அத்தனை சுலபமானதாக இல்லை. எங்களைவிட ஓரிரு வயது மூத்தவர்களே அங்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. சீசப்பிள்ளையாக இருபத்தி ஐந்து வயது மதிக்க தக்க ஒருவர் இருந்தார். அவரே ஒவ்வொரு பூசைக்கும் யார் யார் உடுப்பு போடுவது என தீர்மானிப்பவராக இருந்தார். அவர் கொடுக்கும் சின்னச்சின்ன வேலைகளையும் சிரமேற் கொண்டு செய்தும் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அது ஏன் என்று எங்களுக்கு முதலில் பிடிபடவேயில்லை. 

நாட்கள் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாய் அங்கிருக்கும் ”உள் அரசியல்” எங்களுக்கு விளங்க துவங்கியது. அதாவது ஒரே பங்கைச் சேர்ந்தவர்களாய் நாங்கள் இருந்தபோதும் அங்கிருந்த பசங்களுக்கிடையே ”தெரு அரசியல்” மேலோங்கி இருந்தது. ஏழாம், எட்டாம் வகுப்பு பசங்கள் அதிகம் இருந்த அந்தோனியார் கோயிலை ஒட்டிய தெரு பசங்களின் ராஜ்ஜியமே அப்போது அங்கு கோலோச்சி இருந்தது. மற்ற தெரு பசங்கள் எல்லாம் அடக்கியே வாசித்தனர்.

இந்த உட்கலகம் எனக்கு பிடிபட்ட உடனே ஏனைய தெரு பசங்களிடம் வயது பாராட்டாமல் பழகத் துவங்கினேன். மெல்லமெல்ல கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் அந்தோனியார் கோயில் தெரு பசங்களின் அட்டகாசங்கள் குறித்தும் அவர்களது ஆதிக்கம் குறித்தும் பேசத்துவங்கினேன். அவர்களும் தங்கள் ஆதங்கங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அந்தோனியார் கோயில் பசங்கள், ஏனைய தெரு பசங்கள் என பிரிந்து அமரத் துவங்கினோம். ஞாயிற்றுகிழமைகளில் நடைபெறும் மறைக்கல்வி வகுப்புகளில் இதனை விவாதப் பொருளாய் கிசுகிசுக்க துவங்கினோம். ஒருநாள் என் வயதொத்த ஒரு சிறுவனிடம் நானும், ஜூடும் சேர்ந்து வழக்கம் போல் எங்கள் புலம்பல்களை பகிர்ந்து கொள்ள துவங்கினோம் அவனை மாற்று தெரு பையன் என நினைத்து. ஆனால் எங்களுக்கு அப்போது தெரியாது அவனும் அந்தோனியார் கோயில் தெருக்காரனென்று.

எங்கள் புலம்பல்களை அமைதியாய் கேட்டுக் கொண்டவன் எங்களைப் பற்றி அத்தெரு பசங்களிடம் போட்டுக் கொடுத்துவிட்டான். இதில் வேடிக்கை என்னவென்றால் அவனுக்கு என் பெயர் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஜூடை சரியாக குறிப்பிட்டவன் எனது அடையாளங்களை மட்டும் குத்து மதிப்பாக சொல்லிவிட்டிருந்தான். மறுநாள் பூசை முடிந்ததும், ஜூடையும், ஏறத்தாழ என்னைப் போல் இருக்கும் மற்றொருவனையும் பிடித்து அந்தோனியார் கோயில் தெரு பசங்கள் அடி பின்னி எடுத்துவிட்டனர். இந்த சம்பவம் கேள்வி பட்டு நான் பயத்தால் ஓரிரு நாள் கோயில் பக்கமே செல்லவில்லை.

தினமும் அதிகாலை உற்சாகமாய் கோயில் செல்லும் பிள்ளை ஏன் வீட்டிலே முடங்கியுள்ளான் என என் வீட்டில் உள்ளவர்கள் துளைத்து எடுத்த போது நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன். என் ஆச்சி என்னை நேராக பங்குச் சாமியாரிடம் அழைத்து சென்று அனைத்து விபரங்களையும் ஒப்புவித்தாள்.

பங்குச்சாமியாரும் “ஓஹோ அப்படியா இந்தக் கூத்தெல்லாம் நடக்குதா… நாளக்கி நீ காலைல பூசக்கிவா நான் ஒன்ன உடுப்பு போட வக்கிதம்… எந்தப் படுக்காலி சண்டக்கி வருதாம்னு பாக்கம்…”என உற்சாகப் படுத்தி அனுப்பினார். அன்றிறவு முழுக்க தூக்கமெல்லாம் தொலைத்துவிட்டு வண்ண கனவுகளில் மிதக்க துவங்கினேன்.

மறுநாள் விடிந்ததும்… விடியாததுமாய் எழுந்து உற்சாகமாய் கிளம்பி கோயிலுக்கு சென்றால் பங்குச்சாமியார் என் நினைவே அற்றவறாக பூசைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். நான் அவர் முன்னால் அங்கேயும்,இங்கேயுமாய் நின்ற போதும் அவர் என்னை சட்டை செய்யவேயில்லை. வழக்கம்போல் அந்தோணியார் கோயில் தெரு பசங்களே உடுப்புகளை அணிந்தபடி மிடுக்காய் தயாராகிக் கொண்டிருந்தனர். நான் நொந்து போய் ஒரு ஓரமாய் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித்தவனாய் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஜூடுதான் என்னை சமாதானப் படுத்த அதிக முயற்சிகள் எடுத்துக் கொண்டான். ஆனால் அவன் பேசப்பேச எவ்வளவு அடக்கியும் தாளாமல் என் விழிகளில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

அழுது கொண்டே பூசை முடியும் வரை காத்திருந்தேன். பூசை முடிந்ததும் நானும், ஜூடும் கோயிலை விட்டு கிளம்பிய போது அந்தோணியார் கோயில் தெருப் பையன் ஒருவன் எங்களைவிட இரண்டு வயது மூத்தவன் எங்களை நெருங்கி “அன்னைக்கி ஒனக்கு விழவேண்டிய அடி தப்பிச்சுட்ட… இருக்குடி உனக்கு ஒருநா பூச…” என மிரட்டும் தொனியில் என்னை அணுகி ஏளனம் செய்தான். ஒருகட்டத்தில் என்னையே கட்டுப்படுத்த முடியாதவனாய் கோயில் வாசல் என்றும் பாராமல் அவன் மேல் பாய்ந்து விழுந்து அவனை அடிக்க துவங்கினேன். சற்றும் எதிர்பாராத என் தாக்குதலால் அவன் நிலைகுழைந்து விழுந்தான். நான் அவன் மேல் ஏறி அமர்ந்து அவனை கண்மண் தெரியாமல் அடிக்க துவங்கினேன்.

ஜூடு செய்வதறியாமல் என்னை பிடித்து இழுத்தபடியே கத்த துவங்கினான். அவன் போட்ட கூச்சலில் ஒரு சிறு கூட்டம் அங்கே கூடி என்னை அவன் மேலிருந்து தூக்கி விலக்கியது. அந்தோணியார் கோயில் தெரு பசங்கள் செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தனர். பங்குச்சாமியாரும் அந்நேரம் பார்த்து வெளியே வந்தார். என்னைப்பற்றி அவரிடம் புகார்கள் வாசிக்கப்பட்டன. என்னிடம் அடிபட்டவன் என் நகக்கீறல்களால் முகம் வீங்கி நின்று அழுது கொண்டிருந்தான்.
அவன் முகத்தை ஏறெடுத்து பார்த்தவாறே பங்குச்சாமி ”நல்ல பலமாத்தாம்ல அடிபட்டிருக்கு… நல்ல புள்ளையளா பூசையில நின்னிட்டு இப்படி வெளில நின்னு சல்லித்தனம் பண்ணா வெளங்கும்ல, நல்லா சாத்தான் குட்டிகளா நிக்கிறத பாருங்களேன்…. எதுக்குடே இப்படி கட்டிப் பொறண்டிக…? கோயிலுக்கு போயிட்டு புள்ளைக வரும்னு அங்க உங்க அப்பாஅம்மாமாரு நிம்மதியா இருப்பாக இப்படி மூஞ்சி வீங்கிப் போன சாமி கோயில்ல பூச வச்சாரா இல்ல குஸ்தி கத்துக் குடுத்தாறன்னுதான கேப்பாக… போங்க போங்க வீட்ட பாத்து போங்கடே பொறவு அங்கிட்டு நின்னு சண்ட போட்டேம் இங்கிட்டு நின்னு சண்ட போட்டேம்னு எவனாவது சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் பாத்துக்குங்க…” என்றபடி எங்களை கடந்து வேகமாய் போய்விட்டார்.

ஏதோ மிகப்பெரும் சாதனை செய்துவிட்டதைப் போல் என் மனம் அப்போது துள்ளி குதித்தது. என் மனத்துயரெல்லாம் கறைந்தோடி என்னைப் பற்றி நானே பெருமிதம் அடைந்து கொண்டேன். என்னை சுற்றி ஒரு அரணைப் போல மற்ற தெரு பசங்களெல்லாம் நின்றபடி அவரவர்க்கு தெரிந்த வார்த்தைகளில் என்னை தேற்றியும், பாராட்டியும் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்தோணியார் கோயில் தெரு பயல்கள் என்னை முறைத்து பார்த்தபடி அவனை அழைத்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவன் இப்படி பேசியது என் காதுகளில் தெளிவாய் கேட்டது ”எல நீ வருத்தப்படாத எங்க போவான்… நாம யாருன்னு அவனுக்கு சீக்கிரமே காட்டுவோம்ல…”

இப்படி ஏராளமான சாகசங்களுக்கும், மிரட்டல்களுக்கும் பிறகே எனக்கும், ஜூடுக்கும் ஒரு ஞாயிற்றுகிழமை பூசையில் உடுப்பு போடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நாள் முழுவதும் ஓரிரு அடிகள் தரைக்கு மேலே தான் நாங்கள் நடந்து திரிந்தோம். ஏதோ நாங்களே அன்றைய பூசையை நடத்தியதை போல் அத்தனை பெருமைப்பட்டு போனோம். அப்பருவத்தில் பெரும் பகைகள் கூட கானல் நீரை போலத்தானே, அந்தோணியார் கோயில் தெரு பசங்களுக்கும் எங்களுக்குமான இடைவெளியும் கால ஓட்டத்தில் கரைந்து போய் எல்லோரும் நண்பர்களாகிப் போனோம்.
இனிய பழைய நினைவுகளை மீட்ட ஒரு சொல்லோ, ஒரு புன்சிரிப்போ கூட போதுமானதாய் இருக்கிறது.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...