சமீபகாலங்களில்
நம் வாழ்க்கைப் பாதையையே தீர்மானிக்கும் ஒற்றைச் சொல்லாய் ஆகிப்போய் இருக்கிறது இந்த
”வெற்றி” என்னும் வார்த்தை.
மனிதர்கள் ஓடிக்கொண்டே
இருக்கிறார்கள்….. கேள்விகளற்று பொருள் சேர்க்க மனிதக் கூட்டம் ஓடிக் கொண்டே இருக்கிறது.
“வெற்றி” என்னும் மாயச் சொல் நம்மை விரட்டிக் கொண்டே இருக்கிறது.
’வாழ்க்கையில்
“வெற்றி” பெற நினைப்பது நியாயம் தானே? அப்படிப்பட்ட வெற்றியை அடைய தியாகங்களும் தேவைதானே?
இதில் தவறெங்கே வந்தது?’
‘நேர்மையான உழைப்பால்
முன்னேறி இவைகளை அடையும் ஒருவனது செயலை அல்லது “வெற்றியை” எப்படி தவறென்பது?’
இந்தக் கேள்விகளை
மேலோட்டமாக பார்த்தால் மிகவும் தர்க்க நியாயம் உள்ள கேள்விகளாகவே தெரியும். ஆனால் இங்கே
தவறு “வெற்றி” என்ற சொல்லுக்கு நமக்கு கற்பிக்கப்பட்ட அர்தத்தில் தான் இருக்கிறது.
ஆம்! அதிகாரம் மிக்க உயர்ந்த பதவியை அடைவதும் அதன் மூலமாக அபரிவிதமான பொருள் குவிப்பதும்
நம் நுகர்வு வெறிக்கும் உல்லாச வாழ்க்கைக்கும் தடங்கலற்ற ஒரு வாழ்க்கை அமையப்பெறுவதுமே
இங்கே ”வெற்றி” என சொல்லப்படுகிறது.
இது தான் ஒட்டுமொத்த
மனித சமூகத்தையே தனித்தனி தீவுகளாய் மாற்றி “தான், தன் குடும்பம், தன் உலகம்” என இயங்கச்
செய்கிறது. சக மனித வாழ்வைப் பற்றியோ அல்லது தான் வாழும் சமூகத்தைப் பற்றியோ எந்தவித
கவலையுமின்றி தன் இருத்தல் குறித்த ஒற்றைச் சிந்தனையோடு மட்டுமே ஒருவனை பயணிக்க செய்கிறது.
”மனிதன் என்பவன்
சமூக மிருகம்” இதுதான் இயற்கையின் நிதர்சனம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்….. இந்த
உலகில் உயிர்களே இன்றி ஒற்றை மனிதனாய் நாம் வாழ நேர்ந்தால்….. நம்மால் அப்படி எத்தனை
மணித்துளிகள் வாழ்ந்துவிட முடியும்?
CAST AWAY என்றொரு
ஆங்கிலப்படமுண்டு அதில் கதையின் நாயகன் ஒரு விபத்தின் காரணமாய் மனிதர்களே இல்லாத ஒரு
தீவில் கரையொதுங்க நேரிடும். அப்படி தீவில் தன்னந்தனியாக வாழ நேர்ந்தவன் அடையும் இன்னல்களும்,தவிப்புகளுமே
அந்தக் கதையின் முக்கிய பகுதியாகும். ஒருவேளை உணவுக்காக அவன் நடத்தும் போராட்டங்களும்,
மனிதர்களற்ற தனிமையை அவன் கடக்க முடியாமல் எவருடனும் உரையாட முடியாமல் தவியாய் தவித்து
ஒருகட்டத்தில் ஒரு பந்திற்கு மனித முகம் வரைந்து அதனுடன் அவன் உரையாடத் துவங்குவான்.
அதனை ஒரு உயிராகவே பாவித்து தன் வாழ்நாளை அதுனுடன் கழிக்கத் துவங்குவான். மிகப்பெரும்
போராட்டத்திற்கு பின்பு தன் உயிரையும் பணயம் செய்து ஒருவழியாக ஒரு மரக்கலம் ஒன்றை உருவாக்கி
உக்கிரமான அந்தக் கடலில் செலுத்தி மனிதக் கரையை நோக்கி பயணிக்கத் துவங்குவான். இதுதான்
மனிதன். இங்கு தனித்திருத்தல் சாத்தியமற்றது. சகமனிதர்களோடு சேர்ந்து சமூகமாகவே ஒருவனால்
வாழ முடியும்.
ஆனால் நாமோ எவ்வளவு
குரூரமாய் வாழப்பழகிக் கொண்டோம்……
ஊருக்கே உணவழித்த
உழவன் வயிறு காய்ந்து வாழ நம்பிக்கையற்று செத்து மடியும் போது கூட அதனை ஒரு செய்தாய்
நம்மால் இயல்பாக கடந்து செல்ல முடிகிறது. அன்றாடம் நாம் பயணிக்கும் பாதையில் கந்தல்
மனிதர்களாய் இந்தச் சமூக ஓட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு தாம் செய்வதையே என்னவென்று
பகுத்து அறியமுடியாத நிலையில் வீதிகளில் அலைந்து திரியும் ஜீவன்களை எந்தவித குற்ற உணர்வுமின்றி
அருவருப்புடன் நம்மால் கடந்து செல்ல முடிகிறது.
கொடிதினும் கொடிது
இளமையில் வறுமை என்பர். ஆனால் அதனினும் கொடிது வண்ணக் கனவுகளோடு துள்ளித் திரிந்து
ஓடியாடி பயில வேண்டிய பருவத்தில் வறுமையின் பெயரால் ஏட்டுச் சுரக்காயும் எட்டாக் கனியாகிப்
போன குழந்தைப் பருவமன்றோ? அப்படிப்பட்ட கோடிக்கணக்கான நம் தேசத்து குழந்தைகளை பற்றி
என்றாவது நாம் சிந்தித்துள்ளோமா?
இந்த தேசத்தின்
சாபமான சாகா வரம் பெற்ற சாதி என்னும் கொடூரனால் நாம் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாய்
பிரிந்து கிடக்கும் அவலத்தைக் கூட பெருமையாக அல்லவா கொண்டாடித் தொலைகிறோம்.
அரசியலின் பெயரால்,
அதிகாரத்தின் தயவால்,பெரும் முதலாளிகளின் லாப வெறியால் தினம் தினம் நாம் சுரண்டப்படுவதை
தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக் கொண்டு வாழப்பழகி விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாய் மனிதன் என்னும்
சமூக மிருகம் சுயநல மிருகமாய் மாறிக் கொண்டு வருகிறது.
“இனியொரு விதி செய்வோம்-அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்குக் குணவிலை
யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்”-
பாரதி.
இந்த ரௌத்திரத்தை
அல்லவா தொலைத்து விட்டு நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்? சக மனிதனைப் பற்றியோ அல்லது
நாம் சார்ந்த நம் சமூகத்தைப் பற்றியோ சிந்திக்க விடாமல் வெற்றி என்னும் மாயையை நாம்
துரத்திச் செல்ல காரணமான கயவர்களை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டாமா? நம் வாழ்வின் அற்புதங்களை
உணரவிடாமல் பொருள் குவிப்பதை நோக்கி நம்மை திசைமாற்றிய சதிகளை எப்போது புரிந்து கொள்ளப்
போகிறோம்?
இதையெல்லாம் புரிந்து
கொள்ளவோ அல்லது சரி செய்யவோ யாருக்கும் நேரமின்றி அவரவர் வாழ்வை சுமந்து கொண்டு வேகவேகமாய்
”வெற்றி”யை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதிலும் இந்தியாவில் இந்த வெற்றியை
நோக்கிய ஓட்டம் தொன்னூறுகளின் ஆரம்பத்தில் உலகமயமாக்கல் என்னும் புதிய பொருளாதார கொள்கையின்
புகுத்தலுக்குப் பின்பே அதிவேகப் படுத்தப் பட ஆரம்பித்தது.
நாட்டின் குடிமக்கள்
நுகர்வோராய் மாற்றப்பட துவங்கிய காலக்கட்டமது. வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வாங்கும்
போக்கிலிருந்து ஆசைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் குவிக்கும் நுகரும் வெறியை நமக்குள்
ஊடகங்களின் துணை கொண்டு உருவாக்கியது பெரும் வர்தக நிறுவனங்கள்.
இந்தச் சந்தைப்படுத்தலை
எதிர்கொள்ளவும், பெருகிப் போன தேவைகளை ஈடு செய்யவும் நாம் “வெற்றி” என்னும் வெறியோடு
ஓடிக் கொண்டிருப்பது அவசியம் என நம்பவைக்கப் பட்டுள்ளோம்.
தனி மனித சொத்து
குவிப்புகள் சமூக பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும். அது சமூக ஏற்றத் தாழ்வுக்கே இட்டுச்
செல்லும். ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் சமூக நியாயங்கள் சீர்குலைந்து போவது
இயல்பாய் அரங்கேறத் துவங்கும்.
ஒரு ஜனநாயக தேசத்தில்
தன்னைச் சுற்றி அரங்கேறும் சமூக அவலங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் தம் சுயதேவையே
பிரதானம் என இயங்குவதற்கு பெயரும் “தீவிரவாதம்” தான்.
ஆம்! இப்படி வெற்றி
வெறி பிடித்து ஓடும் ஒவ்வொருவரும் தீவிரவாதிகள் தான். இந்த உலகம் நமக்கே நமக்கானது
மட்டும் அல்ல. நாம் மட்டுமே உலகமும் அல்ல. நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர மூச்சிற்கு
பின்னால் இரத்தமும்,சதையுமான தியாகங்கள் நிறைந்த மிகப்பெரும் வரலாறுகள் மறைந்திருக்கிறது.
தம் வருங்கால சந்ததிகள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டி தம் வாழ்வைப் பற்றியோ
அல்லது தன் இன்பங்களை பற்றியோ சுயநலமாய் சிந்திக்காமல் செத்து மடிந்த லட்சகணக்கான தியாகிகளுக்கு
செய்யும் துரோகம் அல்லவா இந்த சுயநலப் பயணம்?
வாழ்க்கை என்பது
போட்டியல்ல போராடி வென்று தீர்பதற்கு. வாழ்க்கை என்பது ஒரு கூட்டு இயக்கம். நம்மை வாழவைக்கும்
நம்மோடு வாழும் ஒவ்வொரு உயிருக்கும் நம் வாழ்வில் பங்கு உள்ளது. ஒட்டுமொத்த சமூக மேம்பாடே
தனிமனித வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான நிலையான வழி. அதுதான் சரியானதும் கூட.
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!-பாரதிதாசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக